ஆரம்ப காலஈழதமிழ் தலைவர்களும், தமிழ்நாட்டு தொடர்புகளும் பகுதி எட்டு
1983 ஜூலை கலவரங்களின் பின் எம்ஜிஆர் இலங்கை பிரச்சனையில் தனது முக்கியத்துவத்தை கூட்ட பலவித முயற்சிகள் செய்தது அன்று சென்னையில் இருந்த எல்லா இயக்கத் தலைவர்களுக்கும் தெரியும். இலங்கையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்ட அமிர்தலிங்கமும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட மற்ற தமிழ் தலைவர்களும் பாதுகாப்புத் தேடி சென்னை வரும்போது, அமிர்தலிங்கம் உடனடியாக போய் கலைஞர் கருணாநிதி அவர்களை சந்திக்க விடக்கூடாது என்று எம்ஜிஆர் உலகத்தமிழர் பேரவை தலைவரும் சட்டமேலவை உறுப்பினரும் அமிர்தலிங்கத்தின் நெருங்கிய நண்பருமான இரா.ஜனார்த்தனத்தை விமான நிலையத்துக்கு அனுப்பி நேரடியாக தன்னை வந்து சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார்.
சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் அமிர்தலிங்கம் குடும்பம் மற்றும் முன்னாள் இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்க இட வசதி எல்லாம் செய்து கொடுத்து இலங்கை பிரச்சனையில் தமிழர்கள் பக்கம் தான் இருப்பதாக காட்டிக் கொண்டார். ஆனாலும் அமிர்தலிங்கம் கலைஞர் கருணாநிதியை சந்திக்க விடாமல் சில நாட்கள் ஜனார்த்தனன் மூலம் பெரும் நெருக்கடி கொடுத்துள்ளார். கலைஞரை சந்திக்காததால் மிகவும் மன சங்கடத்தில் அமிர்தலிங்கம் இருந்துள்ளார். அமிர்தலிங்கத்தை சந்திக்க உமா மகேஸ்வரனும் சந்ததி யாரும் போன போது அங்கிருந்த இரா ஜனார்த்தனன் உமா மகேஸ்வரனை கண்டவுடன் தான் பிறகு வருவதாக அமுதலிங்கத்துடன் கூறிவிட்டு உடனடியாக அங்கிருந்து போய் விட்டாராம். இரா. ஜனார்த்தனம் பயப்படும் காரணங்கள் கீழே எழுதுகிறேன். அமிர்தலிங்கம் தான் போய் கலைஞரை சந்திக்காததை பற்றி கவலை பட்டுள்ளார். ஆனால் உமாமகேஸ்வரன் கலைஞருக்கு நடக்கும் சம்பவங்கள் எல்லாம் தெரியும் எனக்கும் இப்படித்தான் நடந்தது. அதைப் பற்றி கலைஞர் கருணாநிதி கவலையோ தவறாகவோ நினைக்க மாட்டார். ஆனா நீங்கள் போய் கட்டாயம் கலைஞரை சந்தியுங்கள். நாங்கள் எம்ஜிஆர் சூழ்ச்சி வலையில்விழுந்து விடக்கூடாது என்று உமா மகேஸ்வரன் கூறியுள்ளார். இரண்டொரு நாட்களின் பின்பு என்ன நினைக்கிறேன் மணவை தம்பி அவர்களையும் அழைத்துக் கொண்டு கலைஞர் கருணாநிதியை சந்தித்திருக்கிரார்.
