ஜெயகரன் மற்றும் வெற்றிச்செல்வன் என்ற பெயர் கொண்ட நான் சுய நினைவுடன் சுய விருப்பத்தின் பேரில் எனது மரணத்தின் பின் எனது உடலை சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரிக்கு தானமாக 16/12/2024இல் எழுதி கொடுத்து விட்டேன். என் மரணம் நடந்து ஐந்து மணி நேரத்துக்குள் எனது உடலை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்க வேண்டும்.
எனது மரணத்திற்கு எனது படத்தை வைத்து விளக்கேற்றுவதோ, செத்தவருக்கு செய்யும் எந்த சடங்குகளோ செய்யக்கூடாது என்பது எனது விருப்பம். சுற்றி இருப்பவர்கள் சடங்குகள் செய்ய வேண்டும் என்று நிர்பந்தித்தாலும் எனது உறவினர்கள் செய்யக்கூடாது.
ஒரு உயிர் இந்த பூமியில் பிறப்பது போலவே இறந்து போவதும் இயற்கை. அதற்காக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. இந்த பூமியில் யுத்த காலத்திலும், நோய்களாலும், இயற்கை நிகழ்வுகளாலும் பல பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் மரணமடைகிறார்கள்.
மரணம் ஒரு வரவேற்கப்பட வேண்டிய விஷயம் மட்டுமே. கவலைப்படவும் துக்கப்படவும் தேவையில்லை.
என்னை சுற்றி இருப்பவர்கள் வழமைபோல தங்கள் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த காரணம் கொண்டும்,எந்தவித சமய சடங்குகளும் செய்ய கூடாது.
இறந்த பிறகாவது எனது உடல் மருத்துவ மாணவர்கள் படிப்பதற்கு உதவுமென்றால எனக்கு மிகவும் மகிழ்ச்சி. விடுதலை இயக்கத்தில் இருந்த போதும் அதன் பின்பும் கிட்டத்தட்ட 45 வருடங்கள் நாட்டுக்கோ இல்லை வீட்டுக்கோ எந்தவித உதவியும் செய்ய முடியவில்லை.. அதோடு விடுதலை இயக்கத் தலைவர்கள் தமிழ் மக்களை விட தங்கள் சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி போராடிய வரலாறுகள் எல்லாம் நேரடியாக பார்த்து மனம் வருத்திருந்தேன். ஏமாற்றங்களும் துரோகங்களுமதான், கடந்த 45 வருடங்களாக பார்த்து பழகி இருக்கிறேன். இறந்த பிறகு சரி எனது போராட்ட வாழ்வில் இருந்ததற்கான ஒரு அறிகுறியாக எனது உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படித்து பயன்பெற உதவியாக இருக்கட்டும்.
இதுவே எனது விருப்பம்.
No comments:
Post a Comment