பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 15 March 2023

ஆரம்பகால ஈழ விடுதலை இயக்கத் தலைவர்களும் தமிழ்நாட்டு தொடர்புகளும் பகுதி 9

  வெற்றிசெல்வன்       Wednesday, 15 March 2023

ஆரம்பகால தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவர்களும் தமிழ்நாட்டு தொடர்புகளும் பகுதி 9



நான் இதுவரை எனது எந்த பதிவுகளிலும் இந்தியா எங்களை ஏமாற்றி விட்டது, எங்களை அழித்துவிட்டது என்று பதிவு செய்யவில்லை. காரணம் இப்படி எல்லாம் நடக்கும் என்று எல்லா விடுதலை இயக்கத் தலைவர்களுக்கும் தெரியும். அவர்கள் இந்தியாவை எப்படி சமாளித்து எங்கள் லட்சியத்தை நோக்கி பயணிப்பது என்று யோசித்ததை விட, மற்ற மற்ற இயக்கங்களை அழித்து தானும் தனது இயக்கமும் மட்டுமே  இருக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. அதனால் இந்தியாவின் நோக்கம் பற்றி அறிந்திருந்தும் அவர்கள் எதை பற்றியும் கவலைப்படவில்லை.


இந்திரா காந்தி மறைவுக்குப் பின்பு ராஜீவ் காந்தி பிரதமராக வந்த பின் 1985 ஆரம்ப மாதங்களில் என்ன நினைக்கிறேன்,டெல்லியில் முதன்முறையாக இந்திய உளவு, அதிகாரிகளையும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் நேருவையும் சந்திக்க ஐந்து விடுதலை இயக்க தலைவர்களையும் சந்திக்க அழைத்திருந்தார்கள். ஒவ்வொரு இயக்கம் சார்பாக தலைவரும் சக இன்னொரு தோழரும் வந்திருந்தார்கள். புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் மட்டும் வந்திருந்தார் . இந்திய அரசு ஏற்பாடு செய்த தங்கும் விடுதியில் தங்காமல், டெல்லியில் எனது அலுவலக தங்கும் இடத்தில் தங்கினார்.

அடுத்த நாள் காலையில் நாங்கள் மற்ற இயக்கங்கள் தங்கி இருந்த விடுதிக்கு போய் காலை உணவை முடித்துவிட்டு காத்திருந்தோம். இந்திய அதிகாரிகளை சந்திக்க தமிழக விடுதலைப் புலிகள் சார்பில் பிரபாகரன், திலகர். ஈ பி ஆர் எல் எஸ் சார்பில் பத்மநாபா, கேதீஸ்வரன், telo சார்பில் ஸ்ரீ சபா ரத்னம், கூட வந்தவர் பெயர் மறந்து விட்டேன். ஈரோஸ் சார்பில் பாலகுமார், ரத்ன சபாபதி. பிளாட் சார்பில் உமா மகேஸ்வரன், மற்றும் நான் வெற்றி செல்வன்.

முதலில் தனித்தனியாக ஒரு இயக்கத்துக்கும் கார் ஏற்பாடு செய்து இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பாளர் குழு தலைவர், சிறந்த  மனிதருமான பெரியவர் G. பார்த்தசாரதி அவர்களை பார்க்க அழைத்துச் செல்லப்பட்டோம். இந்திரா காந்திக்கு மிக நெருங்கிய நண்பராகவும், இந்திரா காந்தி பெரியவர் ஜீ பார்த்தசாரதி அவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ஆகவும் இருந்தார். இலங்கை பிரச்சனையில் இந்திரா காந்தி இருக்கும் வரை ஜி பார்த்தசாரதி அவர்களின் ஆலோசனை முக்கியமாக கேட்கப்பட்டது.

உமா மகேஸ்வரனும், நானும் 83 ஆம் ஆண்டு தொடர்ந்து பலமுறை அவரை சந்தித்து இருக்கிறோம். லெபனான் PLO பயிற்சிக்கு போகும்போது, வரும்போது இந்திய விமான நிலையத்தில் பாஸ்போர்ட் சம்பந்தமாக பிரச்சனை வரும்போது நான் தான் இவரிடம் போய் உதவி கேட்பேன். என்னப்பா உங்களால ரொம்ப பிரச்சினையா இருக்கு என்று சிரித்துக் கொண்டே நேரடியாக விமான நிலைய உயர் அதிகாரிகளுடன் போன் மூலம் தகவல் கொடுத்து என்னை அனுப்பி வைப்பார்.

இயக்கத் தலைவர்கள் அவரை சந்திக்கப் போனபோது அவருக்கு உமா மகேஸ்வரனையும்என்னையும் மட்டுமே தெரிந்திருந்தது. எல்லோரையும் பற்றி விசாரித்து விட்டு தனித்தனியாக தனித்தனியாக அவர்கள் குடும்பம் பற்றியும் விசாரித்தார். அப்போது அவருடன் அவருடைய செயலாளர் அய்யாசாமி அவர்களும் இருந்தார்கள். முதலில் பொதுவாக இந்தியா ஆயுதம் ஆயுதப் பயிற்சிகள் கொடுப்பது பற்றி எங்களிடம் கேட்டறிந்தார். எல்லா இயக்கத் தலைவர்களும் பெருமளவு ஆயுதப் பயிற்சி வேண்டும், ஆயுதங்கள் வேண்டும் அதைவிட இலங்கை அரசை தாக்குவதற்கு தேவையான விதவிதமான ஆயுதங்கள் பற்றி எல்லாம் கூறினார்கள். இதோடு இந்தியாவில் பெருமளவு நாங்கள் அமைத்து ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு பயிற்சி கொடுக்குறோம் அதற்கு இந்திய அரசு பண உதவி செய்ய வேண்டும் இவ்வாறுபலவாறு உதவிகள் கேட்டார்கள். அவர் நாளை உங்களை அரசு அதிகாரிகள் சந்திக்கும் போது வெற்றி அவர்களிடம் கேளுங்கள் என்றார்.

நாங்கள் நன்றி சொல்லி புறப்பட தயாராகும் போது திரும்ப எங்களை அழைத்து தனது உதவியாளரை வெளியில் அனுப்பிவிட்டு எங்களிடம் மனம் திறந்து பேச தொடங்கினார்.. அவர் கூறினார்   இப்பொழுது நான் கூறப்போவது இந்திய அரசின் சார்பில் இல்லை. நீங்கள் எல்லாம் சிறு வயதில் அப்பா அம்மா சகோதரர்களின் உறவை விட்டு ஒரு பெரிய நோக்கத்திற்காக உயிர் பயம் இல்லாமல் போராடவந்திருக்கிறீர்கள். உங்களைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. ஆனாலும் உங்களுக்கு நான் சில உண்மைகளை கூற வேண்டும். இந்திரா காந்தி அம்மையார் இருக்கும் வரை ஒரு சிறந்த அரசியல் நோக்கோடு உங்கள் உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டோம். இனி எப்படி நிலைமைகள் மாறும் என்று தெரியாது என்று கூறியவர் மேலும் கூறியதாவது,


இலங்கையில் இப்போது நடக்கும் ஜெயவர்த்தன அரசு இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவோடு சேர்ந்து வேலை செய்கிறது, முக்கியமாக திருகோணமலை ஆயில் கிடங்குகள் அமெரிக்காவுக்கு மிக நீண்ட கால குத்தகைக்கு விடும் முயற்சியில் இலங்கைஈடுபட்டு உள்ளது. அப்படி அமெரிக்கா கைகளுக்குபோனால் திருகோணமலை துறைமுகமும் அமெரிக்காவின் கையில் இருக்கும். இது இந்தியா மற்றும் தென்னாசிய நாடுகளுக்கு ஆபத்தாகிவிடும்.

அதோடு இன்று இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ம் மிக கடுமையான சூழ்நிலை நிலவுகிறது. அதனால் இந்த பிரச்சனைகளை தீர்க்க இந்தியா உங்களை பயன்படுத்த போகிறது என்பதை நீங்கள் கவனமாக மனதில் கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு ஆயுதம் ஆயுதப் பயிற்சி கொடுத்து தமிழ் ஈழம் கிடைக்க இந்தியா உதவுகிறது என்று உங்களுக்கு ஆயுதம் கொடுக்கும் உளவுத்துறை அதிகாரிகள் மற்ற அதிகாரிகள் கூறலாம்.. ஆனால் அதை நீங்கள் நம்ப வேண்டாம். இந்தியா உங்களை இலங்கைக்கு எதிராக பயன்படுத்தி தனது பாதுகாப்பையும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய மட்டுமே பயன்படுத்த போகிறது என்று உங்களுக்கு தெரிய வேண்டும்.

இந்தியா ஒரு காலமும் தனித் தமிழ் ஈழம் கிடைப்பதை ஆதரிக்காது. காரணம் தமிழ்நாட்டில் தமிழ் தனித் தமிழ்நாடு கேட்டு பல வருடங்களுக்கு முன்பு போராட்டங்கள் நடந்தன. அந்தப் போராட்டங்கள் இன்று இல்லாவிட்டாலும் தனித்தமிழ்நாட்டு போராட்டங்கள் மீண்டும் தொடங்கினால், பக்கத்தில் தமிழ் ஈழம் கிடைத்த ஒரு நாடு இருந்தால் கட்டாயம் அந்த நாடு இந்தியாவில் இருக்கும் தனித்தமிழ் நாட்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும். அதனால் இப்போதிருக்கும் சூழலில் தனித்தமிழ் ஈழம் நாடு கிடைக்க உதவி செய்யாது.

நீங்கள் இந்தியா கொடுக்கும் பயிற்சி ஆயுதங்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இலங்கையில் உங்கள் சொந்த இடங்களில் இருந்து கொண்டு அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துங்கள். இந்தியாவில் எக்காரணம் கொண்டும் 300க்கு மேற்பட்ட இளைஞர்களை கொண்டு வந்து ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்க வேண்டாம். காரணம் கடல் போக்குவரத்து மற்றும் இங்கு பராமரிப்பு செலவினங்கள் கூடும். பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு நல்ல சத்தான உணவுகள் கொடுக்க வேண்டும் அதற்கும் பணம் இந்தியா கொடுக்காது. அதற்குரிய பணத்தை நீங்கள் சட்ட விரோதமாக தான் பெற வேண்டும். ஏன் பணத்துக்காக இந்தியாவை கூட சட்ட விரோதமான செயல்களில் செயல்களில் ஈடுபட்டு உங்கள் ஆதரவை இந்திய பொதுமக்களிடம் இழந்து விட வேண்டாம்.

மேலும் நீங்கள் உடனுக்குடன் பயிற்சி பெற்றவர்களை அவரவர் சொந்த இடங்களில் அனுப்பினால் அவர்கள் தங்கள் வீடுகளுக்கும் உதவுவதோடு வேறு இளைஞர்களும் அங்கேயே பயிற்சிகள் கொடுக்கலாம். அந்த இளைஞர்கள் தங்களுக்கு தேவையான வேலைகளை கூட தேடிகொள்ளலாம். உங்களுக்கு பராமரிப்பு செலவும் குறையும்.

கடைசியாக அவர் இந்தியா உங்களை அதாவது விடுதலை இயக்கங்களை வைத்து ஒரு பக்கம் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்து, மறுபக்கம் ஜெயவர்த்தனவை ஒரு அரசியல் தீர்வுக்கு நெருக்கடி கொடுத்து இலங்கை தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி தலைமையில் ஒரு சிறந்த இலங்கைதமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்.

நாங்கள் அவரிடம் இலங்கை அரசாங்கம் ஒரு தீர்வு வுக்கு வராவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டோம். அதற்காகத்தான் உங்களை வைத்து  கடும்நெருக்கடி கொடுத்து இந்தியாவால் ஒரு தீர்வு திட்டம் பெற முடியும் என்று நம்பிக்கை உள்ளது. அங்கு ஒரு அமைதியான சூழ்நிலை நிலவும் போது நீங்களும் தமிழர் வாழும் இடங்களில் உங்களை பலப்படுத்திக் கொண்டு பொருளாதார ரீதியிலும், உங்கள்இளைஞர்களையும், தமிழ் பொதுமக்களையும் பாதுகாக்கும் முயற்சியில் இறங்குங்கள். தலைமறைவு வாழ்க்கையை கைவிட்டுபொதுமக்களிடம் அரசியல் தலைவர்களாக வந்து சட்டரீதியாக உரிமைகளே பெற்றுக் கொள்ளபாருங்கள்.

காலப்போக்கில் இலங்கை அரசு பழையபடி தமிழர்களே நசுக்க பார்த்தால், நீங்கள் பெற்றுக் கொண்ட பயிற்சிகள் மூலம் இலங்கையில் இருந்துகொண்டே உங்கள் போராட்டத்தை தொடரலாம். அந்த நேரம் இந்தியாவில் கூட மனமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். இந்தியா கூட உங்கள் போராட்டத்தை அங்கீகரித்து பகிரங்கமாக ஆதரவு தரலாம்.அதோடு இப்பொழுது உங்களுக்கு விடுதலை இயக்கத்தை எப்படி நடத்துவது, வெளிநாட்டு அரசாங்கங்களுடன் எப்படி தொடர்பு கொள்வது என்ற விடயங்கள் எல்லாம் தெரியும். நீங்கள் இந்தியா அமிர்தலிங்கம்அவர்களின் மூலம் பெற்றுத்தர முயற்சி செய்யும் தீர்வு திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதோடு இது தனது தனிப்பட்ட கருத்துக்கள் எனவும், மேற்கூறிய விடயங்களை கருத்தில் கொண்டு தான் இந்திரா காந்தி தலைமையில் இலங்கை சம்பந்தமான முடிவுகளை எடுத்தோம். ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கம் பழைய நிலையை தொடரலாம் அல்லது இலங்கை  சம்பந்தமாக புதிய முடிவுகள் எடுக்கலாம் என்று கூறினார்.

பெரியவர் G. பார்த்தசாரதி அவர்களுக்கு நன்றி கூறி வெளியில் வந்த நாங்கள் கார்களில் எறும் முன் ஒற்றுமையாக அமிர்தலிங்கம் தலைமையில் தீர்வு திட்டம் வர விடக்கூடாது என்று பேசிக் கொண்டோம். எல்லா இயக்கங்களும் தங்கியிருந்த விடுதிக்கு உமாவும் நானும் போய் பகல் சாப்பிட்டுவிட்டு தலைவர்களும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் நேரடியாக பார்க்க விட்டாலும் இந்தியா அமிர்தலிங்கத்தை வைத்து எந்த அரசியல் திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. விடுதலை இயக்கங்களை முன்னிறுத்தி செய்யப்படும் தீர்வைதான் ஏற்றுக் கொள்ள வேண்டும் தங்களுக்குள் எல்லா தலைவர்களும் பேசி கொண்டார்கள்.

இந்திய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் நேரு அவர்களும் முக்கிய உளவுத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்ட ரகசிய கூட்டத்தில் தமிழ் ஈழம் பெற இந்தியா எல்லா வகையிலும் உதவி செய்யும் என்றும் அதற்குரிய ஆயுதங்கள் பயிற்சிகள் உங்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்கள். அதே நேரம் இந்திய மத்திய மந்திரி நேரு சில கடுமையான அறிவுரைகளும் கூறினார். இந்திய அரசுக்கு தமிழ்நாட்டு அரசுக்கு விரோதமாக செயல்படும் தலைமறைவு இயக்கங்களுடன் தொடர்புகள் வைத்துக் கொள்ள வேண்டாம். சில இயக்கங்கள் தனித் தமிழ்நாட்டு எண்ணத்தோடு செயல்படும் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பதாக தெரிகிறது. இந்தியாவில் சட்ட விரோதமான செயல்களையும் இயக்கங்கள் செய்கின்றன எங்களுக்கு தினசரி ரிப்போர்ட் தமிழ்நாடு அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்கள் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்கிறார்கள் நாங்கள் தடுத்து வைத்திருக்கிறோம். தமிழ்நாடு அரசாங்க நடவடிக்கை எடுத்தால் அது வெளிநாடுகள் இந்தியாவுக்கு நட்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றார். இனிமேல் இந்தியாவிலும் உங்கள் நோக்கத்துக்காக மட்டும் செயல் படுங்கள் என்று கூறினார்.


நாங்கள் அவர்களிடம் நாங்கள் இந்தியாவுக்கு நம்பிக்கை விசுவாசமாக இருப்போம். எங்களுக்கு இன்னும் ராணுவ பயிற்சியும், பண உதவியும், புதிய ரக ஆயுதங்கள் அதன் பெயர்களை கூட கூறி கேட்டார்கள். நேரு அவர்களும் உளவுத்துறை அதிகாரிகளை கைகாட்டி விட்டுப் போய்விட்டார். திரும்ப நாங்கள் தனித்தனியாக உளவுத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்தபோது வழமை போல நாங்கள் மட்டும்தான் இந்தியாவுக்கு விசுவாசம் எங்களுக்கு கூடுதல் பயிற்சி ஆயுதங்களும் தாருங்கள் என்று எல்லா விசுவாசத்தையும் காட்டி கெஞ்சினோம். அங்கு விடுதலைப் புலி பிரபாகரனும் இதையே தான் செய்தார்கள். சென்னை வந்தவுடன் தலைவர்கள் எல்லாம் வேறு வேறு கதைகள் சொல்வார்கள். நாங்கள் இந்தியாவுடன் கடுமையாக எங்கள் கருத்தைச் சொன்னோம். இந்தியா அவர்களுக்கு எதிராக வந்தாலும் பரவாயில்லை என்று வீரா வேசமாக பேசுவார்கள். இப்படித்தான் விடுதலை இயக்கத் தலைவர்கள் ரெட்டை வேடம் போட்டார்கள்.

புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் சென்னை தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்த இலங்கை டெபுட்டி ஐ கமிஷனர் திஸ்ஸ ஜெயக்கொடி மூலம் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுல முதலிக்கு செயல்பாடுகள் பற்றி தகவல் அனுப்பிவிட்டார்.

வழமை  போல் மற்ற இயக்கங்களும் இந்தியா செய்யக்கூடாது என்ற செயல்களை செய்தார்கள். தனித் தமிழ்நாட்டு இயக்க உறுப்பினருக்கு விடுதலை புலிகள் பயிற்சி கொடுத்தார்கள். Telo, புளொட் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டார்கள். இயக்க உள் முரண்பாடுகளால் பல கொலைகளும் தமிழ்நாட்டில்நடந்தன.

இவ்வளவு மோசமாக பக்குவம் அடையாத இயக்கத் தலைவர்கள் நடந்து கொண்ட முறை சரியா? உண்மையில் எங்கள் ஈழ விடுதலை இயக்கத் தலைவர்கள் தான் ஒருவரே இருந்து தமிழர் தலைவராக விளம்பரம் வேண்டும் என்று ஒருவரை ஒருவர் அழித்து எங்களுக்கு நாங்களே சமாதி கட்டிக் கொண்டோம். இதில் பெருமை வேறு 14 நாடுகள் சேர்ந்து அழித்தன, இந்தியா, இந்திய உளவுத்துறை கலைஞர் கருணாநிதி எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டு துரோகத்தனம் செய்தார்கள் என்று எழுதி தள்ளுகிறார்கள்.

உண்மைதான் நாங்கள் எப்படி இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தோமோ அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை அதைப் பற்றி எழுதினாலே இந்திய கைக்கூலி துரோகி என்று கூறுகிறார்கள். நாங்கள் முதலில் விடுதலை இயக்கங்கள் எப்படி எப்படி நடந்து கொண்டன என்று அறிய வேண்டும்.

விடுதலை இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் எல்லோருக்கும் தெரிந்த ஒரே உளவுத்துறை அமெரிக்காவின் சி ஐ ஏ மட்டுமே. இயக்கத் தலைவர்கள் கூட மற்ற இயக்க ஆதரவாளர்கள் இயக்கத் தலைவர்களை கூட CIA உதவியுடன் இயங்குவதாக கூறிக் கொள்வார்கள். பின்பு ரஷ்ய உளவுத்துறை கேஜிபி அறிய தொடங்கினோம். 1983 ஆம் ஆண்டு கலவரத்துக்கு பின் தான் இந்தியாவின் ரா உளவுத்துறை பற்றி அறிய முடிந்தது.

உலகத்தில் ஒவ்வொரு பெரிய நாடும் தனது பாதுகாப்புக்காக உள்நாட்டு செயல்படும் ஒரு உளவுத்துறையும், வெளிநாடுகளில் தனது நாட்டுக்கு ஆதரவாக இல்லை எதிராக செயல்படும் சக்திகளை பற்றி அறிய உளவுத்துறையையும் வைத்திருக்கும். அவர்களின் வேலை தனது நாட்டுக்கு விசுவாசமாக வேலை செய்வது. தனது பாதுகாப்புக்காக பக்கத்து நாடுகளில் கலவரங்கள் குழப்பங்கள் ஏற்படுத்தி தனக்கு நம்பிக்கையான புதிய அரசை உருவாக்கும் முயற்சி செய்வது, பழங்காலத்தில் இருந்து இப்படியான செயல்கள் நடந்து வந்துள்ளன. இந்தியாவின் ரா உளவுத்துறை இலங்கையில் இந்தியாவின் சார்பான ஆதரவான ஒரு அரசை கொண்டுவர முயற்சி செய்தது அதற்கு உங்களை பயன்படுத்திக் கொண்டு அது எங்களுக்கும் தெரியும்.

இது சம்பந்தமாக பங்களாதேஷ் என்ன நடந்தது என்று ஒரு ராணுவ அதிகாரி நின்று நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வங்கம் தந்த பாடம் என்று ஒரு புத்தகம்ராணுவம் இன்னொரு நாட்டில் நுழையும் போது என்ன நடக்கும் என்று சந்ததியாரால் வெளியிட ப்பட்டது. பின்பு உமா சந்ததியாரை கொலை செய்து எரித்த பின், இந்திய உலக அதிகாரிகள் உமாவை எச்சரித்த போது இந்திய அரசுக்கு எதிராக வங்கம் தந்த பாடம் என்னும் இந்திய ராணுவத்துக்கு எதிரான புத்தகத்தை முகாம்களில் கொடுத்து இந்தியாவுக்கு எதிரான கருத்தை முன் வைக்கிறார் அதனால் தான் அவருக்கு மரண தண்டனைகொடுக்கப்பட்டது என்று கூச்ச நாச்சம் இல்லாமல் கூறினார். அப்போது அவருடன் கூட நானும் இருந்தேன். பிற்காலத்தில் வங்கம் தந்த பாடம் புத்தகத்தை தானே மொழி பெயர்த்து அச்சிட்டதாகவும் தானே முதல் முதலாக இந்தியாக்கு எதிராக குரல் கொடுத்ததாகவும் கூறிக்கொண்டார். அதையே பொய் என்று தெரிந்தும் இன்றும் புளொட் அதை பெருமையாக கூறி கொள்வார்கள்.


ஒவ்வொரு விடுதலை இயக்கமும் தனது சொந்த பாதுகாப்புக்காக ஒவ்வொரு உளவுத்துறையை வைத்திருந்தார்கள். அந்த உளவுத்துறை செய்த வேலைகள் என்ன. சகா விடுதலை இயக்கங்களின் வளர்ச்சியை பற்றியும் அதை அழிப்பதும் பற்றியும் யோசித்து செயல்பட்டார்கள். புளொட் இயக்கம் யார் சந்ததியியாரின் விசுவாசி, யார் தலைவரை தோழர் என்று அழைக்கிறார்கள் இவர்கள் சந்தேகத்துக்குரிய நபர்கள் பெரிய ஐயா என்று அழைக்கும் போது இவர் விசுவாசி என்று அடையாளம் கண்டு கொள்வது எமது  உளவுத்துறை. சந்தேகப்படும் நபர்களை சித்திரவதை செய்து கொள்வது எமது உளவுத்துறையின் விசுவாசமான வேலை இப்படியே எழுவது அப்பாவி இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். சக விடுதலை இயக்கங்களை விடுதலைப் புலிகளின் பொட்டுமான் தலைமையில் உள்ள உளவுத்துறை திறமையாக வேலை செய்து கைது செய்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து கொலை செய்தது விடுதலை புலிகளின் உளவுத்துறை. மற்ற இயக்கங்களையும் இளைஞர்களையும் அழித்துவிட்டு , திறமையான தவறுகளை சுட்டிக்காட்டும் தமிழ் அறிஞர்களையும் சிறந்த தமிழ் தலைவர்களையும் கொலை செய்துவிட்டு,தமிழர் பலம் குறைந்த பின்பு அதாவது இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழிக்க செய்த முயற்சியை தமிழ் இயக்கங்களே செய்தன. அதாவது இயக்கங்களின் உளவுத்துறைகள் தமிழர்களின் பலத்தையும் எண்ணிக்கையும் குறைத்தன. இவற்றை இதுவரை நாங்கள் யாரும் விமர்சனம் செய்யவில்லை தவறு என்று சுட்டிக் காட்டவில்லை.

ஆனால் எங்கள் தவறுகளை மறைக்க மற்ற நாடுகளின் மேல் மற்றும் நாட்டு உளவுத்துறைகளின் மேல் இலகுவாக குற்றம் சுமத்தி விட்டு, இன்றும் அடுத்து நாங்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று எப்படி மக்களை காப்பாற்றலாம் என்று சிந்திக்காமல், இன்றும் பணத்துக்காகவும் பதவிக்காகவும் பழைய இயக்கத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் ரகசியமாக வெளிநாட்டு உளவுத்துறைகளின் கைகளில் செயல்படுகிறார்கள். இது யார் தவறு. தமிழர் தலைவர்களின் தவறா? வெளிநாட்டு உளவுத்துறைகளின் தவறா? வெளிநாட்டு உளவுத்துறைகள் கன கட்சிதமாக தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு கொள்கை முடிவுப்படி தங்கள் காரியத்தை செய்கின்றன. அவர்கள் தங்கள் வேலைகளை திறமையாக செய்கிறார்கள். நாங்கள் கடந்த காலத்தை போல் அதற்கு பலியாக விடக்கூடாது. ஆனால் எங்கள் தலைவர்கள் பணத்துக்காகவும் பதவிக்காகவும் அவர்களின் ஏவல் நாய்கள் போல் செயல்படுகிறார்கள் என்பதே உண்மை.

இந்த விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாத, முக்கியமான காலகட்டங்களில் சிறுவர்களாக இருந்த பல வெளிநாட்டு தமிழ் எழுத்தாளர்கள் ஏதோ தாங்கள் அறிவில் சிறந்தவர்கள் நடந்த ஈழ விடுதலைப் போர் பற்றி தங்களுக்கு தான் எல்லாம்தெரியும் என்று சம்பந்தமே இல்லாமல் கேள்வி ஞானத்தால் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து பொய்யாக இப்போதும் எழுதி வருகிறார்கள்என்பது கவலைக்குரிய விடயம்.


தமிழ்நாட்டின் அரசியல் விமர்சகர் எழுத்தாளர் சோ ஸ்ரீ சபா ரத்தினம் அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்பு தனது துக்ளக் பத்திரிகையில் ஒரு படம் போட்டு இருந்தார். அதில் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத்முடலி ஜனாதிபதிக்கு ஜெயவர்த்தனா அவர்களிடம் எனக்கு இன்னும் கொஞ்ச கால அவகாசம் கொடுங்கள் எல்லா தமிழ் இயக்கங்களையும் அழித்து விடுகிறேன் என்று, அதற்கு ஜெயவர்த்தனா இனி உன்னை நம்பி பிரயோசனமில்லை விரைவில் அந்த வேலையை தமிழஈழ விடுதலைப் புலிகள் செய்து இலங்கை அரசாங்கத்தின் வேலையை குறைத்து விடுவார்கள் நீ கவலைப்படாதே என்று கூறுவதாக போட்டிருந்தார். அன்று எல்லோரும் சோவை திட்டி தீர்த்தார்கள் துரோகி என்று. சோ துரோகி யா ? தீர்க்கதரிசியா?


 பதிவுகள் தொடரும்














logoblog

Thanks for reading ஆரம்பகால ஈழ விடுதலை இயக்கத் தலைவர்களும் தமிழ்நாட்டு தொடர்புகளும் பகுதி 9

Previous
« Prev Post

No comments:

Post a Comment