இன்று முகநூலில் ஒரு பதிவை பார்த்து மிக சந்தோசமாக இருந்ததோடு சிந்திக்கவும் வைத்தது.
போரினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள, வீடு இல்லாத தமிழ் குடும்பங்களுக்கு இலங்கை ராணுவம் தனது முயற்சியால் வீடு கட்டி கொடுத்துள்ளதாகவும், அதற்கு வெளிநாட்டில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் பண உதவிகள் செய்ததாகவும் பதிவில் பார்த்தேன். சில வருடங்களாக ராணுவம் வீடு கட்டி கொடுத்திருக்கும் பல பதிவுகள் வந்துள்ளன.
அந்தப் பதிவுகளுக்கு உணர்ச்சி உள்ள வீர தமிழர்கள் போடும் கருத்துக்களை பார்த்தபோது சிரிப்பாக இருக்கும். உதவி பெற்ற தமிழ் குடும்பங்களை துரோகிகள் என்றும், சிங்கள ராணுவத்திடம் கைநீட்டி உதவி பெறுவது மிக கேவலமானது என்றும் பலவித கருத்துக்கள். இவர்கள் யாரும் வெளிநாட்டில் வசதியாக இருந்து கொண்டு, ஈழப் போராட்டம் விடுதலையை கூறி பணம் சேகரித்துக் கொண்டு வசதியாகஇருப்பவர்கள். எனக்கு தெரியக் கூடியதாக feed போன்ற சில அமைப்புகள் வெளிநாட்டில் இருந்து கொண்டு பணம் சேகரித்து வறுமையால் பாதிக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளுக்கு கல்விக்கு உதவி செய்து அவர்கள் வருங்காலத்தை செம்மைப்படுத்துகிறார்கள். வரவேற்று ப் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
ஆனால் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் எமது ஈழப் போராட்டத்தை வைத்து கோடிக்கணக்கான பணத்தை சேகரித்து கோடீஸ்வரர்களாக, பல நாடுகளில் வீடுகள் வாங்கி, உலக சுற்றுப்பயணம் செய்து, இலங்கை போகும் போது மிகப்பெரிய ஹோட்டல்களில் பணத்தை எண்ணிப் பார்க்காமல் கட்டு கட்டாக செலவு செய்வதாக பலவித செய்திகள் வரும். இலங்கையின் சகல இடங்களையும் சுற்றிப் பார்த்து படங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு, தங்கள் நாட்டுக்கு திரும்ப வரும்போது கூறுவார்கள் இலங்கையில் ராணுவம் தமிழர்களே கொடுமை செய்கிறது. வெளியில் போகவே பயமாக இருக்கிறது தமிழன் என்றால் கடத்திக் கொண்டு போய் விடுவார்கள், கதை கதையாக கூறுவார்கள் எழுதுவார்கள். முடிவாக அவர்கள்வெளிநாட்டில் பணத்தை சேகரித்துக் கொண்டு மீண்டும் உரிமை போராட்டம்ஈழ போராட்டம் என்று இலங்கையில் மிஞ்சி இருக்கும் தமிழர்களையும் அழிப்பதற்காக பாடுபடுவார்கள்.
இவர்களை எல்லாம் பார்க்கும் போதும், இவர்களது சொகுசு வாழ்க்கையை பார்க்கும் போது நான் எனது முட்டாள் தனத்தை எண்ணி கவலைப்படுகிறேன். புளொட் தலைவர் சித்தார்த்தன், மறைந்த புளொட்ராணுவ தளபதிமாணிக்கம் தாசன் எமது இயக்கத்துக்கு செய்த துரோகத்தை அம்பலப்படுத்த வேண்டும், இவர்களால் பழி வாங்கப்பட்ட ஏழு இயக்கத் தோழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதால், எனது 33 வருட வாழ்க்கையை வறுமையில் கஷ்டத்தில் இழந்து விட்டேன். கொள்கை உண்மையாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் வாழ்க்கையில் பணத்தின் முன் ஒன்றுமே இல்லை., என்று இன்று தெரிகிறது.
இயக்கத்தில் தோழர், தோழன் , தோழமை,என்பதெல்லாம் பணம் இருந்தால் தான் உண்மையாகும்.
நான் இயக்கத்தில் இருந்த கடைசி காலங்களில் பல இயக்கத் தோழர்களை எனது செல்வாக்கை பயன்படுத்தி அவர்கள் வெளிநாடு போக உதவி செய்துள்ளேன். அவர்கள் போகுமுன் என்னை கடவுளாக கூறிச் செல்வார்கள். வெளிநாட்டுக்கு போன பின்பு தொடர்பு கொள்ள மாட்டார்கள். சில வருடங்களுக்கு பின் இந்தியா விக்குசுற்றுலா வரும்போது, என்னை சந்திக்க கூடாது தெரிவார்கள். யாராவது எனக்குத் தெரிந்தவர்களை சந்திக்க நேர்ந்தால் தங்களைப் பார்த்ததாக வெற்றிச்செல்வனிடம் கூற வேண்டாமென்று மன்றாடி கேட்டுக் கொள்வார்கள். இதுதான் எனக்கு இந்த விடுதலைப் போராட்டம் கொடுத்த உதவியும் நன்றியும்.
எனக்கு உதவி செய்தவர்கள் எல்லாம் என்னோடு கல்லூரியில் படித்த நண்பர்கள் மட்டுமே. அதோடு இயக்கம் சம்பந்தப்பட்ட லண்டன் சுரேஷ் எனது நிலையறிந்து கேட்காமலேயே உதவி செய்தவர். அவரும் மறைந்து விட்டார்.
இந்த விடுதலைப் போராட்டம் பலரை கோடீஸ்வரர்களாகவும், இலங்கையிலும் இந்தியாவிலும் பல இலங்கை தமிழர்களை பிச்சைக்காரர்களாகவும் மாற்றியது என்பதே உண்மை.
இன்று 300 கோடியில் இலங்கைத் தமிழன் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளதாக பாராட்டும் பலர், ஒரு 50 கோடி கொடுத்து இலங்கையில் வறுமையில் இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்யலாமே என்று கேட்கவில்லை. அதில் பெருமை வேறு லைக்கா சுபாஸ்கரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் சேர்ந்தவர் என்று.
தயவு செய்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முடிந்த உதவி செய்யுங்கள். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எங்கே இராணுவம் செய்யும் உதவிகளை கொச்சைப்படுத்தி எழுதாதீர்கள்.
வாழ்க தோழர் தோழமே போராட்டம்
No comments:
Post a Comment