பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 24 December 2023

  வெற்றிசெல்வன்       Sunday, 24 December 2023
அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -  தொடர் 11

அரசியல் தொடர் - அற்புதன் எழுதுவது
-----------------------------------------------------------------
 “செத்து மடிதல் ஒரு தரமன்றோ

சிரித்துக் கொண்டே செருக்களம் வாடா”
------------------------------------------------------------------

போராட வா என்று அழைத்தனர் - வாடியபோது உதவ மறுத்தனர்!

ஆயுதமும் பணமும் -2
-------------------------------

பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும் நிதியை வைத்து மட்டும் ஆயுதம் ஏந்தும் இயக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. இதனை ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் உணர்ந்திருந்தார். ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு முதலில் தேவையானது துணிச்சல். இரண்டாவது தேவை அந்த இயக்கத்தை எவ்வாறு உருவாக்கப் போகிறோம் என்பதில் தெளிவு.அனைத்துக்கும் மேலாக கட்டுப்பாட்டு விதிகள் தேவை.

புலிகளை விமர்சித்த குழுக்களும் தம்மைப் புத்திஜீவிகள் என்று அழைத்துக் கொண்டவர்களும் மிக முக்கியமாகக் கவனிக்கத் தவறியது நம் நாட்டுச் சூழலுக்கேற்ப ஒரு போராடும் அமைப்பை எப்படி உருவாக்குவது என்பதைத் தான்.

எதிரியே நம்மை ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்தான் என்று தான் சகல இயக்கங்களும் சொல்லிக் கொண்டன. ஆனால் பிரபாகரன் மட்டுமே நிர்ப்பந்தித்த எதிரி மூலமாகவே இயக்கத்தை நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கருத்துக் கொண்டிருந்தார்.

ஆயுதம் தேவை. அதை வாங்கப் பணம் தேவை.

அந்த நேரத்தில் கூட்டணித் தலைவர்கள் சிலரிடம் பணம் இருந்தது.ஆனால் அதை வழங்கும் மனம் இருக்கவில்லை. சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளைக்கு  ஐயாயிரம் ரூபா வெறும் சில்லறை தான். அந்த சில்லறையைக் கூட சிவகுமாரன் கேட்ட நேரத்தில் அவருக்குக் கொடுக்க மனம் வரவில்லை. கையை விரித்தார்.உங்களுக்கு இந்த நேரத்தில் ஒரு சிறு சோக சம்பவம் சொல்லவேண்டும்.

ஓடினான் - வாடினான்
----------------------------
வட்டுக்கோட்டை  பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தியாகராசாவை கொழும்பில் வைத்துசுட்டுக் கொல்லும் முயற்சி நடந்தது பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். அந்த முயற்சியில் ஈடுபட்டவரில் ஒருவர் ஜீவராசா. இவர்  சாவகச்சேரியைச் சேர்ந்தவர். தமிழ் மாணவர் பேரவைத் தலைவராக இருந்த பொன்.சத்தியசீலனைப் பிடித்து பொலிசார் இரண்டு தட்டுத் தட்டி அவர் அரிச்சந்திரனாக மாறி சகல உண்மையையும் கக்கவிட்டார்.

பொலிசாரின் கையில் சிக்காமல் தமிழ்நாட்டிற்குத் தப்பிச்  சென்றவர் ஜீவராசா. படகில் ஏறும்போது ஜீவராசா என்ற இளைஞனுக்கு நிறைய நம்பிக்கை. தமிழ்நாட்டுக்கு சென்றுவிட்டால் போதும் தமிழனத் தலைவர் கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் அங்கு இருக்கும்போது என்ன குறை?

தமிழகத்தின் நிலப்பரப்பில்  நம்பிக்கையோடு கால் பதித்து கலைஞரை தேடி ஓடினான் ஜீவராசா. “யார் நீர் எங்கிருந்து வருகிறீர்?, எதற்காக தலைவரைப் பார்க்கவேண்டும்?

கலைஞரின் கட்சிக்காரர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னான் அந்த இளைஞன். “எனக்கு எந்த உதவியும் வேண்டாம். ஒருமுறை ஒரே ஒரு முறை கலைஞரைப் பார்த்து பேசிவிட்டால் போதும்.” என்று வேண்டுகோள் விடுத்தான். கலைஞர் கருணாநிதியின் வீடு சென்னையில் கோபாலபுரத்தில் இருக்கின்றது.

கலைஞர் செவிக்கு ஜீவராசாவின் வேண்டுகோள் சென்றது. ஆனால் கடைசிவரை கோபாலபுரத்தின் கதவுகள் திறக்கவேயில்லை.

“தலைவர் பிஸி” என்ற பதிலைத் தவிர வேறு எந்த மொழியும் ஜீவராசாவின் செவிக்கு தரப்படவில்லை. தளர்ந்து போனான். பசி, பட்டினி மயங்கி வீதியில் கிடந்தவனை கனிவோடு உபசரித்தாள் ஒரு ஏழை தமிழ்ப்பெண்.அவள் ஒரு கூலித்தொழிலாளி.

தான் பணியாற்றும் செங்கல் சூளையொன்றில் அவனுக்கும் கூலி வேலை பெற்றுக்கொடுத்து உதவினாள். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடிக்காக மூச்சை விடத் தயங்கேன் என்பார் தலைவர் கலைஞர்.

அந்த மூத்த குடிக்காக பேராடிய ஒரு போராளி கலைஞரின் புறக்கணிப்பால்  தலையிலே கல் சுமந்து வயிற்றைக் கழுவினான். அதிர்ச்சியாக இருக்கும்.ஆனால் நடந்து தான் இருக்கின்றது இப்படியான சோக நிகழ்வுகள்

இராசரத்தினமும் பசியும்
---------------------------------

மற்றொரு சோகத்தையும் கேளுங்கள். தமிழரசுக் கட்சியின் தூணாக இருந்தவர் இராசரத்தினம். இவரும் சாவகச்சேரியைச் சேர்ந்தவர் தான்.

ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமான தாணு இந்த இராசரத்தினத்தின் மகள் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இராசரத்தினத்தின் நினைவாக அவரைக் கௌரவித்து பிரபாகரன் ஒரு விருது வழங்கியதாலும் அந்த சந்தேகம் வலுத்திருக்கின்றது.

யார் இந்த இராசரத்தினம்?
----------------------------------
தமிழனத்தின் போராட்ட வரலாற்றிலே ஒரு சில தலைவர்களது வரலாறாக சாதனையாக நினைத்தே பழக்கப்பட்ட நமக்கு இந்த இராசரத்தினத்தை தெரியாமல் போவதில் வியப்பில்லை. 1973 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்தார் அமைச்சர் செல்லையா குமாரசூரியர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் தபால் அமைச்சராக இருந்தவர். துரோகி குமாரசூரியர் என்று கூட்டணித் தலைவர்களால் தூற்றப்பட்டவர். பாலத்தில் சென்று கொண்டிருந்த காரையும் அமைச்சரையும் குண்டு வைத்து தகர்க்க முயன்றார் இராசரத்தினம்.

பொலிசார் வலை வீசினர். இராசரத்தினம் தமிழ்நாட்டுக்குத் தப்பி ஓடினார்.

“இலங்கை மீண்டும்  எரிகிறது” என்றொரு நூல் அப்போது இலங்கை அரசை கோபமூட்டியது. அந்த நூலின் பெரும்பகுதி ‘சேரன்’ என்ற புனைபெயரோடு இராசரத்தினத்தால் எழுதப்பட்டது. அவர் எழுதிய இன்னொரு நூலின் பெயர் ‘தமிழர்கட்கு ஏன் ஒரு நாடு வேண்டும்?’

இந்த இராசரத்தினம் தான் தமிழ்நாட்டில் உள்ள கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்  போன்ற தலைவர்களை 1972 தந்தை செல்வநாயகம் சந்திக்க வழி செய்தவர். தந்தை செல்வா, ‘தளபதி அமிர்’ ஆகியோர் தமிழகத் தலைவர்களைச் சந்தித்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன.

கூட்டணியின் தேர்தல் பிரசாரங்களுக்கு 1977 வரை அந்தப் புகைப்படங்கள் பேருதவி செய்தன.

ஆனால் 1973 இல்  மீண்டும் தமிழகத்திற்குச் சென்ற இராசரத்தினத்திற்கு எந்த தமிழகத் தலைவர்களும் உதவ முன் வரவில்லை.

பசி, பட்டினி, தொய்வு நோய் வேறு அவரை வாட்டியது.

ஒரு நாள் அதிகாலை 1.30 மணிக்கு தமிழ்நாட்டிலிருந்து  இலங்கைக்கு தலைவர் அமிர்தலிங்கத்தோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார் இராசரத்தினம். ‘தனது கஸ்டத்தை எடுத்துச் சொன்னார்’

தமிழீழ முதல்வர் என்றும் தளபதி என்றும் அழைக்கப்பட்ட அமுதர் ஒரே வார்த்தையில் சொன்ன பதில்:

“பணம் அனுப்ப வசதியில்லை”

இராசரத்தினம் குடும்பஸ்தர். அப்பா எங்கே என்று பிள்ளைகள் தேடுமே?  பாசம் இருக்காதா? அங்கே இங்கே பணம் திரட்டி ஐந்து மீற்றர் துணி வாங்கினார்.

அப்போது சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் கர்மவீரர் என்று அழைக்கப்பட்ட வ.நவரத்தினம். அவரது மனைவி திருமதி நவரத்தினம் தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தார். இராசரத்தினத்தையும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

ஐந்து மீற்றர் துணியோடு போய் “இதனை ஊரில் எனது பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டும்.” என்றார் இராசரத்தினம்.

கர்மவீரரின் மனைவி சொன்ன “பதில்; என்னால் முடியாது.” ஆனால் திருமதி  நவரத்தினம் தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் 1500 ரூபாவுக்கு (அப்போது பெரிய தொகை)பொருட்கள் கொள்முதல் செய்து கொண்டு புறப்பட்டார்.

அழைத்தவர் மறுத்தார்

“செத்து மடிதல் ஒரு தரமன்றோ

சிரித்துக் கொண்டே செருக்களம் வாடா”

என்று காசி ஆனந்தன் கவிதையை மேடைகளில் உணர்ச்சிபொங்கப் பாடுவார் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம்.

அந்த வீரத்தமிழ்த் தலைவி தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்தார்.

பசியால் துடித்த இராசரத்தினத்திற்கு பசியே தீர்ந்தது போல திருப்தி. திருமதி அமிர் வந்துவிட்டா. நிச்சயம் உதவி பெறலாம்.ஓடினார்.

“ஒரு முன்னூறு ரூபா கடனாகத் தாருங்கள்” என்று கேட்டார்.

செருக்களத்திற்கு அழைத்த செந்தமிழ்ச் செல்வி சொல்லிய பதில்,

“என்னிடம் பணம் இல்லை.”

பட்டினி, அவலம் வெட்கப்பட்டால் முடியுமா? எனவே இராசரத்தினம் விடாமல் கேட்டார்.

“ஒரு வளையல் தந்தால் அடகுவைத்து பணம் எடுக்கலாம். பின்னர் மீட்டுத் தந்துவிடுவேன்”

“முடியாது” என்று முகத்தில் அடித்தது போல் மறுத்தார் மங்கையற்கரசி

வாழ்க ஈழத் தமிழகம் என்று மேடைகளில் பாடிய மங்கையற்கரசி அக்கா வாடிய ஒரு ஈழத்தமிழ்ப் போராளியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இதில் இன்னொரு வேதனை. அமுதரின் மகன் காண்டிபன் தமிழ்நாட்டிலிருந்தபோது இராசரத்தினம் சாப்பாடு போட்டிருக்கின்றார்.

பட்டினிக் கொடுமை நோயை வளர்த்துவிட 1975 இல் காலமானார் இராசரத்தினம்.

செத்த பின் மரியாதை
-------------------------------
அவரது உடல் மீது உதயசூரியன் கொடியைப் போர்த்திவிட்டுச் சொன்னது இது:

“இலங்கைத் தமிழர்களின் நேதாஜி இங்கே உறங்கிறார்”

நேதாஜி என்பது இந்திய சுதந்திரப் போரில் தேசிய இராணுவத்தை உருவாக்கிய சுபாஸ் சந்திரபோசைக் குறிக்கின்றது.

தளபதி அமிர் விடுத்த அறிக்கை இன்னும் உணர்ச்சிகரமானது.

“இராசரத்தினம் அவர்களின் மறைவின் மூலம் எங்கள் இயக்கம் எறும்பு போல் ஓயாமல் உழைக்கும் ஒரு உத்தமத் தொண்டனை இழந்துவிட்டது”

இது அமுதரின் பேச்சு. கர்மவீரர் நவரத்தினம் என்ன பேசினார் தெரியுமோ?

“இராசரத்தினம் கூட்டணியின் தீவிர உறுப்பினர் தந்தை செல்வாவின்  தலைமையின் கீழ் செயற்பட்ட செம்மல் அவர்.”

இராசரத்தினம் என்ற தன்னலமற்ற தொண்டனுக்கு கூட்டணித் தலைவர்கள் செய்தது நியாயமா துரோகமா? என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை இதனை வாசித்தறியும் உங்களிடமே விட்டு விடுகின்றேன். இராசரத்தினம் கதை பொய் என்று யாராவது நினைத்தால் இங்கு வெளியாகியுள்ள நாட்குறிப்பின் ஒருபக்கம் உண்மை சொல்லும்.இராசரத்தினம் அவர்களால் 1973 இல் எழுதப்பட்ட சோகவரிகள் அவை.

இன்னும் பல சோக நிகழ்வுகள் உண்டு.  அவை அவ்வப்போது சொல்லப்படும்.

வங்கியில் குறி
--------------------
இவ்வாறான சூழல்கள் நிலவிய போது தான் ஆயுதம் ஏந்தவேண்டும் ஆயுதம் ஏந்தும் போராளிகள் வாழவும் ஆயுதம் வாங்கவும் பணம் வேண்டும். பணத்தை அரசின் நிர்வாகத்திலிருந்து பறித்தெடுக்கவேண்டும் என்பதில் புலிகள் தீர்க்கமான நம்பிக்கையில் இருந்தனர்.

யாழ்ப்பாணம் நல்லூர்த் தொகுதியில் திருநெல்வேலியில் இருந்தது மக்கள் வங்கி.குறிப்பிட்ட திகதியில்  அந்த வங்கியில் பெருந்தொகைப்பணம் இருக்கும் என்ற துல்லியமான தகவலை புலிகள் அறிந்தார்கள். வங்கியின் உள்ளமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விபரங்களும் புலிகளுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது.

அந்த விபரங்களைச் சொன்னவர் மக்கள் வங்கியில் காசாளராக இருந்த சபாரத்தினம்.

இந்த சபாரத்தினம் தான் தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதிப்பொறுப்பாளராக இருக்கிறார். ரஞ்சித் அப்பா என்று அழைக்கப்படுகிறார்.

1978 டிசம்பர் 5ஆம் திகதி  காலை நேரத்தில் மக்கள் வங்கிக்குள் புலிகள் புகுந்தார்கள்.

பாதுகாப்புக்காக இருந்த பொலிஸ்காரரின் துப்பாக்கி பறிக்கப்பட்டதுடன் நடவடிக்கை ஆரம்பித்தது

(தொடரும்)

- http://www.thenee.com/html/221214.html
logoblog

Thanks for reading

Previous
« Prev Post

No comments:

Post a Comment