பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 3 August 2023

பகுதி8 விடுதலைப்புலிகள் சித்திரவதை கூடமும் தப்பியவர் அனுபவம்

  வெற்றிசெல்வன்       Thursday, 3 August 2023
1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்……
நடந்த வன்கொடுமைகள்!
அந்தோணி!

பகுதி 8

அவர் ஓர் வலது குறைந்தவராக இருந்தாலும் மன உறுதி மிக்கவராக இருந்தார். இவருக்கு வயது ஏறக்குறைய 45க்கு மேல் இருக்கும். எங்களால் கேட்க முடியாத, கேட்கத் தோன்றாத கேள்விகளைக் கேட்டார் நடராஜ் அவர்கள். “வம்பில் பிறந்த நாயே ஏனடா அடிக்கிறாய்” என்று இவர்களது முகாம் அதிருமளவுக்கு நடராஜ் அவர்கள் கேட்டார். இந்தக் கொலைக்கள முகாமில் பொறுப்பாக இருந்த கௌதமன் காதில் இது விழுந்தது. வந்தார் கௌதமன். அவர் ஓர் கால்சட்டையும் பெனியனும் அணிந்து கொண்டு ஓர் ஒஸ்லோன் பைப்பைக் கையிலெடுத்தார். கூடவே துணைக்கு மஞ்சு என்ற விலங்கையும் அழைத்தார்.
வேட்டித்துண்டு கொண்டு வா என்று ஒருவரிடத்துக் கூறினார் கௌதமன். துணி வந்ததும், ஒரு தடியை எடுத்து நடராஜ் அவர்களின் வாயினுள் சொருகினார். பின்னர் எடுத்து வந்த துணியின் பகுதியைக் கிழித்து நடராஜ் அவர்களின் வாயினுள் திணித்தார். அதன் மேல் மறு துணியால் வாயைச் சுற்றிக் கட்டினார்.

பின்னர் ஒஸ்லோன் பைப்பால் அடிக்கத் தொடங்கினார். மஞ்சுவையும் அடிக்கச் சொன்னார் கௌதமன். நடராஜ் அவர்கள் உருண்டு உருண்டு கத்துகிறார். அவரது அலறல் ஓசை இப்போது மூக்கு வழியாக வருகிறது. துணியால் அடைத்திருந்தாலும் அதனையும் மீறி வாய் ஓரமாக சத்தமிடுகிறார் நடராஜ் அவர்கள்.

கௌதமன் சத்தம் போடுகிறார், “டே, சத்தம் போடாதே! டே சத்தம் போடாதே” என்று அடிக்கும் போதும் நடராஜ் அவர்கள் நிறுத்தவில்லை. இவர்கள் அடிக்கும் போது அவர் கீழே கிடந்து சுழன்று இவர்களைத் திட்டுகிறார். என்ன சொல்லித் திட்டுகிறார் என்பது விளங்கவில்லை. மூச்சுத் தினறுவதைப் போன்ற சத்தம் மட்டும் எங்களுக்குக் கேட்கிறது.

அவ்வளவு அடிகளை வாங்கியும் நடராஜ் அவர்கள் சத்தமிடுவதை நிறுத்தவில்லை. புலி விலங்குகளாலும் அவரது ஒலியை நிறுத்த முடியவில்லை. நடராஜ் அவர்களிடம் புலிகள் தோற்றனர். கௌதமன் களைப்படைந்து விலகிச் சென்றார். புதிதாக வந்தவர்களில் மிக அதிகமாக அடிவாங்கியவர் நடராஜ் அவர்கள்தான்.

நேரம் மதியத்தைத் தாண்டியது. உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது. அப்போது நடராஜ் அவர்களின் வாய்கட்டும் அவிழ்க்கப்பட்டது. நடராஜ் கத்தினார், டேய், பெனியன் போட்ட நாயே, பினந் தின்னி நாயே, வாய்க்குள்ள துண்டுவைச்சா அடிக்கிறாய்! சொறி நாயே! ஒரு அப்பன் ஆத்தைக்குப் பிறந்திருந்தால் எனக்கு இந்த வேலை செய்வியா? இப்படியாக பலதரப்பட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினார் நடராஜ் அவர்கள். இதைக் கேட்ட கௌதமன் மீண்டும் ஓர் தடியுடன் ஓடிவந்து நடராஜ் அவர்களின் முதுகில் அடித்தார். நடராஜ் அவர்கள் விடவில்லை!

நாசமாப் போறவனே ஏன்ரா அடிக்கிறாய்! நடராஜ் அவர்களின் கேள்வி நியாயமானது ஏன் அடிக்கிறீர்கள்? எதையாவது கேட்டிருக்க வேண்டும் அவரிடத்தில்! எதுவுமே கேட்கவில்லை! அப்படியாயின் ஏன் அடிக்கிறீர்கள்! இந்தக் கேள்விக்குப் பதிலும் அடிதான்! எனவே நடராஜ் அவர்கள் தனது கேள்வியை நிறுத்தவில்லை! நடராஜ் அவர்களின் கால் மட்டும் தான் ஊனம், அவரது மனது உறுதியானது, புலிகளுக்கு மனம் ஊனமானது, உடல் பலமானது.

துணுக்காயிலும் சரி, யாழ்ப்பாணத்திலும் சரி இவர்களது கொடுமைகளை நேரில் பார்த்துள்ளேன். நடராஜ் அவர்கள் கேட்ட கேள்விகள் போன்று பாதிக்கப்பட்ட யாரும் கேட்கவில்லை! இதனால் அவர் மீது எனக்கு அதிக மதிப்பு ஏற்பட்டது. இவர்கள் செய்துவிட்ட சித்திரவதையை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இயற்கை அவருக்கு ஓர் விசித்திர மன உறுதியை வழங்கியிருக்கிறது.

நடராஜ் அவர்களின் கேள்விகளால் புலி விலங்குகள் பெரிதும் அவமானப்பட்டிருந்தனர். மூன்று நாட்களாக புலி விலங்குகள் எங்களை நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்தனர். ஒரு முடவன் இப்படிக் கேள்வி கேட்டுவிட்டானே! அதிலும் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்டு அவமானப்படுத்தி விட்டானே என்பது இவர்களது வருத்தமாக இருந்தது. அதிலும் தலைவரான கௌதமனாலும் முடியாமல் போனது பெருத்த அவமானம் என்றும் நொந்து போயிருந்தனர்.

பிற்பகலில் அனைவரையும் வீட்டினுள் போட்டுப் பூட்டினர். இப்போது எங்கள் பகுதியின் ஹீரோ நடராஜ் அவர்கள்தான். உள்ளே இருந்தவர்கள் நடராஜ் அவர்களுக்கு ஆறுதல் கூறி அவரது உடல் முழுவதும் வின்ரோஜன் போட்டுத் தேய்த்துவிட்டனர். “சரியாத்தான் அடிச்சுப் போட்டாங்கள்” என்று கூறினாரே தவிர இந்தச் சித்தரவதையால் அவர் மனம் தளர்ந்தவராகத் தோன்றவில்லை! இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் எந்த இயக்கத்தையும் சாராதவர் என்பதுதான்.

தொடர்ந்து மூன்று நாட்களாக எங்களுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்கவில்லை. நான்காவது நாள் காலையில் இருபது பேர்வரை வந்தனர். புதிதாக வந்தவர்களையும், பழையவர்களையுமாக 10பேர் வரை வெளியே எடுத்தனர். கௌதமனது விசாரணைப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். வாசலில் வைத்தே கைகளுக்கும் விலங்குகளைப் பூட்டினர். விசாரணைப் பகுதிக்குச் சென்ற சிறிது நேரத்தில் சகோதரர்களது அபயக்குரலும் அலறல் சத்தமும் கேட்டது. இருபதுபேர் கைகால்களுக்கு விலங்கிட்டவர்களைத் தாக்குகின்றனர். அவர்களது அலறல் சத்தம் என்னை மீண்டும் கடவுள் பக்கம் இழுத்துச் சென்றது. “ஆண்டவரே இந்தச் சகோதரர்களைக் காப்பாற்றும். இந்த மிருகங்களுக்கு நல்லதோர் அறிவினைக் கொடும்” என்று மீண்டும் மீண்டும் வேண்டுதல் வைத்தேன். எங்களது நிலையில் இந்த வேண்டுதலைத் தவிர வேறு யாரும் துணைக்கு வரப்போவதில்லை.

எனக்கு அடிவிழும் போது ஏற்படும் வலியைவிட ஏனைய சகோதரர்களுக்கு அடிக்கும் போது அவர்கள் வலியால் துடித்து எழுப்பும் வலியின் ஒலியைச் சகித்துக்கொள்ளவே முடியாது. எனவேதான், “இறைவனே எம் சகோதரர்களைக் காப்பாற்றும்” இந்த விலங்குகளுக்கு தண்டனையுடன் புத்தி புகட்டும் என்று வேண்டிக்கொண்டேன். இந்த வேண்டுதல்களால் இறைவன் உடனடியாக இறங்கி வந்து இந்த இளைஞர்களைக் காப்பாற்ற வில்லை. ஆயினும் “தெய்வம் நின்று கொல்லும்” என்பதை பின்நாளில் நாம் கண்டோம்! வாழ்க்கை என்பது மரணத்தின் தயவில் நடப்பது!

பிற இயக்க அங்கத்தினரை அடிப்பது ஓர் கலை என்று நினைத்துக் கற்று வந்தனர் புலிவிலங்குகள். அவர்கள் கற்றுக்கொள்வதற்கான உபகரணங்கள்தான் ஏனைய தமிழ் இளைஞர்கள் ஆவர். கொடுமையினாலும் கோரக் கொலைகளினாலும் தமிழ் மக்களுக்கு விடுதலையைக் காண்பிக்கப் புறப்பட்டவர்கள்தான் புலிகள். புலிகளைக் கண்டு அனைவரும் அச்சமடைய வேண்டும், அதன் மூலம் அவர்களுக்கு பெருமை அடைய வேண்டும், அவை மூலம் ஆட்சி அதிகாரம் அவர்களின் கைகளை வந்தடைய வேண்டும். இந்தக் கொள்கைக்கு எங்கள் மக்களில் ஒரு பகுதியினர் முன்டியடித்து ஆதரவு கொடுத்தனர். இந்த ஆதரவு அவர்களை மேலும் மேலும் கொடுமையை செய்யத் தூண்டியது!

இருபது புலிவிலங்குகளால் அடித்துத் துவைக்கப்பட்ட அத்தனை பேரும் மீண்டும் நாங்கள் இருந்த வீட்டுப்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டனர். சிலருக்கு இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சிலர் நடக்க முடியாமல் வந்தனர். மதியம் என்றபடியால் சிறிது நேரத்தில் உணவுப் பார்சல் வந்தது. வின்ரோஜன் தீர்ந்திருந்தபடியால் அடிபட்ட இடங்களுக்குத் தண்ணீர் ஊற்றி கண்டிப்போன இடங்களைத் தேய்த்துவிட்டனர் ஏனையவர்கள். சிறிது நேரத்தில் உள்ளே வந்த விலங்குகள் அந்தப் பத்துப் பேரின் கைவிலங்குகளைக் கழற்றி விட்டனர். ஆயினும் அவர்கள் யாரும் மதிய உணவு உண்ணவில்லை. வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

ஒரு சகோதரருக்கு இடது காலிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நடராஜ் அவர்கள் தவழ்ந்து வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் புலி விலங்குகளைப் பார்த்து, “நாசமாய் போவாங்கள், கட்டையில போவாங்கள், பாம்பு கடித்துச் சாவாங்கள், பனையால விழுந்து சாவாங்கள்” என்று தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார். புலி விலங்குகளின் காதுகளில் இந்த வசைச் செய்திகள் விழுந்தும் யாரும் நடராஜ் அவர்களைத் தாக்குவதற்கு உள்ளே வரவில்லை! காரணம் தலைவர் கௌதமனால் முடியாத காரியத்தை தங்களால் எப்படி முடியும் என்ற தன்நம்பிக்கைக் குறைவுதான்.

அன்று இரவு உறங்குவதற்கு முடியவில்லை, தாக்குதலுக்கு உள்ளான சகோதரர்கள் முனகிக் கொண்டே இருந்தனர். வின்ரோஜன் தடவியிருந்தால் வலி குறைவாக இருந்திருக்கும். தண்ணீர் ஊற்றி தேய்த்த இடங்களில் வலி அதிகரித்திருக்கும் என்று தோன்றியது!

