பகுதி 108
எனது 105 பதிவுக்கு, எனக்குப்பின் பொறுப்புக்கு வந்த நண்பர் லிங்கநாதன் சில கருத்துக்களை கூறியுள்ளார். நன்றி. அதில் தான் தனியாக சென்னை வந்ததாக கூறியுள்ளார். இருக்கலாம். அந்த காலகட்டத்தில் தனியாக வந்தாரா மற்றவர்களுடன் வந்தாரா, என்று இன்று நினைவு படுத்த முடியவில்லை. மேலும் அவர் கூறிய கருத்து மாணிக்கம் தாசன் யாரையும் கொலை செய்ய வரவில்லை என்று. மறைந்த செயலதிபர் உமாமகேஸ்வரன் கொலையில் யார் யாருக்கு தொடர்பு இருக்கு என்று இன்று வரை பகிரங்கமாக கூற முடியாதவர் எப்படி மாணிக்கம் தாசன் கொலை செய்ய வந்தார் என்று கூறுவார்.
மேலும் நண்பர் லிங்கநாதன் ஒரு சிறந்த முக்கிய ஆவணத்தையும் பதிவிட்டுள்ளார். நன்றி. நான் 1/2/90 இயக்கத்தை விட்டு விலகிய பின்பு லிங்கநாதனை பொறுப்பாளராக நியமித்து 13/04/90 தேதியிட்ட மாணிக்கம் தாசன் கொடுத்த கடிதம். பொதுவாக செயலதிபர், அல்லது கட்டுப்பாட்டு குழு தலைவரான சித்தார்த்தன் கொடுக்க வேண்டிய கடிதத்தை கழக ராணுவப் பொறுப்பாளரான ஜம்பு என்று மாணிக்கம் தாசன் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் உள்ள முக்கிய விடயம் லண்டன் கிருஷ்ணனுக்கு கொடுத்துள்ள முக்கியத்துவம். கியூ பிரான்ச், RAW , மற்றும் வெளிநாட்டு கிளைகள் உடனான தொடர்புகளுக்கு லண்டன் கிருஷ்ணனை பயன்படுத்தும் படி.
1986 இயக்கத்திற்கு ஆயுதம் வாங்கி கப்பலில்அனுப்பி விட்டதாக பொய் கூறி, இயக்க பணம் பல கோடி ரூபாய்களை ஏமாற்றியவர் லண்டன் கிருஷ்ணன். இயக்கம் பிளவுபட்ட பின் சிதறி போனதற்கு முழு முதல் காரணம் லண்டன் கிருஷ்ணன் ஏமாற்றியது தான். கொழும்பில் வைத்து மறைந்த உமா மகேஸ்வரன் உடன் கடும்சண்டையிட்டு, உமாமகேஸ்வரன் கிருஷ்ணனை கொலை செய்யச் சொல்லி சொல்ல, கிருஷ்ணன் மாணிக்கம் தாசனோடு சேர்ந்து உமா மகேஸ்வரனை கொலை செய்ய முயன்ற கதையெல்லாம் பதிவுகளில் உள்ளது.நன்றி லிங்கநாதன்.
நான் இயக்கத்தை விட்ட பின்பு, தனியாக தங்கி இருந்தாலும், ஆட்சி ராஜன் நண்பர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தேன். மாணிக்கம் தாசன் இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், சித்தார்த்தன் உண்மைகளைக் கூற வாய்திறக்க முடியாமல் மாணிக்கம் தாசனின் கட்டுப்பாட்டில் இருப்பதும் எங்களுக்கு தெரிய வந்தது.எங்களை கொலை செய்து , உண்மைகளை மறைக்க சம்பந்தப்பட்ட முக்கிய தலைவர்கள் விரும்புவதாக அறிந்தோம். மாணிக்கம் தாசன் தனக்கு நம்பிக்கையான தோழர்களுடன் எங்களை பல இடங்களில் தேடித் திரிந்த செய்திகள் உடனுக்குடன் சபாநாதன் குமார் மூலம் ஆட்சி ராஜனுக்கு தகவல்கள் வந்தன.
இனியும் இயக்கத் தோழர்களுக்கு உண்மையை கூற வேண்டும் என நாங்கள் முயற்சிப்பது வீண்வேலை என்று தெரிந்தது. ஜெயா, மற்றும் மதன் போன்றோர் தங்களது சொந்த உறவினர் உதவியுடன் வெளிநாட்டுக்குப் போனார்கள்.KL ராஜன், ராபின், வசந்தின் தம்பி ஜெயபாலன், கல்கிசை தொலைபேசி நிலையத்தில் வேலை செய்த விக்கி ஆகியோரை ஆட்சி ராஜன் பணம் ஏற்பாடு செய்ய, நான் ஏஜென்சி ஏற்பாடு செய்து வெளிநாட்டுக்கு அனுப்பினேன். சென்னையில் பத்மநாபா கொலை, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி கொலை ஆகியவற்றுக்கு பின்பு தமிழ்நாடு காவல்துறை மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்ததால், அதற்குப் பின்பு எங்களை கொலை செய்ய தேடி திரிந்தவர்கள் காணாமல் போனார்கள். ஆட்சி ராஜன் சபாநாதன் குமாரையும் பணம் மற்றும்,ஏஜென்சி ஏற்பாடு செய்து ஜேர்மனிக்கு அனுப்பி வைத்தார்.
இனிமேல் சென்னையில் வைத்து எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்து, கழக விசாரணைக்குழு ஒன்று செல்லக்கிளி மாஸ்டர் தலைமையில்அமைத்து எங்களை இலங்கை வரும்படி, 15/09/1991 அன்று எழுதிய ஒரு கடிதம் நீண்ட நாட்களின் பின் எங்களுக்கு கிடைக்கக்கூடியதாக நண்பர்கள் ஊடாக கொடுத்து அனுப்பியிருந்தார்கள். கடித விபரம்
15/9/91
அன்புடன் ஆட்சி ராஜன், வெற்றி செல்வன் அறிய
நீங்கள் உங்கள் கையெழுத்து பிரதியும் தந்து பெரியவர் (செயலதிபர்) கொலை சம்பந்தமாக எங்களை விசாரணைக்குழு அழைத்தால் நாங்கள் விசாரணையில் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம் என கூறினீர்கள். எனவே இது சம்பந்தமாக C.R.B இல் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்கு C R B விசாரணை சம்பந்தமாக ஆட்சி ராஜன், வெற்றிச்செல்வன் வவுனியா வரும்பட்சத்தில் அவர் விசாரணை முடிந்து இந்தியா செல்லும் வரையிலும் முழு பாதுகாப்புக்கும் தாங்கள் பொறுப்பு என உத்தரவாதம் அளித்திருக்கிறது. ஆனால் அவர்கள் வருகின்ற 31/10/91குள் வரத் தவறினால் அதன்பின் அவர்களின் எந்தவிதமான பேச்சையும் ஏற்க தயாராக இல்லை எனவும் கூறியுள்ளது
எனவே முடிவுகள் உங்களைப் பொறுத்தது, பின் எங்களில் குறை விளங்க கூடாது. எனவே இதற்கான பதிலை உடன் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் இனியும் இந்த பிரச்சினையை தள்ளிப்போட முடியாது. உங்களுக்காகவே ஒன்றரை மாதங்கள் தவணை போடப்பட்டிருக்கிறது.
இங்ஙனம்
அன்புடன்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
P.L.O.T.E
விசாரணைக் குழு
V. செல்லக்கிளி.
இந்தக் கடிதம் எமக்கு கிடைக்கும் போது அவர்கள் கொடுத்த காலக்கெடு முடிந்து சில மாதங்கள் ஆகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 105 எனது பதிவுக்கு நண்பர் லிங்கநாதன் போட்டிருந்த தாசனின் கடித விபரம்.
13/04/90 jamboo
விசு பாரதி
அன்புடையீர்
தமக்கென வரையறுக்கப்பட்டுள்ள கடமைகள் ஆவண
அ . Q உடனான தொடர்பு
ஆ. Raw உடனான தொடர்பு
இந்த இரண்டு தொடர்புக்கும் தோழர்கள் கிருஷ்ணன், GTR போன்றோரை மாத்திரம் அழைத்துச் செல்லலாம்.
இ. வெளியில் இருக்கும், சிறையிலிருக்கும் அனைத்து தோழர்களின் பராமரிப்பு
ஈ. அனைத்து வெளிநாட்டு கிளைகள் உடனான தொடர்பு
இதற்கு தோழர் கிருஷ்ணனின் பூரண ஒத்துழைப்பை பெறலாம்.
குறிப்பு 1.
இன்று இருந்த நீர் அனைத்து பிரிவுகளையும் உமது நேரடி கண்காணிப்பில் கொண்டு வரும்படியும்
2. இன்று இருந்து நீர் தமிழக நிர்வாக பொறுப்பாளராக நியமிக்கப்
நியமிக்கப் பட்டு உள்ளீர் என்பதனையும் அறியத்தருகிறேன்
நன்றி
Military in charge
M.Jamboo.
நன்றி லிங்கநாதன் உங்கள் கடிதம் ஆவணம்
சில நினைவுப் பதிவுகள் தொடரலாம்.
No comments:
Post a Comment