பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 27 October 2023

Jagan padmanathan பதிவு 11.06.2018

  வெற்றிசெல்வன்       Friday, 27 October 2023
சில உண்மைகளை மறைப்பது நன்றன்று..

விசுவமடுவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிக்கையில் ரெட்பானா சந்திக்கு முன்னர் வீதியின் இடப்புறம் (குமாரசுவாமிபுரம் என்று நினைக்கிறேன்) பெரிய சீமெந்திலான அறிவிப்பு பலகையில் - சிவில் பாதுகாப்பு திணைக்களம் - என்று மும்மொழிகளிலும் எழுதி அழகாக பராமரிக்கப்பட்ட கல்லை காணலாம்.

வள்ளிபுனத்தை கடந்து நடனமிட்டான் பிள்ளையார் கோயிலை கடந்ததும் வீதியின் வலப்புறம் இதேபோலொரு அறிவிப்புக்கல்லை காணலாம்.
வன்னியில் CSD என்று சுருக்கி அழைக்கப்படும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பண்ணைகள் இந்த அறிவிப்பு கற்கள் காணப்படும் இடத்திலிருந்து உள்ளே அமைந்திருக்கின்றன.

இந்த பண்ணைகள் அமைந்திருக்கின்ற பெரிய நிலப்பரப்புகள் முன்னர் பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் முகாம்கள் காணப்பட்ட இடங்களே.
வன்னியில் இன்னமும் வெவ்வேறு இடங்களில் இந்த சி.எஸ்.ரி பண்ணைகள் இயங்குகின்றன. இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிதியொதுக்கீடு பெறுகின்ற திணைக்களம் ஒன்றினால் நிர்வகிக்கப்படுகின்ற உற்பத்தி பண்ணைகள்.

இந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள் இராணுவ அதிகாரிகள். அங்கு ஒப்பந்த அடிப்படையில் - நிரந்தரமாகவும் - தற்காலிகமாகவும் பணியாற்றுகின்ற பலர் அந்தந்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளும் - அவர்களின் குடும்பத்தினரும்.
அவர்களுக்கென்று தனியான சீருடை உண்டு.

இளமண்ணிற வர்ணத்தில் இலங்கை இராணுவ சீருடை அமைப்பில் அந்த சீருடையும் தொப்பியும் இருக்கும். சாதாரண பணியாளர்களுக்கு கறுப்பு மேலாடையும் - கறுப்பு ரக்-ஷூட், சப்பாத்து, தொப்பி, ஆகியனவற்றோடு பெண்பணியாளர்கள் கொண்டையிடுதல் - ஆண்கள் இராணுவ முறையில் சிகையலங்காரம் உள்ளிட்ட சகல கட்டமைப்புக்களும் ஒரு இராணுவ பிரிவைப்போன்றே இருக்கும்.

முல்லைத்தீவு கடற்கரை சாலையில் கொண்டாடப்படுகிற சுதந்திர தின அணிவகுப்புக்கு, சி.எஸ்.ரி அணிகளும் வரும். இரண்டுவகையான சீருடைகளிலும் வருவார்கள்.

சி.எஸ்.ரி அதாவது சிவில் பாதுகாப்பு திணைக்களம், முன்பள்ளிகளை இயக்குகின்றது. 
அந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தனியான சீருடைச்சேலை உண்டு.

சி.எஸ்.ரி முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் - கல்விவலய முன்பள்ளி இணைப்பாளர்களுக்கு அவ்வளவாக ஒத்துழைப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். 
அவர்களின் லீவுகளை கூட சி.எஸ்.ரி பணிப்பாளரிடமே விண்ணப்பித்து பெறுகின்றார்கள். 
வலயமட்ட நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பதில்லை. 
முக்கியமாக மாகாண கல்வித்திணைக்களத்தின் கல்விநிரலை தங்களது முன்பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதில்லை உட்பட இன்னமும் சொல்லமுடியாத நிறைய குற்றச்சாட்டுக்களை அவ்வப்போது கடக்க நேரிட்டிருக்கிறது.

கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களின் கல்விவலயங்கள் இந்த சி.எஸ்.ரி முன்பள்ளி ஆசிரியர்களை கட்டுப்படுத்த தனியான பொறிமுறை எதையும் வகுத்ததில்லை. 
காரணம் - சாதாரண மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற முன்பள்ளி ஆசிரியர் ஒருவரின் சம்பளத்தை போன்று சி.எஸ்.ரி ஆசிரியர்களின் சம்பளம் மூன்று மடங்கு! 
அவர்களின் குடும்ப பொருளாதாரம் சார்ந்த விடயம் இது.

தீர்மானம் நிறைவேற்றிய மாகாணசபைக்கும், பதவியிலிருந்த மற்றும் பதவியிலிருக்கும் அமைச்சர்களுக்கும் இந்த வேறுபாடும் - முரண்பாடுகளும் நன்கே தெரியும். ஆனாலும், அவர்களை குறுக்கிட மனமொப்புவதில்லை.

சி.எஸ்.ரி - இந்த மக்களின் சமூக பொருளாதார நிலையில் வெவ்வேறு மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது. பாதகமான பக்கங்களையும்...
இந்த பண்ணைகளை அண்மித்து வாழுகின்ற குழந்தைகள் சாதாரணமாக சொல்லுவார்கள் தங்களது பெற்றோர் சி.எஸ்.ரி என்பதை. சில குழந்தைகள் பாம்வேலை என்று பதிலளிப்பார்கள்.

நிறைவாக உழைக்கிறார்கள். அவர்களது உழைப்பை அவர்களது சம்பாத்தியம் சமப்படுத்துகிறதா என்பதை சொல்லமுடியவில்லை ஆயினும் இந்த சி.எஸ்.ரி பணியாளர்களின் சராசரி மாதச்சம்பளம் இலங்கை ரூபாக்களில் 25000 முதல் 30000 வரை அவர்களின் பணிகளை பொறுத்து வேறுபடுகிறது.

புதுக்குடியிருப்பு துணிக்கடையொன்றில் மாதம் 8000 ரூபாவுக்கு நாள்முழுக்க கால்கடுக்க நிற்கும் சகோதரிகளை எனக்குத்தெரியும். 
யாழ்ப்பாணத்தின் பிரபல தினசரி பத்திரிகை முதலிரு வருடங்களுக்கும் 10000 ரூபாவுக்கு பணியமர்த்தும் யுவதிகள், சம்பள உயர்வு கேட்க தொடங்கியதும் அவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை பணியமர்த்தும் கைங்கரியத்தை இன்றளவும் கம்பெனி கொள்கையாக வைத்திருப்பது இரகசியமில்லை.??

அப்படியிருக்க, இந்த 25000 அல்லது 30000 வன்னியை பொறுத்தவரையில் வரமென்றால் மிகையில்லை.

அம்மாவுக்கு இருபத்தைந்து வயது. 
மூத்தமகன் ஐந்தாம்வகுப்பும் அடுத்தடுத்த தங்கைகள் இரண்டு வயதிடைவெளிகளிலும் இருக்க. அப்பா இன்னமும் தடுப்பிலிருந்து திரும்பாத குடும்பத்தில். 
வேறொரு ஆணுடன் குடும்பம் நடாத்தும் அல்லது ஓடிப்போய்விட்ட தாய்க்கு பதிலாக அம்மம்மா அல்லது அப்பம்மாவுடன் ரிப்போட் வாங்க பள்ளிக்கு வருகிற பிள்ளைகளுக்கு அந்த இராணுவ அதிகாரி தாயாக - தந்தையாக ஏன் கடவுளாக கூட தெரிந்தால் உங்களுக்கென்னடா??

அவர்களையும் - இராணுவப்புலனாய்வாளர்களையும் இணைத்து பலகதைகள் - பலப்பல கதைகள் உண்டுதான். 
இருக்கட்டுமே!

அவர்களின் குடும்பவிழாக்களை கூட சொந்தங்கள் நடத்துவதை பங்குபற்றுவதை விட சி.எஸ்.ரி பணியாளர்களும் இராணுவத்தினரும் பங்குபெறுவது தான் அதிகம் - அதுஉண்மையும் தான்.

சொந்தமாக நிலம் இல்லாமல், உழைக்கவென்று குடியமர்ந்த மக்கள் தான் இந்த எல்லைக்கிராமங்களை சேர்ந்தவர்கள். தோட்டக்காட்டார் - எஸ்டேட் ஆக்கள் போன்ற உங்களது கேலிகளை விடவா பெரிய கேவலம் இராணுவத்தோடு கொண்டாடுவது??

புனர்வாழ்வின் பின்னர் சகமனிதர்களாக மதிக்க கூட தயக்கம் காட்டுகின்ற எளிய தமிழ்ப்புத்தியின் இடைவெளியில் தான் சிங்கள இராணுவம் புகுந்து அவர்களையும் குடும்பங்களையும் போசிக்கின்றது.

அதிகார கட்டமைப்புக்களால் அவர்களது சக இனத்தவர்கள் செய்யமுடியாததை அவர்களின் நேற்றைய எதிரி சாத்தியமாக்கி சிறப்பாக செய்கிறான். 
அவனுக்காக உழைக்கிறார்கள் - அவனிடமிருந்து நியாயமான கூலியை பெற்று ஆகக்குறைந்த அடிப்படை வாழ்க்கையை வாழ்கின்றார்கள். அவ்வளவுதான்??

பாராளுமன்றம் - மாகாணசபை - உள்ளுராட்சி - நிதியம் - பேரவை - ஒன்றியம் - முன்னணி - கூட்டணி - கூட்டமைப்பு - கழகம் - அமைப்பு ஆகிய சகல “வம்பில பிறந்த” சொற்களை விடவும் அவர்கள் “சி.எஸ்.ரி” என்கிற இராணுவ திணைக்களத்தை நேசிக்கின்றார்கள் என்றால், முகத்தில் கரியைப் பூசிக்கொள்ள வேண்டியது நீங்களில்லையா??

இந்த தேசத்தின் விடுதலை என்ற இலட்சியத்தை எந்தவித கேள்வியும் சந்தேகமும் இல்லாமல் முழுமனதோடு நம்பியவர்கள் அவர்களும் தான். 
அவர்கள் ஆயுதம் ஏந்தியபோது இருந்த அதே வெண்மனம் தான், இன்றைக்கும் குடும்பமும் பிள்ளைகளுமாவது நன்றாக வாழட்டும் என்ற இலட்சியத்திலும் மிளிர்ந்துகொண்டிருக்கின்றது.

அவர்களை நோக்கி கல்லென்ன - ஒரு சொல் கூட எறிய எங்களில் எவருக்குமே தகுதியில்லை

நன்றி Jehan padmanathan

logoblog

Thanks for reading Jagan padmanathan பதிவு 11.06.2018

Previous
« Prev Post

No comments:

Post a Comment