பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 26 March 2026

ஆரம்பகால ஈழ விடுதலை குடும்பத்துக்கு நடந்த துரோகங்கள்

  வெற்றிசெல்வன்       Thursday, 26 March 2026
ஒரு சமூக சிந்தனையாளன் இப்படியாகப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்கவே கூடாது! 
……….

எனக்கு நான்கு சித்தப்பாக்கள்.  மூவர் இன்று உயிரோடு இல்லை. 

எனக்குத் தெரிந்து அப்பம்மா அழாத நாட்களே இல்லை. தினமும் கந்த சஷ்டி கவசம் பாடுவார். பாடிக்கொண்டு சமைப்பார்.  அவருடைய கண்ணீர் சமையலறை முழுதும் சிந்திக் கிடக்கும். சமைக்கும் போதெல்லாம் அவருடைய அழுகுரல் மனதை ஏதோ செய்யும். நான் இலங்கையில் அவருடன் தங்கியிருந்த  காலத்தில் அந்தக்  குரலை  தினமும் கேட்டிருக்கிறேன். 

இப்போது கூட எங்காவது கந்த சஷ்டி கவசம் கேட்கும்போது எனக்கு அப்பம்மாவின் குரல் தான் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவருடைய சமையலறையும் அவர் குரலும் மனதிற் தோன்றும். அப்பம்மாவைப் போல கந்த சட்டி கவசத்தை அத்தனை உருக்கமாக, உணர்வுபூர்வமாக யாரும் பாடி நான் கேட்டதில்லை. கந்த சஷ்டி கவசத்தோடு அப்படி ஒரு பிணைப்பு எனக்கு உண்டு. 

ஏற்கனவே தனது இரண்டு ஆண் குழந்தைகளை இழந்து, அப்பம்மா துயரில் உத்தரித்துக் கொண்டிருக்கையில், ரமேஷ் சித்தப்பாவின் இழப்பைப் பற்றி அவருக்குத் தெரிவிக்கும் துணிச்சல் வீட்டில் யாருக்கும் இருக்கவில்லை. 

தனது மூன்றாவது குழந்தையும் இறந்து போனது தெரியாமலேயே தனது காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த அப்பமாவிற்கு ஒரு நாள் செய்தி எட்டியது. 

அன்றிலிருந்து அப்பம்மாவின் நடவடிக்கை எல்லாம் மாறிப் போயிற்று. அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலை குலைந்தார். அவர் எப்போது அழுவார் எப்போது கத்துவார் எப்போது ஓலமிடுவார் என்று யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று மண்ணில் புரண்டு அழுவாராம். அவரைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது முடியாத விடயமாகப் போயிற்று. 

தனது மூன்றாவது பிள்ளையின் மரணத் துயரில் மூன்று மாதங்களிலேயே அப்பம்மாவும் இறந்து போனார். 

அப்பம்மாவின் ஒரு பிள்ளை (சிவனேஸ்வரன்)  ஈழப்போரில் தன் சொந்த இனத்தினாலேயே படுகொலை செய்யப்பட்டார். காக்கா என்று  அழைக்கப்பட்டவர். அவரது உடல் தன்னும் எமக்குக் கிடைக்கப் பெறவில்லை. அவர் அனுபவித்த சித்திவதையை சொல்லிக் கேட்டிருக்கிறேன். கேட்பதே அத்தனை ரணத்தை உண்டுபண்ணும்.

தன் தம்பி தொடர்பாகப் பேச உமா மகேஸ்வரனைச் சந்திக்க மற்றுமொரு பிள்ளை (விக்னேஸ்வரன்) தமிழகம் சென்றவர், திரும்பவில்லை. எந்தத் தகவலும் இல்லாமல் அவரும் காணாமல் ஆக்கப்பட்டார். இது என் அப்பாவின் கதை.

ரமேஷ்வரன் எனது சின்ன சித்தப்பா

தன் சிறு வயதிலேயே ஜேர்மன் நாட்டிற்கு புலம்பெயர்ந்து, ஒரு கட்டத்தில் நியூயோர்க் நகரத்திற்குச் சென்று வாழ்ந்தார். 

ஏழு பெண் சகோதரிகளுடன் பிறந்தவர். தன் குடும்பத்திற்காக நிற்க எப்போதும் தயங்காத ஒரு மனிதன். தன் சொந்தங்களுக்குத்  தேவையானதை எல்லாம் செய்தார். அக்கடன்கள் அவரது இளமைக் காலத்தை விழுங்கியிருந்தது.

ரமேஷ் சித்தப்பா என்னை விட பத்து வயதே மூத்தவர். சமூகம் சார்ந்து மிகுந்த அக்கறை கொண்டவர்.  சுயமாகவும் துணிச்சலோடும் வாழக் கற்ற பெண்களிடம் அவருக்கு அதிக ஈர்ப்பு இருந்தது. நல்ல வாசிப்பு பழக்கம் உள்ளவர். ஊரில் வாழ்ந்த உறவுக்காராப் பெண் மேல் காதல் கொண்டிருந்தார். அவள் பத்திரிக்கையில் பணிபுரிந்து கொண்டிருந்த காலம் அது. 

வீட்டில் அப்பெண்ணை மணம் முடிப்பதில் எதிர்ப்பு இருந்தது.  

சமூகம் சார்ந்து மிகவும் முற்போக்கான சிந்தனை கொண்ட சித்தப்பாவிற்கு எதுவும் தடையாக இருக்கவில்லை. எதையும் எதிர்த்து அப்பெண்ணையே மணம் முடிக்க விரும்பிய அவர், தனது கடைசிக் காலத்தில் தன் முழு உழைப்பையும் சேமித்து அப்பெண்ணுக்கே அனுப்பி வைத்தார் என்று சொந்தங்கள் சொல்லி அறிந்திருந்தேன்.

ஊரிலிருந்து அவருடைய சொந்தங்கள் பலரும் இப்படியாக யாரையும் நம்பி அனுப்பாதே என்று அவரை எச்சரித்ததுண்டு. எனினும் அவர்  நம்பினார். இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக இலங்கை சென்றார். 
அங்குதான் தான் ஏமாற்றுப் பட்டிருப்பதை அறிந்து, ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையில்  நியூயோர்க் நகரத்திற்குத் திரும்பியிருக்கிறார்.  நியூயோர்க் நகரத்திற்கு வந்த பின்னும் அவரால் தனக்கு நிகழ்ந்த துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லைப் போலும்…

பல சிரமங்களுக்கு மத்தியில் தன் சகோதரர்கள் ஈழத்தில் இருந்த காலத்தில், தன்னுடைய உழைப்பு முழுவதையும் ஒரு பெண்ணிடம்  இழந்தது என்பது அவரை உறுத்திக் கொண்டே இருந்திருக்கிறது.  அது கொடுத்த மன உளைச்சலினாலும், வேதனையாலும், குற்ற உணர்வினாலும், தன்னையே மாய்த்துக்கொண்டார். 

அப்போதெல்லாம் எனது சித்தப்பாவின் காதலியை நான் அறிந்திருக்கவில்லை. இப்போது அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார் . சில காலங்களுக்கு முன்புதான் அவர் யாரென்றும் அறிய நேர்ந்தது. அறிந்த நாளிலிருந்து அவரை அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறேன். 

சித்தப்பாவின் காதலி சமூகம் சார்ந்து அதிகம் பேசுகிறார். பெண்ணியம் பேசுகிறார். பாலியல் சுரண்டல்களைப் பற்றி உரக்கக் குரல் எழுப்புகிறார். பெரும்  அறிக்கைகள் இடுகிறார்.  முகநூல் போராளி. இவைகளைக் காணும் கணத்தில் எல்லாம் பல கேள்விகள் மனதிற் தோன்றும். மனம் நிதானத்தை இழக்கும். எனக்குள் ஒருவித உக்கிரம் கிளம்பும்.  மனதில் தோன்றுவதைக்  கேட்க வேண்டும் போல் இருக்கும்.  இருந்தும் என்ன? சித்தப்பா இல்லாத இடத்திலிருந்து யாரை என்ன கேள்வி கேட்க முடியும்? கேட்டால் தான் சரியான பதில் வருமா என்ன? யாரும் தமது சுரண்டல்களையும் ஏமாற்று வேலைகளையும் ஒத்துக்கொள்ளப் போகிறார்களா என்ன? 

இதையெல்லாம் தாண்டி, சமூக சிந்தனைகளை எனக்குள்ளும் ஊட்டி வளர்த்த சித்தப்பா, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தன்னை மாய்த்துகொண்டதுதான் எனது பெரு வருத்தம். யார் என்ன செய்திருந்தாலும், ஒரு சமூக சிந்தனையாளன் இப்படியாகப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்கவே கூடாது. 

இருந்தும் என்னுடைய சித்தப்பா! 
உனது நினைவுநாள் இன்று!
எப்போதும் எம் நினைவிருப்பாய்!

- கவிதா லட்சுமி
25.03.26
logoblog

Thanks for reading ஆரம்பகால ஈழ விடுதலை குடும்பத்துக்கு நடந்த துரோகங்கள்

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment