பகுதி 41 A .
சின்ன மென்டிஸ் |
எனது 41 ஆவது பதிவுக்கு, குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழக தள ராணுவ தளபதி விஜயபாலன் என்கிற மென்டிஸ் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பந்தமான பலவித கருத்துக்கள் இடம்பெற்றன.
ராபின் முடியப்பு |
மானிப்பாய் இந்துக்கல்லூரியில் எனக்கு இளையோர் ஆக படித்த என்னை தெரிந்த என்னோடு நெருங்கிப் பழகிய விஜிய பாலன் என்ற மென்டிஸ், ஈபிஆர்எல்எப் சேர்ந்த டேவிட்சன், அவரது தம்பி ரோபின், எமது இயக்கத்தைச் சேர்ந்த சிவா ரஞ்சன் போன்ற பலர் வேறுவேறுஇயக்கங்களில் இருந்தாலும், எல்லோரும் மிக நட்புடன் பழகி வந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுடன் படித்து நெருங்கிப் பழகிய விடுதலைப் புலிகள்அமைப்பில் இயங்கிய சிவபரன் என்ற நண்பர் ,நட்பை விட துரோகம் தான் சிறந்தது என்று, நம்பிக்கை துரோகம் செய்து விஜயபாலன் என்ற மெண்டிசை பிடித்துப் போன செய்தியை, அக்காலகட்டங்களில் மென்டிஸ் ஓடு கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஈபிஆர்எல்எஃப் டேவிட்சன் என் தம்பி ராபின் முழு விபரங்களையும் எனக்கு அனுப்பி வைத்துள்ளார் அதைக் கீழே தருகிறேன். நன்றி தம்பி.
மானிப்பாய் பிரதேசத்தில் EPRLF இயக்கத்தில் அரசியல் வேலை செய்துகொண்டிருந்த றொபின் என்ற பெயர் கொண்ட நான் (அதே இயக்கத்தில் செயற் பட்டுக்கொண்டிருந்த டேவிட்சனின் தம்பி) PLOTE போராளி மெண்டிஸ் அவர்களின் இறுதிக் காலத்தை பற்றி எனக்கு தெரிந்த சில செய்திகளை இங்கு ஆவணப்படுத்த வேண்டியது அவசியமானது எனக் கருதுகின்றேன் .1986 ம் ஆண்டு இறுதி பகுதியில். PLOTE இயக்கத்தின் மேல் மக்களும், PLOTE போராளிகளும் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்தனர். உள்ளியக்க மோதல்களால் பல போராளிகள் விரக்தியின் விளிம்பிற்கும் தள்ளப்பட்டனர். அனால் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற, உடுவிலை சேர்ந்த PLOTE போராளி மெண்டிஸ் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கையும், மரியாதையும் இருந்தது. இதுவும் புலிகள், குறிப்பாக கிட்டு, அவர் மீது பொறாமைப்பட ஒரு காரணமாகவும் இருந்தது. ஒரு இயக்கத்துக்குள் உள்ளியக்க மோதல்கள் ஆரம்பமானவுடன் அந்த சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக்கி, சக விடுதலை அமைப்புகளை அழித்தொழித்து வந்தார்கள், புலிகள். போராளி மெண்டிசையும் முடித்துவிட வேண்டும் என புலிகள் கங்கணம் கட்டினார்கள். குறிப்பாக கிட்டு முனைப்புக் காட்டினார்.
கிட்டு |
1986 மார்கழி 13ம் திகதி EPRLF மீதான தாக்குதலை ஆரம்பித்தார்கள் புலிகள். நானும் மற்றும் பல EPRLFபோராளிகளும் அன்று புலிகளால் கைது செய்யப்பட்டு அவர்களின் மோட்டார் ஷெல் உற்பத்தி செய்யும்,ஆனைக்கோட்டையில் அமைந்திருந்த அப்பையா முகாமில் தடுத்து தடுத்து வைக்கப்பட்டோம் .மறுநாள் எம்மை அவர்களின் சித்திரவதை, கொலை கூடமான, கந்தன் கருணை முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள்.அங்கு நான் மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டேன். அரசியல் பிரச்சாரத்தில் எம்மை வாய்க்கு வந்தபடி விமரிசிப்பீர்களோ எனக் கேட்டு, கிட்டு,வாசு,போன்ற பல புலிகள் எம்மை தாக்கினார்கள். Iron box ஐ சூடு படுத்தி எனது பின்புறத்தில் சூடு வைத்தார்கள்.நான் சித்திரவதைகளை அனுபவித்த அதே முகாமில் தான் போராளி மெண்டிசும் மற்றும் EPRLF போராளிகளான கபூர்,திலக் ,ஈஸ்வரன்,பெஞ்சமின் போன்ற பல நூற்றுக்கணக்கான தோழர்களும் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவாதிகளை அனுபவித்துக்கொண்டிருந்தோம். போராளி மெண்டிஸ் பக்கத்து அறையில் கிட்டுவினால் மோசமாக தாக்கப்பட்ட காட்சிகளையும், அவரின் அழுகுரலையும் இப்போது நினைத்துப் பார்கின்ற போதும் கொதிப்படைகின்றேன். தோழர் பெஞ்சமின் EPRLF இயக்கத்தின் டாக்டர். அவரையும் சித்திரவதை செய்தார்கள். அவர் தனது சித்திரவதைக் காயங்களினால் அவஸ்தைபட்டுக்கொண்டிருந்த போதும்,எனக்கு வைக்கப்பட்ட Iron box சூட்டுக் காயம் அழுகிக்கொண்டு செல்கின்றது ,மருத்துவ உதவி கொடுக்கும்படி எனக்காக மனிதாபிமானக் குரல் கொடுத்தார். தோழர்கள் கபூர், பெஞ்சமின், ஈஸ்வரன்,மெண்டிஸ் போன்றோரை இந்த அரக்கர்கள் கொன்றுவிட்டார்கள்.அதிஷ்டவசமாக நான் விடுதலை செய்யப்பட்டேன் போராளி மெண்டிஸ் 1987 தைப் பொங்கல் தினத்துக்கு முன்னரே கொல்லப்பட்டுவிட்டார் என அறிகின்றேன் . விடுதலையான என்னை போராளி மெண்டிசின் சகோதரி சந்தித்தார்.
நடந்தவற்றை கண்ணீரோடு பகிர்ந்து கொண்டார். மானிப்பாய் இந்துவில் கல்வி கற்ற சக பாடசாலை மாணவர்களான புலிகள் அமைப்பை சேர்ந்த சிவபரனும், PLOTE அமைப்பைச் சேர்ந்த மெண்டிசும் கல்லூரி காலங்களில் இருந்தே நண்பர்கள். மாறுபட்ட இயக்கங்களில் வேலைகள் செய்யும் போதும் நண்பர்களாக பழகியிருக்கின்றார்கள். மென்டிசின் வீடு நோக்கி புலிகளின் வாகனம் ஒன்று சென்றிருக்கின்றது. தப்பி ஓடுகின்றார் மெண்டிஸ் , அப்போது சிவபரனை கண்ட சகோதரி, உனது நண்பன் தான் வருகின்றன் ஓடாதே என்று சொல்ல , மெண்டிசும் , சிவபரனும் பேசியிருக்கின்றார்கள். தன்னை நம்பி வரும்படியும், விசாரித்துவிட்டு விட்டு விடுவதாகவும் கூறியிருக்கின்றான் சிவபரன் .அவனை நம்பி சென்ற மெண்டிஸ் பிணமாக கூட வீடு திரும்பவில்லை தைப் பொங்கலுக்குப் பின்னர் தமது வீட்டுக்கு வந்த புலிப்படையினர் மெண்டிஸின் மோதிரத்தை ஒப்படைத்து, மெண்டிஸின் படுகொலையையை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள், என்பதை அவர் சகோதரி மூலம் அறிந்தேன். அவர் கிட்டுவிடம் சென்று விசாரித்தபோது,மாத்தையா பொறுப்பெடுத்துவிட்டார், எல்லாம் அவரின் முடிவு தான் என்று ,மாத்தையாவின் தலையில் பழியை போட்டிருக்கின்றார் கிட்டு ..அக்கால கட்டத்தில் மாத்தையாவின் கை, யாழ்ப்பாணத்தில் ஓங்கியிருக்கவில்லை. சாகசங்களினாலும், உள்ளூர் வெளியூர், ஊடகங்களின் பரபரப்பு செய்திகளாலும்,யாழ்ப்பாணத்தில் கிட்டு பரபரப்பாக பேசப்பட்டார். எப்போதும் தாழ்வுச் சிக்கலில் தடுமாறும் பிரபாகரன் அவசரமாக யாழ்ப்பாணம் வரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். பாரிய தாக்குதல்களை நடாத்தி கிட்டுவின் பிரபல்யத்தை மட்டுப்படுத்த முயற்சியும் செய்தார். எதிர்பார்த்த .பலனை பெற முடியவில்லை. மாத்தையாவுடன் இணைந்து மேற் கொள்ளப்படவிருந்த நவற்குழி பௌஸர் தாக்குதல் தோல்வி கண்டது. விரக்த்தியடைந்த பிரபா - மாத்தையா பிரிவினரால் கிட்டு மீது கிரானைட் தாக்குதல் நடத்தப்பட்டது, கிட்டு காலை இழந்தார். ஒரு முறை லண்டனில் தட்டுக்குப் பெயர் போன கிட்டு, உரையாற்றும் போது, தனது கால் இழப்பிற்கு உள்வீட்டுச் சதியே காரணம் என்பதை, கிட்டு,பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் .
தொடரும்.......
No comments:
Post a Comment