================================
தமிழ்நாடும்.... தமிழீழமும்.....
இணைய இயலாத புள்ளிகளும்,
இணைய வேண்டிய புள்ளிகளும்
================================
பொழிலன்
தமிழக மக்கள் முன்னணி
==========
2009-க்குப் பிறகு தமிழீழ அரசியலிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் மிகப் பெரும் குழப்படிகள் நடந்து கொண்டுள்ளன.
அந்தக் குழப்படிகள் இரண்டு தேசிய இனங்களின் விடுதலைக்கும் இடர் விளைவிப்பனவாக உள்ளன.
முதலில் தமிழ்நாடு, தமிழீழம் - இரண்டும் தனித்தனித் தேசிய இனங்கள் என்பதையும், இரண்டின் போராட்டங்களும் தனித்தனியானவை என்பதையும், இரண்டின் வேறுபட்ட அரசியலின் முதன்மை எதிரிகளும், நண்பர்களும், போராட்ட ஆற்றல்களும், நட்பு ஆற்றல்களும் வெவ்வேறானவர்கள் என்பதையும் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
இரண்டு தேசங்களின் மக்களும் தமிழர்கள் என்பதால் இரண்டு தேசங்களின் தமிழர்களுக்கும் எதிரிகளும், நண்பர்களும் ஒருவருக்கு எவரோ அவரே மற்றவருக்கும் என ஆகிவிட முடியாது.
உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் அனைவருக்கும், ஒரே வகை அரசியல், ஒரே வகைப் பொருளியல், ஒரேவகை வாழ்வியல் தேவைகளும், போராட்டத் தேவைகளும் இருப்பதில்லை.
அமெரிக்கவாழ் தமிழர்களும், ஆசுத்திரேலியாவாழ் தமிழர்களும், கனடாவாழ் தமிழர்களும் அரசியல்வழி, பொருளியல்வழி வேறுபட்டவர்கள்.
அதேபோல்தான் சிங்கைவாழ், மொரீசியசுவாழ் தமிழர்களின் நிலைகளும்....
அவ்வளவு ஏன் கருநாடகத்தில் வாழ்கிற தமிழர்களுக்கும், மும்பை உள்ளிட்ட மராட்டியத்தில் வாழ்கிற தமிழர்களுக்கும் ஒரே வகை அரசியல், பொருளியல் வாழ்நிலைகள் இருப்பதில்லை.
எனவே மும்பைவாழ் தமிழர்களின் அரசியல், பொருளியல் தேவைக்காக உரிமைகளுக்காகக் கருநாடகம் வாழ் தமிழர்கள் போராட இயலாது. அரசியல், பொருளியல் வழிமுறைகளைப் பயிற்றுவிக்க முடியாது.
கருத்துரைப்பது வேறு; வழிநடத்துவது வேறு. யாரும் யாருக்கும் கருத்துரைக்கலாம்; துணையாகவும் இருக்கலாம். ஆனால், வழி நடத்துவதற்கு அந்த அந்தத் தேசிய இனத்தின் வாழ்வியல், அரசியல், பொருளியலோடு ஒன்றிணைந்தால்தான் இயலும்.
அந்த நிலைகள்தாம் இன்றைக்குத் தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் நடந்து கொண்டிருக்கின்றன.
*தமிழீழத் தேசத்தையே தம் தேசமாகக் கருதிய
தமிழ்நாட்டுத் தமிழர்கள்*
தமிழீழ விடுதலைப் போராட்ட எழுச்சிகள் தொடங்கிய காலத்திலிருந்தே தமிழ்நாட்டு உரிமை இயக்கங்களும், மக்களும் தம் சொந்த இனத்தேசத்தின் மக்களாக அவர்களைக் கருதி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்திருக்கின்றனர்.
இயக்கங்கள் மட்டுமன்றி, தமிழ்நாட்டு மக்களே இயல்பாகத் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்குத் துணை நின்றனர்; தோள் கொடுத்தனர்; பலர் தங்கள் வாழ்க்கையையே கொடுத்தனர்.
தங்கள் முழு உழைப்பையும் தமிழ் ஈழத்திற்காகக் கொடுத்தவர்கள் எண்ணற்றவர்கள். தங்களின் பிள்ளைகளை ஈழ ஆதரவுக்காகக் கொடுத்தவர்களும் பலர்.
தங்களின் உழைத்துக் காய்ந்த தலைக்கு எண்ணெய் வைப்பதற்கு இருக்கிறதோ இல்லையோ ஈழத் தமிழர்களின் இன்னல் தீரவேண்டும் என இருந்ததை வாரிக் கொடுத்த குடும்பங்கள் பல.
தமிழீழ ஆதரவுக்காகத் தன் உயிரையே கொடையாகத் தீயிற்குக் கொடுத்த ரவூப் - தொடங்கி எண்ணற்றோர் ஈகியர்களாயினர்.
அத்தகைய ஈக உணர்வு இன்றும் மாறவில்லை.
தன் தமிழ்நாட்டுத் தேசிய இனம் உரிமையோடு இல்லையே என்று உணர்ந்தாலும், முதலில் தமிழீழம் மலரட்டும்; பிறகு நம்மைப் பார்த்துக் கொள்ளலாம் எனும் ஈக அறவுணர்வு கொண்டவர்களாகத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இருந்தனர்; இருந்து வருகின்றனர்.
ஆயினும் அவர்கள் அரசியலாக இன்னொன்றைச் சிந்திக்க மறந்தனர்.
தமிழ்நாட்டின் மீதான அடக்குமுறைகள் அதிகம்
தமிழீழத்தைக் காட்டிலும் தமிழ்நாடு அடிமைத் தேசமாக இருக்கிறது என்பதை அறிய மறந்தனர்.
தமிழ்நாட்டை அடிமைப்படுத்தியிருக்கும் இந்திய அரசக் கட்டமைப்பு என்பது வல்லரசிய அதிகார வெறியோடு மட்டுமன்றி இந்தியப் பார்ப்பனிய அதிகார வெறியோடும் இணைந்தது.
ஆரியப் பார்ப்பனிய வெறியின் உள்ளடக்கம் என்பது ஒரு பக்கம் மேலிருந்து அதிகாரம் செலுத்தி அடக்கி வைத்திருக்கிற பாசிச வன்முறையுடையது மட்டுமன்றி, உள்ளிருந்தே அரித்து அழிக்கிற கரையான் வகை சார்ந்த நடைமுறையுடையதும் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
அத்தகைய கரையான் வகை அழிப்பு வேலைகள் சில ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வந்ததன் விளைவாகத்தான் தமிழினம் திரிந்து தெலுங்கினமாகவும், கன்னட இனமாகவும், மலையாள இனமாகவும் மாறிப் போய்விட்டதை உணர வேண்டும்.
இன்று பெயருக்காகவாவது தமிழ்நாடு ஓர் அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருப்பதால் அந்த வகையில் தமிழைத் திரிக்கிற வேலையையோ, தமிழினத்தை அரிக்கிற வேலையையோ எளிதே அவர்களால் செய்ய முடியவில்லை என்றாலும் தமிழினத்தை அதன் வீறுணர்வைச் சிதைக்கிற, அதன் ஒருங்கிணைவைக் கூறுபடுத்துகிற அனைத்து வேலைகளையும் ஆரியப் பார்ப்பனியம் சாதி, சமயம், மூடநம்பிக்கைகள், பண்பாட்டுச் சிதைவுகள் - எனப் பல முனைகளின்வழி செய்து வருகிறது.
இத்தகைய வகையில் இந்தியப் பார்ப்பனிய ஆரியம் செய்துவந்திருக்கிற, வருகிற கொடுமை நிலைகள் கடந்த காலங்களில் தமிழீழத்தில் இல்லை என்பதை ஆழ்ந்து அறிய முடியும். தமிழீழ மக்களின் மீது வெளிப்படையான அரசியல், பொருளியல் அடக்குமுறைகள் இருந்தன என்றால், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வெளிப்படையான அரசியல், பொருளியல், வாழ்வியல் அடக்குமுறைகளோடு ஆரியத்தால் கீழ் அரித்துச் சிதைக்கிற மறைமுக அடக்குமுறைகளும் அதிகம்.
தமிழ்நாட்டுரிமைப் போராட்டங்களுக்குத் தமிழீழத்தில் ஆதரவு...?
இந்நிலையில், இன்னொன்றையும் உணர வேண்டும். அதாவது தமிழ்நாட்டின் தமிழர்கள் தமிழீழத்திற்கு - அதன் விடுதலை உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததுபோல், தமிழ்நாட்டின் அரசியல் உரிமைப் போராட்டங்களுக்குத் தமிழீழத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்ததில்லை.
ஆதரவு தெரிவிக்காதது மட்டுமன்றி, தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கு என்ன தேவை இருக்கிறது என்கிற கருத்துருக் கொண்டிருந்தவர்களாகவே, கொண்டிருப்பவர்களாகவே தமிழீழத் தமிழர்களும், அவர்களுக்கான பெரும்பான்மை இயக்கங்களும் கருத்துகொண்டு இருந்தன, இருக்கின்றன.
தமிழீழத்திற்கு ஆதரவு தெரிவித்துத் தமிழ்நாட்டில் நடந்த பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போலவோ, ஈகங்களைப் போலவோ, தமிழ்நாட்டின் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவாகத் தமிழீழத்தில் சில போராட்டங்கள் அளவிலாவது நடந்திருக்கின்றனவா - என்று கேட்டுப் பார்த்தால் ஏமாற்றமே தோன்றும்.
ஈழத்தைச் சார்ந்த தலைவர்கள் இந்தியப் பார்ப்பனிய அதிகார வகுப்பின் தலைவர்களோடு இணைவதும், ஆதரவு வேண்டுவதும், ஈழ இந்திய நட்புறவை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டதும், மேற்கொள்வதும் எவ்வளவு பெரிய பிழையானது என்று அவர்கள் சிந்திப்பதில்லை.
தமிழ்நாட்டு உரிமை இயக்கம் எவையும் தமிழ்நாட்டு உரிமைகளுக்காகச் சிங்கள அரசோடு இணைந்தால், ஆதரவு கேட்டால், தமிழ்நாட்டு ஸ்ரீலங்கா நட்புறவுக் கழகம் என அமைத்தால் - அது எவ்வளவு பெரிய பிழையோ? - அதுபோல்தான் அவர்கள் செய்வதும் பெரும்பிழை என்று அவர்கள் உணரவில்லை.
இந்த இடத்தில் இன்னொரு பெரும் அரசியல் பிழையையும் இணைத்து எண்ணிப் பார்ப்பது நல்லது.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் சிலர் இந்திரா காந்தி இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்றும், பாஜகவின் வாஜ்பேய் காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டசும், ஜத்வந் சிங்கும் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிட முனைந்தார்கள் என்பதாகவும் நம்பிக் கொண்டிருந்ததோடு, அவ்வாறான கருத்தைப் பரப்பவும் செய்தார்கள் என்று அறியும்போது, தமிழீழ உரிமைப் போராட்ட ஆதரவு அரசியலிலும், தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட அரசியலிலும் உள்ள அவர்களின் பிழைகளை உணர்ந்து கொள்ள முடியும்.
இந்திய அரசை எதிர்க்கும் நோக்கம் இல்லை!?
தமிழ்நாட்டின் உரிமைப் போராட்டங்களையே ஆதரிக்காத தமிழீழ விடுதலை இயக்கங்கள், இந்திய அதிகார வகுப்பின் அரசு அதிகாரங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த எந்தத் தேசிய இன விடுதலைப் போராட்டங்களையும் ஆதரித்ததில்லை.
இராசீவ் ஆட்சிக்காலத்தில் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (சார்க்) - எனும் அமைப்பைத் தொடங்கி, இந்தியா, பாக்கிசுதான், வங்காளம், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பூட்டான், மாலத்தீவு உள்ளிட்ட அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன போல் பஞ்சாப், நாகலாந்து, மிசோரம், அசாம், மணிப்பூர், காசுமீரம், நேபாளம் - உள்ளிட்ட விடுதலைப் போராட்ட இயக்கங்களோடு தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் இணைய வேண்டி எடுக்கப்பட்ட முயற்சிகளுக்குத் தமிழீழ விடுதலை இயக்கங்கள் ஒப்புக்கொள்ளாமல் போயின. அதற்கு அவர்கள் அப்போது கூறிய காரணம் - இந்திய அரசை எதிர்த்த செயற்பாடுகளில் நாங்கள் பங்கேற்கும் நோக்கங்கொண்டிருக்கவில்லை என்பதே....
சரி. இப்போதைய நிலை என்ன?
அப்படியான கடந்த கால அரசியல் நிலைகளிலிருந்து அப்போக்குகள் இன்றைய சூழலில் என்னவாக உள்ளன என்பதும், எதை நோக்கி நகர்கின்றன என்பதும், இப்போது என்ன வகையில் செயற்படலாம் என்பதும் - ஆய்வுக்குரிய அடிப்படைத் தேவையான செய்திகள்....
இன்றும் நிலைகள் பெரிதாக மாறிவிடவில்லை. முன்பை விட பின்னடைவாகவே இருக்கின்றன.
2009 - முள்ளிவாய்க்கால் பேரழிவையொட்டித் தமிழ்நாட்டில் நடந்த பேரெழுச்சியைப் புரட்சிவயக் கட்சிகள் உள்ளிட்டு எவையுமே முன்னெடுத்துப் புரட்சிவய நிலையில் சரியாக நகர்த்திவிடவில்லை.
அவ்வளவு ஏன் அந்த நேரத்தில் நடந்த பேரெழுச்சி, கட்டுக்கடங்காத மக்கள் எழுச்சியாக மாறிக்கொண்டிருந்த சூழலில் பிரபாகரன் தப்பிவிட்டார். அவர் இறக்கவில்லை; உயிரோடுதான் இருக்கிறார் - என்று ஒரு செய்தியை ஈழ விடுதலைக்கான ஆதரவுச் செயற்பாடுகளுக்கே தாங்கள்தான் எனும் நிலையுடையவர்கள் அறிவித்ததும், அதனால் போராட்ட எழுச்சிகள் மட்டுப்பட்டுப் போனதையும் தமிழ்நாடு அறியும். இன்றுவரைகூட பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் எனும் செய்தியை அவர்களால் உலவவிட முடிகிறது.
இவை ஒருபுறம் இருக்க..
தமிழீழ விடுதலைக்கு, உரிமைப் போராட்டங்களுக்கு யாரெல்லாம் எதிரிகள், எப்படி அடுத்தக் கட்ட நிலைகள்... என்பன பற்றியதான சிந்தனைகளும் செயல்களும் தேங்கி மழுங்கிப் போய்விட்டன. நாடு கடந்த தமிழீழத் தமிழர்கள் அனைவரையும் இணைத்த வாக்கெடுப்பில் தமிழீழத்தை வெல்லலாம் என்று கருதப்பட்டு வருவதோடு சரி. ஐரோப்பா, கனடா, ஆசுத்திரேலியா - என மேலை, கீழை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் எவரும் இனி தமிழீழ நாட்டிற்குத் திரும்பி வந்து வாழும் நோக்கில் இல்லை. அதுபோல் தமிழீழ விடுதலைக்காக இயக்கம் கட்டிப் போராடும் நோக்கிலும் அங்கிருப்போரெல்லாம் இருப்பதாக அறிய இயல முடியவில்லை.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு யார் காரணம் என்றொரு கேள்வி எழுப்பப்படுவதில், - அவற்றுக்கெல்லாம் காரணம் காங்கிரசும் கருணாநிதியும்தான் என்னும் கருத்து பரப்பப்படுகிறது. அதோடு நின்றிடாமல் மேலதிகமாகக் கருணாநிதி ஆட்சி, அன்றைக்கு இருந்தது என்றும், அவர் முழுமையாக அப் பேரழிவைத் தடுத்து நிறுத்தாததற்குக் காரணம் கருணாநிதி பிறப்பு தமிழ்க் குடி பிறப்பில்லை என்பதாக ஒரு புதிய கண்டுபிடிப்பு பரப்பப்பட்டு - அதை அடிப்படையாக வைத்துப் பிறப்பு வழி இன அடையாளத்தைச் சுட்டி அரசியல் அறுவடை செய்யத் தொடங்கியிருக்கின்றன சில கட்சிகளும், இயக்கங்களும்..
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு மட்டுமன்றி, தமிழீழக் கருத்துருவாக்கத்தை, அதற்கான போராட்ட எழுச்சிகளை, இயக்கங்களைப் பல கோணங்களில் நகர்த்தியதில், இறுதியாகத் தமிழீழத் தமிழர்களை அழித்த நிகழ்வுகள் வரை இந்திய வல்லாட்சி ஒரு பெரும் காரணம் என்பதை ஆழ்ந்தோர் அறிய முடியும்.
திம்புப் பேச்சு - எனத் தொடங்கி தமிழீழ விடுதலைக்கான பல இயக்கங்களை ஒன்றுக்கு எதிராக மற்றொன்றைப் பகைமைப்படுத்தியது, மோத விட்டது, சிங்கள அரசோடு முழு இணக்கமாக இருந்து தமிழீழ இயக்கங்களை ஒவ்வொன்றாக அழித்தது, இந்திய அமைதிப்படை என்ற பெயரில் தமிழர் அழிவுப்படையை ஈழத்துக்கு அனுப்பியது, ரா - எனும் உளவு அமைப்பை உருவாக்கிக் கொண்டு தமிழீழ இயக்கங்களையும், தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவுச் செயற்பாடுகளையும் சூழ்ச்சியாக நசுக்கியது. தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்க் (saarc) அமைப்பை உருவாக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டதுடன், எங்கெல்லாம் விடுதலைப் போராட்டங்கள், உரிமைப் போராட்டங்கள் நடைபெறுகின்றனவோ அவற்றையெல்லாம் அனைத்து அரசுகளும் கூட்டாக இணைந்து அழிப்பது - என்றெல்லாம் தொடர்ந்து இந்திய அரசுத் திட்டமிட்டு எதிராகச் செயற்பட்டு வந்தது; வருகிறது.
பஞ்சாப் விடுதலைப் போராட்டத்தை, காசுமீர விடுதலைப் போராட்டத்தை, நாகலாந்து, மிசோரம், அசாம், மணிப்பூர் விடுதலைப் போராட்டங்களை அந்த வகையில்தான் நசுக்கியது.
உலக அளவில் காசுமீரத்தில் குவிக்கப்பட்டுள்ள படைத்துறையின் எண்ணிக்கையும், அழிவும்தான் அதிகம் - என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
ஆக, தேசிய இன உரிமை எழுச்சிகளை வல்லரசுகளும், இந்திய வல்லாட்சி அரசும் எப்படி எல்லாம் அழித்து வருகின்றன என்பதை அறியாமல் அறுப்பவனையே நம்பி ஏமாறும் ஆடுகளாய் இந்திய வல்லாட்சி அரசிடம் அணுக்கப்படுத்திக்கொள்ளும் தமிழ் ஈழ இயக்கங்களின், தலைவர்களின் நிலைகளை என்னவென்று சொல்லுவது?
இன்றைக்குக் காசுமீரத்திலும், இலங்கையிலும் அமைதி திரும்பி வருவதாக அறிவிக்கிறார்கள் இந்திய ஆண்டைகள்.
அறுப்பவனை நம்பி ஏமாறும் ஆடுகள்
முள்ளிவாய்க்கால் பேரழிப்பால் நிலைகுலைந்து போன தமிழீழப் பகுதிகளைச் சீரமைப்பதில் இந்தியா அதிகமாகக் கவனம் செலுத்தி வருவதாகக் கருதுகின்றனர் ஈழத் தமிழ்த் தலைவர்கள்.
அண்ணாமலை உள்ளிட்ட பாஷக, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத் தலைவர்கள் இலங்கைக்குள் ஊடுருவி மேய்ந்து வர அவர்களைக் காவிக் கம்பளம் போட்டு வரவேற்கிறார்கள்.
இந்திய அரசு வீடுகள் கட்டித் தருகிறதாம், தொடர்வண்டிப் பாதைகளைச் சரி செய்து சீரமைக்கிறதாம், அம்பானி அதானிகளும் பிறரும் தொழில் தொடங்க வழி அமைத்துத் தருகிறதாம். தங்களைச் 'சைவர்'களாகக் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பெருமைப் பேசி வந்த ஈழத் தமிழ்ச் சிவனியர்கள் இன்று இந்துகள் என்ற போர்வைக்குள் வந்துவிட்டனராம். அத்தகைய சிறப்பை விசுவ இந்து பரிசத் உருவாக்கிக் கொடுத்து வருகிறதாம்.
தமிழீழத் தலைவர்கள் பலர் இவற்றிலெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்; மகிழ்ச்சி அடைகின்றனர்.
தமிழீழம் என்கிற மிக மிகக் குறைந்த அளவு அதிகாரங்கள் கொண்ட தமிழ்நாடு போல் ஒரு மாநில அரசை இப்போது இல்லாவிட்டாலும் விரைந்து இந்திய அரசு இலங்கையில் உருவாக்கிக் கொடுத்து விட்டால், தலைமுறை தலைமுறையாக இந்தியாவுக்கு அடிமைப்பட்டயம் எழுதிக் கொடுக்க தமிழீழத் தலைவர்கள் அணியமாக இருக்கிறார்கள்.
அந்த நோக்கில்தான் தமிழீழத் தலைவர்களுக்கு இன்றைய அரசியல் வழிகாட்டிகளாக விசுவ இந்து பரிசத்தும், ஆர்.எஸ்.எஸ்.வும் இருக்கின்றன.
எனவே, இந்தியாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் பாஜக வலுப்படுவதை தமிழீழத் தலைவர்கள் நல்லது என்றே கணிக்கிறார்கள்.
காங்கிரசை விட பாஜக நல்லது என்பது அவர்களின் கருத்து. காங்கிரசோடு உறவு கொண்டு திமுக - பாஜகவை பகைக்கிறது... எனவே காங்கிரசும் திமுகவும் அழிந்துவிட்டால் தமிழீழ மாநிலத்திற்கு வழி கிடைத்துவிடலாம் என்பதாகக் கணிக்கிறார்கள்.
இந்தக் கணிப்பின் வழியான அரசியலையே தமிழீழத் தலைவர்களும், தமிழீழத்திற்குத் தாங்கள்தாம் எல்லாமும் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலரும் தமிழ்நாட்டிற்குள்ளும் பரப்புகின்றனர்.
இந்த அரசியலை வலுப்படுத்திக் கொள்வதற்காகவே நச்சுத்தனமான ஓர் அரசியலை மேற்கொள்கின்றனர்.
அவர்களின் அந்த நச்சுத்தன அரசியலைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு இன்னொரு விளக்கத்தையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டின் விடுதலைக்கு அல்லது தன்னாட்சி அதிகாரப் போராட்டத்தை வென்றெடுப்பதற்கு மாறாக அந்த நோக்கங்கள் பின்னடைந்து போகிறபடி திமுக செய்த தவறுகள் பல உண்டு. திமுக மட்டுமன்றி, அந்த நோக்கங்களைப் பேசிவந்த பிற கட்சிகள், இயக்கங்கள், தலைவர்கள் எல்லாமே ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு காலத்தில் தவறிழைத்திருப்பதையும், தடம் மாறிப் போனதையும் விரிவாக ஆய்வு செய்தால் உணரலாம்.
அவ்வாறெல்லாம் செய்த தவறுகளுக்கும், தடம் மாறிப் போனதற்கும் ஆன காரணங்களை ஆய்வு செய்வது மிகமிக முகாமையானது. அப்படியான ஆய்வுகள் இனியேனும் சரியான நிலைகளில் முன்னேறிச் செல்வதற்கான வழியை அது அமைக்கும்.
ஆனால், அத்தகைய ஆய்வைத் தமிழ்நாட்டுக் குமுக, அரசியல், பொருளியல் அடிப்படையிலான இயங்கியல் ஆய்வாகச் செய்தாக வேண்டுமே அல்லாமல், பிறப்புவழி இனப் பார்வையளவில் செய்வது என்பதே அந்த நச்சுத்தன அரசியலாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட நோக்கங்களிலிருந்து திமுக நழுவிவிட்ட இடங்களையும் நிலைகளையும் திறனாயத்தான் வேண்டும். திமுகவின் தலைவர்கள் செய்த அந்த கொள்கைப் பிழைகள், நடைமுறைப் பிழைகள் எல்லாம் அது ஏற்றுக் கொண்ட இந்திய அரசமைப்பின் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்று ஆட்சிக் கட்டிலேறி அனைத்தையும் செய்திடலாம் எனும் நிலை கொண்டிருந்த காரணத்தால் நடந்தே.
இன்றைய இந்திய அரசமைப்பும் அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற வடிவங்களும் முழுக்க முழுக்க முதலாளியத்திற்கும், ஆரியப் பார்ப்பனியத்திற்கும் ஆனதே.
எனவே, அந்தச் சட்டமன்ற, நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து சில சீர்திருத்தங்களைச் செய்யலாமே அல்லாமல் உரிமைகளை மீட்டெடுக்க இயலாது. மாறாக இருந்த உரிமைகளையும் படிப்படியாக இழந்துவிடுகிறபடியே அமைந்தது, அப்படித்தான் அமையும்.
எனவே, இன்றைய முதலாளிய அமைப்பு முறையை மாற்றி, முழுக்க முழுக்கவான மக்களாட்சி முறை கொண்ட புதிய குடியரசமைப்பை நிறுவியாக வேண்டும். அதிகாரங்கள் முழுமையும் பரவலாக்கப்பட வேண்டும். பன்னாட்டு முதலாளியம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். கல்வி பன்னாட்டுச் சுரண்டலதிகாரங்களுக்கான கல்வியாகவோ பார்ப்பனிய வைதீகக் கல்வியாகவோ இல்லாமல் முழுக்க முழுக்க மக்கள் வாழ்வியலுக்கான, பண்பாட்டுக்கான மக்கள் கல்வியாக, மக்களின் தாய்மொழிக் கல்வியாக மட்டுமே இருக்க வேண்டும்.
கனிம வளங்களும், கடல் வளங்களும், காட்டு வளங்களும், வேளாண் செல்வங்களும், உழைப்பின் மீத்தங்களும் இந்த மண்ணின் மக்களுக்கானவையாகவே தீர்மானிக்கப்பட வேண்டும். அவற்றைச் சூறையாட வருகிற பன்னாட்டுக் கொள்ளையர்களை விரட்டியடிக்க வேண்டும்.
- இப்படியாகத் தமிழ்த்தேச மக்களுக்குரிய புதிய மக்களாட்சியை நாம் நிறுவுவதுபோலவே, ஒவ்வொரு மொழி மாநிலங்களும் அவையவற்றுக்குரிய மக்களாட்சியை நிறுவுவதற்குரிய உரிமைவழி மாற்றங்களுக்குப் போராடியாக வேண்டும்.
இவையனைத்தையும் இந்திய அளவில் திட்டமிட்டு ஒருங்கிணைத்து ஒரே போராட்டமாக, ஒரே இந்திய மக்களாட்சிப் புரட்சியாகச் செய்ய முடியாது.
வேறுபட்ட மொழி, வாழ்க்கை, குமுக அமைப்பு, அரசியல், பொருளியல் கொண்ட மொழித் தேசங்கள் ஒவ்வொன்றும் அவை அவற்றுக்குமுரிய திட்டங்களைத் தீட்டிப் போராடியாக வேண்டும். உரிமைகளை மீட்டுப் புதியக் குடியரசமைப்பை உருவாக்க வேண்டும்.
அப் போரட்டங்களின்வழி அம் மொழித் தேசங்கள் தங்களுக்குள் உறவு கொள்ளலாம், புதிய ஒன்றியத்தை உருவாக்கலாம்...
இப்படியான திட்டங்கள் ஏற்ற இறக்கமான தன்மையில் ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப் பெற்று வருகின்றன.
ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்த சரியான கட்சிகள் வளரவில்லை. திமுகவாலும் அடைந்தால் திராவிடநாடு, மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என வெவ்வேறு வடிவங்களில் பேசப்பட்டது. ஆனால் இன்றைய முதலாளிய - பார்ப்பனிய இந்திய அரசக் கட்டமைப்புக்குள் திமுக ஒரு மாநில அரசாகப் போய் அமர்ந்து ஏறத்தாழ அறுபதாண்டுகளாகிவிட்டன. எந்த உரிமைகளையும் புதியதாக மீட்டெடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, இருந்த, இருக்கிற எண்ணற்ற உரிமைகளையும் இழந்துவிட்டதுதான் மிச்சம்.
ஆக, உரிமைகள் மீட்புக்கான வழி வெகு மக்கள் போராட்டமே என்பது உறுதியாகிறது. அப் போராட்டத்தை வழிநடத்திச் செல்ல கட்சியும் இயக்கங்களும் தேவை. முன்னணியாக மக்கள் அணிகளைத் திரட்டி முன்நகர்த்துகிற பெருந்திட்டம் தேவை. அந்தத் திட்டத்தில் சட்டமன்றங்களும், நாடாளுமன்றங்களும் போராட்டக் களங்களாக இருக்கலாமே அல்லாமல் தீர்வுக்கான இடங்களாக இருக்க முடியாது.
இவை ஒருபுறமிருக்க,
கடந்த அறுபதாண்டுகளில் இச் செயற்பாடுகளை முன்னுக்கு நகர்த்தாத பிழைகள் முதலில் புரட்சி இலக்கு நோக்கங் கொண்ட கட்சிகள், இயக்கங்களிடமே இருக்கின்றன.
தி.மு.க.வின் தலைவர்கள் தொடக்கத்தில் இந்த இலக்கைப் பேசினாலும் பிற்காலங்களில் கைநெகிழ்த்துவிட்டு இன்றைய இந்திய அரசமைப்பின் பங்காளிகளாகவே மாறியிருக்கின்றனர். இடையிடையே மாநில உரிமைகளைப் பேசித் தங்கள் கட்சியின் கொள்கை இருப்பைத் தக்க வைத்திருப்பதாகக் காட்டுகின்றனர்.
இந்நிலையில், 2009 - இல் தமிழீழத்தில் நடந்த பேரிழப்பைத் திமுக தடுத்து நிறுத்தவில்லை என்று - புதியதாக வளர்ந்து தமிழ் உரிமை இயக்கங்களும், கட்சிகளும் குறைகூறுகின்றன.
அதற்குக் காரணம் திமுகவின் தலைவர் தமிழரில்லை என்றும், திமுக தமிழ்த்தேசம் பேசவில்லை; திராவிடத் தேசமே பேசுகின்றது என்றும் கூறுகின்றனர்.
அவர் தமிழர் இல்லை என்றதால்தான் தமிழர்க்குரிய ஒரு தேசமான தமிழீழத்திற்காக அவர் போராடவில்லை என்கின்றனர்.
இந்தக் கருத்துகளையே நச்சுக் கருத்து என்றும் அதுவே இருதேச விடுதலைப் போராட்டங்களின் முன்நகர்வுளையும் கெடுக்கின்றன - என்கிறோம்...
இல்லாத திராவிடத் தேசமும் உருவான தமிழ்த் தேசமும்:
முதலில் திராவிடத்தேசம் என்றோ திராவிட நாடு என்றோ எவரும் இப்போது கேட்கவில்லை. அப்படி ஒரு தேசத்தை உருவாக்கவும் முடியாது. அப்படி ஒரு திராவிட நாட்டையோ, திராவிடத் தேசத்தையோ திமுக இப்போது கேட்பதாகவும் யாரும் சொல்லவும் முடியாது. 1963 - க்கு முன்பு அவர்கள் அடைந்தால் திராவிட நாடு இல்லயேல் சுடுகாடு என்றனர். ஆனால் 1963 - இலேயே அக்கருத்தைக் கைவிட்டுவிட்டனர். 1967-இல் இந்தியத் தேர்தலில் பங்கெடுத்துப் படிப்படியாக உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் - என்றனர்.
மற்றபடி - சுமசுக்கிருதம் தான் தேவமொழி. சமசுக்கிருதம் ஆரியர்களின் மொழி ஆரியர்கள் அல்லாத பிறர் பேசுகிற மொழிகள் நீச்ச (இழி) மொழிகள். அவையெல்லாம் திராவிட மொழிகள் என்றன ஆரியக் கருத்தாடல்கள்.
எனவேதான், நாங்கள் ஆரியர்கள் இல்லை திராவிடர்கள் என்கிற கருத்தை அயோத்திதாசப் பண்டிதர் தொடங்கி அனைவரும் அடையாளப் படுத்திப்பதிந்திருக்கின்றனர். ஆக ஆரியத்திற்கு எதிராகத்தான் திராவிடமே அல்லாமல் தமிழரை மட்டுமோ, தெலுங்கரை மட்டுமோ பிற ஆரியல்லாத தமிழியத் தொடர்புடையோர் எவரை மட்டுமோ தனித்துக் குறிப்பிடுவதற்கல்ல.
மேலும் மொழி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு அதாவது
1956- க்கு முன்பு அது நில அடையாளத்தையும் சேர்த்து குறித்திருந்தது. அப்போதைய அரசு சென்னைத் தலைமாநிலம் (மெட்ராஸ் பிரசிடென்சி) என்பதால் அது சென்னைத் தேசமுமாகிவிடாது..., தமிழ்த் தேசமுமாகிவிடாது.. அதையே திராவிட நாடு - என அப்போது சொல்லி வந்தனர்.
ஆக அதன்பிறகு, தமிழ்த் தேசம் என்பது, தமிழ்நாடு ஒரு மாநில அரசாக உரிமை அடையாளங்களின் சொல்லாக உருக்கொண்டதன் பின் சொல்லப்பட்டது. அதற்கு முன்பாகத் தமிழ்த் தேசம் என்பது அரசியல் சொல்லாக எங்கும் பதிவிடப்படவில்லை.
தாய்மொழி தமிழல்லாதார்தாம் தமிழீழப் பின்னடைவுக்குக் காரணமா?
அடுத்து தமிழ்நாட்டில் நீண்டநெடிய காலமாக வாழும், தாய்மொழி தமிழ் அல்லாதார் தமிழ்த் தேசப் போராட்டத்திற்கோ, தமிழீழ ஆதரவுக்கோ ஆகாதவர்களா? அவர்களால்தாம் தமிழ்நாட்டு உரிமைப் போராட்டங்கள் சரிவர நடந்திடவில்லையா? தமிழீழம் வெல்ல முடியவில்லையா?
இப்படியான பார்வையும் நச்சு தனமானதே..
தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டமும், தமிழீழ விடுதலைப் போராட்டமும், சரியான கொள்கைத் திட்டமில்லாத காரணத்தாலும், சரியான நடைமுறை இல்லாத காரணத்தாலும்தான் பின்னடைந்ததே அல்லாமல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டில்லாதார் தலைமையால்தான் பின்னடைந்தது என்பது நொண்டிக் குதிரைகளுக்குச் சறுக்கியது சாக்காகாதா?
அடுத்து, ஒருவர் தாய்மொழி வழித் தமிழரா இல்லையா என்பதிலிருந்துதான் அவர் தமிழ்த் தேசியரா இல்லையா என்று வரையறை செய்ய இயலுமா? - என்பதை விளங்கிக் கொள்ளவும் விளக்கப்படுத்தவும் வேண்டும்.
ஒரு தேசத்திற்கு ஒரு மொழிதான் இருக்க வேண்டும் என்பதும், அந்த மொழி வழி இளந்தினர் மட்டுமே அந்தத் தேசத்தினர் என்பதும் பிழையான அளவீடு.
அப்படி உலகில் ஒரு தேசத்தைக் கூட அளவிட முடியாது. மொழி மட்டுமே ஒருதேசத்தின் அடையாளக் குறியாகிவிடவும் முடியாது. மொழி முதன்மையான கூறுதான். ஆனால் அது மட்டுமே தேசத்தின் அடையாளக் கூறாகிவிட முடியாது.
மொழி, பண்பாடு, அரசியல், பொருளியல், வரலாறு எனப் பல கூறுகள் வழிதாள் தேசமும், அந்தத் தேசிய இனத்தினரும் அடையாளப்பட முடியும். அந்தத் தேசத்தில் அந்தத் தேசத்தின் பொதுமொழியாக, பெரும்பான்மை மொழியாக உள்ளதைத் தாய்மொழியாகக் கொண்டவர் பெரும்பான்மையாக இருப்பதோடு, கடந்த காலங்களில் நடைபெற்ற அரசு, வணிக, போர்கள் காரணங்களால் வந்து குடியேறி, நீண்டகாலமாய் அந்தத் தேசத்தின் உழைப்பு, நுகர்வு, அரசியல், பொருளியல், பண்பாட்டு நிலைகளில் கலந்துவிட்ட சிறுபான்மை மொழியினரும் அந்தத் தேசத்தின் உரிமைப் போராட்டங்களுக்குக் கடமைப்பட்டவர் களாகின்றனர்.
ஒரு பொதுவான மொழி, பண்பாடு, அரசியல், பொருளியல், வரலாற்றியலோடு ஒரு தேசத்தின் உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்து அந்தத் தேசத்திற்காகப் போராடுகிற அனைவரும் அந்தத் தேசிய இனத்திராகவே கருத முடியும், இருக்க முடியும்.
அப்படியாக, அந்தத் தேசிய இனத்தினராக உணர்ந்து போராடுகிற குலத்தினரின் தாய்மொழி, வீட்டு மொழி இன்னது என்று கூறுபிரித்து அவர்களை ஒதுக்குவது தேசிய இனத்தின் ஒற்றுமையைச் சிதைப்பதிலேயே போய் முடியும்.
ஒரு தேச விடுதலைப் போராட்டத்தில் முழுமையாய்த் தங்களை இணைத்துக் கொண்டு பங்கெடுத்துப் போராடுகிற, அல்லது முழுமையாய் ஆதரவு தெரிவித்துப் போராடுகிற அனைவரையும் அந்தத் தேசிய இனத்திராகவே கருத வேண்டுமேயன்றி, அவர்களை அத் தேசத்தினர் இல்லை என்பது பிழையானதும் நச்சுத் தன்மையானதுமேயாகும். அவர் அந்தத் தேசத்தின் மொழியினத்தினராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அந்தத் தேசிய இனத்தினராக இருப்பதை ஏற்க வேண்டும்..
ஆக, இந்தப் புரிதல்களில் இருந்து, இறுதியாகத் தமிழ்நாடு பற்றிய தமிழீழம் பற்றிய செய்திக்கு வருவோம்.
தமிழீழம் விடுதலைக்கு, உரிமைப் போராட்டங்களுக்குத் தமிழ்நாடு தம்மால் இயலும் வரை உறுதியோடு ஆதரவாக இருக்கும், போராடும்..
அதேபோல் தமிழ்நாட்டு விடுதலைக்கும், அதன் உரிமைப் போராட்டங்களுக்கும் தமிழீழம் உறுதியாக ஆதரவாக இருந்து போராட வேண்டும்.
தமிழீழப் பகை அரசான சிங்கள வெறி அரசை எப்படித் தமிழ்நாடு நட்பரசாக ஆதரவு தேட முடியாதோ, அரசியல் வழி இணக்கப்படுத்திக் கொள்ள முடியாதோ அப்படித் தமிழ்நாட்டின் பகை அரசான இந்திய அரசைத் தமிழீழம் நட்பாகவோ, அரசியல் வழி இணைக்கப்படுத்திக் கொள்ளவோ முடியாது.
இவையன்றித், தமிழ்நாட்டுத் தேசியத்தை, தமிழீழத் தேசியத்தைக், கடந்து தமிழை, தமிழினத்தை ஊடுருவிக் கரையான் போல் அரித்துக் கெடுத்து வந்த, கெடுத்து வருகிற ஆரியப் பார்ப்பனிய வைதீக, சமசுக்கிருத, வேத, புராணை, சாத்திர அதிகாரங்கள் எல்லாம் இரு தேசத்திற்குமே பகை என எதிர்க்கப்பட வேண்டும்..
அம்பானி, அதானி உள்ளிட்ட இந்தியப் பெரும் முதலாளியக்கொள்ளையர்களும், பன்னாட்டு முதலாளியக் கொள்கைளும் இரு தேசங்களுக்குமே பகைமைகளே என்று உணரப்படவும் எதிர்க்கப்படவும் வேண்டும்.
அத்தகைய பகைமைகளையே தங்களின் பகைகளாகவும் ஏற்று இந்தியாவிலும், இலங்கையிலும் பிற அண்டை நாடுகளிலும் போராடும் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் யாவும் நட்புக்குரியவையே என்றும் உணர்தல் வேண்டும்.
இப்படியான தெளிவோடான இரு தேசங்களின் செயற்பாடுகளும்... உறவுகளுமே விடுதலைப் போராட்ட வழியில் நெறியில் இரு தேச விடுதலைப் போராட்டங்களையும் முன்னுக்குக் கொண்டு போகும்..
No comments:
Post a Comment