பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 10 October 2023

செல்லக்கிளி மரணம்

  வெற்றிசெல்வன்       Tuesday, 10 October 2023
செல்லக்கிளி அம்மானின் மரணம், ஒரு திட்டமிடப்பட்ட‌ படுகொலையா?!.. (வெளிக்கு வராத அமெரிக்க இரகசியங்கள் பாகம்: 31) ஆக்கம்: சித்திறெஜினா!!
By editor on 8 October 2013 0:00 am in செய்திகள், தொடர்கட்டுரைகள் / no comments
 

அது செல்லக்கிளி அம்மான் கொல்லப்பட்ட தினமாகிய 1983 யூலை மாதம் 23 ம் திகதி சனிக்கிழமை.. அந்த தாக்குதலில் செல்லக்கிளியை வேண்டுமென்றே தலைமை தாங்க வைத்து பிரபாகரன் கொலை செய்தாரா?.. அல்லது அன்றைய தினத்தில் இராணுவத்துடன் நடந்த அந்த‌ மோதலில் அவர் கொல்லப்பட்டாரா?.. இது பற்றி முதலில் இரண்டு பாகங்கள் எழுதப்பட்டிருந்த நிலையில்.. சில வார‌ இடைவெளியின் பின்.. அதன் தொடர்ச்சியாக‌ இந்த மூன்றாவது பாகம் எழுதப்படுகிறது..

இந்த விடயத்தை பற்றி சற்று விரிவாக‌ அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டுமானால்.. முதலில் புலிகள் இயக்கத்தை தன் சுயவிருப்பத்தின்படி வழிநடத்தி மோசம் போன‌ பிரபாகரனின் அறியப்படாத சில குணநலன்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது…

புலிகளால் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கும் பிரபாகரனின் இந்த‌ மறுபக்கம்.. நயவஞ்சகமும்.. சயநலமும்.. கொடூரக் கொலைகளும் நிறைந்தது!.. இந்த குணநலங்கள் தான் செல்லக்கிளியை அவர் படுகொலை செய்வதற்கும் காரணமாக இருந்திருக்கிறது என்று சொல்வதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன..

1975 ம் ஆண்டு காலப் பகுதியில் யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை கொன்றவர் என்று மட்டுமே அறியப்பட்டிருந்த‌ இந்த பிரபாகரன்.. பின்னர் தனது ஆரம்பகால வழிகாட்டிகளாக இருந்தவர்களையும்.. அவரது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களையும்.. அரசியல் நெளிவு சுளிவுகளை கற்றறிய காரணமாக இருந்த அவரது முன்னோடிகளையும் போட்டுத் தள்ளி.. படிப்படியாக வழர்ந்து.. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சர்வ வல்லமையும் பொருந்திய ஒரு சர்வாதிகார தலைவராக உயர்வடைந்தார்….

மேலும் அவர் ஆரம்பித்து வைத்த‌ போரை இலங்கை இராணுவத்திற்கு எதிராக மட்டுமல்லாமல்.. அதை சிங்கள இனத்திற்கும் எதிரான ஒரு போராக‌வும் திசை திருப்பி.. தனது இயக்கத்தின் மூலம் தென்னிலங்கை சிங்கள பொது மக்கள் மத்தியில் மனித வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும்.. எல்லைக் கிராமங்களில் வசித்த சிங்கள மக்கள் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து பெண்கள்.. குழந்தைகள், முதியோர் என்று வகை தொகையில்லாமல் கதறக்கதற வெட்டிக் குவித்ததும் தன் சாகசங்களை நிகழ்த்தினார்….

அதேபோல வடபகுதியில் தமிழர்களுடன் ஒற்றுமையாய் வாழ்ந்த‌ முஸ்லீம் மக்களை அங்கிருந்து இருந்து விரட்டியடித்தும்,.. கிழக்கிலங்கை பள்ளிவாசல்களில் தொழுகையில் இருந்த முஸ்லீம் மக்களை தொழுகை நேரத்திலேயே கொன்றொழித்தும்.. அவர்கள் கிராமங்களிலும் புகுந்து அவர்களையும் பெண்கள் குழந்தைகள் முதியோர் என்று வித்தியாசம் பாராமல் கொன்று குவித்தும்.. தமிழினத்திற்கு தேவைக்கு அதிகமாக‌ விரோதிகளை சம்பாதித்து தனது கொலைத் தாண்டவத்தை மேலும் விஸ்தரிக்க வழிவகைகளை செய்திருந்தார்..

போகப் போக தமிழினத்தின் ஏழை எளியவர்களின் பிள்ளை குட்டிகளையே பலோத்காரமாக பிடித்துச் சென்று தனது அடாவடிப் போரில் பலி கொடுக்க தொடங்கிய போது தான்.. அவர் நடத்தியது விடுதலை போர் அல்ல.. அது தன் தலைமையை தமிழர்கள் மத்தியில் நிலை நிறுத்துவதற்காக‌ நடத்திய‌ ஒரு தன்னலப் போர் என்பதையும்.. அதற்காக அவர் எவரையும் பலிகொடுத்து.. அவர்கள் வாழ்க்கையை அழிக்க‌ தயங்க மாட்டார் என்பதையும் பல புத்திஜீவிகள் தெளிவாக அறியத் தொடங்கினார்கள்….

தமிழர்கள் மத்தியிலேயே அவர் நடத்திய இந்த‌ ஈவிரக்கமற்ற‌ செயல்பாடுகள்.. அவர் ஒரு பாசிசவாதி என்பதை அவர்களுக்கு வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டியது.. அதை தட்டிக் கேட்க முற்பட்ட‌ பலர்.. புலிகளால் கைது செய்யப்பட்டு.. துரோகிகளாக குற்றம் சாட்டப்பட்டு.. புலிகளின் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டு பலத்த சித்திரவதைகளின் பின் படுகொலை செய்யப்பட்டார்கள.. எஞ்சியிருந்தவர்களில் பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்..

அவரது இந்த சர்வாதிகார‌ செயல்பாடுகள் மூலம் வன்னித் தமிழர்களை பட்டினி போட்டு சேர்த்த பணத்தையும்.. இலங்கை தமிழர்களிடம் வரிவசூல் மூலம் கொள்ளையடித்த‌ பணத்தையும்.. அத்துடன் வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் தங்கள் கடின உழைப்பால் கஸ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தை “தமிழீழ‌ மாயை” காட்டி.. அவரது புலிப் பினாமிகள் சுரண்டி எடுத்து.. கோடான கோடிகளாக‌ அனுப்பி வைத்ததையும்.. அவர் எந்த விதமான‌ ஆக்கபூர்வமான செயல்பாடுகளிலும் செலவிடாமல்.. தன் யுத்த வெறி சிந்தனையால் வெறும் ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதிலும் தன் படையை விஸ்தரிப்பதிலும் தான் பெரும்பாலும் முதலீடு செய்து.. மிகுதியை தனக்கு விதம் விதமாக பங்கர்கள் கட்டவும் தான் செலவிட்டு வந்தார்…

போர் வெறி கொண்ட அவர்.. தனது போரை தொடர்ந்து நடத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் சமரசம் செய்து.. பேச்சு வார்த்தைகள் மூலம் ஒரு சமாதானமான தீர்வை எட்டும் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் வேண்டுமென்றே தட்டிக் கழித்தும்.. இந்த சமாதான பேச்சு வார்த்தை காலங்களை தனது படையை மேலும் விரிவுபடுத்தி அடுத்த போருக்கான ஆயுத்தங்களை செய்வதிலும் தான் மும்முரமாக இருந்தார்..

