சிறிலங்காவில் இந்திய அமைதி காக்கும் படையும் என் அனுபவங்களும் - கேணல் ஆர்.ஹரிகரன்
[ புதன்கிழமை, 12 பெப்ரவரி 2014, 12:58 GMT ] [ நித்தியபாரதி ]
சிறிலங்காவில் இந்திய அமைதி காக்கும் படை பணியில் ஈடுபட்ட போது இந்திய இராணுவப் புலனாய்வுத் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரன், தான் பெற்றுக் கொண்ட அனுபவம் தொடர்பாக விரிவாக விளக்குகிறார். இது இங்கு செவ்வி வடிவில் வழங்கப்படுகிறது. [Interviewer: Parasaran Rangarajan, Editor, International Law Journal of London] இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
கேள்வி: நீங்கள் எங்களுடன் இணைந்து கொண்டமைக்கு நன்றி. நீங்கள் கிட்டத்தட்ட மூன்று பத்தாண்டுகளாக இந்திய இராணுவத்தில் பணியாற்றியுள்ளீர்கள் என நான் அறிகிறேன். இதற்காக நான் உங்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்திய புலனாய்வுப் பிரிவில் நீங்கள் இணைந்து கொண்டு பின்னர் அதன் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியது வரையான தங்களின் இந்த நீண்ட பயணத்தில் பெற்றுக் கொண்ட அனுபவத்தை விளக்குவீர்களா?
பதில்: நான் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் தொடர்பாக பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறிலங்காவில் 1987-90 வரையான காலப்பகுதியில் கடமையாற்றிய இந்திய அமைதி காக்கும் படையினரின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராக நான் பதவி வகித்த போது பெற்றுக் கொண்ட அனுபவங்களை இங்கு நான் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் அப்போது இந்திய இராணுவத்தின் தலைமைச் செயலகத்தின் கீழ் இயங்கிய 'புலனாய்வுப் பிரிவில்' பணியாற்றினேன். இந்தப் பிரிவானது பாதுகாப்பு நலன் கருதப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் தலையிடுவதைத் தடுப்பதுடன், தகவல்களைப் பெற்றுக் கொள்கின்ற பணியை ஆற்றியது. புலனாய்வுப் பிரிவானது கிளர்ச்சிகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான யுத்தம் மற்றும் சமாதானம் ஆகிய இரண்டிற்கும் தேவையான இராஜதந்திர மற்றும் தந்திரோபாய மதிப்பாய்வுகளை மேற்கொண்டு வருகின்ற பிரிவாகும். நான் பீரங்கிப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன், 1965 யுத்தத்தில் பீரங்கிப் படை அதிகாரியாக பங்குபற்றினேன். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நான் 'புலனாய்வுப் பிரிவுக்கு' மாற்றப்பட்டேன். இந்தப் பிரிவானது 1962ல் இடம்பெற்ற இந்திய-சீனப் போருடன் விரிவாக்கப்பட்டது.
கிட்டத்தட்ட மூன்று பத்தாண்டுகள் வரை இராணுவப் புலனாய்வு அதிகாரியாகக் கடமையாற்றிய காலப்பகுதியில் நான் பல புலனாய்வு அமைப்புக்களுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன். இந்தியாவின் 'ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவு (றோ), 'உளவுத்துறை (Intelligence Bureau - IB), இந்தியாவின் புலனாய்வு எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு போன்ற பல்வேறு புலனாய்வு அமைப்புக்களுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன். இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியவன் என்ற வகையில் நான் களம் மற்றும் தள அனுபவங்களைப் பெற்றுள்ளேன். பங்களாதேஸ் மற்றும் பர்மா ஆகிய நாடுகள் உட்பட 12 கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகளில் நான் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுள்ளேன்.
இவ்வாறான அனுபவங்களே நான் சிறிலங்காவில் கடமையில் ஈடுபட்ட இந்திய அமைதி காக்கும் படைக்கான இராணுவப் புலனாய்வுத் தலைமைப் பொறுப்பைப் பெற்றுக் கொள்வதற்கான காரணமாக அமைந்தது. தமிழ் பேசுகின்ற இராணுவப் புலனாய்வின் மூத்த அதிகாரியாக நான் சிறிலங்காவில் கடமையாற்றியிருந்தேன் என்பது மிக முக்கியமான காரணியாகும்.
