தமிழ்நாட்டில் இலங்கை அகதிகளின் மறுவாழ்வு
1983 ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் ஏற்பட்ட தமிழின அழிப்பாலும், தமிழ் இளைஞர்களின் தனித் தமிழில ஆயுதப் போராட்டத்தாலும் லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் இலங்கை தீவில் இருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் குடும்பங்கள் தாங்களாகவே வந்தாலும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமிழ் விடுதலை இயக்கங்களால் ஆசை வார்த்தைகள் மூலம் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து விடப்பட்டார்கள். இயக்கங்கள் இதில் ஈடுபட்ட காரணம் கூடுதலாக அகதிகள் இந்தியா வந்தால் இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர் பிரச்சனையில் கூடுதலாக கவனம் செலுத்தி தமிழினம் பெற உதவி செய்யும் என்ற நம்பிக்கையும் அதைவிட இயக்கத்துக்கு பணம் சம்பாதிக்கும் ஆசையிலும் தங்களது சொந்த படகுகளிலும், வாடகைக்கு எடுத்த படகுகளிலும் பணம் வாங்கிக் கொண்டு அழைத்து வந்தார்கள். இதை இயக்கங்கள் ரகசியமாகவே செய்தன.
இதை இன்றுவரை எந்த இயக்கங்களும் பொது வெளியில் சொன்னதில்லை. இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர் அகதி பிரச்சனையில் அவர்கள் வாழ்வாதாரத்துக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் விட்டாலும், தமிழ்நாடு அரசாங்கமும்தமிழ் நாட்டு மக்களும் தங்கள் சக்திக்கு மீறி பெருமளவு உதவி செய்து வந்தார்கள். இலங்கைத் அகதி தமிழர் வாழ்வாதாரத்தை விட தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தன இருக்கின்றன என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு சட்ட ஒழுங்கு அதிகாரிகளுக்கும் அகதிகளின் மேல் வெறுப்பு வர பல காரணங்கள் இருந்தன. அதற்கு முக்கிய காரணங்கள் தமிழ் விடுதலை இயக்கங்கள் தான். அனைத்து விடுதலை இயக்கங்களும் முகாம்களில்இருக்கும் தமிழ் அகதிகளை மறைமுகமாக ரகசியமாக தங்கள் சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்த தொடங்கினார்கள். ஆயுதங்கள் மறைத்து வைப்பதற்கு, இலங்கைக்கு கொண்டு போவதற்கு பலவித போதைப் பொருட்களை வைத்து எடுப்பதற்கு அகதி முகாம்களையும் முகாம் மக்களையும் தங்கள் தேவைக்கேற்ப பணத்தைக் காட்டி பயன்படுத்த தொடங்கினார்கள். வெளியூர்களில் கொள்ளை அடிப்பதற்கு சில இயக்கங்கள் முகாம்களில் இருக்கும் இளைஞர்களை பயன்படுத்தத் தொடங்கினார்கள். முகாம்களில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் தெரிந்திருந்தாலும் அரசியல் காரணங்களால் அவர்கள் கைகள் கட்டப்பட்டு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல் இருந்தார்கள்.
1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்பு இலங்கைக்கு திரும்பிய இயக்கங்கள் தமிழ்நாட்டில் தங்கள் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், கொள்ளையடித்து பணம் சம்பாதிக்க மற்றும் பல சமூக விரோத செயல்களை செய்து பணம் சேர்க்க சிலரை தமிழ்நாட்டில் ரகசியமாக விட்டுச் சென்றார்கள். அவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக அகதி முகாம்களில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு தங்கள் சட்டவிரோத செயல்களை செய்தார்கள் அதோடு சில அகதி இளைஞர்களும் கூட்டு சேர்ந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2009 ஆம் ஆண்டு வரை தங்கள் ஆயுத தேவைக்காக பலவெடி மருந்து கடத்தல் மற்றும் பல தேவைகளுக்காக அகதி முகாம்களையும் அகதி முக மக்களையும் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இலங்கை அகதி மக்களும் விடுதலைப்புலிகளின் போராட்டங்களுக்கு தங்கள் பங்கையும் இவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மனம் விரும்பி செய்தார்கள்.
1991 ஆண்டு ராஜீவ் காந்தியின் படுகொலையின் மூலமும் 1990 ஆண்டு சென்னையில் பத்மநாப அவர் தோழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்பும் தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் இருந்த தமிழர்களின் நிலையும் வெளிப்பதிவில் இருந்த இலங்கைத் தமிழர்களின் நிலையும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் காவல்துறை உளவுத்துறைகளில் கண்காணிப்பில் மத்திய ஐ பி உளவுத்துறை கண்காணிப்பில் மிக கடுமையாக கொண்டுவரப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்டது. இலங்கைத் தமிழர்கள் முகாம்களில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு சவால் விட்டவர்கள் முகாம்களில் குடிபோதையில் இருந்தவர்கள் கஞ்சா விற்றவர்கள் கைது செய்யப்பட்டு எல்லோரும் தமிழ்நாட்டு சட்ட ஒழுங்குமுறைக்கு கொண்டுவரப்பட்டார்கள்.
வெளிநாடுகளில் இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டன. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன இலங்கைத் தமிழர்கள் மீது மட்டுமல்ல, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான தமிழ்நாட்டு தலைவர்களின் குரல்களும் அடக்கி ஒடுக்கப்பட்டன. தமிழ் மொழி ஆதரவு மாநாடு என்ற பெயரில் நடக்கும் சில கூட்டங்களில் விடுதலைப் புலி ஆதரவு தலைவர்கள் ரகசியமாக வந்து பேசி செல்வார்கள். கூட்டங்களில் இலங்கை தமிழருக்கு ஆதரவாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது பேசிய தமிழ்நாட்டுத் தலைவர்கள் எல்லோரும் இலங்கை அரசாங்கத்தை இந்திய மத்திய அரசாங்கத்தை தாக்கி பேசுவதை விட, நெடுமாறன் போன்ற பல விடுதலை புலி ஆதரவாளர் தலைவர்கள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியையும், அவரது ஆட்சியையும் மட்டுமே குறிவைத்து மிகவும் தாக்கி பேசுவார்கள். நான் சென்னையிலும் வெளியூர்களிலும் பல நூற்றுக்கணக்கான கூட்டங்களில் போய் பார்த்துள்ளேன் அவர்களின் ஒரே இலக்கு முதலமைச்சர் கருணாநிதி மட்டுமே. அவர்கள் பேசும்போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர் பிரச்சினை தீர்ந்துவிடும் ஜெயலலிதா உதவி செய்வார் என்பது போலவே பேசி வந்தார்கள். அதோடு இலங்கை இந்தியா ஒப்பந்தம் கலைஞர் தான் காரணம் என்பது போலவும், கலைஞர் தான் இலங்கைத் தமிழரை அழிப்பதற்கு முயற்சி செய்வது போலும் கூட்டங்களில் பேசுவார்கள். அவற்றை இன்றும் பல இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு உண்மைகள் தெரியாமல் என்றும் திமுக அரசுக்கு எதிராக பேசி வருகிறார்கள். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி என்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள்.
கலைஞர் ஆட்சியில் போது மேடைகளில் விடுதலைப் புலிகள் ஆதரவாக பேசிய தலைவர்கள் முதலமைச்சர் கலைஞரை மிகவும் தரக்குறைவாக கண்ணியகுறைவாக பேசி மகிழ்ந்தார்கள் அதற்காக கலைஞரை எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் இந்த தமிழ்நாட்டு ஈழ ஆதரவு தலைவர்கள் எல்லாம் அமைதியாக பயந்து அடங்கிக் கிடந்தார்கள்.. துள்ளிய சிலரை முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் தடா போடா என்ற சட்டங்களில் மூலம் அடக்கி அழகு பார்த்தார்கள். கைதாகும்போது வீரமாக பேசிய தலைவர்கள் சிறையில் இருந்து வெளியில் வரும்போது அடக்கி வாசித்தார்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவும் தனது பங்குக்கு இலங்கை தமிழர்க்கும் விடுதலை புலிகளுக்கும் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் உதவிகள் செய்வதாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாகவும் பகிரங்கமாக மேடைகளில் பேசி வந்தார். கலைஞருக்கு இரண்டு பக்கமும் அடி.
விடுதலைப் புலிகளுக்கு சட்ட விரோதமாக ஆயுதங்கள் மற்ற இயக்கங்களுக்கு சட்ட விரோதமாக போதை பொருட்கள் கடத்திய பல இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டு மத்திய அரசின் உத்தரவின் பெயரில் சிறப்பு முகாம்கள் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டன. அப்போது வாய் மூடி மௌனியாக இருந்த வெளிநாட்டு தமிழர்கள் திரும்ப கலைஞர் வந்த பிறகு கலைஞர் கருணாநிதி தான் சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி கொடுமைகள் செய்வதாக தங்கள் பிரச்சாரங்களை செய்தார்கள். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அகதி இலங்கை தமிழ் மக்களில் சில நூற்றுக்கணக்கான அகதிகள் செய்த சமூக விரோத செயல்களால் ஒட்டுமொத்த இலங்கை அகதிகளும் குற்றவாளிகளாக அரசு அதிகாரிகளாலும் காவல்துறையாலும் பார்க்கப்பட்டனர். குடிபோதையில் இலங்கை அணிகள் பக்கத்து கிராமங்களில் செய்த செயல்களாலும் சண்டைகளாலும் தமிழ் நாட்டு மக்களும் இலங்கை அகதிகளுக்கு எதிராகவே கருத்துக்கள் கூறினார்கள். பத்மநாபா தோழர்கள் இந்திய மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட நேரு பரம்பரையின் வழி ராஜீவ் காந்தி அவர்களை படுகொலை செய்ததை எந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் ராஜீவ் காந்தியை அரசியலில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் மிகவும் நேசித்தார்கள். இந்தக் கொலைகளாலும் சம்பந்தமே இல்லாமல் பாதிக்கப்பட்டது திமுகவும் அதற்கு தொண்டர்களும் தான்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இலங்கை தமிழர்கள் கல்வி மற்றும் பல விடயங்களில் அடக்கப்பட்டு இருந்தார்கள். அகதி மக்களுக்கு ஆதரவாக யாரும் போய் பேச முடியாத நிலை. திரும்பவும் கலைஞர் ஆட்சியில் தந்தை செல்வாவின் மகன் சந்திராசன் அவர்கள் தனது அமைப்பின் மூலம் கலைஞர் கருணாநிதி அவர்களை அணுகி கல்வி உயர் படிப்பு மற்றும் பல உதவிகளை பெற்றுக் கொடுத்தார். கலைஞர் கருணாநிதி செய்த உதவிகள் வெளியில் பேசப்படவில்லை. காரணம் எதிர்க்கட்சிகளும் ஜெயலலிதாவும் கலைஞர் இலங்கைத் தமிழருக்கு உதவி செய்வதாக கடும் எதிரான பிரச்சாரங்களை மேடைகளில் பேசி வந்தார்கள்.
சிறப்பு முகாம்களை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேரடியாக கண்காணித்து வந்தது இன்று வரை அது தான் நிலைமை. தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக சிறப்பு முகாம்களில் செயல்பட முடியாது. பாஸ்போர்ட் மற்றும் ஆயுதம் போதைப்பொருள் குற்றங்களில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்கள் தான் சிறப்பு முகங்களில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். இந்த குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை தமிழர்களும் அதில் அடக்கம். ஆனால் வெளிநாடுகளில் இன்று வரை இலங்கை அகதிகளை சித்திரவதைப்படுத்தி சிறப்பு முகாம்களில்திமுக அரசு அடைத்து வைத்திருப்பதாக பகிரங்க பிரச்சாரம்.. அகதி முகாம்களில் இருக்கும் வெளிப்பதிவுகளில் இருக்கும் எந்த ஒரு இலங்கை தமிழர்களும் சமூக விரோத செயல்களில் ஈடுபடாத வரை தமிழ்நாட்டில் நிம்மதியாக தான் இருக்கிறார்கள். வசதி இருப்பவர்கள் உயர் கல்வியும் பெறுகிறார்கள். வேலைகளும் செய்கிறார்கள். ஆனால் மத்திய அரசு குடியுரிமை கொடுக்காததால் அவர்களுக்கு பல சங்கடங்கள் உள்ளன என்பது உண்மை. இந்திய குடியுரிமைக்கும் தமிழ்நாடு அரசாங்கம் நினைத்தாலும் முடியாது.
இலங்கைத் தமிழர்கள் என்றால் ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்பு பல பெரிய கம்பெனிகள் இலங்கைத் தமிழரே வேலைக்கு எடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள் என்பது உண்மையே. ஆனாலும் பல இலங்கை தமிழர்கள் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். உண்மை நிலை தெரியாமல் வெளிநாடுகளில் வசிக்கும் பொருளாதார நிலையை உயர்ந்த இலங்கை தமிழர்கள் தங்கள் வாய்க்கு வந்தபடி தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழருக்கு மிகக் கொடுமை நடப்பதாக பேசியல் எழுதியும் வருகிறார்கள். இது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடந்த உண்மைகள்.
திமுக ஆட்சியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்கள் தான் கைது செய்யப்பட்டார்கள். தமிழ்நாடு சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்ட அகதி முகாம் தமிழர்களும் வெளிபதிவு தமிழர்களும் அமைதியான வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதுதான் உண்மை.
இலங்கை அரசும் இலங்கையில் இருக்கும் தமிழ் மாகாண அரசுகளும், தமிழ் தலைவர்களும் இன்று வரை தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை தமிழ் அகதி மக்களை பற்றி எந்த வித கவலையும் படவில்லை. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் பற்றி கவலைப்படும் தமிழ்நாட்டில் இருக்கும் தலைவர்கள் சீமான் உட்பட தமிழ்நாட்டில் அகதியாக இருக்கும் தமிழர்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள். காரணம் தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகளால் அவர்களுக்கு எந்த ஒரு பண உதவியும் கிடைக்காது. ஆனால் இன்னொரு விடயம் சீமான் போன்றவர்களை வளர்த்து விடும் முகமாக வெளிநாட்டில் இருக்கும் இளைஞர் தமிழர்கள் திமுக அரசு இலங்கை தமிழர்கள் கொடுமை செய்வதாகவும் இதற்கு சீமான் முதலமைச்சராக வந்தால் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமையும் எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்கிறார்கள். அதன் மூலம் பல பணமும் சேர்க்கிறார்கள்.
புதிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இலங்கை தமிழ் அகதிகளுக்கு அவர்கள் வாழ்வுரிமைக்கு பல நல்ல உதவிகளை 40 வருடங்களுக்குப் பின்பு இன்று முன் முயற்சி எடுத்து செய்து வருகிறார்கள். தயவுசெய்து வசதியாக வாழும் வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழர்கள் அதைக் கெடுக்கும் விதமாக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டை சேர்ந்த மக்களுக்கு கிடைக்கும் வசதிகளை விட இலங்கை தமிழ் அகதிகளுக்கு பல நல்ல வசதிகளை செய்து கொடுத்து வருகிறார்கள். அதைக் கெடுத்து விடாதீர்கள். புயலாலும் வெள்ளத்தாலும் ஒவ்வொரு வருடமும் பாதிக்கப்படும் இலங்கை தமிழ் அகதிகளுக்காக இன்று முதல் முறையாக ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் தொடர்வதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
முதல் முறையாக தமிழ்நாட்டில் வசிக்கும் , முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் அவர்களின் எதிர்காலத்துக்கு புது வெளிச்சம் தெரிகிறது. இந்தப் புது வெளிச்சம் கல்வியிலும் உயர் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் தொடர ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக அரசு படிப்படியாக உதவிகள் செய்யும் என்று நம்புவோம். அதற்கு நாங்களும் தமிழ்நாட்டில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் தமிழ் நாட்டு அரசாங்கத்திற்கு சங்கடம் ஏற்படாமல் இருக்க உறுதிமொழி எடுப்போம்.
40 வருட காலத்துக்குப் பின்பு இலங்கைத் தமிழர்கள் புதிய நல்ல வீட்டுக்கு குடி போவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
No comments:
Post a Comment