பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 6 January 2026

இது ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Tuesday, 6 January 2026
மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, வட அமெரிக்க நாடுகளுக்கு அகதி என்று கூறி பஞ்சம் பிழைக்க போனவர்களின் பிள்ளைகள் நன்றாக படித்து விளையாட்டிலும் மற்றும் பல துறைகளிலும் சிறந்து விளங்கி பரிசுகள் பல பெற்று, பாராட்டுக்கள் பெற்று, பெருமை சேர்க்க கூடிய விதத்தில் தலைவர்களுடன் அறிஞர்களுடன் படம் எடுத்து போடும்போது எல்லோருக்கும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படுவது உண்மை. உடனடியாக எல்லோரும் தமிழ் ஈழத்தை ச் சேர்ந்த அல்லது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விருது பெற்றவர்கள் என்று கூறி எழுதுவார்கள் பேசுவார்கள். ஆனால் உண்மையில் விருது பெற்றவர்கள் அந்தந்த நாட்டு குடிமக்கள் மட்டுமே அவர்களுக்கும் இலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களின் பெற்றோர்கள் கூட தங்கள் சொந்த இடத்துக்கு வாழ போக பிடிக்காமல் டூர் மட்டுமே போவார்கள்.
                    ஆனால் தமிழ் தேசியம் பேசும் வெளிநாட்டில் வசிக்கும் முன்னால் இலங்கை குடிமக்கள் இந்தியா வந்து தமிழ்நாட்டில் தலைவர்கள் மற்றும் புகழ்பெற்றவர்கள் அதைவிட சினிமா நடிகரின் நடிகைகளுடன் சின்னத்திரை நடிகர் உடன் படங்கள் செல்பி எடுத்து மகிழ்வார்கள் இதை நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன்.
ஆனால் இலங்கையில் சொந்த மண்ணில் இருந்து தங்கள் சொந்த திறமையால் பாராட்டுகள் பரிசுகள் பெற்றால் எம் இன ஈழ தமிழர்களுக்கு பிடிக்காது பொறாமையால் தரக்குறைவாக எழுதுவார்கள். ஆனாலும் அவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும் இடம் பெயராமல், வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழ் தேசியம் பேசும் தமிழ் மக்களை போல் இல்லாமல் சொந்த இடத்திலேயே இருந்து கொண்டு தங்களை வளர்த்துக் கொள்பவர்களை நாங்கள் பாராட்ட வேண்டும் பொறாமைப்படக்கூடாது. வெளிநாட்டில் இருப்பவர்கள் ரகசியமாக வந்தும் உள்நாட்டில் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் பகிரங்கமாகவும் இலங்கையின் சிங்களத் தலைவர்களுடன் சிரித்து பேசி போட்டோக்கள் எடுத்து பத்திரிகையில் வந்தால் அது ராஜதந்திர நகர்வு. தமிழ் ஈழ விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய இயக்கங்கள் ரகசியமாக சிங்கள அரசுகளுடன் கூட்டு வைத்து சொந்த தமிழ் மக்களே கொல்லும் போது அதை ரசித்தவர்கள், விடுதலைப்புலிகள் பிரேமாதாசாவுடன் ரகசிய உடன்படிக்கை செய்து ஆயுதங்கள் பணமும்  பெற்று மற்ற தமிழ் இயக்கங்களை அழிக்கும் போது துரோகிகள் அழிந்தார்கள் என்று இலகுவாக கூறி விடுவார்கள். தமிழ் இனவிடுதலைக்காக என்று கூறியவர்கள் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து  இயங்கினால் அது ராஜதந்திரமா.

இன்று இலங்கையில் தமிழர்கள் மற்றும் அனைத்து இன மக்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இயங்கும் அரசின்கீழ்தான் இருக்கிறார்கள். தமிழர்கள் தங்களுக்கு வேண்டிய உரிமைகள் மற்றும் வேலைகள் எல்லாவற்றுக்கும் இலங்கை ஜனாதிபதியும் சிங்கள தலைவர்களும் சிங்கள மக்களும் தான் முடிவு எடுக்க வேண்டும்.
ஆனால் தமிழ் மக்களில் தமிழ்த் தேசியம் பேசுவோர் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இந்தியாவோடு பேசுவோம் அமெரிக்காவோடு பேசுவோம் நோர்வே நாட்டோடு பேசுவோம் என்று, ஏதோ அந்தந்த நாடுகள் எங்கள் பிரச்சனையில் தீர்வு கொடுக்கும் போல் பேசுவார்கள். அந்த நாடுகள் தான் நமக்கு பிரச்சினையே கொடுத்தார்கள் என்பது வெளியே சொல்ல மாட்டார்கள். தாங்கள் அகதியாக இருக்கும் நாடுகளுக்கு நன்றி ஆக இருந்து அந்த நாடுகள் எமது ஈழ பிரச்சினையை தீர்க்கும் என்று. ஒன்றுக்கும் உதவாத கருத்தை கூறுவார்கள். இவர்களை நம்பி ஆமாம் சாமி போடும் ஒரு கூட்டம்.
            இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் தனது திறமையாய் இன்னொரு நாட்டில் பாராட்டும் பரிசும் பெற்று, தனது நாட்டு ஜனாதிபதியுடன் நின்று செல்பி போட்டோக்கள் எடுத்தால் என்ன தவறு. இப்படியான குழந்தைகள் தான் இனி இனங்களுக்கு இடையே சமத்துவம் , நட்பு, உரிமைகள்கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். ஜனாதிபதியுடன் செல்பி போட்டோ நட்பு பாராட்ட முடியாதவர்கள் பொறாமையால் தவறான பதிவுகள் போடுகிறார்கள். தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட மக்கள் பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பற்றி மட்டும் பேச மாட்டார்கள். ஆனால் விருந்துகள் தங்களுக்கு தேவையான பணப்பெட்டிகள் மட்டும் பெற்றுக் கொள்வார்கள். அவர்களை யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். சாதாரண இலங்கை குடிமக்கள் மட்டும் தமிழ் தேசியம் பேச வேண்டும். வசதி இல்லாமலும் வறுமையில் வாடினாலும் அவர்கள் மட்டும் அரசாங்கத்தை எதிரியாக பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் துரோகிகள். இது என்ன நியாயம்.

வெளிநாட்டில் வசதியாக வாழ்ந்து கொண்டு தங்கள் பிள்ளைகளை பெரிய பெரிய படிப்புகள் மற்றும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை தரம் எல்லாம் அமைத்துக் கொடுத்து அந்தந்த நாட்டு பிரஜையாக வாழ வழிவகை செய்துவிட்டு, இலங்கையில் இருக்கும் வறுமையில் வாடும் கஷ்டப்படும் தமிழர்கள் மட்டும் உணர்ச்சிகரமாக தமிழின போராட்டத்தை தொடர வேண்டும் என்று நினைப்பது அவ்வளவு அயோக்கியத்தனம்.

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தலைவர்கள் உரிமைக்கான போராட்டத்தை நடத்தட்டும்.. சாதாரண மக்கள் சிங்கள மக்களோடும் சிங்கள தலைவர்களோடும் நட்புறவு கொண்டு இன ஒற்றுமை வளர்க்கட்டும்.
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment