பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 13 August 2025

லண்டன் தேசம் ஜெயபாலனின் நண்பர் கூறும் செய்திகள்

  வெற்றிசெல்வன்       Wednesday, 13 August 2025
முதியோர் கல்வியும்
தேசம்நெற் ஜெயபாலனின் சாதனையும்

ரி.கொன்ஸ்டன்டைன்
 

மல்ட்டிமீடியா – அதிலும் குறிப்பாக பேஸ்புக்-ஐ (FaceBook) சுரண்டினால் அதில் சந்தோஷமான காதலர்களின் பதிவுகள், சந்தோஷமான குடும்ப உலாக்களின் பதிவுகள், பல 'கோடீஸ்வரர்கள்' தொடர்பான பதிவுகள், பலரின் வாழ்நாள் சாதனை வெற்றிப் பதிவுகள், நானும் ஒரு பிரபல நடிகன் என்று சில கிழடுகள், நானும் ரவுடிதான் என்று சில சிறுசுகள் எனத் தினமும் பதிவுகள் குவிந்தவண்ணம் இருக்கும். அவற்றிற்கு 'லைக்' போடவும்,  'வெல்டன்' பதியவும் இன்னுமொரு 'சிஞ்சாக் கூட்டம்' வேறு. பலர் ஒருவருக்கொருவர் மாறி மாறி முதுகு சொறிந்துகொண்டிருப்பர். இந்த பேஸ்புக் உசுப்பேற்றல்களும் சிஞ்சாக்களும் இன்றைய காலகட்டத்தோடு கூடிய புதிய வாழ்க்கை வடிவம். இதிலிருந்து எம்மை விலத்தி வைத்திருப்பதென்பது மிகவும் கடினம் என்பதால் யானும் இணைந்துள்ளேன்.

நற்றமிழ் பேசும் சோஷலிச நல்லுள்ளங்கள் என்னையும் தமது பயணத்தில் இணைத்துக்கொண்டு என்னையும் உசுப்பேத்துவார்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

விசயத்துக்கு வருவோம். எதிலும் என்றும் சாதனை படைக்கும் நம்ம தேசம்நெற் ஜெயபாலன் புதிய Trend ஒன்றினை தமிழ் மக்களின் முகப் புத்தகத்தில் பதியவிட்டுள்ளார். அது 'முதியோர் கல்வியும் அதன் வெற்றியும்' பற்றியதாகும்.

ஜெயபாலனின் முயற்சிக்கும் அவர் பெற்றுக்கொண்டுள்ள பட்டத்திற்கும் முதலில் எனது வாழ்த்துக்கள். கோவில்கள் கொடுக்கும் 'கலாநிதிப் பட்டம்' அதுவல்ல என்பதில் ஒரு சின்ன ஆறுதல். அவருடன் மிக நீண்டகாலமாக நண்பராக, பத்திரிகைத் துறையில் முக்கியமான ஒருவனாக, பல பொது வேலைத் திட்டங்களில் -அதிலும் குறிப்பாக Little Aid  அமைப்பிலும் தோளுக்குத் தோள் நின்று பங்களித்தவன் என்ற முறையில் ஜெயபாலன் செய்யும் 'சம்பவங்களை'யும், சந்தர்ப்பவசமாக்கும்- திரிபுபடுத்தும் சில விடயங்களையிட்டும் அதில் சகலவற்றிலும் நேரடியாகச் சம்பந்தப்பட்டவன் என்ற வகையில் நான் பதிலளித்துத் தான் ஆகவேண்டும்.

ஜெயபாலன் தனது வரலாற்றுச் சாதனைக் கட்டுரையை எனக்கு 'வட்ஸ்அப்பில்' அனுப்பியதால்- சும்மா தினமும் பதினைந்து மணித்தியாலம் ஏழு நாட்களும் வேலை செய்துகொண்டு, அத்துடன் இரவில் இரண்டு பியரும் அடித்துவிட்டு 'கவிண்டு' படுக்கும் என்னை தேவையில்லாமல் உசுப்பேற்றி விட்டார்.

நான் இந்தக் கட்டுரையை பதிவிடுவதன் மூலம் ஜெயபாலன் ஊழல் பேர்வழி அல்லது கூடாத மனம் கொண்டவர் அல்லது ஏமாற்றுப் பேர்வழி என்று கூறவரவில்லை.  இதற்கு மாறாக, ஜெயபாலன் மிகவும் இளகிய மனம் கொண்டவர். நண்பர்களுக்கும் ஏழைகளுக்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்பவர். தன்னிடம் இருக்கும் சிறு பணத்தை கூட தேவைப்பட்டவர்களுக்கு கொடுக்க ஒரு கணமும் தயங்குவதில்லை. தன்னிடம் இல்லாட்டி அடுத்தவரிடம் வாங்கியாவது கொடுத்து விடுவார். ஜெயபாலனின் இச்செயலை நான் பல தடவைகள் லண்டனிலும், ஸ்ரீலங்காவிலும் பார்த்திருக்கிறேன். (Sentimental Idiot)

ஒருமுறை தமிழ் சோசலிசத்தின் தந்தையும் பிரபல EPDP சோம்பேறி சொலிசிட்டர் ரங்கன்; அவர்கள் பணப்பிரச்சினையில் மாட்டிக்கொண்ட வேளை அவரையும் இழுத்துக்கொண்டு என் வீட்டுக்கு ஜெயபாலன் வந்தார். 'சிட்டுவேசன்' என்னவென்றால், ரங்கன் குறிப்பிட்ட சில நாட்களில் அல்லது மணித்தியாலங்களில் 20,000 பவுண்களை சேம்பருக்கு கட்டியாகவேண்டும். இல்லாவிட்டால் அவருடைய வேலைசெய்யும் SRA பதிவு இரத்தாகும் நிலைமை. சாராயம், பூராயத்துடன் தொடர்ந்த எமது சம்பாஷணை பண விடயத்துக்கு வந்தது.  ரங்கன் தனது பண வேண்டுகோளை என்னிடம் போட்டுடைத்தார்.

ஆயிரம் அல்லது இரண்டாயிரம் கேட்கப் போகிறார் என எதிர்பார்த்து  பட்டிங் (Batting) செய்துகொண்டிருந்த எனக்கு இருபதாயிரம் பவுண் எனக் கேட்டதும், உள்ளே போன முழு விஸ்கியும் பாயாசமாக மாறியது. நான் எனது பாணியில் உடனே உறுதிமொழி கொடுக்காமல் 'பார்ப்பம்', 'யோசிப்பம்',  'எனது டீழளள'ஐ கேட்கவேண்டும் என்று அணை கட்டினேன். ரங்கனோ என்னை விட்ட பாடில்லை. 'எனக்கு பணம் இன்று வேண்டும்' என்று ஒரு கல்லைத் தூக்கி தலையில் போட்டார்.

நான் ஜெயபாலனை கண்சாடை செய்து வீட்டின் பின் அறைக்கு அவரை அழைத்துச் சென்று  'இந்தத் தொகையை என்னால் உமது பங்காளிக்கு கொடுக்க முடியாது' என்று கூறினேன்.  ஆனால் ஜெயபாலனோ விட்டபாடில்லை.  ரங்கன் விட்டாலும் ஜெயபாலன் விடுவதாகத் தோன்றவில்லை.

இறுதியில் ஜெயபாலன் ஒரு 'கொம்பிரமைசுக்கு' வந்தார். 'கொன்ஸ் உம்மிடம் இந்தப் பணம் இல்லை என்ற சுத்துமாத்து கதை சொல்ல வேண்டாம். தோழர் ரங்கன்  ஒரு நல்லவர், வல்லவர், பென்ட் எடுப்பதில் வல்லுநர். இதையொரு இன்வெஸ்ட்மென்ட் ஆகச் செய்யும்' என்று எனது பாணியிலேயே ஒரு வாதத்தை எடுத்து விட்டார். அதற்கும் நான் பெரிதாக ஒத்துக்கொள்ளவில்லை. 'அப்ப இப்படிச் செய்யலாம். நான் எனது வீட்டை 'ரீமோட்கேஜ்' செய்து ஐயாயிரம் பவுண்கள் உமக்குத் தருவேன். மிகுதியை நீர் அவருக்குக் கொடுத்து அவருடன் சேர்ந்து சொலிசிட்டர் வியாபாரம் செய்யும்' என்று என்னை 'செடியூஸ்' பண்ணினார். ஜெயபாலன் கூறியதுபோல அந்தத் தொகையை ஜெயபாலன் எனக்குத் தந்ததுடன் ரங்கனின் திருகுதாளங்கள் தொடர்ந்தது வேறு கதை.

தன்னிடம் பணம் இல்லாத போதும் தனது வீட்டை 'ரீமோட்கேஜ்' செய்து அந்தப் பணத்தை தனது நண்பருக்குக் கொடுத்து இழந்ததை நான் நேரடி அனுபவத்தில் கண்டேன். அது மட்டுமில்லாமல் தனது கடையில் ஐந்து சதத்திற்கும் பெறுமதியற்ற தனது சகாக்களை வேலைக்கு அமர்த்தி சகலவற்றையும் அழித்துவிட்டு தான் வியாபாரத்தில் 'சாண் ஏற முழம் சறுக்கியதாக' இப்போது கதையளக்கின்றார்-பணத்தில் ஆசையற்ற இந்த வியாபாரி.

ஜெயபாலன் கெடுகிறேன் பந்தயம் பிடி எனத் தனது வாழ்க்கையை நடத்தியவர். கடை என்றால் வியாபாரம், வியாபாரம் என்றால் பணம். 10 பென்சுக்கு வாங்கியதை 15 பென்சுக்கு விற்பது தான் வியாபாரம்.  வியாபாரத்தின் அடிப்படை தெரியாமல், அடிப்படை ஒழுங்குகள் புரியாமல் ஏன் வியாபாரத்திற்குள் வரவேண்டும்? மற்றவர்களைப் போல் தானும் பணம் உழைத்து முன்னேறுவோம் என வியாபாரத்திற்கு வந்து திறமையில்லாமல் மூக்குடைபட்டு 'Bankruptcy' அடிக்கும் தறுவாயில் சென்ரிமென்ட் வேறு. ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம். மீன்காரி மீன் மணத்தைக் குற்றம் சொன்னதுபோல இதுவும் ஒரு கதை.  

ஒருவன் தனது வாழ்க்கையில் தன்னால் முடிந்ததையே செய்யவேண்டும். அல்லது பெரும் உழைப்பாளியாக இருந்து தனது நோக்கை அடையவேண்டும். 'திருவெம்பாவையில் தண்ணி அடித்த கதைபோல' மூலைக் கடையை ஆரம்பித்துவிட்டு, நண்பர்களையும், தோழர்களையும், உலக மகா புரட்டர்களையும் வேலைக்கு அமர்த்திவிட்டு ஊர் ஊராகச் சென்று மார்க்சியம் கதைத்தால் எந்த வியாபாரம் தான் நிலைத்து நிற்கும்? எந்தக் குடும்பம் தான் நிலைக்கும்?

ஜெயபாலனை முதன் முறையாக நான் ஈஸ்ட்ஹாமில் தமிழர் தகவல் நடுவத்தில் (Tamil Information Centre) தான் சந்தித்தேன். அது 1994ஆம் ஆண்டாக இருக்கவேண்டும். நான் TIC இயக்குநர்களுள் ஒருவராக இருந்த காலம் அது. தமிழ் எழுத்தாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு சந்திப்பில் ஜெயபாலனை முதலில் சந்தித்தேன். அந்த நாட்களில் நான் திரு ஈ.கே.ராஜகோபால் அவர்களுடன் சேர்ந்து  'ஈழநாடு' பத்திரிகையை லண்டனில் ஆரம்பித்து அவரின் 'புலிகள் சார்பான' எழுத்துக்களின் காரணமாக முரண்பட்ட பின்னர் சண்முகலிங்கம் (புதியவன்), வாசு, குட்டி, சிறீ ஆகியோருடன் சேர்ந்துகொண்டு ஈழபூமி, வெளி எனப் பல புலி எதிர்ப்புப் பத்திரிகைகளை வெளியிட்டு கடைக்காரர்களுடனும் முரண்பட்ட காலம் அது. அப்போது பணவசதிகள் எங்களில் ஒருவரிடமும் இல்லை. சும்மா அங்கும் இங்குமாகக் கிடைக்கும் பணத்தைப் போட்டு புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்தை, அதிலும் குறிப்பாக ஐரோப்பாவில் இயங்கும் 'புலி வால்களுக்கு' சவால் விட்டுக்கொண்டிருந்த காலம் அது.

சம காலங்களில் ஜெயபாலன் 'தேசம்' சஞ்சிகையை தொடங்க அதில் எமது நட்பு ஆரம்பித்தது. அப்போது ஜெயபாலன் ஹோம்பேஸ் (Home Base) நிறுவனத்தில் இரவு நேர முகாமையாளராகப் பணியாற்றிய காலம். இரவிரவாக பத்திரிகை விடயங்களை Fax பண்ணுவதிலும் பல நாட்கள் கழிந்தன. பின்னர் 2006ஆம் ஆண்டு ஹோம்பேசிலிருந்து இரவுநேர வேலைகள் நிறுத்தப்பட்டதால் ஜெயபாலன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அந்த ஆண்டு இன்னொரு வியாபார நண்பருடன் வேறாக ஷெப்பர்ட் புஷ் என்ற இடத்தில் Flats  உடன் கூடிய வியாபார ஸ்தாபனம் ஒன்றை 10 வருடக் குத்தகைக்கு எடுத்திருந்தேன். அந்தச் சமயத்தில் ஜெயபாலனுக்கு வேலை இல்லாமல் இருந்த காரணத்தினால் அவர் அதில் பணியாற்ற இணைந்துகொண்டார்.

வியாபாரம் தொடங்கப்பட்ட சில மாதங்களில் அந்த வியாபார நிலையத்தை வாடகைக்கு வழங்கத் தீர்மானித்தேன். அதன் பிரகாரம் பலர் கடையை வாங்கும் நோக்குடன் பார்வையிட வந்தனர். அப்போது அங்கு வேலை செய்துவந்த ஜெயபாலன் தனக்கு அந்தக் கடையை நடத்துவதில் ஆர்வம் உள்ளதை வெளிப்படுத்தினார். ஆனாலும் நாங்கள் கேட்கும் பணத்தை (நாற்பதாயிரம் பவுண்களாக இருக்கவேண்டும்) உடனடியாகச் செலுத்த வசதி இல்லை எனவும் கூடிய சீக்கிரம் தந்துவிடுவதாகவும் கூறினார். அக்கடையை முப்பதாயிரம் பவுண்களுக்கு அவரிடம் வழங்கி எனக்குரிய பணத்தை மாதாந்தம் கடையில் பெறப்படும் வருமானத்தில் இருந்து மூன்று வருடங்களில் தந்து முடித்தார். இந்தக் கடையை நாற்பதாயிரம் பவுண்களுக்கு உடனடியாக விற்றிருக்க முடியும்.

மிகவும் தரமான 'லொக்கேஷனிலிருந்த' ஒரு கடையை தனது சோம்பேறித்தனத்தினாலும், கவனயீனத்தினாலும் கீழ்த்தரமாக நிர்வகித்து நடத்திக்கொண்டிருந்தார். வரிப்பணம், மின்சாரம் எதுவும் ஒழுங்காகக் கட்டுவதில்லை. வாடகையும் இழுபறியாகவே இருந்தது. அதிலும் கடை உடைபட்டது என இடையில் இன்சூரன்ஸ்  கிளெய்ம் வேறு. கடையின் குத்தகை முடிவதற்கு நான்கு மாதங்களுக்கு முன் இவர் வாடகை தருவதையே நிறுத்திக்கொண்டார்.  இதனால் கடையை இழுத்து மூடும் முடிவை நான் மேற்கொண்டேன். தான் வாழும் நாட்டில் ஒரு பொறுப்புள்ள பிரஜையாக, ஊழியராக, முதலாளியாக, தொழிலாளியாக வாழமுடியாத ஒருவர், ஸ்ரீலங்காவுக்குச் சென்று நல்ல பிரஜையாக வாழ்வது எப்படி என்று போதனை வேறு!  'மூஞ்சூறுக்கு தான் போகவே வழி தெரியவில்லையாம்- விளக்குமாறையும் காவிக்கொண்டதாம்'

விலாசமில்லாத ஜெயபாலன்

இவருக்கு எதிராக நான் வழக்குத் தொடுத்து வழக்கில் வெற்றியும் பெற்று அந்தத் தீர்ப்பின் முடிவை கையளிப்பதற்கு இவரின் விலாசம் தேடி நிற்கிறேன். இந்த வழக்கின் தீர்ப்பும் இவரின் மனைவி ஜெயபாலனைக் காணவில்லை என்று கோர்ட்டுக்கு எழுதிய கடிதமும் என் கையில் உள்ளன. இதைவிட கடையில் நடந்த பல தில்லுமுல்லுகளுக்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. இவர் தனது தோழர்களின் அரச உதவித்தொகையில் பெற்ற வீடுகளிலேயே தற்போது மாறி மாறித் தங்கிவருகிறார்.

லிட்டில் எயிட் Little Aid

லிட்டில் எயிட் அமைப்பை  நானும் ஜெயபாலனுமே 2009இல் ஆரம்பித்தோம். எனக்கு இருந்த சில கொழும்பு அரசியல்வாதிகளின் தொடர்பும், ஜெயபாலனின் பத்திரிகையினூடாக இருந்த தொடர்பும் இதன் வெற்றிக்குக் காரணமாக இருந்தன. அப்போது எமது நண்பராக இருந்த டென்மார்க்கைச் சேர்ந்த மதி குமாரத்துரையின் தொடர்பின் மூலம் ஐந்து மில்லியன் பவுன்கள் பெறுமதியான மருந்து வகைகளையும் உபகரணங்களையும் டென்மார்க்கிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு வெற்றிகரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்தோம்.

அதனைத் தொடர்ந்து ஜெயபாலனின் தொடர்பினால் வொல்த்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் கோவில் மற்றும் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு நூற்றுக்கணக்கான போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை – குறிப்பாக செஞ்சோலையில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறார்களை பல வருடங்களாக மன்னாரிலும், ஊர்காவற்றுறையிலும், அம்பேபுஸ்ஸவிலும் வைத்துப் பராமரிக்கக் கூடியதாகவிருந்தது.

போர் முடிவுற்ற காலப்பகுதியில் லிட்டில் எயிட் வழங்கிய பங்களிப்பு வரலாற்றில் குறிப்பிடப்படவேண்டியவை.  சரியான நேரத்தில் சரியான உதவி, சரியான கொடுப்பனவு என்பனவற்றை எம்மால் மேற்கொள்ளமுடிந்தது.

போர்க் காலங்களில் லிட்டில் எயிட் வேலைத்திட்டங்களை உடனடியாக உரிய நேரத்தில் செய்வதென்பது எளிதான காரியமல்ல. போர் முடியும் தறுவாயில் கொழும்பிலிருந்து எந்தவொரு லொறியும் நேரடியாக யாழ்ப்பாணம் போக முடியாது. இடையில் வாகனம் நிறுத்தப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவரப்படும் வாகனத்தில் பொருட்கள் மாற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட வேண்டும். இந்த முட்டுக்கட்டைகளைக் கூட திரு பசில் ராஜபக்ச அவர்களின் ஒத்துழைப்புடன் லிட்டில் எயிட் செய்யக்கூடியதாக இருந்தது.

லிட்டில் எயிட் சார்பாக நான் எங்கும் போகக்கூடிய அனுமதியை திரு பசில் ராஜபக்ஷ அவர்கள் கடிதம் மூலம் வழங்கியிருந்தார். அந்தக் கடிதத்தின் மூலம் எத்தனையோ நல்ல விடயங்களை தடைகளைத் தாண்டி தமிழ் மக்களுக்காகச் செய்யக்கூடியதாக இருந்தது.

முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறி வந்த தமிழர்களின் சோகத்தை, கையறு நிலையில் அவர்கள் சாரை சாரையாக கண்களில் வெறுமையும், விரக்தியும் தாங்கி நடந்து வந்ததை அரச தரப்பினரின் பக்கத்தில் நின்று வேதனையுடன் பார்க்கக்கூடிய சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்திருந்தது. அது எனது மனதை வெகுவாகப் பாதித்த தருணம். இந்த உறவுகளுக்கு ஏதாவது நன்மை செய்தாகவேண்டும் என்று மனம் பதறிய தரணங்கள் அவை. அந்தக் காலத்தில் ஜெயபாலனின் பக்கபலம் இல்லாமல் என்னால் பல விடயங்களை அவர்களுக்குச் செய்திருக்க முடியாது.

2008-2012 வரையிலான காலப்பகுதியில் லிட்டில் எயிட் நிறுவனத்தால் போரினால் பாதிக்கப்பட்டவர்களை, அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகளின் இளம் / குழந்தைப் போராளிகளை பராமரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.

பின்னர் ஹோலண்டிலிருந்து வந்த உதவிகள் நிறுத்தப்பட கல்வி சம்பந்தமாக எங்கள் கவனத்தைத் திருப்பினோம். இதன் பின்னர் 800இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் முதலில் யாழ்ப்பாணத்திலும், பின்னர் கிளிநொச்சியிலும் லிட்டில் எயிட் நிறுவனத்தின் கணனி, ஆங்கில மொழி, தையல் பயிற்சி ஆகிய வகுப்புகளில் பயின்று தேர்ச்சிபெற்றார்கள்.

லிட்டில் எயிட் ஸ்தாபனத்தினால்  மக்களிடம் இருந்து ஒரு சதமேனும் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்கு அறவிடப்படவில்லை. அதில் எமது பயணச்செலவு, நன்கொடைகள் (லஞ்சம்) என்பனவும் இச்செலவுகளில் அடங்கும். நான் வருடத்துக்கு மூன்று தடவையும், ஜெயபாலன் வருடத்துக்கு ஒரு தடவையும் இவ்வாறு எமது தனிப்பட்ட செலவில் இலங்கைப் பயணங்களை மேற்கொண்டிருந்தோம்.

2018இல் லிட்டில் எயிட் ஆட்டம் காணத் தொடங்கியது. எமது லிட்டில் எயிட் பணிகளுக்கான நிதியுதவிகளை மாதாந்தம் வழங்கிவந்தவர்கள், படிப்படியாக அதனை நிறுத்திக்கொண்டனர். ஏறக்குறைய 18 மாதங்களாக எனது சொந்தப் பணத்தில் தான் லிட்டில் எயிட் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு மேலாக லிட்டில் எயிட் ஐந்து வருடங்களாக வெகு பௌத்திரமாக வேலைத்திட்டங்களை நடாத்திக்கொண்டிருந்தது.

கிளிநொச்சியில் லிட்டில் எயிட்டை நிர்வகித்துவந்த திரு பார்த்திபன் வரதராஜன் (தற்போதைய யாழ். மாநகரசபை உறுப்பினர்) உள்ளூர் அரசியலில் தனது கவனத்தை திசை திருப்ப, அவர் லிட்டில் எயிட்டிலிருந்து வெளியேறவேண்டிய நிலை உருவானது. அதன்பின்னர் லிட்டில் எயிட் அமைப்பை சரி செய்கிறேன் பார் என்று 'கோவணம்' கட்டிக்கொண்டு களமிறங்கிய 'தோழர்' ஜெயபாலன் தனது சொந்த வங்குரோத்து அரசியலையும் அங்கு திணிக்க, இடையில் ஆப்பிழுத்த குரங்கு போல அங்குள்ள செலவுகளுக்கு நான் பொறுப்பாளன் ஆனேன்.

இயலாத விடயங்களைச் செய்வேன் என வியாக்கியானம் செய்வதும் அதனை செய்யவென வேறொருவரின் பணத்தில்; திட்டமிடப்படாத முறையில் செலவுசெய்து எட்டாத பழத்தைப் புடுங்க நினைப்பதும் ஜெயபாலனுடன் கூடப்பிறந்த குணம்.

இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு தொடக்கப் பகுதியில் நான் லிட்டில் எயிட் இலிருந்து இராஜினாமா செய்ய ஏனைய அனைத்து அறங்காவலர்களும் (Trustees) விலகிக் கொண்டனர். ஒன்பது வருடங்களுக்கும் மேலாக ஒன்றாகச் செயற்பட்ட ஐந்து டிரஸ்டிகளும் இவ்வாறு விலகிக்கொண்டனர். இதற்குப் பின் வந்து போனவர்களைப் பற்றியே ஜெயபாலன் குறிப்பிடுகிறார்.

ஒரு தரமான கொள்கைப் பிடிப்பாளனாக இருந்திருந்தால் அவர் தனது பெயரில் அல்லது புதியதொரு பெயரில் தனது  சமூகப்பணியை தொடர்ந்திருக்கவேண்டும். ஆனால் முதல் வேலையாக ஜெயபாலன் செய்தது அவரது மகனை  ட்ரஸ்டியில் இணைத்து வைத்ததாகும். 'ஊருக்குத்தான் உபதேசம்- உனக்கல்லடி கண்ணே'

பத்திரிகை தர்மம்

நான் இந்தச் சந்தர்ப்பத்தில்  ஜெயபாலனின் 'உன்னதமான' பத்திரிகைத் தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது.  T.B.C.  வானொலி நிலையம் உடைக்கப்பட்ட சந்தர்ப்பத்தினை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. இந்தக் காலகட்டத்தில் 'தேசம்' பத்திரிகை 'தேசம்நெற்' என்பன கொடிகட்டிப் பறந்த காலம். விடுதலைப் புலிகளின் அராஜகங்களையும் அடாவடித் தனங்களையும் தொடர்ச்சியாக அது எதிர்கொண்டு வந்தது. 'உதயன்' பத்திரிகை, 'தேசம்' சஞ்சிகை என்பன அந்தக் காலகட்டத்தில் வந்துகொண்டிருந்தன அதே காலகட்டத்தில் சக பத்திரிகைகளாக 'வெளி', 'ஈழபூமி' போன்ற பத்திரிகைகளில் எழுதிவந்த புதியவன், சண்முகலிங்கம், வாசு போன்றோர் தேசம், உதயன் போன்ற பத்திரிகைகளிலும் எழுதிவந்ததுடன் தங்களது முழு ஆதரவினையும் வழங்கி வந்தார்கள்.

இந்தப் பின்புலத்தில் T.B.C. ஊடக நிலையத்தின் உடைப்பில் தொடர்பு கொண்டிருந்த ராஜன் என்பவரது தொடர்பு எங்களுக்குக் கிடைத்தது. நானும் ஜெயபாலனும் இரண்டு தடவைகள் ராஜனுடன் நேரடியாக சந்தித்து சாராயம் கொடுத்து பூராயம் கேட்டோம். அந்த இரு சந்திப்புகளிலும் ராஜன், ராகவனுக்கும் T.B.C. உடைப்பிற்கும் எவ்விதமான தொடர்புமில்லை- மாறாக ராகவன் T.B.C.  உடைப்பிற்கு எதிராக நிலைப்பாட்டை எடுக்க தன்னை வற்புறுத்தினார் என்று கூறினார்.

ராஜனின் கூற்று இவ்வாறு அமைந்திருந்த போதிலும், ஜெயபாலன் T.B.C. வானொலி உடைப்பில் ராகவன் நேரடியாகத் தொடர்பு பட்டிருந்தார் என்றே எழுதிவந்தார். இதில் முக்கிய கட்டுரைகளில் ஜெயபாலன் எனது பெயரையும் தன்னுடன் இணைத்தே எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்த நான் 'தேசம்' சஞ்சிகையில் இருந்து விலகிக் கொள்வதாக ஜெயபாலனுக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தேன்.

ஜெயபாலனின் 'பத்திரிகை தர்மத்தைப்'; பற்றி இன்னொரு விடயத்தையும்  நான் குறிப்பிட்டாக வேண்டும்.  அது செப்டெம்பர் 2007இல் ஒரு நாள். கருணா அம்மான் புலிகளை விட்டு விலகி லண்டன் வந்திருந்த காலகட்டம் அது. கருணா ஏதோ ஒரு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாக செய்தி கசிந்துகொண்டிருந்த காலம். அந்த நாட்களில் எனக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த டாக்டர் மோகன் என்பவருக்கும் இடையில் வியாபாரத் தொடர்புகள் இருந்தன. (டாக்டர் மோகன் அவர்கள் அண்மையில் காலமானார்). டாக்டர் மோகனுக்கு எனது அரசியல் ஈடுபாடுகள் பற்றி என்றும் தெரிந்திருக்கவில்லை. அவருக்கும் அரசியலில் எவ்விதமான ஈடுபாடும் இல்லை. இவரை நான் மாதத்திற்கொருமுறை வெம்பிளியில் உள்ள ரெஸ்ட்டோரன்ட் ஒன்றில் சந்திப்பதுண்டு. இப்படியாக ஒரு தடவை நான் அவரைச் சந்தித்த போது தான் கருணா நாட்டைவிட்டு வெளியேற உதவியதாகவும், கருணா அன்றையதினம் ஏர்ள்ஸ் கோர்ட், கென்சிங்டன் பகுதியில் தலைமறைவாக உள்ளதாகவும் என்னிடம் கூறினார். இந்தச் செய்தியை மறுநாள் நான் ஜெயபாலனின் ஊடாக பத்திரிகை அல்லது இன்டர்நெட் ஊடாக பெயர் குறிப்பிடாமல் ஒரு செய்தியாக வெளியிட்டோம். யாரும் கேள்வி கேட்டால் நாங்கள் ஒருவரை ஒருவர் சாட்டிக்கொள்வோம் என்று பேசிக்கொண்டோம்.
ஆனால் ஜெயபாலனிடம்  Preston Road, Harrow  இல் அமைந்திருந்த முன்னாள் 'புலி தாதா' ஒருவர் இதுபற்றி கேட்டபோது வாய்கூசாமல், டாக்டர் மோகன் என்பவர் தான் குறிப்பிட்டதாக ஜெயபாலன் குறிப்பிட்டு காட்டிக்கொடுத்துவிட்டார். டொக்டர் மோகன் அவர்களுக்கு இச்செய்தி சென்றடைந்த நாளிலிருந்து அவர் மரணிக்கும் வரை என்னுடன் அவர் பேசவேயில்லை. ஜெயபாலனின் பத்திரிகைத் தர்மத்திற்கு இது ஒரு முக்கிய சான்று.

இத்தருணத்தில் மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும். ஜெயபாலனுக்கு தெரிந்த ஒரேயொரு முழுநேர அரசியல் போராளி சேனன். 'அவன் நினைத்தால் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவியைப் பெறும் ஆளுமையும் திறமையும் உடையவன்' என்று ஜெயபாலன் கூறும் சேனன் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். தேசம்நெற் டொமெயினை பதிவுசெய்து அதற்கான பணத்தை கடன் அட்டை மூலமாகச் செலுத்தியவர் சேனன். இன்னும் தேசம்நெற் டொமெய்ன் இவரின் பெயரில் தான் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நானும் ஜெயபாலனும் பல தடவைகள் 'ஆடுகதிரை' சோஷலிஸ்ட், 'வெறும்வாய்' மார்க்சிஸ்ட் என்றெல்லாம் இவரை வர்ணித்துள்ளோம். எனக்கும் ஜெயபாலனுக்கும் எதிராக இந்நாட்டிலும் ஸ்ரீலங்காவிலும் பல Defirmation Cases பதிவுசெய்யப்பட்டிருந்த காலம் அது. எங்கள் இருவரினதும் கடைசிநேர Defence  இது தான். 'தேசம் நெற்றிற்கும் ஜெயபாலனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனெனில் அது சேனனின் பெயரிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளது' என்பது தான்.

தனது தாயின் சுகவீனத்திற்காக (இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிராபத்தான நிலையில் தனியார் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில்) லண்டனில் ஒருவரிடம்; ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பெருந்தொகையான பணம் கைமாற்றாக வாங்கி, இன்றுவரை அதனைக் கொடுத்துத் தீர்க்காமல் இன்றும் இழுத்தடித்து வருபவர் ஜெயபாலன். தனது 'யூ.கே. தந்தை' என்று ஜெயபாலன் கூறிக்கொள்ளும் அவர் அந்தப் பெருந்தொகைப் பணத்தை (இருபதாயிரம் பவுண்கள் என்று நினைக்கிறேன்) இலங்கையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தத் தாய்க்கு உதவும் நோக்குடன் ஜெயபாலன் இலங்கையிலிருந்து கேட்டுவிட்டார் என்பதற்காக மறுப்பேதும் சொல்லாமல் உண்டியல் மூலம் பலரின் வாயிலாகவும் தனது பணத்தை கொழும்புக்கு விரைவாக அனுப்பிவைப்பதற்கு அவர் அந்தரித்துத் திரிந்ததை நானும் அறிவேன். அவர் விரைவாகப் பணம் அனுப்பும் முறை பற்றி என்னுடனும் கதைத்திருந்தார். ஜெயபாலன் தனக்குக் கிடைத்திருந்த அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி கடனை உடனடியாக மீளச் செலுத்தி அந்தத் 'தந்தையின்' நல்ல நம்பிக்கையை காப்பாற்றியிருக்க வேண்டும். அதை இன்றுவரை ஜெயபாலன் செய்து முடிக்கவில்லை. இன்று ஜெயபாலன்; வாழ்க்கைத் தத்துவத்தை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். கஷ்டம் எல்லோருக்கும் வருவது தான். நானும் ஒரு தறுவாயில் வேலை இழந்து பெருந்தொகையான பணத்தை (130ஆயிரம் பவுண்கள்) எனது சகோதரரிடம் இருந்து கடனாகப் பெற்றிருந்தேன். அந்தக் கடனை வட்டியுடன் திருப்பிக்கொடுக்கும் வரை இரண்டு வருடங்கள் நான் கடுமையாக உழைத்துச் சேமித்து வந்தேன். வேறு செலவுகளை அதற்காகப் பின்தள்ளிவைத்திருந்தேன். கடனைக் கொடுத்தபின்னர் தான் என்னால் நிம்மதியாக தூங்க முடிந்தது.  

ஜெயபாலனின் மணமுறிவையும் அதன்பின் ஏற்பட்ட பல தனிப்பட்ட பிரச்சினைகளையும் நான் நன்கு அறிவேன். அதில் நான் அவருடன் இணைந்திருந்து அவருக்கு பக்கபலமாக நின்றிருக்கிறேன். 'If you need help, you need to help yourself first' என்ற கூற்றில் நம்பிக்கை கொண்டவன் நான். நான் பலமாக இல்லாவிட்டால் எனது குடும்பத்தை, எனது ஊழியர்களை, எனது சகாக்களை, எனது பொது வேலைத்திட்டங்களை நான் மனத்திடத்துடன் முன்னெடுத்துச் சென்றிருக்க முடியாது. சுவரில்லாமல் சித்திரம் வரைவதேது.

லிட்டில் எயிட் இரவோடு இரவாக மூடப்பட்டது என்றும் அதனைத் தான் காப்பாற்றியதாகவும் ஜெயபாலன் கதை அளக்கிறார். கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்களுக்கு  மேலாக நான் தனிப்பட்ட முறையில் மாதம் 600 பவுண்களும் Think 2 wice  என்ற அமைப்பு பல மாதகாலகாலமாக மாதம் 1000 பவுண்களும் லிட்டில் எயிட் நிறுவனத்திற்கு வழங்கி வந்தோம். 2017/2018ம் ஆண்டுகளில் என்னால் லிட்டில் எயிட் அமைப்பை முழுக் கட்டுப்பாட்டுக்குள் நல்லமுறையில் கொண்டு நடத்த முடியவில்லை. அதன் பின் ஜெயபாலன் முழுமையான பொறுப்பை ஏற்று, திரு சிவசோதியை (தற்பொது காலம் சென்றுவிட்டார்) நியமித்திருந்தார். சிவசோதி ஒரு நல்ல மனிதர். தூய சமூக நோக்கம் கொண்டவர். ஜெயபாலனின் கட்டுக்கோப்பில் லிட்டில் எயிட் ஒழுங்காக சேவை செய்ய முடியவில்லை. அவரிடம் ஆளுமை, நிர்வாகத்திறமை, நேர முகாமைத்துவம் என்று எதுவுமே இல்லை. இதன் காரணத்தினாலேயே Think 2wise  தனது மாதாந்த உதவியை நிறுத்திக்கொண்டது.

இந்த நாட்களிலேயே எனக்கும் ஜெயபாலனுக்கும் இடையில் வியாபார விடயத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டன. எந்தவொரு வியாபார நிறுவனத்தையும் அதற்குரிய வியாபார ஒழுக்கத்தினைப் பேணி நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நியாயமான முறையில் அவற்றை அனுசரித்து நடத்தவேண்டும். சட்டவிரோதமான முறையில் வியாபாரத்தை நடாத்துவது, வரிப்பணத்தைக் கட்டாமல் விடுவது போன்றவை வியாபாரத்தை நீண்ட நோக்கில் அழிவுப்பாதையை நோக்கிக் கொண்டுசெல்லும். ஒருவர் வியாபாரத்தில் உழைத்து அந்த லாபத்தில் பொதுத் திட்டங்களில் செலவிடலாம். பொதுவேலைத் திட்டங்களிலும் உரிய முறையில் செலவிடவேண்டும். அத்திட்டங்களுக்கான நிதி வழங்குவோருடன் நேர்மையாகவும் அவர்கள் வழங்கும் நிதிகளையிட்டு transparancyயுடனும் இயங்கவேண்டும்.

பொதுத்திட்டம் என்று கூறிக்கொண்டு தன் மகனை ட்ரஸ்டியாகப் போட்டுக்கொண்டு ஒரு 'ஈகோ'வுக்காக திட்டத்தை இழுத்துச் செல்வதில் எந்த பிரயோசனமும் இல்லை.

சுருக்கமாகக் கூறினால், ஜெயபாலன் தான் வாழும் நாட்டில் முடிந்தளவு நல்ல பொறுப்புள்ள பிரஜையாக வாழப் பழகிக்கொள்ளவேண்டும். அதைவிட்டுவிட்டு வன்னியில் போய் எப்படி பொறுப்புள்ள பிரஜையாக வாழவேண்டும் என்று அட்வைஸ் பண்ண வெளிக்கிடக் கூடாது.

ஐரோப்பிய நாடுகளில் கோடீஸ்வரனாக இருப்பதோ எக்கவுண்டன்ட் ஆக வேலை செய்வதோ டாக்டராக இருப்பதோ அல்லது ஐம்பது வயதில் பட்டப்படிப்பை முடிப்பதோ பெரிய சாதனையல்ல. ஓரளவு நேர்மையாகவும் கண்ணியமாகவும் பிறரை ஏமாற்றாமல் வாழப் பழகிக் கொள்வதே முதன்மையானது. பிறரை ஏமாற்றுவது தான் வாழ்க்கைத் தோல்வியின் முதற்படி. அதுவும் பணத்திற்காக ஏமாற்றுவது மேலும் கேவலம்.

'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு' (திருக்குறள்)

https://www.facebook.com/541451699/posts/10158047001286700/
logoblog

Thanks for reading லண்டன் தேசம் ஜெயபாலனின் நண்பர் கூறும் செய்திகள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment