சினிமா இயக்குனரும் , நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் அவர்களை பற்றி இன்றைய காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் குறிப்பாக வெளிநாட்டில் வசிப்பவர்கள் மிக அதிகமாக ஆதரிக்கிறார்கள். பணரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இதற்கு முக்கிய காரணம். சீமான் அவர்கள் தொடர்ந்து இலங்கை தமிழர்களையும் குறிப்பாக தேசிய தலைவர் அவர்களையும் விடுதலைப்புலி அமைப்பைப் பற்றியும் தொடர்ந்து பேசிப் பேசி வருவது தான் காரணம் என்று நினைக்கிறேன்.
2009க்கு முதல் ஒரு சில வருடங்களுக்கு முன்பு இருந்து நான் சென்னையில் வெளியூர்களில் நடக்கும் இலங்கை தமிழர் ஆதரவு கூட்டங்களில் போராட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறேன். தமிழ்நாட்டில் தீவிரமாக இலங்கை ஆதரவு பொதுக்கூட்டங்களை நடத்தியவர்கள் வைகோ அவர்கள் நெடுமாறன் ஐயா அவர்கள் மற்றும் பெரியார் திராவிட கழகம், தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி ஐயா மணியரசன் அவர்கள், விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், மற்றும் தமிழக மக்கள் முன்னணிபொழிலன் அமைப்புகள் போன்றவர்கள் சுயமாக தமிழ்நாடு முழுக்க பிரச்சாரக் கூட்டங்கள் பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்தினார்கள்.
கூட்டங்கள் நடக்கும் போது சீமான் அவர்கள் ஓரத்தில் நின்று கொண்டு கூட்டம் நடத்துபவர்களிடம் தானும் பேச போவதாக கேட்டு பேசுவார். இவர் சினிமா துறையில் இருப்பதால் எல்லோரும் இவரையும் மேடையில் அமர்த்தி பேச சொல்வார்கள். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கூட்டங்கள் பிரச்சாரங்கள் மிகவும் அடக்கி வாசிப்பார்கள். இலங்கை அரசை கூட பெரிய அளவில் கண்டனம் தெரிவிக்காமல் எல்லோரும் பேசுவார்கள். காரணம் தடா போடா வழக்குகள் பயம்.
2006 கலைஞர் ஆட்சியில் தினமும் காலை மாலை தெருவுக்கு தெரு கண்டனக் கூட்டங்கள் பிரச்சாரங்கள் காரணம் கலைஞர் ஆட்சியில் வழக்கு பற்றிய பயம் குறைவு. அதேநேரம் இவர்கள் போடும் கூட்டங்கள் தமிழ்நாடு அரசு இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு அதாவது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தான். ஆனால் கூட்டத்தில் அவர்கள் பேசும்போது முடிந்த அளவு கலைஞர்,கலைஞர் ஆட்சியையும் மிக மோசமாக தாக்குவதுதான். இடையில் மத்திய அரசாங்கத்தையும் பேச்சில் தாக்குவார்கள். அதோடு இக்கூட்டங்களில் பேசும் சீமான் தியாகு போன்றவர்கள் ஒரு படி மேலே போய் தமிழீழம் கிடைத்தவுடன் அடுத்து இந்தியாவில் இருந்து தனி தமிழ்நாடு பிரியும் போராட்டம் தொடங்கும் என மிகவும் உணர்ச்சிகரமாக பேசுவார்கள் இவர்களின் இந்த பேச்சுக்கு பெரும் கைதட்டலும் கிடைக்கும். அதோடு விடுவார்களா இந்தியாவின் காஷ்மீர் பிரிய வேண்டும் வடகிழக்கு மாநிலங்கள்பிரிய வேண்டும் என்று பேசிவிட்டு கடைசியில் மத்திய மாநில அரசுகள் விடுதலைப் புலிகளுக்கு உதவி புரிந்து தமிழ் ஈழம் பெற உதவி புரிய வேண்டும் என்று முடிப்பார்கள் இவர்கள் பேசுவது எங்களுக்கு ஆதரவாக தோன்றினாலும் உண்மையில் அது எங்களுக்கு எதிரான விளைவுகளைத் தான் கொடுத்தது
சீமான் தான் பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதாகவும் இடதுசாரி கொள்கை உடையவர் ஆகவும் காட்டிக் கொள்வார். அதோடு விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் போராளி சேகுவாராவுக்கு இணையாக வைத்து தான் பேசுவார். அவர் போடும் கருப்பு பனியன்களில் ஒரு பக்கம் பிரபாகரன் படமும் மறுபக்கம் சேகுவாரா படமும் தான் இருக்கும்.
கொளத்தூர் மணியின் ஏற்பாட்டில் இலங்கை போய் விடுதலைப் புலிகளை சந்தித்து வந்த பின் கூட்டங்களில் அவரின் பேச்சு தான் மட்டும் தான் விடுதலைப்புலி இயக்கத்துக்கு நெருக்கம் என்பது போல் தான் இருக்கும். இலங்கை ராணுவம் மன்னார் மாவட்டத்தைபிடித்து, கிளிநொச்சியை நெருங்கும் சமயம் நடந்த கூட்டங்களில் சீமான் பேசும் போது தனக்கு தான்எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு கிளிநொச்சியை நெருங்கும் இலங்கை ராணுவத்துக்கு மிகப்பெரிய அழிவும் சமாதியும் கட்டப்படும் என்றும் தேசியத் தலைவர் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இலங்கை ராணுவம் ஒரு மயிரளவு இடத்தைக் கூட பிடிக்க விடாமல் சகல ஏற்பாடுகளும் செய்துள்ளார் என்றும் கிளிநொச்சியில் இளைஞர் ராணுவம் அழிக்கப்பட்ட பின் தமிழீழம் மலரும் என்றும் பேசுவார். எல்லா கூட்டங்களையும் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.
2009 போர் முடிவின் பின் அவரின் பேச்சுக்களில் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மட்டும் கட்சி தொடங்கி உணர்ச்சிகரமாக பேசி வந்தார். இலங்கைத் தமிழர்களுக்காக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஆரம்ப காலங்களில் இருந்து பிரதிபலன் பாராமல் உதவி செய்த பல தலைவர்களை வைகோ நெடுமாறன் போன்றவர்களை பற்றி தரக்குறைவாக பேசத் தொடங்கினார். பெரியார் கொள்கைகளையும் கைவிட்டு பெரியாரையும் பெரியார் அமைப்பு நடத்தியவர்களையும் குறை சொல்லி கூட்டங்களில் பேசத் தொடங்கினார். கூட்டங்களில் தான் இலங்கை அகதி பெண்ணைய இல்லை இலங்கை தமிழ் பெண்ணைய தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பகிரங்கமாக அறிவித்தார். எம்ஜிஆர் போல் மலையாள வம்சாவளியான சீமான் இருப்பதாக அப்போது பலரும் பேசிக் கொண்டார்கள்.
சீமான் தொடர்ந்து தான் தமிழர் பரம்பரை போலவும் தமிழ் நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என்று உணர்ச்சிகரமாக பேசிப் பேசி இளைஞர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள தொடங்கினார்.
சீமானின் பேச்சு போன்றவற்றை நம்பிய வெளிநாட்டில் இருக்கும் இலங்கை தமிழர்கள் தங்களுக்கு புதிய தேசிய தலைவர் கிடைத்துவிட்டார் என்று நம்பத் தொடங்கி பெருமளவு பணத்தை வாரி கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். சீமான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்தால் இலங்கையில் தமிழீழம் கிடைத்து விடும் என்று கூட நம்பத் தொடங்கி விட்டார்கள் வெளிநாட்டில் இலங்கை தமிழர்கள்.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல தங்களுக்கு தேவையான முதலமைச்சரை ஏடிஎம்கே ,டிஎம்கே யிலிருந்து தான் தெரிவு செய்வார்கள். சீமானுக்கு வசதி வாய்ப்புகள் கூட கூட இலங்கை தமிழ் பெண்ணை மணக்கும் வீராவேச பேச்சு எல்லாம் போய் பண வசதியுடன் கூடிய முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகளை திருமணம் செய்தார். அதைக் கூட சில இலங்கை தமிழர்கள் அதைக் கூட ராஜதந்திர செய்கை என்று பாராட்டினார்கள்.
சீமானின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் தன்னை வளர்த்து விட்டவர்கள் ஆதரவளித்தவர்களை குற்றம் கூறி தரக்குறைவாக பேசத் தொடங்கினார். தனக்கும் பிரபாகரனுக்கும் இடையில் நடந்த சம்பவங்களை கூட்டங்களிலும் பேட்டிகளிலும் விபரித்துக் கூறி தன்னை ஒரு பெரிய ஆளாக காட்டிக் கொண்டார். வெறும் இலங்கைத் தமிழர்களையும் விடுதலைப்புலி ஆதரவு பேச்சுக்களையும் வைத்து ஒரு கட்சி தொடங்கி தன்னை வளர்த்துக் கொண்டவர் இவர்மட்டும்தான்.
சீமானின் பிரபாகரன் பற்றிய பேச்சுக்கள் தனக்கு சமைத்து போட்ட கதைகள் எல்லாம் எல்லோராலும் சிரிப்பாக தான் பார்க்கப்பட்டது ஆனால் வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழர்கள் சீமானின் பிரபாகரன் பற்றிய பேச்சுக்கள் நம்பி பெருமை பட்டார்கள். சீமானின் பேச்சுக்களால் பிரபாகரன் பற்றிய இமேஜ் சரிந்தது தான் உண்மை.
உண்மையில் நாங்கள் ஆதரிக்க வேண்டிய உண்மையான பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு முதல் எல்லா விடுதலை இயக்கங்களுக்கும் எந்தவித உதவியும் எதிர்பார்க்காமல் தங்கள் சொந்த காசு போட்டு பலவித உதவிகள் செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை தமிழ்நாட்டில் பிரபாகரனுக்கும் அவள் தோழர்களுக்கும் மிக மிக நெருக்கமாக இருந்து கொண்டு தங்களை வெளி காட்டாமல் பலவித நெருக்கடிகளையும் ஜெயில் வாழ்க்கைகளையும் அனுபவித்த பலரில் குறிப்பிடத்தக்கவர்கள் கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், கோவை ஆறுசாமி போன்றவர்கள். இவர்கள் விடுதலை புலி இயக்கத்துக்கு செய்யாத உதவிகளே இல்லை. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கூட பயப்படாமல் பலவித உதவிகள் செய்து தடா போடா சிறைவாசம் எல்லாம் அனுபவித்தவர்கள். இலங்கையில் போய் பல நாட்கள் பிரபாகரனின் விருந்தினராக காட்டுக்குள் இருந்தார்கள். ஆனால் அதை வைத்து அவர்கள் எந்த ஒரு பிரச்சாரமும் செய்யவில்லை. இப்படியானவர்கள் எங்கள் இயக்கங்களுக்கு உதவி செய்யவில்லையே என்று மற்ற இயக்கங்கள் பொறாமைப்பட்டது உண்மை.
இன்று அவர்கள் இலங்கைத் தமிழரை வைத்து பிரபாகரனை வைத்தோ, விடுதலைப்புலி இயக்கத்தை வைத்து எந்த ஒரு பணமும் சம்பாதிக்கவில்லை தங்களுக்கும் அவர்களுக்கும் இருந்த மிக நெருங்கிய நட்பை கூட பகிரங்கமாக வெளியில் கூட்டங்களில் பேசியது இல்லை. இன்று வளமை போல் தங்கள் பெரியார் கொள்கைகளை தமிழ்நாட்டில் முழங்கி வருகிறார்கள்.
இவர்கள்தான் உண்மையான பிரபாகரனின் தோழர்கள். இவர்களுக்கு இலங்கை தமிழரின் பணமும் தேவையில்லை ஆனால் இலங்கைத் தமிழரின் நல்வாழ்வுமீது என்றும் அக்கறை காட்டுபவர்கள். இன்று பிரபாகரன் மீது பிரச்சாரம் செய்து தங்களை வளர்த்துக் கொள்பவர்களை இலங்கை தமிழர்கள் ஆதரிக்கப் கூடாது. மிகக் கடுமையான காலகட்டங்களில் விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் ஆதரித்த நண்பர்களை மட்டும் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.
மேலே உள்ள பிரபாகரன் கொளத்தூர் மணி பிரபாகரன் கோவை ராமகிருஷ்ணன் படங்கள் உண்மையானவை. எடிட் செய்து போட்ட படங்கள் இல்லை
No comments:
Post a Comment