பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 27 October 2024

புதிய திசைகளின் பாலஸ்தீனம் பற்றிய பதிவு

  வெற்றிசெல்வன்       Sunday, 27 October 2024
இஸ்ரேலிய,  மேற்குலக அரசுகளின் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பும், இன அழிப்பும்: புதிய திசைகள்
 

 
உலகிலேயே அதிக சர்ச்சைக்குரிய பகுதியாக ஜெரூசலேமை உள்ளடக்கிய இன்றைய பாலஸ்தீன, இஸ்ரேல்  பகுதி இருக்கிறது.

 
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், யூதர்கள் ஐரோப்பிய நாடுகளெங்கும் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி வந்ததமையை கணக்கில் கொண்டு யூதர்களுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்க  வேண்டும் என்ற சிந்தனையின் செயல்வடிவமாக இன்றைய இஸ்ரேல் தோற்றம் பெற்றது. எவ்வாறாயினும் இந்த சியோனிச சிந்தனையின் கர்த்தாவாக இருந்தவர்கள் இன்றைய இஸ்ரேலின் இனவழிப்பு சிந்தனையைக் கொண்டவர்களாக இருக்கவில்லை என்பதையும் குறித்துக் கொள்வோம். இந்த திட்டத்திற்கமைய, அன்று  ஒட்டொமன் ஆட்சிக்கு கீழிருந்த பாலஸ்தீன பகுதி யூதர்களின் தெரிவாக இருந்தமைக்கு வரலாற்றுக் காரணங்களும் வலுச் சேர்த்தன.

 
முதலாம் உலக யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஜேர்மனியின் கூட்டாளியாக இருந்த ஒட்டொமன் பேரரசு முடிவிற்கு வர, பாலஸ்தீனம் 1920ம் ஆண்டு பிரித்தானியாவின் கட்டுப் பாட்டில்  வந்தது. யுத்த காலத்தில் அரபுலகத்தின் ஆதரவை பெற அன்று ஒட்டொமன் ஆட்சியின் கீழிருந்த அரபு மக்களுக்கு சுய ஆட்சி உறுதிமொழி கொடுத்த பிரித்தானியா இரண்டாம் உலகப் போர் காலத்திலும் அதே உறுதிமொழியை தொடர்ந்து கொடுத்து வந்தது. பாலஸ்தீனப் பகுதியை அரபு மக்களுக்கு கொடுப்பதற்கு  வாக்களித்த பிரித்தானியாவானது யூதர்களின் ஆதரவு, பொருளாதார உதவிகளை பெறும் நோக்குடன் அந்தப் பகுதியை யூதர்களுக்கும் பொறுப்பற்ற வகையில் கொடுக்க வாக்களித்தமை இன்றைய அரபு இஸ்ரேல் சிக்கலின் தோற்றுவாய் எனலாம்.

 
 
யூதர்களை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீனப் பகுதியில் இருந்து பெருமளவில் வெளியேற்றியது ரோமர்களாக இருக்க, ஐரோப்பா எங்கும் யூதர்களை தேடி அழித்ததும் ஐரோப்பிய  ஜெர்மனிய நாசிப்படையாகவே இருந்திருக்கிறது. ஐரோப்பிய அரசுகள் யூதர்கள் மீது நிகழ்த்திய இன அழிப்பின் பிராயச்சித்தமாகவும், அரேபியர்களை எதிர்காலத்தில் கட்டுப்படுத்துவதற்கான ஒரு விசுவாசமான அடியாளை உருவாக்கும் இரட்டை நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்டது தான் பாலஸ்தீனர்கள்  மீதான இன அழிப்பும் இஸ்ரேல் தேச உருவாக்கமும் என்னும் பக்கத்தையும் நாம் பார்க்கத் தவறக் கூடாது.

 

 
 
1947ம் ஆண்டு பிரித்தானியாவின் பரிந்துரைக்கேற்ப இரு தேச தீர்வு (Two state solution) அமுலுக்கு வந்தது. ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தின் மூன்றிலொரு பகுதி மக்களைக் கொண்ட  யூதருக்கு சாதகமான வகையில் 56% நிலப்பகுதி தீர்வாக வைக்கப் பட்டது. மறுவருடம் இஸ்ரேல் தன்னை தனிநாடாக பிரகடனப் படுத்திக் கொள்ள சுற்றியிருந்த அரபு நாடுகள் இஸ்ரேல் மீது யுத்தம் தொடுத்தன. மேற்கின் ஆதரவு, பொருளாதார பலம், யுத்த உத்திகளில் அரபுநாடுகளை விஞ்சி நின்ற இஸ்ரேல்  அரபுநாடுகளை தோற்கடித்தது மட்டுமல்லாது பாலஸ்தீன மக்களின் அவல ஏதிலி வாழ்வை தொடக்கி வைத்தது.

  
 
மேற்கின் நலனை நடைமுறைப் படுத்தும் வகையில், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் போர்க்கருவியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இஸ்ரேல் தொடர்ச்சியாக  நடந்த அடுத்தடுத்த யுத்தங்களிலும் அரபு நாடுகளை தோற்கடித்து பலவீனப் படுத்தியது மட்டுமல்லாது மேலதிகமாக பாலஸ்தீன நிலங்களோடு தன்னை சுற்றியிருந்த அரபு நாடுகளின் நிலங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டது. 1973ல் எகிப்து, சிரியா இணைந்து யூத புனித நாளில் நடத்திய எதிர்பாராத  தாக்குதல் ஆரம்பத்தில் சில வெற்றிகளை கொடுத்தாலும் போரின் இறுதியில் பனிப்போர் காலத்து பலப் பரீட்சையாக அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் வெற்றி கண்டது. அரபு நாடுகள் நேரடியாக இஸ்ரேலுடன் மோதுவது அத்தோடு முற்றுப் பெற்றது. எகிப்து இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்து  கொண்டு போரில் தான் இழந்த சைனய் தீபகற்பத்தை மீளப் பெற்றுக் கொண்டது.

 
 
பாலஸ்தீன விடுதலை இயக்கம் அறுபதுகளில் ஆரம்பிக்கப் பட்டாலும் அரபு நாடுகள் இஸ்ரேலுடன் நேரடி மோதலை தவிர்த்துக் கொண்ட பிறகே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. இந்தக்  கால கட்டத்தில் எழுச்சி கொண்ட ஈழ விடுதலை போரட்ட அமைப்புகளும் லண்டனில் ஈரோஸ் அமைப்பு மூலமாக PLO உடன் கிடைத்த தொடர்பினூடாக ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொண்டதோடு எமது ஆயுத அமைப்புகளோடு நெருக்கமான உறவுகள் பேணப்பட்டு வந்தது.

  
 
பாலஸ்தீன விடுதலை இயக்கம் பலமாக இருந்த காலத்தில் யாசிர் அரஃபாத் தலைமையில் அதன் அரசியல் நடவடிக்கைகள் இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக இருந்தது. உலக அரங்கில் இஸ்ரேல்  ஒரு ஆக்கிரமிப்பாளனாக அம்பலப்பட்டு நிற்கும் வகையில் பல தளங்களிலும் பாலஸ்தீன ஆதரவு வலுப்பெற்று வந்தது; இன்றும் அதன் விளைவுகள் உலகின் பல இடங்களிலும் போராட்டங்களாக வெளிப் படுவது கண்கூடு. இதனை எதிர்கொள்வதற்கு சுத்த இராணுவக் கண்ணோட்டம் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத  ஹமாஸ் போன்ற சக்திகள் இஸ்ரேல் உளவுப் படையால் வளர ஊக்குவிக்கப் பட்டன என்று பல்வேறு ஆய்வாளர்கள் ஆதாரங்களோடு முன்வைக்கிறார்கள். அமெரிக்கா வளர்த்து விட்ட தலிபான் இதற்கு நல்ல உதாரணம்.   இந்த கருத்திற்கு வலுச் சேர்ப்பது போலவே ஹமாஸ் காசா பகுதியில் சகிப்பு தன்மையற்ற  மதவாத அமைப்பாக உருப்பெற்று நிற்பதோடு சமீபத்திய பொதுமக்கள் மீதான அதன் தாக்குதல்கள் பாலஸ்தீன ஆதரவு சக்திகளை நலிவடையச் செய்யும் வகையில் உள்ளன. இன்று இஸ்ரேல் ஹமாசை முற்றாக துடைத்தெறியப் போவதாக இராணுவ தயார்படுத்தலை செய்து வரும் நிலையில் அதன் தற்போதைய போசகர்களான  ஈரான் மீது சர்வதேச கவனம் குவிந்துள்ளது.

 
 
பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உலக வரைபடத்தில் இருந்து துடைத்தொழிப்பதனை தனது இலக்காகக்  கொண்டிருந்தது. 1993 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பில்  கிளின்டனது முயற்சியின் விளைவாக வரையப் பட்ட ஒப்பந்தத்தில்  PLO இஸ்ரேல் நாட்டை அங்கீகரித்து.  இதன் எதிர் விளைவாக ஹமாஸ் வளர்ச்சி பெறத் தொடங்கியது என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது.

 
 
2005 காலகட்டங்களின் இருந்து அரபு நாடுகளின் தனி ஆளுமை கொண்ட ஆட்சியாளர்களின் மீதான அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் திட்டமிட்ட அவதூறுகளும் பயங்கரவாதிகள் என்னும்  பிரச்சாரமும் ஈராக், லிபியா, சிரியா ஆகிய தேசங்களை மிகவும் பலவீனமாக்குவதில் வெற்றி கண்டது. அத்தேசங்களின் நலிவின் பின்பு அத்தேசத்து தலைவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் சோடிக்கப்பட்டவை என்பதை உலகம் அறிந்து கொண்டது. எண்ணை சந்தையை கையில் வைத்துக்  கொள்வதற்காக எந்தவகை பேரழிவுகளையும் செய்து கொண்டிருக்கும் இந்த அதிகாரங்கள், டொலருக்கு மாற்றான பண பரிவர்த்தனை என்பது மனிதகுல விரோதம் என்னும் பிரச்சாரத்துடன் அழித்தொழிப்புகளை அரங்கேற்றி வருகிறது.

 
 
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் என்பது உலக அரங்கில் புதிய விடயம் அல்ல. இருந்த போதும் தற்போதைய யுத்த சூழ்நிலை திரைமறைவில் யாரால் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற கேள்வி  எழுகிறது. ஹமாஸ் இயக்கம் இந்த சமரை தொடக்கி வைத்ததற்கான காரணமாக இஸ்ரேல் அண்மையில் அல் அக்சா மசூதியில் நடத்திய அத்துமீறல்கள், மேற்கு கரையில் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள், இஸ்ரேலின் காசா மீதான தாக்குதல்கள் போன்றவற்றை குறிப்பிடுகிறது. அமெரிக்காவின்  மத்தியஸ்தத்துடன் இஸ்ரேல் தனது அயல் அரபு நாடுகளான சவுதி அரேபியா ஜோடான் போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்த முனைகிறது. இந்த ஒப்பந்தம் சீனாவுடைய புதிய பட்டுப் பாதை  திட்டத்துக்கான மேற்கு, இந்திய கூட்டின் மாற்று திட்டம். இந்த திட்டம் நடைமுறைக்கு வருமாயின்  இந்தியாவின் மும்பையிலிருந்து சவுதி அரேபியா ஊடாக கிரீஸ் வரை வர்த்தக பாதைகள் அமைக்கப்படும். இந்த திட்டத்தில் இரண்டு முக்கிய நாடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன ஒன்று துருக்கி மற்றையது ஈரான். அந்த வகையில் ஹமாஸ் இயக்கம் இந்த யுத்தத்தை தொடங்கியிருந்தாலும் இதனுடைய பின்னணியில்  ஈரான் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன்மூலமாக இன்று இஸ்ரேல் சவூதி ஒப்பந்தம் கிடப்பில் போடப்படும் நிலைக்கு சென்றுள்ளது முக்கியமான திருப்பம்.

 
இந்த சமரை வெறுமனே இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தமாக மட்டுமே பார்த்து விட முடியாது. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் உடனடியாகவே தமது யுத்த கப்பல்கள், வேவு சாதனங்களை  அனுப்பி வைத்தது மட்டுமல்லாது இந்த நாட்டுத் தலைவர்கள் நேரடியாக இஸ்ரேல் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதும் அதனைத் தொடர்ந்து மற்றைய மேற்கு நாட்டு தலைவர்களும் இஸ்ரேலை நோக்கி விரைவது தற்கால உலக ஒழுங்கில் இதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது. புதிய  உலக ஒழுங்கில் உருவாகி வரும் சீன, ரஷ்ய, ஈரான் கூட்டின் பலத்தை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கமும் நேட்டோ நாடுகளுக்கு இருக்கலாம். ஆனாலும் ஈரான் நேரடியாக இந்த யுத்தத்தில் ஈடுபடாமல் தான் போசித்து வரும் ஹிஸ்புல்லா அமைப்பு மூலமாக தென் லெபனானில் இஸ்ரேலுக்கு எதிராக  புதிய போர் முனையத் திறக்கும் வாய்ப்புகளே அதிகம்.

 
 
ஹமாஸ் இயக்கத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களையும் நெருக்கடியில் தள்ளி அவர்களை பெருமளவில் கொன்று குவித்து இஸ்ரேல் என்ற நாட்டிலிருந்து  விரட்டி அடிப்பது அல்லது தேசங்களுக்கான கூறுகளை கொண்டிருக்காத நிலமற்ற மக்கள் கூட்டமாக அவர்களை மாற்றி அமைப்பது இஸ்ரேலின் திட்டமாக இருக்கிறது. எமது முள்ள்ளிவாய்க்கால் பேரவலம் பேரினவாதிகளின் பரீட்சார்த்த களமாக உலக அரங்கில் பதிவாகியுள்ளது. ஒரு முழு அளவிலான யுத்தம்  ஆரம்பிக்கப்படுமானால் எம்மைப் போலவே நாடற்ற மக்கள் கூட்டமாகிய பலஸ்தீன மக்கள் மிகவும் மோசமான அழிவுகளுக்கு உள்ளாவார்கள். அண்ணளவாக இருபத்து மூன்று இலட்சம் மக்கள் ஏற்கனவே குடிநீர், உணவு போன்ற அடிப்படை தேவைகளில் தன்னிறைவு காணமுடியாத வளங்கள் அருகிய காசா பகுதியில்  சிக்கியுள்ளனர். இஸ்ரேல் தனது படை நடவடிக்கைக்கு ஏதுவாக காசாவின் வடக்கு பகுதி மக்களை வெளியேற வைத்தமை பாரிய அவலத்தை ஏற்கனவே தோற்றுவித்துள்ளது.

 
 
பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவு ஹமாஸ் கொடிகளுடன் அல்லாது பாலஸ்தீனக் கொடிகளுடன் அரபு முஸ்லீம் அல்லாத பெரும்பான்மை மக்களால் ஐரோப்பிய நாடுகளிலும் வெவ்வேறு நாடுகளிலும்  போராட்டங்களாக வெளிப்படுவது நமது எதிர்கால சந்ததிக்கு சில முக்கியமான செய்திகளை சொல்லி நிற்கிறது. ஒரு அமைப்பின் கொடி அதன் அடையாளங்களை பேணிக் காப்பாற்றுவதை விட மக்கள் நலன் சார்ந்து பொதுவான திட்டங்கள் அடையாளங்களுடன் சர்வதேச ஆதரவை வளர்த்துக் கொள்ள வேண்டிய தருணமிது.  சர்வதேசம் என்றாலே, உலகை சாட்சியாக வைத்து இன அழிப்பை செய்யும் மேற்குலக அரசுகளை இலக்கு வைத்து லொபி செய்வது தான் என்ற புரிதலைக் கடந்து  அதற்கு மாற்றாக உலகிலுள்ள அனைத்து  முற்போக்கு சக்திகள், ஜனநாயக அமைப்புகள், மனிதாபிமான இயக்கங்கள், அநியாத்திற்கு எதிராக குரல்  கொடுக்கும் மக்கள் கூட்டங்கள் ஆகியவற்றுடன் தோழமையை வளர்த்துக் கொள்வதும் அவர்களது போராட்டங்களுக்கு தோள் கொடுப்பதும் தான் எமது உரிமைப் போரை வலுப்படுத்தும் என்னும் உண்மை நிலையை இன்று நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொள்வோம்.

  
 
காசா விடயத்தில் நீலிக் கண்ணீர் வடிக்கும் சில "இடதுசாரிகள்" முள்ளிவாய்க்கால் மண்ணில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொல்லப்படும் போது வேடிக்கை பார்த்த அதே இடதுசாரி  அரசியல் தலைமைகளின் சந்தர்ப்பவாத போக்கையும் இந்த இடத்தில் குறித்துக் கொள்வோம்.

 
 
இன ரீதியான அடக்குமுறை, இன அழிப்பு என்னும் தளங்களில் போராடும் எதிர்ப்பு இயக்கங்கள் அவர்கள் சார்ந்த இனத்தின் மீதான ஒடுக்குமுறையின் தன்மையை பொறுத்து மூர்க்க தன்மை  கொண்டவையாகவும் பதில் அதிகாரத்தன்மை கொண்டவையாக  இருப்பதைப் பார்க்கிறோம். இது ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கும், பாலஸ்தீன விடுதலை போராட்ட இயக்கங்களுக்கும் பொருந்தும்.

 
 
பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்கும் சக்திகள் ஹமாஸ் அமைப்பின் தவறான அணுகுமுறைகள், அதன் மத அடிப்படைவாதம் குறித்த விமர்சனங்களையும் எதிர்கொள்கின்றனர். ஆனாலும்  ஒரு இனத்தின் மீதான அப்பட்டமான ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் கொடுக்க இந்த சவால் அவர்களுக்கு ஒரு தடைகல்லாக இல்லை. இந்த வகையில் பயணிக்கும் இலங்கை வாழ் ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினர் இது தொடர்பாக தீவிரமாக சிந்திக்க வேண்டிய காலகட்டமிது.

 
 
ஈழத்தமிழர்களின் போராட்டக் களத்தில் நிற்பதாகக் கூறிக்கொள்ளும் அறமற்ற  கருத்தாளர்கள் சிலர்; பாலஸ்தீன மக்கள், இஸ்ரேலிய அரசு  ஆகிய இரண்டில் எந்தப் பக்கத்திற்கு  ஆதரவாக தமிழர்கள் நின்றால் அது தமிழருக்கு அரசியல் இலாபத்தை தரும் என்னும் அரசியல் கணக்கு போடுகிறார்கள். அறமற்று, மனசாட்சியை தொலைத்து, அரசியலை வியாபாரம் செய்யும் எந்த உரிமைப் போராட்டமும் இறுதியில் அந்த மக்களுக்கு உண்மையான விடிவை தந்துவிடப் போவதில்லை என்பதே வரலாற்று  நியதி. இதற்கு ஆதாரமாக ஆதிக்க அரசுகளின் கையாளுகைகளுக்குள் சென்று விடுதலை பெற்றுக் கொண்டதாக நம்பிக்கொள்ளும் தேசங்களின் இன்றைய நிலைகளே இந்த சந்தர்ப்பவாத அணுகுமுறையின் சாட்சி எனலாம்.

 
 
உலக வரைபடத்தில் பாலஸ்தீனம் என்னும் தேசமும், உலக மக்கள் கூட்டத்தில்  பாலஸ்தீன மக்களும் என்பது திட்டமிட்ட அழிப்பின், அவலத்தின் அடையாளங்கள். அமெரிக்க, மேற்குலக  அதிகாரங்களாலும் இஸ்ரேல் போன்ற ஏவல் அரசுகளாலும் முன்னெப்போதையும் விட மிகவும் பகிரங்கமாக நிகழ்த்தப்படும் இன அழிப்பின் குரூர சாட்சியாக நிற்கும் பாலஸ்தீன மக்களுடன் நாம் அனைவரும் கைகோர்க்கும் காலமிது.

  
 
ஒடுக்கப்படும் மக்களே ஒன்று சேருங்கள்! ஒடுக்கப்படும் தேசங்களே ஒன்று கூடுங்கள் என்னும் சர்வதேச முழக்கத்தின் அடித்தளத்தில் நின்று பாலஸ்தீன மக்களுடன் எமது கைகளை  இறுகப் பிணைத்துக் கொள்வோம்.

 
 
புதிய திசைகள்: 27/10/2023
logoblog

Thanks for reading புதிய திசைகளின் பாலஸ்தீனம் பற்றிய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment