எனது நினைவுகளில் மார்க்கண்டு தேவதாசன் (24.12.1959 – 12.10.1998)
பாடசாலைக் காலத்தில் தேவன் என்றும், பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் (PLOTE) மாறன் என்றும் பலரால் அறியப்பட்ட மார்க்கண்டு தேவதாசன் மறைந்து இன்றுடன் 23 வருடங்கள். முப்பத்தியேட்டாவது வயதில் வவுனியாவில் தனது வாழ்வின் முடிவினை தானே நிர்ணயித்துக் கொண்ட துயரம் எங்களை வந்தடைந்தபோது, என்னைப்போன்று தேவனைத் தெரிந்த அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியாகவே இருந்தது. ஏனெனில் நாங்கள் பழகிய காலங்களில் தேவன் அப்படிச் செய்யக்கூடிய விரக்தி மனப்பான்மை கொண்டவராக அதுவரையில் எமக்குத் தென்படவில்லை. எப்போதுமே மகிழ்ச்சி ததும்பிய சிரித்த முகத்துடன், நல்ல நண்பர்களுடன் கூடிக்குலாவிய இவரது இளமை மாணவப்பருவத்து வாழ்க்கையை ஓரளவு தெரிந்த என்னைப் போன்றவர்களின் உள்ளங்களில், என்னமாதிரியான நெருக்கடியான தருணத்தில் தேவன் அந்த முடிவினை எடுத்திருப்பாரென்ற கேள்வி இன்றைக்கு வரைக்கும் எழுந்த வண்ணமேயுள்ளது.
நானும் தேவனும் ஒரே பாடசாலையில் படித்த போதும், ஆரம்பத்தில் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. எனினும் அக்காலப்பகுதிகளில் மிகவும் ஓழுக்கம் நிறைந்தவராக, பொதுவாக எல்லா வகைப்பட்ட ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படிந்து நடப்பவராக, நெற்றியில் திருநீறும் சந்தனப்பொட்டுடனும் கடவுள் பக்தியுடையவராக, நற்பண்புகள் கொண்ட பாடசாலை மாணவனாகவே தேவன் எனது நினைவுகளில் உள்ளார்.
மகாஜனக்கல்லூரியில் 1978 ஆம் ஆண்டில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலான உயர்தரப்பிரிவின் முதலாமாண்டு (தரம் 11) மாணவர்களைக் கொண்டதாக எமது வகுப்புகள் இருந்தன. அப்போது எமக்கு சமாந்தரமான பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையிலான உயர்தரப்பிரிவின் முதலாமாண்டு மாணவர்களைக் கொண்ட வகுப்புகளும் இருந்தன. அந்த வகுப்புகளில் ஒன்றிலேயே தேவன் இருந்தார். இவ்வாறு நாங்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் பாடத்திட்டங்களின் அடிப்படையில் வெவ்வேறு வகுப்புகளைப் பகிர்ந்து கொண்டிருந்த போதிலும், சமகாலத்து மாணவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் இருவரும் நெருங்கிப்பழகும் சந்தர்ப்பம் 1978 இலிருந்தே ஆரம்பித்தது.
மகாஜனக்கல்லூரி பொதுவாக கல்வி, கலை, படைப்பிலக்கியம், உதைபந்தாட்டம் என பல துறைகளில் அறியப்பட்டாலும், செயற்பாட்டுத் தளத்தில் இயங்கக்கூடிய சமூக அக்கறைகள் கொண்ட ஆசிரியர்களும் மாணவர்களும் அங்கு இருந்தார்கள். எனினும் மாணவர்களின் அரசியல் எண்ணக்கருத்துகளில் அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கிராமத்தவர்களுமே அதிகம் செல்வாக்குச் செலுத்துபவர்களாக இருந்தார்கள். இதனால் அப்போதைய காங்கேசன்துறைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசிய அரசியலின் செல்வாக்கு நிறைந்த பாடசாலையாகவே மகாஜனக்கல்லூரியும் விளங்கியது. அதாவது தமிழ் தேசியவாதிகளின் தேர்தல்காலத்து வெற்றுக்கோசங்களையும், சுத்த இராணுவாத அடிப்படையிலான வன்முறைகளைத் தூண்டிவிடும் உரைகளையும் உள்வாங்கி, அதுவே ஏதோ 'பெரிய' மாற்றத்தை ஏற்படுத்துமென பொதுவாக நம்பியவர்களுக்கு விதிவிலக்காக, அக்காலகட்டத்து மகாஜனா மாணவ சமூகம் இருந்திருக்க முடியாது.
இந்தச் சூழலில் 1977 ஆண்டு பொதுத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் கொடூரமான இன ஒடுக்குமுறைக் கொள்கைகளால், அதுவரை காலமும் தமிழ் தேர்தல் அரசியலில் கோலோச்சியவர்களின் செல்வாக்குகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிய ஆரம்பித்தன. இந்த புறச்சூழலில் தமிழ் தேசியவாதிகளின் தேர்தல் அரசியலை விமர்சனத்திற்குள்ளாக்கி புதிய பாதைகளைத் தெரிந்தெடுத்தவர்களில் தேவதாசன் மிகவும் முக்கியமானவர். இதுவே எங்களது உறுதியான நட்புக்கும் வழி வகுத்தது எனலாம்.
தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்ட தேவதாசனிற்கு அக்காலகட்டத்தில் ஆயுதப்போரட்டங்களுக்கு மிக நெருக்கமாகச் செயற்பட்ட இளைஞர்களின் தொடர்புகளும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தேவதாசன் இரகசியம் பேணுவதை ஒரு நெறியாகவே கடைப்பிடித்ததால், அவர் மாணவர்களோடு மாணவராகவே மாகாஜனக்கல்லூரியில் 1979 ஆம் ஆண்டு வரை இருந்தார். பின்னர் அவர் தோற்றியிருக்க வேண்டிய 1980 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கும் முழுக்குப் போட்டுவிட்டு, 1980 களிலிருந்தே முழுநேரச் செயற்பாட்டாளாராக தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பாடசாலைக்கும் தனியார் வகுப்புகளுக்கும் வருவதை முற்றாக நிறுத்திய தேவன் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் போன்ற விபரங்கள் தெரியாததால், ஆரம்பத்தில் என்னைப் போன்று அவருடன் நெருங்கிப்பழகியவர்களுக்கு அவர் தொடர்பான அங்கலாய்ப்புகள் கொஞ்சம் இருந்தன. அவரும் மகாஜனா சமூகத்தை பிரிய மனமில்லாது, அவ்வப்போது தெல்லிப்பழைச் சந்தியிலும் மகாஜனக்கல்லூரி வாசலிலும் அதே புன்சிரிப்போடு தோன்றுவார். தேவன் வந்துவிட்டாரென்று பரபரப்புடன் நாங்கள் அவரைச் சுற்றிக் கூடுவோம். ஆனால் அவரோ மிகவும் சாதாரணமான சகமாணவராகவே நடந்து கொள்வார். அவர் அணுகுமுறையில் எந்தவித மாற்றமும் இருந்ததில்லை.
இவ்வாறு இடையிடையே தேவன் எதிர்ப்படும் போதெல்லாம், அவர் எப்போதும் போலவே ஏனைய மாணவர்களோடு நகைச்சுவை ததும்ப அளவோடுதான் பேசினார். பாடசாலை கல்வியைத் தவற விட்டுவிட்டோம், மாணவ நட்புகளை இழந்துவிட்டோம் போன்ற கவலைகள் எதுவும் அவர் முகத்தில் படர்ந்திருந்ததாக நான் அவதானிக்கவில்லை. அதேநேரத்தில் கல்வியைத் தியாகம் செய்து மக்கள் விடுதலையென்ற புனித பயணத்தில் இணைந்து, தலைமறைவு வாழ்க்கையைத் தெரிந்தெடுத்திருக்கிறேன் என்றெல்லாம் தன்னைப்பற்றி ஏனைய மாணவ நண்பர்களிடம் அதிகபிரசங்கித்தனம் பண்ணுபவராகவும் அவர் இருந்ததில்லை.
1981, 1982 காலப்பகுதிகளில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மாறன் முக்கிய பங்கேற்றிருந்தார் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததே. இக்காலகட்டப்பகுதிகளில் இடையிடையே தமிழ் நாட்டிற்கும் சென்று வந்தார். 1982 இல் புலிகளால் சுந்தரம் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் நான் பலதடவை தேவனைச் சந்தித்து உரையாடி இருக்கிறேன். சுந்தரத்தை இழந்த தணியாத கோபம் அவரிடமிருந்தது, ஆனால் அவர் பொறுமையிழந்தவராகத் தென்படவில்லை.
1983 ஆம் ஆண்டு தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் சார்பில் முதன்முதலாக இந்திய இராணுவப்பயிற்சி வழங்கப்பட்ட நால்வரில் மாறனும் ஒருவர். பயிற்சியை முடித்த பின்னர் மூவர் ஒன்றாகவும், ஏறத்தாள ஒரு வாரத்தின் பின்னர் மாறன் தனியாகவும் 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் மாதகல் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அப்போது எனது வீட்டிற்கு வந்திருந்த மாறன் 'விச்சு (தோழர் விசுவானந்தேவனை அவர் அப்படித்தான் அழைப்பார்) எப்படி இருக்கிறார்?' என்று என்னைப் பார்த்துக் கேட்டது இப்போதும் பசுமையாக ஞாபகம் இருக்கின்றது.
துரதிஸ்டவசமாக அந்த நால்வரில் மாறனும் இன்னொருவரும் (இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய சமகாலத்தவர்) 1984 ஆம் ஜனவரியில் -அதாவது தமிழ்நாட்டிலிருந்து மாதகலில் வந்திறங்கி சில வாரங்களில் - பலாலி இராணுவத்தினரின் பொறியில் சிக்கி தெல்லிப்பழையில் கைதாகினார்கள். மாறன் கைது செய்யப்படுகையில் இலங்கை அரசால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் அவர் முக்கியமானவராக இருந்தார்.
நீண்டகாலம் தமிழ்நாட்டில் தங்கியிருந்த மாறன், 1983 ஜுலையின் பின்னரான யாழ் குடாநாட்டு நிலைமைகளைச் சரியாகக் கணிக்கத் தவறியதாலேயே இந்த கைது நிகழ்ந்ததென அப்போது பலரும் அபிப்பிராயப்பட்டார்கள். இவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் மூன்றாமவரும் திரிகோணமலையில் எதிர்பாராதவிதமாகக் கைதானார். இந்திய இராணுவப்பயிற்சி பெற்ற நால்வரில் மூன்று பேர், ஒரு மாத இடைவெளியில் கைது செய்யப்பட்டமையானது, த.ம.வி.கழகத்தின் அப்போதைய நிலைமையை விளக்கப் போதுமானது.
ஆயுதப்போராட்ட இயக்கங்களுடன் சம்பந்தப்படுத்தி 1984 ஆம் ஆண்டிலிருந்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர்களில் அதிகமானோர் த.ம.வி.கழகத்தினரே என்று நான் நினைக்கிறேன். இவர்களுக்கு த.ம.வி.கழகத்திற்குள் நிகழ்ந்து கொண்டிருந்த மோதல்கள், உடைவுகள் எல்லாமே உடனுக்குடன் தெரிந்த வண்ணமேயிருந்தன. இதனால் அதன் பிரதிபலிப்புகள் சிறைக்குள்ளும் எதிரொலித்தன என நான் அறிந்திருக்கிறேன். மாறனும் ஏனையோரும் நிறைய வாதப்பிரதிவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். உச்சக்கட்டமாக சந்ததியாரின் கொலையைத் தொடர்ந்து, த.ம.வி.கழகத்தின் தலைமையை இனிமேலும் ஆதரிப்பதில்லை என்ற முடிவுக்கு பெரும்பாலானவர்கள் தள்ளப்பட்டார்கள். ஆனால் இவைபற்றியெல்லாம் மேலும் விரிவாக இந்த நினைவுக்குறிப்பில் எழுதுவது பொருத்தமற்றதெனவும் அவசியமற்றதெனவும் நான் கருதுவதால் இத்துடன் விட்டுவிடுகின்றேன்.
1987 ஆம் ஜுலை மாதம் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டதின் பிரகாரம், தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் மாறன் விடுதலை செய்யப்பட்டார். ஏறத்தாள நான்கு வருடகால சிறைவாசத்தின் பின்னர் அவர் சுதந்திரக்காற்றை சுவாசித்துபோது, த.ம.வி.கழகத்தின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது. அவர் கைது செய்யப்படாது இருந்திருந்தால் கூட, அவரால் த.ம.வி.கழகத்தை சீர்செய்திருக்க முடியாதென்றே நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அக்காலகட்டத்தில் மாறன் போன்று சிறை வைக்கப்பட்டிருந்த பல முக்கியஸ்தர்கள் வெளியே இருந்திருந்தால், த.ம.வி.கழகம் சீரழிந்திருக்காது என்று நம்புபவர்கள் பலரும் இன்னமும் உள்ளார்கள்.
பொதுமன்னிப்பின் கீழ் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட த.ம.வி.கழகத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து இயங்குவதில்லையென முடிவெடுத்து ஒதுங்கிவிட்டார்கள். மாறனும் இன்னும் ஒரு சிலருமே, த.ம.வி.கழகத்தில் தொடர்ந்து இயங்குவதென முடிவெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாறனின் ஆரம்பகாலம் முதல் சிறையிலிருக்கும் வரையிலான காலகட்டத்தை நினைவு கூருபவர்கள், அவர் உமாமகேஸ்வரனில் அதிக நம்பிக்கை வைத்திருந்ததாகவே தெரிவிக்கிறார்கள். தனிநபர் வழிபாடு என்பது தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கங்களில் பொதுவான அம்சமாக இருந்ததால், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் மாறன் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர், உமாமகேஸ்வரன் தொடர்பான கருத்துக்களில் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்ததாக வெற்றிச்செல்வன் என்பவர் முகநூலில் தொடர்ச்சியாக எழுதிவரும் குறிப்புகள் மூலம் தெரிய வருகின்றது. எனினும் 1988-1997 காலப்பகுதிகளில் த.ம.வி.கழகத்திற்கும் மாறனிற்குமான பிணைப்பு எப்படியிருந்தது என்பதை என்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. அவர் மரணிக்கும்போது வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரியாக இருந்திருக்கிறார்
மாணவர்களிடையே இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அக்கறையுள்ளவர்களை இனங்கண்டு, அவர்களுடன் தொடர்ச்சியான உரையாடல்களை மேற்கொள்வதில் மாறன் கைதேர்ந்தவர். அவ்வாறு 1979 ஆண்டு என்னையும் இன்னொருவரையும் தனது அமைப்பில் இணைத்துக் கொள்ளவேண்டுமென்ற ஆர்வத்தில், தெல்லிப்பழையிலுள்ள மறைவிடமொன்றில் உமாமகேஸ்வரனுடனும் வேறு சிலருடனும் சந்திப்பு ஒன்றுக்கு மாறன் ஏற்பாடு செய்திருந்தார். (அப்போது உமாமகேஸ்வரன் - பிரபாகரன் உடைவு நிகழ்ந்துவிட்டதென நினைக்கிறேன். ஆனால் இந்த உடைவு பற்றி அப்போது எங்களுக்கு எதுவுமே தெரியாது. அந்த நேரத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் என்ற அமைப்பும் உதயமாவில்லை. புதியவர்களை, தனது புதிய அமைப்புக்காக சேர்ப்பதில் உமாமகேஸ்வரன் துரிதம் காட்டிய காலகட்டம் என்று சொல்லலாம்) அந்தச் சந்திப்பானது உமாமகேஸ்வரன் தொடர்பில் சிறிய புரிதலையாவது ஏற்படுத்த அப்போது எங்களுக்கு வாய்ப்பாக அமைந்ததென்றே கூறவேண்டும். எனவே அந்தச் சந்திப்பை ஏற்படுத்தித்தந்த மாறனுக்கு என்றென்றைக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
மாறனுடன் நெருங்கிப் பழகிய காலங்கள் மிகச்சொற்பமாயினும், அவருடன் பாடசாலைக் காலங்களில் ஆயுதப்போராட்டம் தொடர்பாக, சுத்த இராணுவாதப்போக்கிற்கு எதிராக நடத்திய அனல் தெறித்த விவாதங்கள், பல ஏமாற்றங்கள் எல்லாமே மறக்க முடியாதவை. மாறன் தேர்ந்தெடுத்த அரசியலில் எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் எனக்குத் தெரிந்த காலம் முதல் த.ம.வி.கழகத்திற்காக அயராதுழைத்த, நேர்மையான, அபாரத்துணிச்சலுள்ள, அப்பழுக்கற்ற, தன்னலமற்ற போராளி என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். மாறன் மரணிக்கும் வரையிலும் த.ம.வி.கழகத்திற்காக அர்ப்பணிப்போடு செயற்பட்டார் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
த.ம.வி.கழகம் தொடர்பாக அண்மைக்காலங்களில் சமூகவலைத்தளங்களில் வெளிவந்த பல ஆவணங்களில் அமைப்பின் உருவாக்கம் மற்றும் செயற்பாடுகளில், மாறன் மற்றும் அவரது காலத்தவர்களின் பங்களிப்புகள் தொடர்பான தகவல்கள் எதுவுமில்லாதிருப்பது குறித்து எவரும் வருத்தப்படத் தேவையில்லையென்றே நான் நினைக்கிறேன். காரணம், இவற்றை எழுதியவர்களில் பெரும்பாலனவர்கள் 1983 ஆம் ஆண்டிற்கு பின்னர் த.ம.வி.கழகத்திற்குள் உள்வாங்கப்பட்டவர்களே.
மாறன் மறந்துவிடப்பட்ட ஒரு சிறந்த போராளி என்ற அபிப்பிராயம் எனக்குள் நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அதனால்தான் அவரைப்பற்றி எழுத வேண்டுமென்ற எண்ணம் என்னுள் கருக்கொண்டிருந்தது. மாறனின் சகோதரர் ராமதாஸ் உட்பட வேறு சிலரிடமும் எனது எண்ணத்தை வெளிப்படையாகத் தெரிவித்துமிருக்கிறேன். அண்மைக்காலமாக முகநூலில் வெற்றிச்செல்வன் எழுதிவரும் தொடர் குறிப்புகளில், மாறன் சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின்னரான தகவல்கள் நிறைய உள்ளன. வெற்றிச்செல்வனது இந்தத் தொடரே, மாறனைப்பற்றி எனக்குத் தெரிந்த சில தகவல்களை உள்ளடக்கி எழுதி வெளியிட வேண்டுமென்பதை அவசரப்படுத்தியதெனக் கூறலாம். அதற்காக வெற்றிச்செல்வனுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்.
மாறனது நினைவு தினமான இன்று, மாறனுக்கு ஓர் அஞ்சலிக் குறிப்பாக, இதனை எனது முகநூலில் பதிய முடிந்ததையிட்டு நான் ஓரளவு ஆறுதலடைகின்றேன்.
(தேவதாசனின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்த ராமதாஸிற்கு எனது நன்றி)
No comments:
Post a Comment