1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்……
நடந்த வன்கொடுமைகள்!
அந்தோணி!
பகுதி 11
“அந்தக் கட்டையை அவன்ர கழுத்துக்குக் கீழே போற்றா” என்றார். தலையைத் தூக்கி கழுத்தின் கீழ் வைத்தார் கட்டையை! இப்ப தலையைக் கீழே அமத்தடா என்றார் சின்னக் கேடி! இப்போது அவரது மூக்கு வானத்தை நோக்கிக் கொண்டிருந்தது. போற்றா துண்டை என்றார். போட்டனர் சிறிய விலங்குகள்! கௌதமன் ஊற்றினார் தண்ணீரை! சின்னக் கேடிக்கு இதன் மூலம் பெருமை சேர்ந்தது! ஏனைய விலங்குகள் யோசிக்காத இந்த யுக்தியை சின்னக்கேடி யோசித்துக் கண்டுபிடித்து சகாக்களுக்கு வெளிப்படுத்தி ஓர் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தினார். அந்தச் சமூக விஞ்ஞானி!
ஒரு தடவை தண்ணீர் ஊற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது அவர் சொன்னார், “தெரியும் சொல்கிறேன்” என்று. உடனே அனைவரும் அவரது தலைப்பகுதியில் ஒன்று கூடினர். முகத்தில் போட்டிருந்த துணியை எடுத்தனர். ஆ! சொல்லு சொல்லு! என்று கேட்டனர். அவர் மூச்சை வெளியில் விட்டு மீண்டும் பலமாக உள்ளே இழுத்தார். அனைவரையும் உற்றுப்பார்த்தார். உமிழ் நீரை விழுங்கினார். நீங்கள் இப்படிச் செய்வதைத் தாங்க முடியாமல்தான் சொன்னேன். உண்மையில் எனக்குத் தெரியாது. தெரிந்தால் நான் சொல்லிவிடுவேன் என்றார்.
மஞ்சு அவரது முகத்தில் காலால் அடித்தார். அம்மா என்று கத்தினார் அவர். இப்போது மட்டும்தான் அவர் அம்மா என்று கத்த முடிந்தது. ஏனைய நேரங்களில் அவரது நாடியைப் பிடித்து தலைப்பகுதியில் இருப்பவர் இழுத்துக் கொண்டே இருந்தார். அதனால் வாயைத் திறக்க முடியவில்லை! வாயைத் திறப்பதற்கான சந்தற்பம் கிடைத்ததும் தனது வலியினைத் தாங்கிக் கொள்ள “அம்மா” என்று அலறினார்.
முதலில் எங்களைப் பிக்காசில் பூட்டும் போது அந்த இடத்தில் நிழல் இருந்தது. இப்போது நாங்கள் பிணைக்கப்பட்ட இடத்தில் வெய்யில் தெறிக்கிறது. எனது முகம் வயிற்றுப்பகுதி எல்லாம் காய்ந்து விட்டது. முதுகுப் பகுதியில் மட்டும் ஈரம் ஊறிக் கொண்டே இருந்தது. மீண்டும் ஆலோசித்தனர் புலிகள். எனது முகத்தில் போட்டது போன்ற துணி ஒன்றினை எடுத்துவந்து அதை நனைத்தனர். நனைந்த துணியை அவரது வாயினுள் தினித்தனர். பின்னர் மற்றைய துணியினால் அவரது வாயைக் கட்டினர். இப்போது கட்டையின் மேற்பகுதியில் கழுத்தை மீண்டும் வைத்து தலை மயிரைப் பிடித்து கீழ் நோக்கி அமத்திக் கொண்டு தண்ணீரை ஊற்றினர். அவர் மூச்சை வெளியேற்றி மூக்கினுள் சென்ற தண்ணீரை சீறி வெளியேற்றினார். உடனே போற்றா துண்டை என்றனர். துண்டு அங்கு இருக்கவில்லை. ஒரு புலி ஓடிச் சென்று மீண்டும் ஒரு துண்டைக் கொண்டு வந்து முகத்தில் போட்டார்.
