பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 13 April 2026

விடுதலை புலிகள் அமைப்பின் சீலன் பற்றி வந்தது பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Monday, 13 April 2026
இன்றைய நிகழ்வில் அன்றைய நினைவுகள் - கரும்பறவை 

மிதிவெடியில் சிக்கினதில பைப்பண்ணைக்குக் கால்போட்டுது வீதியில் கண்ட போராளியொருவன் இப்படித் தெரிவித்தான் மானிப்பாயில தானை ஆள்? என்று கேட்டேன் ஓமோம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன்.பைப்பைப் பார்ப்பதற்காக மானிப்பாய் வைத்தியசாலைகுச் சென்றேன்.

ஆ.......வங்கோண்ணை என்று சிரித்தபடியே வரவேற்றார் பைப்.கட்டிலிலிருந்தபடியே கதைக்கத் தொடங்கினார் துண்டிக்கப்பட்ட காலைப் பார்த்ததும் வேதனை தோன்றினாலும் அதைக் காட்டிக்  கொள்ளாமல் என்ன?கிட்டு,எஞ்சினியர் கோஷ்டியில சேர்ந்திட்டீங்களாம்'' என்றேன்  ஐயோ அண்ணை இப்பிடி அறுக்காதேங்கோ என்றபடியே என்னை உட்காருமாறு சைகைகாட்டினார்.

வழமையான எமது சீண்டல் கதைகளுக்குப் பின் என்ன மாதிரி நடந்தது? என்று கேட்டேன். அதை விபரிக்கத் தொடங்கினார்.முடிவில் கால் போட்டுதொண்டவுடன என்னோட நிண்ட பெடியங்கள் பதறீட்டாங்கள் நான் அது பிரச்சினையில்ல வோக்கியத் தா எண்டு வேண்டி நேற்று நாங்கள் ஒரு ஒரு அண்ணைக்கு காசு குடுத்தம்..... அவர் செய்த மாதிரி நானும் செய்திட்டன்.பிரச்சினையில்ல.கெதியா வந்திடுவோம் எண்டு அறிவிச்சன்.
அதுக்கு முதல்நாள்தான்  ஒரு பொதுமகன் தன்ரை வீட்டைப் பாக்க வந்த போது மைன்ஸ்சில் அம்பிட்டு கால் போனது.அப்ப நான் தான் போய் அவருக்கு செலவுக்கும் காசு குடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைச்சனான்.அது தான் அவரைப் போல நானும் செய்திட்டன் எண்டால் விஷயம் விளங்கும் தானையெண்டு இப்படி அறிவிச்சன் என்றார்.

கால் போன நிலையிலும் இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் ஆற்றல் எப்படி எமது போராளிகளிடம் தோன்றியது ?அந்த கணத்தில் இந்த கேள்வி தான் எனக்குள் சொல்லிக் கொண்டேன் எல்லாம் வளர்ப்பு முறை! என் மனம் 1982 ஆம் ஆண்டுக் காலத்தை நோக்கிப் போனது

 1982 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் திகதி அதிகாலை 4:00 மணியளவில் சாவச்சேரி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுக்க போய்க் கொண்டிருந்தோம்.சிவராணிதில்லையம்பபலப்பிள்ளையார் கோவிலுக்கு நேர்த்திக் கடனுக்குப் போக வேண்டும் என்றுகூறி ஒரு சிற்றூர்தியை ஒழுங்கு  பண்ணியிருந்தோம் அந்தச் சிற்றூர்தி நாம் குறிப்பிட்டபடி இராச பாதைக்கு வந்ததும்,சாரதியையும் நடத்துனரையும் கட்டிப்போட்டு அந்தச் சிற்றூர்தியையே தாக்குதலுக்குக் கொண்டு சென்றோம்.அந்தக் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவை.இதில் உள்ள சரி பிழையை இன்றைய காலகட்டத்துடன் வைத்துக் கணிக்க முடியாது.கடத்தப்பட்ட சிற்றூர்தியை சங்கர் செலுத்தினார்.

