பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 19 September 2024

இலங்கைஜனாதிபதி தேர்தலும் கடந்த 75 வருட கால நினைவுகளும்

  வெற்றிசெல்வன்       Thursday, 19 September 2024

இன்று இலங்கையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலையும் அதையொட்டி இப்போது இருக்கும் தமிழ் தலைமைகள் புதிய ஜனாதிபதியுடன் சேர்ந்து பதவியும் பணப்பெட்டிகளையும் தங்களது சொந்த தேவைகளை பூர்த்தி செய்ய யாரை ஆதரித்தால் நல்லதென்று ஓடித்திருக்கிறார்கள். இவர்கள் யாரும் யார் வந்தால் இலங்கை தமிழ் இனத்துக்கு பாதுகாப்பும் அதோடு வடகிழக்கு தமிழர் நிலங்கள் பிற இன மக்கள் குடியேறுவதை புதிய ஜனாதிபதி தடுத்து நிறுத்துவாரா என்று எல்லாம் கவலைப்படவில்லை. அதோடு இவர்கள் ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் இவர்கள் ஆதரிப்பதற்கு என்ன காரணம். அதோடு தமிழர் தலைவர்கள் குறிப்பாக வடபகுதி தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் என்ன வாக்குறுதி கொடுத்தார்கள் இவர்கள் என்ன அவர்களிடம் கேட்டார்கள் என்று பொதுமக்களுக்கு பகிரங்கமாக அறிவித்தார்களா? இவர்கள் நல்ல தமிழ்தலைவர்கள் என்றால் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தங்கள் பேசியதையும் அவர்கள் கூறிய கருத்தையும் பகிரங்கமாக கூறி மக்கள் விருப்பப்படி தெரிவு செய்யும்படி கேட்டிருக்க வேண்டும். அதோடு ஒரு தரப்பு பேரம் பேசக்கூடிய விதத்தில் தமிழ் பொது வேட்பாளர் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள். தமிழர்களின் ஒற்றுமையை உலகத்திற்கு காட்டுவதற்கென்று கூறிக் கொள்கிறார்கள். முதலில் தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக இவரை ஆதரிக்கிறார்களா. உலக நாடுகளுக்கு தமிழர்களின் ஒற்றுமையை காட்டி என்ன செய்யப் போகிறார்கள் அவர்களுக்கு தெரியாத எங்களின் ஒற்றுமை. 2009 லட்சக்கணக்கான பொதுமக்களை உலக நாடுகள் பல சேர்ந்து கொலை செய்து அழித்த போது வாய் மூடி இருந்த மற்ற உலக நாடுகள் எல்லாம் இனித்தான் எங்களுக்கு உதவி செய்யப் போகிறதா? இப்பொழுது பாலஸ்தீன நாட்டில் லட்சக்கணக்கான பொதுமக்கள் தினசரி கொலை செய்யப்படுகிறார்கள். உலக நாடுகள் என்ன செய்தன. ஏன்  முஸ்லிம் நாடுகள் கூட எந்த உதவியும் செய்யவில்லை. அமெரிக்கா போன்ற உலக நாடுகளின் ஆதரவு பேச்சை நம்பி ரஷ்யாவுடன் சண்டையில் ஈடுபட்ட உக்ரைன் நாட்டின் நிலைமை என்ன? ஒரு வளமான நாடு இன்று சிதறிப் போய் இருக்கிறார்கள். இப்போது இருக்கும் இப்படியான உலக நாடுகளின் நிலை பார்த்த பிறகாது எங்கள் தமிழ் தலைவர்கள் திருந்துவார்களா? இலங்கையில் தமிழருக்கு பாதுகாப்பும் உரிமைகளும் கிடைக்க வேண்டுமானால் சிங்கள மக்களும் சிங்களத் தலைவர்களும் தமிழர்களின் குரலை கேட்க வேண்டும். அதற்கு நாங்கள் எங்களுக்கு ஆதரவு தரக்கூடிய சிங்கள தலைவர்களோடு போய் சிங்கள மக்கள் மத்தியில் பொதுக்கூட்டங்களில் எங்கள் நிலைமைகளை கொண்டு செல்ல வேண்டும். இனிய தமிழர்களுக்கு நல்ல வாழ்வு ஒன்றுபட்ட இலங்கை நாட்டுக்குள் தான் கிடைக்க வேண்டும். இது எல்லா தமிழ் தலைவர்களுக்கும் தெரியும். இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழர்களுக்கு உதவி செய்யாது. ஆனால் இலங்கை அரசு இந்த நாடுகளுக்கு எதிராக போகும்போது, இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழ் தேசிய வாதிகளே பெரும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி தமிழ் ஈழம் பற்றி பேச சொல்லி இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பார்கள். இலங்கை அரசு சமாதானம் ஆகிவிட்டால் அதோடு தமிழ் தேசியத்தையும் தமிழ் தலைவர்களையும் குப்பையில் போட்டு விடுவார்கள். அடுத்த பிரச்சினை வரும்போது திரும்ப அவர்களை காசு கொடுத்து அழைத்து வருவார்கள். இதுதான் உண்மை. 


இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சிங்களத் தலைவர்களை விட தமிழ் தலைவர்கள் மிகவும் படித்தவர்களாக, நாட்டின் பெரும் செல்வந்தர்களால் ஆகவும் அரசாங்க உத்தியோகங்களில் பெரிய அதிகாரிகளாகவும் இருந்தார்கள். அப்போது இலங்கையின் கவர்னராக இங்கிலாந்து ராணியின் பிரதிநிதியே இருந்தார். இலங்கை அரசு பெந்த முடிவு எடுப்பதாயின் கடைசியில் கவர்னர் தான் கையெழுத்து போட வேண்டும்.

அன்று சிங்களத் தலைவர்கள் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற தமிழ் முஸ்லிம், மற்றும் தமிழர்களின், மலையகதமிழர்களின் உரிமைகளில் கை வைத்தார்கள். அப்போது சிங்களத் தலைவர்களுடன் மிக நெருக்கமாக இருந்த தமிழ் தலைவர்கள் பெரிய அளவு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மந்திரி சபையில் மந்திரிகாக பதவி பெற மட்டும் வாயை திறந்தார்கள். அதோடு வடகிழக்கு தமிழர்களிடம் வாக்கு பெற சிங்களத் தலைவர்களின் தமிழர் எதிர்ப்பு போக்கை பெரிதாக காட்டி, தாங்கள்தான் தமிழர்களை தமிழர் உரிமைகளை காப்பாற்ற போவதாக கூறி வாக்குகள் பெற்றுக் கொண்டார்கள். நான் அன்றும் இன்றும் பதவிக்காக கொழும்பில் தங்கள் நட்பை சிங்களத் தலைவருடன் வளர்த்துக் கொண்டார்கள். 

அன்று இந்த தமிழர் தலைவர்கள் நினைத்திருந்தால் தங்கள் படிப்பையும் திறமையும் கொண்டு இலகுவாக இலங்கை கவர்னர் இடம் புகார் கொடுத்து லண்டனில்  இலங்கை அரசுக்கு எதிராக வழக்கு நடத்தி இருக்கலாம். எமது பிரச்சினையை இங்கிலாந்து ராணியிடம் முறையிட்டிருக்கலாம். அப்படி எல்லாம் அன்று நடந்ததா என்று தெரியவில்லை. அன்று தமிழர்களுக்கு இருந்த பெரிய வாய்ப்புகளை எல்லாம் அவர்கள் தொடவில்லை. மலையகத் தமிழரை பற்றி எந்த கவலையும் படவில்லை.

ஆனால் தொடர்ந்து சிங்கள குடியேற்றங்கள் தனி சிங்கள அரசு கருமமொழி  பற்றி எல்லாம் தமிழ் மக்களிடையே அதாவது வடக்கு கிழக்கு பெரும்பான்மையாக தமிழர் வாழும் பகுதிகளில் நச்சுகரமாக பேசி தங்கள் வாக்கு வங்கிகளை பாதுகாத்துக் கொண்டார்கள். கண் துடைப்பிற்காக சிங்கள தலைவர்களிடம் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டார்கள். ஒப்பந்தங்கள் கிழிக்கப்பட்டபோது பெரியளவு சட்ட ரீதியான போராட்டங்கள் நடத்தவில்லை. ஆனால் அதை பயன்படுத்தி தங்கள் வாக்கு வங்கிகளை மட்டும் பாதுகாத்துக் கொண்டார்கள். அதாவது தாங்கள்தான் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு என்று அலங்காரமான வார்த்தைகளில் கூறி சிங்கள அரசுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கொழும்பில் தமிழ் சிங்கள தலைவர்கள் ஒற்றுமையாக மது அருந்துவதை பலர் சொல்லி இருக்கிறார்கள். அதோடு இந்த தமிழ் தலைவர்கள் இப்போது சிங்களத் தலைவர்களின் உதவியோடு சிங்களப் பிரதேசங்களில் தேயிலை தோட்டங்களும் வேறு பல வியாபார நிலையங்களும் நிறுவி உள்ளார்கள். தமிழர் உரிமைக்காக போராடிய எஸ் ஜே வி செல்வநாயகம் பலங்கோடயில் ஆயிரம் கணக்கான ஏக்கரில் தேயிலைதோட்டம். வாங்கி இருந்தார். அதன் பெயர் பெட்டிக்கல எஸ்டேட். அங்கு வேலை செய்த பல மலையகத் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். தமிழ் சிங்கள கலவரங்கள் நடக்கும் போது பாதிக்கப்பட்ட இந்தத் தோட்ட மழையாக தொழிலாளிகளை எஸ் ஜே வி செல்வநாயகம் வந்து பார்த்து உதவி செய்ததாக கேள்விப்படவில்லை. ஆனால் பலங்கோடையில் இருந்த பெரிய சிங்கள அதிகாரிகளுக்கு போலீஸ் அதிகாரிகளுக்கு அடிக்கடி விருந்துகள் கொடுத்து தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டார்.


இலங்கை அரசு சேவையில்  இருந்த ஒரு சாதாரண தமிழ் அரசாங்க அலுவலர் கோடீஸ்வரன் என்பவர் தனி சிங்கள மொழி சட்டத்தால் பாதிக்கப்பட்டதால் இலங்கை அரசுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி இலங்கை நீதிமன்றங்களில் தோல்வியுற்று சற்றும் மனம் தளராமல் இலங்கையின் மேல் முறையீட்டு நீதிமன்றமான லண்டனில் இருந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கை கொண்டு சென்று நீண்ட காலத்தின் பின் வெற்றி பெற்றார். இந்த வழக்கை நடத்த பணம் இல்லாததால் தமிழ் அரசாங்க உத்தியோகத்தர்களிடம் உண்டியல் ஏந்தி பணம் சேகரிக்கப்பட்டதாக நான் சிறுவயதில் அறிந்துள்ளேன். இந்த வழக்கு கோடீஸ்வரன் வழக்கு என்று பெயர் பெற்றது. ஒரு சாதாரண அரசு ஊழியருக்கு இவ்வளவு முடியுமென்றால் மிகப்பெரும் படிப்புகள் படித்த ராணி வழக்கறிஞர்கள் பல பேர் தமிழர்களில் தலைவர்களாக இருந்தும் ஏன் அவர்களால் இலங்கை அரசுக்கு எதிராக லண்டனில் வழக்கு நடத்த முடியவில்லை. 

                  அதோடு தமிழ் தலைவர்கள் கோடீஸ்வரனை பெரிய அளவு பாராட்டவும் இல்லை. அந்த வழக்கு சம்பந்தமான செய்திகளை பெரியளவு மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் இல்லை. இன்று வரை பல பேருக்கு கோடீஸ்வரனையும் தெரியாது அந்த வழக்கு பற்றிய விபரங்களையும் தெரியாது. தயவுசெய்து இலங்கை தமிழ் டிவிகள் கோடீஸ்வரன் பற்றிய வழக்கு பற்றிய விபரங்களை அதை பற்றி அறிந்தவர்கள் மூலம் பேட்டிகளாக வெளியிட்டால் இப்போது இருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு, தமிழ் மக்களுக்காக ஒரு ஊக்கத்தை கொடுக்கும். சரித்திரம் தெரிய வரும். 


இப்படியாக  தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தலைவர்கள் உங்கள் வாக்கு வங்கியை பலப்படுத்த தமிழ் மக்களிடம் சிங்கள அரசுக்கு எதிராக உணர்ச்சிகரமாக பேசி தங்கள் வாக்கு வங்கியை மட்டும் பலப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனால் சிங்கள அரசுக்கு எதிராக எந்த ஒரு சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை. 1972 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி வரை இலங்கை நாடு பிரித்தானிய அரசின் அதாவது அரசியின் பிரதிநிதியாக கவர்னரே இருந்தார். இங்கிலாந்து ராணிக்கு கணக்கு படிப்பித்தவர் தமிழ் தலைவர்களில் ஒருவரான அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் என்று கூறுவார்கள். அவரைப் போன்ற மற்ற தலைவர்கள் கூட தமிழர்களின் பிரச்சினையை இங்கிலாந்து அரசின் கவனத்திற்கு கொண்டு போகவில்லை வழக்கு தொடக்கவில்லை என்று தான் தெரிகிறது ஏன் அவர்கள் அதை செய்யவில்லை. 72 வரை இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த போது அவர்கள் இதை இலகுவாக  செய்திருக்கலாம்.

1970 ஆம் ஆண்டு தேர்தலில் வட்டு கோட்டை தொகுதியில் தமிழரசு கட்சியின் முக்கிய தலைவர் அமிர்தலிங்கம் தோல்வியுற்றார். இது தமிழரசு கட்சிக்கு பெரும் அதிர்ச்சி. தமிழரால் தமிழர்களால் வேறு கட்சிகளை சேர்ந்தவர்களையும் பெரும்பாலும் தமிழ் காங்கிரஸ் எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது தமிழரசு கட்சிக்கு அதன் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. 

அப்போது புதிய அரசாங்கம் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் கல்வியில் அதாவது பல்கலைக்கழக மாணவர் பிரிவுக்கு தரப்படுத்தல் முறையை கொண்டு வந்தது யாழ்ப்பாண மாவட்ட மாணவர்களுக்கு மட்டுமே பெரும் பாதிப்பை கொடுத்தது. இதை தமிழ் தலைவர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ளாமல் வடபகுதி மாணவர்களை தூண்டிவிட்டு உணர்ச்சிகரமாக பேசி பேசி அரசுக்கு எதிராக பெரும் மாணவர் போராட்டங்களை நடத்தினார்கள். அதோடு தமிழீழம் கிடைத்தால் மட்டுமே தமிழர்களுக்கு பாதுகாப்பு என்று கூறி இளைஞர்களை தூண்டிவிட்டு தங்களுக்கு அடிமையாக இளைஞர்களை மாற்றி வந்தார்கள். மக்கள் செல்வாக்கு பெற்ற எதிர் கருத்துள்ள தலைவர்களை தமிழ் துரோகிகள் என்று புது மேடைகளில் பேசி இளைஞர்களை அவர்களுக்கு எதிராக மாற்றி வந்தார்கள். உண்மையில் மாற்று கருத்துள்ள தலைவர்கள் தமிழுக்கோ தமிழ் தமிழருக்கோ எதிராக இருக்கவில்லை. ஆனால் தமிழர்களுக்கு தங்களுக்கு முடிந்த அளவு வேலைகளும், தமிழர் பகுதிகளில் பல நல்ல திட்டங்களும் கட்டிடங்களும் செய்து வந்தார்கள். இது தேர்தலில் தங்களுக்கு எதிராக வந்து விடும் என்று நினைத்த தமிழரசு கட்சி பின்பு பெயர் மாறியதமிழர் விடுதலை கூட்டணி துரோகியலென்று கூறி இளைஞர்களை தூண்டி விட்டு அவர்களை அவர்களின் ஆதரவாளர்களை கொலை செய்யும் அளவுக்கு போனதுதான் மிச்சம். அமிர்தலிங்கத்தின் பேச்சைக் காட்டு துரோகிகளை கொலை செய்ய முன்வந்த சிறு பையன் தான் பிரபாகரன். பின்னாடி பல ஆயிரம் தமிழர்களை துரோகிகள் என்று கூறி கொலை செய்தவரும் இந்த பிரபாகரன் தான். கடைசியில் அமிர்தலிங்கமும் பிரபாகடனால் துரோகி என்று கூறி கொலை செய்யப்பட்டார்.

1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தனித்தமிழ்ஈழம்தான் முடிவு என்று கூறி லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களின் ஆதரவுடன் பெரும் வெற்றி பெற்றது தமிழர் விடுதலை கூட்டணி. சிங்களப் பகுதி unp அரசாங்கம் ஜே ஆர் ஜெயவர்த்தன பிரதமராக வந்தார். அதிசயமாக தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக வந்தார். பதவி கிடைத்தவுடன் தமிழ் ஈழம் போய் சிங்கிள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட சபையை ஏற்றுக்கொண்டு தமிழர்களை ஏமாற்றினார்கள். அமிர்தலிங்கம் வாக்குகளைப் பெற தமிழர்களை ஏமாற்றினார் என்பது உண்மைதான். ஆனால் நடைமுறையை நன்கு உணர்ந்த அமிர்தலிங்கம் சிங்கள அரசாங்கத்துடன் சமரசம் செய்து மட்டும்தான் தமிழர்களுக்கு தேவையான சில உரிமைகளை பெறலாம் என்ற உண்மையை மட்டும் ஏற்றுக் கொண்டார். அதை வெளியில் சொல்லவில்லை. 

ஆனால் அமிர்தலிங்கம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களின் பேச்சுக்களை கேட்டு மாற்று கருத்து உள்ளவர்களை துரோகிகள் என்று கூறி கொலை செய்த அதாவது அமுதலிங்கத்துக்கு கூலிப்படையாக செயல்பட்ட இளைஞர்கள், விடுதலை இயக்கங்களாக தனித்தனியாக பலரும் புது புது பெயர்களில் விடுதலை இயக்கங்களாக மாறினார்கள். இவர்களின் வளர்ச்சி அரசாங்கத்தில் அமிர்தலிங்கத்திற்கு இருந்த செல்வாக்கே குறைத்தது. ஜே ஆர் ஜெயவர்த்தனா தமிழர்களுக்கு எதிராக ராணுவம் , காவல்துறை, சிங்கள ரவுடிகளை கொண்டு தமிழர்கள் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டார். இலங்கை அரசாங்கத்துக்கு பயந்து தமிழ் இயக்க தமிழ் இளைஞர்களின் தலைவர் மட்டும் இந்தியாவில் தமிழ்நாட்டில் ரகசியமாக தலைமறைவாக இருந்து இயங்கத் தொடங்கினார்கள்.  தலைமை தாங்க தகுதி இல்லாத ஆயுத இயக்க தலைவர்கள் சென்னையில் துப்பாக்கிச் சண்டை போட்டு இலங்கை தமிழ் தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் தலைமுறைவாக இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிந்து கொண்டது. தமிழ் இயக்கத் தலைவர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்க அந்த இயக்கங்களின் சாதாரண உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தின் கெடுபிடிகள் பாதிக்கப்பட்டு சிறைப்பட்டு ராணுவத்தால் கொலை செய்யப்பட்டார்கள். உச்சகட்டமாக கொழும்பில் சிறை வைக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் காரணமாக இந்திரா காந்தி அம்மையாரின் தலைமையில் இருந்த இந்திய அரசு மறைமுகமாக இயக்கங்களே இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வளர்த்து விட தொடங்கினார்கள். அதே நேரம் இலங்கை அரசு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவியை பறித்து துரத்தி விட்டார்கள். பெரும்பால தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவில் அகதியாக தஞ்சம் அடைந்தார் கள்.

                    இந்திய அரசின் ஆதரவோடு பெரும் வளர்ச்சி அடைந்த தமிழ் விடுதலை இயக்கங்கள் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை இந்தியா கூட்டி வந்து பயிற்சி கொடுத்தார்கள். அதோடு இயக்கங்களின் கொள்கைகள் கொள்ளைகள் பற்றி விமர்சனம் செய்த பல அப்பாவி தமிழ் இளைஞர்கள் முகாம்களில் வைத்தே நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்டார்கள். கருத்து வேறுபாடு காரணமாக பல நல்ல முக்கிய தலைவர்களும் படுகொலை செய்து தமிழ்நாட்டில் காடுகளில் எரிக்கப்பட்டார்கள் புதைக்கப்பட்டார்கள். செலவுகளை சமாளிக்க இயக்கத் தலைமைகள் இந்தியாவில் முக்கியமாக தமிழ்நாடு அதைச் சுற்றியுள்ள வேறு மாநிலங்களில் பல திருட்டுக்கள் கொள்ளைகள் செய்து பணம் சம்பாதித்தார்கள். அதைவிட உலக மக்களுக்கு பெரும் பாதிப்பை கொடுக்கக்கூடிய போதை மருந்துகளை உலக நாடுகளுக்கு கடத்தி போய் பெரும் பணம் சம்பாதித்து அதை ஏற்க வளர்ச்சியை விட தங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு அதை பயன்படுத்திக் கொண்டார்கள். 

பிறகு இயக்கங்கள் தங்களுக்குள் சண்டையிட தொடங்கினார்கள். யார் பெரியவர்கள் என்று. விடுதலைப் புலிகள் இயக்கம் டெலோ இயக்கத்தை அதன் ஆயிரம் கணக்கான அங்கத்தவர்களை யாழ்ப்பாணத்தில் வைத்து உயிருடன் பெட்ரோல் டயர் போட்டு எரித்த காட்சியை பார்த்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள். இதை முன்னின்று செய்தவர்களில் ஒருவர் தான் இன்று தமிழர்களின் தலைவன் என்று போற்றப்படும் உண்ணாவிரதம் இருந்து இறந்த திலீபன்.. திலீபன் செய்த அதாவது நூற்றுக்கணக்கான உயிருடன் எரித்த தமிழர்களின் உண்மைகள் மறைக்கப்பட்டன. ஆனால் திலீபன் பெரும் போராளி. 

விடுதலை புலிகள் இயக்கம் மற்ற இயக்கங்களையும் அதன் ஆதரவாளர்களையும் கடத்தி சித்திரவதை செய்து கொலைகளும் செய்யத் தொடங்கினார்கள். மற்ற இயக்கங்கள் எல்லாம் தங்கள் செயல்பாடுகளை தமிழர் பகுதிகளில் நிறுத்தி தலைமறைவானார்கள். தனி இயக்கமான விடுதலை புலிகள் மற்ற விடுதலை இயக்கங்களை அழித்து தாங்கள் மட்டுமே இருக்கும் சந்தோஷத்தில் இருந்த போது தனியாக இருந்த விடுதலைப் புலிகளை நோக்கி இலங்கை அரசாங்கம் பெரும் தாக்குதலை ஆப்பரேஷன் லிப்ரேஷன் என்ற பெயரில் நடத்தி பெரும் வெற்றிகளை பெற தொடங்கி வட பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வெற்றி பெற தொடங்கினார்கள். விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் நேரத்தில், இந்தியாவில் இருந்த விடுதலைப் புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம் டெல்லிக்கும் சென்னைக்கும் பறந்து பறந்து போய் உடனடியாக இந்தியா தலையிட வேண்டும் என்று தலைவர்களிடம் உதவி கேட்டார். நோய்வாய்ப்பற்றிருந்த MGR இடம் போய் உதவி கேட்டார். இந்திய தலைவர்களுக்கு அவர் அனுப்பிய செய்தி இலங்கை அரசாங்கத்தால் யாழ்ப்பாண மாவட்டம் கைப்பற்றப்பட்டு இலங்கைஅரசாங்கத்தின் நிலை உயர்ந்தால் எந்த காலமும் இந்தியா , இலங்கை  அரசியலிலோ எந்த ரீதியிலும் தலையிட முடியாமல் போய்விடும் என்று பாலசிங்கம் கூறினார். அப்போது இந்தியாவில் பிரதமர் ராஜீவ் காந்தியின் செல்வாக்கு ஓபோஸ் பீரங்கி பிரச்சனை காரணமாக குறைந்து இருந்தது. இதை சரி கட்ட பாலசிங்கத்தின் கருத்தை ஏற்றுக் கொண்டு, இலங்கை அரசை பயமுறுத்த விமான மூலம் உணவு பொட்டலங்கள் போட்டார்கள். இலங்கை அரசாங்கம் உலக நாடுகளிடம் உதவி கேட்டது எந்த ஒரு நாடும் இந்தியாக்கு எதிராக இருக்க விரும்பவில்லை. இந்த சந்தர்ப்பத்தை இந்தியா பயன்படுத்தி இலங்கை இந்தியா ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்து அதற்கு விடுதலைப்புலிகளின் ஆதரவையும் பெற்றுக் கொண்டார்கள். விடுதலை புலிகள் போட்ட நிபந்தனை இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர்களின் சார்பாக தங்கள் இயக்கம் மட்டுமே கையெழுத்து போட வேண்டும், மற்ற இயக்கங்களும் தமிழர் விடுதலைகூட்டணியும் கையெழுத்து போடக்கூடாது. தாங்கள் மட்டுமே ஏகப்பிரதிநிதி என்று. இதை ஏற்றுக் கொண்ட இந்திய அரசு பிரபாகரனை இந்தியா அழைத்து வந்தது. அதற்கு இடையில் இந்திய அரசியல் ஆலோசர்கள் மற்ற இயக்கங்களிடம் ஒப்பந்தத்தை ஏற்று கையெழுத்து வாங்காவிட்டால் இந்த இயக்கங்கள் ஒப்பந்தத்துக்கு எதிராக செயல்படும் அல்லது இலங்கை அரசாங்கத்துடன் மறைமுகமாக சேர்ந்து ஒப்பந்தத்திற்கு எதிராக செயல்படலாம் என்று கூற இந்திய அரசு மற்ற இயக்கங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அழைத்து அந்த இயக்கங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கையெழுத்து பெற்று விட்டார்கள். இந்தியா வந்த  பிரபாகரன் இதை அறிந்து கொண்டு, இந்தியாவுடன் முரண்பட தொடங்கினார். இதன் பிறகு தான் ஒப்பந்தத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி பிரச்சனை தொடங்கியது. இதைப் பற்றி பலர் பலவிதத்தில் எழுதுகிறார்கள். அன்று நானும் டெல்லியில் இருந்தேன் மற்ற இயக்கங்கள் கையெழுத்து போடும்போது நானும் அங்கிருந்தேன். இந்தியாவின் முக்கியமான நிருபர்களின் மூலம் இந்த செய்திகள் எனக்கு அறியக் கூடியதாக இருந்தது. உண்மைகளை மறைத்து உண்மை செய்திகள் தங்கள் தங்கள் வசதிக்கேற்ப மறைக்கப்பட்டது தான் உண்மை. 

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்பு பல அதிர்ச்சிகரமான நடவடிக்கைகள் ஏற்பட்டன. விடுதலைப் புலிகளும் அவர்கள் யாருக்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்களோ அந்த இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு இந்தியா அமைதிப்படையை தாக்கினார்கள். இலங்கையில் அமைதி கொண்டு வர வந்த இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளை தாக்கி கொலை செய்தார்கள், அதைவிட விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொலை செய்யப்பட்டார்கள். 

மறுபக்கம் மற்ற இயக்கங்கள் அதாவது தாங்கள் யாரைக் காப்பாற்ற ஆயுதம் தூக்கினார்களோ அந்த தமிழ் பொதுமக்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறி இந்திய படையுடன் சேர்ந்து கொலை செய்தார்கள் சித்திரவதை செய்தார்கள் தலையே வெட்டி எடுத்து அலங்காரமாக வைத்தார்கள். விடுதலைப் புலிகளும் சரி இந்திய அமைதிப்படையும் சரி தமிழ் இயக்கங்களின் சரி இலங்கை ராணுவமும் சரி தேடி தேடி கொலை செய்தது தமிழ் மக்களை மட்டும் தான். 


இந்திய படை நாட்டை விட்டு போனதும் விடுதலைப்புலிகள் கையே ஓங்கியது. அதன் பிறகு மற்ற இயக்கங்களின் ஆதரவாளர்கள் உறவினர்கள் என்று தாங்களே கற்பனை செய்து கொண்டு சகட்டுமேனிக்கு அப்பாவி பொதுமக்களை பிடித்து சித்திரவதை செய்து கொலை செய்தார்கள். அதுபோல் மற்ற இயக்கங்கள் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு விடுதலை புலி ஆதரவாளர்கள் உறவினர்கள் என்று பொதுமக்களை கற்பனையில் கண்டு கொலை செய்தார்கள் தலை வெட்டி. வைத்தார்கள். 

ஆக கூடி யாருக்காக அதாவது தமிழ் பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறி புறப்பட்ட தமிழ் இயக்கங்கள் சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு தமிழ் மக்களையே ஏராளமாகக் கொன்றார்கள். ஏராளமான தமிழ் மக்களின் சொத்துக்களை சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு கொள்ளை அடித்தார்கள். இதற்கு முன்பு இந்திய ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு தமிழ் மக்களின் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தார்கள். காலங்கள் காட்சிகள் மாறினாலும் இந்த தமிழ் விடுதலை இயக்கங்கள் எல்லாம் விடுதலை புலிகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களையும் தமிழ் மக்களையும் நான் கொன்றார்கள். அதோடு எல்லா இயக்கங்களும் தமிழர்களின் நல்ல தலைவர்களையும் நல்ல படித்தவர்களையும் நன்றாக சிந்திக்க கூடியவர்களையும் தேடி தேடி கொலை செய்தார்கள். 

இது இலங்கை அரசாங்கம் சிங்கள மக்கள் கூட செய்யவில்லை. இவர்கள் சிங்கள அரசுக்கு தமிழ் மக்களையும் தமிழ் அறிஞர்களையும் கொலை செய்து உதவி செய்துள்ளார்கள். 

2009 கடைசி யுத்தத்தில் விடுதலை விடுதலை இயக்கம் தானும் அழிந்து லட்சக்கணக்கான பொதுமக்களையும் அழிந்து போகும் படி செய்துவிட்டார்கள். அதன் பிறகு சொந்த தமிழ் மக்களையே கொலை செய்து கொள்ளையடித்து கடத்திக் கொண்டு போன தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கொண்டு அரசியல் தலைவர்கள் ஆகிவிட்டார்கள். என்ன கொடுமை. இப்போது இவர்கள் அரசாங்கத்தின் பதவிக்காகவும், பணத்துக்காகவும் அப்படி எல்லாம் நாடகம் போடுகிறார்கள். இவர்களால் கொலை செய்யப்பட்ட இளைஞர்களும் பொதுமக்களும் எவ்வளவு பாவம். அந்தக் குடும்பங்கள் அவ்வளவு கஷ்டத்தில் இருப்பார்கள். ஆனால் அரசியல் அவதாரம் அடுத்த கொலைகார இயக்கங்களின் தலைவர்களும் அவர்களது அடுத்த தளபதிகளும் கோடிக்கணக்கான பெருமதியான கார்களில் பெரிய சொந்த பங்களாக்களில் கொள்ளையடித்த காசுகளில் சுகமாக வாழ்கிறார்கள். குடும்பத்தை வெளிநாடுகளிலும் பிள்ளைகளை வெளிநாடுகளிலும் படிப்பிக்கிறார்கள் கேட்டால் தாங்கள் பரம்பரை பணக்காரர்கள் என்று கூறிக் கொள்வார்கள். கொள்ளையடித்த காசுகளில் பெரிய பிசினஸ் செய்கிறார்கள் கேட்டால் தாங்கள் குடும்ப பிசினஸ் என்று கூறுகிறார்கள். 

                    இன்று தமிழர்களை காப்பாற்ற என்று கூறி ஆயுதம் ஏந்தி புறப்பட்ட இந்த தமிழ் தலைவர்கள் பின்பு தங்களால் முடிந்த அளவு தமிழர்களை கொலை செய்து கொள்ளையடித்தார்கள். வவுனியாவில் இரண்டு இயக்கங்கள் சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு இளம் பெண்களையும் கல்லூரி மாணவிகளையும் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்தார்கள் என்று பகிரங்கமாக பலர் கூறுகிறார்கள் இந்த ரெண்டு இயக்கங்களும் செய்த கொலைகள் கற்பழிப்புகள் எல்லாம் தமிழர்கள் மேல் மட்டுமே. 

தமிழ் மக்கலேயே கொலை செய்து கொள்ளையடித்து கற்பழிப்பு செய்து இன்று உத்தமர்கள்  போல் இருக்கும் இந்த தமிழ் தலைவர்கள் எதார்த்தத்தை புரிந்து நடைமுறையில் சிங்கள தலைவர்களை ஆதரித்து அதன் மூலம் வரும் சிங்கள ஜனாதிபதி தான் தமிழர் பிரச்சனையை தீர்க்கக்கூடிய வல்லமை உடையவர் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இலங்கையின் சிங்கள ஜனாதிபதி தான் இலங்கை தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை பாதுகாக்க கூடியவர். சட்ட ரீதியாக அவருடன் போராடுங்கள். திரும்பவும் தமிழ் மக்களை உசுப்பேத்தி பதவிக்காக பலி கொடுக்காதீர்கள் 

மக்களும் எதார்த்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா வரும் அமெரிக்காவரும் பிரிட்டன் வரும் என்று பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். வெளிநாடுகள் வரும் என்று நம்பினால் கடைசியில் உங்கள் வீட்டு வாசலில் இலங்கை இராணுவம் தான் வந்து நிற்கும்.


அன்று தமிழரசு கட்சியும் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியும் மக்களுக்கு உசுப்பேத்தாமல் உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தால் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் உயிர் உழைத்திருப்பார்கள் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கும் தமிழ் மண் பறிபோயிருக்காது. அன்றைய தமிழ் தலைவர்கள் பதவிக்காக தமிழ் மக்களை ஏமாற்றினார்கள். இன்றைக்கும் தமிழ் தலைவர்கள் என்போர் பதவிக்காகவும் பணத்துக்காகவும் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் 

தமிழ் மக்கள் எல்லா இன மக்களையும் சமமாக பாதுகாக்கவும் உரிமைகள் கொடுக்கவும் யார் தைரியமாக செயல்படுகிறார்கள் என்று அவர்களின் கடந்த காலசெயல்பாடுகள் மூலம் அறிந்து அவர்களுக்கு உங்கள் வாழ்க்கை செலுத்துங்கள். கடந்த காலத்தில் கொலைகள் கொள்ளைகள் கடத்தல்கள் செய்த தமிழ் தலைவர்கள் சொல்லுகிறார்கள் என்று சிந்திக்காமல் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டாம். நீங்கள் யார் வந்தால் நல்லது என்று நினைத்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இலங்கையில் இனி ஒரு இனக் கலவரம் வரக்கூடாது.



          




logoblog

Thanks for reading இலங்கைஜனாதிபதி தேர்தலும் கடந்த 75 வருட கால நினைவுகளும்

Previous
« Prev Post

No comments:

Post a Comment