பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 18 April 2026

நன்றி திருவோணமலை செய்தி

  வெற்றிசெல்வன்       Saturday, 18 April 2026
கோணேஸ்வரம் கோவில் சோழர்களின்  ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக  சொல்லப்படுகிறது.ஆனால் வரலாற்றின் ஓர் பக்கத்தை திருப்பிப் பார்த்தால் கி.மு.150 ஆண்டுகளுக்கு முன்னரே எல்லாளன் என்னும் ஈழத்(இலங்கை) தமிழ் மன்னன் கோணேஸ்வரத்துக்கு சென்று வழிபட்டதாக சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அப்படி என்றால் அதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கோணேஸ்வரம் கட்டப் பட்டிருக்க வேண்டும். 

'கோவில்'என்னும் தமிழ்ச் சொல்லானது பெரும்பாலும் இந்தியாவில் கட்டப்பட்டிருக்கும் வைஷ்ணவக்  கோவில்களில் காணப் படாத ஒன்று..!
ஆனால் இந்தக் கோவிலில் "கோவில்" என்னும் தூய தமிழ்ச் சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பாவிக்கப்பட்டதிலிருந்து இது சைவர்களுக்கும் தமிழர்களுக்கும் உரிய கோவில் மட்டுமல்ல தமிழர் ஒருவரால் கட்டப் பட்ட கோவில் என்றும் தெரியவருகிறது.

கோவில் வளாகத்தின் இடது பக்கத்தில் பிரட்ரிக் கோட்டைக்குள் நுழைந்ததுமே தென்படுவது சிங்கள இராணுவ முகாமும் அதனருகே  உள்ள புத்த விகாரையுமாகும். பழம் பெருமை வாய்ந்த "கோணேசர் கோவில் தங்களுடையது" என்று ஒரு காலத்தில்  உரிமை கொண்டாடும் சிங்கள நரித்தனத்தின் ஓர் அம்சம்தான் இது!
                                        
 இலங்கை முழுவதையும் தம் பாட்டன் காலத்துச் சிங்களச் சொத்து என்று கூறும் பருந்துகளின் கொக்கரிப்புகளில் இதுவும் ஒன்று ஆனால் எங்கள் பூமிக்கான ஆதாரங்கள் ஏராளம் ஏராளம்..!
எங்கள் வரலாற்றுப் பொக்கிஷம் அது!
                                                 கோணேஸ்வரம் கோவிலுக்கு "கோகர்ணம்" என்றும் ஓர் பெயர் வரலாற்றில் புராண காலத்தில் வழங்கப்பட்டதாக  பழைய நூல்களின் மூலம் அறிய முடிகிறது! 
                                           
சைவர்களின் பிரதானக் கடவுளாக ஈழத்திலும் சிவனையே தமிழர்கள் அன்றிலிருந்து இன்றுவரை முன் நிறுத்தி வணங்கி வருகிறார்கள். 

பழங்கால மன்னனாகிய  இராவணன் கூட ஓர் மாபெரும் சிவ பக்தன்தான். பல்லவர்,பாண்டியர்,சோழர்களின் வணக்கத்துக்கு உரிய பிரதான கடவுள் சிவன் ஆகும்..

சிவனின் காலடியில் கங்கை நதி ஊற்றெடுத்து வந்து கலப்பதாக புராணங்கள் கூறுவது போல் தென் இலங்கையில்  ஊற்றெடுத்த மகாவலி கங்கையானது இறுதியில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்குள் நுழைந்து கடலில் கலக்கும் இடம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூருக்கு அருகே கங்கை என்னும் சிற்றூரில்தான் உண்டு. இந்தக் கட்டுரையாளரின் பிறந்த மண்ணும் அதன் அருகேதான் உண்டு! ..அங்கிருந்து ஓர் உயரமான இடத்தில்  இருந்து பார்த்தால், கோணேசர் கோவிலை..தொலை நோக்கி மூலம் காணலாம்!
                                       கோணேசர் கோவில் தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிசம்  என்று சொன்னேன்..அதற்கு ஏதுவாக ..பல அரிய சான்றுகள் உண்டு..!..அதில்  ஒன்றுதான் இராவணன் கல்வெட்டு என்று அழைக்கப்படும் ஓர் பகுதியாகும். கோவிலின் மிக அருகில், வலது புறத்தில் உள்ள பெரும் மலையொன்றை   இரண்டாகப் பிளந்ததுபோல் செங்குத்தாக சுமார் முன்னூறு அடி ஆழத்துக்குமேல் கடலுக்குள் பிளந்து - புதைந்து கிடக்கும் அந்த இடத்தைத்தான் இராவணன் கல்வெட்டு என்று அழைக்கிறார்கள்..!..அந்தப் பகுதி மிக..மிக ஆழம் கூடிய பகுதி ஆகும்..தோணிகளில் அதனருகே போகும்போது.. காந்தம் போல் அந்த மலை தம் தோணிகளை   இழுப்பதாக நமது மீனவர்கள் கூறுவதுண்டு..இது புவியியல்  ரீதியாக ஆராயப் படவேண்டிய ஒன்று..! அதற்கு அண்மையில் இராவணனின் வெண்கலச் சிலை ஒன்றும் உள்ளது!..என்பது மட்டுமல்ல..இந்த கோவிலில் இராமருக்கு என ஓர் குடிசையைக்கூட தமிழர்கள் கட்டி  வைக்கவில்லை..ஆனால்.. இந்த கோணேஸ்வரம் கோவிலில் இராவணனுக்கும் ஓர் சிறிய கோவில் உண்டு என்பதுதான் கவனிக்கப் படவேண்டிய ஒன்று..!..சிவனை வழிபடும் பக்தர்கள் இராவணனையும் வழி பட்டுச் செல்வார்கள்!
                                                  கோவிலுக்கு அண்மையில் உள்ள ஆழக் கடலுக்குள் தான் நன்னீர் நதி ஊற்று இருக்கிறது..இது கதை அல்ல!..பூகோள ரீதியாக உள்ள வரலாறு..இந்த சிறு நதியில் இருந்தே பாபநாச தீர்த்தம் ' என்னும்  ஊற்று கோணேசர் மலையை சுற்றி சுரக்கிறதாம்!..இந்த கல்வெட்டுக்கும் பாபநாச தீர்த்ததுக்கும்  அன்றில் இருந்து இன்று வரை கடலைப்பார்த்தவாரு பூசை நடப்பதுண்டு!
                                        அன்றைய  வரலாற்றின்படி, கி.மு.205இல் உள்ள திராவிடக் கட்டிடக் கலை அமைப்பின்படியே சுவாமி மலையில் அமைந்துள்ள கோணேஸ்வரம் கோவில் கட்டப் பட்டுள்ளதாக சொல்வார்கள்..!
ஆனால்... அதற்கும் சில நூற்றாண்டுக்கு முன்னர் வடிக்கப் பட்ட
கி.மு.ஆறாம் நூற்றாண்டிற்கும் கி.மு..இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட வரலாற்று- புராண நூல்களில் கோணேஸ்வரத்தின்    சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கி.மு. 400 க்கும் கி.மு.100க் குமிடையில் எழுதப்பட்ட மகா பாரதத்தில் 'கோணேஸ்வரம்' கோவிலை கோகர்ணம்' என்று குறிப்பிடுகிறார்கள் !... பாரதம்..இராமாயணம்  இரண்டிலுமே இடம் பெற்ற கோவில்தான் எங்கள் கோணேஸ்வரம் ஆகும்..ஆனால்..இராவணன் கல்வெட்டு..கி.மு.1580 இல் கட்டப் பட்டதாக கட்டிடக் கலை நிபுணர்கள் கூறுகிறார்கள்!..எனவே..அதற்கும் பல் ஆண்டுகளுக்கு முன்னர்தான் கோணேசர் கோவில் கட்டப் பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறதல்லவா..?
                                              ஆனால்.. 'வாயு புராணம்' என்னும் வரலாற்று நூலில் 
Paul  E .Peiris ..என்ற வரலாற்று ஆசிரியர்..கோணேசர் கோவில் கி.மு.543-505 கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார்..இதையே..மற்றும் ஓர் வரலாற்று ஆசிரியரான..எஸ்.பத்மநாதனும்  உறுதிப் படுத்துகிறார்..! 
                                                 நகுலேஸ்வரம் ..(கீரிமலை)..திருக்கேதீஸ்வரம் ..(மன்னார்)..முனீஸ்வரம் ..(சிலாபம்)..தேனாவரம் (தேவன்துறை) கோணேஸ்வரம் ஆகிய ஐந்து கோவில்களுமே பழங் காலத்தில் சிவனுக்காக தமிழர்களால்.. கட்டப் பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க  கோவில்களாகும்!..இந்த கோவில்கள்  அனைத்துமே புராணங்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளன. அருணகிரிநாதர், திருஞான சம்பந்தர், சுந்தரர்
போன்றவர்கள் கோணேஸ்வரத்துக்கு வந்து தரிசித்துச் சென்றுள்ளனர். திருஞானசம்பந்தரால்  பாடப் பட்ட தேவாரப் பதிகமும் கோணேஸ்வரம் பற்றி குறிப்பிடுகிறது..ஆனால் ..சம்பந்தரின் காலம்..கி.பி. 7ஆம் நூற்றாண்டு ஆகும்!    
                                      இராவணன் சிவனையே முழு முதற் கடவுளாக வழி பட்டவன் என்பது குறிப்பிடத் தக்கது..அதுமட்டுமன்றி..அவன் ஓர் சிறந்த இசை வல்லுனரும் ஆவான்.இராவணன் யாழ் வாசித்துப் பாடினால்  சிவன் கூட இமய  மலையில் இருந்து இறங்கி வருவார் என்று நான் கூறவில்லை..எந்த இராமாயணம் இராவணனை பெண் பித்தன்..அசுரன்..நரகாசுரன் என்று கூறியதோ ..அந்த இராமாயணம் தான் இதையும் கூட குறிப்பிட்டுள்ளது..!
...இவைகளில் பல கர்ண பரம்பரை கதைகள் என்று வைத்துக் கொண்டாலும்  கூட..இராவணனின் வீரத்தை இராமனால் கூட வெல்லமுடியாது..அதனால்தான் வாலியைக் கூட யுத்த தர்மத்துக்கு மாறாக சதியால் இராமன் கொன்றான் என்று  அறிய முடிகிறது!
அப்படிப்பட்ட இராவணன் தன் வாளால் மலையை வெட்டிய இடமே 'இராவணன் கல்வெட்டு' என்று வழங்கப்படுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். ஓர் வரலாற்றுப் பின்னணி இன்றி கர்ண பரம்பரைக் கதைகள் தோன்ற முடியாது என்று முக்கிய வரலாற்று ஆசிரியர்களே ஒத்துக் கொண்டுள்ளனர்..
logoblog

Thanks for reading நன்றி திருவோணமலை செய்தி

Previous
« Prev Post

No comments:

Post a Comment