ஆவணி 2, 2049 சனி (18.08.2018)
மனிதருள் மாணிக்கம் அடல் பிகாரி வாச்பாய் நேற்று (17.08.2018) மறைந்தார்.
1975 தொடக்கம் நான் அவரை அறிவேன். ஈழத் தமிழர் பால் மாறாத அன்பு கொண்டவராக அறிவேன். வாய்ப் பேச்சு அன்பல்ல, செயல் வடிவ அன்பே வாச்பாய், ஈழத்தமிழர் மீது காட்டிய அன்பு.
ஆகத்து 7, 8, 9, 10 ஆகிய நான்கு நாள்களும் தில்லியில் இருந்தேன். வாச்பாயைச் சந்திக்க விரும்பினேன். வெளியார் சந்திக்கும் நிலையில் அவர் இல்லை என என் வேண்டுகோளை ஏற்கவில்லை என்னுடன் இருந்த பாசக அனபர் அருண் உபாத்தியாயர்.
வாச்பாய் நேற்று மறைந்தார் என்றதும் நெஞ்சம் கனத்தது. நினைவுகளை மீட்டேன்.
முதலாவது சந்திப்பு:
1975 மார்ச் 30 தொடக்கம் ஏப்ரல் 5 வரை கொழும்பில் அனைத்துலக நாடாளுமன்ற ஒன்றிய மாநாடு. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் ஒருவராக வாஜ்பாய் கொழும்புக்கு வந்தார்.
காலிமுக விடுதியில் தங்கியிருந்தார். ஒருநாள் மாலை நானும் நண்பர் பேரின்பநாயகமும் காலிமுக விடுதி சென்றோம். தன் அறைக்கு முன்னே சாய்வு நாற்காலியில் வாஜ்பாய் அமர்ந்திருந்தார்.
இலங்கை இந்து இளைஞர் பேரவை சார்பில் வந்திருக்கிறோம் எனச் சொன்னோம். இருக்கை வருவித்தார். அமரச் சொன்னார்.
இலங்கையில் இந்துக்களின் அல்லல், துன்பம், துயரம் யாவையும் எடுத்துக்கூறினோம். கூர்ந்து கவனித்தார். ஈடுபாட்டுடன் கேட்டார்.
இந்தியாவிலுள்ள இந்துக்களோடு தொடர்பாக இருக்க விரும்புகிறோம் எனச் சொன்னோம். பாராட்டினார்.
அவருக்கு வசதியான நாளில் விருந்துக்கு வருமாறு அழைத்தோம். ஒப்பினார். மேனாள் அமைச்சர் மு. திருச்செல்வம் விருந்தோம்பினார். கொழும்பின் உச்ச வசதி விடுதியில் விருந்து. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்து சமயத் தலைவர்கள் விருந்தில் கலந்து கொண்டோம். செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம்.
நாம் சொன்ன செய்திகள் அவர் மனத்தில் ஊன்றின.
இரண்டாவது சந்திப்பு:
1986 மே 5ஆம் நாள் மதுரையில் தமிழீழ ஆதரவாளர் மாநாடு (TESO). கலைஞர் கருணாநிதி அழைப்பாளர். நெடுமாறன் ஆதரவு அளித்தார்.
அந்த மாநாட்டிற்கு நான் போயிருந்தேன். வாச்பாய் அங்கே வந்திருந்தார். மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். பழைய சந்திப்பை நினைவுகூர்ந்தேன். மகிழ்ச்சியுடன் அவரும் நினைவை மீட்டார்.
இலங்கையில் தமிழர் உரிமையுடன் வாழவேண்டும். தமிழரின் அடிமை நிலை அகல வேண்டும் என வாஜ்பாய் மாநாட்டில் பேசினார்
மூன்றாவது முறையாக:
2000 மே 25, மாலை 0400 மணி. எழும்பூரில் எனதில்லம் விஜய பாரதம் இதழ் ஆசிரியர் திரு சண்முகநாதன் வந்திருந்தார். சில ஆண்டுகளாக அவருடன் பழகி வந்துள்ளேன்.
இந்தியப் பிரதமர் அலுவலகத்தாரும் நீதி அமைச்சர் சனா கிருட்டிணமூர்த்தியும் சேர்ந்து என்னைத் தில்லிக்கு அழைப்பதாகக் கூறினார். அப்பொழுது இந்தியப் பிரதமர் வாச்பாய்.
ஏன் என்று கேட்டேன். காரணம் சொல்லவில்லை. பயணத்துக்கு ஒப்புக் கொண்டேன். அரசியல் தொடர்பாக எந்த நடவடிக்கையிலும் நான் தனியனாக ஈடுபடுவதில்லை. கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் இருவரிடமும் செய்தி கூறினேன்.
2000 மே 27ஆம் நாள் மாலை வானூர்தியில் தில்லி சென்றேன். கரோல் பூங்காவில் விடுதியில் தங்கினேன். 28ஆம் நாள் காலை பாசக அலுவலகம் சென்றேன். சனா கிருட்டிணமூர்த்தி வரவேற்றார்.
பிரதமரின் சிறப்புத் தூதர் வன்னிக்கு நேரே சென்று பிரபாகரனைச் சந்திக்க ஒழுங்கு செய்து தருவீர்களா? அவரின் பேச்சின் சுருக்கம் இந்த வினா.
