பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 12 December 2023

ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால பற்றிய உண்மையான பதிவு

  வெற்றிசெல்வன்       Tuesday, 12 December 2023
வாசிப்பின் மீது "காதல் கொள்ளுங்கள்"  அதுவொன்றே உங்களை முழுமையாக்கும். 

MRS இன் கட்டுரை ✍️✍️✍️✍️

"வளர்த்த கடா மார்பில் பாய்ந்த அமிர்தலிங்கம் நினைவுகளும் மேதகு வின் கயமைகளும்..."

 யூலை 13 அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு நாள் 'மே.த.கு' வால் அனுப்பப்பட்ட கொலைஞர்கள் அவரைக் கொன்று போட்ட நாள்.

“நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை” என்பது இலங்கை தமிழர்களது அரசியல் வாழ்வில் மிகவும் பிரபல்யமானதொரு மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்தவிடாமல் சிறிமா பண்டாரநாயக்கா தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு முட்டுக்கட்டைபோட்டது. “பொலிசாரை அனுப்பி மாநாட்டில் கலந்துகொண்ட 9 அப்பாவி தமிழர்களை காட்டுமிராண்டித்தனமாக சுட்டுகொன்றது” என்பதே வரலாறாக ஒவ்வொரு தமிழர் மனதிலும் இன்றுவரை உலாவரும் செய்தி ஆகும். இந்த வரலாற்றையே மேதகு திரைப்படமும் முன்வைத்துள்ளது.

இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள்தான் இன்றுவரை தமிழர் தரப்பு போராட்டங்களுக்கு நியாயம் சேர்த்து வருபவையாக இருக்கின்றன. ஆனால் உண்மை சம்பங்களாக விபரிக்கப்படுகின்ற குரூரங்களின் வரலாற்று சூழலையும் இச்சம்பவங்களின் பின்னணியில் மறைக்கப்பட்டிருக்கின்ற தகவல்களையும் தேடி ஆராய்கின்றபோது மேலும் பலவிதமான அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவரகாத்திருக்கின்றன.
அது மட்டுமன்றி இது போன்ற இழப்புகளை தவிர்த்திருக்கக்கூடிய வாய்ப்புகளை தமிழ் தலைவர்கள் திட்டமிட்டே கருத்தில் எடுக்காதிருக்கின்றனர். சிலவேளைகளில் இன்னுமொருபடி மேலேபோய் தமிழ் தலைமைகளே இதுபோன்ற குரூரமான வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

1970 ஆண்டு தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து இடதுசாரிகள் கூட்டணி அரசாங்கம் அமைத்திருந்தனர். தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான மக்கள் நல திட்டங்கள் பல நாடெங்கும் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் உப உணவுப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் அதிக கவனமெடுத்து செயற்பட்டது.

வெங்காயம், மிளகாய்…போன்ற பயிரிடல்களில் ஈடுபட்ட ஏழை விவசாயிகள் பலர் இந்த சிறிமா ஆட்சியில்தான் கூடிய இலாபம் சம்பாதித்து சமூகத்தில் முன்னணிக்கு வரும் அரியவாய்ப்புகளை பெற்றுகொண்டனர். அதேபோன்று உழைப்பாளர்கள் நலன்சார்ந்த கூட்டுறவு சங்கங்கள்இ தொழிற்சங்கங்கள்…… போன்ற அமைப்புகளும் இந்த காலத்தில்தான் அதிக வளர்ச்சி கண்டன. 

 இத்தகைய அபிவிருத்தி முயற்சிகள் அனைத்துக்கும் யாழ்மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா  சிறிலங்கா சுதந்திர கட்சி சார்ந்து செயற்பட்டமை உறுதுணையாக அமைந்தது.
இதன்காரணமாக யாழ் மாவட்டத்தினை மேலும் பலவழிகளிலும் அபிவிருத்தி செய்ய அவருக்கு அரசாங்கத்தின் பூரண ஆதரவு கிட்டியது. இதனை மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் அந்த காலத்தில் (1970-1977) பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இராஜன் செல்வநாயகம் அவர்களின் அபிவிருத்தி திட்டங்களுடன் ஒப்பிடலாம்.

நீண்டகாலமாக இராஜன் செல்வநாயகத்திற்கு முன்பிருந்தே தமிழரசு கட்சி எம்.பி.யாக இருந்துவந்த செ.இராஜதுரையினால் செய்யப்பட்ட அபிவிருத்திகளை விட 1970 – 1977 வரையான காலப்பகுதிகளில் இராஜன் செல்வநாயகம் பன்மடங்கான வளர்ச்சி திட்டங்களை மட்டக்களப்பில் செய்து முடித்திருந்தமை இன்னும் பலருக்கு ஞாபகமிருக்கலாம்.

அதேவேளை 1970 ம் ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் படுதோல்வி கண்டதனால் பாராளுமன்ற வாய்ப்பைகூட இழந்திருந்தார் அமிர்தலிங்கம். அந்தவகையில் அல்பிரட் துரையப்பாவோ  அமிர்தலிங்கத்தினை விஞ்சிய ஒரு மக்கள் தலைவனாக யாழ்பாணத்தில் மிளிர்ந்தார்.
துரையப்பாவின் வேலைத்திட்டங்கள் யாழ்ப்பாணத்தின் ஏழைகள் விவசாயிகள் மற்றும் சமூகத்தின் தாழ்நிலை வகுப்பிலிருந்தவர்கள் போன்ற பலதரப்பட்டோரதும் வாழ்க்கைத்தரத்தினை அதிகரித்தது.

 தமது அரசியல் வாழ்வில் எப்போதும் மேனிலை வர்க்கத்தினருக்கான அரசியலை முன்னெடுத்து வந்த தமிழ் தலைமைகள் இந்த சமூகமாற்றத்தை ஒரு போதும் விரும்பியிருக்கவில்லை.
இந்தஒடுக்கப்பட்ட  வகுப்பினரது வளர்ச்சிநிலையானது அமிர்தலிங்கம் போன்ற தமிழரசுகட்சி பிரமுகர்களும் அவர்களது ஆதரவு தளமான மேட்டு குடியினரும் நடத்திவந்த  சமூக அதிகாரத்தை ஆட்டம் காணச்செய்யும் அல்லது கேள்விக்குள்ளாக்கும் நிலையை நோக்கி நகர்ந்தது. இதுவும் அவர்களுக்கு உவப்பானதொன்றாக இருக்கவில்லை. அடுத்து வரபோகின்ற 1977 ம் ஆண்டு பொதுதேர்தலில் இன்னிலைமைகள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் அச்சமுற்றனர்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கடுமையான வயோதிப தளர்வினை எதிர்நோக்கியதன் காரணமாக 1970 இன் பின்னர் தமிழரசுக் கட்சிக்குள் அடுத்தகட்டத் தலைமையை நோக்கிய குடும்பிப் சண்டைகள் ஆரம்பமாயிற்று. கிழக்கில் இருந்து இரண்டாம் தலைமையாக வளர்ச்சி பெற்றிருந்த சொல்லின் செல்வர் இராஜதுரை அவர்களுக்கே அந்த வாய்ப்புகள் அதிகம் இருந்தது.

ஆனாலும் அ.அமிர்தலிங்கம் தாம் சார்ந்த குழாம் ஒன்றினை தமிழரசுக் கட்சிக்குள் மறைமுகமாக கட்டிவளர்த்து தலைமைப் பதவியைப் பிடிக்க குள்ளத்தனமாக செயற்பட்டு வந்தார். அதேவேளை கட்சியின் செயற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்துபவராக தன்னை எப்பொழுதும் அடையாளப் படுத்துவதில் கண்ணாயிருந்தார்.

1972 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்களாதேசம் எனும் ஒரு நாட்டின் உருவாக்கம் நிகழ்ந்தது. இதற்கு பாகிஸ்தான் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு புதியதொரு நாட்டை உருவாக்க முன்நின்று உழைத்ததே காரணமாகும். இந்த வங்காளதேஷ் எனும் நாட்டின் உதயத்தை வரவேற்றுப் பேசிய அமிர்தலிஙம் இதேபோன்று இலங்கையிலும் இந்தியா தலையிட்டு ஒரு “யாழ்தேஷ்” மலர உதவவேண்டும் என அன்னை இந்திரா காந்தியை கேட்டுக்கொண்டார்.

அதாவது ஒரு நாடு பிளவுபடும் அளவிற்கு இனமுரண்பாடுகள் இல்லாத சூழலில் எடுத்த எடுப்பில் அவ்வப்போது உணர்ச்சி மேலிட உரத்துப் பேசுவதின் பழக்கதோசமே இந்த கருத்தாகும்;. சே.பொன் அருணாசலம் காலத்தில் இருந்து தேவையான போது இப்படித் தனிநாடு குறித்தும் தமிழ் அரசு குறித்தும் தடாலடியாகப் பேசுவது யாழ்த்தலைமைகளின் வழக்கமாக இருந்தது.

அமிர்தலிங்கம் காலத்துக்கு முன்னர் கூட பாகிஸ்தான் உருவான வேளையில் தமிழ் காங்கிரஸின் தலைவராக இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் அதேபோன்றதொரு தனிநாட்டுப் பிரிவினையை தானும் ஏற்படுத்தப் போகிறேன் என்றும் அதை செய்துமுடிக்கப் போகும் “ஜின்னா” தானே என்றும் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் அதுவெல்லாம் எப்படிப் போலிப் பேச்சாகவும் உணர்ச்சி வசப்பட்ட வெற்றுவார்த்தைகளாக இருந்ததோ அதே போன்றே அமிர்தலிங்கமும் “யாழ்தேஸ்” கேட்டமையும் அமைந்தது. கிழக்கில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளும் சமூக பொருளாதார தேவைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு இவையனைத்துக்குமான தீர்வு ஒரு தனிநாடே என்ற சிந்தனை இவர்கள் மனதில் உருவாகி இருந்திருந்தால் இப்படி எடுத்த எடுப்பிலேயே தனிநாட்டைக் குறிக்க “யாழ்தேஸ்” எனும் வார்த்தை வெளிவந்திருக்க முடியாது.
ஆகவே அமிர்தலிங்கமும் தனது கடந்தகால ஆசான்களின் பாணியில் யாழ்ப்பாணத்தின் பிரச்சனைக்காக மட்டுமே போராடினார். தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான முடிவு என்பது யாழ்ப்பாணத்தின் படித்த வர்க்கத்தின் பிரச்சனைகளுக்கான முடிவு காண்பதே எனும் எண்ணமே அவர் மனதில் இருந்தது.

மக்களின் வாழ்வியல் தேவைகளை ஓட்டிய வேலைத்திட்டங்களை கொண்டிராத தமிழரசு கட்சியினர் சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் மோதுவதென்பது சற்று சிரமமானதொன்றாக இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். ஆகவேதான் மக்களின் மனங்களை கவரும் மொழியுணர்வுகளே வழமைபோல் தமிழரசு கட்சிக்கு கைகொடுத்தது.
தமிழை வளர்க்கின்றோம், தமிழை ஆராய்ச்சி செய்கின்றோம், தமிழுக்கு தொண்டுசெய்கின்றோம் என்று மொழிசார்ந்த வேலைத்திட்டக்களையே மக்களின் முன்வைத்தனர். இந்த வேலைத்திட்டங்களின் முதுகெலும்பாகதான் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு யாழ்பாணத்தில் நடாத்தப்படுவதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டது.

இந்த நாலாவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1974 ல் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட வாய்ப்பினை அமிர்தலிங்கம் தனது எதிர்கால அரசியலை ஸ்திரப்படுத்தி கொள்ளும் நோக்கில் நன்றாக பயன்படுத்த முனைந்தனர்.
அமைதியாக நடாத்தபட வேண்டிய ஆராய்ச்சி மாநாட்டை ஆர்ப்பாட்டமாக நடத்துவது என்பது அறிவுடமையானதொன்றல்ல. ஆனால் சாதாரணமாக நடத்தப்பட வேண்டிய இம்மாநாட்டை பெரியதொரு விழாவாக்கி நடத்த முயன்றனர்.

இதற்காக இன பிரிவினை கருத்துக்களை அள்ளி வீசக்கூடிய பேச்சாளர்கள் இந்தியாவிலிருந்து வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தமிழ் ஆராய்ச்சிக்காக நடாத்தப்பட வேண்டிய இம்மாநாடு பிரிவினைக்கு தூபமிடுவதாக அமைந்துவிடக்  கூடாது என்பதில் அரசு கவனமாயிருப்பது இயல்பே.
இதன்காரணமாக தமிழ் நாட்டிலிருந்து வருகை தரவிருந்த உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் ஜனார்த்தனன் (அன்றைய சீமான்) போன்ற பேச்சாளர்களுக்கு இலங்கையரசு வீஸா தரமறுத்திருந்தது. அவரை தனிதமிழீழ கோரிக்கையை தூண்டிவிட கூடிய உணர்ச்சிகரமான பேச்சாளராக அரசு கருதியதே அதற்கு காரணம். ஆனால் இந்த வீஸா மறுப்பும் மாநாட்டுக்கான தடைமுயற்சிகளும் அல்பிரட் துரையப்பாவின் தூண்டுதலின் பெயரிலேயே நடைபெறுவதாக அமிர்தலிங்கம் குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த துரையப்பாவோ யாழ்பாண மேயர் எனும் வகையில் இந்த மாநாட்டுக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்ய தான் தயாராகயிருப்பதாகவும் அறிக்கைவிட்டார். ஆனால் நீதிமன்றங்களில் குதர்க்கம் பேசி தேர்ச்சி பெற்ற அமிர்தலிங்கம் “யாரின் உதவியுமின்றி தன்னால் தனித்து மாநாட்டை நடாத்த முடியும் என மறுப்பறிக்கை விட்டார்.

அதற்கு பதிலிறுத்த துரையப்பா தனது உதவிகள் ஏற்றுகொள்ளபடாவிட்டாலும் தான் இதற்கு தடையாக இருக்க போவதில்லை என சொன்னார். “யார் தடைசெய்தாலும் மாநாடு நடந்தே தீரும்” என்று வேண்டாத விவாதங்களில் ஈடுபட்டார் அமிர்தலிங்கம். இதனுடாக மாநாட்டினை ஒட்டி மிக மோசமானதொரு பதட்ட சூழலினை தோற்றுவிக்க அவரே காரணமாயிருந்தார்.
இப்படியாக அரசாங்கத்தினது பல முட்டுக்கட்டைகளையும் பாரிய ஆபத்துக்களையும் வென்று தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படபோகிறது என்ற ஒரு மாய தோற்றத்தை வடக்கு கிழக்கு மக்களிடம் ஏற்படுத்துவதில் அமிர்தலிங்கம் வெற்றி கண்டார்.
இறுதியாக இறைமையுள்ள ஒரு தேசமான இலங்கையரசின் சட்டதிட்டங்களை மீறி கள்ள தோணியில் ஜனார்தனன் போன்ற இந்திய பேச்சாளர்களை யாழ்பாணம் கொண்டுவந்து சேர்ப்பதில் அமிர்தலிங்கம் இறங்கினார்.
அதுமட்டுமன்றி உதவி அமைச்சர் சோமவீர சந்திரசிறீ, யாழ் மேயர் அல்பிரட்துரையப்பா போன்றோர் மீதான கொலை முயற்சிகளில் ஈடுபட்டமைக்காக இலங்கை பொலிசாரினால் தேடப்பட்டு வந்த சிவகுமாரன் போன்ற தமிழ் மாணவர் பேரவை இளைஞர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இரைளஞர் பேரவை பட்டாளமும் இம்மாநாட்டில் முக்கியஸ்தர்களாக உலாவந்தனர்.

உண்மையில் தமிழ் ஆராய்ச்சி மாநாடுதான் நடத்தபட வேண்டுமாக இருந்திருந்திருந்தால் இவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இவைமட்டுமல்ல குழப்பங்களை ஏற்படுத்தும் வண்ணம் இன்னும் பல தேவையற்ற பொறுப்புகளை அமிர்தலிங்கம் போன்றோர் இந்த இளைஞர் பட்டாளத்திடம் வழங்கியிருநதனர்.
அதாவது விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த ஜனார்த்தனன் அவர்களை இலங்கை பொலிசார் கைதுசெய்து விடாமல்  பாதுகாக்கும் பொறுப்பை பொலிசாரால் தேடப்பட்ட சிவகுமாரன் குழுவினரிடமே வழங்கியிருந்தமை நிலைமைகளை மேலும் சிக்கலாக்கியது.
ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் எனும் நூலினை எழுதிய புஸ்பராசா அவர்கள் தனது நூலில்  96 ஆம் பக்கத்தில் இந்தவிடயங்களை ஒப்புக்கொண்டுள்ளார். “மாநாட்டுக்கு உலகத் தமிழ் இளைஞர் பேரவையின் தலைவர் ஜனார்த்தனன் வந்த செய்தியை அமிர்தலிங்கம் மூலம் அறிந்துகொண்டேன்.யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றில் வைத்து ஜனார்தனனை சந்தித்தேன். ஜனார்த்தனனது பாதுகாப்பு ஏற்பாடுகளை சிவகுமாரனே செய்தார்” என்கிறார் அவர். இவையெல்லாம் தமிழை ஆராட்சி செய்வதற்கோ அன்றி தமிழுக்கு தொண்டு செய்வதற்தோ தமிழை வளர்ப்பதற்கோ செய்யப்பட்டதல்ல. மாறாக எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு அமிர்தலிங்கத்தின் செயற்பாடுகள் பங்களித்தன.

வரலாற்றின் மனிதன் என்கின்ற அ.அமிர்தலிங்கம் அவர்களது பவளவிழா மலரில் இச்சம்பவம் குறித்து ஜனார்த்தனன் பின்வருமாறு விபரிக்கின்றார்.
“செய்தித்தாள்களில் நான் உரையாற்றுவேன் என அறிவிப்பு. காலை ஊர்வலத்தை தொடங்கிவைத்து பேசியபோதே என்னை கைது செய்ய பொலிசார் முயற்சிசெய்ய அவரிடம் அமரர் நவரத்தினம் பேச்சுக்கொடுத்து இடைமறிக்க தலைமறைவானேன். மாலை வீரசிங்கம் மண்டபத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்துவிட்டதால் வெளியே அமைக்கப்பட்ட திடீர் மேடையை அடைந்தேன். காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘உம்மைக் கைது செய்து கொழும்பு நாலாவது மாடிக்கு அழைத்துசெல்லும் உத்தரவிது.’ எனக்காட்ட பேசிவிட்டுத்தான் வருவேன், பேசாது இங்கிருந்து போக தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என நான் மறுக்க வேறுவழியின்றி கூட்டத்தைக் கலைத்து அங்கேயோர் ‘ஜாலியன் வாலாபாக்’ நடத்த காவல்துறையினர் முடிவுசெய்து அகன்றனர். அலையைக் கிழித்துவரும் கலம்போல் அமிர்வந்தார். கரவொலி விண்ணைப்பிளக்க கையில் இருந்த மாலையை எனக்கு அணிவிக்க அதை அவருக்கு நான் திரும்ப மாலையிட அந்த மணமேடை – பின்னர் 12 உயிர்களை தியாகவடிவில் காணும் அவலம் ஏற்பட்டது.”

இந்த வாக்குமூலங்கள் ஊடாக நாட்டின் சட்டத்தை காக்கும் கடமையில் ஈடுபட்ட பொலிசார் ஆத்திரமூட்டப்பட்டு சிவகுமாரன், ஜனார்த்தனன் போன்றோரை கைதுசெய்யும் முயற்சியில் வான்நோக்கி சுடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனை “அமிர்தலிங்கம் சகாப்தம்” எனும் நூலை எழுதிய கதிர் பாலசுந்தரம் அவர்கள் பின்வருமாறு விபரிக்கின்றார்.
“1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆராட்சிமாநாடு நடந்தது. உலகமெங்கும் இருந்து அறிஞர்கள் வந்திருந்தனர். மக்கள் வெள்ளம் அலைபுரண்டது. யாரோ ஒரு இந்தியர் பேசப்பேவதாக பொய்க்கதை பரவியது. திடீரென வந்த பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். குண்டாம்தடிகளால் மக்களை அடித்தர், ரைபிள்களால் சுட்டனர். மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து 9 பேர் பலியாகினார்கள்.”
நடந்த உண்மைகளை இதற்குமேல் இன்றைய பரம்பரை புரிந்து கொள்ள வேண்டும். இவையனைத்தும் தாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக மகாநாடு நடந்ததாகவே தமிழர் விடுதலைக் கூட்டணி கணக்குப் போட்டிருக்க வேண்டும். ஏனெனில் 10-01-74 இல் நடந்த இந்த 9 பேரினுடைய இறப்பும் சிங்களப் பேரினவாத அரசின் தமிழ் படுகொலை என்று பிரச்சாரப் படுத்தி தேர்தலில் களம்மிறங்க அமிர்தலிங்கத்துக்கும் அவர் சார்ந்த கூட்டணியினருக்கும் நல்ல வாய்ப்பபை ஏற்படுத்திக்கொடுத்தது.

கிழக்கு மாகாணத்தில் இருந்து இந்த தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்காக தமிழர்விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட வாகன சேவையினூடு  யாழ்ப்பாணம் சென்ற கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் யாருமே இந்த படுகொலையின் பின்னணியில் இருந்த சூட்சுமங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அமிர்தலிங்கத்துக்கும் அல்பிரட் துரையப்பாவுக்கும் இடையே இருந்த அதிகாரப் போட்டி சண்டைகள் குறித்து அவர்கள் ஏதும் அறிந்திருக்கவில்லை. இந்த சூழ்நிலையிலையே தம் கண்முன்னே நடைபெற்றிருந்த கொலைகளை திட்டமிட்ட சிங்களப் பொலிசாரின் படுகொலையே என நம்பினர். வெடிச்சத்தங்களும் மகாநாட்டில் ஏற்பட்ட குழப்பமும் கொலை செய்யப்பட்ட 9 உடல்கள் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி இறக்கப்பட்டமையும் தம் கண்ணெதிரே நடந்தேறியமையால் இப்படுகொலையானது சிங்கள அரசின் திட்டமிட்ட படுகொலையென்றே அவர்களை நம்பவைத்தது.
தப்பிப் பிழைத்து கிழக்கு மாகாணத்துக்கு வந்த சேர்ந்த அவர்கள் தாம் கொண்டுவந்த செய்திகளை அங்கே பரப்பினர். “கண்ணால் கண்டதும் பொய்” என்பதை அவ்வேளை கிழக்கிலங்கை மக்களிடத்தில் காலம் ஒருதரம் நிரூபணமாக்கிச் சென்றது.

இந்த தமிழாராட்சி மாநாட்டு
அனர்த்தங்களுக்கு பின்பு நடந்த முக்கியமாதொரு சம்பவம் வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு வன்முறை மீதான விருப்பத்தை மென்மேலும் அதிகரிக்க ஏதுவாக்கிற்று பொன் சிவகுமாரன் யாழ்பாணத்தில் நடந்த இருவேறு குண்டுத்தாக்குதல் கொலை முயற்சிகளுக்காக ஏற்கனவே தேடப்பட்டு வந்தவர் என்பதை மேலே கண்டோம்.
1974 ஆம் ஆண்டு ஆனி மாதம் 5 ஆம் திகதி கோப்பாய் வங்கியொன்றில் பொதுமக்களின் நகைகளை கொள்ளையிட முயற்சிக்கையில் வங்கி ஊழியர்களாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் பொலிசாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டார். அக்கைதின் போது “சயனைட்” எனும் விசமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
இந்த தற்கொலை தமிழர்விடுதலைக் கூட்டணியினரால் பரபரப்பாக்கப்பட்டு வீரச்சாவாக வர்ணிக்கப்பட்டது. அதனூடாக ஒருவித கீரோயிச மனப்பாங்கின் மீதான பற்றுதலை இளைஞர்களுக்கு ஊட்டிவிடுவதில் கூட்டணிப் பேச்சாளர்கள் வெற்றியடைந்தனர்.

அஞ்சலிக் கூட்டங்களின் போது பொதுமக்களையும் மாணவர்களையும் அணிதிரட்டிய த.வி.கூட்டணியினரும் அவர்களது கிளையினரான தமிழ் இளைஞர் பேரவையினரும் இப்படி ஆயிரம் ஆயிரம் சிவகுமாரன்கள் உருவாக வேண்டும் என்று வன்முறைக்கு வித்திட்டனர்.
மறுபுறம் இதுபோன்ற பல நிகழ்வுகளில் முக்கிய பேச்சாளராகிய அமிர்தலிங்கம் தன்னைத்தானே தமிழீழத்தின் தளபதியாக வரித்துக்கொண்டதன் ஊடாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை தனக்கானதாக மென்மேலும் உறுதி செய்து கொண்டார்.
ஆனால் அவர் தொடக்கிவைத்த தீவிரவாத போக்கு காலப்போக்கில் அவரையும் பலி கொண்டது.

via M R Stalin Gnanam
logoblog

Thanks for reading ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால பற்றிய உண்மையான பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment