பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 14 March 2026

  வெற்றிசெல்வன்       Saturday, 14 March 2026
மார்ச் 10 - தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பிறந்த நாள்.

ஐயா. பாவலரேறு பெருஞ்சித்திரனார் - நேர்கானல்...

தமிழக வரலாற்றில் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஐயா அவர்களின் வரலாறு சுருக்கமாக....

"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!''

என்று எழுதி அதன்வழி வாழ்ந்துகாட்டியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.

தமிழில் பிறமொழிச் சொற்களை வகை தொகையின்றிக் கலந்து எழுதும் போக்கை இருபதாம் நூற்றாண்டில் தடுத்துநிறுத்தியவர் தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளார் என்றால், தமிழைத் தூய தமிழாக வழக்கில்கொண்டுவர முனைந்து நின்றவர்கள் மொழிஞாயிறு பாவாணரும், அவர்தம் தலைமாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் ஆவார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த பாதிப்புகளைவிட இருபதாம் நூற்றாண்டில்தான் தமிழுக்கும், தமிழர்களுக்கும் அதிகப் பாதிப்புகள் ஏற்பட்டன. சமற்கிருதச் செல்வாக்கு, இந்தி எதிர்ப்பு, வடபுல ஆதிக்கம், ஆங்கிலவழிக்கல்வி, ஈழத்தமிழர் போராட்டம் என்று பலமுனைகளில் தமிழும், தமிழர்களும் தாக்கப்பட்டனர். இவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டவர்களுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்கவர்.

அஞ்சல்துறையில் அரசுப்பணியாற்றிய துரை.மாணிக்கம் அவர்கள் தம் இயக்கப் பணிகளுக்குச் சார்பாகப் பெருஞ்சித்திரனார் என்னும் புனைபெயரில் எழுதத்தொடங்கினார். இத்தகு மானப்பெயரில் சங்க காலத்தில் ஒரு பெரும்புலவர் வாழ்ந்துள்ளதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். மான உணர்வு நிறைந்த பழம்புலவரின் இப்பெயரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு இவருக்குச் சின்னஞ்சிறு அகவையில் தமிழ்ப்பற்று உருவாவதற்குக் காரணம் தமிழ்உணர்வு கொண்டவர்கள் ஆசிரியர்களாக வாய்த்தமையே ஆகும். தமிழ் மறவர் பொன்னம்பலனார், சேலம் நடேசனார் என்னும் புலவர்களிடம் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் கற்ற பெருஞ்சித்திரனாருக்குச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் ஆசிரியராக வாய்த்தமை தமிழ் செய்த தவமாகும்.

பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்னும் சிற்றூரில் வாழ்ந்த துரைசாமி-குஞ்சம்மாள் ஆகியோரின் மகனாக 10.03.1933 இல் பிறந்தவர். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பின்னர் துரை.மாணிக்கம் என்று குறிக்கப்பட்டார். ஆனால் பெருஞ்சித்திரனார் என்ற புனைபெயரே தமிழகத்தில் நிலைபெற்றது.

இளம் அகவையில் தமிழார்வம்கொண்டு விளங்கிய துரை.மாணிக்கம் மாணவப் பருவத்தில் குழந்தை என்னும் பெயரில் கையெழுத்து ஏடு நடத்தினார். அருணமணி என்னும் புனைபெயரில் மலர்க்காடு என்னும் கையெழுத்து ஏட்டையும் நடத்தினார். கல்லூரியில் பயிலும்பொழுது மல்லிகை, பூக்காரி என்னும் நூல்களை எழுதி, அதனைப் பாவேந்தரிடம் காட்டி வாழ்த்துப் பெற நினைத்தார். பாவேந்தர் அந்த நூல்களுக்கு அணிந்துரை நல்கவில்லை. பின்னாளில் பெருஞ்சித்திரனார் எழுதிய பாவியத்தைக் கொய்யாக்கனி என்னும் பெயரில் பாவேந்தர் தம் அச்சகத்தில் அச்சிட்டு வழங்கினார் என்பது தனிச்செய்தியாகும்.

துரை.மாணிக்கம் கல்லூரியில் பயிலும் காலத்தில் கமலம் என்ற பெண்ணைத் தம் வாழ்க்கைத் துணைவியாக மணந்துகொண்டார். அந்தக் கமலமே இன்றைய தாமரை அம்மையார் ஆவர்.

கல்லூரிக் கல்விக்குப் பிறகு புதுச்சேரியில் ஐந்து ஆண்டுகள் அஞ்சலகத்தில் பணியாற்றினார். 1959 இல் கடலூருக்குப் பணிமாற்றல் அமைந்தது. தமிழ் வளர்ச்சிக்கு ஓர் இதழ் தொடங்கி நடத்த விரும்பினார். இந்தக் காலகட்டத்தில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியில் இணைந்தார். பெருஞ்சித்திரனார் தொடங்க இருந்த இதழுக்குத் தென்மொழி என்னும் பெயரைப் பாவாணர் சூட்டினார். துரை.மாணிக்கம் அரசுப்பணியில் இருந்ததால் பெருஞ்சித்திரனார் என்னும் புனைபெயரைத் தேர்ந்தெடுத்து எழுதத் தொடங்கினார். பாவாணர் தென்மொழியின் சிறப்பாசிரியராக இருந்தார். பெருஞ்சித்திரனாரைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு இதழ் வெளிவந்தது. பதினாறு இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச்செறிவுடனும் புதுப்பொலிவுடனும் இதழ் மீண்டும் வெளிவந்தது.

தென்மொழி ஏடு தூய தமிழில் வெளிவந்த ஏடுகளுள் முதன்மை இடம் பெற்றதாகும். ஆசிரியர்கள், மாணவர்கள் தென்மொழி ஏடு படிப்பதை மிக உயர்வாக நினைத்தனர். இதனால் இதழ் விற்பனை மிகச்சிறப்பாக இருந்தது. பாவாணர் கொள்கைகளும், கருத்துகளும் மக்களிடம் சேர்வதற்குத் தென்மொழி மிகச்சிறந்த தொண்டாற்றியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் தமிழ்ப்பற்றினுக்குத் தென்மொழியும் காரணமாக இருந்தது.

தமிழ்ப்பற்றுடனும் கொள்கை உறுதியுடனும் தென்மொழியை நடத்திய சூழலில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உணர்வு மிகுதியாக இருந்தது. தம் கொள்கையை வெளியிடவும், செயல்படவும் அரசுப் பணி தடையாக இருந்ததால் அரசுப்பணியிலிருந்து பெருஞ்சித்திரனார் விலகினார். இவர் எழுதிய இருமாத(1965, மார்ச்சு,ஏப்பிரல்) இதழ்களின் ஆசிரிய உரை அரசைத் தாக்குவதாக இருந்ததால் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாகக் குற்றம் சாற்றப்பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். வேலூர் சிறைவாழ்க்கையில் ஐயை என்னும் பாவியத்தின் முதல்பகுதியை எழுதினார்.

பெருஞ்சித்திரனார் வேலூர் சிறையிலிருந்து வெளி வந்தவுடன் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் தமிழ்ச்சிட்டு என்ற இதழினை நடத்தினார். இந்த இதழில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உரிய வகையில் பாடல்களும், கட்டுரைகளுமாக வெளிவந்தன. தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் விரும்பிப்படிக்கும் இதழாகத் தமிழ்ச்சிட்டு விளங்கியது.

1968 இல் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டில் பாவாணர் பெயரளவுக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப்பெற்றதால் தனித்தமிழ் அன்பர்கள் வருந்தினர். எனவே தமிழ் அமைப்பு ஒன்றை உருவாக்க நினைத்தனர். திருச்சியில் நடைபெற்ற தனித்தமிழ்க்கழக மாநாடு உலகத் தமிழ்க்கழகம் என்ற அமைப்பு உருவாகக் காரணமாக அமைந்தது. உ.த.க.வின் பொதுச்செயலாளராகப் பெருஞ்சித்திரனார் பணிபுரிந்தார். தமிழைப் பிறமொழிப் பிணிப்பிலிருந்து விடுவிப்பது, தமிழ் திராவிடத்திற்குத் தாயும், ஆரியத்துக்கு மூலமும் என்னும் உண்மையை நிலைநாட்டுவது, தமிழை அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தி வளப்படுத்துவது பாவாணரின் உயரிய நோக்கமாக இருந்ததால் அக்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உ.த.க.வின் கொள்கைகள் வரையறுக்கப்பட்டன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வெளியேற்றப்பட்டுப் பாவாணர் பணியின்றி இருந்தபொழுது அவர்தம் அகரமுதலிப் பணிக்கு உறுதுணையாகப் பொருளுதவி வழங்கும் திட்டத்தைத் தென்மொழியில் அறிமுகம் செய்து பாவாணரின் தமிழ்ப்பணிக்குப் பெருஞ்சித்திரனார் உதவியாக இருந்தார்.

தென்மொழி ஏட்டின் வழியாகத் தமிழகம் முழுவதும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனார் 1972 இல் திருச்சிராப்பள்ளியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டை நடத்தினார். 1973 இல் மதுரையில் இத்தகு மாநாடு நடத்த முயன்றபொழுது சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பாட்டு உணர்வால் தமிழகத்தில் தமிழ் உணர்வு தழைத்தோங்கப் பாடுபடுவதை நினைத்துப் பாவாணர் அவர்கள் “பாவலரேறு” என்னும் மதிப்புமிக்கப் பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் வாழ்ந்த தமிழன்பர்களின் அழைப்பினை ஏற்று 1974 இல் மூன்று திங்கள் அயலகப் பயணம் மேற்கொண்டார். இதன் பிறகு கடலூரிலிருந்த தென்மொழி அச்சகம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. இந்த நிலையில் இந்தியாவெங்கும் நெருக்கடி நிலை(MISA) நடைமுறைக்கு வந்தது. ஆட்சியாளர்கள் தங்கள் கருத்துக்கு முரண்பட்டவர்களைச் சிறையில் அடைத்தனர். அவ்வகையில் பெருஞ்சித்திரனார் தமிழக விடுதலை மாநாடு நடத்த முனைந்தமைக்குக் கைதுசெய்யப்பெற்றுச் சென்னைச் சிறையில் அடைக்கப்பெற்றார். நெருக்கடிநிலை காரணமாக சிறைசெய்யப்பெற்ற அரசியல் கைதிகளுக்கு அவர்களின் கட்சியினர் குடும்பத்திற்கு உதவினர். ஆனால் பெருஞ்சித்திரனாரின் குடும்பம் பொருள்நிலையில் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. இந்த முறை சிறைக்குச் சென்றபொழுது ஐயை நூலின் இரண்டாம் பகுதி எழுதி நிறைவுசெய்யப்பெற்றது. இக்காலகட்டத்தில் தென்மொழி இதழ் தடைசெய்யட்டது. தமிழ்ச்சிட்டு தென்மொழியின் கொள்கைகளைத் தாங்கி வெளிவந்தது.

1977 இல் இலங்கையில் அறிஞர் க.பொ.இரத்தினம் ஏற்பாடு செய்திருந்த திருக்குறள் மாநாட்டிற்குப் பெருஞ்சித்திரனார் அழைக்கப்பட்டார். அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். 1978 இல் அந்தமான் சென்று அங்குத் தமிழ்ப்பொழிவு செய்து மீண்டார்.

பெருஞ்சித்திரனார் தமிழகத்தில் நடைபெற்ற தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவான பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறையையே வாழ்விடமாகக்கொண்டிருந்தவர். படுக்கையறை முனகல்களைப் பாட்டாக வடிக்கும் இன்றையப் போலிப்பாவலர்கள் கோடம்பாக்கத்தைவிட்டு வெளியே வரப் பல இலட்சம் வசூலிக்கும் நிலையில் தனித்தமிழில் எழுதுவதற்கு ஒப்புமைசொல்லமுடியாத உயர்புலமை வாய்த்த பெருஞ்சித்திரனார் தம் வாழ்நாள் முழுவதும் சுற்றிச்சுழன்று பணியாற்றி வறுமையிலும், சிறையிலுமாகக் கழித்தார் என்பதே அவர்தம் வரலாற்றுப் பெருமை. தென்மொழி அன்பர்கள் அனுப்பும் நன்கொடையில்தான் அவர் குடும்பவாழ்வு இருந்தது. காலம் முழுவதும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என நினைத்து உழைத்த பெருஞ்சித்திரனாருக்குத் தமிழகம் அளித்த சிறப்புப் பரிசில் வறுமைதான்.

போராட்டங்களுக்கும், வறுமைக்கும், சிறை வாழ்க்கைக்கும் இடையில் பெருஞ்சித்திரனார் எழுதிய பாடல்கள், நூல்கள் தனிச்சிறப்பிற்கு உரியன. பெருஞ்சித்திரனார் அயலிடங்களுக்குச் சென்று அமைதி இடம் தேர்ந்து, இலக்கியம் புனைந்தாரில்லை. காவல்துறையின் நெருக்கடி, போராட்டம், வழக்கு, அச்சுறுத்தல்களுக்கு இடையில்தான் இவர்தம் படைப்பிலக்கியப் பணி இருந்தது.

இவரின் படைப்பில் முனை மழுங்காத யாப்பு அமைப்புகள், எதுகை, மோனைக்கு வறுமையில்லாத சொல்லாட்சிகள் அமைந்திருக்கின்றன. எடுத்துக்கொண்ட பொருளை இனிதின் விளக்கும் பாத்திறம் இவருக்கு நிகராக இந்த நூற்றாண்டில் யாருக்கும் வாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சான்றாகத் தந்தை பெரியாரைப் பற்றி பெருஞ்சித்திரனார் வரைந்திருக்கும் பாட்டு ஓவியம் எளிய இனிய தனித்தமிழில் இதோ:

“பெரும்பணியைச் சுமந்த உடல்!
பெரும்புகழைச் சுமந்த உயிர்
‘பெரியார்’ என்னும்
அரும்பெயரைச் சுமந்த நரை!
அழற்கதிரைச் சுமந்தமதி;
அறியாமைமேல்
இரும்புலக்கை மொத்துதல்போல்
எடுக்காமல் அடித்தஅடி!
எரிபோல் பேச்சு!
பெரும்புதுமை! அடடா,இப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்றதம்மா!...

உரையழகு இங்கு எவர்க்குவரும்?
உடலழகிங் கெவர்பெற்றார்?
ஒளிர்முகத்தின்
நரையழகிங் கெவர்க்குண்டு?
நாளெல்லாம் வாழ்க்கையெல்லாம்
நடைநடந்து
திரையுடலை-நோயுடலைச்
சுமந்துபல ஊர்திரிந்து
தொண்டு செய்த
இரைகடலை அடடா,இவ்
வெரியேற்றைத் தமிழ்நாடும்
இழந்ததம்மா!...”

எனப் பகுத்தறிவுப் பகலவனைப் பாட்டுவடிவில் நம் கண்முன் நிறுத்துவார்.

காவிரியைப் பற்றி:

“பூவிரித்தாய்; வண்ணப் பொழில்விரித்தாய்; தென்னைத்தேன்
மாவிரித்தாய்; வாழைப் பலாவிரித்தாய் - நாவரிக்கப்
பாவிரித்தேன் பண்டைப் புகழ்பாடும் வண்டினஞ்சூழ்
காவிரித்தாய் காவிரித்தாய் என்று ”

பாடியுள்ளமை இவரின் இயற்கை ஈடுபாடு, கற்பனையாற்றல், மொழியாளுமை யாவற்றையும் காட்டும்
அறுபருவத் திருக்கூத்து என்னும் பெயரில் இவர் வரைந்துள்ள நூலில் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் ஆறு பருவத்திலும் நடைபெறும் இயற்கை மாற்றங்களையும் கூர்ந்து நோக்கிப் பாடல் வடித்துள்ள பாங்கு போற்றத்தக்கது. சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு இயற்கையைக் கூர்ந்து நோக்கி நுட்பமாகப் பதிவுசெய்துள்ளவர் பெருஞ்சித்திரனார் எனில் மிகையன்று. சங்கப் புலவர்களும் தாம் பாடும் இடத்திற்குத்தக இயற்கையை வரைந்துள்ளனரே அன்றிப் பெருஞ்சித்திரனார் போல் அறுபருவத்தின் நிகழ்வுகளையும் ஒட்டுமொத்தமாகப் பதிவு செய்தவர் தமிழ் உலகில் இல்லை எனலாம். வடமொழியில் காளிதாசர் ‘இருதுசம்காரம்’ என்ற நூலில் இயற்கையைப் பாடியுள்ளார். இதுபோல் நூல் தமிழில் இல்லை என்னும் குறையைச் சரிசெய்ய அறுபருவத் திருக்கூத்து உதவும்.

இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இவர் வரைந்திருக்கும் பாட்டுகள் தமிழகத்தில் பரப்பப்படவேண்டிய அரிய செல்வங்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் முழுவதும் வஞ்சிப்பாவில் அமைந்த நூல் இதுவரை வெளிவரவில்லை. அக்குறையை நீக்கியவர் பெருஞ்சித்திரனார் எனின் மிகையன்று. மகபுகுவஞ்சி என்ற பெயரில் இவர் வரைந்த பா நூல் சிறப்பிற்கு உரியது.

மகபுகுவஞ்சி நூல் இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் பெண்ணொருத்திக்கு இல்லறச் சிறப்பின் மேன்மையைப் பல நிலைகளில் விளக்கிக்காட்டும் வகையில் எழுதப் பெற்றுள்ளது. இந்நூல் முப்பது பாடல்களைக் கொண்டுள்ளதுடன் அப்பாடல்களுக்கு நூலாசிரியரே தெளிந்த, விரிந்த உரையும் வரைந்துள்ளதால் நூல் கூறும் பொருளை மயக்கமின்றி உணரமுடிகின்றது. மகபுகுவஞ்சி அகவியல், புறவியல், பொதுவியல் என்னும் மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. இயலுக்குப் பத்துப்பாடல்கள் என்ற முறையில் முப்பதுபாடல்கள் உள்ளன.

“கணவற்றழூஉம் கழைமென்றோளீ!
உணவாய்ந்திடு; உடலோம்பிடு;
குடிகாப்பிடு; குறைதாழ்ந்திரி;
வடிநீர்தவிர்; வளர்புன்னகை
வரினே,
ஒருநாள் ஒருநாள் உறுகொண் கனொடு
திருநாள் காண்குவை தலைநாட் டகவே!”

என வரும் மகபுகுவஞ்சியின் பாடல் வஞ்சிப்பாடலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

“நூறாசிரியம்” என்ற பெயரில் இவர் வரைந்த பாட்டும் உரையுமான நூல் சங்கப் புலவருக்கு நிகரானவராக இவரை அடையாளப்படுத்தும். பாட்டும் உரையும் ஒன்றுக்கு ஒன்று போட்டியிட்டு அறிவுவளம் காட்டும்.

பல்வேறு காலங்களில் பாடப்பெற்ற பெருஞ்சித்திரனாரின் பாடல்களைத் தென்மொழி அன்பர்களின் முயற்சியால் கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் தமிழகக் கல்வி நிறுவனங்கள் போற்றிக்கொண்டாடப்பட வேண்டிய பாடல்கள் ஆகும்.

திருக்குறளுக்குப் பெருஞ்சித்திரனார் வரைந்துள்ள மெய்ப்பொருளுரை அரிய புலமை நலம் காட்டும் சான்றாகும். பெண்ணின் சிறப்புரைக்கும் காதல் காப்பியமான பெருஞ்சித்திரனாரின் ஐயை பல பல்கலைக்கழகங்களில் பாட நூலாக இருந்த பெருமைக்குரியது.

பெருஞ்சித்திரனார் அவர்களின் முதல்நூல் கொய்யாக்கனி 1955 இல் பாவேந்தரின் அணிந்துரையுடன் வெளிவந்தது. ஐயை 1968 (முதல்தொகுதி) வெளியிடப்பெற்றது. பாவியக்கொத்து, எண்சுவை எண்பது, கற்பனையூற்று, பள்ளிப்பறவைகள், மகபுகுவஞ்சி என்பன அடுத்தடுத்து வெளிவந்தன.

தமிழைச் செழுமைப்படுத்த தம் வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் 11.06.1995 இல் சென்னையில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.16.06.1995 இல் நடைபெற்ற இவர்தம் இறுதி ஊர்வலத்தில் ஓர் இலக்கத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு 12 கல்தொலைவு நடந்து வந்தனர். சென்னை மேடவாக்கத்தில் பெருஞ்சித்திரனாருக்குத் தமிழ்க்களம் என்னும் பெயரில் நினைவிடம் அமைக்கப்பெற்று ஐயாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. தமிழக வரலாற்றில் பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இதழ் பல்லாயிரம் மொழிமறவர்களை உருவாக்கிய பாசறை எனில் அது மிகையன்று.

குறிப்பு:
2012 திசம்பர் மாத அந்திமழை இதழில் வெளிவந்த கட்டுரையின் முழுவடிவம். படம் வரைந்த ஓவியருக்கும், வெளியிட ஒப்புதல் தந்த அந்திமழை குழுவினருக்கும் நனி நன்றியன். இக்கட்டுரையை வெளியிட விரும்புவோர் முன் இசைவு பெறுக.
logoblog

Thanks for reading

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment