பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 3 August 2023

பகுதி 2 விடுதலைப் புலிகளின் சித்திரவதை கூடமும் தப்பியவர் அனுபவமோ

  வெற்றிசெல்வன்       Thursday, 3 August 2023
1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்……
நடந்த வன்கொடுமைகள்!
அந்தோணி
பகுதி 2

நான் சைக்கிளை பூவரசமரத்தடியில் நிறுத்திவிட்டு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டேன். இருட்டுவதற்கு ஆரம்பித்தது. அந்த நேரத்தில் மூன்று வான்கள் வந்தன. அவற்றிலிருந்து பல அண்ணன்மார்களை கண்களையும், கைகளையும் கட்டியபடி இறக்கினார்கள். அவர்கள் அனைவரும் ரெலோ இயக்க அண்ணன்மார்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அதே வான்கள் மீண்டும் திரும்பிச் சென்று 20 நிமிடங்களில் இன்னும் அதுபோல் அண்ணன்மார்களை அழைத்து வந்தனர்.

லொறியில் எடுத்துவந்த கட்டைகளை வரிசையா ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கினார்கள். க கண்கள் கட்டப்பட்டிருந்த அண்ணன்மார்களை இழுத்து வந்து வரிசையாகப் படுக்க வைத்தார்கள். இப்படி நாப்பது முதல் ஐம்பது பேர்வரையிலான அண்ணன்மார்களைப் படுக்க வைத்தார்கள். சில பேருக்கு துப்பாக்கியால் முதுகில் குத்தி தள்ளிச் சென்று படுக்க வைத்தார்கள். பின்னர் அவர்கள் மேல் சில மூடைகளையும் அடுக்கினார்கள். அவை என்ன மூடைகள் என்று தெரியவில்லை. அதன் பின்னர் அந்த மூடைகளின் மேல் ரயர்களை அடுக்கினார்கள். அதனைத் தொடர்ந்து பல கான்களில் எதையோ ஊற்றினார்கள். அது மண்ணெண்னையாக இருக்க வேண்டும் அல்லது பெற்றோலாக இருக்க வேண்டும் ஏனெனில் இவர்கள் ஊற்றும் போது அந்த அண்ணன்மார்களது கால்கள் துடித்தன. வெளியே தெரிந்த கால்களில் கட்டைகளைக் கொண்டு தாக்கினார்கள் புலிகள்.

திடீரென நெருப்புச் சுவாலை அவர்கள் மீது படர்ந்தது. அவர்கள் அலறும் சத்தம் மரத்தில் இருந்த என்னை உதறிக் கீழே தள்ளுவது போன்று இருந்தது. சுற்றி நின்ற புலி அண்ணாக்கள் எல்லாரும் தள்ளி ஓடினார்கள். சிறிது நேரத்தில் அவர்களது அலறும் சத்தம் நின்றுவிட்டது. மேலும் அரைமணி நேரமளவில் புலி அண்ணாக்கள் அங்கு நின்றனர். பின்னர் அவர்கள் வாகனங்களில் ஏறி கல்வியங்காடு நோக்கிச் சென்றனர். எனக்கும் பயமாக இருந்தது. மரத்திலிருந்து இறங்கி சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி வந்துவிட்டேன் என்று கூறி முடித்தான்.

எனது நண்பன் விஜித்தரன் கூறி முடித்ததும், ரெலோ சகோதரர்கள் மீது செம்மனியில் அடுக்கிவைக்கப்பட்ட மூடைகள் எதுவாக இருக்கும்? எனது அறிவுக்கு எட்டியவரை சிந்தித்துப் பார்த்தேன், விடை தெரியாமல் இருந்தது. இந்தக் கொடியவர்களது கூடாரத்துக்குள் வந்த பின்னர்தான் அறிந்தேன். அன்று எனது நண்பன் கூறிய அடுக்கி வைக்கப்பட்ட மூடைகள் அனைத்தும் சீனி மூடைகள் என்று. மனிதர்கள் உடல் மீது சீனியைக் கொட்டி எரியூட்டினால் உடலில் ஒரு பாகம் கூட மிஞ்சாது எரிந்து விடும். மனிதர்களை அழிக்க வேர்கள் ஆரம்ப காலங்களிலேயே வித்தைகளைக் கற்று வைத்திருந்தனர்.

எனக்கு அந்த வயதில் பெரிய அளவு பகுத்தறிந்து பார்க்க, நன்மை தீமைகளை விபரிக்க இயலாது இருந்தது. பின்னாளில் இவர்களது படுகொலைகளது செயல் முறையைப் பார்க்கும் போது இவர்கள் மனிதர்கள் அல்ல! அரக்கர்கள்! மனித நேயம் அற்ற படுபாவிகள். உலகில் வாழத் தகுதியற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் யாழ்ப்பாணத்தை சைக்கிளில் சுற்றிப்பார்த்த இடங்கள் கோண்டாவில், திருநெல்வேலி, அராலி, கல்வியங்காடு, மானிப்பாய்“விமாகி”, கட்டப்பிராய், கச்சேரி அடி, அரியாலை இத்தனை இடங்களையும் ஏதோ ஓர் உந்துததால் சென்று பார்த்தேன். இதோ இங்கு வைத்துத்தான் சுட்டார்கள், இங்கு வைத்துத்தான் ரயரில் போட்டு எரித்தார்கள் என்று எனது வயதை ஒத்த பெடியங்கள் காண்பித்துச் சொன்னார்கள். பல இடங்களிலும் இரத்தக் கறை படிந்த சதைகள் தொங்கிக் கொண்டிருந்ததையும் பார்த்தேன்.

ஓ! இதுதான் விடுதலைப் போராட்டமோ? சிங்கள இராணுவத்துக்கு எதிராகப் போராடப் போகிறோம் என்ற எனது வீட்டுக்கு அருகில் இருந்த அண்ணாக்கள் எல்லோரும் இயக்கங்களுக்குச் சென்றார்கள். நாடு கிடைத்துவிட்டது போலும், இப்போது பதவிக்காக ஆக்களை ஆக்கள் சுட்டுச் சண்டைபிடிக்கினம் போல என்று அந்த வயதில் நான் நினைத்துக் கொண்டேன்.

வான்மீன் தனது கேள்விகளைத் தொடர்ந்தார், கேள்விகளில் எந்தவித மாற்றமும் இல்லை. கொலை, கொள்ளை கற்பழிப்பு இதே கேள்விகள்தான். இறுதியில் ஆயுதங்களை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்று கேட்டார்? எனக்கு எதைப்பற்றித் தெரியும் இவர்ளிடத்து சொல்வதற்கு? தெரியாது என்றேன். வான்மீன் என்ற புலிக்கு கோபம் வருவதற்கு முன்னர், அருகில் அடியாட்கள் போல் நின்ற இரு புலிகளுக்கும் கடுங் கோபம் வந்திருக்கும் போல, காலால் உதைத்தனர், முகத்திலும் முதுகிலும். எனது கண்கள் கட்டப்பட்டிருந்ததால் அவர்களைத் தெரியவில்லை. ஆயினும் அவர்கள் கட்டிய துணியின் அடிப்பகுதியால் இவர்கள் இருவரது கால்களையும் அவர்களது முழங்காலுக்குக் கீழ் பார்க்கக் கூடியதாக இருந்தது.

“எழும்படா” என்று கத்தினார் வான்மீன். கால்களில் சங்கிலி போட்டு வெல்டிங் பண்ணியிருந்ததால் உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை. இரண்டு கால்களையும் ஒன்றாக மடித்து முழங்காலை நிலத்தில் பதித்து கைகளை முன்புறமாக நிலத்தில் ஊன்றி எழுந்தேன். எழுந்து நிற்பதற்கு தாமதம் ஆவதைக் கண்ட அருகில் நின்றிருந்த “திசை” என்ற புலி மீண்டும் எனது பின்பகுதியில் உதைத்தார். நான் முகம் மேசைக் காலில் அடிபட நிலத்தில் விழுந்தேன். மீண்டும் முயற்சித்து எழுந்தேன்.

ஒரு கைவிலங்கை எனது இரு கைகளிலும் பூட்டினர். இரண்டு கைகளின் ஊடாக பெரிய மரக்கட்டை ஒன்றை நுழைத்தனர். அதன் ஒரு பகுதியை அந்தக் கொட்டகையின் வளையில் வைத்தனர். மறு முனையை கயிற்றினால் அருகில் நடப்பட்டிருந்த மரத்தின் மீது கயிற்றைப் போட்டு கீழே இழுக்க நான் கைவிலங்கில் தொங்கினேன். எனது கால் பெருவிரல் மட்டும் மண்ணில் தொட்டுக்கொண்டு இருந்தது. இரு கைகளும் வலியால் மரத்துப் போயின. என்னை அறியாமலேயே கண்களால் கண்ணீர் வடிந்தது.

அந்த வலியில் துடிக்கும் போது “மஞ்சு” என்ற புலியும், ‘திசை” என்ற புலியும் தடிகளால் அடித்தார்கள். பின்னர் வான்மீன் ஓர் தடித்த கட்டை ஒன்றினால் அடிக்க ஆரம்பித்தார். இவர்கள் அடித்த அடியினால் ஏற்பட்ட வலியை விட கைகளில் பூட்டப்பட்டிருந்த விலங்கினால் ஏற்பட்ட வேதனைதான் அதிகமாக இருந்தது. இதே போன்று என்னுடன் அழைத்து வரப்பட்ட ஏனையோருக்கும் இதே கொடுஞ்செயலைத்தான் செய்தனர் இந்தப் புலிகள்.

நேரம் செல்லச் செல்ல அலறல் சத்தம் அதிகரித்தது. இந்த விசாரணை புலிகள் ஒருவரை மிஞ்சி ஒருவர் சித்திரவதை செய்வதில் வல்லூநர்களாக இருநதனர். இவர்கள் இப்போது களைப்படைந்து விட்டனர். எங்களை அப்படியே கைவிலங்களில் தொங்க விட்டுவிட்டு அவர்கள் தேனீர் அருந்தச் சென்று விட்டனர். கட்டப்பட்டிருந்த கண்ணுக்கான துணி இன்னும் மேலே சென்றது.

யாரும் அருகில் இல்லை. அந்த வலியுடன் சுற்றும் முற்றும் பார்த்தேன். என்னைத் தொங்கவிடப்பட்டிருந்த கொட்டகைக்கு வெளியே பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டிருந்தன. சில குழிகளினுள் ஏணிகள் இறக்கப்பட்டிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கு மேற்பட்ட குழிகள் தென்பட்டன.

புலிகள் அந்தக் குழியில் இருப்பவர்களுக்கு எதையோ வாளிகளில் போட்டு கயிறு மூலம் உள்ளே இறக்குகிறார்கள். பின் வாளியை எடுத்துக்கொண்டு அடுத்த குழிகளுக்குச் செல்கிறார்கள். எனது வலியை விட இது பெரும் ஆச்சரியமாக இருந்தது. அந்தக் குழிகளுக்குள் யாரோ எம்மவர்தான் இருக்க வேண்டும். இது என்ன கொடுமை. குழிகள் வெட்டி மனிதர்களை உள்ளே இறக்கி வதை செய்கின்றனரா?

இப்போதுதான் கிற்லரின் ஆட்சியில் நடந்தவை என்று சினிமாக்களில் வரும் காட்சிகளை நான் கண்டேன். மூன்றடி நீளம் அல்லது 2.5 (இரண்டரை) அடி அகலம் கொண்டதும், ஏழு அடி நீளம் 12 அடி ஆழம் கொண்டதுமான ஓர் குழியிலிருந்த நன்கு மெலிந்த ஓர் இளைஞன் எம்மைப் போன்றே வெறும் மேலுடனும் நீல நிற அழுக்கேறிய கால்சட்டையுடனும் ஏணிவழியாக வெளியே வந்தார். அவரை மூன்று புலிகள் சூழ்ந்து கொண்டு அழைத்துவந்தனர், என்னை வைத்திருக்கும் கொட்டகைக்கு அருகிலிருந்த சிறிய கொட்டகை ஒன்றுக்கு. அவர் தனது அடையாளத்தை இழந்திருந்தார். சரியாக அடையாளம் தெரியவில்லை.

இந்த நிலையில் தேனீர் அருந்தச் சென்ற புலிகள் மீண்டும் வந்தனர். மறுபடியும் விசாரணை. அதே கேள்விகள் தான்! அவர்களுக்கு எதைப் பற்றி விசாரிப்பது என்று தெரியாது, ஏனைய தமிழ் இளைஞர்களை அழிக்க வேண்டும், எதைச் சொல்லி அழிப்பது? கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவைகளை இவர்கள் சுலபமாகச் சொல்லலாம். நீங்கள் கேட்பதும், சொல்வதும் தவறு என்று எதிர்த்தச் சொல்ல, எதிர்த்துக் கேட்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. அப்படிக் கேட்டால் அவரும் கொல்லப்படுவார். இந்த விசாரணை அதிகாரிகள் யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது என்பதை அங்கிருந்த நாட்களில் தெரிந்து கொண்டேன். 17, 18 வயதுடையவர்களும் விசாரணை அதிகாரியாக இருந்ததைப் பார்த்தேன். இவர்களால் மனிதனின் உரிமைகள் மிதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

விசாரணையில் நான் மீண்டும் மீண்டும் தெரியாது, இல்லை என்ற வார்த்தைகளையே பதிலாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்களுக்கும் ஆத்திரம் கபாலத்தை பிளந்தது. நாங்கள் கேட்கிறோம், “சொல்கிறான் இல்லை” என்று கூறி முதுகுப் பக்கங்களில் தாக்கினர். ஏனைய இளைஞர்கள் தாக்கப்படும் போது எழுப்பும் அவலக் குரலான “அம்மா”, “ஐயோ” என்ற அவலக்குரலை நானும் எழுப்பினேன்.

இந்தக் கொடிய வலியினைத் தாங்கிக் கொள்ள இறைவனால் வழங்கப்பட்ட வார்த்தைகள்தான் “அம்மா”, “ஐயோ” என்றிருந்த இரு வார்த்தைகளும். துணுக்காய் புலிகளின் சிறையில் தினமும் இந்த வலிதாங்கும் அவலச் சொற்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. சாவுக்கு முன்னால் இந்த வலி அனைவருக்கும் ஏற்படும் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

எனது கைகளில் போடப்பட்ட விலங்கு இரு கைகளையும் பிடுங்குவது போன்று வலித்தது. அடியில் வேதனை ஒரு பக்கம் விலங்கில் தொங்கும் வலி வேறொருபக்கம். எனது கால் பெருவிரல் மட்டுமே நிலத்தில் தொட்டுக்கொண்டு இருந்தது. அவர்களில் ஒரு புலி எனது இடுப்பை தனது இரண்டு கைகளாலும் பிடித்து சுழற்றினார். எனது உடல் முறுக்கப்பட்டது. கைகள் முறுகி உடைந்துவிடும் போல் தோன்றியது. வலியினால் நான் ஓலமிடுவதை அவர்கள் ரசித்தனர். முடிந்தவரை என்னை முறுக்கிப் பிழிந்து முடியாது போனதும் விட்டுவிட்னர்.

இப்படி நான் தொங்கவிடப்பட்டு சுமார் மூன்று மணி நேரமாகிவிட்டது. காலை உணவும் இல்லை. உடல் பலவீனமடைந்ததால் நான் மயக்கமடையும் நிலையை அடைந்தேன். எனது கைகள் இரண்டும் எனது உடலை விட்டு பிரிந்து சென்று விட்டன போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அப்போது வான்மீன் சொன்னார், “டே இவன் மயங்கிற்றா நாங்கள் கஸ்ரப்பட்டுத்தான் இறக்க வேண்டி வரும், இப்பவே இறக்குங்க” என்றார். அவரது உத்தரவைத் தொடர்ந்து மறுமுனை கயிற்றைத் தளர்த்தி எனது கைவிலங்கினூடாக இடப்பட்டிருந்த அந்த மரத்தடியை கீழே இறக்கினர். எனது கைகள் செயலிழந்து இருந்தன. கையை கீழே கொண்டு வர முடியவில்லை. அப்படியே சரிந்து விழுந்தேன்.                                                                                                                                 பிற்பகல் நான்குமணிவரை மயக்கநிலையிலேயே இருந்தேன். கண்விழித்ததும், இரண்டு புலிகள் அருகில் நின்று “எழும்படா” என்றனர். கைகளை இயக்கமுடியவில்லை, முழங்கை வரை விறைத்துச் செயலிழந்து இருந்தன. எழுந்து நின்றேன். வாடா என அழைத்தனர், கால் சங்கிலியுடன் நடந்தேன். அவர்கள் அடித்த இடங்கள் அனைத்தும் கண்டலடைந்து வீங்கிப் போய் இருந்தது.

என்னை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த இன்னொரு திறந்த குடிலுக்கு வந்தனர். அங்கும் ஆறு முதல் ஏழு பேர்வரை இருந்தனர். கை கால்களில் சங்கிலியும் விலங்குகளும் இடப்பட்டிருந்தன. சற்றுத்தள்ளி, முன்னர் நான் பார்த்த கிடங்கில் இருந்து அழைத்துவரப்பட்டவர் இருந்தார். அருகில் பார்க்கும் போது இந்த விலங்குகளின் கொடுமை அவரது உடலில் தெரிந்தது. ஆங்காங்கே புண்கள் வந்து பாதி காய்ந்த நிலையில் இருந்தன. முகத்திலும் காய்ந்த வடுக்கள் இருந்தன. இவ்வளவு விழுப் புண்களுடன் இவர் எப்படி உயிர் வாழ்கிறார் என்று வியந்தேன்.

என்னை ஏனைய இளைஞர்களுடன் இருக்கும்படி கூட்டிவந்த புலிகள் கூறினர். நானும் அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் அங்கத்தினர்கள் இருந்தனர். கூட்டி வந்த புலிகள் தள்ளிச் சென்றனர். சுற்றுப்புறத்தைப் பார்த்துவிட்டு அருகில் இருந்தவர்களிடம் மெதுவாகக் கதைத்தேன், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞரைக் காட்டி அவர் யார் என்று கேட்டேன்? 

அவர்தான் ஈ.பி.ஆர்.எல்.எப். யாழ்மாவட்டப் பொறுப்பாளர் தோழர். முகுந்தன் என்றார். அவர் பட்டிருக்கும் சித்திரவதையை ஒப்பிடும் போது நாம் பட்டவை சாதாரணமாகத்தான் தெரிந்தது எனக்கு. அவரிடமும் ஏதோ விசாரித்துவிட்டு தனியாக அமரவைத்தனர்.

ஏறக்குறைய இரண்டுமணி நேரம் கழித்து மீண்டும் ஒரு பெரிய பேப்பர் கட்டுடன் வந்தனர் வான்மீனும் ஏனைய இரு புலிகளும். எனது பெயர். உறவினர் பெயர் விவரங்கள், நண்பர்களது பெயர் விபரங்கள் போன்றவற்றை எழுதிப் பதிவு செய்து கொண்டனர். இரவு ஏழுமணியளவில் எனது பழைய இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணை என்று எதுவும் இல்லை! வெறும் அடியும் சித்திரவதையும்தான் விசாரணை என்ற பெயரில் நடக்கிறது. விசாரணை நடத்துவதற்கான எந்தவிதத் தகுதியும் இல்லாத வெறும் விடலைக் கொலைகாரர்கள்தான் துப்பாக்கிகளுடன் அதிகாரிகளாக உருமாறியிருந்தனர்.

முக்கிய இருப்பிடமான கோடுகளால் வரையப்பட்ட அந்த சதுரத்துக்குள் நான் அமர்ந்தேன். எனக்கு அருகில் றொலக்ஸ் முதலாளி தனது சதுரக் கோட்டுக்குள் நிமிர்ந்து விறைப்பு ஏற்பட்டவர் போல் சப்பணி போட்டு அமர்ந்திருந்தார்.

எனது கால்களை மடித்துக்கொண்டு இருக்க முடியவில்லை. பின்பகுதியிலும் பலமாக அடித்ததால் என்னால் சரியாக அமர முடியவில்லை. வலியினால் சற்றுச் சரிந்தேன். காவலுக்கு நின்ற புலி ஒன்று நேராக என்னை நோக்கி வந்து தனது காலால் எனது விலாப்பகுதியில் உதைத்தார். “எழும்படா” “சரியா அந்தப் பெட்டிக்குள் இருக்கவேனும்” என்றார். மதியம் அடித்த அடிகளால் விலாபகுதியில் கண்டல் ஏற்பட்டிருந்தது. இவர் உதைத்ததும் சதை பிய்ந்து போவது போன்று இருந்தது. கைவிலங்கை அகற்றினால் என்னால் சரியாக இருக்க முடியும் என்றேன். “அது வேறையா” என்று இன்னும் ஓர் உதை விட்டார் நெஞ்சினில். எனது வாயை சற்று அமைதியாக வைத்திருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.

பகலிலும் சாப்பிடவில்லை. எனக்கு என்று உணவு எடுத்துவைத்திருந்தார் மூன்றாவது கோடுபோட்ட கட்டத்துக்குள் இருந்தவர். அந்த உணவுத் தட்டை என்னருகில் தள்ளிவிட்டார் அவர். ஆனால் எனது கைகளால் அந்தத் தட்டை எடுக்க முடியவில்லை. கையும் விரல்களும் விறைத்துப் போய் இருந்தன. நான் விரல்களை முன்னும் பின்னுமாக அசைத்தேன், வலிதான் ஏற்பட்டது. அந்த நேரம் இன்னும் ஓர் புலி வந்தது. உணவுத் தட்டையும் என்னையும் பார்த்துவிட்டு கைவிலங்கை கழற்றிவிடும்படி இன்னுமோர் புலிக்குச் சொன்னார். அவரும் வந்து கழற்றிவிட்டு விலங்கை எடுத்துச் சென்றார். தட்டில் இருந்த உணவை கைகளில் கொட்டும்படி கூறி அப்படியே உண்டேன். தண்ணீர் குடித்ததும் என்னை அறியாமலேயே சரிந்து விழுந்து உறங்கிவிட்டேன்.

மறுநாள் காலை எழுந்திருக்க முடியவில்லை. கண்விளித்த போது “ஏன்தான் உலகம் விடிகிறதோ” கடந்த இரவு உறக்கத்தில் இருந்திருந்தால் நல்லது போல் தோன்றியது அன்று. என்னால் எழுந்திருக்க முடியாது என்பதை அங்கே இருக்கும் மருத்துவம் பார்ப்பவர் புரிந்து கொண்டார் போலும், நான் கேட்காமலேயே அவர் “மூவ்” ஓயின்மென்ரைக் கொண்டு வந்தார். அவருக்கும் கால்களில் சங்கிலி விலங்கிட்டு வெல்டிங் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை தூக்கி அமர வைத்து அந்த கழிம்பை எனது உடலில் தேய்த்துவிட்டார்.

அவரது பெயரை மறந்து விட்டேன். அவர் யாழ்ப்பாணம் பொது மருத்துவ மனையில் பணியாற்றியுள்ளார். மருந்துகள்பற்றி அவருக்கு ஓரளவு தெரியும். இவர் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களுக்கு உதவிகள் செய்துள்ளார். அதனால் இவரை அடிமையாக்கி விலங்கிட்டு இங்கு வைத்துள்ளனர். அவரும் பல கண்டங்களைத் தாண்டி உயிருடன் இருப்பதாகக் கூறினார்.

காலைக் கடன் கழிக்க நான்  கழிவிடம் செல்லவில்லை. ஏனையோர் தங்கள் கடன்களை கழித்து மீண்டும் வந்து அமர்ந்தனர். புலிகள் வந்தனர், வழக்கம் போல் பட்டியலில் உள்ள இலக்கங்களைப் படித்தனர். 10பேர் வரை எழுந்து சென்றனர். ஏனையோர் அவர்களது முகங்களை அனுதாபத்தோடு பார்த்தனர். அப்படி எழுந்து சென்றவர்களில் றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளரும் இருந்தார். இலக்கத்தை அழைத்த புலியின் அருகில் சென்றதும் அந்தப் புலி எப்படியிருக்கிறாய் குகன்? என்று முதுகில் தட்டினார். றொலெக்ஸ் ஹொட்டலின் உரிமையாளின் பெயர் குகன் என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

கால்விலங்குடன் 10பேரும் வரிசையாக நடந்து ஏற்கனவே என்னைச் சித்திரவதை செய்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திலெல்லாம் மரண ஓலம் கேட்க ஆரம்பித்தது. இந்த ஓலங்களைக் கேட்டு அங்கிருந்தவர்களுக்குப் பழகிவிட்டது போலும், மரணத்தை நோக்கி இருப்பவர்களுக்கு இவை எல்லாம் வலியாகத் தோன்றவில்லைப் போலும்.

சுமார் 10மணியளவில் மூன்று பேர் எங்கள் பகுதிக்கு வந்தனர். உள்ளே வந்த ஒருவர் அமர்ந்திருக்கும் ஒரு இளைஞரை சைகையினால அழைத்தார். இவர் எழுந்து புலியின் அருகில் சென்றார். இன்னும் அருகில் வரும்படி கூறினார். அருகில் சென்றதும் அந்தப் புலி தனது வலது உள்ளங்கையினால் அந்த இளைஞரது மூக்கில் குத்தினார். இரத்தம் சீறிட்டுப் பாய்ந்தது, “போய் இரடா இடத்தில்” என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

எந்தவிதத் தொடர்பும், சம்பந்தமும் இல்லாமல் ஒருவர் வந்து இளைஞர் ஒருவரின் மூக்கை உடைத்துவிட்டுச் செல்கிறார். யார் இவர்? ஏன் இப்படிச் செய்துவிட்டுச் செல்கிறார்? என்பதை அறிய ஆவலாக இருந்தது. எனது சதுரக் கோட்டுக்கு இடது புறமாக 55, 60 வயது மதிக்கத் தக்க ஒருவர் இருந்தார். இவரை எதற்காக அழைத்துவந்துள்ளனர் என்று அவரிடமும் கேட்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகவே இருந்தது எனக்கு.

முதலில் மூக்குடைக்கும் நபரை அறிவோம் என்ற எண்ணத்தில் அவரிடம், “ஐயா உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன். “ அப்பையா” என்றார். அப்பையா அண்ண, இப்பவந்து ஒரு சகோதரனது மூக்கை உடைத்துவிட்டுப் போகிறாரே அவர் பெயர் என்ன என்று கேட்டேன்.                                                                                                                                 தன்னைச் சுற்றி நோட்டம் விட்டார் அப்பையா அண்ணன். தலையைக் குனிந்து கொண்டு சொன்னார், இவன் தான் கேடி. இவன் மகா கொடியவன், கொடோனுக்குள் வந்தால் இரத்தம் காணாமல் செல்ல மாட்டான். இன்றைக்கு மட்டும் தான் ஒரு தம்பியின் மூக்கை உடைத்துவிட்டுச் சென்றுள்ளான். கடந்த ஒரு கிழமையாக இவனைக் காணவில்லை, இன்றைக்குத்தான் வந்துள்ளான். ஒவ்வொரு நாளும் வருவான் தனது கண்ணில் யார் படுகின்றனரோ அவரை அழைப்பான் அருகில் சென்றதும் உள்ளங்கையின் அடிப்பகுதியால் மூக்கில் குத்துவான். மூக்கு உடைந்து இரத்தம் வந்தால்தான் விடுவான். தப்பிதவறி யாராவது கைகளால் தடுத்தாலோ, தலையை பக்கவாட்டில் சாய்த்தாலோ அவனுக்குக் கோபம் வந்துவிடும். தலை மயிரைப் பிடித்துக்கொண்டு வலது கையை மூடி நேராக மூக்கில் குத்துவான். இரத்தம் கண்டபின் மீண்டும் தலை முடியைப் பிடித்து முன்புறமாக இழுத்து தனது முழங்கையால் முதுகில் குத்துவான். புதிதாக வந்தவர்களைத் தவிர ஏனைய அனைவரும் இவனால் மூக்கு உடைக்கப்பட்டவர்கள்தான். எனது மூக்கையும் இரண்டுதடவை உடைத்துள்ளான். தம்பி உம்முடைய மூக்கையும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் என்று எனக்கு ஆலோசனை வழங்கினார்.

இப்போ விசாரணைப் பகுதியில் அலறும் சத்தம் அதிகரித்துக் கொண்டிருந்தது, கேடியும் அப்பகுதிக்குச் சென்று அந்த இளைஞர்களைத் தாக்கிக் கொண்டிருந்தார். எங்கள் பகுதி காவல் புலிகளும் எதையோ சாப்பிட்டுக்கொண்டு விசாரணைப் பகுதியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். நான் அப்பையா அண்ணனிடம், அண்ண, உங்களை எதற்காகப் பிடித்து வந்தவையள்? என்று கேட்டேன்.

தம்பி, என்னுடைய மகளை வரதராஜப் பெருமாளின் தம்பி மூர்த்தி திருமணம் செய்துள்ளார். அவரைத் தேடிவந்த இந்தப் புலிகள் என்னை இழுத்துவந்து கொடுமைப்படுத்துகிறார்கள். உன்னை அடித்தது போன்று என்னையும் கொடுமைப்படுத்தினார்கள். பலதடவை என்னை, இப்படிச் சித்திரவதை செய்யாமல் கொன்று விடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறேன். கொல்கிறார்கள் இல்லை! என்று அழுவதற்கு ஆரம்பித்தார். நானும் அதற்கு மேல் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டேன்.                                                                                                                                நான் விறைத்துப்போன எனது கைவிரல்களை முன்னும் பின்னும் ஆட்டி பயிற்சி செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து கொண்டிருந்தேன். எனது பகுதிக்கு ஏறக்குறைய அறுநூறு பேருக்கும் மேல் இருந்தனர் விலங்குகள் இடப்பட்டு. மதிய நேரம் வெய்யில் அதிகமாகும் போது மனித வியர்வையும் அதிகரிக்கும். அந்தக் கோடவுண் முழுவதும் வியர்வை நாற்றம் ஏற்பட்டுவிடும், வெறும் உடலில் சட்டை எதுவும் யாருக்கும் கிடையாது. பலர் வெறும் சரத்துடனும், சிலர் வெறும் கால்சட்டையுடனும்தான் இருந்தனர். புலிகள் வரைந்த கோடுகளுக்கு நடுவில் அனைவரும் வரிசையாக அமர்ந்திருப்பதை எழுந்து நின்று பார்த்தால் ஆங்கிலேயர் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்களை அடிமைகளாக்கி விற்பனைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படும் திரைப்படக் காட்சிகள் நினைவுக்கு வரும்.

பிற்பகலில் உணவு வந்தது. சோறு, அதனுடன் சோயா பீன்சும் பருப்பும் கலந்த சாம்பாருக்கும் சொதிக்கும் இடைப்பட்ட ஓர் திரவமாக இருந்தது. நான் வீட்டினில் மூன்று பிளேற் சோறு சாப்பிடுவேன். இப்படி அதிகமாகச் சாப்பிடாதேயடா என்று அம்மா கூட அடிக்கடி சொல்வா, இவர்கள் கொடுத்தது பாதிப் பிளேற் அளவு சோறுதான். பிளேற்றைப் பார்த்ததும் இதயம் கனத்தது. இந்தச் சோற்றைச் சாப்பிட்டு எனது பசி எப்படி அடங்கப் போகிறது என்று பெரும் கவலையாக இருந்தது. வேறு வழி கிடையாது. வலித்துக் கொண்டிருந்த கைகளைப் பயன்படுத்தி சோற்றைக் குழைக்காமல் அள்ளி வாயில் போட்டு உண்டேன். சாப்பிட்டு முடிந்ததும் எல்லாரும் பெட்டிகளுக்குள் சரியாக அமரும்படி புலிக்காவலாளி ஒரு உரத்த குரலில் கத்தினார். அவரது உத்தரவுபடி நாங்கள் நிமிர்ந்து கோடுகளில் நடுவில் அமர்ந்தோம்.

மாலை ஆறுமணியளவில் விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்ட சகோதரர்களை அழைத்து வந்தனர் புலி விலங்குகள். நடக்க முடியாமல் நொண்டிக்கொண்டும், சரிந்த நிலையிலும், சிலர் கால் சங்கிலி தடக்கி விழுந்து எழுந்தும் எமது மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர். எனக்கு அருகில் வந்து நின்றார் றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் குகன்.

அவரால் நிலத்தில் அமர முடியவில்லை. அமருவதற்கு முற்பட்டவர் விழுந்து போவேனோ என்று பயந்தார். நான் சற்று அருகாமையில் நகர்ந்து எனது தோளில் கைகளை ஊன்றிக் கொண்டு அமரும்படி கூறினேன். அவரும் எனது தோளில் கையை வைத்தார். அவருக்கும் கைவிலங்கிட்டு அடித்திருப்பார்கள் போலும், ஐயோ, அம்மா என்று அலறிக்கொண்டு அமர முற்பட்டார். அவரது நிறை ஏறக்குறைய 120 கிலோவுக்கும் மேல் இருக்கும். அவர் கைவைத்த எனது தோள்பகுதி ஏற்கனவே புலி விலங்குகளின் அடியால் கண்டலாகி இருந்தது. குகன் அழுத்தி அமர்ந்ததில் எனக்கும் வலி அதிகமானது.

அமர்ந்ததும் குகன் அழுவதற்கு ஆரம்பித்தார். நான் எந்தத் தவறும் செய்ய வில்லை. ஈ.எபி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உயிர்தப்பிச் செல்ல உதவினேன். புலிகள் கூட என்னிடத்தில் உதவிகள் பெற்றனர். ஐ.பி.கே.எப். இருந்த போது புலிகளுக்கு உணவு கொடுத்துள்ளேன். காசு கொடுத்துள்ளேன், வேறுபல உதவிகள் கூட செய்துள்ளேன். தமிழ் இளைஞர்கள் கொல்லப்படும் போது அவர்களைக் காப்பாற்ற உதவி செய்தேன். அதற்காக இப்படிக் கொடுமைப் படுத்துகிறார்களே என்று மீண்டும் மீண்டும் விக்கலெடுத்து அழுதார்.

அவரது உடல் முழுவதும் சிவந்து இரத்தக் கண்டல்களாக இருந்தன. இவரை விசாரித்த புலிவிலங்கின் பெயர் அம்புறோஸ், துணைக்கு நின்ற புலி விலங்குகள் மஞ்சு மற்றும் கௌதமன் ஆகிய இருவரும் ஆவர். குகனை மிக அதிகமாகத் தாக்கியவர் மஞ்சுதான்.

குகன் எந்த இயக்கத்திலும் அங்கத்தினர் அல்ல, தமிழர்கள் அனைவரும் விடுதலைக்காக ஏதாவது ஓர் இயக்கத்தினை ஆதரித்தனர் என்பது நாடறிந்த உண்மை. தமிழ் மக்களது உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டது விடுதலைக்காகத்தான். விடுதலை இயக்கங்களை வழி நடத்தியவர்கள் தமிழ் மக்களது தியாக உணர்வினை சரிவரப் பயன்படுத்தத் தெரியாதவர்களாக இருந்தனர். தொண்டர்களும் உறுப்பினர்களும் தம்மை அர்ப்பணிக்க முன்வந்தனர். தலைமைகளுக்கிடையில் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, கூட்டுத் தலைமை என்பன போன்ற பொதுத் திட்டங்கள் இருந்ததில்லை. துப்பாக்கி ஏந்திய வல்லுநர்கள் ஏனையோரை அழித்துவிட்டு ஆதிக்க வாதிகளாக தம்மைக் காட்டிக்கொள்ள தமிழ் இளைஞர்கள் பலியிடப்பட்டனர்.

எனக்கு மருந்து தடவிய அதே தயாபரன் மீண்டும் வின்டோஜனுடன் வந்தார். விசாரணை முடிந்ததும் இது வழக்கமாக நடைபெறும் சிகிச்சையாக இருந்ததால் அவரும் தமது கடமையை நிறைவேற்ற றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளருக்கும் எனக்கும் இடையில் வந்து அமர்ந்தார். குகன் அவர்களுக்கு மருந்து தடவ ஆரம்பித்தார். அவரும் வலி நிவாரணச் சொற்களான அம்மா, ஐயோ என்று முனகிக் கொண்டிருந்தார். புலி விலங்குகள் விலகிச் சென்று அவர்களுக்குள் ருசிகர கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது தயாபரன் அவர்களது வரலாறுபற்றி அறிந்துவிடலாம் என்ற ஆர்வம் மேலோங்கியது. “அண்ணே” என்று தயாபரன் அவர்களை அழைத்தேன். அவரும் திரும்பிப் பார்த்து என்னவென்று தலையை ஆட்டிக் கேட்டார். உங்களை எதற்காக இவையள் பிடித்துவந்திருக்கினம் என்று கேட்டேன்.

தயாபரன் தொடர்ந்தார் - தம்பி, எனது சொந்த ஊர் அரசடிவீதி, கட்டுடை, மானிப்பாய். நான் யாழ்ப்பாணம் பெரிய ஆசுப்பத்திரியில் வரவேற்புப் பிரிவில் வேலை செய்து வந்தேன். இயக்க உறுப்பினர்கள் யார் வந்தாலும் நான் முன்னின்று அவர்களுக்கு உதவி செய்வேன். முன்னர் புலிகள், ரெலோ, புளொட் என்று யார் வந்தாலும் விழுந்து விழுந்து உதவி செய்வேன்.

பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் பல பேரை அழைத்துவந்தனர் ஆசுபத்திரிக்கு அவர்களுக்கும் நான் உதவிகள் செய்தேன். ஐ.பி.கே.எப். (இந்திய இராணுவம்) வெளியேறியதும் புலிகள் வந்து என்னைப் பிடித்து வந்தனர். எதற்காக என்னைப் பிடித்து வந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, “நீ எங்கட ஆக்கள ஈ.பி.க்கு காட்டி குடுத்து கொலை செய்திருக்கிறாய்” என்று பெட்டிசம் வந்திருக்கு. விசாரிச்சுப் போட்டு விடுறம் என்று கூறி இறுதியில் இந்த மரணக் குகைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

விசாரண முடிந்துவிட்டதா என்று கேட்டேன். எந்த விசாரணையும் நடைபெறவில்லை. காட்டிக் கொடுத்தாயா? கற்பழித்தாயா? கொள்ளையடித்தாயா? இவைதான் அவர்களது கேள்வி. என்னை பதினைந்து நாட்களுக்கும் மேலாக அடித்து சித்திரவதைச்செய்தனர். இங்கு வந்து செல்லும் புலிகள் அத்தனை பேரும் எனது உடலைப் பதம் பார்த்தவர்கள்தான். என்ன செய்வது தமிழனாக ஏனடா பிறந்தோம் என்று வருந்துவதைத் தவிர வேறு என்னத்தான் நினைப்பது என்று வருந்திச் சொன்னார்.

அதற்கிடையில் புலி விலங்குகளால் தாக்கப்பட்ட ஏனைய சகோதரர்கள் வலியினால் துடித்துக்கொண்டிருநதனர். அவர்கள் இவரை அழைத்தனர். அங்கு இருக்கும் அத்தனை பேருக்கும் இவர்தான் மருத்துவர். வின்ரோஜனில் சிறிது அளவு என்னிடத்தில் தந்து குகன் அவர்களுக்கு போடும்படி கூறிவிட்டு அவர் தனது கடமையைச் செய்ய அடுத்த சகோதரரிடத்துச் சென்றார்.

என்னிடமிருந்த வின்ரோஜனை குகன் அவர்களுக்கு தேய்த்தேன். விரல்களில் படாமல் உள்ளங்கையின் ஓரமாக கழிம்பை தேய்த்துவிட்டேன். அந்தக் கழிம்பு எனது கையில் படும்போது எனது வலிக்கும் மருந்தாக அமைந்தது. இரவு ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டு நித்திரையானோம்.

