பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 3 August 2023

பகுதி 6 விடுதலைப்புலிகளின் சித்திரவதை கூடமும் தப்பியவர் அனுபவம்

  வெற்றிசெல்வன்       Thursday, 3 August 2023
1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்……
நடந்த வன்கொடுமைகள்!
அந்தோணி!

பகுதி 6

எங்களுடன் வந்த ஏனைய இரண்டு லொறிகளும் எங்கு சென்றன என்பது தெரியாது. நாங்கள் முப்பத்தைந்து பேரும் இரண்டு அறைகளிலும் பிரிக்கப்பட்டு உறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டோம். நாளைக் காலை டொமினிக் அண்ணன் வருவார் என்று கூறினர் அங்கிருந்தவர்கள்.                                                                                                                                முதலில் ஏன்தான் விடிந்ததோ என்று நினைத்தநான், இப்போது இன்னும் ஏன் விடியவில்லை என்று சிந்திக்கலானேன்! விடிந்தது. கிணத்தடிக்குச் சென்று முகம் கழுவும்படி கூறினர். அங்கே சவற்காரம் இருந்தது. ஒன்றுக்கு நான்கு தடவை முகத்துக்கு சோப் போட்டு உரஞ்சிக் கழுவினேன். ஏனையோரும் அப்படித்தான் செய்தனர். காலை உணவாக இடியாப்பமும் சொதியும், சாம்பாரும் கொடுத்தார்கள். உண்டுவிட்டு டொமினிக் அண்ணன் வருகைக்காகக் காத்திருந்தோம்.

ஓன்பது மணியளவில் டொமினிக் அண்ணன் வந்தார். தடித்த உருவம் கொண்ட அவர்? வந்ததும், அனைவரையும் அழைத்தார். தனது உரையை ஆரம்பித்தார்:-

“நீங்கள் எல்லோரும் எங்களது சிறையிலிருந்து வந்துள்ளீர்கள், அங்கு சில சிரமங்களைச் சந்தித்திருப்பீhகள், அவற்றையெல்லாம் நீங்கள் மனிதில் வைத்து கொள்ளக் கூடாது! உங்களை விடுதலை செய்ததும் மீண்டும் இயக்கங்களில் சேரக்கூடாது. எங்களுக்கு எதிராகச் செயல்படக்கூடாது,                                                                                                                                                                                                                                                               நீங்கள் விரும்பினால் எங்கள் இயக்கத்தில் இணைந்து செயற்படலாம். நீங்கள் இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகளை நான் செய்து தருகிறேன்? எங்கள் இயக்கம் பரந்து விரிவடைந்துள்ளது. சிங்கள அரசாங்ம் கூட எங்களுடைய அனுமதி இல்லாமல் யாழ்ப்பணத்துக்குள் வரமுடியாது இனிமேல் வேறு எந்த இயக்கத்தையும இயங்கவிட மாட்டோம். அப்படி இயங்கினால் முற்றாக அழித்துவிடுவோம். எனவே நீங்கள் எங்கள் இயக்கத்தில் இணைந்தால் நல்லது என்று நினைக்கிறேன்” என்று கூறி முடித்துவிட்டு ஒவ்வொருவராக கேட்க ஆரம்பித்தார்.

ஆனால் யாருமே இவர்களது இயக்கத்தில் இணையச் சம்மதிக்கவில்லை! ஏனெனில் இவர்களது மறுபக்கம் எப்படி என்பதைக் கண்டதுமட்டுமல்ல, அவற்றை அனுபவித்து வந்துள்ளனர். ஆதலால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவணத்தைக் கூறி அதனால் இயலாது என்று கூறினர்.                                                                                                                                                                                                                                                               என்னுடைய முறை வந்ததும் நான் சொன்னேன், “ எனக்கு ஆறு பெண் சகோதரர்கள் அவர்கள் அனைவரையும் கரைசேர்க்க வேண்டியது என்னுடைய பொறுப்பு, நான் வெளியில் சென்று உழைத்து எனது சகோதரர்களைக் காப்பாற்ற வேண்டும். எனவே நான் உங்கள் இயக்கத்தில் இணைய முடியாத நிலையில் இருக்கிறேன்” என்று கூறிமுடித்து அமர்ந்தேன்.

இறுதியில் டொமினிக் அண்ணாவின் பேச்சு எடுபடவில்லை. ஒரு நபரை என்றாலும் சம்மதித்து விடலாம் என்று முயற்சித்தார் டொமினிக். இரண்டு மணி நேர வீண் பேச்சுக்குப் பிறகு நீங்கள் வீடுகளுக்குச் செல்லலாம் என்று கூறி வெளியேறினார் டொமினிக்.

11 மணியளவில் நீங்கள் போகலாம் என்று கூறினார் அங்கிருந்த புலி ஒருவர். ஓவ்வொருவராக வெளியேறினோம். யாருக்கும் போக்குவரத்துக்கான காசு கிடையாது. அதைப்பற்றி யாரும் கேட்கவும் இல்லை! இவர்ளிடத்திலிருந்து தப்பித்தால் போதும் என்றுதான் நினைத்திருந்தனர் அனைவருமே! எனது வீடு தட்டார் தெருவிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் வரும். நான் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

பகல் நேரம் தெருவில் வருவோர் போவோர் என்னைக் கீழும் மேலுமாகப் பார்த்துக் கொண்டு சென்றனர். காரணம் மொட்டைத்தலை, கசங்கிய சேட், நொந்து போன சறம், கறுத்த உருவம், மெலிந்துபோன உடல் இப்படிப் பல மாறுபட்ட வித்தியாசமான தோற்றத்தைக் கண்டவர்கள் மிரண்டு ஒதுங்கி நடந்தனர்.

துணுக்காயில் இந்த விலங்குகளிடம் இருந்த போது மூன்று நான்கு மாதத்துக்கு ஒரு தடவை மொட்டை அடித்துக் கொள்வேன். குhரணம் சவற்காரம், சம்போ அங்கு கிடையாது. எனவே தலைமயிர் வளர்ந்தால் வியர்த்து அழுக்கேறிவிடும். இதனால் நான் மொட்டை போட்டுக்கொள்வேன். விடுதலைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அப்படி மொட்டை போட்டிருந்தேன். எனவே என்னை அந்தக் கோலத்தில் குழந்தைகள் பார்த்திருந்தால் பிள்ளை பிடிக்காரன் என்று கூச்சலிட்டு கல்லால் எறிந்திருப்பார்கள். நான் வேலையாக அப்படி எந்தக் குழந்தையும பார்த்துவிடவில்லை.

பலதரப்பட்ட சிந்தனையுடன் நடந்து கொண்டே இருந்தேன். நாள்பட்ட துன்பங்கள் தீர்ந்துவிட்டது என்று மகிழ்ந்தேன். வரவிருக்கும் நாள்களில் பட்டுவந்த கொடுமையை விட மிகவும் மோசமான கொடுமையைச் சந்திக்கப் போகிறேன் என்பது புலனுக்கு எட்டாமல் அப்போது இருந்தது.

துணுக்காய் சிறையை உருவாக்கி அதில் தமிழ் இளைஞர்களை வதைக்க வேண்டும் என்ற இந்தக் கொடிய சிந்தனையை உருவாக்கியவர் யார் என்று தெரியாது. ஆனால் பொட்டு அம்மான்தான் இந்தக் கொடுஞ்சிறையின் ஸ்தாபகர் என்று காவல் புலிவிலங்குகள் கதைத்துக் கொண்டனர். மனித நாகரீகத்துக்கு முற்றிலும் முரணான விசாரணை முறையை எங்கள் இனத்தின் மீதே பரீட்சித்துப்பார்த்தது யாராலும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இந்தச் சிறையில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் விலங்கிட்டு குழிகளுக்குள் இறக்கித் தண்டனை வழங்கினால்தான் தாங்கள் செய்துவிட்ட தவறை உணர்வார்கள் அதுவரை வரி என்பது பிறருக்குத்தானே!

நான் நடந்தேன் வீடு நோக்கி, தெருவில் வந்து கொண்டிருந்த எவரையும் நான் நிமிர்ந்து பார்க்க வில்லை. எனது கோலம் எனக்கே அருவருப்பை ஏற்படுத்தியது. தமிழர் நிலையை நினைத்து நொந்துகொண்டே எனது வீட்டு வாசலை அடைத்தேன்.