“ஊத்தடா தண்ணீயை” என்றார் கௌதமன். அவர் மூச்சை உள்ளே இழுக்கவில்லை. தம்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது வாசலில் காவலுக்கு நின்ற ஒரு புலி ஓடிவந்து கௌதமனிடம் ஏதோ சொன்னார். கௌதமன் மஞ்சுவைப் பார்த்து நிறுத்தும்படி சைகை செய்தார். அனைவரும் நிறுத்தினர் தங்களது நற்பணியினை.
யாரோ பொதுமக்களில் சிலர் இவர்களது வாசலுக்கு வந்து, “நீங்கள் யாரையோ கொல்வது போன்ற சத்தம் வெளியில் கேட்கிறது. ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதைக் கவனித்த வேறு ஒரு புலி ஓடிவந்து இந்தத் தகவலைச் சொன்னார் கௌதமனிடம். அதனால்தான் நிறுத்தச் சொன்னார் கௌதமன். இப்போது நேரம் ஒரு மணிக்கும் மேலாக இருக்கும். கௌதமன் சொன்னார், “ரெண்டுபேரையும் பேசுக்கு கொண்டு போங்க, பின்னேரம் சொல்லிறன்” என்றார்.
அவருக்கு வாய்கட்டு அவிழ்க்கப்பட்டது. பின்னர் எனது பிக்காஸ் விலங்குகளையும் அவரது பிக்காஸ் விலங்குகளையும் கழற்றினர். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. முகத்தைக் குப்பறத் திருப்பி முழங்காலை மண்ணில் ஊன்றி கைகளால் நிலத்தை ஊண்றிக்கொண்டு மெதுவாக எழுந்தேன். சறத்தைச் சரிசெய்து உடுத்தினேன். அது பாதி ஓட்டையான சறம். விதையில் வலி ஏற்பட்டது. விதை விக்கமடைந்தும் இருந்தது. நெஞ்சுவலி தாங்க முடியாமல் இருந்தது. கீழே படுத்திருக்கும் போது வலி தெரியவில்லை. எழுந்து நிற்கும் போது அனைத்து இடங்களிலும் வலி வறுத்து எடுத்தது.
கால்கள் கண்டல் பட்டிருந்தன. கால் விலங்கில் போடப்பட்டிருந்த பூட்டு காலின் மொளியில் பட்டு இரத்தம் வடிந்திருந்தது. கால் விலங்குடன் என்னால் நடக்க முடியவில்லை. நின்று கொண்டிருந்தேன், ஒரு புலி எனது முதுகில் பிடித்து போடா என்று சொல்லித் தள்ளினார். பொத்தென முன்புறம் விழுந்தேன். திரும்பவும் பழைய மாதிரியே எழுந்தேன். எப்படியும் நானாக நடந்துதான் எனது இருப்பிடத்துக்குச் செல்லவேண்டும். எனக்கென்ன உதவியா செய்யப்போகிறார்கள்!
எனவே அனைத்து விதமான வலிகளையும் தாங்கிக் கொண்டு எழுந்து நடந்தேன். நடை என்றால் முக்கால் அடி தூரத்துக்குத்தான் ஒரு காலை எடுத்து வைக்க முடியும். இப்படியே அந்தப் பாதையை அளந்து கொண்டு சென்றேன் எனது இருப்பிடத்துக்கு. இதே போன்று ஈ.பி.ஆர்.எல்.எப். தோழரும் பின் தொடர்ந்தார். உள்ளே சென்றதும் புலி விலங்குகள் தங்கள் உணவுக்காகச் சென்றுவிட்டனர். எங்களுக்கு உணவுப் பார்சல் தரப்பட்டது. நாங்கள் உணவு உண்ணக்கூடிய நிலையில் இருக்கவில்லை. எனது உடலிலும், அந்தத் தோழரது உடலிலும் செம்பாட்டு மண்ணும் நீரும் பட்டு எங்களது நிறத்தை மாற்றியிருந்தது.
கூட இருந்த சகோதரர்கள் எங்கள் உடலிலிருந்த மண்ணைத் தட்டிச் சுத்தம் செய்தனர். நடராஜ் அவர்களும் தவழ்ந்து வந்து எனக்கு ஆறுதல் கூறினார். “இவங்கள் மனுசர்களே இல்லை. புலி என்று பேரை வச்சவன் எப்படி மனுசனாக முடியும்? இவங்கள் நலலா இருக்கவே மாட்டாங்கள். நாசமாய் போவாங்கள். இவங்கள் யாருக்குமே நல்ல சாவு வராது! நான் சொலலிறன் தம்பி, நீ பார். என்ர கண்முன்னால இவங்கள் நாசமா போவாங்கள்! என்று தனது அறிவில் பட்ட அத்தனை அழிவுச் சொற்களையும் சொல்லி புலிகளைத் திட்டினார்.
நடராஜ் அவர்கள் மீண்டும் முன் கதவடிக்குச் சென்று புலிகளின் காவலாளிகளைப் பார்த்து நாசமாப் போவீங்கடா! உங்களை எல்லாம் கொல்லுறததுக்கு யாராவது வருவாங்கடா. நீங்க எல்லாம் அம்மாமாருக்கு பிறக்கேல்லடா! அப்படிப் பிறந்திருந்தால் ஒரு பிள்ள பற்ற கஸ்ரம் தெரிஞ்சிருக்குமேடா! என்று அவர்களைப் பார்த்துப் பேசியதும், அவர்களில் இருவர் இரண்டு தடிகளை எடுத்து வந்து நடராஜ் அவர்களை அடிக்க ஆரம்பித்தனர்.
தம்பி அவரை அடிக்க வேண்டாம், அவருக்கு மூளை சுகமில்லை, அடிக்க வேண்டாம் என்று அவர்களிடம் கேட்டேன். இவனுக்கா மூளை சுகம் இல்லை என்று சொல்கிறாய்? இவனைக் கொல்லவேண்டும் என்று கூறி அடித்தனர் நடராஜ் அவர்களை. அவரோ கீழே கிடந்து உருண்டு உருண்டு அடிவாங்கிக் கொண்டு, டே சனியனே, மூதேவி, ஏன்ரா அடிக்கிறாய் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அடித்து முடிந்து வெறுப்படைந்து வெளியேறினர் அந்த இருவரும்.
எனது அறையிலிருந்த ராஜா (மட்டக்களப்பு) என்பவர், அங்கு அப்போது வின்ரோஜன் இல்லாததால் தண்ணீர் போட்டுத் தேய்த்தார். மார்பு, வயிறு, தொடை, சங்கிலி விலங்கு பட்ட இடங்கள் என்று அனைத்தை இடங்களிலும் தேய்த்து தடவி விட்டார். என்னை அறியாமல் உறங்கி விட்டேன்.
மாலை நான்கு மணியளவில் மீண்டும் வந்தனர் அதே சித்திரவதைக் கூட்டம். முதலில் ஈ.பி.ஆர்.எல்.எப். தோழரை அழைத்தனர். அவர் எழுந்தார். என்னையும் அழைத்தனர். பின்னர் சொன்னனர் நீ இருந்து கொள், உன்னைப் பிறகு கூப்பிடுறம் என்று சொல்லி அவரை மீண்டும் அழைத்துக் கொண்டு நாவல் மரத்தடிக்குச் சென்றனர்.
அரைமணி நேர இடைவெளியில் அவர் தினறும் சத்தம் கேட்டது. அடியடா, ஊத்தடா என்ற சத்தங்களும் கேட்டது. தொடர்ந்து ஒரு மணிநேரமாகக் கேட்டச் சத்தம் பின்னர் ஓய்ந்துவிட்டது. அப்பாடா என்று நான் நின்மதி அடைந்தேன். ஆயினும் இப்போது என்னை மீண்டும் எடுக்கப் போகிறார்கள் என்ன செய்வது? உள்ளே வரும் ஒரு புலியையாவது கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசித்தேன், ஒருவனது கழுத்தை நெரித்தாவது கொல்ல முடியும், பின்னர் நான் எப்படித் தற்கொலை செய்வது, இவர்களது துப்பாக்கி மனிதன் வெளியிலேதான் நிற்பார். நான் ஓடிச் சென்று அதனைப் பறிக்கவும் முடியாது. ஏனெனில் கால் விலங்கு ஓடுவதற்கு விடாது. எப்படித் தற்கொலை செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது. மாலை ஆறரை மணியளவில் இயற்கை உபாதைக்காக எங்களை கழிவறைக்கு அனுப்புவார்கள். நாங்கள் வரிசையாக வெளியே செல்வோம். அப்போது எங்கள் வீட்டு வாசலின் வெளிப்புறத்தில் ஓரமாக அந்த ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர் பிணமாகக் கிடந்தார். அவர் இறந்ததும் தூக்கி வந்து எங்களது வீட்டின் முன்புறத்தில் போட்டுள்ளனர். வெளியே எடுத்துச் செல்ல வான் வருவதற்குத் தாமதமானதால், வழக்கமாகத் திறந்துவிடும் புலி எங்களைத் திறந்து வெளியே அனுப்பிவிட்டார்.
நாங்கள் வெளியே கழிவறைக்குச் செல்வதைப் பார்த்த கௌதமன் திறந்துவிட்ட புலியைப் பார்த்து டே, நாயே, ஏன்ரா என்னைக் கேக்காமல் துறந்தனீ என்று அவரைத் திட்டினார். எங்களுக்குத் தெரியாமல் உடலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர். விபரம் தெரியாத புலிவிலங்கு எங்களைத் திறந்து வெளியே அனுப்பிவிட்டார்.
இந்த இடத்தில் அந்தத் தோழருக்குப் பதிலாக என்னை அழைத்துச் சென்றிருந்தால் இப்போது நான்தான் பிணமாகக் கிடந்திருப்பேன். இவர் இறந்தபடியால்தான் என்னை அழைத்துச் செல்லவில்லை என்று எனக்குத் தோன்றியது! கழிவறைக்குச் சென்று திரும்பி வரும்வரை அவரது உடல் அங்கேயே இருந்தது. அவருக்கு அருகில் வந்ததும், சற்று நின்று கண்களை மூடி “இறைவா இவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும்” துணுக்காயில் ரெலோ பிரசாத் அவர்கள் சொன்னது போன்று நீங்கள் மேலே சென்று அங்கே சீனியராக வேண்டும், இந்த விலங்குகள் ஒரு நாள் அங்கே வருவார்கள், இவர்களுக்கு உரிய தண்டனையை நீங்கள் வழங்கவேண்டும்” என்று அவரைப் பார்த்து வேண்டிக் கொண்டு திரும்புகையில், பாபு என்ற புலி கேட்டது, “அங்க என்னடா செய்யிறாய்?”
ஒன்றுமில்லை, சும்மா பார்த்தேன் என்று கூறினேன். நீயும் இப்படித்தான் சாவாய். மரியாதையா உள்ளே போ என்றார். உள்ளே சென்றதும் ஒரே அமைதி. யாரும் இரவு உணவு சாப்பிடவில்லை. இரவு 9 மணியளவில் ஒரு வான் வந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் தோழரது உடலை ஏற்றிச் சென்றனர் என்று நினைக்கிறேன். வானின் சத்தத்தை வைத்து அந்த நேரத்தைக் கணக்கிட்டோம்.
புளொட் ஆதரவாளர் முரளிக்கு நடந்த கொடுமை!
மறுநாள் காலையில் புதிதாக எட்டுப்பேரைக் கொண்டு வந்தனர். வழக்கம் போல் விசாரணை அறையில் வைத்து அடித்துவிட்டு எங்கள் பகுதிக்குள் கொண்டு வந்தனர். அவர்களில் மானிப்பாயைச் சேர்ந்த முரளி என்பவர் இருந்தார். இவர் புளொட் இயக்கத்தின் அங்கத்தவர். 1987ஆம் ஆண்டு புலிகள் அவரைச் சுட்டுக்கொன்று விட்டனர். இப்போது இவரைச் சந்தேகத்தில் பிடித்து வந்துள்ளனர் புலி விலங்குகள். இவரும் ஆதரவாளராக இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இவரை எனது அறையில்தான் போட்டனர்.
அவர் புலி விலங்குகள் பற்றிய விபரங்கள் தெரியாதவராக இருந்தார். உண்மையைச் சொன்னால் விடுவித்து விடுவார்கள் என்றும், உண்மையை எதற்காக மறைக்க வேண்டும், நாங்கள் தமிழர்கள், எங்களுக்கென்று வீர வரலாறுகள் உண்டு. எதற்காகவும் நாம் பயப்படக்கூடாது என்று எனக்கு நிறைய அறிவுரைகள் வழங்கினார். அவரைப் பிடித்து தட்டா தெருவில் ஒரு வீட்டில் மூன்று நாட்கள் வைத்திருந்துவிட்டு எங்களது இருபாலைச் சிறைக்குக் கொண்டு வந்துள்ளனர் புலிகள்.
நான் அவரிடம் சொன்னேன், தம்பி உங்களுக்குத் தெரிந்தவை என்பதை எல்லாம் சொல்லப்போனால் இன்னும் பல பேர் கைதிகளாக இங்கே வரவேண்டியிருக்கும், அப்படி கொண்டு வரப்படுபவர்கள் எல்லோரையும் இவர்கள் சித்திரவதை செய்வார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் உமக்குப் பகையாளியாவார்கள். உள்ளதைச் சொல்லி இவர்களுக்கு நல்ல பிள்ளையாகி நீர் நற்பெயர் சம்பாதிக்க நினைக்கலாம். ஆனால் இவர்கள் வேறு இயக்கங்களின் ஆதரவாளர்கள் கூட உயிருடன் இருக்க் கூடாது என்ற கொள்கையை உடையவர்கள். கண்டிப்பாக நீர் இறச்சிக்கடைக்குப் போவீர் அல்லது இங்கேயே சொர்க்க வாசலைத் திறந்துவிடுவார்கள். அதனால் சொன்னவற்றோடு நின்று கொள்ளும், மேற்கொண்டும் உளற வேண்டாம். தெரியாது என்றே சொல்லப்பழகும் என்று எனது பங்குக்குச் சொல்லிவைத்தேன்.
இரண்டு நாள்கள் கழிந்தன, முரளியின் பெயரும் வேறொரு சகோதரனது பெயரும் அழைக்கப்பட்டன. நாவல் மரத்தடிக்குக் கொண்டு சென்றனர். அடிக்கும் சத்தமும், முனகல் சத்தமும், அலறும் சத்தமும், மூச்சுத் திணறல் சத்தமும் தொடர்ந்து கேட்டன. எமக்கு நடந்தவை இவருக்கும் நடக்கின்றன என்று நினைத்துக் கொண்டேன். மதியம் இரண்டுமணியளவில் இருவரும் வந்தனர். அதே செம்பாட்டுமண், ஈரம் , அடிவாங்கிய தழும்புகள் என்று அனைத்துச் சித்திரவதைகளையும் தாங்கி வந்தார் முரளி.
வின்ரோஜன் இல்லை, வின்ரோஜன் தருவதையும் நிறுத்திவிட்டிருந்தனர் புலிகள். அதனால் தண்ணீர் விட்டு கண்டலான இடங்களை அழுத்தித் தேய்த்துவிட்டேன். அம்மா அய்யோ என்று அலறினார் முரளி. தம்பி என்ன கேட்டார்கள் என்ன கேட்டார்கள் என்றேன் அவரிடம்! இந்த வேசமக்களை சும்மாவிடக்கூடாது அண்ண, இவங்கள் மனுசங்களே இல்லை அண்ண! மூக்குக்குள் தண்ணியவிட்டு கொல்லப்பாத்தாங்கள்! ஆயுதம் இருக்கா, காசு இருக்கா, நகை இருக்கா என்று சும்மா கேட்டு கொடுமைப் படுத்திறாங்கள். இதை எல்லாம் யாராலும் தட்டிக் கேக்க முடியாதா? காலுக்கு சங்கிலிவிலங்கு போடேக்க சும்மா போட்டினம் என்றுதான் நினைச்சன், இப்ப நிலத்தில போட்டுப் பூட்டி வச்சு இப்படி அடிக்காங்களே! இந்த நாய்கள்ள நாலுபேரையாவது நான் கொல்லோனும் அண்ண என்றார்.
தம்பி நீர் சொல்வதெல்லாம் சரிதான், முதலில் இங்கிருந்து வெளியே போகும் வழியைப் பாரும், உமக்கு அம்மா அப்பா, சகோதரர்கள் இருக்கின்றனர்தானே, அவர்கள் இந்தப் புலி விலங்குகளுக்குத் தொல்லைகள் கொடுத்தால்தான் நீர் விடுதலை ஆவது சாத்தியம். அவர்களது முயற்சியில்தான் உமது உயிர் இருக்கிறது. எதற்கும் உமக்கு நம்பிக்கையான கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் என்று சொன்னேன். சரியாக மூன்று வாரங்களில் அவரையும் மேலும் நால்வரையும் சேர்த்து இறச்சிக் கடைக்குக் கொண்டு சென்றுவிட்டனர். முரளி உயிருடன் திரும்பினாரா என்பது எனக்குத் தெரியாது!
அறிவையும் மனித நேயத்தையும் தொலைத்தவர்கள் புலிகள்:
நாவல் மரத்தடிச் சித்திரவதைக்குப் பிறகு என்னை மீண்டும் அழைத்துச் சித்திரவதை செய்யவில்லை, அது ஏனென்று எனக்குத் தெரியாது. இந்த வதை முகாம்களை அமைத்து வழி நடத்துபவர் “பொட்டு அம்மான்” தான் என்று புலி விலங்குகள் கதைத்துக்கொள்வார்கள். நான் ஒரு தடவை கூட அவரைப் பார்க்கவில்லை. இந்தப் பயங்கர வதைமுகாம் அனைத்தும் புலனாய்வுப் பிரிவின் செயல்பாட்டில்தான் இயங்கி வந்தன.
இவர்களது வேலை ஊருக்குள் சைக்கிளில் சுற்றுவது, தெருக்களில், கடைகளில் யாராவது கதைப்பதைக் கண்டால் அவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களது தகவல்களை வைத்து ஏனைய தமிழ் இளைஞர்களைப் பிடித்துவந்து கொடுமைப்படுத்தி கொலை செய்வது, ஊரில் பகை இருந்தால் அவர் காட்டிக்கொடுக்கப்படுவார், குடும்பப் பிரச்சினை, காதல் பிரச்சினை, கல்யாணப்பிரச்சினை, பெட்டிசன் என்று எது கிடைத்தாலும் இவர்கள் சென்று பிடித்து வந்து வதை செய்து கொலை செய்வார்கள்.
ஒருவரைப் பிடித்துச் சென்றால் சில நாட்களில் அவரது வீட்டுக்குச் சென்று அந்த நபரது சறம் அல்லது சேட் இவற்றைக் கொடுத்துவிட்டு வந்துவிடுவர் புலனாய்வு விலங்குகள். பொது மக்கள் அதை ஓர் சின்னமாகவும், இறந்த நாளாகவும் கொண்டாடுவர். இது இவர்கள் செய்யும் சேவையாம். தமிழினம் விடுதலை கோரியது சறத்துக்கும் சேட்டுக்கும் தான் என்று புலி விலங்குகள் நினைத்திருந்தனர் போலும்.
பிற இயக்கங்களில் இருந்தால் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று தீர்மானிக்கவும் செயற்படுத்தவும் புலி விலங்குகளுக்கு என்ன உரிமை இருந்தது. அப்படி ஓர் உரிமையை இவர்களுக்கு யார் வழங்கியது? ஆயுதத்தில் பலம் பெற்றதும் அதிகாரத்தைக் கையிலெடுத்தனர் புலிகள்! கொலை செய்ததைத் தவிர இவர்களுக்கு என்ன தகுதிகள் இருந்தன? இப்படிக் கொலை செய்பவர்கள் புனிதர்களாகவும், போராளிகளாகவும் போற்றப்பட்டனர் பிற நாடுகளில். எப்படி இது சாத்தியமானது எல்லாம வீடியோப் படம் பார்த்துத்தான்!
எம்.ஜி.ஆர். நல்லா சண்டைப் போடுவார் என்று சினிமாவைப் பார்த்துத்தான் தமிழர்கள் நம்பினர். உண்மையில் அவர் சண்டை போடும் நபர் கிடையாது, அனைவரையும் அரவணைத்துச் செல்பவர். சினிமாவுக்காக குத்துச்சண்டை போடுபவர் போன்று நடித்தார். இதைத்தான் புலிகளும் செய்தனர். வீடியோவில் விடுதலைப் போராளிகள்! உள்ளுக்குள் பயங்கர இன அழிப்பாளர்கள், கொடியவர்கள்! விடுதலை, புலி விலங்குகளுக்கும் அவர்களது உறவினருக்கும் என்ற நிலைதான் வடக்கில் இருந்தது. இந்தக் கொள்கையை பிறநாடுகளில் இருப்பவர்கள் பணம் கொடுத்து ஆதரித்தனர். தமிழர்கள் எப்படியான மடையர்களாக இருந்தனர் என்பதற்கு இது ஓர் உதாரணம். இவர்களது இயக்க அழிப்பு நடவடிக்கையை ஆதரித்த அத்தனைபேரும் எங்கள் இனத்தின் துரோகிகள் என்றே நான் சொல்வேன். ஏனெனில் இவர்களது உள் மனதின் செயற்பாடுகளின் கோர முகங்களை நேரில் சந்தித்தவன் நான், என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் பிழைத்திருக்கின்றனர். இவர்களது முன்பக்கம் விடுதலை, பின்பக்கம் கொலைக்களம்!
பழிவாங்கவும், பதவிக்குமான கொலைக்களத்தை வடபகுதியில் பல இடங்களில் வியாபித்துச் செயற்படுத்தினர். அதற்குப் பெயர் புலனாய்வு! என்னைக் கேட்டால் இந்தப் புலனாய்விலிருந்த அத்தனைப் பேரும் தண்டிக்கப் படவேண்டியவர்கள்தான் என்று சொல்வேன். ஏனெனில் இவர்கள் அவ்வளவு கொடுமைகளைச் செய்துவிட்டு இன்று நழுவிச் சென்று சுகமாக வாழ்கின்றனர்! முல்லைத் தீவிலிருந்து சுகமாகத தப்பிச் சென்றவர்கள் இவர்கள்தான். ஏணையோர்தான் இராணுவத்திடம் மாட்டிக்கொண்டனர் அலலது இறந்தனர்.
சாவகச்சேரி இறச்சிக்கடை நடத்திய “காந்தி” என்ற புலி விலங்கு எங்கள் தமிழர்களில் நானூற்றி ஐம்பது பேரை விசாரணைக்கென்று கொண்டு சென்று கொலை செய்ததாக கூறி பதவி உயர்வு பெற்று அரசியல் துறைக்கு மாற்றப்பட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இப்படிக் கொல்லும் போது புலிகளுக்குள் இருந்த இவரது எதிர்ப்பாளர்கள் சிலரையும் சேர்த்துக் கொன்றுவிட்டார் என்று கூறி தேவிபுரத்தில் சில நாள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. இப்போது எங்கே சுகமாக வாழ்கிறாரோ தெரியவில்லை.
எங்களது இனம் அறிவுள்ள இனமாக இருந்திருந்தால் எங்களுக்கு எப்போதோ விடுதலை கிடைத்திருக்கும். அறிவையும் மனித நேயத்தையும் தொலைத்தவர்கள் புலிகள். அவர்களை ஆதரித்த வெளிநாட்டினரும் அறிவைத் தொலைத்தவர்கள்தான்!
வன்னியில் கோமாளி ஆட்சி நடத்திய புலிகள்:
2002 முதல் 2006 வரை ஒரு கோமாளித்தனமான ஆட்சியை நடத்தினார்கள் வன்னியில் புலிகள். யாழ்ப்பாணம் செல்லும் மக்களிடம் வரி அறவிட்டனராம். அது வரியல்ல வழிப்பறி. அந்தக் காலத்தில் நடைப்பயணம் போவோரிடத்தில் வழிப்பறி செய்வார்கள் கொள்ளையர்கள். அது போன்றதோர் கொள்ளையை 21ம் நூற்றாண்டில் செய்தனர் புலிகள். இந்தக் கொள்ளையை யாழ்ப்பாணத் தமிழர்களிடத்தில் அடித்தனர். தமிழரிடம் கொள்ளை அடிக்க சிங்கள அரசிடம் அனுமதி கேட்டனர் புலிகள். 150 ரூபா அலுமினியப் பானைக்கு 250 ரூபா வழிப்பறி வரி போட்டவர்கள் புலிகள்.
இவர்கள் ஏனைய இயக்கங்களை அழிக்க இலங்கை இராணுவம் இவர்களை ஒட்டுமொத்தமாக அழித்தது. அப்படி அழிக்கப்படும் போது உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தது. இவர்கள் யாருக்கும் தெரியாமல் வதை முகாம்களில் வைத்துக் கொன்றனர் தமிழர்களை. இவர்களை படம் போட்டுக்காட்டிக் கொன்றனர் எதிரிகள்! இவர்கள் ஒரு கணக்குப் போட, கடவுள் வேறு கணக்குப் போட்டு வைத்திருந்துள்ளார் என்பதுதான் உண்மை!
என்னை இருபாலை காம்புக்குக் கொண்டு வந்து 15 மாதங்கள் கடந்து விட்டன. எங்களுக்கு திகதி நாள்காட்டி கிடையாது! பத்திரிகை கிடையாது. அன்று என்ன கிழமை என்று கூடத் தெரியாதிருந்தது. புதிதாக வருபவர்களிடம்தான் கிழமை திகதியைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம். அதனைக் கேட்டு தெரிந்து கொண்டும் எந்தவித நன்மையும் எட்டப் போவதில்லை.
இருபாலை முகாமைப்பற்றி வெளியிலிருக்கும் மக்கள் பரவலாக ஹைகதைக்கத் தொடங்கிவிட்டனர். இங்கே இளைஞர்களைக் கொண்டு வந்து கொலை செய்கிறார்கள் என்பது அச்செய்தியாகும். இச் செய்தி புலி விலங்குகளை எட்டியது. எனவே இந்த இடத்தை மாற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்தனர்.
ஒரு நாள் ஞாயிறன்று பிற்பகலில் எல்லாரும் தயாராகுங்கள் என்று கூறினர். நாங்கள் தயாராக வேண்டியதற்கு எதுவும் இல்லை. அதே கிழிந்த சறம், சேட் கிடையாது, அண்டவெயர் கிடையாது, கால்களில் சங்கிலி விலங்கு இவற்றுடன் ஆதிவாசிகள் போன்று அனைவரும் எழுந்து நின்றோம். நாங்கள் எழுந்து நின்றது மட்டும்தான் எங்களது தயாரிப்பு! இரவு ஏழு மணி வரை நின்று கொண்டே இருக்கிறோம், எதற்காக தயாராகுங்கள் என்று கூறினார்கள் என்பது தெரியாது. இறச்சிக்கடைக்கோ, அல்லது துணுக்காய்க்கோ அல்லது விடுதலைக்கோ என்பது எங்களுக்குத் தெரியாது.
இரவு எட்டுமணியளவில் 20க்கும் மேற்பட்ட விலங்குகள் வந்தனர். கறுப்புத் துணிகளால் கண்களைக் கட்டினர். பத்துப்பேர் ஏற்றக்கூடிய வாகனம் ஒன்றில் ஏற்றினர். வான் புறப்பட்டது. அரை மணி நேர ஓட்டத்திற்குப் பின்னர் ஓர் இடத்தில் நிறுத்தி இறங்கும்படி கூறினர், இறங்கினேன், கண்களின் கட்டுக்களை அகற்றினர், நடவுங்கள் என்றனர், நீளமாகக் கட்டப்பட்ட அறைகளைக் கொண்ட அந்த இடம் ஓர் சிறை என்பதைத் தெரியப்படுத்தியது.
ஏழு முதல் எட்டு அறைகள் கொண்டதாக இருந்தது. ஒரு அறையில் இருப்பவர்கள் மற்ற அறையைப் பார்க்க முடியாது தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அறையினுள்ளேயே கழிவறை கட்டப்பட்டிருந்தது. அதனால் கைதிகள் வெளியே வரவேண்டிய அவசியம் இருக்காது. உள்ளே போனால் போனதுதான், அடுத்த ஒரு மணி நேரத்தில் மேலும் பத்துப் பேர்வரை கொண்டு வரப்பட்டனர் இருபாலையிலிருந்து.
அனைவரையும் ஒரே அறையில் போட்டுப் பூட்டினர். மறுநாள் காலையில் எழுந்ததும் அது எந்த இடம் என அடையாளம் காண்பதில் பல முயற்சிகள் செய்தும் பயனற்றுப் போனது. அந்த அறையிலிருந்து எந்த வெளிப்பகுதியையும் பார்க்க முடியாது இருந்தது. புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடம்தான்.
தொடரும்
No comments:
Post a Comment