அடுத்த இரண்டு நாட்களும் காலையில் வந்து அனைவருக்கும் ஒரு றவுண்டு கட்டையினால் அடித்துவிட்டுச் சென்றனர். எனக்கு முதுகில் மட்டுமே அடித்தார்கள். அன்றைய தினம் விசாரணைக்கென்று யாரையும் வெளியே எடுக்கவில்லை என்றதால்தான் இந்த மாதிரி உள்ளே வந்து அனைவரையும் தாக்கிவிட்டுச் செல்வார்கள். இப்படி அடித்துவிட்டுச் சென்றால் இனிமேல் இன்றைக்கு யாரையும் எடுத்துச் சித்திரவதை செய்யமாட்டார்கள் என்று அனைவரும் நின்மதி அடைவோம்.                                                                                                                                

நடராஜின் கைது புலிகளுக்கும் தமிழரின் விடுதலைக்கும் அவமானம்!

இரண்டாவது நாள் பூசை (அடி) முடிந்ததும், நடராஜ் அவர்களை அழைத்தேன். எனது அறையின் கதவருகில் வந்த அவரை ஓரமாக அமரும்படி கூற அவரும் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்தார். அண்ணே, உங்களை எதற்காக இவர்கள் பிடித்து வந்தார்கள்? என்று ஆரம்பித்தேன் அவரிடத்தில்.

அவர் சொன்னார், தம்பி என்ர ஊர் புங்குடுதீவு, இவர்கள் அங்க ஒரு முகாம் வைத்திருந்தாங்கள், அந்த முகாமுக்கு போனகிழம பொம்பர் (Bomber) வந்து குண்டு போட்டது. பொம்பர் வரேக்க இவங்கட ஒழுங்கேக்கால நான் போய்க் கொண்டு இருந்தனான். பொம்பரைக் கண்டோடன நானும் பக்கத்தில் இருக்கிற முள்ளுக் கம்பிக்கால பூந்து ஒரு பத்தேக்கிள்ள ஒழிச்சன், பொம்பர் குண்டு போட்டிட்டு போனாப் பிறகு வெளியில் வந்து வேலிக்கிள்ளால பூந்து ஒழுங்கேக்க வந்தன்.                                                                                                                                பொம்பர் அடிச்சதால இவங்கட காம்பில இருந்த 2, 3 பேர் செத்துப் போய்ரினம். நானும் வெளியில் நிண்டு பார்த்திட்டு போனநான். அது புலனாய்வுக் காரர்ர காம்பாம்.

பார்த்திட்டு கொஞ்சத் தூரம்வரை ஒழுங்கேக்கால போய்கொண்டு இருக்கேக்க ரெண்டு தடியங்கள் வந்து என்ன இழுத்துக் கொண்டு போய் அவங்கட காம்பில போட்டு அடிச்சாங்கள். ஏன்றா அடிக்கிறீங்கள் என்று கேட்டதற்கு, நீதான் பொம்பர்காரனுக்கு எங்கட காம்பக் காட்டிக் கொடுத்தது என்று சொல்லி சொல்லி அடிச்சாங்கள்.

நான் வேலிக்கால பூந்து போய் பத்தேக்கிள்ள இருந்து காட்டிக் குடுத்தனான் என்று சொன்னாங்கள். அறிவு கெட்ட சனியன்கள்! பத்தேக்கிள்ள இருந்து கையால காட்ட பொம்பர்காரன் அடிச்சான் என்று சொல்லிறாங்கள்! நான் நடக்கிறதே அடிபம்புல தணணியடிக்கிற மாதிரி! இதுக்கிள்ள பொம்பருக்கு எப்படி கைகாட்டுறது! வாக்கி ரோக்கி வச்சிருந்தனானாம்! அதை எறிஞ்சு போட்டன் என்று சொல்லிறாங்கள்! எனக்கு இங்கிலீசும் தெரியாது, சிங்களமும் தெரியாது! பொம்பற ஓடிவாறவன் என்ன தமிழனா நான் தமிழில் கதைக்கிறத்துக்கு. அலுக்கோசு சனியன்களுக்கு அறிவே இல்லை!

தம்பி இந்தக் காலைப் பாரும், என்று கூறி தனது சறத்தை வலது காலின் தொடவரைக்கும் இழுத்துக் காண்பித்தார். உரிக்காத இரண்டு பணங்கிழங்குகளைப் பொருத்திவிட்டது போன்று இருந்தது அவரது கால்கள்.

நடராஜ் அவர்களது வறுமை அவரது முகத்திலும் உடலிலும் அப்பட்டமாக தெரிந்தது. அவரால் தன்னையே பராமரிக்க முடியாத நிலையில் இருந்தார். பல குடும்பங்கள் சந்தேகத்தால் அழிந்துபோன வரலாறுகள் உண்டு. சந்தேகத்தால் சில நாடுகள் மோதிக்கொண்டு அழிந்த வரலாறுகளும் உண்டு! விடுதலைப் புலிகளும் சந்தேகத்தால் பல ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று பின்னர் இவர்களையே உலகநாடுகள் நம்பாமல் கைவிட்ட வரலாறும் எங்கள் கண்முன்னே நடந்தது.

சந்தேகத்துக்கான அடிப்படையே இல்லாத இந்த நடராஜ் அவர்களை இவர்கள் பிடித்து வந்து படுத்திய கொடுமை இந்தப் புலிவிலங்குகள் இயக்கத்துக்கு மட்டுமல்ல, தமிழர் விடுதலைக்கே பெருத்த அவமானமாகும். புலி விலங்குகளது இரக்கமற்ற கொலைகளால் தமிழ் இனம் விடுதலையை இழந்து நிற்கிறது!

நடராஜ் அவர்களைப் பொறுத்தவரை இவர்களது தாக்குதல்களை அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை, “நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்” இவர்கள் அடிக்கேக்க ஏனடா அடிக்கிறாய் எண்டு கேக்கிறனான்” இவங்களால எந்தப்பதிலையும் சொல்ல முடியாது! என்று கூறினார்.

நடராஜ் அவர்களின் மனம் ஏற்கனவே பலதரப்பட்ட வலிகளைத் தாங்கியுள்ளது. அதனால் இந்தப் புலி விலங்குகளின் அடிகள் அவரை வருத்தவில்லை.

தொடர்ந்து கேள்வி கேட்டால் இவர்கள் பதில் சொல்வார்கள் என்று நினைத்துக் கொண்டு நடராஜ் அவர்கள் விடாமல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

நாங்கள் இருந்த வீட்டின் ஹோலின் வாசலில் நடராஜ் அவர்களை இருக்கும்படி பணித்திருந்தனர். அவர் வாசலில் இருக்கும் போது எந்தப் புலி விலங்கு உள்ளே வந்தாலும் முதலில் அவரைத்தான் அடிப்பார்கள். அனைவருக்கும் அடித்து முடித்துவிட்டு வெளியில் செல்லும் போது மீண்டும் அவரை அடித்துவிட்டுத்தான் செல்வார்கள்.

எதற்காக அவரை மட்டும் திரும்பத் திரும்ப அடிக்கின்றனர் என்று பார்த்தால், அவர் ஒருவர்தான் எதிர்த்துக் கேள்வி கேட்பவர், அதிலும் தூசண வார்த்தைகளைப் பேசிக் கேள்வி கேட்பவர். தூசண வார்த்தைகளைப் பேசும் உரிமை புலி விலங்குகளுக்கு உண்டு என்று புலிகள் நினைத்துள்ளனர் போலும். அதனால் நடராஜ் அவர்களின் ஏச்சுகள், அவர்களது உரிமை மீது ஆதிக்கம் செலுத்துவதாகக் கண்டு வரும்போதெல்லாம் அவரைத் தாக்கினர்.

அடித்தாங்க முடியாமல் செய்யாததைக் கூட ஏற்றுக்கொள்வேன் – ஜோன்சன்:

புதிதாக வந்தவர்களில் யோன்சனும் ஒருவர். இவர் ஈ.என்.டி.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணம் சென்மேரீஸ் வீதியைச் சேர்ந்தவர். சிறந்த உதைப்பந்தாட்ட வீரர். இவரை முன்னரே பிடித்து பிறிதொரு முகாமில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் இவரது இருகைகளும் செயலிழந்து இருந்தன. இரண்டு கைவிரல்களையும் மேசை மீது வைத்து அதன் மீது கட்டைகளால் அடித்துள்ளனர். இதனால் விரல்கள் அனைத்திலும் உடைவுகள் ஏற்பட்டு அவற்றினை மடக்க முடியாமலும், பயன்படுத்த முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். காலைக்கடன் கழித்து அதை சுத்தம் செய்ய முடியாமல் அவதிப்பட்டார். அவருடன் செல்பவர்கள்தான் அந்தப்பணியைச் செய்து விட்டனர்.

வுழங்கப்படும் உணவை அவரால் எடுத்து உண்ண முடியாது. எனக்கு சந்தற்பம் கிடைக்கும் போதெல்லாம் உணவைக் குழைத்து அவரது கைகளில் வைப்பேன் அவர் அதனை உண்ணுவார். ஏனைய நேரங்களில் மற்றவர்கள் இப்பணியைச் செய்துவிடுவர்.

என்னிடம் என்னக் கேள்வி கேட்டனரோ அதே கேள்வியைத்தான் இங்கிருக்கும் அனைவரிடத்திலும் கேட்டு விசாரிப்பார்களாம். ஜோன்சனிடமும் இதே கேள்விகள்தான் கேட்கப்பட்டனவென்று அவர் சொன்னார்! ஓங்கொம்மாவை கூட்டிக்குடுத்தியா? கொக்காவைக் கூட்டிக் குடுத்தியா? ஆயுதங்கள் எங்கே வைத்திருக்கிறாய்? அடிதாங்க முடியாமல் அனைத்தையும் ஏற்றுக் கொள்வாராம் ஜோன்சன். அடித்து முடிந்ததும், ஆ, சொல்லு சொல்லு என்று கேட்டார்களாம் புலிகள். என்னத்தைச் சொல்கிறது! ஏதும் இருந்தால்தானே சொல்வதற்கு என்று ஜோன்சன் கேட்பாராம். என்னடா சொல்கிறாய் என்று மீண்டும் அடிப்பார்களாம் விலங்குகள்.

அடியின் வலியால் செய்யாததைக் கூட செய்தேன் என்று சொல்வார்களா, என்று நான் ஆச்சரியப்பட்டேன்! எனக்கும் இந்த நிலை ஏற்படும் என்று நான் அப்போது அறிந்திருக்கவில்லை! ஜோன்சன் சில மாதங்களில் காந்தியின் இறச்சிக்கடைக்கு அனுப்பப்பட்டார். அங்கும் சில மாதங்கள் சித்திரவதையை அனுபவித்த அவர், தன் உறவினரது தொல்லையால் புலி விலங்குகள் அவரை விடுவித்தனர். அவர் இப்போது ஐரோப்பாவில் இருக்கிறார் என்று அறிந்து மகிழ்ந்தேன். ஏனெனில் இறச்சிக் கடைக்குச் சென்ற யாரும் உயிருடன் வெளியில் வந்தது இல்லை என்று பலரும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி வெளியில் வந்தவர்களில் ஜோன்சனும் ஒருவர். ஜோன்சன் அவரது கைவிரல்களுக்கு ஐரோப்பாவில் மருத்துவம் செய்து ஓரளவு குணப்படுத்திக் கொண்டதாகவும் கேள்விப்பட்டேன்.

புலிகளுக்கு படிப்பினை புகட்டும் ஆண்டவரே! - ஜெகோவா பாலன்:

எனது அறையில் ஜெகோவா பாலன் என்றொரு சகோதரர் இருந்தார். இவர் கிளிநொச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர். சுpறந்த சமூக சேவகர். மருத்துவமனைக்கு வரும் நோயாளர் முதல்கொண்டு அவசர உதவிக்கான அனைத்துப் பணிகளையும் தானே முன்நின்று செய்வார்.

எக்காளத் தொனி (Trunpet Sound) என்னும் கிறிஸ்துவ ஆலயத்தின் பகுதி நேர ஊழியருமாவார். கிளிநொச்சி அரசு மருத்துவமனையின் மருந்துப் பிரிவில் பணியாற்றும் ஓடலி இவரது பணியாகும்.

நோய்வாய்ப்பட்டுமருத்துவ மனையில் யாராவது மரணித்தால் மருத்துவமனையின் சட்டநடவடிக்கைகள் உட்பட அனைத்தையும பாலனே முன்நின்று முடித்து அந்த உடல் உறவினரது வீடுபோய்ச் சேரும் வரை இவர் தனது வீட்டுக்குப் போகமாட்டார். இது கடவுளுக்கான பணிவிடை, எனது ஆலயத்தின் வேண்டுதலால் இவற்றை நான் செய்கிறேன் என்றும் விளக்கம் கூறுவார்.

கிளிநொச்சி மருத்துவமனையின் எதிரில் ஈ.என்.டி.எல்.எப். முகாம் இருந்தபடியால் உனக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்று விசாரிக்க வரும்படி அழைத்து பலதரப்பட்ட சித்திரவதைகளைச் சந்தித்து இருபாலை முகாமுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.

தினமும் அவர் முழங்காலில் நின்று வழிபடுவார். இங்கிருக்கும் அனைவருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும், புலிகள் தங்களை அறியாமல் பல தவறுகளைச் செய்கின்றனர். அவர்களையும் நீர் மன்னிக்க வேண்டும், அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் ஆண்டவரே! சின்னகேடியும், திசையும், பாபுவும் அடிக்கும் போது வலி ஏற்படாமல் இருக்க ஆண்டவரே நீர் உதவி செய்வீராக! வலதுகுறைந்த நடராஜ் அவர்களை இவர்கள் மிருகத்தனமாகத் தாக்குகின்றனர், அவருக்கு வலிக்காமல் இருப்பதற்கும் , விடுதலை அடைவதற்கும் நீர்தான் வழி செய்ய வேண்டும் ஆண்டவரே! பல இடங்களில் சித்திரவதை முகாம் வைத்து எங்கட பெடியன்களை கொடுமைப்படுத்துகின்றனர் ஆண்டவரே! இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தும் ஆண்டவரே! புலிகளுக்கு படிப்பினை ஒன்றினை புகட்டும் ஆண்டவரே என்று தினமும் ஜெகோவா பாலன் இறைவனிடத்து தினமும் வேண்டிக்கொள்வார்!

என்னைப் பார்த்து ஒரு நாள் கூறினார், அந்தோணி நீங்கள் இந்த முகாமிலிருந்து விடுதலை அடைவீர்கள், பல கசப்பான அனுபவங்களுடன் உங்களுக்கு விடுதலை கிடைக்கும், ஆனால் நான் இறச்சிக்கடைக்கு போகவேண்டி ஏற்படும். சிலவேளை உயிருடன் திரும்புவேன், சிலசமயம் உயிருடன் திரும்பாமலும் போகலாம், எல்லாம் இறைவனது கைகளில் என்று கூறினார். எப்படி இவ்வளவு திடமாகச் சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எனது உள்ளுணர்வு சொல்கிறது என்றார்.                                                                                                                                பாலனது கால்களில் போடப்பட்டிருந்த சங்கிலியின் பூட்டுக்கள் துருப்பிடித்து இருந்ததால் அவரது கால்களில் உரசி புண் ஏற்பட்டிருந்தது. அந்தப் பூட்டை மாற்றும்படி பலதடவைகள் கேட்டும் அவர்கள் மாற்றவில்லை! இதனால் பாலன் பெரும் அவஸ்தைபட்டு வந்தார்.

அவர் சொல்லியபடி நான்கு மாதங்களில் அவரை இறச்சிக்கடைக்குக் கொண்டு சென்றுவிட்டனர் புலிவிலங்குகள். புறப்படும் போது என்னிடம் வந்து கூறினார், நான் போகிறேன் உயிருடன் திரும்பினால் உங்களை வந்து சந்திப்பேன். செத்துப்போனால் என்னுடைய வீட்டுக்குப் போய் ஆறுதல் சொல்லிவிடுங்கள், ஆண்டவர் அவர்களைக் காப்பாற்றுவார் என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார் பாலன்!

1995 ஆண்டு யாழ்ப்பாண வெளியேற்றத்தின் போது நானும் கிளிநொச்சி சென்றிருந்தேன். வட்டக்கச்சி கட்சன் றோட்டில் இருந்த ஜெப ஆலயத்தின் அருகில் ஜெகோவா பாலனைச் சந்தித்தேன். கட்டித் தழுவிக் கண்கலங்கினார். இறச்சிக் கடையில் இரண்டு வருடங்கள் இருந்ததாகச் சொன்னார் அவர். தான் அவர்களிடத்தில் பட்ட கொடுமைகளை விபரித்தார்.

சாவகச்சேரி இறச்சிக் கடைக்குக் கொண்டு சென்றதும் பாலன் தனிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். முள்ளுக் கம்பிகளால் வேலி போன்று அமைக்கப்பட்டு அதன் நடுவில் இரண்டு நாடகளாக நிறுத்திவைக்கப்பட்டார் பாலன். அந்த முள்ளுக்கம்பிகளுக்குள் நிற்க மட்டுமே முடியும், இருக்கவோ படுக்கவோ முடியாது. இரண்டு நாட்கள் வெய்யிலில் இது போன்று நின்றுள்ளார் பாலன்.

முதல்நாள் தாக்குப்பிடித்த பாலனால் இரண்டாம் நாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முள்ளுக்கம்பியின் மீது சாய்ந்து உறங்கிவிட்டார். இதனால் முள்ளுக்கம்பி கழுத்திலும் வயிறு, மற்றும் நெஞ்சிலும் குத்திக் கிழித்துள்ளது. அதிலிருந்து விடுபட்டப்பின்னர், அவரது கைகளை விலங்குகளினால் இணைத்து அதில் கயிற்றைக் கட்டி அக்கயிற்றை கிணற்றின் கம்பியில் போட்டு மூன்று பேர் சேர்ந்து இழுத்து கிணறறிலுள்ளே இறக்கியுள்ளனர்.

கிணற்றினுள் இருந்த தண்ணீரிலிருந்து சுமார் மூன்று அடிக்கு மேலாக இவரைத் தொங்கவிட்டள்ளனர். நான்கு மணி நேரத்துக்குப் பின்னர் வந்த விலங்குகள், சொல்லு எங்கே ஆயுதங்களை வைத்துள்ளாய்? என்று கேட்டுள்ளனர். இவரால் வாய்திறந்து பதில் சொல்ல முடியாத மயக்க நிலையை அடைந்தபடியால் கயிற்றை இழுத்து மேலே கொண்டுவந்தனர். இரண்டு நாட்கள் காலிலும் கைகளிலும் விலங்குடன் விடப்பட்ட இவரை மீண்டும் விசாரணைக்காக அழைத்து தென்னம்மட்டை, ஒஸ்லோன் பைப் போன்றவற்றால் முதுகில் அடித்தனர் என்று கூறிய பாலன் தனது சேட்டைக் கழற்றி முதுகைக் காண்பித்தார். அவரது முதுகில் காயங்கள் ஏற்பட்டு அவை ரணமாகிய தழும்புகள் தடித்துத் தடித்திருந்தன. நீளம் நீளமாக முப்பதுக்கும் மேற்பட்ட தழும்புகள் புடைத்துக்கொண்டு நின்றன.

பாலன் மேலும் சொன்னார், இறச்சிக்கடையில் நான்பட்ட கொடுமைகளை விட ஏனைய சகோதரர்கள் மிகவும் பயங்கரமான கொடுமைகளைச் சந்தித்துள்ளனர். தினமும் அந்த முகாமில் இரண்டுபேரையாவது கொலை செய்வார்கள். சகோதரர்கள் படும் துயரம் சொற்களால் விபரிக்க முடியாதவை. அந்த முகாமுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இளைஞர்களைக் கொண்டு வருவார்கள். அம்பாறை முதற்கொண்டு காங்கேசன்துறை வரை உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அங்கு இருந்தனர். கால்கள் உடைக்கப்பட்டு, கைகள் உடைக்கப்பட்டு, முகங்கள் உடைக்கப்பட்டு நாளடைவில் அனைவரையும் கொன்றுகொண்டே இருந்தனர்.

யாழ்ப்பாண வெளியேற்றத்தின் போது அந்த இறச்சிக்கடையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் கொலை செய்து அங்கேயே புதைத்துவிட்டத்தான் இவர்கள் வன்னிக்கு ஓடிவந்ததாகக் கேள்விப்பட்டேன். அப்படி இவர்கள் அந்த இளைஞர்களைக் கொலை செய்திருந்தால் அப்பழி இவர்களைச் சும்மாவிடாது. ஆண்டவன் தண்டிக்கத் தாமதம் ஆனாலும் இவர்களை ஒருநாள் இயற்கை தண்டிக்கும் என்று கூறிய பாலன்,  நாங்கள் இப்படிச் சந்தித்துக் கதைத்தநாங்கள் என்று யாராவது வெட்டிகள் போட்டால் திரும்பவும் கொண்டுபோய் சித்திரவதை செய்வார்கள். இன்னொரு நாளைக்குச் சந்திப்பம் தம்பி என்று கூறிச் சென்றார். இந்தியா  சேரும்வரை அவரை என்னால் சந்திக்க இயலவில்லை!

தொடரும்

கீழே உள்ள படத்தில் உள்ளவர் இந்த முகாம் பொறுப்பாளர் கௌதமன்
logoblog

Thanks for reading பகுதி8 விடுதலைப்புலிகள் சித்திரவதை கூடமும் தப்பியவர் அனுபவம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment