புலிகளின் அல்பா சிறைகளில் நடந்த, கொடூர படுகொலைகள்: துலங்கும் திகிலூட்டும் மர்மங்கள்; நடந்தது என்ன? -எம்.எப்.எம். பஸீர்-
மூன்று தசாப்தங்கள் நீடித்த யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து நாளுக்கு நாள் பல மர்மங்கள் துலங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தீர்க்கமாக விசாரிக்கப்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் நால்வர் ஊடாக பல்வேறு தகவல்கள் கசிந்துள்ளன.
சுமார் ஒருவருட காலத்துக்குள் கைது செய்யப்பட்ட குறித்த நான்கு சந்தேக நபர்களில் வெளிநாட்டில் கைதானோரும் அடங்குவர்.
இவர்கள் கொழும்பிலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவரும் நிலையில் ஒரு பொலிஸ் பரிசோதகர், ஒரு இராணுவ அதிகாரி உள்ளிட்ட 80 தமிழர்களின் கொலை, தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்திவரப்பட்ட அல்பா 2, அல்பா 5 சிறை கூடங்கள் தொடர்பில் திகிலூட்டும் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திர வாகிஷ்டர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசங்க கரவிட்ட ஆகியோரின் மேற்பார்வையில் அந்தப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன டீ அல்விஸின் நேரடி வழிநடத்தலால் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர தலைமையிலான குழுவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆரம்பத்தில் பொதுவான விசாரணையாகவே இருந்த இந்த நடவடிக்கையில் சந்தேக நபர்களால் வெளிப்படுத்தப்பட்ட பல தகவல்கள் பொலிஸாருக்கு அதிர்ச்சியளித்தன.
எனினும் புலனாய்வுப் பிரிவினர் அந்த அதிர்ச்சியைத் தாண்டி நீண்ட காலமாக மர்மமாகவே இருந்த கேள்விகளுக்கு சாட்சியங்களுடன் பதிலளித்தனர்.
இந்த துப்புத்துலக்கும் விசாரணைகளின் இடைநடுவில்தான் மர்மமாகவே இருந்து வந்த கல்கிசை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம், இராணுவ அதிகாரி லகீ, புலிகளின் சிறைக் கூடங்களான அல்பா 2, அல்பா 5 ஆகியன தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன டீ அல்விஸின் நேரடி கட்டுப்பாட்டில் இடம்பெறும் இந்த விசாரணைகளில் முதலில் அல்பா 2, அல்பா 5 ஆகிய சிறைக்கூடங்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த அல்பா 2, அல்பா 5 சிறைக்கூடங்கள் புதுக்குடியிருப்பு வல்லிப்புனம் பிரதேசத்தில் புலிகளால் நடத்தி வரப்பட்டவையாகும். குறிப்பாக இந்த சிறைகளில் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட அல்லது இராணுவத்துக்காக ஒற்றர் வேலை செய்தோர் அடைக்கப்பட்டதாக சந்தேக நபர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ள தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.
குறிப்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹணவின் தகவல்களின் பிரகாரம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த கல்கிசை பிரிவு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் இராணுவ அதிகாரி லகீ ஆகியோர் இந்த அல்பா சிறைகளிலேயே அடைக்கப்பட்டிருந்ததுடன் பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைவிட அந்த சிறைகளில் பல தமிழர்கள் அடைக்கப்பட்டிருந்தமையும் விசாரணைகள் உறுதி செய்துள்ளதாகவும் அவர்களில் சுமார் 80 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டு சாட்சியங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்களின் வாக்குமூலங்கள் ஊடாகவும் நேரில் கண்ட சாட்சியங்களூடாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிடுகிறார்.
புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் இவ்வாறான திகிலூட்டும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த குற்றங்கள் இடம்பெற்ற இடங்களை சந்தேக நபர்களின் அடையாளப்படுத்தலுக்கு அமைவாக இனம் கண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அவ்வாறு மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டு விசாரணைகள் தொடர்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் – நெடுங்கேணி பிரதான வீதியில் சமணன் குளம் சந்தியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் பெரிய இத்திமடு காட்டுப்பகுதியில் ஒரு இடமும் சமணன் குளம் காட்டுப்பகுதியில் மற்றொரு இடமும் வல்லிபுனம், மருதமடு காட்டுக்குள் புலிகளினால் நடத்தி வரப்பட்ட இஸ்டர் வைத்தியசாலையின் பின்பக்கமாக 300 மீற்றர் தொலைவில் பிறிதொரு இடமும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டன.
சந்தேக நபர்கள், சாட்சியாளர்களின் பொலிஸ் வாக்குமூலங்களுக்கு அமைய பெரிய இத்திமடு காட்டில் இடம்பெற்ற படுகொலைகள் 2006ஆம் ஆண்டுக்குரியதாகும்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரை இந்த படுகொலைகளை நேரில் கண்ட சாட்சியாளராக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் முன்னிலைப்படுத்துகின்றனர்.
அல்பா சிறைகளிலிருந்த 28 தமிழர்களை லொறி ஒன்றில் பெரிய இத்திமடு காட்டுக்கு கண்களையும் கைகளையும் கட்டிக் கூட்டி வந்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துவிட்டு, அவர்களின் உடலை இதே இடத்தில் டீசல், சீனி கலந்து எரித்து, எச்சங்களை கடலில் கொண்டு போய் கொட்டியதாக கூறப்படும் சாட்சியங்களுடன் இந்த சம்பவம் நீள்கிறது.
நேரில் கண்ட சாட்சியாளரான புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர் வழங்கியுள்ள தகவல்களுக்கு அமைவாக இந்த படுகொலைகளின் போது அறியாத விதத்தில் அவர் சிறு பங்களிப்பை செய்துள்ளதாகவும் ஒரு நாள் முழுவதும் அந்த இடத்திலிருந்து அச்சம்பவத்தை அவதானித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சுமன் பரதன் என இருவரே அவர்களை சுட்டதாக குறிப்பிடும் சாட்சியாளர் குறித்த படுகொலை இடம்பெற்ற இடத்தை துளியளவும் சந்தேகமின்றி உறுதியாக அடையாளம் காட்டியுள்ளார்.
அதேபோன்று 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மற்றொரு படுகொலை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டுச்சுட்டான் சமணன் குளம் காட்டுக்குள் அல்பா சிறைகளிலிருந்து லொறி, ரோஸா பஸ் ஒன்றில் அழைத்துவரப்பட்ட 50 சிவிலியன்கள் சுட்டுக் கொல்லப்பட்டு டீசல் சீனியிட்டு எரிக்கப்பட்ட கொடூரமே அதுவாகும்.
கொலை செய்யப்பட்டவர்களை லொறியில் ஏற்றிச் சென்ற விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரூடாக இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த குற்றம் இடம்பெற்ற இடத்தினையும் சந்தேக நபர் அடையாளம் காட்டியுள்ளார்.
அதேபோன்று இராணுவ அதிகாரி லகீ கொலை தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணத்தின் கொலை தொடர்பான அனைத்து தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
புலிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதில் திறமையாக செயற்பட்ட யாழ். நெல்லியடியை பிறப்பிடமாக கொண்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணத்தை புலிகள் கொலை செய்த விதம் வித்தியாசமானது.
ஜெயரட்ணத்தின் வீட்டுக்கு வேலைக்கு வந்த புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபரால் 2005.04.20 அன்று இரவு 12 மணிக்கு கல்கிசை பெரிய ஹோட்டலில் வைத்து அவர் கடத்தப்பட்டுள்ளார்.
நேர்மையான அதிகாரியான ஜெயரட்ணம் தனது நெருங்கிய நண்பர்களுடன் இரவில் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையிலேயே புலிகளின் புலனாய்வுப் பிரிவின் ஒருவர் அவரின் பிள்ளைகளை பராமரிக்கும் வேலையாளாக அவரை நெருங்கி, சில வருடங்கள் பழகி, மதுவருந்தச் செய்து, வெள்ளை வேனில் கடத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் சிலாபம் வரை வேனில் ஜெயரட்ணத்தை கொண்டு சென்ற புலிகள் அங்கிருந்து கடல் மார்க்கமாக மன்னார் ஊடாக வெடிக்கல் தீவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கிருந்து கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள ஜெயரட்ணம் புலிகளின் போராளிகளுக்கு பயிற்சியளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் பிடிவாதமாக அதனை மறுத்துள்ளதுடன் தன்னால் புலிகள் எந்த பிரயோசனத்தையும் அடைய முடியாது எனவும் கூறி உண்ணாவிரதம் இருதுள்ளார்.
உண்ணாவிரதத்தால் உடல்நிலை சோர்வடைந்த நிலையிலேயே வல்லிபுனம் மருதமடு காட்டுக்கு தபால் -90 மோட்டார் சைக்கிளில் கட்டப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்டுள்ள அவர் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் இந்த கொலையை புரிந்தவர் என சந்தேகிக்கப்படுபவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் இடத்தையும் அடையாளம் காட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த மூன்று குற்றப் பிரதேசங்கள் தொடர்பிலுமான நீதிவான் நீதிமன்ற பரிசோதனைகள் கடந்த நவம்பர் மாதம் 19ஆம், 20ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.வஹாப்தீனினால் முன்னெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிவானின் உத்தரவுக்கமைய கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் தடயவியல் சோதனைகளும் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கையும் அகழ்வு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் பெரிய இத்திமடு, சமனன் குளம் காடுகளில் குறித்த குற்றச்செயல் இடம்பெற்ற இடங்களில் மண்ணில் டீசல் கலந்துள்ளதை உறுதி செய்தனர். குறிப்பாக கொல்லப்பட்டவர்கள் சீனி, டீசல் கலந்து எரிக்கப்பட்டதாக சந்தேக நபரும் சாட்சியாளரும் வாக்குமூலமளித்துள்ள நிலையில் அந்த உறுதிப்பாடு அந்த வாக்குமூலங்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது.
உடல்களை எரிக்க டீசலுடன் சீனி கலக்கப்பட்டுள்ளமை புலிகளின் தொழில் நுட்பங்களில் ஒன்று என குறிப்பிடும் புலனாய்வுப் பிரிவு அவ்வாறு செய்வதனூடாக எலும்புகள் முதல் அனைத்தும் உருகி எரிந்துவிடும் என விளக்கம் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் பெரிய இத்திமடு காட்டில் சாட்சியாளரால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் எரிந்த எச்சங்கள், மண் மாதிரி, தாவர மாதிரிகள் போன்றன மேலதிக ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளன.
இதனைவிட சமணன் குளம் காட்டில் சந்தேக நபரால் அடையாளம் காட்டப்பட்ட இடத்திலிருந்து ரீ – -56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்றை மீட்ட தடயவியல் நிபுணர்கள் மேலும் அவ்வாறு பல தோட்டாக்கள் இருக்கலாம் என சோதனை செய்கின்றனர்.
புலிகளின் சிறை கூடங்கள்
குறித்த இடத்தில் வளர்ந்துள்ள சிறு தாவரங்கள், ஒட்டுண்ணிகள், எரிந்த மரங்கள் போன்றவற்றை காட்டின் பிற பகுதியுடன் ஒப்பிடும் தாவரவியலாளர்கள் அங்கும் அவ்வாறான குற்றம் ஒன்றுக்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்துகின்றனர். அந்த இடத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
எவ்வாறாயினும் பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணத்தை கொலை செய்ய பயன்படுத்தப்ப ட்டதாக சந்தேகிக்கப்படும் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி தோட்டாவை பொலிஸார் குற்றம் இடம்பெற்ற இடத்திலிருந்து நேற்று முன்தினம் கண்டெடுத்தனர்.
அத்துடன் ஜெயரட்ணம் எரிக்கப்பட்ட இடத்தில் பொஸ்பரசு தன்மை அதிகமாக உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலதிக ஆய்வுகள் தொடர்கின்றன.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன டீ அல்விஸ்ஸின் நேரடி கட்டுப்பாட்டில் இடம்பெற்றுவரும் இந்த ஆய்வு நடவடிக்கைகளில் 9 நிறுவனங்களை சேர்ந்த 80 பேர் வரையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நடவடிக்கைகளுக்கு இராணுவத்தின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன் தடயவியல் தொடர்பில் பொலிஸ் தடயவியல் பிரிவின் அநுராதபுரம், கிளிநொச்சி, மாத்தளை, வவுனியா பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
அத்துடன் சிரேஷ்ட சட்ட வைத்திய நிபுணர் உப்புல ஆட்டிகல, சட்ட வைத்திய அதிகாரி ஹேவகே, இரசாயன பகுப்பாய்வாளர் மடவல, ரொஷான் பெர்னாண்டோ, ரஜரட்ட பல்கலையின் விவசாய பீட பீடாதிபதி அமரசேகர, விரிவுரையாளர் டீ.எம்.எஸ்.துமிந்த, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையின் தாவரவியல் பிரிவு பீடாதிபதி டப்ளியூ பீ.ஏ. எஸ். ஏ. செனரத் அய்யூப் காரியவசம் உள்ளிட்டவர்கள் ஆய்வுகளை தொடர்கின்றனர்.
-எம்.எப்.எம். பஸீர்-
No comments:
Post a Comment