பகுதி 121
சில நினைவுக் கடிதங்கள்
நான் எனது இயக்கத்தை விட்ட பின்பு, தொடர்ந்து இயக்கத்தில் இருந்த சில நல்ல நண்பர்கள், நடந்த உண்மைகளை எழுதித் தரும்படியும், இதை தோழர்கள் மத்தியில் கொடுப்பதாகவும் கூறி , எங்களைரகசியமாக தொடர்பு கொண்டார் கள். இதன் பின்னணியில் இருந்தவர் சக்திவேல் என்பதை அறிந்து கொண்டோம். நான் 5 பக்கம் கொண்ட உண்மைகள் உறங்குவதில்லை என்ற தலைப்பில் உண்மைகளை எழுதி அனுப்பினேன். பின்பு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. சக்திவேல், சாம்முருகேசு விடுதலைப்புலி தாக்குதலில் கொலை செய்யப்பட்டார்கள் என்றும், ஆனால் எமது இயக்கமே அவர்களை கொண்டது என்றும் செய்திகள் வந்தன.எது உண்மை என்று தெரியாது.நான் எழுதிக்கொடுத்த ஐந்து பக்கம் கடிதத்தில் என்னிடம் முதல் இரண்டு பக்கங்கள் மட்டுமே உள்ளன. அந்த அரைகுறையான கடிதத்தைக் இங்கே பதிவிடுகிறேன்.1990 ஆண்டு அனுப்பியது
உண்மைகள் உறங்குவதில்லை
PLOTE இயக்கத்தின் தோழர்ககளை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இன்றைய சகலகல முன்னணி தோழர்களின் மிக உறுதியான முடிவையடுத்து, ஆதரவோடு PLOTE தலைவர் உமாமகேஸ்வரன் கொலை செய்யப்பட்டார்.ஆனால் இன்று இந்த முன்னணி தோழர்கள் தங்கள் பதவிக்காகவும் தங்களை உத்தமர் போல் காட்டிக் கொள்ளவும் இந்த கொலையை சிலர் தனிப்பட்ட தேவைகளுக்காக செய்ததாக வெளியிலும் பிரச்சாரம் செய்து அவர்களை அழிக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த துரோகத்தனமான பிரச்சாரத்துக்கு நான் உடன்பட மறுத்ததுமட்டுமல்லாமல், இந்த முன்னணி தோழர்களுக்கு சற்று கடுமையாக உண்மைகளை கூறும்படி வலியுறுத்தி கடிதம் போட்டேன். அதனால் நான் நேரடியாக, மறைமுகமாக மிரட்டப் படுகிறேன். அதோடு திட்டமிட்ட முறையில் எனது இயக்க பொறுப்புகளிலிருந்து நானே விலகி கொள்ளக்கூடிய முறையில் நிர்ப்பந்திக்கப் பட்டேன். அதோடு ரகசியமாக என்னையும் பலிக்கடா வாக்கப்பட்ட தோழர்களையும் அழிக்க ஆயுத ரீதியாக சில இயக்கத் தோழர்கள் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டதாலும், நான் உடனடியாக வடபழனியில் உள்ள PLOTE அலுவலகத்தை விட்டு வெளியேறினேன். பின்பு கொழும்பிலுள்ள சித்தார்த்தனை தொடர்பு கொண்டு மேற்படி சம்பவங்களைக் கூறி விளக்கம் கேட்டபோது வேண்டுமென்றே மழுப்பலான பதில்களை கூறினார் அதிலிருந்து அவருக்கும் மற்ற சிலருக்கும் எம்மை அழிப்பதன் மூலம் உமா மகேஸ்வரனின் கொலையில் தங்களுக்குள்ள தொடர்பை மறைக்க முயல்கிறார்கள் என்பது வெளிப்படையானது.
எம்மை அழிப்பதன் மூலம், நாம் அழிந்தாலும், நடந்த உண்மைகள் மறைக்க படாமலும் ,ஒரு தேசிய இன போராட்டத்தை முன்னெடுத்த ஒரு விடுதலை இயக்கத்தை தலைமை தாங்கி நடத்திய தலைவரின் துரோகத் தனத்தால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வு அழிந்து தமிழின போராட்டம் சிதைவுற்றதும், சரித்திரத்தில் மறைக்கப்படாமல் தமிழ் மக்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என நினைத்து உண்மைகள் கூட்டியோ, குறைக்காமலேயே எழுதுகிறேன்.
இலங்கையில் 1989 பிப்ரவரியில் நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பும் பின்பும் கழக (PLOTE) முன்னணி தோழர்களுக்கும் செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கும்அதோடு கழக ராணுவ முகாம்களில் இருந்த தோழர்களுக்கும், முகாம் பொறுப்பாளரும் தளபதியுமான மாணிக்கம் தாசனுக்கும் இடையிலும் பலவித கருத்து வேற்றுமை ஏற்பட்டு மறைமுக பகைகள் வளர்ந்த வண்ணம் இருந்தன.
முதலில் தேர்தலில் போட்டியிடுவதா ?இல்லையா? என்பதும் இந்திய அமைதிப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைத்து பின்பு அவர்களிடம் ஆயுதம் மற்றும் உதவிகளை பெற்றும்,IPKF ஜெயிலில் உள்ள கழகத் தோழர்களை விடுவிப்பதும், பின்பு தமிழ்ல விடுதலைப்புலிகளை (LTTE) அழிப்பதா? இல்லை அவர்களோடு நட்பு கொண்டு IPKF எதிர்ப்பதா என்று பல கருத்து முரண்பாடுகள் இருந்தன. சித்தார்த்தன்,S.R(ஸ்ரீராம்) ,நான்,லண்டன் கிருஷ்ணன் போன்றோர் இந்திய அமைதிப்படையிடம் உதவி பெற்று எம்மை வளர்த்துக் கொள்வதே நல்லது என்ற கருத்தும், உமா மகேஸ்வரன், ஆனந்தி, திவாகரன் போன்றோர் IPKF பையும், இந்திய அரசையும் எதிர்க்க வேண்டும், அதோடு இலங்கை இடதுசாரிகள்லோடு நட்பு கொள்ள வேண்டும்.UNP அரசையும் எதிர்க்க வேண்டும் என்றகொள்கையை முழங்கியவர்கள். மறைமுகமாக (குறிப்பாக உமா மகேஸ்வரன்) இலங்கை அரசோடு மிக நெருங்கிய நட்புக் கொண்டு காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்தார்கள். இது கொழும்பில் இருந்த கழக மிக முக்கிய தலைவர்களுக்கே தெரியும்
சித்தார்த்தன் தான் மேற்படி உண்மைகளை நான் இந்தியாவிலிருந்து அங்கு வந்தபோது எனக்கு கூறினார்.
மூன்றாவது அணி மாணிக்கம் தாசன் இருவித கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வார். யார் யார் எக் கருத்தைகொண்டு உள்ளார்களோ , அவர்களிடம் தலையாட்டிவிட்டு இரு பக்கமும் நல்ல பெயர் வாங்கி விடுவார். அன்று மட்டும் தாசன் தனி ஒருவராக தனது கருத்தை திடமாக வெளி,யிட்டு ,இருந்தாள் இயக்கம் காப்பாற்றப்பட்டிருக்கும், அல்லது தோழர்கள் தங்கள் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போயிருப்பார்கள். காரணம் அன்று தாசன் ராணுவ தளபதியும் களத்தில் நின்ற தோழர்களோடு நின்ற படியாலும் அவரின் முடிவு கட்டாயம் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும்.
பதிவுகள் தொடரும்.
No comments:
Post a Comment