எமது முதலாவது காவல் நிலையத் தாக்குதல் அது.எமது சிந்தனையெல்லாம் ,அந்தக் கட்டடம் -அதில் உள்ள ஆயுதங்கள் -எதிர்க்க வருவோரை எப்படிச் சுடுவது? போன்றவற்றில் தான்.சங்கர்,சீலன்,மாத்தயா,புலேந்திரன், ரகு,சந்தோஷம், ரஞ்சன், அருணா,நான்,ராமு எல்லோர் கைகளிலும் இருந்த ஆயுதங்கள் தான் ஏறக்குறைய இயக்கத்தின் மொத்தப் பலம். இதில் ஏதாவது தவறு நிகழுமாயின்,தமிழீழ போரட்டத்தின் சரித்திரம் மாற்றமடைந்திருக்கும் அப்படியிருந்தும் இப்படியோரு தாக்குதலுக்குத் திட்டமிட்டான் சீலன்.இந்தியாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவரிடம் இத் திட்டத்திற்கான அங்கீகாரத்தையும்,ஆசியையும்  பெற்றிருந்தான் அவன். 

தென்மராட்சிக்குள் வாகனம் போகும் போது அவன் கேட்டான் தற்செயலா எங்களில் ஆராவது செத்தா ...?எங்களில் எவருமே பதிலளிக்கவில்லை. தாக்குதல் சம்மந்தமான  விடயங்களில் ஒருவருடைய குரல் மட்டுமே ஒலிக்க வேண்டும் மென்பதும் ஒரு காரணம். ஆனால் இதற்கு எமக்கு பதிலும்  சொல்லத் தெரியவில்லை. தொடர்ந்து பதிலையும் அவனே சொன்னான் ஆர் செத்தாலும் தாக்குதல் நடக்க வேணும், எனக்கு ஏதாவது நடந்தா மத்தயா சொல்லுறபடி செய்யுங்கோ........நாம் தலையாட்டினோம் (சம்மதித்தோம்) 

பெற்றோல் நிலையச் சந்தி வழியாக கண்டிவீதியில் வந்த சிற்றூர்தி படிப்படியாக வேகத்தைக் குறைத்து.காவல் நிலையத்திற்கு முன்னாலுள்ள வளைவில் நின்றது.எல்லோரும் வேகமாக வரிசையில் இணைந்து கொண்டோம். புலிகளின் மரபு படி தாக்குதல் அணியின் முன்பாக சீலன் நின்றான்.வன்.....ரூ......த்றீ...குனிந்தபடியே வேகமாக ஓடினோம். எங்காவது தடுக்கக் கூடாது என்பதில் அவதானமாக இருந்தேன் ஏனெனில் நாம் தங்கியிருந்த முகாமில் இத் தாக்குதலுக்கான ஒத்திகையின் போது நான் ஒரு தகர டப்பாவைத் தட்டி, அதற்காகச் சீலனிடம் குட்டு வாங்கியவன்.

சீலன் எஸ்.எம். ஜி யுடனும், புலேந்திரன் 30 காபைனுடனும் ரகு எஸ்.எம். ஜி யுடனும் முன்னே ஓடி ,பின்பக்கமாகவுள்ள மாடிப்படியை  நோக்கி ஓடுகின்றனர்.கீழ் பகுதியை நோக்கிச் சென்ற குழுவில் மாத்தயாவிடம் றிப்பிட்டரும் ,அருணாவிடம் 45 ரக சுழல் துப்பாக்கியும் ,ரஞ்சனிடம் 30 கபைனும் இருந்தன.அந்த அதிகாலை வேளை ஆழ்ந்த கனவிலிருந்த ஒரு காவலர் சப்பாத்து சத்தம் கேட்டது. டேய்.... டேய்......டேய்.....டுமீல்-மாத்தயாவின் றீப்பிட்டர் அவரது சத்தத்தையும் ஆவியையும் அடக்கியது.தொடர்ந்துகேட்ட துப்பாக்கி வேட்டொலிகள் சாவச்சேரி நகரத்தையே அதிரப் பண்ணின .இதற்கிடையில் டைனமைற்  அடைந்து திரி போட்டு கொளுத்தி ஏறியும் முறையில் தயாரிக்கப்பட்டிருந்த கைக்குண்டுகளுடனும் ,45 ரக சூழல் துப்பாக்கியுடனும் இருந்த சந்தோஷமும், ஜி-3 உடனிருந்த சங்கரும் காவல் நிலைய காவலர் விடுதியை நோக்கிச்சில குண்டுகளைப் பாய்ச்சி விட்டு  நிலையேடுத்துப் படுத்திருந்தனர்.

..303றைபில் வைத்திருந்த ராமு கொஞ்சம் முன்னே போய் சாவச்சேரிப் பக்கமிருந்து வந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டு இருந்தார்.சந்தோஷம் வைத்திருப்பதைப் போன்ற கைக்குண்டுகளுடனும் 38 ரக சூழல் துப்பாக்கியுடனும் இருந்த எனது முதல் பணி முதலில் தொலைதொடர்பு கம்பிகளை அறுப்பது பின்னர் யாழ்பாணப் பக்கமிருந்து இராணுவ வண்டிகள் வந்தால் கைக் குண்டுகளைக்  கொளுத்தி ஏறிவது.தொலைபேசி கம்பிகளை அறுப்பதற்காக எனக்கு ஒரு நீண்ட கயிறும் அதில் ஒரு  உழவுயந்திரத்தின் உதிரிப்பாகம் (Arm) ஒன்றும் இணைத்து வழங்கப்பட்டிருந்தது.கயிற்றை எறிந்தேன் உதிரிப்பாகம் கம்பியில் சிக்கி விட்டது.கயிற்றை இழுத்தேன் முடியவில்லை உன்னி இழுத்த போது ஊஞ்சலாட வேண்டியிருந்தது.(அந்தக் காலத்தில் நான் மிகவும் மெல்லிய தோற்றமுடையவனாக இருந்தேன்.முதல் முதலாக நான் சீருடை அணிந்தபோது என்னை அழைத்த தலைவர் பசீர்.......நீங்கள்தான் இயக்கத்துக்கு மிகவும் விசுவாசமாயிருக்கவேணும். ஏனெண்டா உங்களை எந்த நாட்டு ஆமியிலயும் எடுக்க மாட்டாங்கள்.என்று கூறி இருந்தார்)அப்போது மாடியிலிருந்து காவலர்கள் கீழே குதிப்பதைக் கண்டேன்.இவ்வாறு குதித்தவர்களின் ஒருவரின் கால் முறிந்து போனதாக பின்னர் பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.மிரள மிரள மிதிவண்டியை உருட்டி வந்த ஒருவர் தம்பி அங்காலை போகலாமே?என்று கேட்டார். ஓ மண்ணை இதை ஒருக்கா அறுப்பமே....?என்று கேட்டேன் சற்றே மிரண்டாலும் பின்பு சம்மதித்தார். இருவரும் இணைந்து இழுத்தோம். கம்பிகள் அறுந்தன.எனது முதற் கடமை பூர்த்தி. 

வீதிப் பக்கம் பார்த்தாலும்,கவனம் முழுக்க காவல்நிலையப் பக்கமாகவேயிருந்தது- கவனித்தேன் -மாடியிலிருந்து சீலன் வந்து கொண்டிருந்தான்.ஒவ்வொரு படியாக காலை இழுத்து இழுத்து அவன் இறங்கிக் கொண்டிருந்தான்.ஒரு கையில் றிப்பிட்டரை இழுத்தபடி வந்து கொண்டிருந்தான்.அவனுடன் புலேந்திரன், ரகு ஆகியோர்- சீலனுக்கு முழங்காலிலும் ,புலேந்திரனுக்கு முதுகிலும், ரகுவுக்கு கையிலும் றிப்பிட்டர்  சூடுகள் விழுந்திருந்தன.(காயமடைந்த நிலையிலும்  இவன்  எவ்வாறு போரிட்டான் காலை காலை இழுத்திழுத்துப் போய் இறந்த காவலனிடமிருந்து றிப்பிட்டரை எவ்வாறு கைப்பற்றி வந்தான் என்பதையெல்லாம் பின்னர் புலேந்திரனும் மாத்தயாவும் எமக்கு விபரித்தனர்.)

 கீழே டைனமைற்றை வெடிக்க வைத்தும் ,துப்பாக்கியால் சுட்டும் உடைக்கப்பட்ட பெட்டிகளிலிருந்து ஆயுதங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.இப் பணிகள் நடைபெறும் போது றிப்பிட்டருடன் அங்கும் மிங்கும் கவனமாக இருந்தார் மாத்தயா.அவரிடம் தான் கொண்டு வந்த றிப்பிட்டரைக் கொடுத்த சீலன் கீழே படுத்து விட்டான்.பசீர் காக்கா என அழைத்த மாத்தயா ஆயுதங்களைத்தூக்கிக் கொண்டு வந்து ஏற்றும்படி எனக்கு கட்டளையிட்டார்.அருணா ரஞ்சன் ஆகியோருடன் இணைந்து அதனைச் செய்தேன் .ஒவ்வோரு தடவையும் வாகனத்தில்  ஏற்ற வரும் போது ஒண்டையும் விடக்கூடாது;ஒண்டும் விடாமல் எடுக்க வேணும் படுத்துக் கிடந்தபடியே உத்தரவிட்டுக் கொண்டிருந்தான் சீலன்,அவனது இந்த ஆற்றலைத் தான் நான்  இன்றும் வியக்கிறேன். முதல் நாள் பெய்த மழையில் காவல் நிலைய முற்றத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனை இரு கைகளாளும் அள்ளிக் குடித்தான்.இடையிடையே  மீண்டும் ஒண்டையும் விட்டிடக்கூடாது'' என்ற உத்தரவு !

ஆயுதங்களைத் தூக்கிப் போடும்போது சில சமயங்களில், உள்ளே கட்டிப் போடப்பட்டிருந்த  சிற்றூர்திச் சாரதி மீதும் நடத்துனர் மீதும் விழுந்து விட்டனர்.இதற்காகப் பின்னர் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டோம்.

இத்தாக்குதலில் எஸ். எம்.ஜி 2 றிப்பிட்டர் 19 ,303 றைபில் 9,வேட்டைத் துப்பாக்கி 2 சுழல் துப்பாக்கி 1 என 33 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டனர்.கருணாந்தம்(உடுவில்) கந்தையா(உசன்)திலகரட்ணம்  (சாரதி கோகாலை) ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர் காவர் விடுதிக்குள் சிக்கியோர் தவிர ஏனையோர் தப்பி ஓடினர்.அதுவரை எம்மிடம் 2 எஸ். எம். ஜிகளே இருந்தன.அப்போதைய நிலையில் ஏறக்குறைய முழு ஆயுத பலத்தையும் பிரயோகித்து நடத்தப்பட்ட இத் தாக்குதல் இயக்கத்தின் ஆயுதப் பலத்தில் திடீர் உயர்ச்சியைக் கொண்டுவந்தது.

ஆயுதங்கள் முழுவதும் ஏத்தியாச்சு என்று திருப்தியடைந்தவுடன் தான்  சிற்றூர்தியில் ஏறச் சம்மதித்தான் சீலன் படுத்துக் கிடந்த நிலையிலும் ஒரு தளபதிகேயுரிய மிடுக்கு-இது அவன் அடுத்த தலைமுறைப் புலிகளுக்கு கொடுத்து விட்டுச் செல்லும் சொத்துக்களில் ஒன்று.(ஏற்கனவே ஒரு முறை தவறுதலாக நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் போது இவனது நுரையீரலை ஒரு ரவை துளைத்துச் சென்றது அப்போது கூட முதலில் எஸ் . எம். ஜியை மாத்துங்கோ அதைப் பத்திரப்படுத்துங்கோ என்று சொல்லி அதைச் செய்த பின்னரே வைத்தியத்துக்குட்படச் சம்பதித்தார்)அவனது இந்தப் பண்புதான் வழி வழியாக வந்து இன்று கால் போன நிலையிலும் தளராமல் சாவகாசமாக செய்தியனுப்பி காத்திருந்து மீண்ட பைப்பிடம்  வந்திருக்கிறது.

இதைப் போலத் தான் காயமுற்ற நிலையில் தோழனிடம்  என்னை சுடு ஆயுதங்களைக் கொண்டு தப்பு என்ற கட்டளை ஒரு தளபதியின் குரலாக ஒலித்தது அன்று என்னைச் சுடு! ''என்று சீலன் ஒரு முன்மாதிரியாக நடந்து காட்டியதை மிக சில நிமிட நேரத்துக்குள்ளே ஆனந்தும் பின்பற்றினான்.இது எவ்வளவு பெரிய விடயம்? இதன் முக்கியத்துவத்தை நான் அறிந்த வரை பெரியளவில் எமது எழுத்தாளர்கள் எவரும் வெளிப்படுத்தவில்லை என நினைக்கிறேன். ஏனைய இயக்கங்களை போல போராளிகளே! தற்கொலை செய்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை என்று நடந்திருந்தால் அதன் விளைவுகள் போராட்டத்தில்  எத்தகைய மாற்றத்தைச் கொண்டு வந்திருக்கும் 

இவன் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்வதற்காகப் பெருமைப்படுவோம் !அவனைப்போல ஆயிரமாயிரம் சீலன்களை உருவாக்கிய தலைவனை பெற்றதற்காகப் பெருமைப்படுவோம்

கரும்பறவை வெளிச்சம் இதழ் 1992
logoblog

Thanks for reading விடுதலை புலிகள் அமைப்பின் சீலன் பற்றி வந்தது பழைய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment