பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 31 August 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 42

  வெற்றிசெல்வன்       Tuesday, 31 August 2021

 பகுதி 42 

Dr. சுப்ரமணிய சுவாமி

கடந்த பதிவில் நான் சில தவறான செய்திகளை அதுவும் கேள்விப்பட்ட செய்திகளை போட்டுள்ளதாக நண்பர்கள் அன்புடன் சுட்டிக்காட்டினார்கள். இனிமேல் அப்படி கேள்விப்பட்ட செய்திகளை எழுத வேண்டாம் என்றும் கூறினார்கள். சரியா பிழையா என்று செய்திகளை பார்ப்பதைவிட அன்று எனக்கு டெல்லியில் பிரச்சாரத்துக்காக சொல்லப்பட்ட செய்திகள் தான் அவை. எனக்கு நினைவில் இருக்கும் அன்று சொல்லப்பட்ட செய்திகள் இன்று தவறாக இருந்தாலும் அன்று அவைதான் உண்மை என்று சொல்லப்பட்டது என்பது உண்மை. இன்றுவரை எமது தள ராணுவ தளபதி சின்ன மென்டிஸ் என்ற விஜியபாலன் பிடிக்கப்பட்ட செய்திகள் கொல்லப்பட்ட செய்திகள் உண்மையான முழுமையான செய்திகள் யாரும் அறியவில்லை.பலரும் தங்களுக்கு கேள்விப்பட்டசெய்திகளை தான் உண்மையான செய்திகள் என்ன பதிவு போடுகிறார்கள். அதேபோல் எமது இயக்க மிக மூத்த போராளி நிரஞ்சன என்கிற சிவனேஸ்வரன் , எமது கழக அரசியல் துறைச் செயலாளர் சந்ததியார் போன்றவர்களை எமது செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு ம் ஏற்பட்ட எனக்கு தெரிந்த மட்டிலும் தனிப்பட்ட கோபதாபங்கள் ஆல் எமது தோழர்களே கடத்திக் கொலை செய்தார்கள். அந்தக் கொலைகளை கூட இன்றுவரை எங்களால் உண்மையை அறிய முடியாமல் இருக்கிறது. இதைப் பற்றி போன பதிவில் கூட வந்த கருத்துக்கள் பல மாறுபட்ட கருத்துக்கள்தான்தான் இருக்கின்றன. இதில் ஈடுபட்ட எமது தோழர்களை அறிந்த பலர் இந்த முகநூலிலும் இருக்கிறார்கள் யாரும் உண்மையை பதிவிட ஏன் முயற்சி செய்யவில்லை என்று தெரியவில்லை. இந்தப் பதிவுக்கு கூட சில தோழர்கள் எழுதுவார்கள் நிரஞ்சன் சந்ததியார் இயக்கத்துக்கு துரோகம் செய்தபடியால் கொலை செய்யப்பட்டார்கள் என, எழுதுவார்கள்.போன பதிவுக்கு ஒரு தோழர் தமிழர்களை அழிக்கும் பொறுப்பிலிருந்த இலங்கை மந்திரி அத்துலத்முதலி யுடன்1985 செயலதிபர் உமாமகேஸ்வரன் இயக்க மத்திய குழுவுக்கு தெரியாமல் ரகசியமாக ஏற்பட்ட தொடர்பு ஒரு ராஜதந்திர தொடர்பு என்று, கருத்து பதிவிட்டிருந்தார்.தயவுசெய்து அந்த ராஜதந்திர தொடர்பை பற்றி அறிந்தவர்கள் விபரம் கூறினால் மிக நன்றாக இருக்கும்
1986 ஆண்டு நமது இயக்கத்திற்கு மிக முக்கியமான ஆண்டாகும்.எமது இயக்கம் இரண்டாம் தடவையாக மிகப்பெரிய அளவில் உடைவு உடைந்தது. சென்னையிலிருந்து வரும் செய்திகள் மிகக் கவலையளிப்பதாக இருந்தது. நமது இயக்கத்தின் மிக முக்கிய மூத்த போராளி தலைவர்களில் ஒருவரான பரந்தன் ராஜன் செயலதிபர் உமாமகேஸ்வரன் இருவருக்கும் பலத்த கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இயக்க முக்கிய தோழர்களும் இரு பிரிவாக பிரிந்து உள்ளதாகவும் தகவல்கள் வந்தன.நிலைமைகள் கவலை அளிப்பதாக இருந்தாலும் இயக்க அலுவலக பொறுப்புகளில் இருந்த நாங்கள் எங்கள் கடமைகளை செவ்வனே செய்து வந்தோம். இதன் பின்பு நடந்த பின் தள மகாநாடு அதில் எனது பங்களிப்பு பற்றியும் விரிவாக எழுத வேண்டியுள்ளதால், எனக்கு நினைவில் உள்ள சில டெல்லி நிகழ்வுகளை மாதங்கள் முன்பின் இருந்தாலும் பதிவு செய்கிறேன். சரியான கால நேரங்களை தெரிந்த தோழர்கள் பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.
சென்னையிலிருந்து செயலதிபர் உமாமகேஸ்வரன் தொலைபேசி மூலம் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் டெல்லியில் இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், அதற்குத் தேவையான உதவிகள் செய்யும்படியும் கூறினார். எனக்கு மிக ஆச்சரியம். முன்பு சந்திரகாசன் சி ஏ ஏஜென்ட் என்று எமது வெளியீடுகள் பிரச்சாரங்களில் கூறி வந்தோம். சுப்ரமணியன் சுவாமி சந்திரகாசன் நீ என் நெருங்கிய நண்பர்கள் அதை வைத்தும் இருவரும் சிஐஏ ஏஜென்ட் எனக் கூறினோம். சுப்பிரமணியம் சுவாமி மூலம் டெல்லி ஐஐடி டெல்லி பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் சந்திரகாசன் கருத்தரங்கங்கள் நடத்தியபோது நாங்கள் எமக்கு ஆதரவான நண்பர்களை கொண்டு சந்திரகாசன் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்று துண்டுப்பிரசுரங்கள் அடித்து வெளியிட்டோம். அது அவருக்கு பலத்த பின்னடைவை கொடுத்தது என்பது உண்மை.
சந்திரஹாசன் டெல்லி வந்து என்னை தொடர்பு கொண்டார். சென்னையிலிருந்து அவருடன் சில பேர் வந்திருந்தார்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மகேஸ்வரி வேலாயுதம், மற்றும் சுழி புரத்தைச் சேர்ந்த இலங்கை கடற்படையில்
SC. சந்திரஹாசன்
வேலை செய்த ஒருவர் அவர் என்னோடு தான் தங்கினார். அவருடைய படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். டெல்லி போட் கிளப் ஏரியாவில் டென்ட் அடித்து சந்திரஹாசன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். நானும் எனது பங்குக்கு எனது டெல்லி தமிழ் நண்பர்கள், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்து போய் உண்ணாவிரதத்தை களைகட்ட செய்தோம். என்னோடு இருந்த டெல்லி தமிழ் நண்பர்களுக்கு ஒரே சந்தேகம்.,சந்திரகாசன் னை சிஐஏ ஏஜென்ட் என்று பிரச்சரம் செய்துவிட்டு எப்படி அவருடன் கூட சேர்ந்து உதவி செய்கிறீர்கள்என்று. நான் எனது செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் கேட்க வேண்டிய கேள்வியை, அவர்கள் என்னிடம் கேட்டார்கள். சந்திரகாசன் இருக்கும் உண்ணாவிரதம் இலங்கை தமிழர் பிரச்சினையை டெல்லியில் பத்திரிகையில் வாயிலாக பெரிதாக வந்தால் எமக்கு அது நல்லதுதானே.இதை ராஜதந்திர ரீதியில் அணுக வேண்டிய விஷயம் என்று நானும் கூறி சமாளித்தேன்.
சில தினங்கள் கழித்து செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லி வந்தார். இருவரும் உண்ணாவிரதம் இருந்த இடத்தை நோக்கி போய் உண்ணாவிரதம் இருந்த சந்திரா ஹாசனைசந்தித்தோம்.பல நிருபர்கள் வந்திருந்தார்கள் அவர்களிடம் செயலதிபர் உமாமகேஸ்வரணை சந்திரகாசன் அறிமுகப்படுத்தினார். பின்பு என்னை கூடாரத்திலிருந்து வெளியில் அனுப்பி விட்டு, இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். சந்திரகாசன் திரும்ப இரவு எட்டு மணி போல் வரச்சொன்னார். இரவு போனபோது ஆள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் சுப்பிரமணிய சுவாமி வந்தார். எங்கள் இருவரையும் சந்திரகாசன் சுப்பிரமணியசாமிக்கு அறிமுகப்படுத்தினார். பின்பு நான் வெளியில் வந்து இருந்தேன். சுப்ரமணிய சுவாமி சந்திரகாசன் செயலதிபர் உமாமகேஸ்வரன் மிக நீண்ட நேரம் ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார்கள். வெளியில் வந்த சுப்ரமணியசாமி தனது விசிட்டிங் கார்டை கொடுத்து விலாசம் தெரியுமா என்று கேட்டார் ஸ்கூட்டரில் விலாசம் பிடித்து வந்து விடுவேன் என்று கூறினேன்.
வலம்புரி ஜான் MP
அந்த நாள் மாலை சுப்பிரமணியசாமி வீட்டுக்கு போனோம். செயலதிபர்உமாமகேஸ்வரன் இடம் நீண்ட நேரம் பேசிய சுப்ரமணிய சுவாமி, நானும் கூடவே தான் இருந்தேன். சுப்பிரமணிய சுவாமி ரஷ்ய ஆதரவு கம்யூனிஸ்ட் பேசுபவர்களை எக்காரணம் கொண்டும் பிடிக்காது என்றும், சீனா ஆதரவு கம்யூனிஸ்ட் பேசுபவர்களை தனக்கு பிடிக்கும் என்றும் அவர்களுக்குத்தான் வேண்டிய அளவு தான் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். அதோடு சந்திரகாசன் உமா மகேஸ்வரன் ரஷ்ய ஆதரவு பேசுவதிலிருந்து திருந்தி விட்டதாக தன்னிடம் கூறியதாகவும் கூறினார். என்ன உதவி வேண்டும் என்று கேட்டார். எமது செயல் அதிபரும் ஆயுதங்கள் பயிற்சிகள் கூடுதலாக இந்தியாவிடம் கேட்க இருப்பதாக கூறினார். அவரும் தானும் தனது தொடர்புகள் மூலம் எங்களுக்கு உதவி செய்வதாக கூறினார். ஆனால் கடைசி வரை அவர் மூலம் எந்த உதவியும் கிடைக்கவில்லை.
சுப்ரமணிய சுவாமியை நாங்கள் மூன்றுதரம் சந்தித்திருப்போம். ஒரு முறை சந்திக்கும் போகும்போது சைமன் என்று தோழர் இல்லாவிட்டால்திருஞானம் என்ற தோழர் இவர்களில் யார் என்று மறந்து விட்டேன். சுப்ரமணிய சுவாமி பிரபாகரன்படிப்பு சம்பந்தமான கேள்விகளை கேட்டார். பிரபாகரன் ஒரு பேட்டியில்கூறியிருந்தார், தான் சுபாஷ் சந்திர போஸ் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை விரும்பி படிப்பதாகவும், அதோடு கல்கியில் வெளிவந்த ராசு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்னும் சுதந்திர போராட்ட நாவல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியிருந்தார் இதைப்பற்றி சுப்ரமணிய சுவாமி எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் கேட்கும்போது, அதெல்லாம் பொய் பிரபாகரன் தங்களுடன் இருக்கும்போது அம்புலிமாமா புத்தகம் மற்றும் படங்கள் போட்ட சித்திர கதைகள் போன்றவற்றை தான் படிப்பார் என்றும், அதேநேரம் மூர்மர்கெட் போய் ஆயுதம் சம்பந்தப்பட்ட ஆங்கில புத்தகங்களை வாங்கி வந்து பாலசிங்கத்தின் துணையுடன் ஆயுதங்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வார் எனக் கூறினார்.
செயலதிபர் உமாமகேஸ்வரன் இப்படிக் கூறியது எங்களுடன் வந்த தோழருக்கு பிடிக்கவில்லை. விடுதலை இயக்கத் தலைவரை பற்றி இப்படி குறிப்பிடக் கூடாது, அவர்களும் எங்களை பற்றி இப்படி பல பேரிடம் கூறி தெரிந்தால் எங்களுக்கு அவமானம் தானே என்று கூற, செயலதிபர் ஏற்றுக்கொண்டார். அதோடு செயலதிபர் உமா மகேஸ்வரன் விடுதலைப்புலிகளுக்கும் இஸ்ரேல் மொசாட் பயிற்சிபெற சுப்ரமணிய சுவாமி அவர்கள் தான் உதவியிருக்கிறார் என எங்களிடம் கூறினார்.சுப்ரமணிய சுவாமி அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்தான்1975 ஆண்டு இந்திராகாந்தி அம்மையார் கொண்டுவந்த எமர்ஜென்சியின் போது எப்படி தான் பிடிபடாமல் தப்பினார் என்றும் பல சுவாரஸ்யமானகதைகளை எங்களிடம் கூறினார்.
பம்பாய் வரதராஜ முதலியார்
அண்ணா திமுக எம்பி தாய் பத்திரிகையின் ஆசிரியர் வலம்புரி ஜான் அவர்கள் எங்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார். அவர் தான் எழுதிய நான் கழுதை ஆனால் என்ற புத்தகத்தை டெல்லியில் செயலதிபர் உமா மகேஸ்வரனை கொண்டு வெளியிட்டவர். டெல்லியில் அடிக்கடி தமிழ் அமைப்புகள் இலங்கை தமிழருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் கூட்டங்கள் ஏற்பாடு செய்வார்கள். வலம்புரி ஜான் எம்பியும் கலந்து கொள்வர் அதோடு அவருக்கு வேண்டிய பம்பாய் வருதா பாய் எனப்படும் வரதராஜ முதலியார் அவர்களும் அடிக்கடி வந்து கலந்து கொள்வார். அவர் இலங்கைத் தமிழருக்கு பல விதங்களில் உதவி புரிந்தவர். என்னோடு டெல்லியில் இருந்தபோது பரதன் என்ற சாரங்கனும் வருதா பாய் கலந்துகொண்ட கூட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
ஒரு நாள் வலம்புரி ஜான் தொலைபேசி மூலம் தன்னை வந்து நேரில் சந்திக்கச் சொன்னார். அவரை நேரில் போய் பார்த்தபோது, நீங்களெல்லாம் செய்வது சரி இல்லை என்று கூறினார். நான் பதட்டத்துடன் என்ன அண்ணாசொல்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் என்னிடம் கேப்டன் குமார் யார் என்று கேட்டார். எனக்கு உண்மையில் தெரியாது. தெரியாது என்று கூறிவிட்டேன். அவர் உங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர் தான். முகுந்தன் அவரை பம்பாய்அனுப்பியுள்ளார். அங்கு அவர் வருதா பாய் அவர்களிடம் போய்ஹீரோயின் போதைமருந்து கடனுக்கு வாங்கி தரும்படி அவரிடம் கேட்டதாகவும் ,அவர் தான் தங்கக்கட்டி கடத்து வேன் ,,ஆயுதங்கள் கடத்து வேன், ஆட்களைக் கூட கடத்துவென் ஆனால் போதைப்பொருள் சமாச்சாரங்கள் கிட்ட போக மாட்டேன் அது பாவம் என்று கூறியுள்ளார்.வருதா பாய் செயலதிபர் உமா மகேஸ்வர விரதம் கூறும்படி வலம்புரி ஜான் எம் பீடம் கூறியுள்ளார். நானும் முகுந்தன் இடம் கூறுவதாக கூறி வந்தேன்.
AP. வெங்கடேஸ்வரன்
உடனடியாக நான் இந்த விடயத்தை செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் கூறியபோது, அவர் உடனடியாக அவன் பேயன் கிடக்கிறான்,. அவன் வாங்கி தராவிட்டால் எங்களால் வாங்க முடியாதா என்று கூறி, வாமதேவன் ஐ வர்தா பாயிடம் போக வேண்டாம் என்று தான் கூறுவதாகக் கூறினார். அப்போதுதான் கேப்டன் குமாரும் வாமதேவ னும் ஒருவர் என எனக்கு தெரிந்தது. வாமதேவன் பம்பாயில் இருப்பதை யாருக்கும் கூற வேண்டாம் எனக் கூறினார். பின்புதான் வாமதேவன் ஐப் பற்றி பல விடயங்கள் கேள்விப்பட்டேன். நிக்கிற வெட்டியா வங்கிக் கொள்ளையின் பின்பு வாமதேவன் குழுவினர் இந்தியா வந்தபோது வாமதேவனும், சுடி புரத்தைச் சேர்ந்த தற்போது லண்டனில் இருக்கும் சபாநாதன் குமார் கொள்ளை அடித்த தங்க நகைகளில் கொஞ்சத்தை இவர்கள் அதிலிருந்து கொள்ளையடித்த விடயத்தை, கந்தசாமியின் உளவுப் படையைச் சேர்ந்த ஒருவர் மோப்பம் பிடித்து கந்தசாமி களிடம் கூறியுள்ளார். கந்தசாமி, வாமதேவன் ஐயும் சபாநாதன் குமாரையும் கைது செய்து துப்பாக்கிமுனையில் அவர்கள் கொள்ளையடித்த பணத்தை கைப்பற்றி விட்டு, அவர்களை சுட்டுக் கொல்ல முயற்சித்த போது, செயலதிபர் உமாமகேஸ்வரன் நேரடியாக தலையிட்டு வாம தேவனே காப்பாற்றியுள்ளார். கந்தசாமி செயலதிபர் இடம் எங்கள் தோழர்கள் உயிரை பணையம் வைத்து கொள்ளையடித்த தங்க நகைகளை இவர்கள் அதில்கொஞ்சம் கொள்ளையடித்ததை தன்னால் மன்னிக்க முடியாது நீங்கள் சொல்வதற்காக விடுகிறேன் என்று கூறியுள்ளார் அதோடு சபாநாதன் ஐ பார்த்து சுழிபுர மானத்தை கெடுத்து விட்டாய் எனது முகத்திலேயே முழிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். பின்பு செயலதிபர் உமாமகேஸ்வரன் வாமதேவனை ரகசியமாக பம்பாய் அனுப்பி தனது போதை மருந்து விற்பனைக்கு பொறுப்பாக நியமித்து உள்ளார். சில விபரங்களை அரசல் புரசலாக கேள்விப்பட்டு இருந்தாலும், 1989 ஆண்டு எங்களுடன் இருந்த சபாநாதன் குமார் எனக்கும் ஆட்சி ராஜனுக்கும் முழு விபரங்களையும் கூறினார். அதனால் தான் அவர் கந்தசாமிக்கு பயந்து 1987 இலங்கைக்கு போகாமல்1988 என்னோடு சென்னை அலுவலகத்தில் தங்கியிருந்துஆஸ்பத்திரியில் இருந்த தோழர்களை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி எங்களுடன் இருந்தார்.
1986 மார்ச் மாத கடைசியில் இந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஷ் பண்டாரி ஓய்வுபெற்றார். பின்பு ரொமேஷ் பண்டாரி டெல்லியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். லண்டனுக்கு திரும்ப போக வந்த சித்தார்த்தன் லண்டன் போகும் முன்பு ரொமேஷ் பண்டாரி யை சந்திக்க விரும்பி, கவர்னர் மாளிகைக்கு போனோம். எங்களை உள்ளே விடவில்லை. கவர்னர் அப்போது வெளியில் போகப் போவதாகவும் பின்பு அப்பாயின்மென்ட் பெற்று வரும் படியும் கூறினார்கள். நாங்கள் இருந்த இடத்துக்கும் கவர்னர்மாளிகைக்கும் வெகுதூரம். நாங்கள் தயங்கி தயங்கி வெளியில் நின்றோம். கவர்னரின் கார் பாதுகாப்பு கார்கள் வெளியில் வந்தன. கவர்னரின் காரை பார்த்து கை அசைதோம், சித்தார்த் தன்னையும் என்னையும் பார்த்த கவர்னர் உடனடியாக காரை நிப்பாட்டி, அந்த அவசரத்திலும் எங்களை திரும்ப உள்ளே அழைத்துக்கொண்டு போய் ஒரு பத்து நிமிடம் கதைத்தார். காரணம் திம்பு பேச்சுவார்த்தையில் சித்தார்த்தன் உண்மையைக் கூறி, உண்மை நிலைமை கூறியதே தான் மறக்க முடியாது என்றார். சித்தார்த்தன் லண்டன் போய் திரும்ப வரும் போது தன்னை கட்டாயம் சந்திக்கும்படி கூறினார்.
புதிய வெளியுறவுச் செயலர் ஏபி வெங்கடேஸ்வரன் என்ற தமிழர் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தொடரும்......
logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 42

Previous
« Prev Post

No comments:

Post a Comment