1980 களில் ஈழ ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் தன்னால் முடிந்த அளவு பல உதவிகள் செய்த தமிழ்நாடு தஞ்சாவூர் சேர்ந்த ரத்தினகிரி அண்ணா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு கவலை கொண்டேன். அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரம் அவர் ஈழப் போராட்டத்திற்கு செய்த உதவிகளை நினைத்துப் பார்க்கிறேன்.
திராவிட இயக்கத்தின் தீவிர பற்றாளரும் இயக்கத்தின் பகுத்தறிவாளர் சங்க தலைவருமாக இருந்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ ஆய்வாளர் சங்கத்தின் மிக நீண்ட கால தலைவராக செயல்பட்டருமான தஞ்சாவூரைச் சேர்ந்த இரா .ரத்தினகிரி அண்ணா அவர்கள் 1983 ஆண்டு ஆரம்பத்தில் தமிழ்நாடு எம்ஜிஆர் அரசாங்கம் பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஈழ போராளி தலைவர்களை இலங்கைக்கு நாடு கடத்த முயற்சிகள் செய்த போது, தலைமறைவாக இருந்த எங்களுக்கு அதாவது பிடிப்படாமல் மறைந்திருந்த எங்களுக்கு ஆறுதலும் தன்னம்பிக்கையும் கொடுத்து பல அரசியல் தலைவர்களே சந்தித்து ஈழத் தலைவர்களுக்காக எந்தவித உதவிகளையும் எங்களிடம் இருந்து எதிர்பார்க்காமல் தங்களது சொந்த பணத்தையும் நேரத்தையும் எங்களுக்காக செலவு செய்து உதவி செய்த மறக்க முடியாத மனிதர்களில் இவரும் ஒருவர்.
1983 ஆண்டு பிணையும் மறுக்கப்பட்டு திரும்பவும் சிறையில் அடைக்கப்பட்ட உமா மகேஸ்வரன், சோதி ஈஸ்வரன் என்ற கண்ணன், மட்டும் நிரஞ்சன் போன்றவர்களை இலங்கைக்கு நாடு கடத்த விடாமல் தடுப்பதற்காக திராவிட கழகம் மூலம் பல முயற்சிகள் செய்தவர். அப்போது நடந்த திராவிட கழக மாநாட்டில் ரகசியமாக எங்களையும் கலந்து கொள்ள செய்து திராவிட கழகத் தோழர்களை ஈழ போராளி தலைவர்களை விடுதலை செய்யும்படி அட்டைகள் ஏந்தி அவர்களது மாநாட்டில் பேரணியில் ஈடுபட செய்து பத்திரிகைகளில் உண்மை நிலவரங்கள் வெளிவர உதவியாக இருந்தார்.
அப்பொழுது திராவிடர் கழக இளைஞரணி சேர்ந்த கோவை ராமகிருஷ்ணன் அவர்களை எமது பிளாட் இயக்க திருவல்லிக்கேணியில் இருந்த ரகசிய அலுவலகத்தில் அழைத்து வந்து ஈழ விடுதலை சம்பந்தமாக தமிழ்நாட்டில் பெரிய பிரச்சாரங்கள் செய்வதற்கு சிங்களஅரசாங்கம் தமிழ் மக்கள் மேல் செய்த கொடுமைகள் அடங்கிய புகைப்பட கண்காட்சி வைப்பதற்கு அப்பொழுது தலைமறைவு அலுவலகப் பொறுப்பாளராக இருந்த என்னிடம் பேசினார்கள். ஆனால் அப்பொழுது
எமக்கு பொறுப்பாக இருந்த சந்ததியார் மறுத்துவிட்டார். முதலில் சிறையில் இருக்கும் தலைவர்களை வெளியில் எடுப்போம் பிறகு பார்ப்போம் என்று கூறிவிட்டார்.
ஆனால் முதன்முறையாக விடுதலைப்புலிகளின் பேபி சுப்பிரமணியம் திராவிடர் கழக தலைவர்கள் எல்லோரையும் திராவிட கழகம் மாநாட்டில் சந்தித்து ரத்தினகிரி அண்ணாவின் ஆதரவோடு கோவை ராமகிருஷ்ணனின் சந்திப்போடு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு சிறந்த சிறந்த அறிமுகமும் கோவை ராமகிருஷ்ணன் மூலம் கொளத்தூர் மணி அவர்கள் மூலம் கடைசி வரை பலவித உதவிகள் பெற்றுக் கொண்டனர். ஆனால் இவர்கள் யாரும் இன்று இருப்பவர்கள் போல் பணத்துக்காக அல்லது வெளிநாட்டு பயணத்திற்காக தங்கள் உதவிகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்ததால் பல கொடுஞ்சிறைவாசங்களை மட்டும் தான் அனுபவித்தார்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.
ரத்தினகிரி அண்ணா அந்த காலகட்டங்களில் இயக்க வேறுபாடுகள் பார்த்து உதவி செய்யவில்லை. அவரைப் பொறுத்தவரை தமிழ் ஈழ போராட்டத்துக்கு யார் வந்து நேர்மையாக உதவி கேட்டாலும் செய்து கொடுத்தார் என்பதை குறிப்பிட வேண்டும்.
பின்பு நான் டெல்லியில் பொறுப்பில் இருக்கும் போது தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய அண்ணன் எல். கணேசன் அவர்களின் வீட்டில் தங்கியிருந்தபோது, அகில இந்திய கால்நடை மருத்துவர் சங்க முக்கிய பொறுப்பில் இருந்த ரத்தினகிரி அண்ணாவும் அடிக்கடி அங்கு வந்த தங்குவார். அப்பொழுது அவர் சந்திக்கும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரிடமும் எமது விடுதலை சம்பந்தமான ஆங்கில ஹிந்தி கையேடுகளை வாங்கி அவர்களிடம் கொடுத்து எமது பிரச்சினை பற்றி அவர்களுக்கு விளங்கப்படுத்துவர். பல முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் எனக்கு அறிமுகம் செய்திருக்கிறார் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்பார்.
டெல்லியில் எமக்கு ஒரு நாள் உணவுக்கான பணம் பத்து ரூபாயிலிருந்து 15 ரூபாய்க்கு உள்ளே முடித்துக் கொள்ள வேண்டும். அதை டெல்லியில் என்னோடு தங்கியிருந்த இயக்கத் தோழர்களுக்கு தெரியும். இதைத் தெரிந்து கொண்ட ரத்தினகிரி அண்ணா இரவு சாப்பாட்டு தனது செலவில் தான் டெல்லியில் இருக்கும் வரை எனக்கு வாங்கி கொடுப்பார். அப்பொழுதுதான் என்னால் மீன் கோழி உணவுகளை சாப்பிட முடிந்தது. மற்றது எமது மதிப்புக்குரிய அன்பான பாராளுமன்ற உறுப்பினர் L. கணேசன் அண்ணனும் நல்ல உணவு வகைகளை எனக்கு வாங்கி கொடுத்ததை இன்று வரை மறக்க முடியாது.
எனது PLOTE இயக்கம் பல நல்ல தொடர்புகளை ஒதுக்கிவிட்டது மிகவும் கவலைக்குரிய விடயம்.
இன்றுள்ள பல பேருக்கு ரத்தினகிரி அண்ணா இவரைப் போன்று அந்த காலத்தில் பணம் பதவிக்கு ஆசைப்படாமல் உண்மையாக ஈழ விடுதலைப் போராளிகளுக்கு உதவி செய்தவர்களை பற்றி இன்று எதுவும் தெரியாது. ஆனால் பணத்துக்காக ஈழ போராட்டத்தை விற்பனை செய்து பணம் சம்பாதிப்பவர்களை உண்மையான தலைவர்கள் என நினைக்கிறார்கள் ., வேடிக்கையானது.
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், திராவிட இயக்கத்தின் தீவிரப் பற்றாளருமான இரா.ரத்தினகிரி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் தலைவராகச் 20 ஆண்டுகாலம் பணியாற்றிய ரத்தினகிரி, பதினோராவது ஐந்தாண்டு திட்டக் குழுவின் உறுப்பினர், பால்வளத்துறை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள அகில இந்திய கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் செயலாளராகவும் 18 ஆண்டு பணியாற்றியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திராவிட இயக்க வரலாற்றை விவரிக்கும் ”கலைஞர் கருவூலம்” காட்சியகத்தை அமைத்து கலைஞரின் பாராட்டைப் பெற்றவர். காட்டூரில் கலைஞர் கோட்டத்தின் உருவாக்கத்திலும் துணைநின்றவர். 1976 முதல் இன்றளவும் திராவிடர் கழகம் வெளியிட்டு வரும் பெரியார் நாட்குறிப்பையும் ரத்தினகிரி வெளியிட்டுள்ளார். பெரியார் இயக்கம் மாத இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரத்தினகிரியை, அண்மையில் தஞ்சை சென்றபோது நலம் விசாரித்ததை நினைவு கூர்கிறேன். அத்தனை பணிகளிலும் முழுஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திச் செயல்பட்ட ரத்தினகிரியை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள், திராவிட இயக்கப் பற்றாளர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment