பொன்னியின் செல்வன் திரைப் படமும் உலகத் தமிழர்களும்
கல்கி என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி தனது கல்கி பத்திரிகைக்காக எழுவது ஆண்டுகளுக்கு முன்புஎழுதிய கதை தான் பொன்னியின் செல்வன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ நாட்டு அரச குடும்பத்து பெயர்களை வைத்து சில சம்பவங்களை வைத்து மிகப்பெரிய சரித்திர கற்பனை கதையை எழுதினார். இது சோழர்களின் உண்மைகதையும் அல்ல. தமிழர்களின் கதையும் அல்ல. ஆனால் கல்கி அவர்கள் தனது கற்பனை கதையை எழுதும் முன்பு இலங்கைக்கு போய் தான் எழுதும் கதையில் வரும் இடங்களை ,பௌத்த விகாரைகளை பார்த்து விட்டு, கதையை உண்மையில் நடப்பது போல் எழுதியிருந்தார்.
அன்று அந்த கதையைப் படித்தவர்களுக்கு ஒரு சிறந்த சரித்திர கால கதையே படித்தது போல் மட்டுமே இருந்தது. அதன்பின்பு அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன், சாண்டில்யன் எழுதிய யவன ராணி மற்றும் பல சரித்திர கற்பனை கதைகள், மற்றும் கடல் புறா போன்ற சிறந்த கற்பனை சரித்திர கதைகள் வந்துள்ளன. அன்று எல்லோரும் இவற்றை உண்மையான சரித்திர கதைகள் என்று எண்ணவில்லை.
அன்று பொன்னியின் செல்வன் கதையே ரசித்த பல சினிமா துறையினர் படமாக எடுக்க முயற்சித்து நடைபெறவில்லை.
இன்றுஅதையே மணிரத்தினம் என்னும் வியாபார நோக்கில் சினிமா படங்களை இயக்கும் இயக்குனர் இயக்க, உலகம் முழுதும் வியாபாரம் செய்யும் இலங்கைத் தமிழர் தனது வியாபாரத்தை விருத்தி செய்ய நூற்றுக்கணக்கான கோடிகளைக் கொட்டி இந்த படத்தை தயாரித்துள்ளார்..
இந்தப் படம் வெளிவரும் வரையில், பொன்னியின் செல்வன் என்ற சரித்திர கற்பனை கதை ஒன்று இருப்பதுவே தெரியாத பல பேர், அதாவது முகநூலில் பல மேதாவி தனத்தை காட்டும் புத்திஜீவிகள் அறிவு ஜீவி கள் பொன்னியின் செல்வன் படத்தை பற்றி விமர்சனங்கள் வைப்பதன் மூலம் தங்கள் முட்டாள்தனத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டியர்கள் பற்றி எழுதாதவர்கள் எல்லாம் இப்படம் வந்த பின்பு எழுதுகிறார்கள். சில பேர் தாங்கள் சோழ காலத்தில் வாழ்ந்தது போலவே நினைத்துக் கொண்டு சோழர்கள் மக்களுக்கு செய்த அநியாயங்கள் பற்றி, சோழர்களின் சாதி வெறி பற்றி எல்லாம் அக்கு வேறு,ஆணிவேராக பிரித்து மேய்ந்து தங்கள் மேதாவி தனத்தை காட்டுகிறார்கள். வாசிக்கவே சிரிப்பாக இருக்கிறது.
இயக்குனர் மணிரத்தினம் தனது வியாபாரத்துக்காக பற்பல மாற்றங்களை செய்துள்ளார் என அறிய முடிகிறது. பொன்னியின் செல்வன் நாவலை கற்பனை கலந்த சரித்திர கதை என்று எடுக்காமல் பல பேர் உண்மையாக நடந்த சோழர்களின் கதை தமிழர்களின் கதை என்று உணர்ச்சி வசப்பட்டு தங்கள் மேதாவி தனத்தை காட்டுவது சிரிப்பாக இருக்கிறது.
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு பேட்டியில் ரா.சு நல்ல பெருமான் அவர்கள் எழுதிய கல்லுக்குள் ஈரம் இந்திய விடுதலைப் போராட்ட கற்பனை கதை தனக்கு மிகவும் பிடித்தது என்றும், அந்தக் கதைதான் தன்னைஒரு போராளியாக மாற்றியது என்றும் கூறியிருந்தார். அந்தக் கதை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்.
சோழர்கள் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களையும் மற்ற தமிழர்களையும் கொண்டு வந்து சித்திரவதை செய்து செய்து கோயில் கட்டியதாகவும், மற்றும் பல குற்றச்சாட்டுகளை நேரில் பார்த்தது போல் கடும் உணர்ச்சி வசப்பட்டு எழுதி வருகிறார்கள். மிக நல்ல விடயம்.
ராஜராஜ சோழன் செய்த கொலைகளைப் பற்றி காரசாரமாக எழுதும் இவர்கள் யாரும், இலங்கைத் தமிழரும் சரி இந்திய தமிழரும் சரி, கடந்த 50 வருடங்களாக விடுதலை என்ற பெயரில் ஆயுதம் தூக்கி ஈழத் தமிழ் விடுதலை இயக்கங்கள் செய்த கொலைகளைப் பற்றி ஏன் எழுத தயங்குகிறார்கள். புளொட் இயக்கம் பயிற்சிக்கு வந்த அப்பாவி தமிழ் இளைஞர்களை கொன்று குவித்ததை எழுதவில்லை. அது போல் மற்ற இயக்கங்களும் தங்கள் சக்திக்கேற்ப செய்த தமிழ் இளைஞர்கள் கொலைகள் பற்றி எழுதவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்ப காலத்தில் பிரபாகரன் செய்த தனிப்பட்ட கொலைகளைப் பற்றி யும், அதன் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கம் telo இயக்கத்தினரை உயிருடன் பிடித்து டயர் போட்டு எரித்ததை யும், பின்பு எல்லா இயக்கத்தினரையும் பொது மக்களையும் பிடித்து பலவித சித்திரவதை முகாம்களை உருவாக்கி, பலவித சித்திரவதைகளை செய்து கொலை செய்ததையும் யாரும் எழுதவில்லை. அதுபோல் விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து மற்ற தமிழ் இயக்கங்களை கொலை செய்ததை எழுதவில்லை. இந்திய ராணுவத்தோடு சேர்ந்து கொண்டு மற்ற இயக்கங்கள் தமிழ் மக்கள் மீது செய்த சித்திரவதைகளும் கொலைகளையும் பற்றி யாரும் எழுதவில்லை. இந்திய ராணுவம் போன பின்பு மற்ற இயக்கங்கள் இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து கொண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக என்று கூறி அப்பாவி தமிழ் மக்களையும் பெண்களையும் பிடித்து செய்த சித்திரவதைகள் கொலைகளைப் பற்றி எல்லாம் யாரும் முறையாக எழுதவில்லை. வவுனியாவில் புளொட் செய்த பெண்கொலைகளை, கண்ணாடி மாளிகை, லக்கி ஹவுஸில் நடந்த கொலைகளை பற்றி யாரும் எழுதவில்லை.
இலகுவாக ஒருத்தரை ஒருத்தர் துரோகிகளை கொன்றோம் என்று முடித்து விட்டு போய்விடுவார்கள். இந்தக் கொலைகளை செய்த பலர் இன்று அரசியல் தலைவர்களாக வலம் வருகிறார்கள்.
இது எல்லாம் நேரில் பார்த்த அறிந்த லட்சக்கணக்கானபலர் இன்றும் உயிருடன் இருந்தும், ராஜராஜன் செய்த ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கொலைகளை ஆராய்ந்து எழுதுகிறார்கள்.
உண்மையில் அண்மையில் நடந்த இள தமிழ் விடுதலை இயக்கங்களின் கொலைகளை துரோகிகள் தான் கொல்லப்பட்டார்கள் என்று இலகுவாக முடித்து விடுவார்கள்.
No comments:
Post a Comment