எனது தாயாரும், அக்காவும் என்னைப்பார்த்ததும் ஓடிவந்து கட்டி அனைத்து கதற ஆரம்பித்தனர். ஏனைய சகோதரிகளும் சூழ்ந்து கொண்டு எனது கோலத்தைக் கண்டு அழுவதற்கு ஆரம்பித்து விட்டனர். அடித்தார்களா, குத்தினார்களா, கொடுமைப்படுத்தினார்களா என்று பலவிதமான கேள்விகளைக் கேட்டுத் துளைத்து எடுத்தனர். நானோ எதுவும் நடக்கவில்லை, நல்லபடியாக அனுப்பிவைத்தனர் என்று உண்மைக்கு மாறாக விளக்கம் கொடுத்தேன் என் சகோதரிகளுக்கு!

முதலில் இரத்தச் சேட்டையும் சறத்தையும் கழற்று என்றார் என் அம்மா! நேராக கிணற்றுக்குச் சென்று குளித்தேன். அக்கம்பக்கத்து வீட்டார் நலம் விசாரிக்க வந்தனர். அவர்களும் கேள்விகளால் குடைந்தனர். அனைவருக்கும் என்னால் முடிந்த பொய்களைச் சொல்லி நல்ல முறையில் அனுப்பிவைத்தனர் என்று கூறி அவர்களை அனுப்பிவைத்தனர் என்று கூறி அவர்களை அனுப்பிவைத்தேன்.

முதிய உணவை அம்மா கொடுத்தார். அதை நான் உண்ணும் போது அம்மா கேட்டார், தம்பி உண்மையைச் சொல். அவர்கள் உன்னைக் கொடுமைப்படுத்தவில்லையா? நான் சொன்னேன், “இல்லை அம்மா, அவர்கள் ஏன் இந்த இயக்கத்தில் சேர்ந்தனீ என்று கேட்டார், தெரியாமல் சேர்ந்துவிட்டேன் என்று சொன்னேன். அதுக்குப் பிறகு என்னை வவுனிக்குளத்துக்குக் கொண்டு போய் அங்கே இவ்வளவு நாளும் வைத்திருந்தனர். பிறகு இப்ப தட்டார்தெருவுக்குக் கொண்டு வந்து விட்டினம்” என்று கூறி அம்மாவை நம்பவைத்தேன்!

உறவினர்களை அலைய வைத்த புலி விலங்குகள்:

அம்மா ஆரம்பித்தார், தம்பி நானும் உன்ர அக்காவும் அவங்கட ஒப்பீஸ் வாசலுக்குச் சென்று நிக்காத நாளே கிடையாது. உன்னை கூட்டிச் சென்ற அன்றே நாங்கள் எல்லாரும் அவங்கட ஒப்பீசுக்கு ஓடிச் சென்றோம். தொடர்ந்து ஒரு வருசமாக காலம்பிற சாப்பாட்டுடன் போனால் இரவு ஏழுமணிக்குத் தான் வீட்டுக்கு வருவோம். ஒருத்தன் ஒரு கதை சொல்வான். பொய் சொல்லி ஏமாற்றுவதற்கென்றே அங்க ஆக்கள வச்சிரிக்கினம்.

ஊரில் ஒருவர் பாக்கி இல்லை! ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரை கூட்டிக்கொண்டு போவேன். இனிமேல் இந்தப் பக்கம் வந்தால் உங்களையும் சுட்டுப்போடுவேன் என்று ஒரு பொடியன் பயமுருத்தினான். உங்களையும் சுட்டுப் போடுவேன் என்று சொன்னபடியால், தம்பி உன்னையும் சுட்டுப்போட்டாங்களோ என்று அக்கா கத்தத் தொடங்கிவிட்டாள். என்ர மகன் செத்திருக்கமாட்டான். உயிருடன்தான் இருப்பான், நீ சத்தம் போடாத என்று சொல்லி அவளை இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன் என்று கூறி அழுவதற்கு ஆரம்பித்தார்.

ஒரு வருடம் தினமும் அவர்களது அலுவலகத்துக்குச் சென்று வந்த எனது தாயார், பின்னர் வாரம் ஒருமுறை அவர்களது அலுவலகம் சென்று என்னைப்பற்றி விசாரித்து, நான் இருக்கிறேனா இல்லை இறந்துட்டேனா என்பதைக் கூறும்படி வற்புறுத்திக்; கேட்டுள்ளார். ஆயினும் அந்த விலங்குகளிலிடமிருந்து எந்தவிதப் பதிலையும் அம்மாவால் பெறமுடியவில்லை.

ஆயினும் எனது குடும்பத்தார் பல வழிகளிலும் புலி விலங்குகளுக்கு தொல்லை கொடுத்து வந்தனர். அதுவுமல்லாமல் எனது ஊராரும் தங்கள் பங்குக்கு புலிகளின் அலுவலகம் சென்று பல்வேறுபட்ட தொல்லைகள் கொடுத்தன் விளைவாகத்தான் நான் விடுவிக்கப்பட்டேன். என்னைக் கொன்று விட்டதாகத் தகவல் தெரிந்தால் புலிகள் எங்கள் ஊருக்குள் வந்து செல்வது சிரமமாக இருந்திருக்கும். இதை உணர்ந்துதான் விடுவிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

இறப்பை மறைமுகமாக தெரியப்படுத்தும் புலி விலங்குகள்:

நான் இரண்டு நாட்களாக வெளியில் எங்கும் செல்லவில்லை. மூன்றாம் நாள் சைக்கிள் ஒன்றினை எடுத்துக்கொண்டு அப்பையா அண்ணன் வீட்டுக்குச் சென்றேன். கொட்டடியில் அவரது வீடு, வீட்டைச் சுலபமாகக் கண்டுபிடித்தேன். எனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டதும் உள்ளே அழைத்தார், அப்பையா அண்ணனின் மனைவி.

வீட்டின் உள்ளே சென்றதும் அப்பையா அண்ணனின் உருவப் படத்தின் மேல் மாலை போட்டு விளக்கேற்றி வைத்திருந்தனர். அதைப்பார்த்ததும் எனக்கு எந்தவித அதிர்ச்சியும் எற்படவில்லை. காரணம் பல இளைஞர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை புலி விலங்குகள் கொன்று விட்டனர் என்று நம்பி இருந்தனர். அப்பையா அண்ணன் உயிருடன்தான் இருக்கிறார். உங்களிடம் கூறும்படி என்னிடம் சொன்னார். 18 மாதங்கள் நான் அவருடன் தான் இருந்தேன் என்றெல்லாம் கூறியும் அவர்கள் நம்புவதற்கு சிரமப்பட்டார்.

காரணம் அப்பையா அண்ணனைப் பிடித்துச் சென்ற மறுநாள் இரண்டு புலி விலங்குகள் வீட்டுக்கு வந்து அவரது சறம் மற்றும் சேட்டை ஒப்படைத்துவிட்டுச் சென்றனராம். அதனால் புலிகள் அவரைக் கொன்று விட்டனர் என்று நம்பி அவரது இறப்புக்கான அனைத்துச் சடங்குகளையும் முடித்திருந்தனர்.                                                                                                                                இவ்விதம் பலரது வீடுகளுக்கும் சறம், சேட் அனுப்பி அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தியை புலி விலங்குகள் பரப்பி வந்தனர். துணுக்காயில் பலர் வெறும கால்சட்டையுடன் இருந்தனர். எனவே அவர்களது சறங்களை உருவி அவர்களது வீடுகளுக்குக் கொடுத்து அந்த இளைஞரது பெற்றோரை மரண வீடு கொண்டாட வைத்துள்ளனர் புலிகள் என்பது இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது.

யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் இது போன்றதோர் பழக்கத்தினை ஏற்படுத்திய புலிகள், இதன் மூலம் பொதுமக்கள் அழுது புரண்டு துன்பப்படுவதைக் கண்டு மகிழ்ந்துள்ளனர். பிறரது துன்பங்கள் இவர்களை மகிழ்வித்துள்ளது. இது போன்ற மகிழ்ச்சி மனநோயாளிகளுக்குத்தான் ஏற்படும். புலிகளும் கொலை வெறிகொண்ட மனநோயாளிகள்தான் என்பதில் எந்த ஐயமும் கொள்ளத் தேவையில்லை!

அப்பையா அண்ணனின் வீட்டில் அவரது மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் இருந்தனர். அவர்களது வேதனையில் பங்குகொண்டுவிட்டு நேராக ஜேக்கப் அண்ணனது வீட்டுக்குச் சென்றேன். அங்கே அவரது மனைவி இரண்டு மகள்கள் மட்டும் இருந்தனர். இவரது வீட்டில் புகைப்படம் எதுவும் மாட்டபட்டிருக்கவில்லை. என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரது விபரங்களைக் கூறினேன். நூன் சொல்வதை அவர்கள் நம்பினார்கள். அவர்களது வீட்டுக்கு ஏதாவது உதவி செய்யக் கூடிய அளவு எதுவும் என்னிடம் இருக்கவில்லை. அவரது மகள் ஒருவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டவராகக் காணப்பட்டார். நான் அவர்களது வீட்டைவிட்டு வெளியேறும் வரை அவர் அழுது கொண்டே இருந்தார்.

இங்கிருந்து நேராக செட்டி வீட்டுக்குச் சென்றேன், யாழ்ப்பாணம் கெனடி வீதியில் இருந்தது. இப்படித் தொடர்ந்து மூன்று நாட்களாக என்னுடன் இருந்த அந்தச் சகோதரர்களது வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் ஆறுதல் கூறிவந்தேன். அனைத்து வீடுகளிலும் கண்ணீர் கரை புரண்டது. அந்த மக்கள் விடுதலையை விரும்பினர். புலிகளோ பதவியையும் அதிகாரத்தையும் விரும்பினர். அதிகாரம் சிலகாலம் ஆட்சி செய்தது. மக்கள் அங்கே அடிமையானார்கள்.

ஒரு வாரம் கழிந்தது. என்னைப் பார்ப்பதற்காக எனது உறவினர் ஒருவர் வந்தார். அவர் ஆறுதலும் அறிவுரையும் கூறிவிட்டுச் செல்லும் போது, தம்பி நீ எங்கும் செல்ல வேண்டாம், எனது வியாபாரத்தைக் கவனிக்க சரியான ஆள் யாரும் இல்லை. கணக்கு வழக்கு எழுத காசுகளைக் கையாள நீ வந்தால் நல்லாயிருக்கும். நல்லா யோசித்துவிட்டு திங்கள் கிழமை காலையில் சந்தைக்கு வா என்று கூறிவிட்டுச் சென்றார்.

நானும் அம்மா, அக்காவிடம் கதைத்துவிட்டு, அவர் கூறிய திங்கள் கிழமை யாழ்ப்பாண மீன் மொத்த வியாபாரச் சந்தைக்குச் சென்று அவரைப் பார்த்தேன். அவர் என்னை அழைத்து கணக்குகள் எழுதவும், ஏலம் விட்டு வரும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பினை ஒப்படைத்தார். தொடர்ந்து மூன்று மாதங்கள் அவர் கொடுத்த வேலையைச் சரிவரச் செய்து வந்தேன். சம்பளம் எதுவும் நான் பெறவில்லை. ஆயினும் எனக்கு வேண்டியவற்றை அவர் செய்து கொடுத்தார். ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். ஒன்றரைப் பவுணில் ஓர் தங்கச் சங்கிலி வாங்கிக் கொடுத்தார். எனக்கும் அவர் மீது மதிப்புக் கூடியிருந்தது.

கழுகுகள் ஆட்சியில் கோழிக்குஞ்சு நியாயம் கேட்க முடியுமா?

நான்காவது மாதம் ஒரு நாள் யாழ். சந்தையில் மீன் மொத்தமாக ஏலம் கூறப்பட்டு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பகல் பதினொரு மணியளவில் இரண்டு நபர்கள் இரண்டு சைக்கிளில் வந்தனர். சற்றுத் தள்ளிநின்று என்னைக் கவனித்தனர். அவர்களைப் பார்த்ததும் கணக்கிட்டேன். வந்திருப்பவர்கள் புலி விலங்குகள் என்று! ஏனென்றால் பொதுமக்களின் முகங்களுக்கும் புலி விலங்குகளின் முகங்களுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. புலிகளின் முகங்களில் கொலை வெறியும் கொடூரமும் தாண்டவமாடும். தீய செயல்களைச் செய்து அவர்களது முகங்கள் சமூகத்திலிருந்து வேறுபட்டுத் தோற்றமளிக்கும். அதிலும் உளவுத்துறையில் இருந்தவர்களது முகங்கள் பளிச் சென்று காட்டிக் கொடுத்துவிடும். ஏனென்றால் திருடர்கள் போன்று ஒவ்வொருவரையும் பார்ப்பது, பின்னர் அவர்களைச் சித்திரவதை செய்வது, அதன் பின்னர் அவர்களை கொடூரமாகக் கொலை செய்வது இதுவே அவர்களது தொழிலானதால் அவர்களது முகங்கள் மாறுபட்டுக் காணப்படும்.

எனவே வந்திருந்து நோட்டம் விடும் நபர்களை நானும் கவனித்துக்கொண்டு, வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டிருந்தேன். அரைமணி நேர ஒட்டு வேலைக்குப் பிறகு அருகில் வந்தனர் இருவரும். வந்தவர்கள் “அண்ண உங்களுடன் கதைக்க வேண்டும், கொஞ்சம் தள்ளி வாருங்கோ” என்று மரியாதையாகக் கேட்டனர். சந்தையில் சத்தம் அதிகமாக இருந்ததால் நானும் சற்றுத் தள்ளிச் சென்றேன்.

அவர்கள் தொடர்ந்தனர், “ அண்ண, உங்களுக்கு குமார் என்று யாரையும் தெரியுமா? என்றனர். முதலில் நீங்கள் யார் என்று சொல்லுங்கள் என்றேன். நாங்கள் நல்லூரடியில் இருந்து வருகிறோம். குமார் என்று ஒருவரைப் பிடித்துவைத்துள்ளோம், அவர் உங்களைத் தெரியும் என்கிறார். அதனால் நீங்கள் வந்து அவரைப் பார்த்துச் சொன்னால் நாங்கள் விட்டுவிடுவோம். ஒரு மணித்தியாலத்தில் வந்துவிடலாம் என்றனர். அதற்கு, அப்படி குமார் என்று யாரையும் எனக்குத் தெரியாது என்று கூறினேன். அவர்ள் மறுபடியும், இல்லை, அவருக்குத்தான் உங்களைத் தெரியுமாம் நீங்கள் அவரைப்பார்த்து தெரியும் என்று சொன்னால் அவரை விட்டுவிடுவோம். ஆப்படி இல்லை என்றால் அவரை வீணாகக் கொல்லத்தான் வேண்டும் என்றனர்.

நாம் இப்படித் தனியாக நின்று பேசுவதைக் கவனித்த எனது உறவினரான முதலாளி என்னருகில் வந்து விபரம் கேட்டார். இவர்களது கூற்றை அப்படியே சொன்னேன். அவரும் நீங்கள் போய் பார்த்துச் சொல்லிவிட்டு வாருங்கள் என்றார்.

என்னால் ஒரு உயிர் காப்பாற்றப்படும் என்றால் அதை நான் கண்டிப்பாகச் செய்வேன். எனவே கையிலிருந்த அறுபதினாயிரம் ரூபாயை முதலாளியிடம் கொடுத்தேன். அவரோ வேண்டாம், நீங்கள் போய் பார்த்துவிட்டு வாருங்கள் என்றார். நானோ வற்புறுத்திக் காசை அவரிடத்தில் திணித்துவிட்டு புறப்பட்டேன்.

நான் எனது சைக்கிளை எடுக்கச் சென்றேன். வேண்டாம் எங்களுடைய சைக்கிளில் வாருங்கள் என்றனர். இவர்கள் சொன்ன அந்தச் செய்தியில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்து கொண்டேன் இந்த சைக்கிள் விடயத்தில். வரமுடியாது என்று கூறினால் சுட்டுக் கொன்றுவிட்டு போவார்கள். கழுகுகள் ஆட்சியில் கோழிக்குஞ்சு நியாயம் கேட்க முடியுமா?

ஒரு சைக்கிளின் முன்புற பாறில் அமர்ந்தேன். புலி விலங்கு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். சைக்கிள் நல்லூர் சங்கிலியன் வீதிக்குச் சென்றது. அங்கே ஓர் பெரிய வீடு, யாரோ வசதியானவர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிந்தது. இந்த விலங்குகள் அந்த வீட்டை அபகரித்துள்ளனர் என்பதும் தெரிந்தது. ஒரு வாங்கில் அமரும்படி கூறினர். சிறிது நேரத்தில் உயரம் குறைந்த, மெலிந்த பாதியளவு வளைந்த நபர் ஒருவர் வந்தார். என்னைப் பார்த்துவிட்டு என்னுடன் வந்திருந்த புலியிடம் கேட்டார் “இவர்தானா ஆள்” என்று! அவர்களும் “ஓம்” என்றனர்.

இப்படி விசாரித்த நபரின் பெயர் \"சூட்\" என்று பின்னர் தெரிந்துகொண்டேன். இவர்தான் புலனாய்வுக் குழுவின் இந்த முகாமுக்கு பொறுப்பானவர் என்றும் அறிந்தேன்! பிற்பகல் இரண்டுமணியளவில் அந்த வீட்டில் உள்ளே அழைத்தனர். அங்கே நான்குக்கும் மேற்பட்ட அறைகள் இருந்தன. என்னை ஒரு அறையினுள் செல்லும்படி கூறினர். நான் உள்ளே சென்றதும் அறைக்கதவை மூடித் தாளிட்டனர்.

இப்போது எனக்குத் தோன்றியது, ஒரு உயிரைக் காப்பாற்றலாம் என்று அழைத்து வந்து எனது உயிருக்கு ஏதோ அத்திவாரம் போடுகின்றனர் என்று! முன்னர் நான்பட்டு வந்த சித்திரவதைகளை மறந்திருந்தேன். அந்த அனுபவம் நிழல் போல் வந்து போயின.

இந்த அறைக்கு அருகிலிருக்கும் அறைகளிலும் வேறு சிலர் பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்தேன். அட இந்தக் கொலைகார புலிவிலங்குகள் இன்னுமா திருந்தவில்லை, வதைப்பது கொலை செய்வது போன்றவை இவர்களது பொழுதுபோக்கா அல்லது சுவைமிக்க கடமையா என்பது விளங்காமல் இருந்தது. இரவு ஏழு மணியளவில் பார்சல் ஒன்றைக் கொடுத்தனர். புட்டும் மீன்குழம்பும் இருந்தது. உண்டுவிட்டு மீண்டும் அறையில் முடங்கினேன்.

இரவு 11மணியளவில் கதவைத் தட்டினார்கள். வெளியே வரும்படி அழைத்தனர். ஒரு ஹையஸ் வாகனத்தில் ஏறும்படி கூறினர். ஏறினேன். அந்த வீட்டின் ஏனைய அறைகளிலிருந்து மேலும் எட்டுப்பேரை ஏற்றினர். கறுப்புத் துணியால் கண்களைக் கட்டினர். மீண்டும் துணுக்காய்தான் என்று நினைத்துக்கொண்டேன். வாகனம் புறப்பட்டது, இருபது நிமிட ஓட்டத்தில் நிறுத்தப்பட்டது அந்த வாகனம். இறங்கும்படி கூறினர், கண்கள் கட்டப்பட்டிருந்ததால் தட்டுத் தடுமாறி இறங்கினோம். ஒருவர் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.

ஒரு வீட்டினுள் செல்வது தெரிந்தது. கீழே படுத்திருப்பவர்கள் மீது கால்கள் பட்டன. எனவே அங்கேயும் யாரோ பிடித்துவரப்பட்டு இரவு உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்தேன். மீண்டும் ஒரு அறையில் விட்டு கண்கட்டை அவிழ்த்தனர். கும் என்ற இருட்டு படுத்துக்கொள் காலையில் வருகிறோம் என்று சென்றனர் விலங்குகள். முதல் இரவு ஆரம்பமானது. வெறும் தரையில் படுத்தேன். சேட்டைக் கழற்றவில்லை. அதனால் குளிரைத் தாங்கக் கூடியதாக இருந்தது.

காலையில் பற்பொடி கொடுத்தனர். ஆச்சரியமாக இருந்தது. ஓ! நல்ல பழக்கங்கள் பழகிவிட்டனர் போலும் என்று நினைத்துக் கொண்டு, காலை கடன் முடிந்து மீண்டும் அறைக்கு வந்தேன். இந்த வீடு நாற்சார் வீடாக இருந்தது. எட்டு அறைகளுக்கு மேல் இருந்தன. பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை என்பது முதல் நூறு பேர் வரை இருக்கலாம். அனைத்து அறைகளிலும் சகோதரர்கள் இருந்தனர். நேருக்கு நேர் அனைவரையும் பார்க்க முடியவில்லை. எனது அறையில் பதினான்கு பேர்வரை இருந்தனர்.

இந்த வீடு  கோப்பாய்க்கும் இருபாலைக்கும் இடையில் உள்ள பகுதியில் அமைந்திருக்கிறதென்பதை என்னால் உணரமுடிந்தது. இந்த முகாமுக்கு \"அம்புரோஸ்\" என்பவர் பொறுப்பாக இருந்தார். இவர் துணுக்காயில் விசாரணைப்பிரிவில் இருந்தவர். காலை உணவாக புட்டு கொடுத்தனர். உண்டு முடித்ததும் அழைத்தனர் வெளியே!

அம்புரோஸ் ஓர் கதிரையில் இருந்தார். என்னை அழைத்து வழக்கம் போல் அவர் முன்நிலையில் நிலத்தில் அமரச் சொன்னார். ஆரம்பித்தார் வழக்கமான கேள்விகளை, அப்பா, அம்மா பெயர் சகோதரர்கள் விலாசம் என்று அனைத்தையும் பதிவு செய்த பின்னர் கேட்டார், நீ ஈ.என்.டி.எல்.எப்.ல் மீண்டும் சேர்ந்து இயங்குகிறாய்? நான் இல்லை என்று சொன்னேன், ஈ.பி.ஆர்.எல்.எப் ராஜாவுடன் உனக்கு என்ன தொடர்பு? அவர் எனது ஊரைச் சேர்ந்தவர். அடிக்கடி அவரைப் பார்ப்பேன். இயக்க ரீதியாக அவர் எதுவும் என்னுடன் கதைப்பதில்லை நானும் அவருடன் எந்த இயக்கங்களைப்பற்றியும் கதைப்பதில்லை என்று கூறினேன்.

ஈ.பி.ஆர்.எல்.எப் தோமஸ்சுடன் உனக்கு என்ன தொடர்பு? அவரும் எனது ஊரைச் சேர்ந்தவர்தான் அவர் பல வருடங்களுக்கு முன்னரே இயக்கத்தை விட்டு விலகி விட்டார். அவரது தொழில் குடும்பம் என்று இருக்கிறார், அவருடன் இயக்கங்கள் பற்றி நான் எதுவும் கதைத்தது கிடையாது, அவரும் கதைத்தது கிடையாது என்றேன்.

நீ கழுத்தில் தங்கச் சங்கிலி போட்டிருக்கிறாய். உனக்கு அது எங்கால? எனது உறவினரான முதலாளி வாங்கிக் கொடுத்தது என்று சொன்னதும் வலது கையால் பலமாக ஓங்கி என் இடது கன்னத்தில் அறைந்துவிட்டு அவரது காலால் உதைத்தார் அம்புரோஸ். முன்னர் மண்டை மல்லி உதைத்தது போன்றே அம்புரோசும் உதைத்தார். யாரடா முதலாளி? வின்சென்ட், குத்தகைக்காரர் என்றேன். உனக்கு சைக்கிள் எங்கால? அதுவும் வின்சென்ட் அவர்கள்தான் வாங்கிக் கொடுத்தது.

தொடரும்

இந்த துணுக்காய் முகாமை ஸ்தாபித்து, வடிவமைத்தவர் புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் பொட்டு அம்மான்
logoblog

Thanks for reading பகுதி 6 விடுதலைப்புலிகளின் சித்திரவதை கூடமும் தப்பியவர் அனுபவம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment