திராவிடம் என்று ஒரு மொழி இருந்ததாக 200 ஆண்டுகளுக்கு முன்பு கருதப்பட்டது.. அந்த மொழியில் இருந்தே தமிழ் உள்ளிட்ட அது சார்ந்த மொழிகள் எல்லாம் உருவெடுத்தன என்பதான கருத்தையும் ஆய்வாளர்கள் கொண்டிருந்தனர்..
பின்னர், நூறாண்டுகளுக்கு முன்பாகவே அக் கருத்துப் பிழையானது என்று மொழியியல் அடிப்படையில் நிறுவப்பட்டிருக்கிறது..
தமிழே மூலமொழி என்றும் அதிலிருந்தே
45 க்கும் மேற்பட்ட மொழிகள் திரிந்து அந்தந்த இன, குல மக்களின் மொழிகளாக நிலவத் தொடங்கின..
அவ்வாறான நிலையில் அவற்றையெல்லாம் இணைத்து அடையாளப்படுத்துவதற்குத் திராவிட மொழிகள் என்றும், அம்மொழிகள் சார்ந்த இன மரபு மக்களைத் திராவிட இனத்தினர் என்றும் பாவாணர் உள்ளிட்டு அறிஞர்கள் பலரும் அடையாளப்படுத்தியே விரித்து எழுதி வந்துள்ளனர்..
திராவிட மொழி என்று ஒன்று இல்லாதது போலவே.. திராவிட நாடு என்று ஒரு நாடும் உருக்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டதை வரலாற்றைத் திருப்பிப் பார்க்கிறவர்களால் உணர முடியும்..
ஆனால், ஆரிய மரபுத் தொடர்பற்ற இனவியல் கூறு தொடர்புள்ள ஏறத்தாழ 45 க்கும் மேலான இனக்குழுத் தொடர்புடைய மக்கள் இனத்தைத் திராவிட இனத்தினர் என்றே அடையாளப்படுத்திட முடியும்..
அந்த வகையிலேயே மொழி ஞாயிறு பாவாணர் அவர்களும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும் திராவிடம் என்பதைக் கையாளவும், அடையாளப்படுத்தவும் செய்திருக்கிறார்கள்.. பாவாணர், பாவலரேறு நூல்களைப் பயின்றோர் அறிவர்..
எனவே, ஆரியத்தை எதிர்த்த, ஆரியம் அல்லாத இன மக்களை இணைத்துச் சொல்வதற்குத் திராவிடம் என்று சொல்வதே சரியானது..
மற்றபடி தமிழை எவரும் திராவிடம் என்றும், தமிழரை எவரும் திராவிடர் என்பதாகச் சொல்லவும் இல்லை, சொல்வதாக அறிய இயலவுமில்லை..
தேர்தல் கட்சிகள் என்கிற அடிப்படையில் எல்லா கட்சிகளுமே இன்றைய முதலாளிய நாடாளுமன்ற அமைப்பிற்குள் ஊழல் கட்சிகளாகவும், புரட்டல் கட்சிகளாகவுமே இருக்கின்றன, இருக்க முடியும் என்பதை மக்களியல் கண்ணோட்டம் கொண்டிருப்போர் உணர முடியும்..
எனவே சுரண்டல், ஊழல், கொள்ளை என்கிற அடிப்படையில் இந்த முதலாளிய நலனுக்கான இன்றைய தேர்தல் அமைப்பு முறையையே எதிர்க்கவும் மறுக்கவும் வேண்டியிருக்கிறதே யல்லாமல் அவற்றை ஒரு தனிக் கட்சியின் தன்மை என்பதாக அடையாளப்படுத்துவது முறையற்றது..
திமுக, தான் ஏற்றுக் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கடந்த காலங்களில் எண்ணற்ற நிலையில் சறுக்கி இருக்கிறது என்றும் நாமும் கடுமையாகத் திறனாய்வு செய்கிறோம்..
ஆனால், ஆரியப் பார்ப்பனியத்தை எதிர்த்திட, இந்திய வல்லாட்சியை வீழ்த்திட , தேசிய இனங்களின் உரிமைகளுக்குப் போராடிட அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையில் ஆரியப் பார்ப்பனியத் தொடர்பற்றது என உணர்த்தும் வகையில் திராவிடம் என்கிற கருத்தும், திராவிடம் சார்ந்த இன மக்களிடையே ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பை வலுப்படுத்திட வேண்டிய தேவையில் திராவிடம் எனும் அடையாளத்தை அனைவரையும் இணைப்பதற்கான பொதுச் சொல்லாகப் பயன்படுத்துவதும் தேவையானதும் சரியானதுமே ஆகும்..
எனவே, ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிராக அனைவரையும் இணைக்கும் நோக்கில் திராவிடம் எனப் பயன்படுத்திடும் அடையாளத்தை எதிர்ப்பது என்பது, ஆரியப் பார்ப்பனியத்திற்கும் இந்திய வல்லாட்சிக்கும், அவற்றையே அடிப்படையாகக் கொண்ட ஆர் எஸ் எஸ், பாஜக ஆகியவற்றுக்கும் முட்டுக் கொடுப்பதே அல்லாமல் வேறன்று..
No comments:
Post a Comment