காலையில் கடன் கழிக்க வரிசையில் நின்றோம். அந்தவேளை அருகில் இருந்த கொடவுனிலிருந்தவர்களும் வரிசையாக காலை கடன் கழிக்க வந்திருந்தனர். இன்று குளிக்கும் தினம் என்று கூறிக்கொண்டார்கள்.

ஒன்றரை லிற்றர் கொள்ளளவு கொண்ட ரின் ஒன்றைக் கொடுத்தனர். காலைக் கடன் முடிந்து தண்ணீர் தொட்டிக்கு அருகில் வந்து வரிசையாக நிற்கும்படி கூறினர். 10 ரின் தண்ணீர் மட்டுமே எடுக்க வேண்டும். சவற்காரம் கிடையாது துடைக்க துவாய் கிடையாது, வெறும் தண்ணீரை தலையில் ஊற்றி கைகளினால் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏற்கனவே உடல் அழுக்கேறி இருந்தது. தண்ணீர் ஊற்றியதால் ஈரமானதே தவிர அழுக்கு எதுவும் போகவில்லை. உடுத்தியிருந்த சரத்துடன் குளித்தேன். அனைவரும் அப்படித்தான் குளித்தார்கள். யாருக்கும் சவற்காரம் கிடையாது. குளித்து முடிந்ததும் சரத்தைக் கழற்றி பிழிந்து உதறிவிட்டு மீண்டும் உடுத்திக் கொண்டேன்.

இந்த வேளை அருகிலிருந்த கொட்டகைக்கு மேற்குப் புறத்தில் பல இடங்களில் குழிகள் வெட்டப்பட்டு அதன் மேல் நீலநிற பொலித்தீன் கொண்டு பந்தல் போல் அமைக்கப் பட்டிருந்தது. இடையிடையே பெரிய கிடங்குகளும் தென்பட்டன. ஏறக்குறைய 50அடி நீளம் 50அடி அகலம் 15 அடி ஆழம் வரையிலும் சில கிடங்குகள் இருந்தன. அவற்றிலிருந்து ஏணிகள் மூலம் விலங்குகள் இட்டு கழிப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தனர்.

இது என்ன கொடுமை, நாங்கள்தான் கொடுமையில் உளல்கிறோம் என்றால் இவர்கள் படும் கொடுமை எங்களையும் விட அதிகமாக இருக்கும் போல் தோன்றிற்று. அந்தச் சகோதரர்கள் யாராக இருக்கும் என்று அறிய எனது மனம் அலைபாய்ந்தது. யாரிடத்துக் கேட்கலாம் என்று யோசிக்கும் வேளை, நடவுங்கள் கொடோனுக்கு என்றனர். மெதுவாக நடந்து இருப்பிடம் அடைந்தேன் குகன் அண்ணனும் அப்பையா அண்ணனும் குளித்துவிட்டு அதே ஈரச் சரத்துடன் வந்து அமர்ந்தனர்.

11மணியளவில் அரை றாத்தல் பாண் தரப்பட்டது பருப்புடன். இந்தச் சமையலைச் செய்வதும் எமது சகோதரர்கள் தான். இரண்டு வகையான சமையல் செய்யப்படும். கைதிகளுக்கு என்று தரக்குறைந்த சமையல், புலிகளுக்கென்று தனி மாமிச உணவு, இவற்றை சமைப்பது கைதிகள்தான். அவர்களுக்கான கால்விலங்கு ஏனையோரை விட அரையடி அதிகமாக விட்டு வெல்டிங் செய்யப்பட்டிருந்தது. புலி விலங்குகளுக்கு சமைக்கும் போது புலியின் நபர்கள் கதிரைகள் மீது இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்களென்று விபரம் கூறினார் அப்பையா அண்ணன்.

நான் இப்போது அங்கு இருக்கும் சகோதரர்களைப் பார்த்துப் புன்னகைக்க ஆரம்பித்தேன். சிலர் என்னைப் பார்த்து புன்னகைத்தனர். இந்தப் புன்னகைகள் மனதளவில் கிடையாது. உதட்டளவில் பதிலுக்கு ஆமோதிப்பது போன்று இருந்தது அவர்கள் புன்னகை. ஏனெனில் இவர்கள் அனைவரது இதயங்களும் அவர்களது கைகளில் இல்லை. புலி என்ற விலங்குகளின் கைகளில் அவர்களது உயிரும் உடலும் இருந்தன!

எனக்கு நேர் முன்வரிசையில் அமர்ந்திருந்தவரது பெயர் பிரசாந்த். இவர் றெலோ இயக்கத்தைச் சேர்ந்தவர். கிளிநொச்சி மாவட்டத்தின் ரெலோ இயக்க அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக இருந்தவர். இவரது காலில் தொடர்ந்து புண் இருந்து கொண்டே இருந்தது. கால்களில் கட்டைகளால் அடிக்கும் போது இரத்தக் கண்டல் ஏற்பட்டு புண்ணாகியிருந்தது. அதன் மேல் கால்விலங்கும் போடப்பட்டு வெல்டிங் செய்திருந்தபடியால், அந்த விலங்கு தொடர்ந்து அந்தப் புண்களில் உரசிக் கொண்டே இருந்தது. இதனால் இருப்பதும் எழுந்து நடப்பதும் அவருக்கு ஓர் தண்டனையாகவே இருந்தது.

இருந்தாலும் அவர் மனவுறுதியுள்ளவராக இருந்தார். இவர்களால் (புலிகளால்) என்னை சித்திரவதைச் செய்துக் கொல்லத்தான் முடியும், நாங்கள் அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். இறந்த பின் நாம் எங்கே போகிறோமோ அங்கேதான் இந்தப் புலிகளும் பின்னாளில் வரவேண்டும். அங்கே நான் அப்போ சீனியராக இருப்பேன் என்று எனக்கு விளக்கமளித்தார் பிரசாந் அவர்கள். எனக்கும் இவரது கூற்றுச் சரியாகத்தான் பட்டது. ஏன் பயந்து பயந்து வாழ வேண்டும், இவர் (பிரசாந்த்) சாகும் போது நானும் சேர்ந்து செத்தால் போகிற இடத்தில் சீனியராக இருக்கலாம், இந்த விலங்குகள் அங்கு ஒரு நாள் வரத்தானே வேண்டும் என்று நானும் சிந்திக்கலானேன்!

எனக்கு அருகில் இருக்கும் றொலெக்ஸ் உரிமையாளர் அவ்வளவாக கதைக்க மாட்டார். கேள்வி கேட்டால் மட்டுமே பதில் சொல்வார். அந்தப் பதிலும் இரண்டொரு வார்த்தைகளில் முடிந்துவிடும். மறுபுறத்தில் இருக்கும் அப்பையா அண்ணன் கதைக்கக் கூடியவர், புலி விலங்குகளுக்குப் பயந்து தலையைக் கீழே நோக்கிக் கொண்டுதான் கதைப்பார். அதனால் அவர் சொல்வது பாதி அளவுதான் விளங்கும்.

எனக்கோ அந்தக் கிடங்குகளில் இருக்கும் சகோதரர்களை யார் என்று அறிய வேண்டும் என்ற ஆவல் மிகுதியாக இருந்தது. எனக்குத் தெரிந்த யாராவது இருப்பார்களோ என்ற அச்சமும் இருந்தது. தனித் தனிக் குழிகளும் இருந்தன, பெருங் குழிகளும் இருந்தன. நாளைக்கு எப்படியாவது இதன் இரகசியத்தை அறிந்து விட வேண்டும் என்று தீர்மானித்தேன்.

நான் இருக்கும் மண்டபத்தின் மேற்குப் பகுதிக்குச் சென்றால், அதிலிருந்து முப்பது நாற்பது அடி தூரத்தில்தான் அந்தக் குழிகள் ஆரம்பித்தன. எப்படியாவது மேற்கு நோக்கி நகர வேண்டும். மறுநாள் நாள் நான் எதிர்பார்த்த மேற்கு நோக்கிய பயணம் தானாகவே நடந்தது. ஆம், புலி விலங்குகள் இங்கு இருப்பவர்களை தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பதற்கு விடுவதில்லையாம். ஒரே இடத்தில் இருந்தால் ஒருவருக்கு ஒருவர் பழக்கம் ஏற்பட்டு ஏதாவது திட்டங்கள் போட்டுச் செயற்படுத்த வாய்ப்பு உண்டு என்று யோசனை செய்து ஒரு முனையில் இருப்பவரை மறுமுனைக்கும் வடக்கில் இருப்பவர் கிழக்குக்கும் என்று தலைகீழ் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினர் அந்தப் புலி விலங்குகள்.                                                                                                                                நான் எதிர்பார்த்திருந்த மேற்கு மூலைக்குச் சென்று ஒரு சதுரக் கோட்டின் நடுவில் நின்றுகொண்டேன். ஒவ்வொருவரும் அவ்விதம் நின்று கொண்டதும் சத்தம் போடாமல் இருக்கும் படி கூறினர். கடந்த இரவு கூட எம்மவரில் ஏழு பேரது இலக்கங்களையும் பெயர்களைக் கூறி அழைத்துச் சென்றனர். அப்படி அழைத்துச் செல்பவர்கள் மீண்டும் இந்தக் கொட்டகைக்குத் திரும்பி வருவது கிடையாது. இங்கு காவலுக்கு நிற்கும் புலி விலங்குகளும் மனிதப் பண்புகளைக் கொண்ட வார்த்தைகளைக் கதைப்பது கிடையாது. யாரை என்றாலும் வாடா, போடா என்று தூசண வார்த்தைகளைத்தான் பயன்படுத்துவர். இவர்களில் ஒருவர் மட்டுமே தூசண வார்த்தைகள் பேசவில்லை. அவர் சலீம் என்ற சேர்லி அம்மான் ஆவார். இவர்தான் இந்தச் சிறைக்கு பொறுப்பானவர். இவர் பின்னாளில் புலிவிலங்குகளை விட்டு விலகி தனது சொந்தக் குடும்பத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டதாக அறிந்தேன்.

நான் கிடங்கு இருக்கும் பகுதியை நோட்டம் விடுவதையே எனது கடமையாகச் செய்து வந்தேன். குழியில் இருப்பவர்களை காலையில் ஏணிகள் வைத்து வெளியில் வரச் சொல்வார்கள். அவர்கள் வெளியே வரும்போது கையில் சொப்பின் பை ஒன்றினைக் கொண்டுவருவார்கள். கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டிருக்கும். அவர்களைப் பார்த்தால் புழுதி படிந்த மேனியுடன் காய்ந்து சாம்பல் படிந்த தலையுடன் நடக்க முடியாமல் மெதுவாக கையில் பையுடன் அசைந்து அசைந்து செல்வார்கள். கையில் கொண்டு வரும் பைகளில் மலமும் சிறுநீரும் இருக்கும். ஒவ்வொருவரும் அதனைக் கொண்டு சென்று மலக்குழியில் வீசவேண்டும், பின்னர் அவர்களும் காலைக் கடனைக் கழிக்கவேண்டும்.

மீண்டும் குழியை நோக்கி நடந்து சென்று ஏணிவழியாக உள்ளே இறங்க வேண்டும். இப்படி குழிகளுக்குள் இருப்பவர்கள் புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஐ சேர்ந்தவர்களும்தான் அதிகமாக இருந்தனர்.

முள்ளிக்குளம் முசல்குத்தி என்ற இடத்தில் புளொட் இயக்கத்தினர் முகாம் அமைத்து இருந்ததாகவும், அதனை இலங்கை இராணுவத்தின் துணையுடன் புலி விலங்குகள் தாக்கியதாகவும், அதில் இரு பகுதியினருக்கும் மிகுந்த சேதம் ஏற்பட்டதாகவும், இறுதியில் விலங்குகள் வெற்றிகொண்டதாகவும் அறிந்தேன்.

அப்படி முசல்குத்தி முகாமில் உயிருடன் கைது செய்யப்பட்டவர்களையும், அந்த இயக்கத்துக்கு உதவி செய்த பொதுமக்களையும் பிடித்து வந்து இந்தப் பெருங்குழிகளில் விலங்குகள் இட்டு அடைத்து வைத்திருந்தனர் இந்த விலங்குகள்.

சில முக்கிய உறுப்பினர்களைத் தனிக் குழிகளிலும் ஏனையோரை பொதுவான குழிகளிலும் வைத்திருந்தனர். இரண்டுவேளை உணவு வாளிகளில் கயிற்றைக் கட்டி இறக்குவார்கள். உண்பது, கை கழுவுவது எல்லாம் அந்தக் குழிக்குள்தான். காலை ஒரு வேளைதான் இவர்கள் வெளியே வர முடியும். அதன் பின்னர் ஏணியை எடுத்துச் சென்று விடுவார்கள். 24மணி நேரமும் அவர்கள் அந்தக் குழிக்குள்தான் இருக்க வேண்டும். குழியினுள் எதுவும் கிடையாது. இவர்கள் அனைவருக்கும் நில நிற கால்சட்டை மட்டும்தான் கொடுத்திருந்தனர். இவர்களது விலங்குகளை விலக்கிவிட்டால் கூட இவர்களால் முறையாக நடந்து செல்ல முடியாத அளவு நோய்வாய்ப்பட்டிருந்தனர்.

தொடரும்
logoblog

Thanks for reading பகுதி 2 விடுதலைப் புலிகளின் சித்திரவதை கூடமும் தப்பியவர் அனுபவமோ

Previous
« Prev Post

No comments:

Post a Comment