அருள் பட்
ஜூலியன்
புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 3)
கோப்பாய் பெண்கள் முகாமில், ஒருநாள் ஒரு கைதி அம்முகாம் பொறுப்பாளரிடம் போய் மன்றாடினார். பொறுப்பாளர் எழுந்து கைதியை உதைத்ததில் சுவருடன் தலை மோத விழுந்தார்.
ஒரு கைதியின் அநுபவம்
மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த பவளம்மா என்னும் 53 வயதுடைய பெண்ணின் அனுபவத்தை இங்கு தருகின்றோம். பவளம்மா 1990 மார்ச் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்திய சமாதானப் படை வெளியேறிய பின் புலிகள் அப்பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
பவளம்மாவிற்கு மூன்று பிள்ளைகள். அவரது கணவர் 1977ல் இறந்துவிட்டார். பவளம்மா அதைத் தொடர்ந்து 1982-84 வரை அபுதாபிக்குச் சென்று வேலை பார்த்தார். அவர் இல்லாத சமயத்தில் அவரது மூத்த மகன் – க.பொ.த(சாதாரண தரம்) சித்தியடைந்து விட்டு வேலையற்று இருந்தவர்- ஈபிஆர்எல்எவ் இல் இணைந்து கொண்டார். இவர் ஈபிஆர்எல்எவ் இருந்து விரைவில் விலகிக்கொண்டாலும் தொடர்புகளை வைத்திருந்தார். இரண்டாவது மகன் ஈபிஆர்எல்எவ் இல் சேர்ந்து தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தார். கடைசி மகனும் ஈபிஆர்எல்எவ் இல் சேர்ந்து பின்னர் விலகி மெக்கானிக்காக யாழ் நகரில் வேலை பார்த்து, பின்னர் 1990ல் வெளிநாடு போக ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். 1989ல் மூத்த மகன் கொழும்பிற்குச் சென்று வெளிநாடு போக முயற்சிக்கையில் இலங்கை அரச படைகளின் அனுசரணையுடன் புலிகள் அவரைக் கைது செய்து யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர்.
பவளம்மா தனது மெக்கானிக் மகனிடம் செலவுக்குப் பணம் வாங்க யாழ்நகர் சென்ற போது கைது செய்யப்பட்டார். வெளிநாட்டிற்கு செல்லவிருந்த இம்மகனும் கைது செய்யப்பட்டார். பவளம்மாவின் சிறை அநுபவங்களில் முக்கியமான சிலவற்றைக் கீழே தருகின்றோம்.
பவளம்மா, வானில் வந்த பெண் புலிகளால் கைது செய்யப்பட்டார். வானின் சாரதியான ஜயாத்துரை பவளம்மாவுக்கு தெரிந்தவர். பவளம்மா நல்லூர் பெண்கள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கண்கள் கட்டப்பட்ட நிலையில் தரையில் கிடக்க வைக்கப்பட்டார். அங்கிருந்து மட்டுவிலிலுள்ள பிரதான பெண்கள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு தனி அறை ஒன்றினுள் விடப்பட்டு அவரது கண்கட்டு அவிழ்க்கப் பட்டது. 5 பெண் புலிகள் அவர் அங்கு வந்த காரணத்தை கேட்க தொடங்கினர். இதிலிருந்து அவர்களுக்கு பவளம்மா பற்றிய முன்னறிவித்தல் ஏதும் கொடுக்கபடவில்லை என்பது தெரிந்தது. பவளம்மா தான் தனது மகனிடம் வந்த காரணத்தை கூறிய போது மகனுக்கு அங்கிருந்து வெளியேறுவதற்கான தகவலைக் கொடுக்க வந்தாயாவென பெண்புலிகள் வினவினர். பின்னர் அவர் தனியான அறையொன்றினுள் வைத்துப் பூட்டப்பட்டார். இன்னொரு குழுவினர் வந்து விசாரித்தனர். அவரது பணத்தையும் நகையையும் பறிமுதல் செய்தனர். நகைகள் எவ்வாறு கிடைத்தன என பவளம்மாவிடம் அவர்கள் கேட்டபோது அவை தமிழ் மரபின்படி தனது பெற்றோர் தந்த சீதனமென கூறினார். (தமது எதிரிகளின் குடும்பங்கள், கொள்ளையடித்த சொத்துக்களை வைத்திருப்பதாக புலிகளின் பிரச்சாரம் பறைசாற்றுகின்றது.) அதனைத் தொடர்ந்து ஜந்து பெண்புலிகளால் தாக்கப்படுவதிலிருந்து சித்திரவதை தொடங்கியது. கொடுமைக்கார ஈவாவின் தலைமையில் பெண்புலிகள் கைகளில் தடிகளுடன் சித்திரவதையை நள்ளிரவு வரை தொடர்ந்தனர். பவளம்மா பின்னர் விலங்கிடப்பட்டு 25 கைதிகளுள்ள ஓர் அறைக்குள் அடைக்கப்பட்டார்.
அவர் அடைக்கப்பட்ட காலப்பகுதி முழுவதும் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஓரே தன்மை வாய்ந்த மாமூலான கேள்விகள். பவளம்மாவின் விடைகளிலிருந்தே குற்றச்சாட்டுக்கள் புனையப்பட்டன. எவ்விதமான அறிவுசார்ந்த முடிபுகளும் இவ்விசாரணைகளிலிருந்து பகுத்தறிய முடியாதன.
இக்குற்றச் சாட்டுகளின் பொதுவான அம்சங்களாவன: புதல்வர்களுடன் தொடர்பு வைத்திருந்தமை, அவர்கள் தப்புவதற்கு தகவல் கொடுத்தமை, ஆயுதங்கள் மறைத்து வைத்திருக்கும் இடத்தை அறிந்திருப்பது, மூத்த மகன் அலெக்ஸ் இயக்கத்துக்கு நிதிப்பொறுப்பாளராய் இருந்தவரென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு பணம் வைத்தெடுத்துக் கொடுத்தது, ஈபிஆர்எல்எவ் இல் இருந்த மகனுக்கு அசோக் ஓட்டலுக்கு பின்னாலிருந்து சமைத்துக் கொடுத்தது, (முன்னர் ஈபிஆர்எல்எவ் முகாமாயிருந்த இடம்) ஈபிஆர்எல்எவ் இற்கு உணவு கொடுத்தது, இந்திய சமாதானப் படைக்கு உணவு கொடுத்தது, இந்திய சமாதானப் படையினருக்கு குடிபானம் வழங்கியது. இவ்வாறான குற்றச்சாட்டுக்களே தொடர்ந்தன.
மூன்றாம் நாள் பவளம்மாவின் விலங்குகள் அகற்றப்பட்டு பீப்பா ஒன்றிலுள்ள தண்ணீரில் குளிக்குமாறு கட்டளை இடப்பட்டார். பின்னர் சுரங்க அறைக்குள் கொண்டு செல்லப்பட்டு அடிக்கப்பட்டார். வெளியே துப்பாக்கிச் சூடுகள் கேட்டன. விசாரித்தவர்கள் ” நீ தான் அடுத்தது ” எனக்கூறினர். பவளம்மா தான் புலிகள் தொடக்கம் சகல இயக்கங்களுக்கும் உணவு கொடுத்ததாயும் விருப்பமாயின் தன்னைச் சுடலாம் என்றும் கூறினார். ஈவா அஷாந்தியை அழைத்து கைதியிடமிருந்து உண்மையை வரவழைக்குமாறு உத்தரவிட்டார். மீண்டும் பவளம்மாவுக்கு அடி உக்கிரமாக விழத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுரங்க அறைக்குள் கொண்டு வருவதும் அடிப்பதுமாக மூன்று நாளாக இது நீடித்தது.
(தொடரும்
No comments:
Post a Comment