சிறிலங்காவில் பணியாற்றிய இந்திய அமைதி காக்கும் படையின் தலைமைப்பீடத்தில் முதலாவதும் கடைசியுமான புலனாய்வுப் பிரிவின் கேணல் ஜெனரல் அதிகாரியாக நான் சேவையாற்றியிருந்தேன்.
மூத்த இராணுவப் புலனாய்வு அதிகாரி என்ற வகையில், நாளாந்தம் ஏற்படுகின்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான ஆலோசனை என்னிடமிருந்தே பெறப்பட்டன. எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவில் இராணுவப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியது என்பது மிகவும் வேறுபட்ட அனுபவமாகும். அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் என்கின்ற அமைப்புத் தொடர்பாக மட்டுமே நாங்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவேண்டியிருந்தது. நாங்கள் இங்கு றோ அமைப்பின் வளங்களுடன் செயற்பட்டோம். புலிகள் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் அரசியல் ரீதியாக இந்திய அரசாங்கத்துடன் முக்கிய கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறிலங்காவில் பணியாற்றிய அனைத்து இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளும் எனது வழிநடத்தலின் கீழ் செயற்பட்டன. இது இராணுவத் தேவைகளை நிறைவுசெய்வதற்குப் பெரிதும் உதவியது. றோ, IB, சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் தமிழ்நாட்டு காவற்துறை தேவையேற்படின் சிறிலங்காக் காவற்துறை போன்றவற்றின் ஒத்துழைப்புடனும் நெருக்கமான தொடர்புடனும் நான் பணியாற்றினேன்.
கேள்வி: 1980களில் சிறிலங்காவில் உண்மையில் என்ன நடக்கிறது எனவும் இது ஒரு இனப்படுகொலை எனவும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கருதியிருந்தார். இந்த விடயத்தில் இந்தியா சாதாரணமான ஒரு பார்வையாளராக இருந்துவிடக்கூடாது எனக் கருதப்பட்டு தமிழ்ப் புலிகளுக்கு 'றோ' அமைப்பு இராணுவப் பயிற்சி வழங்கியிருந்தது. இந்நிலையில் சிறிலங்காவுக்கு இந்திய அமைதி காக்கும் படை சென்றதற்கான காரணம் என்ன? இக்காலப்பகுதியில் உங்களது பங்கு என்ன? உங்களது நாளாந்தப் பணிகள் எவ்வாறிருந்தன?
பதில்: இந்தக் கேள்விக்குரிய பதில்களை நான் சில பகுதிகளாகப் பிரித்துக் கூறவிரும்புகிறேன்.
01. 1983ல் இடம்பெற்ற இனப்படுகொலை விவகாரம்: 1983ல் சிறிலங்காவில் இடம்பெற்ற தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒரு இனப்படுகொலையா? ஓப்பிட்டளவில் நோக்கில், 1971ல் பங்களாதேசில் இடம்பெற்றதைப் போன்றோ அல்லது றுவாண்டா மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இடம்பெற்றது போன்று, எண்ணிக்கையிலோ அல்லது பண்புகளிலோ சிறிலங்காவில் 1983ல் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலையல்ல. 'இனப்படுகொலையைத் தடுத்தல் தொடர்பான ஐ.நா சிறப்பு ஆலோசக செயலகத்தால்' 1948ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2வது பிரிவின் பிரகாரம், சிறிலங்காவில் 1982ல் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என விவாதிக்கப்படலாம். இவ்வாறான விவாதத்தை சட்ட வல்லுனர்களுக்காக நான் இங்கு முன்வைக்கிறேன். தமிழர் விகாரம் தொடர்பில் அரசியல் சார் நலனை அடிப்படையாகக் கொண்டு 1980களில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என இந்திரா காந்தி அறிவித்திருந்தார் என்பதே உண்மையாகும்.
02. இந்தியாவின் ஈடுபாடு: 1983ல் சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கித் தாக்குதலில் சிங்கள இராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழர் எதிர்ப்புணர்வை வலுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசாங்கத்தால் 1983 இனப்படுகொலை முன்னெடுக்கப்பட்டது. இதன்பிறகு சிறிலங்கா விவகாரத்தில் இந்திரா காந்தி நேரடியாகத் தலையீடு செய்வதற்கு பின்வரும் மூன்று காரணங்கள் இருந்தன.
• உண்மையான அரசியல்: 1983ல் 100,000 இற்கும் மேற்பட்ட சிறிலங்காத் தமிழர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருந்தனர். இவர்கள் இந்திய அரசியலில் பெரிதும் அனுதாப அலையை வீசுவதற்குக் காரணமாக இருந்தார்கள். 1971ல் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்திரா காந்தியின் ஆட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியான பலத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இந்திரா காந்திக்கு ஏற்பட்டது. சிறிலங்காத் தமிழர்களுக்கு எதிரான கிளர்ச்சியையும் அதன் பெறுபேறாக தமிழ்நாட்டில் சிறிலங்காத் தமிழர்கள் தஞ்சம் புகுந்ததையும் இந்திரா காந்தி தனது அரசியல் நலனுக்காகப் பயன்படுத்தினார். 1984ல் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இவரது மகனான ராஜீவ் காந்தியும் தமிழர் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நிலையேற்பட்டது.
• பனிப்போருக்கான முன்னுரிமை: 1971ல் இந்திய-சோவியத் நட்புறவு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் தென்னாசியாவில் பனிப்போர் சூழல் சூடுபிடித்திருந்த போதிலும் அமெரிக்காவுடன் சிறிலங்கா தொடர்ந்தும் சுமூகமான நெருக்கமான உறவைக் கொண்டிருந்ததை இந்திரா காந்தி அவதானித்தார். முஜிபுல்லா அரசாங்கத்திற்கான தனது ஆதரவை வழங்குவதற்காக ஆப்கானிஸ்தானுக்குள் சோவியத் இராணுவம் உள்நுழைந்த போது, இந்திய உபகண்டத்தில் சோவியத்திற்கு எதிராக அமெரிக்கா பதிலி யுத்தத்தில் இணைந்து கொண்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவின் அயல்நாட்டில் தனது காலை உறுதியாகப் பதிக்க வேண்டும் என அமெரிக்கா கருதியது. இதனால் இந்த நோக்கத்திற்காக அமெரிக்கா, சிறிலங்காவைப் பயன்படுத்தியது. சிறிலங்காவில் அமெரிக்கா தனது தலையீட்டை மேற்கொள்வதை முளையிலே கிள்ளிஎறிந்து விட வேண்டும் என இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் விரும்பினர். இதற்காக ஒரு பலமான தகவலை அமெரிக்காவுக்கு அனுப்ப இவர்கள் விரும்பினர்.
• இந்திரா காந்தியின் நடவடிக்கை: சுதந்திர பங்களாதேசை உருவாக்குவதற்கான இந்திரா காந்தியின் வெற்றிகரமான நகர்வானது இவரது நம்பிக்கைக்கு மேலும் பலம் சேர்த்தது. அடக்கப்பட்ட மக்களின் மீட்பர் என மக்கள் அனைவரும் தன்னைக் கருதுவதை இந்திரா காந்தி உணர்ந்து கொண்டார். இந்நிலையில் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த சிறிலங்காத் தமிழர்களின் பிரச்சினைகளில் தலையீடு செய்து அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என இந்திரா காந்தி கருதினார். ஆனால் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் அனுசரணைகளை மேற்கொள்வதற்காக இந்திரா காந்தியின் மகனான ராஜீவ் காந்தியால் முன்னெடுக்கப்பட்ட நேர்மையான பல முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் சிறிலங்காவில் தலையீடு செய்ய வேண்டுமென ராஜீவ் கட்டளையிட்டார். 1987ல் சிறிலங்கா அதிபரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியா, சிறிலங்காவில் இராணுவத் தலையீட்டை மேற்கொண்டது.
03. தமிழ் ஆயுதக்குழுக்களுக்கான இராணுவப் பயிற்சிகள்: தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு றோ அமைப்பின் தலைமையில் பயிற்சிகள் வழங்கப்பட்டனவே தவிர இந்திய இராணுவத்தால் வழங்கப்படவில்லை. இதில் இராணுவம் தலையீடு செய்யவில்லை என்பதால் இதன் விபரங்கள் தொடர்பாக என்னால் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் சிறிலங்காவில் செயற்பட்ட ஆயுதக்குழுக்களுக்கான றோவின் இராணுவப் பயிற்சியில் இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி வழங்கியிருந்தனர். இவர்கள் பிரதானமாக ஆயுதப் பயிற்சிகள் மற்றும் தந்திரோபாயப் பயிற்சிகளை வழங்கப் பயன்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்தப் பயிற்சியில் இராணுவம் உள்வாங்கப்பட்டமை தொடர்பாக பிழையான தகவல்கள் பல காணப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்திய இராணுவம் முன்னெடுத்தது. பங்களாதேசுக்கு சுதந்திரம் வழங்குவதற்காக 1971ல் இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்தின் போது பெங்காளி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளித்திருந்தது. இதில் இந்தியா தான் பெற்றுக் கொண்ட அனுபவத்தை வைத்தே புலிகள் அமைப்பை இந்தியா எடைபோட்டது. தமிழ் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தீர்வுகாண வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்திரா காந்தி, தமிழ் ஆயுதக்குழுக்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கான ஆதரவை வழங்கினார். இது இந்திரா காந்தியின் அரசியல் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாகும். 1984ல் தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு இந்தியா பயிற்சி வழங்கியது. கிளர்ச்சிகள் இடம்பெறும் பிரதேசங்களில் புலனாய்வுப் பணிகளை ஆற்றிய அனுபவத்தைக் கொண்டவன் என்ற வகையில், பிறிதொரு நாட்டின் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஜனநாயக நாடுகளால் வழங்கப்படும் இராணுவப் பயிற்சிகள் எதிர்பார்க்கும் விளைவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு மூலோபாயம் என நான் கருதுகிறேன். இந்த விடயம் தொடர்பாக என்னிடம் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஆலோசனை கேட்ட போது நான் இதனைச் சுட்டிக்காட்டினேன். ஆனால் தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு இந்திய இராணுவம் பயிற்சி வழங்கவில்லை என்பது உடன்படற்றது என அவர்கள் கூறினர்.
04. சிறிலங்காவில் இந்திய அமைதி காக்கும் படை: யூலை 1987ல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் மறுநாள் சிறிலங்காவுக்கு இந்திய அமைதி காக்கும் படையினர் அனுப்பப்பட்டனர். தமிழ் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவதற்கு தனக்கு உதவுமாறு ஜெயவர்த்தனா கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் ஜெயவர்த்தனாவுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக இந்திய அமைதி காக்கும் படை அனுப்பப்பட்டனர் என்பது வெளிப்படையானது. தமிழ் சிறுபான்மையினருக்கு ஜெயவர்த்தனா அரசாங்கம் அதிகாரப் பகிர்வுகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்திய அமைதி காக்கும் படை சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டது. இது ஒரு குறுகிய காலத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட மறுத்ததுடன் ஏனைய தமிழ் ஆயுதக் குழு உறுப்பினர்களைப் படுகொலை செய்யத் தொடங்கிய போது அதனை சீர்செய்து புலிகளை சமாதானப்படுத்துவதற்காக தனது படைகளைப் பயன்படுத்துவதென இந்தியா தீர்மானித்தது. இதற்காக சிறிலங்காவுக்கு இந்திய அமைதி காக்கும் படை அனுப்பப்பட்டது.
05. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான அனுபவம்: யாழ்ப்பாணத்துடன் தொடர்பு வைத்ததற்காக நான் எனது குடும்பத்திற்கு நன்றி கூறுகிறேன். நான் நீண்ட காலமாக தமிழ்-சிங்கள இனப் பிரச்சினை தொடர்பான பல்வேறு சிக்கல்களை அறிந்துவருகிறேன். சிறிலங்காவுடன் எமது குடும்பத்தினர் கொண்டிருந்த தொடர்புகளை சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் பலரும் தமிழர் பிரதிநிதிகள் பலரும் அறிந்திருந்தனர். எனினும், எனது தொழில் சார்ந்த ரீதியில் நான் ஒருபோதும் இத்தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இராணுவப் பிரச்சினைக்கான பிரதான இடமாக சிறிலங்கா விளங்கும் என்பதை இராணுவப் புலனாய்வாளர்கள் ஒருபோதும் கருதிக் கொள்ளவில்லை. இதனால் 1987வரை இராணுவப் புலனாய்வு எனது அறிவைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தமிழ் ஆயுதக் குழுக்களுள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான தளபதியான கிட்டு தனது ஒரு காலை இழந்த பின்னர் நீண்ட காலமாக சென்னையில் வசித்தார். கிட்டுவுக்கு எனது குடும்பத்தை நன்றாகத் தெரியும். இதனால் ஆகஸ்ட் 1987ல் நான் சிறிலங்காவில் காலடி எடுத்து வைத்தபோது நான் யார் என்பதை புலிகள் அமைப்பு அறிந்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் என்னுடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணுவார்கள் என உள்ளுர் ஊடகவியலாளர் சிலரும் அரசியல்வாதிகள் சிலரும் கருதினர். இவ்வாறான சூழலில் நான் ஒருபோதும் பிரபாகரனைச் சந்திப்பதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. இதேபோன்று இந்திய இராணுவப் புலனாய்வுப் பிரிவும் பிரபாகரனுடன் அரசியல் ரீதியான தொடர்பைப் பேண முயற்சிக்கவில்லை. எமது இராணுவ ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்கள் இதனை மேற்கொண்டனர். பிரபாகரனுடன் இந்திய இராணுவத்தினர் பேச்சுக்களை நடாத்திய போது நாங்கள் பிரபாகரனின் செயற்பாட்டு முறைமை தொடர்பான விபரங்களைச் சேகரித்தோம். இவரது நடவடிக்கைகள், பாதுகாப்பு, நகர்வுகள், இவரது நண்பர்கள் போன்ற பல்வேறு விடயங்களை நாங்கள் சேகரித்தோம். ஆனால் சிறிலங்காவில் எமது பணியை ஆரம்பித்த போது புலிகள் அமைப்புடன் யுத்தம் ஒன்றில் ஈடுபடுவோம் எனக் கற்பனை கூடச் செய்துபார்க்கவில்லை.
கேள்வி: இந்திய அமைதி காக்கும் படை ஆரம்பத்தில் புலிகள் அமைப்பால் வரவேற்கப்பட்டார்கள் என நான் அறிகிறேன். ஆனால் இந்த நிலை பின்னர் தலைகீழாக மாறியது. சிறிலங்காத் தமிழர்களுக்கு எதிராக இந்திய அமைதி காக்கும் படையினர் பல்வேறு மீறல்களை மேற்கொண்டதால் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் போர் மூண்டது. இது தொடர்பில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அதாவது இந்தியப் படைகள் தமிழர்களுக்கு எதிராக ஏதாவது மீறல்களைப் புரிந்ததா? பொதுவாக இது தொடர்பான தங்களது கருத்து என்ன?
பதில்: ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையுடன் நடுநிலையான தொடர்பைப் பேணினர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இந்தியப் படைகளால் மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக முறையிடப்பட்டன. பிரபாகரன் தனக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் எனவும் இடைக்கால நிர்வாகத்தில் பகுதியளவான அதிகாரம் வழங்கப்படுவதை பிரபாகரன் விரும்பவில்லை.
தமிழர்கள் சிறிலங்காவில் இரண்டாந்தரக் குடிமக்களாக நடாத்தப்படுவது தொடர்பில் இந்தியப் படைகள் அனுதாபம் காட்டிய போதிலும், பிரபாகரன் ஒரு சுதந்திரப் போராளி என நாங்கள் ஒருபோதும் கருதவில்லை. ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் தன்னுடன் ஒத்துவராத தமிழ் அரசியற் தலைவர்கள் எனப்பலரை பிரபாகரன் இரக்கமற்ற வகையில் படுகொலை செய்தார். சிங்கள இராணுவ முகாமில் முறைப்பாடுகள் செய்தவர்கள், பத்து கிராம் போதைப் பொருட்களை வைத்திருந்தவர்கள், காவற்துறைக்கு தகவல் வழங்கியோர் என 102 பொதுமக்களை புலிகள் அமைப்பினர், நாசி ஜேர்மனியரின் Gestapo பாணியில் படுகொலை செய்து குப்பைக் கிடங்குகளில் போட்டனர். இதனை என்னால் நினைவுபடுத்த முடிகிறது. இந்தியப் படைகளுடனான முதல் நாள் யுத்தத்தின் போது றூபவாகினி தொலைக்காட்சி சேவைப் பணியாளர்கள் சிலர் புலிகள் அமைப்பால் உயிருடன் பிடிக்கப்பட்டு மின்விளக்கு கம்பத்துடன் ரயர்களால் கட்டப்பட்டு தீ மூட்டப்பட்டனர். நாங்கள் அவர்களது பாதி எரிந்த உடலங்களைப் பார்த்தோம். நான் இவற்றைப் பார்த்த போது பிரபாகரனின் தலைமைத்துவம் மற்றும் இவரது ஈழம் தொடர்பான கருத்தியல் மீது நான் கொண்டிருந்த மிகக் குறைந்த ஆர்வத்தையும் இழந்தேன். ஆயுதங்களின் பலத்தை மட்டும் பிரயோகித்து அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்கின்ற பிரபாகரனின் கொள்கைப் பிடிவாதமே 2009ல் புலிகள் அமைப்பு யுத்தத்தில் தோல்வியுற்றமைக்கான பிரதான காரணமாகும்.
சிறிலங்காவில் இந்திய அமைதி காக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது இந்தப் படைகளால் இழைக்கப்பட்ட சில மீறல்களை ஆராய்ந்து கொள்ளலாம். இந்தியப் படைகளின் கூட்டு நடவடிக்கையின் போது பல அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்த நோயாளிகள் மற்றும் வைத்தியர்கள் இந்தியப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிக மோசமான மீறலாகும். இதேபோன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பதுங்கித் தாக்குதலின் போது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை பிறிதொரு முக்கிய மீறல் சம்பவமாகும். இந்த மீறல்கள் தொடர்பில் உண்மையான விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதில் இராணுவத் தலைமையும் அரசாங்கமும் தவறிழைத்துவிட்டது என நான் கருதுகிறேன்.
தற்போது உள்ளது போன்று 1987-88 காலப்பகுதியில் மனித உரிமை விவகாரம் என்பது உலகில் பெரிதளவாகப் பேசப்பட்ட விவகாரமல்ல. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. சோவியத்திற்கு எதிராக ஆப்கானில் அமெரிக்கா பதிலிப் போரைத் தொடுத்த போது இதை விட மிகப் பெரிய படுகொலைகள் இடம்பெற்றன. இந்தியா தனக்கெதிராக முன்வைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்த முன்வரவில்லை. தீவிரவாதிகளுக்கு எதிராக போரை முன்னெடுக்கும் போது பல்வேறு நடைமுறைசார் பிரச்சினைகள் உள்ளன. இங்கு சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும். கிளர்ச்சிகளை முறியடிக்கும் யுத்தத்தில் பொதுமக்கள் அகப்படாதிருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், இதனைக் கண்காணிப்பதற்கான பொறிமுறையும் உருவாக்கப்படவேண்டும். இவ்வாறான மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக தற்போது இந்திய இராணுவத்தில் பொறிமுறை ஒன்று உள்ளது.
கேள்வி: 2009ல் சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோருவது நியாயமானது என நீங்கள் கருதுகிறீர்களா? இவ்வாறான ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட்டால் சிறிலங்காவில் இந்திய அமைதி காக்கும் படையால் இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட வேண்டும் என அண்மையில் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க சுட்டிக்காட்டியிருந்தமை தொடர்பில் உங்களது கருத்து என்ன?
பதில்: சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புக்களாலும் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்களை உறுதிப்படுத்துகின்ற சாட்சியங்கள் உள்ளன. இவற்றைக் கொண்டு தவறிழைத்தவர்களை இனங்கண்டு தண்டனை வழங்க வேண்டும். போர்க் குற்றங்கள் தொடர்பில் சிறிலங்கா பாரபட்சமான விசாரணைகளை மேற்கொள்கிறது. இதனால் இவ்வாறான மீறல்கள் மீது அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு சிறிலங்கா அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். உண்மையான அனைத்துலக அரசியல் சூழல் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை இடப்படுவதை உறுதிப்படுத்தும். இது அனைத்துலக அழுத்தத்தின் ஊடாகவே ஏற்படுத்தப்பட முடியும். அச்சுறுத்தல்கள் மூலம் ஏற்படுத்தப்பட முடியாது. முதன்மைச் செயலாளரான லலித் வீரதுங்க சிறிலங்கா அதிபரின் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஒருவராவார். 2009ல் இடம்பெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்யவேண்டிய சிறிலங்காவின் பொறுப்புக்களைத் தட்டிக்கழிப்பதற்கான புதிய வழிவகைகள் தொடர்பாக லலித் வீரதுங்க ஆராய்கின்றார். இந்திய அமைதி காக்கும் படை மீது போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என லலித் வீரதுங்க கோரிக்கை விடுவது எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. 11 ஆண்டுகளாக சிறிலங்கா அரசாங்கத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றும் லலித் வீரதுங்க இந்தியப் படைகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கட்டளையிடுவதன் மூலம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைநிலை வெளிப்படுத்தப்பட முடியும்.
இந்திய அமைதி காக்கும் படை சிறிலங்காவில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் லலித் வீரதுங்க இப்போது அதாவது தன்மீதான போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டும் என சிறிலங்கா மீது அழுத்தம் கொடுக்கும் இந்த வேளையில் இந்தியப் படைகள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுவது ஏன்? இவரது நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. சிறிலங்கா பாரபட்சமற்ற ஒரு விசாரணையை முன்னெடுக்க விரும்பவில்லை. இது தன் மீதான குற்றங்களுக்குப் பதிலளிப்பதைத் தட்டிக்கழிக்க விரும்புகிறது. சிறிலங்காவை விட்டு இந்திய அமைதி காக்கும் படையை வெளியேற்றுவதில் புலிகளுடன் ஒத்துழைத்தவரும் இந்தியாவின் விருப்பத்தைப் பெறாதவருமான முன்னாள் சிறிலங்கா அதிபர் பிறேமதாச கூட இவ்வாறான ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரவில்லை.
இதனை தேசிய மற்றும் அனைத்துலக மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்புக்களின் பக்கம் இருந்து பார்த்தால், இவர்கள் ஏன் இந்தியப் படைகள் மீது மனித உரிமை மீறல் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கவில்லை? ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மிகவும ;சிக்கலான நிலையை அடைந்துள்ள சிறிலங்கா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்பளிப்பதிலிருந்து விலகுவதற்காகவே சிறிலங்கா இவ்வாறான ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றது என்பதை அனைத்து மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்புக்களும் நன்கறிந்துள்ளன. இந்தியப் படைகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோருவதென்பதற்கான பொருத்தமான காலப்பகுதி இதுவல்ல. இது சிறிலங்கா மீதான அனைத்துலகின் கவனத்தை மேலும் தாமதமாக்கும்.
இந்தியா மீது தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோருவதற்கான நியாயமான காரணங்கள் எதுவுமில்லை. இது தற்போது ஜனநாயக ஆட்சியை மேற்கொள்ளும் ஒரு நாடாகும். இந்தியா தற்போது தனது மனித உரிமையை மேம்படுத்த முயற்சிக்கிறது.
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது வேறு ஆயுதக்குழுக்கள் சிறிலங்காவில் மீண்டும் உருவாகும் என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற ஒரு பலமான தீவிரவாத அமைப்பு உருவாவதற்கு ஐந்து பத்தாண்டுகள் தேவைப்பட்டது. இதற்கு உள்நாட்டு மற்றும் பூகோள சூழல்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. இது பிரபாகரன், பத்மநாபா, சிறி சபாரட்னம் போன்ற ஆயுதக் குழுத் தலைவர்களை உருவாக்கியது. ஆனால் தற்போது சூழல் மாறிவிட்டது. அரசியலில் இக்கருத்தியல் அழிக்கப்பட்டுவிட்டது. சிறிலங்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. அல்குவைதா தவிர ஏனைய தீவிரவாதக் குழுக்கள் அழிக்கப்பட்டு விட்டன. ஜிகதிஸ்ற் அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன் செயற்படுகின்றன. தமிழ் மக்கள் போரின் விளைவால் இரண்டு தலைமுறைகளை இழந்து வேதனையில் வாழ்கின்றனர். இவர்கள் இந்த யுத்தத்தால் களைப்படைந்து விட்டனர். தமிழ் மக்கள் தமது அடையாளம் தவிர வேறெதனையும் கொண்டிருக்கவில்லை. உயிர்வாழ்வது மற்றும் வாழ்வாதாரம் போன்றன தமிழ் மக்களின் முன்னுரிமைகளாக உள்ளன. புலம்பெயர் தமிழர்கள் ஈழக் கோரிக்கையை மேலும் வலுப்படுத்துகின்றனர்.
கேள்வி: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் இயற்றப்படுவதுடன், சிறிலங்காத் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக 'அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறைகள்' உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படும் நிலையில், அனைத்துலக விசாரணைகளில் மக்களைப் பாதுகாப்பதற்காக தகவல்களை வழங்குவதற்காக அமைதிப் படைகள் வழமையாக அனுப்பப்படுவது போன்று இந்திய அமைதி காக்கும் படையும் பங்களிக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறை என்பது இஸ்ரேலியத் தாக்குதலிலிருந்து பாலஸ்தீனியர்களைக் காப்பாற்றவில்லை. போரின் போது முற்றுகைக்குள் உள்ளாகும் தரப்பைப் பாதுகாப்பதற்கு அனைத்துலகப் பாதுகாப்பு முறை ஒரு தற்காலிகப் பொறிமுறையாகக் கருதப்படுகிறது. இது சிறிலங்காவுக்குப் பொருத்தமானதாக இல்லை. இது காசாவோ அல்லது லெபனானோ அல்ல. மோதல்களுக்குள் அகப்படும் சமூகங்களுக்கிடையில் சமாதானம் உருவாக்கப்படுவதன் மூலம் மட்டுமே உண்மையான பாதுகாப்பைக் கொண்டுவர முடியும். சிறிலங்காவுக்கு எதிராக தனது இராணுவத்தை அனுப்ப வேண்டும் என இந்தியா ஒருபோதும் கனவு காணவில்லை. பொதுமக்களை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாத்திருக்க வேண்டும். போரின் போதான மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் தானாகப் பொறுப்பளிக்க முன்வராவிட்டால் அனைத்துலக சமூகம் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதற்கான போதியளவு சாட்சியங்களும் உள்ளன.
கேள்வி: இந்த உலகிற்கு வேறெதாவது கூற நீங்கள் விரும்புகிறீர்களா? குறிப்பாக இந்திய அமைதி காக்கும் படையின் பணி தொடர்பில், புலம்பெயர் தமிழ் சமூகங்கள் தமிழீழம் தொடர்பாகக் கொண்டுள்ள கனவு தொடர்பில் ஏதாவது கூறவிரும்புகிறீர்களா? சிறிலங்காவில் நிலவும் இனப்பிரச்சினைக்கான சிறந்த தீர்வாக எது இருக்க முடியும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: நான் கூறுவது தேவ வாக்கல்ல. ஆனால் இது தொடர்பில் பதிலளிக்க முயற்சிக்கிறேன். சிறிலங்கா தனது நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக தனது அபிவிருத்தியில் மூன்று பத்தாண்டுகளைத் தொலைத்துவிட்டது. இல்லாவிட்டால் தென்னாசியாவின் ஒரேயொரு 'புலியாக' சிறிலங்கா உருவெடுத்திருக்கும். பாரிய வறுமை, கல்வியறிவின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் மத்தியில் இந்தியா வல்லரசாக உருவெடுத்துள்ள நிலையில், கல்வியறிவுள்ள சிறிலங்கா தனது நாட்டை அபிவிருத்தி செய்திருக்க முடியாதா? நாட்டில் பிரிவினைக்கு வழிகோலுவதை விடுத்து அரசியல் மறுமலர்ச்சியை உருவாக்கி அபிவிருத்தியை முன்னெடுக்கும் போது சிறிலங்காவை நல்லதொரு தேசமாகக் கட்டியெழுப்ப முடியும். மகிழ்ச்சியான ஒரு முடிவை எழுதுவதற்கு இலங்கையர்கள் விரும்பினால் அதற்கு காலம் மிகவும் அவசியமானது. கண்டித் தலைவர்கள், யாழ்ப்பாண புத்திமான்கள், தென் சிறிலங்கா பழமைவாதிகள் மற்றும் பாரிசில் அல்லது லண்டனில் ஈழக் கோரிக்கையை மீள வலியுறுத்துபவர்கள் எனப் பாகுபாடுகள் பார்க்காது அனைவரும் தேசிய இயக்கமாக ஒன்று சேரும் போது சிறிலங்கா ஒரு சிறந்த தேசமாக உருவாகும். இதனை இளைஞர்கள் இணைந்து செயற்படுத்த வேண்டும். ராஜபக்சாக்கள் மற்றும் விக்கிரசிங்காக்களை எதிர்காலத்தில் இடம்மாற்றி சிறிலங்காவின் சோகக் கதையை மகிழ்ச்சியான முடிவாக மாற்றக் கூடிய சிறிலங்கா இளைஞர்கள் முன்வந்து செயற்படுவதற்கான காலம் இதுவாகும்.
No comments:
Post a Comment