அந்தரங்கம்
ஆரோக்கியம்
ஈழப் போர்
கட்டுரைகள்
காணொளிகள் (வீடியோ)
கோப்பியம்
சினிமா
சினிமா வரலாறு
செய்திகள்
தொடர் கட்டுரைகள்
நகைசுவை வீடியோகள்
படங்கள்
ராஜிவ் காந்தி கொலை
லக்கா கிக்கா
வினோதம்
மூடுமந்திர அரசியல் ஒற்றுமைக்கு வழிவகுக்காது: தமிழரசுக் கட்சியின் அரசியல் பாதை சரியானதா ?
OCTOBER 13TH, 2013
சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியில் நடைபெற்று முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் மக்கள் அமோக ஆதரவைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கியிருந்த போதிலும், புதிய மாகாண சபை எவ்வாறு அமையப் போகின்றது என்ற கேள்வி இப்போது விசுவரூபமெடுத்திருக்கின்றது.
வடபகுதி மக்கள் தமிழ் மக்களின் (தமிழ் பேசும் சிறுபான்மை இன மக்களின்) ஒற்றுமையையும், அவர்களுக்கான அரசியல் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாட்டையும் வலியுறுத்தி தேர்தலில் வாக்களித்திருக்கின்றார்கள். அவர்கள் சலுகைகளுக்கும் வசதி வாய்ப்புக்களுக்கும் விலைபோகவில்லை. அதே நேரம் சலுகைகளுக்கும் வசதி வாய்ப்புக்களுக்கும் விலைபோகாதீர்கள். மறுக்கப்பட்டுள்ள மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறுக்கமாகச் செயற்படுங்கள் என்ற செய்தியைத் தெளிவாகத் தமது வாக்குச் சீட்டுக்களின் மூலம் தெரிவித்திருக்கின்றார்கள்.
ஆனால் தேர்தல் முடிந்து பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறுகின்ற காரியங்கள் அந்த மக்களைக் குழப்பத்திலும், எதிர்காலம் குறித்த அச்சத்திலுமே ஆழ்த்தியிருக்கின்றன.
வன்முறை வழியில் அரசியல் செய்து வந்த தமிழ் அரசியல் தலைமைகளை யுத்தம் முடிவடைந்ததையடுத்து, மென்போக்கு அரசியலில் ஈடுபடுமாறு சர்வதேசம் வலியுறுத்தி வருவதாகவும், அத்தகையதோர் அரசியல் போக்கு தமிழர்தரப்பு அரசியலில் தலைதூக்கியிருப்பதாகவும் அரசியல் விமர்சக வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இதனை ஒரு புதிய போக்காகவும், தற்போதைய நிலையில் இது மிகவும் அவசியமானதாகவும், உலக அரசியல் ஒழுங்கில் இது தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகத் திகழ்வதாகவும் – பலவாறாக இதற்கு அர்த்தம் கற்பிக்கப்படுகின்றது. இது உண்மையாக இருக்கலாம்.
மோசமான ஒரு முப்பதாண்டு கால யுத்தத்தில் சிக்கி சீரழிந்துள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்த நாட்டு அரசியல்வாதிகளினால் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களது நம்பிக்கைகள் எதிர்பார்ப்புக்கள் என்பவற்றை மிக மோசமாகச் சிதைத்திருக்கின்றார்கள். அதேநேரம் தமிழ் அரசியல் தலைமைகள் வலுவுள்ளதாக வளர்ச்சி பெறத் தவறியிருக்கின்ற சூழலில், சிறுபான்மை இன மக்களை சலுகைகளில் மூழ்கடித்து, அவர்களைப் பேரினவாத அரசியல்வாதிகள் நிரந்தரமாக அடக்கி ஒடுக்கி வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கு மக்கள் யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத வகையில் திக்குதெரியாத காட்டில் கண்ணைக்கட்டி விட்டதுபோன்ற ஒரு நிலைமையில், தடுமாறுகின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
விடுதலைப்புலிகள் என்ற ஆயுதந்தரித்த வன்முறை சார்ந்த அரசியல் போக்கு கொண்ட வலுவாகத் தோற்றம் பெற்றிருந்த அரசியல் தலைமை திடீரென சரிந்து வீழ்ந்ததையடுத்து, கொடிபோன்று துவண்டிருந்த தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கொம்பைத் தழுவிப் படர்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் அவர்களைப் பார்த்து, வன்முறை அரசியலில் ஈடுபட வேண்டாம். வன்முறைக்கு இடமில்லை என்று பலரும் போதிக்கின்ற ஒரு புதுமையான போக்கைக் காண முடிகின்றது. நாட்டின் ஜனாதிபதி தொடக்கம், அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பு அரசியல்வாதிகள் இந்த வாய்ப்பாட்டைக் கடந்த நான்கு வருடங்களாக கிளிப்பிள்ளையைப் போல மக்கள் மத்தியில் கூறி வந்திருக்கின்றார்கள். இன்னும் அதையேதான் கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஜனநாயக வழிமுறையே மக்களுடைய விருப்பம்
இதேபோக்கைத் தமிழர் தரப்பு அரசியல்வாதிகளும் இப்போது தாரக மந்திரமாக ஓதத் தொடங்கிவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. வடமாகாண சபையின் முதலமைச்சராக பெருமளவு விருப்பு வாக்குகளினால் வெற்றிபெற்றுள்ள முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றவுடன் வெளியிட்ட முதலாவது அறிக்கையில் ‘வன்முறைக்கும் பலாத்காரத்திற்கும் இங்கு இடமில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். இதனை யாருக்காக அவர் கூறியிருக்கின்றார். யாரை நோக்கி என்ன காரணத்திற்காகக் குறிப்பிட்டிருக்கின்றார் என்று தெளிவாகத் தெரியவில்லை.’
நீதித்துறையில் இருந்து மாகாண அரசியலில் பிரவேசித்துள்ள அவரையே ஒரு இனவாதியாக, பிரபாகரனின் இடத்தை நிரப்ப வந்தவராக தென்னிலங்கையின் இனவாத அரசியல் சக்திகள் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்திருந்தன. அரசாங்கத் தரப்பும் இதற்கு ஊக்கமளித்திருந்தது. இந்த நிலையில் தாங்கள் தீவிர அரசியல் நடத்தப் போவதில்லை.
தாங்கள் வன்முறையாளர்கள் அல்ல. மென்முறை அரசியலில் ஈடுபடுவதற்குத்தான் வந்திருக்கின்றோம் என்ற செய்தியை – நல்லெண்ணத்தை, நல்லெண்ண சமிக்ஞையைத் தென்னிலங்கைக்கும் அரசுக்கும் வெளிப்படுத்துவதற்காகவே ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாகத் தமிழரசுக் கட்சியின் தலைமை தெரிவித்திருந்தது.
இது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், முதலமைச்சரின் முதலாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வன்முறைக்கும் பலாத்காரத்திற்கும் இங்கு இடமில்லை என்பது தமிழ் மக்களையும், அவர்கள் சார்ந்த ஏனைய கட்சியினரைப் பார்த்து கூறியிருக்கின்றாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இழுபறியில் இருந்து வந்த அமைச்சரவைக்கான அமைச்சர்களைத் தெரிவு செய்ததன் பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் இறுதியிலும் வன்முறை பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. வடமாகாண சபை மற்றைய மாகாண சபைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பது எனது விருப்பம் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், இனியாவது கட்சி பேதங்களை மறந்து, வன்முறைகளைக் களைந்து, ஜனநாயக அடிப்படையில் பாதிப்புற்றிருக்கும் எம் மக்களின் இடர் களையப் பாடுபடுவோமாக என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
அரசியல் என்பது கட்சி அரசியல் மிக முக்கியமானது. கட்சியின்றி அரசியல் நடத்த முடியாது. ஆகவே அங்கு கட்சி பேதங்கள் ஏற்படுவது இயல்பு. இந்த பேதங்கள் அழிவை ஏற்படுத்தத்தக்க வகையில் மேலோங்கிவிடக் கூடாது என்பதே முக்கியம். வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கென ஓர் அரச நிர்வாகம் ஆரம்பிக்கப்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தில் இதனை வலியுறுத்துவதும் முக்கியம் வரவேற்கத்தக்கது. ஆனால் வன்முறைகளைக் களைய வேண்டும் என்று முதலமைச்சர் எதனைக் குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை.
வடமாகாண சபைக்கான தேர்தலில் மத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் ஆகிய மாகாணங்களில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளுடன் ஒப்பிடுகையில் வட மாகாணத் தேர்தல் களத்தில் பெரிய அளவில் வன்முறைகள் கட்சிகள் மத்தியிலும் சரி, விருப்பு வாக்குகளுக்காக அலைமோதி, பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்திய வேட்பாளர்களும் சரி மோசமான வன்முறைகளில் ஈடுபடவில்லை. ஆகவே வெற்றிபெற்ற ஓர் அணியின் தலைமை வன்முறைகளைக் களைவோம் என்று யாரை நோக்கி, என்ன காரணத்திற்காகக் கூறினார் என்பது தெரியவில்லை.
மக்கள் விரும்புவது அமைதியான செயற்பாடுகளையே
ஆனால், போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இன்று களைத்துப் போயிருக் கின்றார்கள். அவர்கள் வேண்டுவதெல்லாம், அமைதியான செயற்பாடுகளே. அபிவிருத்தியாக இருந்தாலும்சரி, அரசியலாக இருந்தாலும்சரி, உரிமைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளாக இருந்தாலும்சரி, அமைதியான முறையில் அஹிம்சை வழியிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையே விரும்புகின்றார்கள்.
அதேபோன்று வன்முறை அரசியலில் ஈடுபட்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் ஜனநாயக வழிமுறைக்குத் திரும்பிய ஆயுதமேந்தியிருந்த கட்சிகளும் இன்று அமைதி வழியையே விரும்புகின்றன. மீண்டும் வன்முறைக்குத் திரும்பும் நோக்கம் அவர்களுக்குக் கிடையாது. அத்தகைய அரசியல் நடத்துவதற்கான புறச் சூழலும் கிடையாது. இது எல்லோருக்கும் நன்கு தெரியும்.
ஏனெனில் அஹிம்சைப் போராட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி களைத்துப் போயிருந்த வேளையில்தான் தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் தனிநாட்டுக்கான போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அயல்நாடாகிய இந்தியா ஓர் ஆயுதப் போராட்டத்திற்கான தளத்தை உருவாக்கியிருந்தது. அந்தத் தளம் இல்லாமலிருந்தால், இலங்கையில் தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தில் வெற்றிகரமாக ஈடுபட்டிருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது. யுத்தத்திற்கு முன்பிருந்த காலச் சூழலிலும் பார்க்க அரசியல் மற்றும் உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றன. இருந்த போதிலும், வன்முறை அரசியலை நோக்கி நகரக் கூடிய வசதி, வாய்ப்புக்கள், அரசியல் சூழல் என்பன இப்போது கிடையாது. அதற்கும் அப்பால் அத்தகைய வன்முறைகளில் ஈடுபடக்கூடிய மனோநிலையும் மக்கள் மத்தியில் இப்போது கிடையாது.
அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களையும் எதிர்பாராத அரசியல் அலைகளிலும் சிக்கி களைத்து சோர்ந்து போயிருக்கின்றார்கள். ஜனநாயக வழிமுறைகளின் மூலம் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கே அவர்கள் விரும்புகின்றார்கள். அந்த வகையில் தமது எண்ணங்களையும், கொள்கைகளையும் வெளிப்படுத்துவதற்கே அவர்கள் தயாராக இருக்கின்றார்கள்.
இதனை நடந்து முடிந்த வடமாகாணத் தேர்தலில் அவர்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்தச் சூழலில், இலங்கை அரசாங்கமும்சரி, அரச சார்பானவர்களும்சரி, வன்முறை அரசியல் பற்றி பேசுவது அவசியமற்றதாகும். அதேபோன்று தமிழ் மக்களுடைய அரசியல் தலைமையில் உள்ளவர்களும் வன்முறைகள் வேண்டாம் என்று வன்முறையை வெறுத்து ஒதுக்கியுள்ளவர்களிடம் கூறுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை.
சரியான அரசியல் பாதையா?
வடமாகாண தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சரியான அரசியல் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கின்றதா என்ற கேள்வியும் இப்போது எழுந்திருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன் வடமாகாணத்தின் முதலமைச்சராகப் புதிதாக ஒருவரைக் கொண்டு வரவேண்டும் என்று பிடிவாதமாக நின்று முன்னாள் நீதியரசராகிய சி.வி.விக்கினேஸ்வரனைக் கொண்டு வந்தார்.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடமிருந்து ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருந்தது. முக்கியமாகத் தமிழரசுக் கட்சியில் இருந்து கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. மாகாண முதலமைச்சராக நீண்டகாலம் அரசியலில் ஈடுபட்டுள்ள கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற குரல் ஓர்மனத்துடன் வெளிவந்தது. இருந்தும், நிலைமைகளையும் அரசியல் தேவையையும் கருத்திற்கொண்டு அந்த எதிர்ப்புக்கள் கைவிடப்பட்டிருந்தன.
முதலமைச்சராக சி.வி.விக்கினேஸ் வரனைக் கொண்டு வருவதற்கான அரசியல் காரணங்கள் குறித்து கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும், கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியிலும் ஆர்.சம்பந்தன் கட்சிகளின் தலைவர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் விளக்கமளிக்கவில்லை. இந்த விளக்கம் காலந்தாழ்த்தி வந்ததே தவிர சரியான நேரத்தில் சரியான முறையில் அளிக்கப்படவில்லை.
அதேபோன்று தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் ஜனாதிபதியின் முன்னிலையில் முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டிருந்த விடயத்தை பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கோ அல்லது முக்கியஸ்தர்களுக்கோ சரியான முறையில் விளக்கிக் கூறவில்லை. இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டபோது, சரியான விளக்கத்தையும் நிலைப்பாட்டையும் அவர் வெளியிடவில்லை என்று ஏனைய கட்சித் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் கூறுகின்றார்கள்.
ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதில் அவர் கையாள்வதற்கு எண்ணியிருந்த அரசியல் நகர்வுபற்றி அவர் தமிழரசுக் கட்சியின் செயலாளராகிய மாவை சேனாதிராஜாவுக்குக் கூட தெளிவாக எடுத்துக் கூறவில்லை என்றே கூறப்படுகின்றது. முதலமைச்சரின் சத்தியப் பிரமாணம் பற்றி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசப்பட்டபோது, ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வதை மாவை சேனாதிராஜா கடுமையாக எதிர்த்திருந்தார் என்று அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
ஆயினும் அவருடை எதிர்ப்பைத் தணிப்பதற்கும், ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வதற்கான நோக்கத்தை வெளிப்படுத்துவதற்கும் சம்பந்தன் தவறிவிட்டார் என்றே அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதன் காரணமாகத்தான் முதலமைச்சர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட போது தமிழரசுக் கட்சியின் செயலாளரும், கூட்டமைப்பின் முக்கியஸ்தருமாகிய மாவை சேனாதிராஜா அந்த வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை.
அந்த நேரம் அவர் தனிப்பட்ட விஜயம் எனக் கூறி, இந்தியாவுக்குச் சென்றிருந்தார். ஓர் அரசியல் நோக்கத்தைக் கொண்டிருந்த போதிலும், முதலமைச்சரின் சத்தியப்பிரமாணத்தை மூடு மந்திரமான முறையிலேயே சம்பந்தன் நிறைவேற்றியிருந்தார் என்று கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
அதேபோன்று தேர்தல் முடிந்து, வடமாகாண சபைக்குரிய நான்கு பேர் கொண்ட அமைச்சரவையைத் தெரிவு செய்வதிலும் என்ன வகையான அளவுகோள் கையாளப்படுகின்றது என்ற விபரத்தையும், விளக்கத்தையும் அவர் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டங்களில் எடுத்துரைக்கவே இல்லை. மூடுமந்திரமாக வைத்து தெரிவுகளை முடித்து, பெயர்ப்பட்டியலை வெளியிடுகையில் அறிக்கை வடிவில் விளக்கமளித்திருப்பதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இப்போது குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
அமைச்சரவைப் பெயர்ப்பட்டியலுடன் வெளியிடப்பட்டுள்ள முதலமைச்சரின் அறிக்கையில் போருக்குப்பின்னரான சூழலை கருத்திற்கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெற்றுள்ளது. ஆட்சித்திறனுக்கு அடிகோலுபவை தகைமையும் திறமையும் ஆகும். எமது மக்களின் நம்பிக்கையை நடைமுறைப்படுத்தும் வண்ணம் இவற்றையே அத்திவாரமாகக் கொண்டு தேர்வு நடைபெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஆயினும் தேர்தல் முடிவுகள் வெளியாகியதையடுத்து, முதற் தடவையாகக் கூடிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மாகாண சபையின் அமைச்சுக்கள் நான்கையும் தலைவர் பதவியையும் ஐந்து கட்சிகளும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழரசுக் கட்சியிடம் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் முன்வைத்தபோது, அது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், ஆயினும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த விடயம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, இறுதியில் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லாமல்….
தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் பெயர்கள் முடிவு செய்யப்பட்டு பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டதாக ஏனைய கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். எனவே, இது தமிழரசுக் கட்சியின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பங்காளிக் கட்சிகள் என்ற வகையில் தமக்குரிய அமைச்சர்கள் யார் என்பதைக் கட்சிக்குள் முடிவு செய்து அறிவித்ததன் பின்னர், அதனைப் புறந்தள்ளிவிட்டு, திறமை, அனுபவம் என்பவற்றின் அடிப்படையில் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களை பலாத்காரமான முறையில் அமைச்சர்களாகத் தமிழரசுக் கட்சி தெரிவு செய்திருப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
இந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டிருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக விளங்குகின்ற தமிழரசுக் கட்சியை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. அதேநேரம் ஏனைய கட்சிகள் தம்மை வளர்த்துக்கொள்ளாத வகையில் முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றார்கள் என்றும் கூறப்படுகின்றது. இன்றைய அரசியல் சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைக் கட்டி வளர்த்தெடுப்பதிலும், அதன் மீது மக்கள் கொண்டுள்ள அபிமானம், நம்பிக்கை என்பவற்றைத் தக்கவைத்து அதனை மேலும் வளர்த்தெடுத்துச் செல்வதிலுமே அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஏனெனில் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே நம்புகின்றார்கள். விரும்புகின்றார்கள். வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சி ஒரு பழம்பெரும் கட்சியாக இருக்கலாம். ஆனால் மக்கள் அந்தக்கட்சி உட்பட உதிரிக்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. இதனை கூட்டமைப்பின் தலைமை கவனத்திற் கொண்டு செயற்பட முன்வர வேண்டும்.
முக்கியமாக வெளிப்படைத் தன்மையுடன் கூட்டமைப்பின் தலைமையும், தமிழரசுக் கட்சியின் தலைமையும் செயற்படுவதற்கு முன்வர வேண்டும். கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் மட்டுமல்ல. தமிழ் மக்களும் வெளிப்படைத்தன்மையையே எதிர்பார்த்திருக்கின்றார்கள். மூடு மந்திர அரசியல் வேண்டுமானால், ஏனைய அரசியல் கட்சிகளை ஓரங்கட்டி, தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுப்பதற்குச் சரியான வழியாக இருக்கலாம்.
ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் மத்தியில் மூடுமந்திர அரசியல் நடத்த முற்பட்டால் விளைவுகள் விபரீதமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-செல்வரட்னம் சிறிதரன்-
No comments:
Post a Comment