பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 11 August 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 1

  வெற்றிசெல்வன்       Wednesday, 11 August 2021

 பகுதி 1



எனக்குத் நேரடியா தெரிந்த ஈழ தமிழ்விடுதலை இயக்கங்களும் இந்திய தொடர்புகளும் டெல்லியில் பேச்சுவார்த்தைகளின் போதுஅது எல்லா கூட்டங்களிலும் பங்குபெற்று என்ற முறையில் எனக்கு தெரிந்த உண்மைகள் நினைவில் உள்ள வரை பதிவாக போட யோசித்துள்ளேன். விடுதலைஇயக்கங்கள் எல்லாம் டெல்லியில் பேசுவது ஒரு மாதிரி சென்னையில் வந்து அறிக்கை விடுவது இயக்கத் தோழர்களிடம்கூறுவது வேறு மாதிரி. தங்களை இந்திய எதிர்ப்பாளர்கள் போலவும், உத்தமர்கள் போல் காட்டிக் கொண்டதும் இன்று வரை வெளியில் வரவில்லை. எல்லாஈழவிடுதலை தலைவர்களும் அவர்கள் விட்டஅறிக்கைகளுக்கும்அவர்கள் நடந்து கொண்ட விதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை இன்று வரை பலர் அறியவில்லை.அவர்கள் பொது வழியில் தங்களை உத்தமர்களாக காட்டிக்கொள்ள விட்ட அறிக்கைகள் தான் இன்றும் பலர் அவர்கள் மிகத் திறமையானவர்கள் சிந்தனையாளர்கள் சிறந்த தலைவர்கள் என எழுதி வருகிறார்கள் 1982கடைசியிலிருந்து 1987 ஒப்பந்தம் வரைஎனக்குத் தெரிந்த சம்பவங்களை மட்டும் தான் நான் எழுதுகிறேன். அதிலும் பல செய்திகள் கோர்வையாக இருக்காது. இந்தப்பதிவு இந்தியாவுக்கு ஆதரவான பதிவு அல்ல.உண்மையில் நடந்த சம்பவங்களை பதிவிட விரும்பிய படியால் எழுதுகிறேன்.
1982 முதல் 1987 ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை தமிழ்நாடு அரசு இந்திய அரசு இலங்கை விடுதலை இயக்கங்களோடு இருந்த தொடர்புகள் பற்றி எனக்குத் தெரிந்த சில விடயங்களும் நான் நேரடியாக பங்கு பற்றி அறிந்த விடயங்கள் இங்கு பதிவாக போட எண்ணியுள்ளேன்.நான் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தை தவிர மற்ற எல்லா டெல்லி பேச்சுவார்த்தை களிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் சார்பாக கலந்து கொண்டிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் உமாமகேஸ்வரன் உடன் இந்திய அதிகாரிகள் அரசியல்வாதிகள் வெளிநாட்டு தூதுவர்கள் , வெளிநாட்டு விடுதலை இயக்க பிரதிநிதிகள் பத்திரிகை ஆசிரியர்கள் நிருபர்கள் போன்றவர்களின் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அதோடு காலத்துக்கு காலம் சித்தார்த்தன், பரதன், ராஜா நித்தியன், கவிஞர் ஜெயபாலன்,ஷிர்லி கந்தப்பா, அண்டன் பயர்ஸ் (சுமதி தென்னாப்பிரிக்கா) தோழர் சைமன் (ரவி), தோழர் சங்கர், லண்டன் சீனிவாசன் போன்றவர்கள் புதுடில்லி வரும்போது, எமக்குரிய தொடர்புகளை தலைமை கட்டளைப்படி, தேவைக்கு ஏற்றபடி சில குறிப்பிட்ட நபர்களை சந்தித்து, இலங்கை பிரச்சனை பற்றியும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழக நிலைப்பாடு பற்றியும் விபரம் கூற ஒழுங்குகள் செய்து கொடுப்பேன். முடிந்தளவு நானும் அவர்களோடு கலந்து கொள்வேன்.
1982 ஆண்டு பாண்டி பஜார் உமா, பிரபா துப்பாக்கிச் சண்டையின் பின்பு சென்னை மத்திய சிறைச்சாலையில் அவர்களை ரகசியமாக இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த உளவுத்துறையான IB (இன்டலிஜென்ஸ் பீரோ) இன் இரண்டு தமிழ் அதிகாரிகள் போய் அவர்களிடம் இலங்கை சம்பந்தமான முழு விபரங்கள் இவர்கள் போராட்டங்கள் பற்றிய விபரங்கள் எல்லாம் கேட்டு, உடனடியாக டெல்லிக்கு அனுப்பினார்கள் ஐபி இயக்குனர் மிகவும் சக்தி வாய்ந்தவர் தினசரி காலையில் இந்திய பிரதம மந்திரியை சந்தித்து உள்நாட்டில் நடக்கும் சகலவிதமான ஒவ்வொரு மாநிலத்தில் நடக்கும் விடயங்களையும் பிரதம மந்திரி இடம் விரிவாக கூறுவார்.
இது இன்று வரை நடக்கும் விடயம். இந்திய உளவுத்துறை களைப் பற்றி கூற வேண்டுமானால், முதலில் வருவது ஐபி, அடுத்து ரா, ராணுவ உளவுத்துறை MI, கடற்படை உளவுத்துறை போன்றவை இலங்கை விஷயத்தில் தொடர்பில் இருந்தனர். மாநில அளவில் அதாவது தமிழ்நாடு q கியூ பிரான்ச், மற்றும் IS அமைப்பினர். பாண்டி பஜார் சம்பவத்தின்போது தமிழ்நாடு உளவுப்பிரிவு இயக்குனர்மோகனதாஸ் உமா, பிரபா மற்றவர்களையும் இலங்கையிடம் பிடித்து கொடுப்பதற்கு முயற்சி செய்தார் அக்காலத்தில் இலங்கை பொலிஸ்மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் அடிக்கடி தமிழ்நாடு வந்து மோகனதாஸ் சந்தித்து செல்வார். எம்ஜிஆர் நினைப்பதை செய்து காட்டுபவர் மோகனதாஸ். மோகனதாஸ் என்ன செய்தாலும் எம்ஜிஆர் தடுக்க மாட்டார்.
ஐபி ரிப்போர்ட்டை அடுத்தும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் குறிப்பாக கருணாநிதி அழுத்தத்தை அடுத்து இந்திரா காந்தி நேரடியாக எம்ஜிஆருடன் பேசி, மோகனதாஸ் ருத்ரா ராஜசிங்கம் எண்ணத்தை தடுத்தார். இதையடுத்து இந்திய வெளிநாட்டு உளவுத்துறை ரா களம் இறக்கப்பட்டது. எம்ஜிஆர் மத்திய அரசை எதிர்க்க முடியாமல் பேசாமல் இருந்தார். ஆனால் மோகனதாஸ் தனது அதிகாரத்தை வைத்து பல இடைஞ்சல்களை செய்தார். கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, உமா மகேஸ்வரனும், பிரபாகரனும் போய் சென்னை மெரினா கடற்கரையில் நடு இரவில் கலைஞரை சந்தித்து தங்கள் போராட்டம் போராட்டவரலாறுகளை கூறியுள்ளார் . அதற்கு முன்பே ஒரு இலங்கைத் தமிழர் பெயர் ராஜரத்தினம் என நினைக்கிறேன்போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு தமிழக பல தலைவர்களை சந்தித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஒன்றாய் இருந்த காலத்தில் பல தமிழக அரசியல்வாதிகள், அரசியல் சாராத தலைவர்கள் பொதுமக்கள் என பல பெயர்கள் உண்டு அவர்களிடம் உதவி பெற்ற விடுதலைப் புலிகள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் போன்ற அமைப்புகள் அவர்களை மறந்தே போய்விட்டனர்.
கா சுப்பு
செஞ்சி ராமச்சந்திரன் தஞ்சாவூர் எம்பி எல் கணேசன் அண்ணா ,வை கோபால்சாமி அண்ணா, எம்பி யாக இருந்த ஆலடி அருணா அண்ணா,தமிழ்நாடு சட்ட மேலவை துணைத் தலைவர் கவிஞர் புலமைப்பித்தன்
மணவை தம்பி
தமிழ் மன்னன்
தமிழ் மன்னன் பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் பிரிந்த பின்பும் இருவருக்கும்இவர் பல உதவிகளை செய்துள்ளார். ராகவனுக்கு இவரை மிக நன்றாக தெரியும் என நினைக்கிறேன் திமுக கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர். கலைஞர் பயப்படும் ஒரே ஆள்.
இரா ஜனார்த்தனம் பல உதவிகள் செய்தாலும், விடுதலை போராளிகளை தனது சொந்த வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொண்டவர் ஒரு முஸ்லீம் அன்பர் இலங்கை விடுதலை போராளிகள் வந்து தங்கிச் செல்ல தனது வீட்டை கொடுத்திருந்தார் அவர் தனதாக்கிக் கொண்டவர்.
ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் இவர் பாண்டிச்சேரி காலத்திலிருந்து விடுதலை புலிகளுக்கும் உமா மகேஸ்வரனுக்கு உதவி புரிந்தவர். ஐயாவின் ஒரே நோக்கம் ஆரம்பத்தில் இருந்து அவர் சாகும்வரை இலங்கைத் தமிழருக்கு ஒரு தமிழ் ஈழம்வேண்டும் என்பதே. இலங்கை தமிழ் போராளிகளால் எந்த ஒரு பயனும், புகழும்பெறாமல் முடிந்தளவு அவரும் அவரின் குடும்பமும் பல உதவிகளை செய்து உள்ளார்கள். கடைசி காலத்தில் நான் அவரை பார்க்கும் போதெல்லாம் எங்கள் போராட்டம் இப்படித் திசைமாறிப் எதிரியிடம் போய் நிற்கிறது எனகண்ணீர் விட்டு அழுதார். உமா மகேஸ்வரனின் மாற்றம்தான் அவரை மிக அதிர்ச்சி அடைய வைத்தது.eprlf இயக்கத்துக்கு தோழர் அரணமுறுவல் பல உதவிகள் செய்தபோதும், மற்ற இயக்கங்கள் உதவிகள் கேட்டாலும் ஓடி வந்து உதவி செய்யக் கூடியவர். தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்கள் ரகசியமாக இருந்த காலத்தில் மேற் கூறியவர்கள் அரசாங்கத்துக்கு பயப்படாமல் உதவிகள் செய்தவர்கள். பல பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ராகவன் போன்றவர்கள் கட்டாயம் அந்த காலத்தில் உதவி செய்தவர்கள் பெயர்களை பதிவாக போட வேண்டும் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் அதுதான்.
தொடரும்.........
logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 1

Previous
« Prev Post
Oldest
You are reading the latest post

1 comment: