ஆரம்பகால ஈழ விடுதலை இயக்க தலைவர்களும், தமிழ்நாட்டு தொடர்புகளும் பகுதி 7
டெல்லியில் L. கணேசன் அண்ணா சக கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் பிரதம மந்திரி இந்திரா காந்தி அம்மையார் அவர்களிடம் கொடுக்க வேண்டிய மனு சம்பந்தமாக விவாதித்தும் ஆலோசனை கூட்டம் மனு தயாரிப்பதில் மும்முரமாக இருந்ததார். அடுத்த நாள் திங்கட்கிழமை இந்திய பாராளுமன்ற ராஜ்யசபா லோக்சபா மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்ததாக இருந்த நேரம். இதில் எனக்கு கிடைத்த வாய்ப்பு எல்ஜி அண்ணா எல்லா இடத்துக்கும் என்னையும் கூட்டிக்கொண்டு போய், எல்லோரிடமும் என்னையும் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்தியபாராளுமன்ற திமுக பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் எல்லா திமுக பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேர்தலில் திமுக , காங்கிரஸ்கூட்டணி 37 இடங்களை கைப்பற்றி இருந்தன. இரண்டு மட்டும் அண்ணா திமுக கூட்டணி.
அன்று நான் சந்தித்த திமுக பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் நினைவில் நிற்பவர்கள் மட்டும் சிடி தண்டபாணி முரசொலி மாறன் கலாநிதி நாகரத்தினம் முருகையன் குழந்தைவேலு அர்ஜுனன் கந்தசாமி சத்தியேந்திரன் ( இவர் உமா மகேஸ்வரனுக்கு நெருக்கமாக பின்னாலில் இருந்தார்) மற்றும் மாயத்தேவர் (இவர் தான் எம்ஜிஆர் தனிக்கட்சி கண்டு முதல் எம்பியாக இருந்தவர் பின்பு திமுகவில் சேர்ந்தார்)
இவர்கள் எல்லாம் என்னை அன்போடும் ஆதரவோடும் இலங்கைப் பிரச்சனை பற்றி கூடுதலாக விபரங்கள் அறிந்து கவலைப்பட்டார்கள். எல்ஜி அண்ணா எல்லாரோடும் சேர்ந்து அடுத்த நாள் பிரதம மந்திரிக்கு கொடுக்க வேண்டிய மனுவை தயார் செய்து விட்டு அங்கே பாராளுமன்ற கண்டினில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தோம். அடுத்த நாள் 25ஆம் தேதி காலை என நினைக்கிறேன் பத்திரிகைகளில் பரபரப்பாக இலங்கை வெலிக் கடை ஜெய்ல் வைத்து 35 தமிழர்கள் கொலை செய்யப்பட்டது பரபரப்பான செய்தியாக இருந்தது. உடனடியாக எல்ஜி அண்ணா தலைவர் கலைஞர் அவர்களுடன் தொலைபேசியில் பேசிவிட்டு சக பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பேசி விட்டு உடனடியாக செஞ்சி ராமச்சந்திரன் குமார் மற்றும் என்னையும் அழைத்துக் கொண்டு பாராளுமன்ற திமுக அறைக்கு சென்றார். அங்கு வைகோ சிடி தண்டபாணி முரசொலி மாறன் வர ஜெயிலில் படுகொலை பற்றியும் கலந்து பேசி அது சம்பந்தமாகவும் புதிய மனு தயாரித்து பிரதமர் இந்திரா காந்தியிடம் கொடுக்கச் சென்றார்கள்.
பின்பு வந்து இந்திரா காந்தி அம்மையார் மிகக் கனிவாக பேசியதாகவும் நிலைமைகளை இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இலங்கை அரசு தமிழர்களை படுகொலை செய்வதாகவும் மற்றும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழ் தலைவர்களை இலங்கைக்கு கொண்டு போக இந்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தங்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக கூறியதாகவும் கூறினார்கள்.
அன்று பாராளுமன்றம் கூடிய போது எல்ஜி அண்ணா அவர்கள் எங்களை அழைத்துப் போய் பார்வையாளர் மாடத்தில் அமர்த்தி விட்டு சபைக்கு சென்றார். அன்று திமுக உறுப்பினர்கள் இலங்கைப் பிரச்சனை பற்றி உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று போராடி அனுமதி பெற்றார்கள். அன்று பாராளுமன்றத்தில் எல்ஜி அண்ணா மற்றும் வைகோ அவர்களின் எழுச்சிமிக்க ஆவேசமான இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ஆங்கில பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் பேசுவதை இந்திரா காந்தி அம்மையார் அமர்ந்து உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்ததையும் பார்க்கக் கூடியதாக இருந்தது. இவர்கள் ஆவேசமாக பேசும் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் கத்தி கூச்சல் போடும் போது இந்திரா காந்தி அம்மையார் அவர்களை அமைதியாக இருக்கும் படி கூறியதையும் பார்க்க முடிந்தது. பிரதம மந்திரி இந்திரா காந்தி அம்மையார் பேசும் போது இலங்கையில் நடக்கும் கவலை தரும் விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாது இலங்கையில் நடப்பது ஒரு இனப்படுகொலை என்று முதல் முறையாக பகிரங்கமாக அறிவித்தார்.
இப்படியாக முதல் முறையாக இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசை தூண்டி பேச வைத்தது கலைஞர் கருணாநிதி தலைமையில் இருந்த திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள். இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை பிரச்சனை பேசப்பட்ட பின்பு தான் உலக நாடுகளும் தங்கள் கவனத்தை இலங்கை பக்கம் திருப்பினார் என்பது உண்மை. இதை நான் எழுதும் போது விபரம் அறியாதவர்கள் ஏதோ நான் திமுகவை தூக்கிப் பிடிப்பதாக மட்டமாக எழுதுவார்கள். அவர்களுக்கெல்லாம் சீமான் தான் இலங்கைப் பிரச்சினையை தூக்கிப்பிடிப்பதாக நம்புகிறார்கள் நடந்த உண்மைகள் எல்லாம் தெரிந்தால் அன்று எங்களுக்கு பிரதிபலன் வராமல் உதவி செய்தவர்கள் எல்லாம் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
அன்று மாலை நாங்கள் தங்கியிருந்த எல் ஜி அண்ணாவின் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு பக்கத்து பக்கத்து வீடுகளில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் வந்து இலங்கை பிரச்சனை பற்றி விரிவாக பேசிக் கொண்டிருந்தார்கள். எல்ஜி அண்ணா வீட்டில் தங்கி இருந்த சித்தார்த்தன் என்னும் அவரது உறவினர் மகன்நண்பர் எங்களுக்கு எல்லா உதவியும் செய்து கொடுத்தார். அதோடு வெங்கா எம் பி அவர்களின் மகன் சம்பத் அவர்களும் எங்களுக்கு நல்ல உதவியாக இருந்தார். இவர் டெல்லி யுனிவர்சிட்டி இல் படித்துக் கொண்டிருந்தார். இவர்களைப் பற்றி பிற்காலத்தில்டெல்லியில் என்னோடு தங்கியிருந்த பல இயக்கத் தோழர்களுக்கு தெரியும் குறிப்பாக தற்போது கனடாவில் இருக்கும் பரதன் அவர்கள் இவர்களுடன் நல்ல நட்பில் இருந்தார். அதோடு பரதன் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து எங்கே பிரச்சனை பற்றி தொடர்ந்து விளங்கப்படுத்தி விவாதித்து வந்துள்ளார் என்பதையும் குறிப்பிட வேண்டும் இலங்கை பிரச்சனை எல்லா இடமும் பரபரப்பாக இருந்த நேரம் எனக்கு சென்னைக்கு உடனடியாக போக வேண்டும் என்று ஆசை இருந்தது. அப்போது எங்களுக்கு சென்னையில் தொலைபேசி வசதிகள் இல்லை. எல்ஜி அண்ணா வார முடிவில் சென்னைக்கு ரயிலில் போகலாம் என்று கூறினார்.
இரண்டு நாள் கழித்து 27 ஆம் தேதி திரும்பவும் வெளிக்கடை சிறையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வந்தது. உணர்ச்சிவசப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களிடம் கூட்டணி வைத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கல்யாணசுந்தரம் எம் பி அவர்களும் பாராளுமன்றத்தில் ஆவேச பேச்சுகள் மூலம் இந்திய மத்திய அரசாங்கத்தை அதிரசெய்தார்கள்.
சென்னையில் எம்ஜிஆர் அரசு எந்த ஒரு முடிவு எடுக்காமல் அமைதி காத்தார்கள். அன்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உத்தரவுபடி டெல்லியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை இலங்கை தூதுவராளத்துக்கு நடத்தும் படி கலைஞர் கேட்டுக்கொண்டார். எல் கணேசன் அண்ணா தனது கையில் இருந்த பணத்தை எங்களிடம் கொடுத்து கருப்பு சிவப்பு துணி வாங்கி தைத்து திமுக இவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யும்படி கூறினார். திருவண்ணாமலை நகர செயலாளர் குமார் ஒரு தையல் காரர் என்பதால் நானும் குமாரும் சித்தார்த்தன் உதவியோடு துணிகள் வாங்கி விடிய விடிய திமுக கொடி தயாரித்தோம். எல்ஜி அண்ணா தூங்காமல் எங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். இதெல்லாம் மறக்கமுடியாத நினைவுகள். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கொடிகள் தயாரித்திருந்தோம். டெல்லியில் இருந்த நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் நார்த் அவென்யூ என்னும் எம்பிக்கள் குடியிருக்கும் பகுதியில் குவியத் தொடங்கினார்கள். காலையில் 10 மணி இருக்கும் என நினைக்கிறேன். திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் மிகப்பெரிய ஊர்வலம், இதுதான் டெல்லியில் திமுக தனது கருப்பு சிகப்பு கொடியுடன் நடத்திய முதல் பெரிய ஆர்ப்பாட்டம் என நினைக்கிறேன்.
கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் உள்ள தூரத்தை இந்திய ஜனாதிபதியின் மாளிகையை சுற்றிக்கொண்டு சவுத் அவன்யூ என்னும் அடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் குவாட்டர்ஸ் கடந்து இலங்கை எம்பஸியை அடைந்தபோது எமக்கு அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் ஊர்வலம் போகும் முன்பு இந்திரா காந்தி அம்மையார் டெல்லி காங்கிரஸ் கட்சியினரை அழைத்து இலங்கை தூது வஆலயத்துக்கு எதிராக ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும் படி கூறி இருந்தார் போல. டெல்லி காங்கிரஸ் ஆர் இலங்கை அரசுக்கு ஜெயவர்த்தனக்கு எதிராக இந்தியிலும் ஆங்கிலத்திலும் கத்தி இலங்கை எம்பஸி வெள்ளி கேட்டை உடைக்கும் அளவுக்கு போய் விட்டார்கள். பின்பு அவர்களுடன் திமுக ஊர்வலமும் சேர்ந்து கொண்டது. அன்று இலங்கை பிரச்சனை சம்பந்தமாக முதன் முதலாக டெல்லி அதிர்ந்தது பத்திரிகைகள் எல்லாம் இது பற்றிய செய்திகள் தான்.
இலங்கை பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசும் நேரடியாக ஈடுபட்டதால் அதிர்ச்சி அடைந்த எம்ஜிஆர் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்திருக்கிறார். சென்னையிலும் திமுக மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மிகப்பெரிய போராட்டங்கள் தினசரி நடத்தி இருக்கிறார்கள். அவர்களை காவலர்களைக் கொண்டும் அடக்க முடியவில்லை காரணம் அன்றிருந்த காவலர்கள் இலங்கை தமிழர் போராட்டத்திற்கு மிகவும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள். இந்த உணர்ச்சியை வளர்த்ததுக்கு காரணம் தினத்தந்தி பத்திரிகை. பத்து பேர் செத்தால் 100 பேர் செத்ததாக செய்தி போடுவார்கள். குடிசைவாசிகள் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்கள் உட்பட எல்லோரும் உணர்ச்சி வசப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேச்சு தான். இப்படி இருந்த எமக்கு ஆதரவான மக்களின் ஆதரவை எமது ஈழத் தமிழர் இயக்கங்கள் தங்கள் செய்கைகளால் பிற்காலத்தில் தமிழ்நாட்டு மக்களால் வெறுக்கப்படும் நிலை உருவாகியது.
இந்திரா காந்தி அம்மையாரின் உத்தரவுப்படி கைது செய்யப்பட்ட உமா மகேஸ்வரன் மற்றும் தலைவர்களை விடுதலை செய்யும்படி தமிழ்நாட்டு அரசுக்கு ரகசிய உத்தரவு போய் உள்ளது. தனது கட்சிக்கு ஆபத்து வரும் என பயந்த எம்ஜிஆர் உடனடியாக ஜாமீனில் அவர்களை விடுதலை செய்தார். அதிலும் எம்ஜிஆர் கலைஞருக்கு எதிரான மனநிலையை பார்க்க வேண்டும். அதாவது ஜெயிலில் இருந்து வெளிவரும் உமா மகேஸ்வரன் உடனடியாக போய் கலைஞரை சந்தித்து விடக்கூடாது என்பதற்காக தனது மந்திரி சபையில் இருந்த காளிமுத்துவையும் அவரின் தம்பியையும் போய் சென்னை மத்திய சிறை வாசலில் இருந்து அவர்கள் போய் கலைஞரை முதலில் சந்திக்க கூடாது என்பதற்காக தனது ராமாபுரம் வீட்டுக்கே அழைத்து வர செய்து கட்டிப்பிடித்து தானும் தனது கட்சியும் இலங்கை தமிழருக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறி பல கசப்பு வார்த்தைகள் கூறியுள்ளார். அவரின் நோக்கம் இவர்கள் கலைஞர் கருணாநிதியுடன் போய் சந்திக்கக் கூடாது என்று, ஆனால் உமா மகேஸ்வரன் இவரை சந்தித்து விட்டு நேரடியாக கலைஞரிடம் போய் சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அன்றுகலைஞர் சொற்படி தலைமறைவாக போகாததால் இன்று ஒரு விடுதலை இயக்கத் தலைவராக பேசக் கூடியதாக இருப்பதாக கூறி மீண்டும் தனது நன்றியை கூறிக்கொண்டார்.
ஆனால் கலைஞர் எனது ஆதரவு மற்றும் திமுக தொண்டர்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும். இன்று தமிழ்நாட்டில் உங்கள் இருப்பிடத்தை தக்க வைக்கவும் பெரியளவு பகிரங்கமாக ஆதரவு பெற எம்ஜிஆரின் நட்பையும் பயன்படுத்திக் கொள்ளச் சொன்னார். ஆளுங்கட்சி ஆதரவு இருந்தால்தான் இதுவும் சாதிக்க முடியும் என்றும் கூறி வாழ்த்து தெரிவித்து அனுப்பியுள்ளார். இதுதான் அன்று கலைஞரின் பெருந்தன்மை. 1985 ஆம் ஆண்டு வரை எம் ஜி ஆர் க்கு நட்பாக இருந்தது உமா மகேஸ்வரன் மட்டுமே. மற்ற எல்லா தலைவர்களிடமும் அவர்களின் நட்பு இருந்தது. எம்ஜிஆருக்கும் உமா மகேஸ்வரனுக்கும் டெலோ இயக்கம் விடயத்தில் விரிசல் ஏற்பட்டது. காரணம் கலைஞருடன் நெருக்கமாக இருந்த telo இயக்கம், அப்போது எம்ஜிஆர் ஒரு அறிக்கை வெளியிட்டார் 1974 ஆம் ஆண்டு குட்டி மணியை இலங்கை அரசுக்கு பிடித்துக் கொடுத்த கலைஞரால்தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்று பொருத்தம் இல்லாத ஒரு கதையை கூறினார். அப்போது பாஸ்போர்ட் சட்டத்தில் மத்திய அரசு குட்டிமணியை நாடு கடத்தியது. அது வளமையான நடைமுறை அப்போது குட்டிமணி யார் என்றே இலங்கையில் கூட தெரியாது அதன் பிறகு குட்டிமணி என்றால் வல்வெட்டி துறையில் கடத்தல் செய்பவர் என்று மட்டுமே யாழ்ப்பாணத்தில் பலரும் அறிந்திருந்தார்கள்.
இந்த எம்ஜிஆரின் குற்றச்சாட்டை மறுத்து குட்டிமணியின் மனைவி ஒரு கடிதமும் telo இயக்க இரட்டை தலைவர்கள் ஸ்ரீ சபா ரத்னம் மற்றும் ராசா பிள்ளை கலைஞருக்கு ஆதரவாக அறிக்கை விட்டதால் எம்ஜிஆரின் நிரந்தர கோபத்துக்கு ஆளானார்கள். எம்ஜிஆரும் அவரின் உளவுத்துறை தலைவர் மோகனதாசும் அடிக்கடி உமாவிடம் telo இயக்கத்தை வளர விடக்கூடாது, அவர்களை அழித்தால் தான் நீங்கள் வளரலாம் என்று வற்புறுத்தியும், மோகனதாஸ் பயமுறுத்தும் படி யும் பேசியபோது உமா மகேஸ்வரனுக்கு கோபம் வந்து நீங்கள் எங்கள் நாட்டுப் இயக்க பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்று நேரடியாகவே கூறியுள்ளார். இது எம்ஜிஆர் ,, மோனதாஸ் இருவருக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது அதன் பிறகு உமாவை சந்திப்பதில்லை. அதன் பிறகு மோகனதாஸ் திட்டமிட்டபடி அன்ட் பாலசிங்கத்தின் மூலம் பிரபாகரன் வளைத்து பிடித்து எம்ஜிஆரின் நட்பை வளர்த்துக்கொண்டார். இதன் மூலம் பிரபாகரன் ஆசைப்பட்டபடி பல உதவிகளும் பெருமளவு பணமும் கிடைத்தது. எம்ஜிஆர் ஆசைப்படி telo இயக்கமும் அதன் தலைவரும் அழிக்க பட்டார்கள். இந்த உண்மைகள் எத்தனை பேருக்கு தெரியும். இது சும்மா பரப்பரப்புக்காக எழுதப்படவில்லை. அன்று நடந்த உண்மைகள் தான்.
டெல்லியில் இருந்து நான் திரும்பி வந்தபோது சென்னையே பரபரப்பாக இருந்தது. நான் டெல்லி போகும் முன்பு தமிழ்நாட்டு போலீசாருக்கு தலைமறைவாக இருந்தேன். இப்போது சுதந்திரமாக எமது ரகசிய அலுவலகம் குடியிருப்பு போயிருந்தேன். வெளியில் இருந்த காவலர்கள் சிரித்து கை கொடுத்தார்கள். எத்தனை மாற்றங்கள் எமது வெளியுலக தொடர்புக்கு சட்டை பேரவை தலைவர் ராஜாராம் ஐயா பழைய சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் ஒரு பெரிய அறையை கொடுத்தார்கள். அதில் ஒரு முதல் பொறுப்பாளராக நான் இருந்து எனது வேலையை தொடங்கினேன்.
10 நாட்களுக்கு முன்பு கலங்கிப் போயிருந்த எங்களை திமுக கட்சி தலைவரும் எல்ஜி அண்ணா உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மிகப்பெரிய ஆதரவையும் எழுச்சியையும் பெற்றுக் கொடுத்தார்கள். இது ஒரு சரித்திர சம்பவம். நாங்கள் மறக்கக்கூடாது முதல் அடியை இவர்கள்தான் பெற்றுக் கொடுத்தார்கள் ஆனால் பிற்காலத்தில் விடுதலை இயக்கங்கள் சுய சிந்தனை இன்றி செய்த செயல்களால் எமது விடுதலைப் போராட்டம் திசை திரும்பி ஆதரவு இழந்து கடைசியில் அழிந்தது தான் மிச்சம்.
எனது நினைவில் இருக்கும் தமிழ்நாட்டு சம்பவங்கள் தொடரும்.
No comments:
Post a Comment