பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 29 April 2024

ஈழவேந்தன்

  வெற்றிசெல்வன்       Monday, 29 April 2024

இலங்கைத் தமிழர் அரசியல் போராட்டத்தின் நீண்ட கால தலைவர்களில் ஒருவரான ஈழவேந்தன் அண்ணா மறைந்த செய்தி அறிந்து, அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

எனக்கு ஈழவேந்தன் அண்ணாவை சிறு வயதிலிருந்து தெரியும். இலங்கை மத்திய வங்கியில் அவர் பணிபுரியும் போது  கொழும்பில் நுகெகோட  என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு நான் எனது அண்ணாவும் தங்கியிருந்து கொழும்புவில் வேலை செய்தார். நான் அண்ணாவைபார்க்க போகும் போது ஈழ வேந்தன்அண்ணா வீட்டில் தான்  தங்குவேன். மிக அன்பாக பழகுவார்.

        . பிற்காலத்தில் எனது அண்ணா திருமணம் செய்த முறையில் எனக்கு மிக நெருங்கிய உறவினராக வந்தார். சிறந்த சமய அரசியல் சொற்பொழிவாளர். இலங்கைத் தமிழர் போராட்டம் பற்றிய புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்தவர்களில் முக்கியமானவர். அவர் அரசியல் வாழ்வில் சறுக்கியது 1977 ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில். அமிர்தலிங்கத்தின் பேச்சைக் கேட்டு மட்டக்களப்பு ராஜதுரைக்கு எதிராக ஈழ வேந்தன் அண்ணா, கோவை மகேசன் காசி ஆனந்தன் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக மேடைகளில் பேசியது தான். பின்பு அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து விலகி தனி கட்சி கண்டார். 

 அந்தக் கட்சி கடைசி வரை லெட்டர் பேட் கட்சியாக மட்டுமே இருந்தது.


1979 ஆண்டு ஜனாதிபதி ஜெயவர்த்தன பயங்கரமான தடை சட்டத்தின் கீழ் உருவாக்கிய பிரிகேடியர் வீரத் துங்காவின் பயங்கரவாத தடுப்பு முகாம் யாழ் பழைய பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டது. முதல் படுகொலைகள் நாவலி செல்வம் இன்பம்.

1979 செப்டம்பர் மாதம் என நினைக்கிறேன் கொழும்பில் வைத்து ரகுபதி பாலா ஸ்ரீதரன் ஈழவேந்தன் அண்ணா, எனது அண்ணா நான், மற்றும் ரேடியோ சிலோனில் வேலை செய்த மூன்று பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 11 பேர் கொழும்பில் கைது செய்யப்பட்டு வெள்ளவத்தை போலீஸ் நிலையத்தில்வைக்கப்பட்டோம். அப்போது அங்கு வந்த எம் சிவா சிதம்பரம் எம்பி உடனடியாக ஜனாதிபதியுடன் கதைத்து எங்களை விடுதலை செய்ய முயற்சி எடுப்பதாக கூறினார். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. பின்பு பல ராணுவத்தினர்  சூழ ராணுவ வாகனத்தில் யாழ் பிரிகேடியர் முகாம் அழைத்துச் செல்லப்பட்டோம்.. பல மாதங்கள் ஈழவேந்தன் அண்ணா அங்கு சிறையில் இருந்தார். 

பாண்டி பஜார் துப்பாக்கி சுட்டு சம்பவத்துக்கு பின், சென்னையில் தலைமறைவாக இருந்து கழக வேலைகளை செய்து கொண்டிருந்த போது, டெல்லியில்மார்ச்1983 நடந்த கூட்டு சேரா நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை பற்றிய ஆவணங்கள் அடங்கிய புத்தகங்களை கொடுப்பதற்கு என்னை டெல்லி அனுப்புவதற்காக தலைவர் உமா மகேஸ்வரன் முடிவு எடுத்து என் கூட தமிழ்நாடு திமுக சேர்ந்த தமிழ் மன்னன் என்பவரை யும வேறொரு முக்கிய நபரையும் ரயிலில் டெல்லி அனுப்புவதாக கூறி சென்றார். 

          .     காலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லி போக வந்த போது அங்கு தமிழ் மன்னனும் ஈழவேந்தன் அண்ணாவும் இருப்பதைப் பார்த்து இருவருக்கும் மகிழ்ச்சி. கிட்டத்தட்ட இது வரும் 40 மணி நேரம் பயணம் செய்து டெல்லியை அடைந்தோம். சரியான குளிர். தமிழ் மன்னன் தங்குவதற்கு வேறு இடம் போக, நானும் ஈழவேந்தன் அண்ணாவும் வைகோவின் டெல்லி எம்பி குவாட்டர்ஸ்க்கு தங்குவதற்கு போனோம். அடுத்த நாள் காலை ஈழவேந்தன் அண்ணா காந்தி பீஸ் பவுண்டேஷன் தங்குவதற்கு போய்விட்டார். நான் தமிழ் மன்னன் தங்கி இருந்த இடத்துக்கு போய் நான் கொடுக்க அனுப்ப வேண்டிய புத்தகங்களை பார்சல் செய்தேன். என்னிடம் சில புத்தகங்களை வாங்கிச் சென்ற ஈழவேந்தன் அண்ணா அதில் தனது விசிட்டிங் கார்டை வைத்து டெல்லியில் புகழ்பெற்ற பத்திரிகளுக்கு கொடுத்துவிட்டார். அந்த பத்திரிகைகள் ஈழ வேந்தன் இலங்கை அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாகவும் புளொட் ஆவணங்களை கொடுத்து வந்ததாகவும் எழுதி விட்டன. மூன்று மாத இந்திய விசாவில் இந்தியா வந்த ஈழவேந்தன் இதனால் திரும்ப இலங்கை போக முடியாமல் போய்விட்டது. 

சென்னையில் உமா மகேஸ்வரன் ஈழவேந்தன் அண்ணாவிடம் சகல வசதிகளும் செய்து தருவதாகவும் அவர் அலைந்து திரியாமல் கடந்த கால வரலாறுகளை புத்தகங்களாக எழுதித் தரும்படியும் கேட்டார். தான் எழுதி தருவதாகவும் ஆனால் தன்னால் ஒரு இடத்தில் இருக்க முடியாது என்றும் கூறி விட்டார். பின்பு இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தலைமறைவாகவே இருந்தார்.1983 கலவரங்களின் பின் இந்தியா தமிழ்நாட்டின் மாற்றங்களுக்கு பின்பு சென்னையில் அவரை பார்க்கக் கூடியதாக இருந்தது. 


அவரின் அறிவும் ஆற்றலும் எமது ஈழ வரலாற்றை எழுத பயன்படாமல் போனது கவலைதான். கனடா போன பின்பு எதுவும் எழுதினாரோ தெரியாது. 




logoblog

Thanks for reading ஈழவேந்தன்

Previous
« Prev Post

No comments:

Post a Comment