பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 21 May 2024

ஈழப் பிரச்சனையும் தமிழ் தலைமைகளும்

  வெற்றிசெல்வன்       Tuesday, 21 May 2024
இன்றைய தினம் முகநூலில் பலர் உணர்ச்சிகரமாக பதிவுகள் போடுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தினத்தை வரவேற்றும் எதிர்த்தும் உணர்ச்சிகரமான பதிவுகள் போடுகிறார்கள்.
ஒன்றை மட்டும் மறந்து விட்டார்கள் இன்றுதான் இலங்கைத் தமிழர்களின் தமிழீழப் போராட்டத்திற்கும் இலங்கைத் தமிழர்களின்அழிவிக்கும் அஸ்திவாரம் போடப்பட்ட நாள்.

சிலர் கேட்கிறார்கள் இந்திய அமைதிப்படை செய்த கொலைகள் கற்பழிப்புகள் அநியாயங்களை மறந்துவிட முடியுமா என்று? மறக்க முடியாது. மறக்கக் கூடாது. ஆனால் இந்திய அமைதிப்படை இலங்கையில் அவசரஅவசரமாக வரவழைக்க முயற்சி மேற் கொண்டவர்கள் யார். விடுதலைப் புலிகள் உட்பட எல்லா விடுதலை இயக்கங்களும் தான். உலகின் எல்லா நாட்டு ராணுவங்கள் மோசமானவை தான். இதற்கு இந்திய ராணுவமும் விதிவிலக்கல்ல. வந்த இந்திய ராணுவத்தோடு ஆரம்பத்தில் வரவேற்று கொஞ்சி குலாவிய தமிழ் இயக்கங்கள் தான்.
ஆயுதம் தூக்கிய வெறும் ஆயுதத்தை மட்டுமே நம்பிய அறிவு இல்லாத இயக்கத் தலைமைகள், தமிழ் மக்களைக் காப்பாற்றும் விதமாக இந்திய அமைதிப்படையை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஜ ஆர் ஜெயவர்த்தனா சரியான முறையில் தனது அறிவை பயன்படுத்தி தமிழர் பாதுகாப்புக்காக வந்து அமைதி படையையும் தமிழர்களையும் மோத விட்டு, செலவில்லாமல் தமிழர்களை அழிப்பதக்கு இந்திய அமைதிப்படையை பயன்படுத்திக் கொண்டார்.

இதே காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் உட்பட மற்ற இயக்கங்களும் இலங்கை ராணுவ தோடு சேர்ந்து தங்கள் சொந்த தமிழ் சகோதரர்களை யும், தமிழ் பொது மக்களையும் கொன்று குவித்தார்கள். சிங்கள ராணுவத்தை எதிர்த்துப் போராட வேண்டிய அத்தனை தமிழ் இயக்கங்களும் எத்தனை அடையாளப்படுத்தப்பட்டு குறிப்பாக மண்டையன் குழு, திரி ஸ்டார், வவுனியாவில் புளொட், சொந்தத் தமிழ் இன மக்களை மட்டும் தான் ஏன் கொலை செய்தார்கள். விடுதலைப் புலிகள் உட்பட மற்ற இயக்கங்கள் வேறுவேறு இயக்கத்தில் இருந்த போராளிகளின் குடும்பங்களையும் கொலை செய்த வரலாறு மறக்க முடியாது.
சில பேர் புலிகள் அப்படி செய்யவில்லை என்று கூறுவார்கள். புலிகள் கைது சிறைவைத்த தமிழர்கள் எத்தனை பேர் திரும்ப உயிருடன் வந்தார்கள். அதுபோல் எல்லா இயக்கங்களும் தாம் கைது செய்த தமிழர்களை கொலை தான் செய்தார்கள்.

இன்று பாதுகாப்பாக பொருளாதாரத்தில் வசதியாகவும் வெளி நாடுகளிலும் இருக்கும் தமிழர்களும், தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக ஆதரவு தருவதாக கூறி கொண்டு உணர்ச்சிகரமாக அறிக்கை நூலில் எழுதுபவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களது வாழ்க்கை குடும்ப வாழ்க்கை அமைதியாக போகிறது.
இன்று இலங்கைத் தமிழர்கள் உரிமைகள் இழந்து, அவர்களது சொந்தப் பிரதேசங்களை இழந்து வாழ்கிறார்கள்.
அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அடுத்து என்ன நடக்கும். எந்த ஒரு வெளி நாடும், ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யக் கூடிய நிலையில் இல்லை, செய்யவும் செய்யாது.
நாடு கடந்த தமிழீழம் என்று இலங்கை தமிழ் மக்களுக்கு இன்று சம்பந்தமே இல்லாத ஒரு அமைப்பு, அதன் பிரதம மந்திரி ருத்ரகுமாரன் இலங்கையில் இன அழிவுக்குப் பின் என்ன செய்தார். தனது இருப்பைக் காட்ட ஸ்கைப்பி, ஜூம் வழி கூட்டங்கள் போடுவார்கள். இந்த நாடு கடந்த தமிழீழ அரசை தூக்கி நிறுத்த தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் அலைகிறது. வெக்கங்கெட்ட மனிதர்கள்.

உணர்ச்சிகரமாக பேசி எழுதி இலங்கையில் இருக்கும் வடக்கு கிழக்கு மலையக தமிழர்களை ஒன்று பட விடாமல் செய்து, இலங்கையில் இருக்கும் கடைசித் தமிழன் அழியும் வரை இவர்களின் ஆவேசமான பேச்சுக்களும் அறிக்கைகளும் இருக்கும் என நினைக்கிறேன். இந்தியா இலங்கை தமிழருக்கு உதவி செய்கிறதோ இல்லையோ, திரும்பவும் இலங்கைத் தமிழருக்கு எதிராக திரும்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இப்போதைய காலகட்டத்தில் முக்கிய வேலை. இந்தியா என்பது இன்று ஆளும் கட்சிகளை மட்டுமல்ல, மற்ற கட்சிகளையும் நாங்கள் பகைக்க கூடாது. நாளை அவர்கள் ஆளுங்கட்சியாக கூட மாறலாம்.

2009 முன்பு தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நடந்த கூட்டங்களில் இந்திய அரசு இலங்கையில் தலையிட்டு தமிழர்களுக்கு விடுதலை புலிகளுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற முக்கிய நோக்கத்தோடுதான் கூட்டம் போடுவார்கள். ஆனால கூட்டங்களில் பேசுபவர்கள் உணர்ச்சிகரமாக பேசுவது சுதந்திர தமிழீழம் கிடைத்த உடன், சுதந்திரத் தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரியும் என்றும் பேசுவார்கள். அதோடு இலங்கைத் தமிழரின் போராட்டத்திற்கு இந்திய உதவி கேட்கும் கூட்டங்களிலே, காஷ்மீர் விடுதலை பற்றியும், இந்திய வடகிழக்கு மாநிலங்கள் சுதந்திரம் பெறவேண்டும் என்றும் உணர்ச்சிகரமாக பேசுவார்கள். உண்மையில் இவர்களது பேச்சுக்கள் இந்தியாவையும் இலங்கை தமிழர்களையும் பகையாளி ஆக்குவதே நோக்கம்.
அடுத்து இலங்கையில் இருக்கும் தமிழர்கள் பற்றியும் அவர்கள் பாதுகாப்பு பற்றியும் இலங்கையில் இருக்கும் தமிழர்களே முடிவு செய்ய வேண்டும். புதிய தமிழ் தலைமைகள் உருவாக வேண்டும். காரணம் அங்கிருக்கும் பழைய தலைமைகள் பணத்துக்கும் பதவிக்கும் அடிமைப்பட்டவர்கள்.

தயவுசெய்து உணர்ச்சிகரமாக பேசி எழுதி இருக்கும் இலங்கை தமிழர்களையும் அழித்து விடாதீர்கள்
logoblog

Thanks for reading ஈழப் பிரச்சனையும் தமிழ் தலைமைகளும்

Previous
« Prev Post

No comments:

Post a Comment