1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்……
நடந்த வன்கொடுமைகள்!
அந்தோணி!
பகுதி 9
பழிவாங்கிய புலி விலங்குகள் - நாவாந்துறை ஞன்தாஸ்:
என்னை இருபாலை முகாமுக்குக் கொண்டு வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. எந்த விசாரணையும் இல்லை. ஆனால் தினமும் யாராவது வரும் புதிய விலங்குகள் அனைவருக்கும் உதைவிருந்து வைத்துக்கொண்டே இருந்தனர். இறச்சிக்கடைக்கு ஏறக்குறைய நாற்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு சென்றிருந்தனர்.
சின்னக்கேடியும், திசையும் வாரத்தில் மூன்று நாட்கள் தவறாமல் உள்ளே வந்து தங்களது விருப்பம் பூர்த்தியாகும் வரை அடிப்பார்கள். சித்திரவதை செய்வார்கள், கடைசியாக வெளியே செல்லும் போது நடராஜ் அவர்களை உருட்டிப் புரட்டி எடுத்துத் தாக்கிவிட்டு செல்வார்கள்.
நாவாந்துறையைச் சேர்ந்த ஜெகன் ஞானதாஸ் என்பவரையும் மேலும் ஐந்து பேரையும் ஒருநாள் இரவில் கொண்டுவந்தனர் இருபாலைக் காம்புக்கு. ஞானதாஸ் அவர்கள் ஏற்கனவே ரெலோ இயக்கத்தில் இருந்தவர். படகுகள் ஓட்டுவதில் சிறந்த பயிற்சிப் பெற்றிருந்தார். இவர் ரெலோவில் தாஸ் குழுவினரைச் சேர்ந்தவர். ரெலோ இயக்கத்தை இவர்கள் தாக்கிப் படுகொலை செய்தபின்னர் ஞானதாஸ் அவர்கள் எந்த இயக்கத்திலும் சேராது இருந்தார். அப்படியிருக்கையில் ஆறு அண்டுகள் கழித்து இவரை எதற்காக இப்போது இழுத்துவர வேண்டும் என்பதை அறிய ஆர்வம் ஏற்பட்டது.
ஞானதாஸ் அவர்களை இரண்டு நாட்கள் நாவல் மரத்தின் கீழ் வைத்து சித்திரவதை செய்து பின்னர் எனது அறைக்கு அருகில் விடப்பட்டார். இரண்டு மூன்று நாட்களில் அவருடன் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் விபரித்தார்:-
தம்பி எனது இயக்கப் பெயர் ஜெகன். தாஸ் அண்ணன் தான் என்னை இயக்கத்துக்கு அழைத்து வந்தார். அவர் சுடப்பட்டதும் நான் இயக்கத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டேன். ஆயினும் என்னைப் பிடிப்பதற்கென்று கிட்டு தலைமையில் ஒரு குழு நாவாந்துறைக்கு வந்தது. கிட்டுவுடன் பாறூக் என்பவரும் வந்தார்.
அன்றைய தினம் எங்கள் சென்மேரீஸ் கோவில் திருநாள் நடந்துகொண்டிருந்தது. 29-04-1986 அன்று இரவு ஏழுமணியளவில் என்னைப் பிடிப்பதற்கென்று வந்த நபர்களை அடித்துவிட்டு பின்பக்கத்துச் சுவரால் ஏறி குதித்து கன்னியாஸ்திரிகள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்துவிட்டேன். என்னை நோக்கி பலதடவைகள் சுட்டார்கள் புலிகள். கிட்டு வானத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டு பைத்தியம் பிடித்தவர் போல் மக்களுக்குள் ஓடித்திரிந்தார். வெடிச்சத்தம் கேட்டதும் என்னை அவர்கள் சுட்டுவிட்டனர் என்று கருதி புலி நபர்களைச் சூழ்ந்துகொண்டு மக்கள் தாக்கத் தொடங்கிவிட்டனர். இதனைத் தொடர்ந்து கிட்டு ஒரு நபரையும், பாறூக் ஒரு நபரையும் சுட்டுக்கொன்று விட்டனர். இதனால் மக்கள் மேலும் ஆத்திரமடைந்து கிட்டு வந்த வானை கவிழ்த்துத் தீ வைத்துவிட்டனர். புலிகள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அரைமணித்தியாலத்தில் நான் மீண்டும் கோவிலுக்கு வந்தேன். அங்கே இருந்தவர்கள் என்னைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். உன்னைக் கொன்று விட்டார்கள் என்று நினைத்துத்தான் அவங்களை நாங்கள் தாக்கினோம். அவங்கள் விஜயனையும், ரெட்னசிங்கத்தையும் சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிவிட்டார்கள் என்று கூறினர்.
மறுநாள் இருவரது உடல்களும் அடக்கம் செய்யப்பட்டப் பின்னர் எரிந்த வானை இழுத்து ஓரமாகத் தள்ளிவிட்டு நான் கோவிலின் பின்புறத்தில் தங்கியிருந்தேன். மூன்றாம் நாள் மாத்தையாவும், கிட்டுவும் அறுபது எழுபது பேருடன் துப்பாக்கிகளுடன் வந்து ஊர்த் தலைவர் மற்றும் பாதர் சிஸ்ரர் மாருடன் கதைத்தனர்.
கிட்டு அவர் வந்த வாகனத்தினுள் அமர்ந்துகொண்டார். பாதர் வற்புறுத்தி கிட்டுவையும் வந்து பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும்படி கூறி அழைத்துவந்தார்கள். எங்கள் தலைவரைப்பார்த்து மாத்தையா சொன்னார்:-
நாங்கள் ரெலோ இயக்கத்தைத் தடைசெய்துள்ளோம். உங்களுக்கும் அது தெரியும். நாங்கள் ஒரு விசாரணைக்காகத்தான் ஜெகனை கூட்டிக்கொண்டு போகவந்தோம், அவர் எங்கட பொடியங்களை அடிச்சுப் போட்டு ஓடிப் போய்விட்டார். அதில் நடந்த சில குழப்பத்தால எங்கட பொடியல் சுட்டுப் போட்டினம். ஆதனால இங்க இருந்தவையள் எங்கட பொடியன்கள அடிச்சும் போட்டினம். இதனால எங்களுக்குப் பெரிய அவமானமாப் போச்சு. எங்கட வானையும் எரிச்சுப் போட்டினம். அந்த வான் எங்களுக்கு ஒரு ராசியான வான். அந்த வானை இழந்த எங்களுக்கு பெரிய இழப்பு!
நாங்கள் இப்போது சண்டை போடுவதற்கு வரவில்லை. எங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று கதைக்கத்தான் வந்தநாங்கள், என்று முடித்தார் மாத்தையா! உடனே எங்கள் ஊர்த் தலைவர் நீங்கள் சுட்டுக் கொன்ற இரண்டு பேருக்கும் என்ன பரிகாரம் செய்யப் போறியள் என்று சொல்லுங்கோ என்றார். கிட்டுவுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. ஆயினும் மாத்தையா, அன்றைக்கு ஆயுதங்களைப் பறித்த படியால்தான் சுடவேண்டி வந்தது. அது தவறுதலாக நடந்த ஒன்றுதான் என்று கூறி பரிகாரப்பிரச்சினையைத் திசை திருப்பினார். எங்கள் பகுதியில் உயிரிழப்பு ஏற்பட்டதையிட்டு அவர்கள் கவலையடையவில்லை. ஆனால் அவர்களுக்கு அவமானம் ஏற்பட்டதையிட்டு வருத்தப்பட்டனர்.
இறுதியாக மாத்தையா கூறினார், பாதர் எங்களுக்கு பெரிய அவமானம் ஏற்பட்டுவிட்டது, நீங்கள் ஜெகனை எங்களிடம் ஒப்படைத்தால் நாங்கள் நாளைக்கே உங்களிடம் கொண்டு வந்து ஒப்படைத்துவிடுவோம். இது ஓர் கௌரவப் பிரச்சினை! எங்கட பொடியள் எங்களை மதிக்கவே மாட்டார்கள். நாவாந்துறையில அடிச்சு விரட்ட ஓடியந்தவயள்தானே என்று எங்களை ஏளனமாகக் கதைப்பார்கள். அதனால நாங்கள் ஜெகனைப் பிடித்துவந்து விசாரிச்சநாங்கள் என்று எங்கட ஆக்களுக்குக் காட்ட வேண்டும், அப்படிச் செய்தால் எல்லாரும் அமைதியாகி விடுவார்கள், எங்களுக்கும் பிரச்சினை இருக்காது. ஆகையால் சத்தியமாகச் சொல்றன் பாதர் நான் எனது பொறுப்பில் கூட்டிக் கொண்டுபோய் நாளைக்கு திரும்பவும் உங்களிடம் கூட்டிக்கொண்டு வந்து விட்டிர்ரன் என்று மாத்தையா சத்தியம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ஊர்த் தலைவரும் பாதரும் என்னுடன் கதைத்தனர். பாதரிடமும் தலைவரிடமும் உறுதி கூறினால் நான் அவர்களுடன் சென்று வருகிறேன் என்று கூறி அவர்களுடன் கிளம்பினேன். அவர்கள் என்னை வேம்படிக்குக் கொண்டுச் சென்றனர். அங்கிருந்து கண்னைக் கட்டி மேலும் ஓரிடத்துக்கு கொண்டு சென்றனர். சிலர் வந்து என்னைப் பார்த்தனர். அப்போதும் எனது கண்களைக் கட்டித்தான் இருந்தனர். யாரும் எனக்கு அடிக்கவில்லை. ஆனால் தூசண வார்த்தைகளால் வறுத்து எடுத்தனர்.
“இப்போது நீ தப்பிவிட்டாய் ஒருநாள் மீண்டும் அகப்படுவாய் அப்போது பார்த்துக்கொள்வோம் உன்னை” என்று மிரட்டினர். செல்வம் எங்கே இருக்கிறான். போபி எங்க இரக்கிறான், என்று கேட்டனர். எனக்கும் அவர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது என்றேன்! அவர்களுக்கும் அது தெரியும். தெரிந்தே வேண்டுமென்று கேட்டனர். ஏனெனில் என்னிடம் கேட்பதற்கு எதுவுமே இருக்கவில்லை. தாங்கள் ஓர் ஆதிக்க வாதிகள் என்பதைக் காண்பிக்கவேதான் என்னைப் பிடிக்க வந்தார்கள்.
மறுநாள் என்னை வான் ஒன்றில் ஏற்றினர். முன் இருக்கையில் திலீபன் ஏறி அமர்ந்தார். மாத்தையாவுடன் வந்தவர்களில் திலீபனும் இருந்தார் முதல் நாளில். அப்போது அவர் திலீபன் என்பத எனக்குத் தெரியாது. அழைத்து வந்து பாதரிடம் ஒப்படைத்தனர் என்னை.
என்னை விடுவித்து பாதரிடம் ஒப்படைத்த புலிகளது முகங்களில் ஓர் விறைப்புத் தன்மை இருந்தது. இப்படிப் பிடித்து வந்த ஒருவருக்கு அடி உதை கொடுக்காமல் விடுகிறோமே என்ற ஏக்கம் அவர்களின் முகங்களில் பிரதிபலித்தது! அப்படி விட்டுச் சென்ற பின்னர் புலிகள் எங்கள் பகுதிக்குள் வந்து எந்தத் தொந்தரவும் தரவில்லை. காரணம் மக்கள் ஒற்றுமையாக இருந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படிக் கூறிய ஜெகன் ஞானதாஸ் தொடர்ந்தார்:-
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் வந்து “அலுவலகத்துக்கு வந்துவிட்டுச் செல்லவும்” என்று அழைத்தனர். முன்பும் இவர்கள் திருப்பி அனுப்பியது போன்று அனுப்பிவிடுவார்கள் என்று நம்பி, அவர்களது அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கே கண்களைக் கட்டி வேறு ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்று அடித்தார்கள். கீழே தள்ளி மதித்தார்கள், அதோடு காலுக்கும் சங்கிலியிட்டு பூட்டுப் போட்டார்கள். கண்கள் கட்டப்படடிருந்ததால் யார் யார் அடித்தார்கள் என்பது தெரியவில்லை! சாவகச்சேரிக்குக் கொண்டு போகப்போகிறோம் என்று கதைத்துக் கொண்டார்கள். ஒரு கிழமையில் இங்கே கொண்டு வந்துள்ளனர் என்று கூறி முடித்தார் ஜெகன் அவர்கள்!
ஞானதாஸ் அவர்களை ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் புலிகள் கைது செய்யச் சென்றபோது பொதுமக்களில் இரண்டு போர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்படிக் கொல்லப்பட்டவர்களுக்கு எந்த நீதி விசாரணையும் நடைபெறவில்லை. ஆயினும் புலிகளது வான் எரிக்கப்பட்டதற்கும் ரெலோ இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதற்குமாக ஆறு ஆண்டுகள் கழித்து பழி வாங்குவதற்காக ஞானதாஸ் அவர்களைப் பிடித்து வந்து கொடுமைப்படுத்த முற்பட்டுள்ளனர். மனித உயிர் எந்த அளவுக்கு மதிக்கப்பட்டுள்ளது என்பதைக் காண இதுவும் ஓரு சாட்சியம்.
இயற்கைக்கு தண்டனை வழங்கியவர்கள் புலிகள்:
உயிர்கள் எப்படியெல்லாம் வேட்டையாடப்பட்டன என்பதற்கு இன்னுமொரு சம்பவத்தைக் கூறவேண்டும். 1993 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் இச்சம்பவம் நடந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரனின் குழந்தைகளை பாடசாலைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்று வருவதுடன் பிரபாகரன் அவர்களின் முக்கிய பாதுகாவலர்களில் ஒருவராகவும் இருந்தார் டக்கிளஸ் என்பவர். (இவரது பெயரை நினைவில் வைக்கமுடியவில்லை டக்கிளஸ் அல்லது டயஸ் என்று நினைக்கிறேன்.)
இவர் யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்ணைக் காதலித்தார். இந்தக் காதலை புலிகளின் புலனாய்வு வல்லவர்கள் கண்டு பிடித்துவிட்டனர். உடனே அவரைப் பிடித்து அவரது தலையில் குண்டு போட உத்தரவிட்டார் அவர்களது தலைவர்.
இதனைக் கேள்விப்பட்ட அந்த டக்கிளஸ் தப்பி ஓடி விட்டார். அவரை பிடிப்பதற்காக கரை ஓரங்களில் இருந்த அவர்களது அனைத்துத் துறைகளுக்கும் தகவல் கொடுத்து உசார் படுத்தப்பட்டனர். ஆயினும் அவரைப் பிடிக்க முடியவில்லை. பின்னர் அவரது புகைப்பட்த்தை பத்திரிகைகளுக்குக் கொடுத்து மக்களைக் காட்டிக் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டனர்.
உதயன் பத்திரிகையில் படத்துடன் செய்தி வெளியானது. மூன்று நாட்கள் கழித்து அந்த இளைஞன் செம்மனிச் சுடுகாட்டில் விசமருந்தி தற்கொலை செய்து கொண்டான். அந்தப் புகைப்படமும் உதயன் பத்திரிகையில் வெளிவந்தது. காதலிப்பதற்குத் தண்டனை! அதாவது இயற்கைக்குத் தண்டனை வழங்கியவர்கள் புலிகள் என்பது வரலாறு. கொலை அவர்களது பிறப்புரிமை! மக்கள் அவர்களது அடிமைகள் என்ற நிலைதான் புலிகளின் ஆட்சியில்.
விலங்கிட்டு அடிக்கும் கோழைகள் புலிகள் - நட்ராஜ்:
இருபாலை முகாமில் வைக்கப்பட்டிருந்த எங்கள் சகோதரர்களைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போட்டிருந்தனர். அனைத்துச் சகோதரர்களுக்கும் கால்களில் சங்கிலி விலங்கிட்டுப் பூட்டுக்கள் போட்டிருந்தனர் என்பது பற்றி முன்னரே நான் சொல்லியிருந்தேன். இப்படிக் கால்விலங்கு, புலிக்காவல், தகரவேலி, தண்டனை தரும் நாவல் மரத்தடி இவை அனைத்தையும் தாண்டி நள்ளிரவில் ஒரு சகோதரன் தப்பிச் சென்றான். அந்தச் சகோதரனை நினைத்து நான் பெருமைப்பட்டுக்கொண்டேன்.
நான் இருந்த அறையிலிருந்து மூன்றாவது அறையில் எட்டுப்பேர்வரை இருந்தனர். அதில் திருகோணமலையிலிருந்து கொண்டு வந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் சகோதரன் ஒருவர் 20-21 வயதுடையவர். அவர் நள்ளிரவில் அந்த வீட்டின் சீலிங்கை நீக்கி அதனூடாகச் சென்று கூரையின் ஓட்டைக் கடந்து பின்னர் ஓட்டின் மேலிருந்து கீழே குதித்து, முக்கிய வாசல் வழியாக தப்பிச் சென்றுவிட்டார்.
இந்த முகாமைச் சுற்றி வீடுகள் நிறைய இருந்தன. உள்ளே புலிகள் எங்கள் சகோதரர்களைத் தாக்கும் சத்தம் வெளியே இருப்பவர்களுக்கும் கேட்கும் என்று புலிகள் பேசிக்கொள்வார்கள். இப்படித் தப்பிச் சென்ற அந்தச் சகோதரனைப் பிடிக்கவே முடியவில்லை புலிகளால்.
எப்படியும் அவர் இருபாலையிலிருந்து தப்பிச் சென்றிருக்க முடியாது என்பது புலிகளினது கணிப்பு. ஆயினும் அவரைப் பிடிக்க முடியவில்லை. காரணம் இருபாலை மக்கள் அவரைக் காப்பாற்றினர் என்பதுதான் உண்மை.
இரண்டு நாட்கள் கழித்து செம்படை சலீம் வந்தார். “ இங்கு இருப்பவர்களுக்குத் தெரியாமல் அவர் தப்பியிருக்க முடியாது. அவனைப் பிடித்துவிடுவோம் அவன் பிடிபட்ட பிறகு உண்மையைச் சொன்னால் உங்கள் அனைவரையும் சுட்டவிடுவோம். அதனால் நீங்கள் இப்பவே உண்மையைச் சொல்லிவிட வேண்டும்” என்று அனைவரையும் ஒன்று கூட்டி மிரட்டினார். அந்த அறையில் இருந்தவர்களில் ஜெகன் ஞானதாஸ் அவர்களும் ஒருவர். ஆனாலும், அனைவரும் ஏகோபித்த குரலில் கூறினார்கள், ‘எங்களுக்குத் தெரியாது” என்று.
பலவகையான வார்த்தைகளைப் பயன்படுத்தி சலீம் முயற்சித்து உண்மைகளைக் கண்டறிய பெரும்பாடுபட்டார். அனைவரும் தெரியாது என்றே கூறினர். அலகைப் பிடித்து வந்து உண்மையை எடுக்கிறேன் என்று கூறிச் சென்றார் சலீம்.
அந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இளைஞர் திருகோணமலையைச் சேர்ந்தவர். இருபாலைப்பகுதியைத் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. அப்படியிருந்தும் அவர் தப்பிச் சென்றது ஓர் அதிசயமான துணிச்சலான செயல்தான். நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். எனக்குக் கூட அப்படி ஓர் எண்ணம் வரவில்லை. யாழ்ப்பாண இடங்களைத் தெரியாத அந்த இளைஞன் இங்கே இருந்து தப்பிக்க முடிவெடுத்தது ஓர் சரியான முடிவாகத்தான் இருக்கும்.
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பணம் வந்து தன்னை மீட்டுச் செல்ல தனது உறவினர்களால் முடியாது என்பதை அவர் தெரிந்துவைத்திருந்தார். எங்களுக்கென்றாலும் எங்கள் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றனர். அவர்கள் எப்படியும் புலி விலங்குகளுக்கு தொல்லைகள் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் எங்களை விடுவிக்க குறைந்த அளவு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு அப்படி எந்தக் குறைந்த அளவு நம்பிக்கை கிடையாது. எனவே இந்த இளைஞன் எப்படியும் இறச்சிக்கடைக்கு அனுப்பப்பட்டு கொல்லப்படுவார் என்பதை அறிந்து இப்படி ஓர் முயற்சியில் இறங்கி தப்பித்துள்ளார். அதிஸ்ரத்தை நம்பி காத்திருக்காமல் முயற்சித்துப் பார்ப்போம் என்று துணிந்த அந்த இளைஞன் பாராட்டப்படாமல் இருக்க முடியவில்லை. அந்த இளைஞனைக் கடைசிவரை புலிகளால் பிடிக்க முடியவில்லை! இந்த நிகழ்வுக்குப் பிறகு புலிகளது வீராவேசப் பேச்சுக்கள் குறைந்தன. ஆனால் சித்திரவதை செய்யும் ஆற்றலை அதிகரித்தனர்.
தப்பித்து ஓடிய இளைஞனை மனதில் வைத்துக்கொண்டு பிடித்து வரும் புதிய இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர் புலிகள். காலுக்கு மட்டும் விலங்கு மாட்டினால் போதாது. இவர்கள் எல்லோருக்கும் கைகளுக்கும் விலங்கு மாட்ட வேண்டும் என்று சின்னக்கேடி வற்புறுத்தினார். சலீமுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, அவர் அதற்கு சம்மதிக்கவில்லை!
கைகளில் விலங்குடன் இருக்கும் நடராஜ் அவர்கள் இரவு வேளையில் தினமும் ஏதாவது பழைய சினிமாப் பாடல்களைப் பாடுவார். இந்த இளைஞன் தப்பி ஓடிய மூன்று நான்கு நாட்கள் கழித்து அவரது பாடலை ஆரம்பித்தார். “சட்டி சுட்டதடா கை விட்டதடா” என்ற பாடல் வரியில் “ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கிவிட்டதடா” என்று உரத்தக் குரலில் பாடினார். காவலுக்கு நின்ற புலிக்கு கோபம் வந்தது. எங்களத் தானே சொல்கிறாய் என்று நடராஜ் அவர்களை இழுத்து வெளியில் போட்டு அடித்தனர். நடராஜ் அவர்களும் விடுவதாக இல்லை. ஓமடா உங்களைத்தான் சொன்னேன்! அந்தப் பொடியன் வீரனடா. நீங்கள் விலங்கு போட்டு அடிக்கும் கோழைகளடா! என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருந்தார். இவர்களை அடிப்பதைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை. எந்த விபரீதம் நேர்ந்தாலும் தான் நினைப்பதைச் சொல்லி முடிக்கும் மனபலம் அங்கிருந்தவர்களில் நடராஜ் அவர்களுக்கு மட்டுமே இருந்தது!
சின்னக்கேடியுடன் நிழல் போல வரும் திசை என்பவருக்கு ஒரு விசேச குணம் ஒன்று உண்டு. அவர் எப்போது உள்ளே வந்தாலும் இரண்டு சகோதரர்களை சுவரின் மீது சாய்ந்து நிற்கும்படி கூறி அவர்களது மார்பில் கைகளால் குத்துவார். மார்புப்பகுதி சற்றுத் தூக்குதலாக இருந்தால் கண்டிப்பாக திசை குத்துவார். நேராக நெஞ்சில் குத்தமாட்டார். கைகளை முகத்துக்கு மேலே தூக்கி மேலிருந்து கீழாகக் குத்துவார் இரண்டு கைகளாலும். ஓர் கோமாளித்தனமான குத்துக்களாக இருக்கும் அவரது குத்துகள். அவருக்கு அதில் ஓர் பேரின்பம் இருந்தது. அங்கு இருந்த 15 மாதங்களில் இருபது தடவைக்கு மேல் இவ்விதமான குத்துக்களை நான் பெற்றுள்ளேன்.
சிங்களவர்களையும் விட கொடுமை செய்த புலி விலங்குகள்:
நீண்ட நாட்களாக இந்தச் சிறையில் நடப்பவற்றை நான் கவணித்துக்கொண்டிருந்தேன். பலர் வருவதும் அடி உதைகள் என்று வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுக்கொண்டிருந்தனர். என்னை விசாரணைக்கென்று அழைக்கவே இல்லை. எதற்காக வைத்துக்கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வி என்னுள்ளேயே எழுந்தது. இதுபற்றி நான் யாரிடத்திலும் கேட்க முடியாது. அப்படி கேட்டுவைத்தால் வம்பை விலைக்கு வாங்கியதாகிவிடுமோ என்ற பயமும் இருந்தது. அதனால் எனது வாயை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன்.
என்னுடன் இருந்தவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். இந்த முகாமில் எந்தவித மருந்தும் கிடையாது. காய்ச்சல் தலைவலி, வயிற்றோட்டம் எது வந்தாலும் உணவு இல்லாமல் பட்டினி கிடந்துதான் நோயைக் குணப்படுத்த வேண்டும். இங்கே இருந்த ஒரே மருந்து வின்ரோஜன்தான். இரண்டு சகோதரர்களுக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டது. காலை மாலை இருவேளை தவிர ஏனைய நேரங்களில் எந்தக் காரணம் கொண்டும் கழிவறைகளுக்கு அனுமதிக்க மாட்டார்கள். துணுக்காயில் அதற்காக சொப்பின் பைகள் கொடுத்தனர். இங்கு எதுவும் இல்லை.
ஒரு சகோதரனுக்கு இரவு வயிற்று வலி ஏற்பட்டு மலம் கழிக்க வேண்டும் என்று அவதிப்பட்டார். எவ்வளோவோ மன்றாடிக் கேட்டும் புலி விலங்குகள் இரங்கவில்லை. அந்தச் சகோதரனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை அப்படியே சறத்துடன் மலம் கழித்துவிட்டார். எனது அறையில் அப்போது ஆறுபேர் இருந்தோம். நிலத்திலும், அவரது சறத்திலும் கொட்டிவிட்டது. கழுவுவதற்காக தண்ணீர் கேட்டோம். தரமறுத்துவிட்டனர். மறுநாள் காலைவரை உறக்கமில்லாமல் அதனுடனேயே அனைவரும் இருந்தோம். காலையில் தண்ணீர் எடுத்து வந்து நிலத்தையும் கழுவி அவரது சறத்தையும் கழுவினோம்.
இதே போன்று அருகில் இருந்த அறையிலும் ஒருநாள் நடந்தது. நல்லவேளை எனக்கு இப்படி ஓர் நிலை ஏற்படவில்லை என்று நினைத்திருந்த வேளை எனக்கும் அந்தத் தண்டனை தானாக வந்தது.
ஒருநாள் இரவு 1 மணியளவில் எனது வயிறு முறுகியது. அதனைத் தொடர்ந்து வெளியேறும் உணர்வு அதிகரித்தது. காவலுக்கு நின்ற புலியிடம் கதைத்துப் பார்த்தேன். வாயை மூடிக்கொண்டு கிடவடா என்று ஆலோசனை வழங்கினார். ஏற்கனவே எனது அறை நாற்றம் எடுத்தது நினைவுக்கு வந்தது. எப்படிச் சமாளிப்பது என்று பல ஆராட்சிகள் செய்தேன் எதுவும் தென்படவில்லை. இறுதியாக ஓர் முடிவுக்கு வந்தேன்.
எனது சறத்தைக் கழித்துப் பயன்படுத்துவதென்று முடிவெடுத்தேன். அதன்படி சறத்தைக் 2ஓ1ஃ2 அடி அளவில் பல்லால் கடித்துக் கிழித்து எடுத்து அதனை இரண்டாக மடித்து அதன் மீது மலம் கழித்தேன். அதற்கு முன்னர் கூடஇருந்தவர்களை மறுபக்கம் திரும்பி அமரும்படி கூறி மன்னித்துக்கொள்ளும்படி கேட்டுத்தான் கழிவை அகற்றினேன்! முன்னர் ஏற்பட்டது போன்று கட்டுப்பாட்டை இழந்து அறையில் நாற்றம் ஏற்படுத்தவில்லை. கழித்த மலத்தை அப்படியே சுருட்டி ஓர் மூலையில் வைத்துவிட்டு உறங்கினேன். முதலில் அறையினுள் மனம் இருந்தாலும் பின்னர் மனம் போய் அனைவரும் உறங்கினோம்.
மறுநாள் காலை கதவைத் திறக்க வந்த புலிக்; காவலாளி ஏனடா இரவு கூப்பிட்டனி என்று கேட்டு காலால் உதைத்தார். இவரது பெயர் பாபு. இவர் பூனகரியைச் சேர்ந்தவர். ரொயிலற் வந்தது அதனால்தான் கூப்பிட்டேன் என்று பதில் கூறியதற்கு மீண்டும் ஒரு உதை விட்டார். இவை பழகிப்போன உதைகள்தானே எங்களுக்கு! இந்தச் சம்பவம் நடந்து பத்து மாதங்களும் நான் அந்த கிழிந்துபோன சறத்துடன்தான் வாழ்ந்தேன்.
சிங்களவர் கூட இந்த அளவுக்குத் தமிழர்களை வதைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. சிங்களவரது சிறையிலிருந்த பலரை நான் விசாரித்துப் பார்த்தேன். ஆண்டுகணக்காக கால்களுக்கு விலங்கிட்டு, கைகளுக்கு விலங்கிட்டு, குழிகள் வெட்டி அதனுள் இறக்கிவைத்து, தினமும் அடித்துச் சித்திரவதை செய்து தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்ததாக யாரும் சொல்லவில்லை.
மனித உரிமைகளை எப்படியெல்லாம் மீறக்கூடாதோ, அவை அனைத்தையும் மீறிச் செயற்படுத்தி காண்பித்தனர் புலிகள். விடுதலை என்றால் என்னவென்று தெரியாத, படிக்காத, படிக்கவிரும்பாத நபர்கள் எல்லாம் ஆட்சி செய்யப் புறப்பட்டால் வாழும் வீட்டுக்குள் மிருகங்கள் போல் மலம் கழிக்கத்தான் வேண்டும். தமிழ் இனத்துக்கு பெருமை என்று நினைத்தவர்கள் பலர். ஆனால் நடந்தவை சிறுமைகள் என்பது யாருக்கும் தெரியாத விடயமாகும்.
தொடரும்
மாத்தையா
No comments:
Post a Comment