பகுதி 122
சில நினைவுகள்
ராபின், அவரின் மனைவி சுவிஸில் படுகொலை.
சில வருடங்கள் கடந்தபின் 1995 ஆண்டு என நினைக்கிறேன். மாணிக்கம் தாசன், சித்தார்த்தனின் உச்சகட்ட கேவலமான துரோகத்தனம். சுவிஸ் போன ராபின் அங்கு வேலை செய்துகொண்டு இருந்தாலும், இயக்கமும், புதிய தலைமைகளும் தனக்கும் எங்களுக்கும் செய்த துரோகத்தை பற்றி புலம்பிக்கொண்டே இருப்பார். எல்லா உண்மைகளையும் எல்லோருக்கும் தெரியும் படியாக கூறவேண்டும் என்று கூறுவர். இவர்கள் சித்தார்த்தன் மாணிக்கம் தாசன் இப்படி துரோகம் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால், செயலதிபர் உமாமகேஸ்வரன் உடன் சண்டை பிடித்த நேரம் இயக்கத்தை விட்டு போயிருப்பேன். அல்லது இரண்டு நாளில் திரும்பவும் அவரோடு போய் சேர்ந்து இருப்பேன்.
ஆனால் எனது கோபத்தை பயன்படுத்தி மாணிக்கம் தாசன் பெரியவரின் காரோடு என்னையும் அழைத்துப் போய் தனக்கு வேண்டிய ஒரு சிங்கள வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்து செயலதிபர் இன் மரணதண்டனைக்கு தன்னையும் பயன்படுத்திக்கொண்டது பெரிய துரோகம் என்று ராபின் புலம்பியபடி இருந்தது மட்டுமில்லாமல், பல இயக்க முன்னாள் தோழர்களுக்கு எல்லா நாடுகளுக்கும் தொலைபேசி மூலம் உண்மைகளை கூறத் தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் ஜெர்மனியில் நின்ற மாணிக்கம் தாசன் இடமும், கழக மத்திய குழுவை கூட்டி உண்மைகளை ஒத்துக் கொள்ளாவிட்டால் தான் தொடர்ந்து எல்லோருடனும் எல்லா உண்மைகளை கூறுவேன் என்று செய்தி அனுப்பியுள்ளார். செயலதிபர் உமா மகேஸ்வரனின்கொலையில் மாணிக்கம் தாசனின் பங்குபற்றி எல்லோரையும்விட ராபின்னுக்கு தான் முற்றுமுழுதாக தெரியும்.
உண்மைகள் வெளிவர விரும்பாத சித்தார்த்தனும் மாணிக்கம் தாசனும் திட்டம்போட்டு ராபின் ஐகொலைசெய்ய மாணிக்கம் தாசன் தனக்கு மிக நம்பிக்கையான டுமால்(சபாரட்ணம் பாஸ்கரன்)என்பவரை வவுனியாவிலிருந்து அழைத்து, சுவிஸ் அனுப்பியுள்ளார். அங்கு டூமால் தான் இயக்கத்தை விட்டு விலகி விட்டதாகவும், உமா மகேஸ்வரன் மாணிக்கம் தாசன் சித்தார்த்தன் எல்லாரும் துரோகிகள் என்று கூறி ராபின் உடன் நெருக்கமாகப் பழகி இருக்கிறார். அவருடன் கூட சுவிஸ் புளொட்பொறுப்பாளரும் ராபின் உடன் நெருக்கமாக பழகி இருக்கிறார்.
இதே நேரம் ராபின் தனது உறவுக்கார ஆனைக்கோட்டையை சேர்ந்த வத்சலா என்ற பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். வத்சலா சுவிஸ் போகும்முன் சென்னை வந்து எங்கள் எல்லோரையும் சந்தித்து விடை பெற்று இந்தியாவிலிருந்து சுவிஸ் போனார்.
ராபின் சுவிசிலிருந்து திருமண வீடியோ கேசட்டை எங்களுக்கு அனுப்பி இருந்தார். அதில் டுமால் ராபின்னுக்கு தங்க சங்கிலி, மோதிரம் போடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாங்கள், உடனடியாக தொலைபேசியின் மூலம் ராபினுக்குஎச்சரிக்கை செய்தோம். ஆனால் விதி யாரை விட்டது. ராபின் எங்கள் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், அவர்களெல்லாம் உண்மையை அறிந்து மனம் திருந்தியவர்கள். பயப்பட வேண்டாம் என்று கூறினார்.
ஆறு மாதத்துக்கு மேல் ராபின் வீட்டுக்கு அடிக்கடி போய், ராபின் இருந்தாலும், வேலைக்கு போய் இருந்தாலும், அக்கா பசிக்குது என்ன சாப்பாடு இருக்கு என்று கேட்டு சமைத்து சாப்பிட்டு ஒரு சகோதரர் போல் பழகி இருக்கிறார்கள் . அவர்கள் ஒரு சகோதரன் போல எங்களுடன் பழகி வருகிறார்கள் என்று ராபினும், அவரின் மனைவி வட்சலாவும் தொலைபேசியில் எங்களுடன்பேசும்போது கூறுவார்கள்.
ஒரு நாள் வேறு சில நண்பர்கள் வெளிநாடுகளிலிருந்து ஆட்சி ராஜனுக்கு ராபினின் மனைவியையும், ராபின் ஐயும் மாணிக்கம் தாசன் கொலை செய்து விட்டதாக ஒருசெய்தி பரவிக்கொண்டிருக்கிறது உண்மையா என்று. எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ராபின் தொலைபேசி வேலை செய்யவில்லை. அந்த நேரம் வவுனியாவிலிருந்து ஆட்சி ராஜனுக்கு நெருங்கிய ஒரு தோழர் தான் பல உண்மைகளை கூறினார்.
டுமால் சுவிஸில் வைத்து ராபினையும், அவரது மனைவியையும், கொலை செய்துவிட்டு வவுனியா வந்துவிட்டதாகவும் கூறினார். கொலை செய்த முறைகளையும் டுமால் பெருமையாக கூறியுள்ளதாக கூறினார். ராபின் வேலைக்குப் போயிருந்த நேரத்தில், டுமாலும், சுவிஸ் கழக பொறுப்பாளரும் ராபினின் வீட்டுக்குப்போய், கர்ப்பமான மனைவி வத்ஸலா இடம் சமைத்து தரும்படி கேட்டு, சாப்பிட்ட பின்பு, அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு, வீட்டினுள் மறைவாக இருந்துள்ளதாகவும், ராபின் வீட்டுக்கு வந்த பின்பு ராபினையும்அடித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு வந்து இலங்கைக்கு டுமால் விமானம் ஏறி உள்ளார். ஒரு வாரத்தின் பின்பு தான் ராபின் வத்ஸலா உடல் கண்டெடுக்கப்பட்டது என செய்திகள் வந்தன.
தான் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது பற்றி யாராவது கூறுவார்களா? அது அவமானம் இல்லையா? என்று கேட்கலாம். அந்த காலகட்டத்தில் பாலியல் பலாத்காரம் பற்றி அவர்கள் பகிரங்கமாக பேசுவது பற்றிப் வெட்கப்படுவதில்லை,காரணம்அந்த காலகட்டத்தில் வவுனியாவில் புளொட் இயக்கம் சிங்கள மக்களிடமிருந்து வவுனியாவை காப்பாற்றியது என்று உண்மை இருக்கலாம். அதேநேரம் அக்காலகட்டத்தில் பொறுப்புகளில் இருந்த முன்னணித் தோழர்கள் வவுனியா நகரில் பெண்கள் பாடசாலைகளுக்கு முன்பாக இருந்து, அழகான பெண்களை கடத்திக் கொண்டு போய், பாலியல் வன்கொடுமை கூட்டு பாலியல் வன்கொடுமை, சிலர் பாலியல் வன்கொடுமைக்கு பின்பு அவர்களையே திருமணமும் செய்து இருக்கிறார்கள். என்ற செய்திகள் எல்லாம் வந்துகொண்டிருந்தன. அது உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது.
அதோடு விடுதலைப் புலிகளை அழிக்கிரேன் என்று பல குடும்பங்களை இளைஞர்களை, பெண்களை கடத்தி இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து சித்திரவதை செய்து பல கொலைகளை லக்கி ஹவுஸ், மற்றும் கண்ணாடி மாளிகை போன்ற இடங்களில் நடந்ததாக பல செய்திகள் வந்தன.. எல்லாம் செய்திகள்தான். ஆனால் எனது உள் பெட்டியில் வந்து பலர் வவுனியாவில் நடந்த சம்பவங்களை சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களோடு எழுதி என்னை பதிவில் போட சொன்னார்கள். உண்மை பொய் தெரியாததால் நான் அதனை போடவில்லை.
இப்படியான பல அசிங்கமான கேவலமான சம்பவங்கள், பல தோழர்களின் உயிர் இறப்பிலும், பல தோழர்களின் தியாகத்தாலும் வளர்ந்த வளர்ந்த எங்கள் இயக்கம், கடைசியில் ஒரு மோசமான பெயரே தான் மக்களிடம் பெற்றது. எவ்வளவு அசிங்கங்கள், ஒரு முக்கிய தலைவர், இன்னொரு தோழர் காதல் செய்த பெண்ணை கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்து பிள்ளைகளும் பெற்றபின், அந்தக் கடத்தல் தலைவர், வழமைபோல் கழக உட் சதியால் விடுதலைப் புலிகளின் உதவியோடு கொல்லப்பட்டார். உடனடியாக கொல்லப்பட்ட தலைவரின் மனைவியை பிள்ளைகளோடு முன்பு காதலித்த மற்ற தலைவர் அழைத்துக்கொண்டு போய், அந்தப் சிறு குழந்தைகளை கொடுமைகள் செய்ததாக இத்தகவல்கள் எல்லாம் வந்தன. இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் அர்ச்சனா எப்படிக் கொல்லப்பட்டார்.
ஒரு மக்களுக்காக புறப்பட்ட விடுதலை இயக்கம் பற்றி இப்படியான செய்திகள் எல்லாம் வந்தன என்றால், எப்படி? இன்றும் அந்தத் தலைவர்கள் இப்போது வெள்ளை வேட்டி சட்டையோடு மக்களை காப்பாற்றுவதாக கூறிக்கொண்டு பலகோடி பெறுமதியான கார்களில் உல்லாசமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
வவுனியாவில் கழகம் கொள்ளையடித்த பல பல நூறு கோடிகள் கொழும்பிலும் மற்றும் பல இடங்களிலும் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள்,பல காணிகள் போன்ற சொத்துக்கள் ஒரு சில முக்கியமான தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இப்போது கழகத்துக்காக உண்மையாக கஷ்டப்பட்ட தோழர்கள்கூறுகிறார்கள்.
சுவிஸில்கொலை செய்யப்பட்ட ராபினின் மனைவி கழகத் தலைவர் சித்தார்த்தனின் சொந்த பாராளுமன்ற தொகுதியைச் சேர்ந்தவர். நடந்த கொலைக்கு இன்றுவரை சித்தார்த்தர் மன்னிப்பு கேட்கவில்லை. இதெல்லாம் அவருக்கு சர்வசாதாரணமாகி விட்டது.
இன்றும் வன்னி மாவட்டத்திலும் கிளிநொச்சியிலும் கழகத்திற்காக வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கும் பல உண்மையான தோழர்கள் செருப்பு வாங்க கூட காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக அறியக்கூடியதாக இருக்கிறது. தேர்தல் காலங்களில் மட்டும் கழகத் தலைவர்கள் இவர்களின் உதவியை எதிர்பார்ப்பார்கலாம். இன்றும் வன்னியிலும், கிளிநொச்சியிலும் இருக்கும்உண்மையான கஷ்டப்பட்ட கழகத் தோழர்கள், தாங்கள் நேசித்த கழகத்தைப் பற்றி உண்மையாக இருந்தாலும் நான் எழுதுவதை விரும்பவில்லை.
மறைந்த செயலதிபர் மேல் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும், அதற்காக தண்டனை கொடுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து மரண தண்டனை கொடுத்த தலைவர்கள் தாங்கள் பதவிக்கு வந்த பின்பு நல்ல முறையில் கழகத்தை நடத்துவதாக உறுதி கூறியவர்கள். பதவிக்கு வந்த பின்பு பதவிக்காகவும் பணத்துக்காகவும் மறைந்த செயலதிபர் உமா மகேஸ்வரன் மேல் கூறிய குற்றச்சாட்டுகளை விட ஆயிரம் மடங்கு கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்பது வெட்கப்படவேண்டிய விடயம்.
இன்றுவரை அவர்கள் அதைப்பற்றி வெட்கப்படவும்,கவலைப்படவும் இல்லை. தமிழ் மக்களும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. இது எங்கள் இயக்கத்துக்கு மட்டுமல்ல. இது எல்லா ஆயுதம் தூக்கிய இயக்கங்களுக்கும் பொருந்தும்.1990 ஆண்டுக்குப்பின் விடுதலைப்புலிகளை அழிபதக்காக, இலங்கை அரசு அவர்களுடன் சேர்ந்து இயங்கிய எல்லா தமிழ் இயக்கங்களுக்கும், தங்களுடன் இணைந்து இயங்கும் ஒவ்வொரு இயக்க அங்கத்தவர்களுக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளமாக, லட்சக்கணக்கான ரூபாய் இயக்கத் தலைமைகளிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதை இயக்கத் தலைமைகள் தங்கள் சொகுசு வாழ்க்கைக்குபயன்படுத்திக்கொண்டு களத்தில் நிற்கும் தோழர்களுக்கு அந்தப் பணத்தை கண்ணில் கூட காட்டவில்லை என செய்திகள் வந்தன. இன்றும் கூட பல உண்மையான தோழர்கள் வசதி வாய்ப்புகள் இன்றி கஷ்டத்தில் இருப்பதாக செய்திகள் உள்ளன.
ஏதோ ஒருவிதத்தில் தமிழ் மக்களையும் அவர்களது உண்மையான போராட்ட அரசியலையும் அழித்த மிஞ்சி இருக்கும் இந்த தலைவர்கள் இப்பொழுது தமிழ் மக்களை காப்பாற்ற ஒற்றுமைப்பட்டு, தங்களது அடுத்த ஏமாற்று வேலையை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசிப்பதாக தெரிகிறது.
எங்கள் இயக்கத்தில் மிகச்சிறந்த போராளித் தலைவர்கள் இருந்தார்கள். குறிப்பாக கந்தசாமி, மாணிக்கம் தாசன், இன்னும் பலர். இயக்கத் தலைமை இவர்களை சரியான முறையில் பயன் படுத்தாமல் தவறான வழியில் பயன்படுத்தியதால் இந்த வீரப் போராளிகள் கெட்ட பெயரோடு தான் வீரமரணமடைந்தார்கள்.
நினைவுகள் தொடரும்.
No comments:
Post a Comment