சரி அதுதான் போகட்டும்.. அப்படி அந்த‌ புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வறுகப்பட்ட அந்த கோடான கோடிகள் சரியான வழியில் ஆயுத கொள்வனவிலாவுதல் முதலீடு செய்யப்பட்டதா என்றால் அதுவும் இல்லை!.. அவற்றில் பல‌ கோடிகளை ஆயுத ஏஜன்சிகளிட‌ம் கொடுத்து ஏமாந்து.. அத்தோடு சேர்த்து அவர்களது உள் வீட்டு முரண்பாடுகளால் ஏற்பட்ட போட்டி பொறாமைகளால்.. இறுதி நேர யுத்தத்தில்கூட‌ ஆயுதங்களை ஏற்றி வந்த இருபதிற்கும் மேற்பட்ட‌ கப்பல்கள் இந்திய றோ பிரிவினருக்கு காட்டிக் கொடுக்கப்பட்டு.. நடுக்கடலில் வைத்து அவைகள் தாக்கி அழிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டது!….

(இந்த‌ விபரங்கள் தற்போது அதிரடியில் வெளியாகிக் கொண்டிருக்கும் தனது “ஈழப் போரின் இறுதி நாட்கள்” என்ற தொடரில் திரு. ரிஷி அவர்கள் மிகவும் விபரமாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் எழுதி வருகிறார்)

இப்படி புலம்பெயர் தமிழர்களின் நிதி பங்களிப்புகள் அனைத்தும் வீண் விரயமாக்கப்பட்டன.. பிரபாகரன் உண்மையில் தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள ஒருவராக இருந்திருந்தால்.. அவர்களுக்கு ஒரு நின்மதியான வாழ்க்கை தேவை என்று கருதும் ஒருவராக இருந்திருந்தால்.. அவர் நிட்சயம் அந்த கோடிக்கணக்கான டாலர்களை ஆயுதக் குவிப்பில் மட்டும் முதலீடு செய்திருக்க மாட்டார்..

குறைந்தது அதில் ஒரு பகுதியையாவுதல்‍‍.. அங்கே வன்னியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்த பல குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் முதலீடு செய்திருப்பார்.. அதற்காக அங்கு பல அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கியிருப்பார்..

அப்படி எதுவுமே செய்வதற்கு மனமில்லாத‌ அந்த தேசிய‌ தலைவர்.. போதாதற்கு அவர்கள் பிள்ளை செல்வங்களையும் பலோத்காரமாக பிடித்துச் சென்று தன் புலிப் படையில் இணைத்து.. அவர்களை பலி கொடுத்து தன் படையை மேலும் விஸ்தரித்தார்.. இதிலிருந்து இந்த போருக்கான‌ அவரது நோக்கம் தமிழினத்திற்கு விடுதலையை பெற்றுத் தரும் ஒரு தமிழீழம் அமைப்பதல்ல.. மாறாக‌ அது அவரது தலைமையை பாதுகாக்கவும்.. அதே சமயத்தில் அந்த தலைமைக்கு எதிராக இருந்த‌ இலங்கை இராணுவத்தையும்.. சமாதானத்தை விரும்பிய தமிழர்களை அழித்தொழிப்பது மட்டுமே என்பதை அறிய முடிகிறது..

இப்படி அழிவுப் பாதையொன்றில் சென்று கொண்டிருந்த அவரது அர்த்தமற்ற‌ போராட்டம்.. முடிவில் ஆயுத பலமும் இன்றி.. ஆள் பலமும் இன்றி.. தோல்வியை தழுவி.. இலட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களின் இழப்புகளுடன் முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு வந்தது..

ஆம்!.. நான் என்ற ஆணவமும்.. தன்னைவிட மேலானவர்களையும்.. தனது பதவிக்கும் உயிருக்கும் ஆபத்து என்று கருதுபவர்களையும் தந்திரமாக கொன்றொழித்தும்.. எவர் புத்திமதியையும் கேட்காத ஒரு அடங்காப்பிடாரியாக‌.. தனது முட்டாள்தனத்தனமான சிந்தனைகளை மட்டும் அந்த போரில் செயல்படுத்த முயன்று.. அதனால் தனக்குத் தானே சவக்குழி தோண்டிக் கொண்டவர்தான் எங்கள் தேசிய‌ தலைவர் பிரபாகரன் என்பது இப்போது பலரும் அறிந்த‌ விடயமாகி விட்டது!..

தான் மட்டுமே தமிழர்களின் தலைவனாக இருக்க வேண்டும்.. தனது சொல்லுக்கு மட்டுமே அனைத்திலங்கை தமிழர்களும் செவி கொடுக்க வேண்டும்.. தான் எதை செய்தாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.. தன்னை எவரும் தட்டிக் கேட்க கூடாது.. தனது அடக்கு முறைக்கு அனைவரும் அடிபணிய வேண்டும் என்ற காரணங்களுக்காக.. ஆரம்ப காலத்தில் இருந்தே தனக்கு போட்டியாக.. சவாலாக.. தன்னை விட மேம்பட்ட திறமைகளுடன்.. புத்தி கூர்மையுடன் இருந்த அனைவரையும் கொன்றொழிப்பதையே தனது தலையாய கடமையாக கொண்டிருந்தவர்தான் இந்த‌ பிரபாகரன்..

தலைமை பதவி ஒன்றுக்காக மட்டுமே தன் காலம் முழுவதும் காய் நகர்த்திய பிரபாகரனுக்கு ஆரம்ப காலத்தில் ஆபத்தாக இருந்தவர்களில் ஒருவர்தான் இந்த செல்லக்கிளி அம்மானும்..

என்ன காரணத்திற்காக இவர் பிரபாகரனுக்கு ஆபத்தானவராக இருந்தார் என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது.. அந்த காரணம் செல்லக்கிளின் தந்தையின் உடன் பிறந்த மூத்த சகோதரனின் மகனாகிய செட்டி என்னும் தனபாலசிங்கத்தை பிரபாகரன் சுட்டுக் கொன்றதில் இருந்து ஆரம்பமாகிறது..

செல்லக்கிளி கொல்லப்பட்ட காலத்திற்கு முன்னரும் பின்னரும்.. அவர் நடத்தியிருந்த‌ படுகொலைகள் மூலம் அவர்தான் செல்லக்கிளியின் மரணத்திற்கும் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பதை ஊர்ஜிதம் செய்ய‌ முடிகிறது..

ஏனெனில்..பிற்காலத்தில் அவர் உமா மகேஸ்வரனிடமிருந்து பிரிய நேரிட்டதற்கும் அவரது தலைமை பிரச்சனையே காரணமாக இருந்திருக்கிறது என்பதும்.. உமா மகேஸ்வரன் தலைவராக இருக்கும் போது தான் சாதாரணமாக இராணுவப் பிரிவுக்கு மட்டும் பொறுப்பாக இருப்பதை அவர் விரும்பவில்லை என்பதும்‍‍‍.. அவர் தமிழீழத்தை விட.. தனது தலைமைப் பதவிக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார் என்பதை உணர வைக்கிறது..

மேலும் உமாமகேஸ்வரனை மட்டுமல்லாமல் தனக்கு போட்டியாக இருந்த‌ டெலோ இயக்க தலைவர் சிறீ சபாரட்ணம் படுகொலை செய்ததற்கும்.. அதே பாணியில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.. தலைவர் பத்மநாபாவை படுகொலை செய்ததற்கும் இந்த தலைமைப் பதவிதான் காரணமாக இருந்திருக்கிறது..

அது மட்டுமல்ல.. தனது நண்பர்களையும்.. தனது வழச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களையும்.. ஏனைய புத்தி ஜீவிகளையும் இந்த காலகட்டத்தில் பிரபாகரன் கொன்றொழித்ததற்கும் இந்த தலைமை பதவி மோகம்தான் காரணமாக இருந்திருக்கிறது என்பதை மிகத் தெளிவாக கூற முடியும்..

இப்படிப்பட்ட பிற்காலத்தையுடைய பிரபாகரனின் முற்காலத்தை சற்று திரும்பிப் பார்த்தால்..

இதே போன்ற ஒரு காரணத்திற்காகத் தான் அந்த முற்காலத்தில் செல்லக்கிளி அம்மானும் அந்த திருநெல்வேலி தாக்குதலில் பிரபாகரனால் திட்டமிட்டு கொல்லப்பட்டிருக்க வேண்டும்.. இந்த படுகொலையின் பின்னணியில் மறைந்திருக்கும் பல சம்பவங்களை தொகுத்துப் பார்க்கும்போது.. இது சாத்தியம்தான் என்பதை ஊர்ஜிதம் செய்ய முடிகிறது..

வல்வெட்டித்துறையை சேர்ந்த விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆரம்ப கால வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும் போது இவர் உண்மையிலேயே தமிழீழ வேட்கை கொண்டு தான் இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை என்பது தெளிவாகிறது..

இவர் மட்டுமல்ல “த‌மிழீழ வேட்கை” ஏற்பட்ட இவருடைய ஆரம்பகால நண்பர்கள் அனைவருமே இலங்கை அரசியல் அறிந்து இந்த விடுதலை போராட்டத்தில் இணைந்தவர்கள் அல்ல.. பிற்காலங்களில் இவர்கள் அனைவருமே தமிழர்களின் விடிவுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களாக புலிகளால் சித்தரிக்கப்பட்டாலும் இவர்கள் அனைவருக்குமே ஒரு மறைக்கப்பட்ட மறுபக்கமும் இருந்தது..

திடுக்கிடும் பல அதிர்ச்சி சம்பவங்கள் நிறைந்த‌ இவர்கள் கடந்த காலத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. ஒரு சிலர் மட்டுமே அறிந்திருந்த அந்த உண்மைகள் அவைகள்.. பிரபாகரனின் நெருங்கிய கூட்டாளிகளாக‌ இருந்து அவரை வழி நடத்திய‌ குட்டிமணி, தங்கத்துரை போன்றோரை எடுத்துக் கொண்டால்.. இவர்கள் இருவருமே ஒழுங்காக கல்வி பெற்றிராதவர்கள்.. தங்கள் இளம் பிராயத்திலேயே கல்வியை கைவிட்டு தங்கள் பரம்பரை தொழிலாகிய கள்ளக்கடத்தலை வெற்றிகரமாக நடத்தி வந்தவர்கள்..

குட்டிமணி கைது செய்யப்பட்ட போது அவர் கொடுத்திருந்த‌ வாக்கு மூலத்தில்.. தான் கள்ளக்கடத்தலையே தொழிலாக செய்து வந்ததாகவும் வெடிமருந்துப் பொருட்கள் கடத்துவது ஏனைய பொருட்களைக் கடத்துவதை விட பல‌ மடங்கு இலாபம் கிடைத்ததால் தான் தான் வெடிமருந்துகளை கடத்த முயற்சித்ததாகவும்.. சிறையில் காசி ஆனந்தன்.. சேனாதிராசா போன்றவர்களை சந்தித்த பின்பே தமிழீழ இலட்சியத்துக்கு மாற்றமடைந்ததாயும் கூறியிருக்கிறார்..

இவரது இந்த வாக்குமூலம் இன்றுவரை இலங்கை நீதிமன்ற பதிவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது..ஆம்.. தமிழீழ போராட்ட வரலாற்றின் முன்னோடியாக ஆரம்பமானது தான் வல்வெட்டித்துறையின் கள்ளக்கடத்தல் வியாபாரம்!..

இப்படி கள்ளக் கடத்தலில் ஈடுப்பட்டவர்களுக்கு சட்டத்தரணிகளாக செயல்படுவதில் அதிக இலாபம் அடைந்தவர்களில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்.. யோகேஸ்வரன் போன்ற விடுதலை கூட்டணியணியினர் குறிப்பிடத்தக்கவர்கள்..

இதுதான் தமிழர் விடுதலை கூட்டணியினர் மெல்ல மெல்ல‌ வல்வெட்டித் துறையில் அகலக்கால் பதிக்க‌ வழி கோலியது.. இவர்களுடன் சேர்ந்து கொண்டால் தங்கள் கடத்தல் தொழிலுக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும் என்ற நோக்கத்தில்.. கூட்டணியினரின் இளைஞர் பேரவையில் பல வல்வெட்டித்துறை இளைஞர்கள் இணைந்து கொள்ள தொடங்கினார்கள்..

அப்படி இணைந்து கொண்டவர்கள்தான் குட்டிமணியும், தங்கத்துரையும்.. இதே காலப்பகுதியில் இலங்கை தமிழர்களால் அறியப்படாதிருந்த பிரபாகரன் இந்த கடத்தல்காரர்களின் உதவியாளராகத் தான் இருந்து வந்திருக்கிறார்.. இவரும் இந்த வல்வெட்டித்துறை இளைஞர்களுடன் சேர்ந்து இளைஞர் பேரவையில் இணைந்து கொண்டார்..

குட்டிமணி ஏற்கெனவே தனது கடத்தல் தொழிலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த இன்ஸ்பெக்டர் குமார் என்பவரை சுட்டுக் கொலை செய்தவர்.. இன்ஸ்பெக்டர் குமார் மட்டுமல்ல..1970 பதுகளில் பொலிசாருக்கு இவர்கள் கடத்தல் தொழிலை காட்டிக் கொடுத்த பல வல்வெட்டித்துறை இன்போர்மர்களும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்..

இந்த கள்ளக்கடத்தல் வியாபாரத்தினால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் பல இலட்சங்களை ஒரு தினத்திலேயே ஈட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் நிறையவே இருந்திருக்கின்றன.. அதே சமயத்தில் அங்கு வாழும் சாதாரண ஏழை குடிமகன் ஒருவனுக்கு இவர்களை பொலிசாரிடமோ இராணுவத்தினரிடமோ காட்டிக் கொடுப்பதன் மூலம் சில லகரங்களை காணும் வாய்ப்பும் இருந்து வந்திருக்கிறது..

இப்படிக் காட்டிக் கொடுப்பவர்களைதான் “துரோகிகள்” என்று பட்டமளித்து.. அவர்களை போட்டுத் தள்ளுவதும்.. ஊரை விட்டு விரட்டியடிப்பதும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.. இதே நகலைத்தான் வல்வெட்டித்துறை வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது தமிழீழ வியாபாரத்தில் வெற்றிகரமாக கையாண்டு வந்திருக்கிறார்..

அன்றைய காலகட்டத்தில் படுகொலைகளை சாதாரணமாக கருதும் ஒரு 18 வயது வல்வெட்டித்துறை இளைஞனான‌ பிரபாகரனை.. தங்கள் அரசியல் எதிரியான யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவை கொன்றொழிக்க தமிழர் விடுதலை கூட்டணியினர் அன்று உபயோகித்து தமிழினப் படுகொலைக்கு பிள்ளையார் சுழி போட வைத்தனர்..

இது பிரபாகரனின் முதல் கொலையாக இருந்த போதிலும்.. அது அவருக்கு புதியதொன்றல்ல.. வல்வெட்டித்துறையில் நடந்த பல படுகொலைகளை நேரில் பார்த்தவர் அவர்..

இப்படிப்பட்ட பிரபாகரன் செல்லக்கிளியின் ஒன்றுவிட்ட சகோதரரான‌ செட்டி என்னும் தனபாலசிங்கம் என்பவரின் தலைமையில் இயங்கிய “புதிய தமிழ் புலிகள்” என்ற இயக்கத்தில் இயக்க உறுப்பினராக இணைந்து கொண்ட காலப்பகுதியில்..

செட்டி பிரபாகரனுக்கு மிகவும் திறமை வாய்ந்த ஒரு வீரனாக தென்பட்டார்.. செட்டியின் துணிவும் தந்திரங்களும் பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது..

உண்மையில் பிரபாகரனுக்கு முதன் முதலில் துப்பாக்கியால் சுடும் பயிற்சி வழங்கியவர் சாட்சாத் இந்த செட்டிதான்.. இவர் மூலம்தான் பிரபாகரனுக்கு செட்டியின் தகப்பனாரின் தம்பியின் மகனான செல்லக்கிளியின் அறிமுகம் கிடைத்தது..

ஆரம்ப காலத்தில் செட்டியுடன் சேர்ந்து வங்கிக் கொள்ளைகளிலும்.. வங்கிக்கு கொண்டு செல்லும் பணத்தினை வழிமறித்து கொள்ளையடிப்பதிலும் செட்டியின் திறமையை கண்டு வியந்திருக்கிறார் பிரபாகரன்..

செட்டி எப்படியெல்லாம் பிறரை மிரட்டி அவர்கள் காரை எடுத்துக் கொண்டு வருகிறான்.. பின்னர் கொள்ளையிடப்பட்ட பணத்துடன் தப்பியோடும் போது எப்படியெல்லாம் காரை லாவகமாக குச்சு ஒழுங்கைகளூடாக செலுத்திச் செல்கிறான் என்று தனது கூட்டாளிகளிடன் பெருமாயாக பேசியிருக்கிறார் பிரபாகரன்..

ஆனால் நாளடைவில் செட்டி தன்னை விட அசாதாரண துணிச்சலும்.. மித‌மிஞ்சிய திறமையாலும் அவர் கனவு கண்டு கொண்டிருந்த‌ தேசிய தலைமை பதவியை தட்டிச் சென்று விடுவானோ என்ற அச்சத்தில் அவனை போட்டுத் தள்ள முடிவு செய்தார்..

இதனால் 1981 மார்ச் 16 திங்கட்கிழமை.. ஏற்கெனவே செட்டியுடன் முரண்பட்டிருந்த‌ குட்டிமணியுடன் சென்ற பிரபாகரன்.. மதிய உணவருந்திக் கொண்டிருந்த செட்டியை வெளியில் அழைத்தார்..

தனக்கும் குட்டிமணிக்கும் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டை தீர்த்து வைக்கத்தான் பிரபாகரன் தன்னை அழைக்கிறார் என்று நினைத்தபடி வெளியில் வந்த செட்டியை.. சிரித்த முகத்துடன் வரவேற்று பேசிக் கொண்டிருந்த பிரபாகரன்.. திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் மூன்று முறை இடதுபக்க மார்பை குறி வைத்து சுட்டார்.. அந்த இடத்திலேயே அடியற்ற மரம்போல் சாய்ந்தார் செட்டி..

பிற்காலத்தில் இந்த படுகொலைக்கு.. செட்டி வங்கிக் கொள்ளை பணத்தில் கையாடல் செய்ததால் தான் பிரபாகரன் அவரை படுகொலை செய்தார் என்று புலிகளால் நியாயம் கூறப்பட்டது..

செட்டி குற்றச் செயல்கள் புரிவதில் கில்லாடிதான் மறுப்பதற்கில்லை.. ஆனால் அந்த குற்றங்களுக்கு பிரபாகரனும் துணை போனவர் தான்.. கொள்ளை பணத்தில் கையாடல் செய்து தன்னை வழம்படுத்துவதில் அதை செட்டி செலவு செய்தார் என்று கூறும் இடத்தில்.. பிற்காலத்தில் பிரபாகரனும் அவரது அடிவருடிகளும் வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் தங்கள் வாழ்க்கையை வழம்படுத்தி சொகுசாக வாழவில்லையா? என்று கேட்பதற்கு இங்கே இடமிருக்கிறது…

செட்டியின் படுகொலைக்கு சுமார் மூன்று வருடங்களுக்கு முன்.. செட்டியின் ஒன்றுவிட்ட சகோதரனான செல்லக்கிளி.. 1978-ம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் திகதி.. வெள்ளிக்கிழமை.. அதிகாலை மன்னார் காட்டிற்குள் வைத்து இன்ஸ்பெக்டர் பஸ்தியான்பிள்ளையையும் அவருடைய உதவியாளர்களையும் படுகொலை செய்து மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்திருந்தான்.

அதேபோல அதே 1978 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி வியாழக்கிழமை செல்லக்கிளி தலைமையேற்று நடத்திய திருநெல்வேலி வங்கிக் கொள்ளையிலும் காவலுக்கிருந்த பொலிசாரை சுட்டு கொன்ற நிகழ்ச்சியும் அவனுடைய வீரத்தை யாழ் மக்கள் மத்தியில் மேலும் தூக்கி நிறுத்தியிருந்தது..

பஸ்தியான்பிள்ளையை கொலை செய்தபோது பிரபாகரன் அங்கு இருக்கவில்லை.. ஆனால் திருநெல்வேலி வங்கிக் கொள்ளையில் அவர் இருந்த போதிலும்.. அந்த கொள்ளை நடந்து முடியும் வரையிலும் அந்த வங்கிக்கு அருகிலிருந்த ஒரு தேநீர்சாலை ஒன்றுக்குள் பதுங்கியிருந்து எல்லாம் முடிந்த பின்னர்தான் வெளியில் வந்து கொள்ளையடித்த பணத்துடன் மற்றவர்களுடன் ஜீப்பில் தப்பி சென்றார்..

1978ல் நடைபெற்ற இந்த வங்கிக் கொள்ளையின் பின்னர் 1883 திருநெல்வேலி தபால்பெட்டி சந்தி இராணுவ தாக்குதல்வரை.. சுமார் ஐந்து வருடங்கள் செல்லக்கிளி பிரபாகரனிடமிருந்து ஒதுங்கித்தான் இருந்தார்.. ஏன் இந்த நீண்ட இடைவெளி?..

பஸ்தியான்பிள்ளையின் கொலையின் பின்னர் அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொலிசார் வலை விரித்து தேடத் தொடங்கியிருந்தனர்.. இதற்குக் காரணம் இந்த‌ கொலையை பற்றி செல்லக்கிளி தனது தமையனான செட்டியிடம் கூறி பெருமைப்பட்டதாகவும்..

அதை செட்டி இலங்கை இரகசிய பொலிசாரிடம் போட்டுக் கொடுத்ததால் தான் தங்களை பொலிசார் தேட நேரிட்டதாகவும் பிரபாகரன் சந்தேகப்பட்டார்..

இதைபற்றி செல்லக்கிளியிடன் விசாரித்த போது.. அவர் இதை திடமாக மறுத்ததுடன்.. தன்மேல் சந்தேகப்பட்டதற்காக சற்று கோபமும் அடைந்திருந்தான்..

இந்த 1978 ம் ஆண்டிற்கும் 1983 ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட ஐந்து வருட கால இடைவெளியில்.. நாயன்மார்கட்டில் தனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் விவசாயத்தில் ஈடுப்பட்டிருந்தான்..

பின்னர் 1981ம் ஆண்டு மார்ச் 16ம் திகதி தனது ஒன்றுவிட்ட தமையனான செட்டி பிரபாகரனால் படுகொலை செய்யப்பட்ட பின்னர் தன்னிடன் இருந்த மாட்டை விற்று ஒரு கைத்துப்பாக்கியை கறுப்பு சந்தையில் வாங்கியிருந்தான்.. எங்கு சென்றாலும் அதை தன்னுடன் எடுத்துச் செல்ல அவன் தவறுவதில்லை.. ஏன்?.. எதற்காக? அது என் அடுத்த பாகத்தில் (தொடரும்)

அன்புடன்.. சித்திறெஜினா
logoblog

Thanks for reading செல்லக்கிளி மரணம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment