பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 18 May 2023

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

  வெற்றிசெல்வன்       Thursday, 18 May 2023

இன்று மே 18. 2009 இதே நாளில் கிட்டத்தட்ட 30 வருட இலங்கை அரச ராணுவத்தினருக்கும் இலங்கை தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும் நடந்த தமிழீழ விடுதலைப் போரில், சிங்கள அரசாங்கம் பல நாடுகளின் உதவியைப் புத்திசாலித்தனமாக பெற்றுக் கொண்டு, தமிழர்களின் தனித் தமிழீழப் போராட்டத்தை முற்றாக அழித்துவிட்டது. ஆயிரக்கணக்கான தமிழ் ஆண் பெண் போராளிகள் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிறு குழந்தைகள் உட்பட கொல்லப்பட்டது தான் மிகவும் கவலை தரும் விடையம். ஆயுதமேந்தி போராடிய போராளிகள் இறந்தது பற்றி நாங்கள் கவலைப்படலாம் ஆனால் ஆயுதமேந்தும் போது யுத்தத்தில் கொல்லப்படலாம் என்று எல்லா போராளிகளுக்கும் தெரியும் அது போல் சிங்கள ராணுவத்துக்கும் போரில் தாங்களும் கொல்லப்படலாம் என்று தெரியும்.

நான் இடையில் அகப்பட்ட அப்பாவி பொதுமக்களின் சாவுக்கு தமிழ் விடுதலைப் போராளிகளும் சிங்கள ராணுவமும் பொறுப்பேற்க வேண்டும். சரண் அடைந்த ஆண் பெண் போராளிகளை குழந்தைகளை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது சர்வதேச யுத்த சட்டத்துக்கு முரணானது. அதுபோல் மனித கேடயங்களாக இருந்த பல தமிழ் பொதுமக்கள் கடைசி நேரத்தில் ராணுவ பகுதிக்கு செல்ல முற்பட்டபோது தமிழ் போராளிகளும் அவர்களை சுட்டுக் கொன்றதாக பல நேரில் பார்த்த சாட்சிகள் பதிவுகள் உள்ளன. கடைசி கட்டத்தில்  சிங்கள ராணுவம் போரில் வெல்வதற்காக தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதை பற்றி கூட கவலைப்படாமல் ஒரே நடத்தி வெற்றி பெற்றது. ஆனால் விடுதலைப்புலிகள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைத்திருந்த தமிழ் பொது மக்களை, கடைசி கட்ட காலங்களில் விடுதலை புலிகள் இயக்கம் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அந்த தமிழ் மக்களை மனித கேடையங்களாக பயன்படுத்தியது தவறான முடிவு. எதிரில் நிற்பவன் சிங்கள ராணுவம் அவர்களுக்கு பொதுமக்களும் சரி போராளிகளும் சரி ஒன்றுதான்.எந்தப் பக்கம் இருந்து தாக்குதல் நடக்கிறதோ அந்த பக்கம் குண்டுகளை வீசி கொல்வான்.

இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் காலை பகல் மாலை இரவு என இலங்கை ஈழ ஆதரவு கூட்டங்கள் நடைபெறும். நெடுமாறன் ஐயா வைகோ திருமாவளவன் கொளத்தூர் மணி மணியரசன் கோவைராமகிருஷ்ணன் மேலும் சிறு சிறு அமைப்புகள் மூலைக்கு மூலை கூட்டங்கள் நடத்துவார்கள். எல்லா கூட்டங்கள் நடக்கும்போது சீமான் அவர்கள் வந்து தனக்கும் பேச சந்தர்ப்பம் கேட்டு நிற்பார். இப்படி நடக்கும் கூட்டங்கள் எல்லாம் இந்திய மத்திய அரசு இலங்கை பிரச்சனையில் தலையிட்டு தமிழர்களை காப்பாற்றும் படி கூறுவார்கள். அதில் சிலர் சீமான் போன்றவர்கள் இன்னும் உணர்ச்சி வசப்பட்டு தமிழீழம் கிடைத்தவுடன் இந்தியாவில் தமிழ்நாடு தனி நாடாகும், காஷ்மீர் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்போம் என்று பேசுவார்கள் இவர்களின் இந்த பேச்சு தான் எங்கள் போராட்டத்துக்கு எதிராக இருந்தது.

மன்னார் மாவட்டத்தை ஸ்ரீலங்கா ராணுவம் கைப்பற்றி விட்டது என வந்த செய்திகளை பொய் செய்திகள் என்று  நெடுமாறன்உட்பட எல்லாருமே பேசினார்கள். கிளிநொச்சி யை இலங்கை ராணுவம் நெருங்கி விட்டதென கூறப்பட்ட போது, கிளிநொச்சியில் தான் இலங்கை ராணுவ சரித்திரத்தில் இல்லாதவாறு அடி வாங்கி இலங்கை ராணுவம் தோற்று தமிழீழம் கிடைக்கப் போகிறது என மேடைகளில் பேசி சந்தோசப்பட்டார்கள். சீமான் தனது தலை முடியை ஒன்றைப் பிடித்துக் காட்டி முடி அளவு நிலத்தை கூட சிங்கள ராணுவத்தால் கிளிநொச்சியில் பிடிக்க முடியாது என்று சவால் விட்டு பேசினார். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு மன்னார் கிளிநொச்சி மக்கள் எல்லாம் விடுதலை புலிகளால் முல்லைத்தீவு நோக்கி நகர்த்தப்பட்ட போது, தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மக்களை கூட்டிக் கொண்டு போவது விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய ராஜதந்திரம் என்று கொண்டாடினார்கள். காரணம் பொதுமக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டால் உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்காது. இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து விடுதலைப் புலிகளை காப்பாற்றி விடுவார்கள் என்று கூறினார்கள்.

அதே நேரம் விடுதலைப்புலிகள் இந்திய அரசியல்வாதிகளுடன் சில பல ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருந்தது அறியக் கூடியதாக இருந்தது. அதே சில நிபந்தனைகளுடன் இந்திய அரசு ஏற்றுக் கொண்டதாக சில செய்திகளும் ரகசியமாக வந்து கொண்டிருந்தன. இது காங்கிரஸ் திமுக அரசுகளுக்கு எதிரான அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. மத்தியில் பிஜேபி கட்சியும் தமிழ்நாட்டில் ஜெயலலிதா கட்சியும் ஆட்சிக்கு வரும் என்று தீவிரமாக நம்பி இருந்த அவர்கள் விடுதலைப் புலிகளை சமாதான செயலுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் தொடர்ந்து தற்காப்பு சண்டை நடத்தும் படியும் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஆட்சிகள்மாறியவுடன் தங்களால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான செயல்களை தங்களால் செய்ய முடியும் என்று விடுதலை புலி தலைவர்களுக்கு தவறான செய்திகளை பரப்பி ஒருவிதத்தில் இவர்களும் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட காரணமானவர்கள். இன்றும் கூட அவர்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தி தமிழ்நாட்டு மக்களிடம் தாங்களும் இலங்கை தமிழ் மக்களுக்காக உயிரை கொடுப்போம் என்று கூறுகிறார்கள்.

இலங்கை தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு வன்னி மாவட்ட மக்கள் தமிழ் மக்களுக்கு தங்களுக்கு பாதுகாப்பான அரசியல் நிலம் போன்ற விடயங்களை நேர்மையோடு செயல்படுத்தக்கூடிய தலைவர்களை தேட வேண்டும். கிழக்கு பகுதி மக்கள் மீண்டும் ஒற்றுமையாக வடபகுதி மக்களுடன் சேர்ந்து இயங்கக்கூடிய வழிமுறைகளை கண்டு அதன்படி வடக்கு கிழக்கு பிரிவினை அற்ற ஒரே தமிழர் பிரதேசம் என்ற வகையில் இயங்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் இப்போது ஆயுதத்தை விட கொடிய  பிரச்சனையான மத சாதி பிரிவினைகள் தோன்றி தமிழினத்தை அழிக்க தொடங்கியுள்ளது. இந்த சாதி சமய பிரச்சனைகளை வெளிநாடுகளும் இலங்கை அரசும் தங்கள் ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது எமது அரசியல்வாதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்கிறார்கள். பதவியும் பணமும் தான் இவர்களுக்கு தேவை. விடுதலை புலிகளால் தான் தமிழரின் ஒற்றுமை குறைந்தது இனம் அழிந்தது என்றது ஒரு வகையில் உண்மையாக இருக்கலாம். 2009 க்கு பின்பு விடுதலைப்புலிகள் இல்லை இன்று வரை 14 வருடங்கள் என்ன செய்தார்கள் இந்த இப்போது இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இலங்கையில் தமிழ் மக்கள் மீண்டும் பாதுகாப்பாக பிரிவினையற்று வாழ வேண்டும் என்று விரும்பி இருந்தால் கூட்டாகஒற்றுமையாக போய் போய் சாதி சமய சண்டைகளை உண்மை நிலை அறிந்து நிறுத்தி இருக்க வேண்டியது தான் இவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. இவர்கள் எல்லாம் எந்த நாட்டை ப் பார்த்தும் இலங்கைத் தமிழருக்கு உரிமைகள் பெற்றுக் கொடுத்தாலும் சாதி சமய சண்டைகள் ஏற்பட்டு தமிழர்கள் மனதளவில் பிரிந்து விட்டாள் எந்த பயனும் இல்லை. இதற்கு நல்ல உதாரணம் விடுதலை புலிகள் அமைப்பின் வடக்கு கிழக்கு பிரிவினை தான்.

1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அம்மையாரின் இந்திய கொள்கை வகுப்பு தலைவராக இருந்த ஜி பார்த்தசாரதி அவர்கள் ஆயுத இயக்க தலைவர்கள் அழைத்து திட்ட வட்டமாக கூறினார் இந்தியா ஒரு காலமும் தமிழ் ஈழம் கிடைக்க உதவி செய்யாது. ஆனால் அமிர்தலிங்கம் தலைமையில் ஒரு சிறந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது என்று கூறினார். அதற்குக் காரணமும் திட்டவட்டமாக கூறி இந்தியா கொடுக்கும் பயிற்சி ஆயுதங்களைக் கொண்டு இலங்கையில் நீங்கள் போய் உங்கள் போராட்டத்தை ரகசியமாக நடத்துங்கள். என்று அவர் கூறும் போது தலையாட்டி தலையாட்டி ஓம் ஓம் என்று கூறிய தலைவர்கள் மனதில் போட்ட கணக்கு இந்தியா கொடுக்கும் ஆயுதம் பயிற்சிகளை கொண்டு மற்ற மற்ற இயக்கங்களை அழித்துவிட்டு தான் ஒரு இயக்கம் மே இருக்க வேண்டும் என்று கனவு கண்டார்கள். இது விடுதலைப்புலிகள் மட்டுமல்ல எல்லா இயக்கங்களும் தான் ஆனால் இதில் நடைமுறை காட்டி செயல்படுத்தியது விடுதலை புலிகள். முடிவு 2009 மே 18 முள்ளிவாய்க்கால்.

இன்றும் கூட இந்தியா உதவி செய்யும் வேறு நாடுகள் உதவி செய்யும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் சபை உதவி செய்யும் என்று பலர் இன்றும் கூட இலங்கையில் இருந்த மொழிநாட்டிலிருந்தும் இலங்கையில் மிச்சம் இருக்கும் தமிழ் மக்களை ஏமாற்றி ஏமாற்றி தங்களுக்கு பணமும் பதவியும் இந்த பிரச்சாரங்களால் மக்கள் மத்தியில் ஒரு பெருமையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

இனி இலங்கைப் பிரச்சனையில் குறிப்பாக தமிழர் பிரச்சனையில் எந்த ஒரு நாடும் நேரடியாக தலையிடாது. இந்த நாடுகள் உலகத்தில் செய்யாத மனித உரிமை மீறல்களா. எல்லா உலக நாடுகளுக்கும் இந்தியா உட்பட ஒன்றுபட்ட இலங்கையின் மிகப்பெரிய வியாபார சந்தை தேவைப்படுகிறது என்பது தான் உண்மை. முள்ளி வாய்க்கால் மே 18 நினைவு தினத்தை தமிழ் மக்கள் இறந்த எமது போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் மனதளவில் உண்மையாக அஞ்சலி செலுத்த வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது. இதை வியாபாரம் ஆகிவிட்டார்கள். முக நூல்களில் வரும் விளம்பரம் செய்திகளை பார்த்தால் கோவம் கோவமாக வருகிறது. மே 18 முள்ளிவாய்க்கால் கொண்டாட்டங்கள், முள்ளிவாய்க்கால் கஞ்சி கொண்டாட்டங்கள் என்று வருகின்றது. இது கோயில் திருவிழாக்கள் போன்று ஒரு கொண்டாட்டமா. வருடா வருடம் மே 18 நவம்பர் 27 நினைவு தினங்களில் கூட்டங்கள் போட்டிகள் யார் கொடியேற்றுவது யார் தீபம் ஏற்றுவது என்று தலைவர்கள் கட்சிகள் உணர்ச்சிகரமாக போட்டி போடுவார்கள். அதன் பிறகு எல்லாவற்றையும் மறந்து தங்கள் தங்கள் தேவைகளை பார்க்க ஓடிவிடுவார்கள்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின் அங்கிருந்து தப்பிய பொதுமக்களும் போராளிகளும் ஆண் பெண் கை, கால் இழந்து இருப்பவர்களும் இன்று வாழ்க்கை போராட்டத்தில் 14ஆண்டுகளுக்குப் பின் அவர்களின் நிலை எப்படி இருக்கிறது. முள்ளிவாய்க்காலை நினைவு கூறும் தலைவர்கள் அவர்களுக்கு இதுவும் உதவி செய்தார்களா. அமெரிக்காவில் வாழ்க்கை நடத்தும் நாடு கடந்த தமிழீழ பிரதம மந்திரி உத்தரகுமாரன் அவர்களுக்கு என்ன உதவி செய்தார்.

2009 மே மாதம் இலங்கை அரசுக்கு உதவி செய்த நாடுகளும் இந்தியாவும் இலங்கை அரசாங்கத்துக்கு கூறிய ஆலோசனை இனிமேலும் இந்த நாட்டில் தனி நாடு கேட்டு போராட்டம் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரே வழி தமிழ் மக்கள் கூடுதலாகவாழும் இடங்களில் பிற மொழி பேசும் மக்களை பிற மதங்கள் சேர்ந்த மக்களை குடியேற்றுவதுதான் ஒரே வழி என்று கூறினார்கள். இது விடுதலைப்புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் தேசிய கூட்டணிக்கும் நன்றாக தெரியும். அவர்கள் இந்த விடயத்தை இதுவரை பகிரங்கமாக கூறவில்லை. அதனால்தான் அவர்கள் இன்று வரை பெரிய பெரிய போராட்டங்கள் அரசுக்கு எதிராக முன்னெடுக்கவில்லை. காரணம் இது இந்திய வெளிநாட்டு அரசாங்கங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு கூறிய ஆலோசனை.


நான் இந்த பதிவை போட்டால் சில நண்பர்கள் ஓடி வருவார்கள் உனக்கு இந்த பதிவை போட என்ன உரிமை இருக்கிறது உனக்கு தகுதி இல்லை. நீ முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி செலுத்தினாயா என்று கேட்பார்கள்.

என்னை பொறுத்தவரை பொய்க்காக நடிப்புக்காக விளம்பரத்துக்காக அஞ்சலி செலுத்துவதை அங்கு உயிர்த்தப்பிய பொதுமக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் யார் உதவிகள் செய்கிறார்கள் என்று பார்த்துக் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதுதான் அவர்கள் செய்யும் சிறந்த அஞ்சலி.




logoblog

Thanks for reading மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment