பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 17 August 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 21

  வெற்றிசெல்வன்       Tuesday, 17 August 2021

பகுதி 21

இந்திரா காந்தி

டெல்லியில் எனது வேலைகளை ஆரம்பித்து விட்டேன். முக்கியமாக தமிழ்நாட்டு எம்பி சந்திப்பதையும், டெல்லிப் பத்திரிகையாளர்களையும் சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டேன பிடிஐ செய்தி நிறுவனத்தின் டெல்லி செய்தியாளர் சந்திரசேகர் எனது மிக நெருங்கிய நண்பராக விளங்கினார்.

இந்திய வெளிவிவகார இலாகாவில் பங்களாதேஷ் இலங்கை மாலத்தீவு பொறுப்பாளர துணைச் செயலாளர் திருமதி மீரா சங்கர் என்பவரை சந்தித்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். இவர் பிற்காலத்தில் இந்தியாவின் அமெரிக்க தூதுவராக இருந்தார்.

எம்பி களில் குறிப்பிடத்தக்கவர் வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், எங்கள் மீதும் போராட்டத்தின் மீதும் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமாயின், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தொழிற்சங்க தலைவராக இருந்தபடியால் பண்டிகை காலங்களில் குறிப்பாக தீபாவளி போன்ற தினங்களில், கட்சிக்காரர்கள் மற்றவர்கள் இவரிடம் கொண்டு வந்து இனிப்பு வகைகள் உலர் திராட்சை போன்ற பழவகைகள் பெட்டி பெட்டியாக கொடுத்து இருப்பார்கள்.அதை எடுத்து வைத்து என்னைக் கூப்பிட்டு அனுப்பி என்னிடம்கொடுப்பார். அதற்கு அவர் கூறும் காரணம் குடும்பத்தை விட்டு தாயை விட்டு ஒரு போராட்டத்துக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கும் உங்களுக்கு செய்வது எனக்கு தனக்கு ஒரு மன திருப்தி என்று கூறுகிறார். 1987 ஆம் ஆண்டுஇலங்கை இந்திய ஒப்பந்தம் பின்பு இன்றைய இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர் வீட்டில் தங்கியிருந்தார்
உமா மகேஸ்வரன்
83 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் என நினைக்கிறேன் சென்னையிலிருந்து உமாமகேஸ்வரன் தொலைபேசி மூலம் தானும் ஓய்வு பெற்ற இலங்கை சுங்கத் துறை அதிகாரி விக்னேஸ்வரர் ராஜாவும் வெளிவந்து தமிழ்நாடு இல்லத்தில் திகதியை குறிப்பிட்டு வந்து தங்கப் போவதாகவும், இந்திய பிரதமர் இந்திரா காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனஅவர் கூறினார்.
லண்டனில் இருந்து வந்த சக்திதாசன் சென்னை போய் வந்து அப்போது லண்டன் போக என்னோடு தங்கியிருந்தார். உமாமகேஸ்வரன் டெல்லிக்கு வந்தவுடன் காலையில் போய் நானும் சக்திதாசன் அவர்களும் அவர்களை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். மாலை ஆறு முப்பது மணிக்கு இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன் சந்திப்பு நடக்க இருந்தது. நானும் சக்திதாசன் போய் விலைகூடிய மலர் கொத்து வாங்கிவந்து உமாமகேஸ்வரன் இடம்கொடுத்தோம்.
மீரா சங்கர்
அவர்கள் போய் பிரதம மந்திரியை சந்தித்து விட்டு வரும் வரை காத்திருந்தோம். அவர்கள் வந்த பின்பு முழு விபரங்களையும் அறிந்தோம் பதினைந்து நிமிட சந்திப்பு. உமா மகேஸ்வரன் பேசியதை இந்திரா காந்தி அம்மையார் கவனமாகக் கேட்டு கொண்டாராம். அதோடு இலங்கையில்நடக்கும் விஷயங்கள் மிகவும் கவலையளிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவும் உன்னிப்பாக கவனிக்கிறது என்று கூறினாராம். சந்தடி சாக்கில் உமா மகேஸ்வரனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,(பிளாட்) தான் பெரிய இயக்கம். நாங்கள் என்றும் இந்திய நாட்டுக்கு உதவியாக செயல்படுவோம்.எங்களுக்கு கூடிய அளவு பயிற்சியும் ஆயுதமும் தேவை எனக் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்தவர் தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர். எம்ஜிஆருக்கும் இந்திரா காந்தியின் முதன்மைச் செயலாளர் அலெக்சாண்டர் ருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. அப்போது எம்ஜிஆர் உமா மகேஸ்வரன் கலைஞர் ஆதரவு நிலை எடுக்க கூடாது என்பதற்காக வே உமா மகேஸ்வரனை தன் பக்கமே வைத்திருக்க பிரதம மந்திரியின் சந்திப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக அறியக்கூடியதாக இருந்தது.
இந்திரா காந்தியை சந்தித்தவர்களில் அமிர்தலிங்கத்தை தவிர ஆயுதக்குழுக்களின் தலைவர்களில் உமா மகேஸ்வரன்மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்ததாக அறியக்கூடியதாக இருந்தது. பிற்காலத்தில் IB உளவுத்துறைஉயரதிகாரிகள் பேசும்போது இப்படியான வாய்ப்பை எல்லாம் பெற்ற உங்கள் உங்கள் இயக்கமும் தலைவரும் எப்படி எல்லாம் சிதறி, கடைசியில் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் வலையில் எப்படி விழுந்தார். எனக்கூறி கவலைப்பட்டார்கள்.

தொடரும்.......
logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 21

Previous
« Prev Post

No comments:

Post a Comment