இனவாதிகள் எறிந்த பந்து - பவுண்சானது
தமிழருக்கு இப்பதான் நிம்மதி 🤓
பேச்சு வார்த்தை என்று போகும் போது , எப்படியாவது அதை குழப்பிட வேண்டும் என்பதுதான் தமிழ் தரப்புகளின் முதல் சிந்தனை.
இது ஆரம்பம் தொட்டே இருந்து வந்த ஒன்றுதான். இந்த பிரச்சனைகளை வைத்துதானே அரசியலே செய்ய முடியும். பிரச்சனை இல்லையென்றால் எதை பேசி அரசியல் செய்யிறது? நிலைக்கிறது முக்கியம் இல்லையா?
இது அதிகமான மொக்கு சிங்களவனுகளுக்கும் விளங்காது. அப்பாவி மொக்கு தமிழருக்கும் விளங்காது. இனவாத தமிழனுக்கும் - சிங்களவனுக்கும் இனவாதத்தை விட்டால் அரசியல் செய்ய முக்கிய கரு பொருட்கள் இல்லை. இதுதான் இரத்தத்தை உடனடியாக சூடாக்கக் கூடியது.
இம்முறையும் அதுதான் நடந்தது.
பழைய கதைகளை விட , எனக்கு நன்கு தெரிந்தவை இவை.
திம்புவுக்கு கூட கடைசி நேரத்தில் தலைகள் ஒழித்துக் கொள்ள , வால்கள்தான் போனார்கள். அவர்களால் தலைகளை கேட்காமல் முடிவெடுக்க முடியாது. தலைகள் போனால் பிடித்து கையெழுத்து வாங்கிவிடுவார்கள் என தலைகள் போகவே இல்லை. போறதும் இல்லை.
திம்பு பேச்சு தோல்வியடைந்த போது எனக்கு நெருக்கமாக இருந்த தலைவரிடம் ஏன் அண்ண போக இல்லை என கேட்ட போது , அவர்கள் ஏதாவது ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வைக்கச் சொன்னால் கையெழுத்து வைக்காமல் இருக்க முடியாது. எமது பிரதிநிதிகள் என யாரையாவது அனுப்பினால் , அவர்கள் தலைவர்களிடம் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும் என தட்டிக் கழித்து விடலாம். எங்களது நோக்கம் தனிநாடு. அதை தர மாட்டார்கள். அதுவரை இழுத்தடிக்க வேண்டும் என்றார். இதுவேதான் தமிழர் பிரச்சனையில் முடிவெடுக்க முடியாத சிக்கலாக தொடர்கிறது.
இப்படித்தான் சர்வதேச பேச்சு வார்த்தைகளும் குழம்பின. நாங்கள் போறது தீர்க்கவா? குழப்பத்தானே போறம் என்று போனவர்கள்தான் அதிகம். குதர்க்கமாக பேசுவார்கள். குழம்பி போய்விடும். இதில் தமிழர்கள் பட்டம் பெற்றவர்கள். இதேபோல குதர்க்கவாதிகளான சிங்களவர்கள் இல்லாமல் இல்லை. அவர்களது எண்ணிக்கை குறைவு.
அதேபோலத்தான் அண்மையில் அவர் 13 + தாரணெண்டு மகிந்த சொன்னவர். போலீஸ் பவர் கேட்டு ரணிலுக்கே தண்ணி காட்ட போக , நான் அவன் இல்லை என ரணில் சொல்ல வேண்டி வந்தது.
ஏக்கீயவா - ஏக்கீய ராஜ்யவா என்ற இரு வார்த்தைகளை வைத்துக் கொண்டு இரண்டு மூன்று பேர் 5 வருடம் பைல்களை தூக்கி பேக் காட்டின எங்களுக்கேவா, 13யை தருவதாக பூச் சுத்த போறீங்க?
போலீஸ் பவரும் வேணும். அப்பதான் முழுமையான 13. பெடரல் என்றாலே சிங்களவனுக்கு தனிநாடு என மண்டையில் பிளாண்ட் பண்ணுட்டாங்க. போலீஸ் பவர் என்றால் சாரை பாம்புக்கு மண்ணெண்ணை ஊற்றியது மாதிரி ஆகிடும். ரணிலும் திக்குமுக்காடி போனார் என்பதே உண்மை.
வெளியே வந்து சம்பந்தர் பாய்ந்தார். சீறினார் என செய்திகளை பரவ விட்டனர். பாவம் அந்த மனுசனை தூக்க 4 பேர் வேணும்! அவர் எழும்பவே முடியாமலிருக்கிறார். அவர் எங்க பாயுறது? அவரும் அடுத்த கலைஞர் போல ஆகிட்டார். கதிரையை விடுறதே இல்லை என பிடிவாதமாக இருக்கிறார்.
வடக்கை ஆண்ட அண்ணைக்கு பல சந்தர்ப்பங்கள் வந்தன. ஒன்றையும் அவர் ஏற்கவில்லை. அவர் ஏற்க நினைத்தாலும் சுத்தி இருந்தவங்க அவரை ஏற்கவே விடவில்லை. இதுதான் உண்மை. இத்தனை பேரின் அழிவுக்கு பிறகு தனிநாடு இல்லாத தீர்வை எடுத்தால் சனம் துரோகி பட்டம் தரும் என பயம் காட்டியே , கடைசியில் முள்ளிவாய்க்காலில் சாக வழி செய்தனர்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் நல்லதொரு சந்தர்ப்பம். அதை நழுவ விட்டனர். அதனால் எத்தனை சாவுகள். தமிழருக்கு நாடு பிடித்துக் கொடுக்க அனுப்பப்பட்ட படை , தமிழரை சாவடிக்க முற்பட்டது. வடக்கில் -லிகள் இந்திய சமாதான படைக்கு எதிராகவும் , தெற்கில் JVP, ஶ்ரீலங்கா அரசுக்கு எதிராகவும் போராட ஆரம்பித்தது. இரு தரப்புமே 13 எனும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தன.
JVPக்கு நாட்டை பிரித்து கொடுத்து விட்டார்கள் என்ற கோபம். -லிகளுக்கு தனிநாட்டை பெற்று தரவில்லை என்ற கோபம். வடக்கு - கிழக்கில் தமிழர்களும் - இந்திய அமைதி படையும் செத்து மடிந்து கொண்டிருந்தனர். தெற்கே JVPயினரும் , ஶ்ரீலங்கா படையினரும் , ஆதரவாளர்களும் செத்து மடிந்து கொண்டிருந்தனர்.
பிரேமதாசவுக்கு இந்திய படைகளை துளியும் பிடிக்காது. -லிகளுக்கு உதவத் தொடங்கினார். இது அண்ணன் - தம்பிகளுக்குள் உள்ள பிரச்சனை. இதில் இந்தியா தலையிட தேவையில்லை என பிரேமாதாச இந்தியாவிடம் சொன்னார். இந்திய தலைவருக்கு தலையிலும் ஒரு அடி போட வைத்தார். அடித்தவரை விடுதலையும் செய்தார்.
தனிநாட்டை தவிர எதை வேண்டுமானாலும் கேளுங்க தருகிறேன் என பிரேமதாச சொன்னார். அதை கேட்பார்களா? உலகின் பெரிய இராணுவத்தையே அடித்து துவைக்கும் பலம் உள்ள போது , ஶ்ரீலங்கா இராணுவம் நமக்கு கொசுறு. இது முடியட்டும். அதுக்கு இருக்கு வேட்டு என நினைத்தார்கள்.
இந்திய இராணுவம் வெளியேறியது.
பிரேமதாச அண்ணனையும் தம்பி போட்டார்.
சர்வதேசங்கள் பிரச்சனையை தீர்க்க முற்பட்டன. சந்திரிகா , நீலன் - பீரிஸ் போன்றவர்களை வைத்து தீர்வு திட்டம் ஒன்றை கொண்டு வர முனைந்தார். அதை ஐதேக - லிகள் என இரு தரப்பும் எதிர்த்தது. அதை வரைந்த நீலனை போட்டு தள்ளினார்கள். சந்திரிகாவுக்கு ஒரு கண் போனது. தீர்வு பொதி குப்பைக்குள் வீசப்பட்டது.
நோர்வே (பின்னணியில் அமெரிக்கா) , ரணிலோடு சேர்ந்து - ரவாவோடு ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட வைத்தது. சந்திரிகாவோடு இருந்த JVP , ரணிலை துரத்த வழி செய்தது. ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் -லிகள் ரணிலை ஆதரிக்காவிட்டாலும் , தமிழ் மக்கள் ரணிலை ஆதரிப்பார்கள் என ரணில் தப்பு கணக்கு போட்டார். -லிகள் கேட்ட தொகையை ரணில் கொடுக்வில்லை. அதை பசில் கொடுத்தார். இடையே பல தலைகள் குண்டு வெடிப்புகளில் உருண்டன.
ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை வாக்களிக்க வேண்டாம் என்றார்கள். அதோடு ரணிலின் ஜனாதிபதி கனவு , கனவாகியே போனது. மகிந்த வென்றார்.
ரணில் மிதவாதி , அடிபட வர மாட்டார். சமாதானத்துக்குதான் போவார். அது நரித்தனம். சண்டியன் வந்தால்தான் போர் நடக்கும். போர் நடந்தால்தான் எங்களால் அடிக்க முடியும். ஒவ்வொரு சிங்கள தலைவர்களாக சாகும் போது , சிங்களவருக்கு தலைமை ஒன்று இல்லாமல் போகும். அப்போது எங்கள் எண்ணம் நிறைவேறியே தீரும் என்பது -லிகளது கணிப்பு. வடக்கில் உதயமான இயக்கங்களுக்கு தலைமைகள் இல்லாமல் நடந்தவை போல, சிங்களவருக்கும் நடக்கும் என எண்ணினார்கள்.
அமெரிக்க கோபுர தாக்குதலோடு சர்வதேச நிலை தலை கீழாக மாறியது. பயங்கரவாத இயக்கங்களை அழிப்பதென சர்வதேசம் முடிவெடுத்தது. அதொன்றையும் தமிழர்கள் கண்டு கொள்ளவில்லை. சர்வதேச பேச்சு வார்த்தைகளில் -லிகள் விட்டே கொடுக்கவில்லை. காலம் நிர்ணயிக்கப்பட்டது. ஶ்ரீலங்காவுக்கு உதவிகள் அதிகரித்தன. கடைசியில் முள்ளிவாய்க்காலில் மௌனிக்க வைத்து முடித்தே விட்டார்கள்.
செய்த பாதகங்களுக்கு இயற்கையால் நிச்சயம் தண்டனை உண்டு. சர்வதேச தண்டனை என்பது கடைசிவரை கிடைக்காது. ஐநா எல்லாம் கோப்பி குடித்து பார்ட்டி நடக்கிற இடம். ஐநாவில் ஆட்களே இல்லாத போது காலுடைந்த கதிரைக்கு முன்னால் போய் கத்தி ஒன்றும் ஆகப் போவதில்லை. அப்பகுதியில் உள்ள மதுக் கடைகளுக்கு நல்ல வியாபாரம். அவ்வளவுதான்.
இப்போதுள்ள அநேக தமிழ் பற்று என சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு அங்குள்ள அப்பாவி தமிழ் மக்களது துயரங்கள் பிரச்சனையே இல்லை. அவர்களது பிரச்சனை இனப்பிரச்சனையை வைத்து தொடர்ந்து அரசியல் செய்ய வேண்டும் என்பதே. தமிழ் பகுதிகளுக்கு எந்த நன்மையான திட்டங்கள் வந்தாலும் எதிர்க்கிறார்கள். எதிர்ப்பு அரசியல் என்பதுதான் அவர்களது ஒரே குறிக்கோள். ஒரு வீடு வந்தாலும் அது சரியில்லை என தடுக்கிறார்கள்.
13யை நடைமுறைப்படுத்த முடியாமல் இழுபறியாகியிருப்பதில் சிங்களவரை விட , தமிழ் தேசாபிமானிகள்தான் கொடுப்புக்குள் சிரிக்கிறார்கள். அவர்களுக்கும் அண்ணனுக்கு இருந்த அதே பிரச்சனைதான் உள்ளது. எதுவுமே கிடைக்காது போனாலும் பரவாயில்லை. 13யை ஏற்று நாங்கள் இதற்காகவா போராடினோம் என இவர்களை துரோகிகளாக்கி போடுவார்களோ என இவர்களும் உள்ளுக்குள் நடுங்குகிறார்கள். 13யை ஏற்றால் இவர்களுக்கு தமிழ் வாக்குகளும் விழாது. புலன்பெயர்ந்த தமிழரது உதவியும் கிடைக்காது. இதனால்தான் இவர்கள் யதார்த்தம் புரிந்தும் அரசியல் ஆட்டம் ஆடுகிறார்கள். எதிர்ப்போருக்கு பிரச்சனையே இல்லை. இந்த அரசியல்வாதிகளுக்கும் பென்சன் வரும் எந்த பாதிப்பும் இல்லை.
இதனால் வாழ வழியற்றோருக்கும் , எதிர்கால சந்ததிக்கும்தான் பாதிப்பு.
தனிச் சிங்கள சட்டத்தை கொண்டு வந்தவனும் செத்துட்டான். தனிநாடு கேட்டவனும் செத்துட்டான். அதை சரி என நம்பியவனுகளும் செத்து போனானுகள். செத்துக் கொண்டிருக்கிறானுகள். இதுபோல கடைசியல் மண் மட்டும்தான் மிஞ்சப் போகுது. மண் ஆசை கொண்ட அனைவரும் மண்ணுக்கே உரமாகிறார்கள். இதே துயரம் எத்தனை காலம் தொடருமோ யாருக்கும் தெரியாது.
இதில் ஒரு பகிடி தெரியுமா? தமிழன்தான் உரிமை கேட்டான். ஆனால் மாகாண சபை முறை வந்த போது அனுபவித்தது என்னவோ சிங்களவர்கள்தான். தமிழ் பகுதிகளில் 2 மாகாண சபைகள். சிங்கள பகுதிகளில் 7 மாகாண சபைகள்.
13யை எதிர்க்கும் இனவாதிகளிடம் ஊசி ஏத்துறது போல ரணில் அழகாக ஒரு விடயத்தை சொன்னார். அதாவது 13யை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையோடு 13யை இல்லாமல் ஒழித்து விடுங்கள். இது ஒரு வெள்ளை யானை என்றார். ( வெள்ளை யானை (சுது அழியெக்) என சிங்களத்தில் , எந்த லாபமும் இல்லாமல் செலவழித்துக் கொண்டிருக்கும் ஒரு வியாபாராத்தை அல்லது திட்டத்தை சுது அழியெக் என்பார்கள்.) மாகாண சபை செலவு மட்டுமே. ஒன்றுமே நடப்பதில்லை. கூடினால் அடிபடுகிறார்கள்.
அநேக தலைவர்கள் குற்றங்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பார்கள். ரணில் போன்ற ஒரு சிலர் மட்டுமே குற்றத்தையும் சொல்லி சரியான திட்டங்களையும் செயல்படுத்திக் காட்டுவார்கள். அப்படி சில இளைஞர்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர்.
பாராளுமன்றத்தில் உள்ள யாப்பு குறித்து புள்ளிகள் வரை அதிகம் தெரிந்த 2-3 பேரே பாராளுமன்றத்தில் உள்ளனர். அதில் ரணில் மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர்கள். சிலருக்கு தெரிந்தாலும் வார்த்தைகளோடு சிக்கி தவிப்பவர்கள்.
எனவேதான் சர்வ கட்சி மாநாட்டில் ரணில் மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்களை கொடுக்க வேண்டும் என்பதை "நாட்டுக்கான கொள்கைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும் எனவும், அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உரிய முறையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை மாகாண சபை வழங்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
அதில் குறிப்பாக ஒரு அமைச்சர் ஒரு லைட் தூணை நடுகிறார். அதே இடத்தில் மாகாண சபையும் ஒரு லைட் தூணை நடுகிறது. நகர சபை அல்லது உள்ளூராட்சி சபையும் ஒரு லைட் தூணை நடுகிறார்கள். இது என்ன என எனக்கு புரியவில்லை. தேவை ஒரு தூண்தான் . ஆனால் ஆளாளுக்கு தூண்களை நட முயற்சிக்கிறார்கள். அதாவது சரியான ஒரு திட்டம் இல்லை. நாட்டுக்கான கொள்கைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும். மாகாண சபை அதை நிறைவேற்ற வேண்டும். இப்படி நடக்கவில்லை என்றார். எல்லோரும் வடக்கு தெற்கை பார்த்தார்கள். தாடைகளை தடவினார்கள். அதெல்லாம் வந்தவர்களுக்கு அப்போதுதான் தெரிந்திருக்கும்.
அதே சமயம் மாகாண சபையில் உள்ள ஒரு உறுப்பினர் , தனது மாகாண சபை பதவியை ராஜினாமா செய்யாது பாராளுமன்றத்துக்கும் போட்டியிட்டு வரலாம். அப்படியான முறைகள் பல நாடுகளில் உள்ளன என்றார்.
பொதுவாக ஒரு மாகாணத்தின் தேவை , இன்னோர் மாகாணத்தின் தேவையாக இருக்காது. உதாரணத்துக்கு சுவிற்சர்லாந்து 41,290 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. 4 மொழிகள். 26 மாநிலங்கள். இலங்கை 65,610 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. 2 மொழிகள். 9 மாகாண சபைகள்.
சுவிற்சர்லாந்தில் மாகாணத்துக்கு மாகாணம் வெவ்வேறு சட்டங்கள். காரணம் ஒரு மாநிலம் விவசாய உற்பத்திக்கு முதலிடம் அளிப்பதாக இருக்கும். இன்னொரு மாநிலம் பால் மற்றும் கால் நடை குறித்து முதலிடம் அளிப்பதாக இருக்கும். இன்னோர் மாநிலம் தொழில்சாலைகளுக்கு முதலுரிமை அளிக்கும் மாநிலமாக இருக்கும். இன்னொன்று தொழில் நுட்பம் நிறைந்த மாநிலமாக இருக்கும். எனவே ஒரே விதமான சட்டம் எல்லா மாநிலத்துக்கும் பிரயோசனமற்றது.
உதாரணமாக ஒரு குடும்பத்தில் 3 பேர் இருந்தால் ஒருவர் போல மூவர் தேவைகளும் இருக்காது. அதுபோலத்தான் ஒரு நாடும். ஒருவர் விளையாட்டு வீரர் என்றால் அவருக்கான தேவை , டாக்டராக படிப்பவரது தேவைக்கு ஒப்பானதாக இருக்காது. அடுத்தவர் வீட்டை கவனிப்பவராக இருப்பார். அவரது தேவை வேறாக இருக்கும் . அதுபோலத்தான் ஒரு நாடும்.
மாகாண சபை நல்லது. ஆனால் அது சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் உள்ள மாகாண சபை வெட்டி பேச்சு பேசி தர்க்கம் செய்யும் கிளப் போன்றது . அவர்களுக்கான செலவு தேவையில்லா வெள்ளை யானை. இதை ரணில் தெளிவு படுத்தினார்.
அவர் பேசியவை பலருக்கு தலைக்கு ஏறாது. அவர்கள் தலையில் வேறு இரத்தக் கட்டிகள் கட்டிப் போயுள்ளன. தலை வேலை செய்யாது.
இதேநிலையில் ரணில் , தமிழ் பகுதியில் முடியாவிடினும் சிங்கள மாகாண சபைகளில் மாற்றத்தை கொண்டு வருவார் போல , அவரது பேச்சின் தொணி இருந்தது. அதை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காவிட்டாலும் மக்கள் ஆதரிப்பார்கள். பரீட்சார்த்தமாக லத்தி போலீஸ் முறை கூட தென் பகுதி மாகாண சபைகளில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படலாம்.
அதுவே நாடு முழுவதும் வியாபிக்க படலாம். இலங்கையில் ஒரே ஒரு போலீஸ்தான் ஆரம்பத்தில் இருந்தது. STF என்பது கூட JR ன் மகனான ரவி ஜெயவர்தனவால் 1980களில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான். STFயை சிலர் இராணுவம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது போலீஸில் ஒரு அங்கம்.
சுவிற்சர்லாந்தில் கூட நகர போலீஸ் - மாநில (கன்டோன்) போலீஸ் - பெடரல் போலீஸ் - கிரிமினல் போலீஸ் - போர்டர் போலீஸ் என பல துறைகள் உள்ளன.
இலங்கையில் உள்ளவர்களுக்கு உள்ள பிரச்சனை. ஒரு பகுதியில் நடக்கும் சம்பவத்துக்கு இன்னொரு பகுதி போலீஸ் செயல்பட முடியாது எனும் நிலையாகும். ஆனால் அவற்றை மாற்ற சட்டங்களை இயற்றுவது பெரிய வேலை இல்லை.
ரணில் சொன்னது போல 13யை முழுமையாக செயல்படுத்த விருப்பமில்லாமல் இருந்தால் , பாராளுமன்றத்தில் ஒரு பிரேணையை கொண்டு வந்து 13யை இல்லாமல் ஆக்குங்கள் என்றார்.
அதோடு பல இனவாதிகளுக்கு தலை சுற்றியிருக்கும். ஒரு தரப்பு இது சிங்கள பௌத்த தேசம் என்கிறது. இன்னொன்று தனிநாடுதான் தேவை என்கிறது. இதற்கான 2-3 குரல்களே ஒலிக்கின்றன. அவை கலரிக்கான குரல்கள். அவர்களே போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வீடுகளுக்கு போக முடியாதவர்கள் என பால்குடி குழந்தைக்கும் தெரியும்.
தவிர மாகாண சபையை இல்லாமல் செய்யும் பிரேணையை எவருமே கொண்டு வரப் போவதில்லை. அதனால் எத்தனை பேரது அரசியல் ஆசை நிராசையாகும். மாகாண சபையில் இதுவரை இருந்தோர் சும்மா இருப்பார்களா? மாகாண சபையை இல்லாமல் ஆக்கிவிட்டு எந்தவொரு பாராளுமன்ற ஊறுப்பினருக்கும் ஊருக்கு போக முடியும் என்றா நினைக்கிறீர்கள்? அல்லது அவர்களால் பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்றா நினைக்கிறீர்கள்?
இனவாதிகள் பந்தை வீசியது ரணிலை நோக்கித்தான். ஆனால் பந்து பவுண்சானது என்னவோ வீசியவர்களுக்குத்தான்!
இதெப்படி இருக்கு .......?
No comments:
Post a Comment