1981 தமிழர் விடுதலைக் கூட்டணி மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்றுக் கொண்டதால், அமிர்தலிங்கம் அவர்களுடன் முரண்பட்டு தமிழர் விடுதலை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் கோப்பாய் எம்.பி கதிரவேற்பிள்ளை அவர்களுக்கும் அமிர்தலிங்கம் அவர்களுக்கும் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கதிரவேற்பிள்ளை திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் மற்றும் அமெரிக்க, இலங்கை ரகசிய தொடர்புகள் சம்பந்தமான தமிழர் விடுதலைக் கூட்டணியால் தயாரிக்கப்பட்ட ரகசிய கோப்புகளை எடுத்துக்கொண்டு இந்தியா வந்து டெல்லியில் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் இடம் கொடுக்கப் போவதாக கூறி -1981 மார்ச் மாதம் என நினைக்கிறேன் - இங்கு சென்னை வந்து அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அமிர்தலிங்கம் ஜனார்த்தனன் மூலம் கதிரவேற்பிள்ளை உடலை இலங்கை அனுப்புவதோடு அவரது உடமைகள் எல்லாம் மிக கவனமாக உடலோடு அனுப்பி வைக்கும்படியும் கூறுகிறார். தமிழ்நாட்டில் பெரியார் திடலில் அவரது கதிரவேற்பிள்ளையின் உடலை வைத்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு நடைபெற்றதாகவும் ஜனார்த்தனன் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதற்கு பல இடைஞ்சல்கள் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் உமாமகேஸ்வரன் ஜனார்த்தனன் மேல் கடுங்கோபத்தில் இருந்ததும், அதற்கு முன்பே இரா.ஜனார்த்தனம் இலங்கை விடுதலை இயக்கங்களுக்கு உதவி செய்வதாக கூறி பலரை ஏமாற்றியது எல்லாம் 1979 ஆம் ஆண்டுக்கு முன்பே இங்கு நடந்த செய்திகள். பிரபாகரன் உட்பட பழைய தமிழ்நாட்டில் இருந்த தலைவர்கள் யாரும் இரா ஜனார்த்தனத்தை பொருட்படுத்துவதில்லை. 1983 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெரியார் திடலில் நடந்த கோப்பாய் முன்னாள் எம்பி கதிர்வேல் பிள்ளையின் இரண்டாம் ஆண்டு நினைவு தின கூட்டத்தில் இரா ஜனார்த்தனத்தை பார்த்த உமா மகேஸ்வரன் போய் அவரின் சட்டையை பிடித்து இழுத்து அடிக்க பாய்ந்திருக்கிறார். மாறனும், கந்தசாமியும் உமாவை சமாதானப்படுத்தி கூட்டி வந்திருக்கிறார்கள். அப்போது ஜனார்த்தனன் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தும் உமா மேல் மேல் எந்தப் புகார்ரும் செய்யவில்லை. அப்போது பாண்டி பஜார் சம்பவத்தில் ஜாமீனில் இருந்தார்.
கடைசியாக நான் போட்ட பதிவுக்கு ஒரு முகநூல் நண்பர் தெரிவித்த கருத்து உண்மை இல்லாத து. அதாவது ஈழப் போராட்டத்தை ஆரம்பத்தில் குழப்பியது கலைஞர் கருணாநிதி என்று ஏதோ தங்களுக்கு தான் எல்லாம் தெரிந்தது போல் எழுதி தள்ளுகிறார்கள். அந்த காலகட்டத்தில் நான் தமிழ்நாட்டிலும் டெல்லியிலும் இயக்க வேலைகளை செய்தபோது எல்லா கட்சி அரசியல்வாதிகளுடனும் பழகும் வாய்ப்புகிடைத்தது. அன்று எங்களுக்கு எல்லாம் விடுதலை இயக்கங்களுக்கும் கிடைத்த ஆதரவை பற்றிய இந்த பதிவுகளை போடுகிறேன். நண்பர் போட்ட கருத்தில் கூறுகிறார் எம்ஜிஆரின் வளர்ச்சியை பிடிக்காத கருணாநிதி ஈழ போராளிகளை கருவியாக பயன்படுத்தி தனது தமிழின பற்றை வெளிப்படுத்துவதாக தமிழக மக்கள் தலையில் மிளகாய் அரைத்தார் என்பதே ஆகும். இவர்களுக்கு எழுத கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என நினைக்கிறார்கள்.
1983 ஆம் ஆண்டு கலவரத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் தலைமறைவாக இருந்த ஈழத் தலைவர்களுக்கும் மற்றும் தோழர்களுக்கும் துணிந்து உதவி செய்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அதோடு அண்ணா திமுகவில் இருந்த சிலர் ரகசியமாக திமுக தலைவர்களோடு சேர்ந்து உதவி செய்தார்கள். திராவிடர் கழக இயக்கத்தவர்கள் ரகசியமாக பல உதவிகள் செய்துள்ளார்கள். இவர்கள் யாரும் எந்த கட்சியும் எங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. தமிழ் பற்று கொண்ட குறிப்பாக பெருஞ்சித்திரனார் ஐயா அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொண்ட பல முன்னாள் ராணுவத்தினர் தாமாக முன்வந்து எல்லா இயக்கங்களுக்கும் உதவி செய்தார்கள். இப்போது பலர் எழுதுகிறார்கள் முன்னாள் ராணுவத்தினர் இந்திய உளவுத்துறையின் கைக்கூலிகள் ஆக வந்து உதவி செய்தார்கள் என்று, தயவுசெய்து உண்மை தெரியாமல் அவர்களை பற்றி தவறாக எழுத வேண்டாம்.
விடுதலை புலிகள் இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் telo, ஹீரோஸ் இ பி ஆர் எல் எப் இயக்கங்கள் ஆரம்பத்தில் எவ்வித பிரச்சனையும் இன்றி தமிழ்நாட்டு மக்களின் உதவிகளை கட்சி வேறுபாடு இன்றி பெற்றார்கள். ஈ பி ஆர் எல் எப் கட்சி இது சாரி கட்சியுடன் அதன் தோழர்களின் நன்மதிப்பைப் பெற்று பல உதவிகள் பெற்றார்கள். ஆனால் கலவரத்துக்குப் பின்பு எம்ஜிஆர் கலைஞருக்கு எதிராக குட்டிமணியே பிடித்துக் கொடுத்ததாக ஒரு புரளியை கிளப்பி கடைசியில் அது அவருக்கு எதிராகவே முடிந்தது. அப்போது telo தனது பாதுகாப்புக்காக திமுகவுடன் நெருங்கி வந்தது. எல்லா கட்சிகளுடனும் தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்த புளொட் செயல் அதிபர் உமா மகேஸ்வரன் எம்ஜிஆர் அவர்களுடனும் 83 கலவரத்தின் பின்பு நெருக்கமாக இருந்தார். ஆனால் எம்ஜிஆர் telo இயக்கத்துக்கு எதிராக உமா மகேஸ்வரனை பயன்படுத்த நினைத்தார். உமா கோபப்பட. எம்ஜிஆர் உமாவின் தொடர்பை கைவிட்டு பிரபாகரனின் தொடர்பை ஏற்படுத்தி, telo இயக்கத்தை அழித்து கருணாநிதியை பழிவாங்கியதாக நினைத்தார். பிரபாகரனும் தனக்கு ஆரம்ப காலத்தில் உதவிய கலைஞர் கருணாநிதி திமுக தலைவர்களை உதாசீனப்படுத்தி செய் நன்றியை மறந்து எம்ஜிஆர் பிள்ளையாக தமிழ்நாட்டில் வளர்ந்தார் என்பதை உண்மை.
ஆனால் எம்ஜிஆர் கட்சியில் இருந்த மந்திரி எஸ்டி சோமசுந்தரம் எங்களுக்கு பலவித உதவிகள் செய்தார். ஒரு மந்திரியாக இருந்து எம்ஜிஆருக்கு பயப்படாமல் அவர் செய்த உதவிகளை நினைத்து பார்க்கவே முடியாது. அதுபோல் புலவர் புலமைப்பித்தன் விடுதலை புலிகளுக்கு உதவி செய்தார், புளொட் அமைப்புக்கும் உதவி செய்தார். அதுபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்களும் கட்சி வேறுபாடு இன்றி பல உதவிகள் செய்தார்கள். அதை அந்தக் கட்சித் தலைவர்கள் தடுக்கவில்லை. பின்னாளில் 1984 ஆம் ஆண்டு கடைசியில் என நினைக்கிறேன் எஸ்டி சோமசுந்தரத்தை கட்சியை விட்டு விலக்கி அவரை பழிவாங்கி விட்டார். அதோடு பொதுக்கூட்டங்களில் s.d சோமசுந்தரம் உமா மகேஸ்வரனிடம் பணம் வாங்கி உதவி செய்ததாக கூச்சநாச்சம் இல்லாமல் பேசினார். இது அப்போது பத்திரிகைகளிலும் வந்தது.
Telo இயக்கம் அழிக்க பட்டபின் கலைஞர் கருணாநிதி உட்பட பல தலைவர்கள் தமிழ் ஈழ போராட்டத்துக்கு ஆதரவை நினைத்து வருத்தப்பட்டார்கள். காரணம் பல இயக்கங்கள் இருந்தாலும் இலங்கை எதிர்ப்பு ஒன்றே குறிக்கோளா கண்டு போராடி இயக்கங்கள் ஒருத்தரை ஒருத்தர் கொன்று குவிப்பது அவர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. அப்போது பத்திரிகைகளில் வந்த செய்திகள் உயிருடன் 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்டது எல்லோருக்கும் மிக அதிர்ச்சியாக இருந்தது.
உமா மகேஸ்வரன் கலைஞரை சந்திக்கும் போது கலைஞர் மிகவும் கவலைபட்டுள்ளார். ஒவ்வொரு இயக்கமும் ஒருத்தர ஒருத்தர் கொலை செய்தால் முடிவு என்ன? யாருக்காக போராடுகிறீர்கள். பேச்சோடு பேச்சாக சந்ததியார் கொலை முகாம்களில் நடந்த கொலைகள் எல்லாம் கூறி கவலைப்பட்டு வருத்தப்பட்டு இருக்கிரார். உமா கலைஞரிடம் தான் தப்ப இது இந்திய ரா உளவுத்துறை வேலை என்று கூறி இருக்கிறார். ஒரு மிகப்பெரும் நீண்ட அனுபவம் கொண்ட அரசியல்வாதி கலைஞர் அதை நம்புவாரா? மேலும் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது கட்சியின் முக்கிய தலைவர்கள் முன்பு மாதிரி உரிமை எடுத்துக் கொண்டு அவர்களை ஆதரிப்பதோ அவர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசுக்கு எதிராக கூட்டம் போடுவதோ பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக கூறினார். அவர்கள் தங்களுக்குள் கொலைகள் செய்து கொண்டும் ஒருவருக்கொருவர் அழித்துக்
கொண்டும் இருக்கும்போது நாங்கள் ஏன் இவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று பல முன்னணி தலைவர் கலைஞருடன் கூறியிருக்கிறார்கள். திமுக தலைவர்கள் மட்டுமல்ல எங்களுக்கு உதவி செய்த வேறு பல கட்சித் தலைவர்களும் இதைத்தான் எங்களுடன் சொன்னார்கள். ஆனால் முகாம்களில் இருந்த இயக்க தோழர்களுக்கு தொண்டர்கள் செய்யும் உதவியை தடுக்கவில்லை.
ஒவ்வொரு தமிழ்நாட்டு கட்சியும் தமிழ்நாட்டு மக்களை நம்பி தான் இருக்கின்றன. ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் தனது கட்சியையும் ஆட்சியையும் பிடிக்கும் முறை தான் முக்கியம். ஈழத் தமிழர்களுக்காக அவர்கள் தங்களை பலியாக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் திமுக தொண்டர்கள் சம்பந்தமே இல்லாமல் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்ததாக கூறி கடுமையாக பழிவாங்கப்பட்ட சம்பவம்பலமுறை நடந்துள்ளது.
இந்திய மத்திய அரசாங்கம் அப்போது திமுகவுடன் அரசியல் ரீதியில் கூட்டு வைத்திருந்தாலும் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வதை விரும்பவில்லை. காரணம் திமுக ஆரம்ப காலத்தில் இந்தியாவில் தனி தமிழ்நாடு கேட்டுப் போராட்டம் நடத்தியவர்கள். சில சிறு இயக்கங்கள் தமிழ்நாடு கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள். இப்படியான சூழலில் திரும்பவும் இந்தியாவில் தனித்தமிழ்நாடு கோஷம் விழக்கூடாது என்று கவனமாக இருந்திருக்கிறார் கள்.
விடுதலை இயக்கங்கள் தான் மிகப்பெரும் மாபெரும் தவறுகள் தமிழ்நாட்டில் செய்து உள்ளனர். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் இலங்கைத் தமிழருக்கு அமைதி கிட்டியது என்று சந்தோஷப்பட்டார்கள்.
காட்சிகள் மாறின இந்திய அமைதிப்படை தமிழர்களைக் கொன்றது. தமிழ்நாட்டு மக்களின் மனநிலை இரண்டு விதமாக இருந்தது. இந்திய அமைதிப்படை தமிழருக்கு எதிராக சண்டையில் இறங்கியது அவர்களுக்கு பிடிக்கவில்லை அதே நேரம் பிரபாகரன் ஒரு நல்ல தலைவராக இருந்திருந்தால் புத்திசாலித்தனமாக நடந்து இந்தப் பிரச்சனையை இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக மாற்றி இருக்கலாம். அன்று பகிரங்கமாகவே கூறினார்கள்.
தமிழ்நாட்டு ஆதரவை 87 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்பு இந்திய இளைஞர் ஒப்பந்தத்திற்கு பின்பு என்று பார்க்க வேண்டும்.
இன்று எல்லோரும் இந்தியா ஏமாற்றி விட்டது இந்தியா பயன்படுத்தியது என்று புலம்பித் தள்ளுகிறார்கள. 19 85 ஆம் ஆண்டு எல்லா விடுதலை இயக்க தலைவர்களுக்கும் ரகசியமாக இந்த உண்மை தெரிவிக்கப்பட்டது ஆனால் எந்த தலைவரும் அதைப் பற்றி கவலைப்படவில்லை எப்படி மற்ற இயக்கத்தை ஒழிக்கலாம் என்றுதான் யோசித்தார்கள்.
அதைப் பற்றி அடுத்த பதிவில் போடுகிறேன் இது பற்றி முன்பே நான் எனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்.
No comments:
Post a Comment