பிரதமர் வாச்பாய் அக்காலத்தில் தேராதூனுக்குக் கோடை விடுப்புக்குச் சென்றிருந்தார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரேச மிசுரா இங்குளார். அவரும் உங்களுடன் பேசுவார் என்றார் சனா.
மிசுராவும் என்னிடம் பேசினார்.
பிரபாகரன் வெளிப்படையாக உலவுவதில்லை. கரந்துறைகிறார். இலண்டனில் அண்டன் பாலசிங்கத்தைச் சந்திக்கலாமே, என்றேன்.
ஈழத் தமிழருக்கு இந்தியா என்ன செய்யவேண்டும் என்பதைப் பிரபாகரன் வாயால் கேட்க (We want to hear from the horse’s mouth.) நேரில் செல்லவேண்டும் என்றனர் இருவரும். வன்னிக்குப் போகும் பொறுப்பை எங்களிடம் விட்டுவிடுங்கள் என்றனர் இருவரும். மிகக் கமுக்கமாக வைத்திருங்கள். இச்செய்தி எவருக்கும் கசிந்துவிடக் கூடாது என்றனர்.
மனத்தில் சுமை. நடக்கிற ஒன்றா? மாலையே சென்னை மீண்டேன். கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் இருவரிடமும் பேசினேன். அவர்கள் வியந்து என்னை வாழ்த்தினர்.
நான் பாரிசில் இருந்த அன்பர் வழி முயன்றேன். கவிஞர் தன் தொடர்பு வழி முயன்றார். நான்கு நாள்களாயின. விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கினால் சந்திப்புச் சாத்தியம் என்பதே வன்னியில் இருந்த வந்த விடை.
நாங்கள் மூவரும் ஒத்த கருத்துடையவரானோம். இந்த அணுகு முறை ஈழத் தமிழருக்கு நன்மை பயக்காது. சந்திக்க உடன்படுக. தமிழர் தரப்பில் உடன் பட்டாலும் சிங்களர் தரப்பில் உடன்படார். அமைதிக்கு நாங்கள் தாயாரானவர் என்ற நிலைப்பாடு உறுதியாகும். இவ்வாறாக வன்னிக்குச் செய்தி அனுப்பினோம்.
2000 யூன் 5ஆம் நாள் வன்னியிலிருந்து செய்தி வந்தது. சந்திப்புக்குத் தயார். வரச் சொல்க.
பிரேசர் மிசுராவுடன் பேசினேன். நல்ல செய்தி. இந்தியப் பிரதமரின் நேரடித் தூதரை நீங்கள் வன்னிக்கு அனுப்பலாம் என்றேன்.
ஆகா.. மிக்க மகிழ்ச்சி. அப்படியே மாறாமல் வைத்திருங்கள் (Freeze it) என என்னிடம் நெகிழ்ந்தார் மிசுரா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி. வேறு எவருக்கும் செய்தி தெரியாதல்லவா என்றார் சனா கிருட்டிணமூர்த்தி.
2000 யூன் 10. கொழும்பில் இந்திய வெளிநாட்டமைச்சர் யசுவந்தர் சிங்கர். திடீர்ப் பயணம் என ஊடகங்கள் எழுதின. நானும் கவிஞரும் பழ. நெடுமாறனும் அச்சிதழில் வந்த செய்தி படித்தே தெரிந்து கொண்டோம்.
2000 யூன் 15ஆம் நாள். இரவு 1000 மணி. சென்னை மேற்கு மாம்பலம், சனா கிருட்டிணமூர்த்தியாரின் இல்லம். என்னிடம் சொல்கிறார்.
பிரபாகரன் எங்கள் முயற்சிக்கு ஒத்துழைத்தார். சந்திரிகாவிடம் யசுவந்தர் சிங்கர் பேசினார். சந்திரிகா இந்த முயற்சியை விரும்பவில்லை. எனவே இந்த முயற்சியைக் கைவிடுகிறோம். பிரபாகரனிடம் நன்றி தெரிவியுங்கள்.
ஈழத் தமிழர் மீது பிரதமர் வாச்பாய் கொண்டிருந்த அளவற்ற அன்பால் இந்த முயற்சி. வாச்பாயும் நாங்களும் கலந்து பேசினோம். உங்கள் வழி முயல்வது எனத் தீர்மானித்தோம். உங்களுக்கு நன்றி.
மிசுரா தொலைப்பேசியில் அழைத்தார். உங்கள் முயற்சிக்கு நன்றி. நாங்கள் தொடர்பில் இருப்போம். நீங்கள் எழுதிய Colombo’s Diplomatic Artistry நூல் படித்தேன். பிரதமரிடமும் காட்டினேன். மிகக் துல்லியமாக, தெளிவாகச் செய்திகள் அதில் உள. தொடர்ந்து எழுதுங்கள் என்றார்.
ஈழத் தமிழர் நலம் பேணிய அடல் பிகாரி வாச்பாய் என்ற மாமனிதர் மறைவால் ஈழத் தமிழர் அனைவரும் வருந்துகிறார்கள். இந்திய வரலாற்று ஏடுகளிலும் ஈழத் தமிழர் வரலாற்று ஏடுகளிலும் அவர் பெயர் என்றென்றும் மறையாது.
No comments:
Post a Comment