ஆரம்ப கால விடுதலை இயக்கத் தலைவர்களும் தமிழ் நாட்டு தொடர்புகளும் பகுதி 6
1983 ஆண்டுகளிலும் அதற்கு முன்பும் ஈழப் போராட்டத்துக்கு உதவி செய்தவர்கள் யாரும் பணத்துக்காகவோ தங்களை வளர்த்துக் கொள்ளவோ எங்களை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது முகநூலில் எழுதுபவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்காரர்கள் எல்லாம் குறிப்பாக திமுக ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்று கண்டபடி வசை பாடுகிறார்கள். உண்மைதான் கலைஞர் கருணாநிதியும் திமுக கட்சியும் ஈழத் தமிழர்களுக்கு செய்தது துரோகம் தான். எப்படி என்றால், 1982 ஆம் ஆண்டு பிரபாகரன் உமாமகேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பின் எம்ஜிஆர் அவர்களை இலங்கை அரசிடம்பிடித்துக் கொடுக்க முற்பட்டபோது, அதற்கு எதிராக கலைஞர் செயல்பட்டதும் பின்பு நேரடியாக இந்திய பிரதம மந்திரி இந்திரா காந்தியிடம் நிலைமைகளேவிளக்கி எம்ஜிஆர் அரசின் நடவடிக்கைகளை தடுத்திருக்காவிட்டால், பிரபாகரன் , உமா மகேஸ்வரன் மற்றும் பல தலைவர்களை அப்போதைய எம்ஜிஆர் அரசு பிடித்துக் கொடுத்திருக்கும் பின்பு ஈழப் பிரச்சனையும் இருந்திருக்காது. இப்போது முகநூலில் ஆவேசமாக எழுதுபவர்களுக்கும் வேலை இருந்திருக்காது. அன்று தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்று பலரும் அறியவில்லை அறிய விரும்புவதும் இல்லை. அந்த காலத்தில் உதவி செய்தவர்கள் ஈழ போராளிகளுக்கு உதவி செய்யும் போது பலவித கஷ்டங்களை இன்னல்களை அரசிடம் அனுபவித்தார்கள். எனக்குத் தெரியக் கூடியதாக பெருஞ்சித்திரனார் ஐயா குடும்பம், எங்களுக்கு உதவி செய்த திமுக முக்கிய புள்ளிகள் மணவை தம்பி அய்யா, தமிழ் மன்னன் போன்றவர்களை கூறலாம்.
சந்ததியார், இளவழகன் நான் மூவரும் போய் பழைய எம் எல் ஏ ஹாஸ்டல் தங்கியிருந்த இந்திய ராஜ்யசபா பாராளுமன்ற உறுப்பினர் தஞ்சாவூர் சேர்ந்த L.கணேசன் அவர்களே போய் பார்த்தோம். அவரும் எங்களை அன்புடன் வரவேற்று எல்லா விபரங்களையும் கேட்டு விட்டு, தான் தனது தலைவரான கலைஞரிடம் இதைப் பற்றி பேசிவிட்டு தகவல் தருகிறேன் என்றார். அன்று மாலையே எங்களை அழைத்து தலைவர் கலைஞர் அவர்கள் உடனடியாக டெல்லி போய் எல்லா திமுக பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து பிரதம மந்திரி இந்திரா காந்தியிடம் பேசி, ஈழ போராளிகளே நாடு கடத்துவதை தடுக்கும்படி கேட்டுக்கொண்டதாக கூறினார். தானே L. கணேசன் அண்ணா இந்த பொறுப்பைதானே ஏற்றுக் கொள்வதாகவும் எங்களை கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதோடு தான் இரண்டொரு நாளில் ரயிலில் டெல்லி போகப் போவதாகவும் இந்தப் போராட்டங்கள் சம்பந்தமாக விபரங்கள் கூடுதலாக தான் அறிய விரும்புவதாகவும் அதற்கு தன்னுடன் கூட விபரம் தெரிந்த ஒருத்தரை அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டார்.
சந்ததியரும் நானும் வந்து அங்கிருந்த மாறன் கந்தசாமி போன்ற தோழர்களோடு நடந்த சம்பவங்களை கூறி டெல்லிக்கு யாரை அனுப்புவது என்று யோசித்து கடைசியில் என்னையே டெல்லி போக சொன்னார்கள். அடுத்த நாள் நானும் , சந்ததியாரும் பழைய எம்எல்ஏ ஹாஸ்டலுக்கு பின்புறம்இருந்த திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற அலுவலகம் போய் கலைஞர் அவர்களிடம் நன்றி தெரிவித்தோம். கலைஞர் அவர்களும் எங்களிடம் பயப்பட வேண்டாம், இந்திரா காந்தி அம்மையாரிடம் தானும் தனிப்பட பேசுவதாக எங்களிடம் கூறினார். 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி என நினைக்கிறேன் காலை டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பில் L.கணேசன் அண்ணா, செஞ்சி ராமச்சந்திரன் (இவர்தான் ஆரம்பகால விடுதலைப்புலி இயக்கத்துக்கு சகல உதவிகளும் செய்தவர்) திருவண்ணாமலை மாவட்ட நகர திமுக செயலாளர் குமார், மற்றும் நான் ஆகிய நால்வரும் டெல்லி பயணமானோம். காலை 7 மணி புறப்பட்ட ரயில் அடுத்த நாள் மாலை 5 மணி போல் டெல்லி சென்றோம். கிட்டத்தட்ட 35 மணி நேர பயணம். போகும்போது ஈழ பிரச்சனை, மலையக பிரச்சனை என்பது பற்றி கருத்துக்கள் பரிமாறி விவாதித்துக் கொண்டோம். விடுதலைப் புலிகள் பற்றிய பல செய்திகளை செஞ்சி ராமச்சந்திரன் அண்ணா கூறினார். அவருக்கு எங்களை விட அவர்கள் பற்றிய, அவர்கள் குணா அம்சங்கள் நன்றாக தெரியும். பிரபாகரன், உமா மகேஸ்வரன் தலைமறைவு காலங்களில் இவர்தான் முழு உதவிகளும் செய்துள்ளார்.
L. கணேசன் அண்ணாவும் யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டக்களப்பு தமிழர்களை யும், மலையாக இந்திய தமிழர்களை யம் தங்களுக்கு சமமாக நடத்துவதில்லை என்று தான் கேள்வி பட்டு உள்ளதையும் கூறி கவலைப்பட்டார். எல்லா தமிழ் மக்களையும் இணைத்து போராடினால் போராட்டத்திற்கு பெரிய பக்கபலமாக இருக்கும் என்று தான் நினைப்பதாக கூறினர். அதோடு அவர் கூறினார் யாழ்ப்பாணத் தமிழர்கள் கல்வியில் முக்கிய கவனம் செலுத்துபவர்கள் என்று தான் கேள்விப்பட்டு உள்ளதாகவும், கிட்டத்தட்ட தமிழ்நாட்டு பிராமணர்கள் போல் இருக்கிறார்கள் எனவும் சுயநலம் மிக்கவர்கள் என்றும் கூறினார். நான் அதை மறுத்து பலவித கருத்துக்கள் கூறினேன். ஆனாலும் அவர் சிரித்துக் கொண்டே அப்படி நடந்தால் சந்தோசம் தான். ஆனால் செஞ்சி ராமச்சந்திரன், சுப்பு அவ்வளவு உதவிகள் செய்தும் கடைசியில் அவரை தூக்கி தானே வீசினார்கள். சில விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பு கொடுத்த போது பிரபாகரன் அவருக்கு எதிராகவே துப்பாக்கியை நீட்டிய சம்பவம் உண்டு. ஈழ போராளிகள் எங்கள் உதவியை பெற்றுக் கொண்டு, எங்களை உதாசீனப்படுத்தினாலும் பரவாயில்லை. நாங்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்போம். தலைவர் கலைஞரும் நாங்கள் உதவி செய்வதை தடுக்க மாட்டார் , என்று அவர் கூறும் போது எனக்கு மனதுக்குள் பயங்கர கோபம் எங்களைப் பற்றி எப்படி குறைவாக நினைக்கிறார் என்று ஆனால் இன்று 1983 ஆம் ஆண்டு அவர் கூறியது போல் தான் இன்று நாங்கள் நடந்து கொள்கிறோம். அன்று எனது வயது 23 அன்று கோபப்பட்ட நான் இன்று, அவர் கூறியது அவ்வளவு உண்மை என்று அறியக் கூடியதாக இருக்கிறது.
23ஆம் தேதி மாலை டெல்லி போய் இறங்கியதும் சாப்பிட்டுவிட்டு நாங்கள் ரெஸ்ட் எடுக்க ,L. கணேசன் அண்ணா தொலைபேசி எடுத்து சகா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விபரங்களை கூறினார். அப்போது பாராளுமன்ற திமுக கட்சி தலைவர் C.T தண்டபாணி அவர்கள். இரவு அவரையும், முரசொலி மாறன்அண்ணாவையும் பார்க்க என்னையும் அழைத்துக் கொண்டு போனார்கள்.
தொடரும்.
No comments:
Post a Comment