அன்னையரின் அழுகுரல்
ஆட்கள் வேறு - அழுகை ஒன்றே
கப்டன் அன்புச்செல்வனையும் போர் தின்றது!
கப்டன் அபயசிங்கவையும் போர் தின்றது!
மே18
அன்புச்செல்வனின் தாயும் அழுகிறாள்!
அபயசிங்கவின் தாயும் அழுகிறாள்!
இரண்டு ஒப்பாரிகளும் வேறு வேறு மொழிகள்!
இரண்டு ஒப்பாரிகளும் வேறுவேறு இடங்கள்!
அபயசிங்கவும் அன்புச்செல்வனும் ஒரே நாளில் இறந்தார்கள்.
ஒரே இடத்தில் இறந்தார்கள்.
ஒரே போர்தான் அவர்களை தின்றது!
அபயசிங்கவும் நாட்டுக்காய் உயிரை விட்டான்!
அன்புச்செல்வனும் நாட்டுக்காய்த்தான் உயிரைவிட்டான்!
அபயசிங்கவின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டது!
அன்புச்செல்வனின் கல்லறை இடித்து தூளாக்கப்பட்டது!
அபயசிங்கவின் தாயின் ஒப்பாரி தெளிவாய் கேட்கிறது!
அன்புச்செல்வனின் தாயின் ஒப்பாரி கேட்கவேயில்லை!
ஒரே நாட்டில்
ஒரே நாளில்
இருவேறு இடத்தில்...
இரண்டு இனங்கள் வலியால் துடிக்கின்றன!
இடையில் சிலர் குதூகலிக்கின்றனர்!!
போர் தின்ற மக்கள் கூடி அழ தடை!
ஏன் என்று கேட்டால் அவனுக்கும் தடை!
அபயசிங்கவின் அம்மா முள்ளிவாய்க்காலுக்கு வரவேண்டும்!
அன்புச்செல்வனின் அம்மா
அம்பாந்தோட்டைக்கு போகவேணும்!
அன்புச்செல்வனின் அம்மாவும்
அபயசிங்கவின் அம்மாவும்
சந்திக்கவேண்டும்!
வலிகளுக்கு மொழிகள் இல்லை!
வலிகளுக்கு இனம் இல்லை!
வலிகளுக்கு மதமும் இல்லை!
அன்புச்செல்வனின் அம்மாவின் கண்ணீரும் உப்புக்கரிக்கும்!
அபயசிங்கவின் அம்மாவின் கண்ணீரும் உப்புக்கரிக்கும்!
அபயசிங்கவின் தாயின் கண்ணீரில் இனவாதம் இல்லை!
அன்புச்செல்வனின் தாயின் கண்ணீரில் பழிவாங்கும் எண்ணமும் இல்லை!!
பெத்தவயிறு பத்தி எரிஞ்சு வாற கண்ணீர் ஒரே நிறம்!
சிவப்பு !!!!!
பிரதியாக்கம் - தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு -
நன்றி. A.K.ஆனந்தா
No comments:
Post a Comment