பகுதி 23
ஒபாமாவுடன் மீரா சங்கர் |
1984 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனிலிருந்து சித்தார்த்தன் டெல்லி விமான நிலையம் மூலம் இந்தியா வந்தார். அதேநேரம் உமா மகேஸ்வரனும், காந்தளகம் சச்சிதானந்தன் ஐயாஉம் டெல்லி வந்தார்கள் இவர்கள் எல்லோரும் எல் கனேசன் எம்பியின் வீட்டில் தான் தங்கினார்கள்.சச்சிதானந்தன் ஐயா தனக்குத் தெரிந்த வெளிநாட்டு தூதரகங்களை அறிமுகப்படுத்த உமா மகேஸ்வரனைஅழைத்து வந்திருந்தார்.இது சம்பந்தமாக நான் முன்பு போட்ட ஒரு பதிவை இதோடு தொடர்ச்சியாக போடுகிறேன்.
1984 ஜனவரி 27. உமாமகேசுவரன் சென்னையில் இருந்து விமானத்தில் வந்தார். வரும்பொழுது ஐ.நா சபை ஆலோசகர், மறவன்புலவு க. சச்சிதானந்தனையும் அழைத்து வந்தார். திமுக தஞ்சாவூர் நாஉ எல். கணேசன் இல்லத்தில் இருவரும் தங்கினர்.
அப்பொழுதுதான் முதல் முதலாக இலண்டனில் இருந்து சித்தார்த்தன் தில்லிக்கு வந்திருந்தார்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன் தில்லியில் உள்ள தூதரகங்களுக்கு எம் மூவரையும் அழைத்துச் சென்றார். அவருக்குத் தூதரகங்கள் பலவற்றில் நண்பர்கள் இருந்தனர்.
மொரிசியசுத் தூதரகத்தில் மூத்த அலுவலர் பொன்னுசாமிதமிழர். மறவன்புலவு க. சச்சிதானந்தனின் நண்பர். அவருக்கு அறிமுகமானோம். உமா மகேசுவரன், சித்தார்த்தன், டேவிட் ஐயா, கிருட்டிணண்,லண்டண்முரசு சதானந்தன்யாவரும் சில மாதங்களின் பின்னர் மொரிசியசு செல்வதற்கு இந்தச் சந்திப்பு உதவியது. மொரிசியசில் பிரதமர் முதலாக அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து வந்தார்கள். நிதியும் பெற்று வந்தார்கள் அங்குள்ள தமிழர்களின் ஆதரவையும் பெற்று வந்தோம். இன்று வரை மொரிசியசு அரசும் அங்குள்ள தமிழ் மக்களும் ஈழத் தமிழருக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதற்குத் தொடக்கப் புள்ளி தில்லித் தூதரகச் சந்திப்பே.
தில்லியில் தெற்கு ஏமன் நாட்டுத் தூதரகத்துக்கும் சென்றோம். தெற்கு ஏமன் அரசு அழைத்து ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சம்பந்தன், சந்திரகாசன் இருவரும் சென்று வந்தனர். ஒரு வாரம் தங்கி அங்கு குடியரசுத் தலைவர் முதலானோரைச் சநதித்து வந்திருந்தனர். மறவன்புலவு க. சச்சிதானந்தன் இந்தச் சந்திப்புகளை ஒழுங்கு செய்ததால், உமா மகேசுவரனும் தெற்கு ஏமன் செல்ல விரும்பினார்.
தூதரகச் சந்திப்புகளின் பின்னர் தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சுக்கு உமாமகேசுவரன், சித்தார்த்தன், நான், மறவன்புலவு க. சச்சிதானந்தன் நால்வரும் சென்றோம்.
இலங்கை, மாலைதீவு, வங்காளதேசம் என மூன்று நாடுகளுக்கும் பொறுப்பான உதவிச் செயலாளர் மீரா சங்கர். பிரதமர் இந்திரா காந்திக்கு நெருக்கமானவர். உரிய ஆலோசனைகளை நேரடியாகப் பிரதமருக்குக் கூறுபவர். இலங்கை தொடர்பான தகவல்களைத் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர். அச்சுவேலிக்கும் ஆவரங்காலுக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு எனக் கேட்டால் உடனே சொல்வார். அவரை நான் பல மாதங்களாகச் சந்தித்து வருபவன். எனவே இவர்கள் மூவரையும் அவரிடம் அழைத்துச் சென்றேன்.
மூவரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்தேன். முதலில் உமா மகேசுவரன் பேசினார்.
போராளிக் குழுக்களுள் நாங்களே பெரிய இயக்கமாக உள்ளோம். இந்தியாவுக்கு நம்பிக்கையாய் இருப்போம். தமிழீழ விடுதலைக் கழகத்துக்கு ஆயுதங்கள் தாருங்கள், நிதி தாருங்கள். இவ்வாறு உமா மகேசுவரன் மீரா சங்கரிடம் கேட்டார். மீரா சங்கரும் அவர் கூறியதை மிக கவனமாகக்கேட்டார்.
சித்தார்த்தன் |
பின்னர் மறவன்புலவு க. சச்சிதானந்தனின் கருத்தைக் கேட்டார் மீரா சங்கர்.
400 ஆண்டுகளாக ஆயுதங்களை அறியாதவர் நாங்கள். போர்த்துக்கேயரிடம் தோற்றபின் எம்மக்கள் ஆயுதங்களைத் தொடவே இல்லை. உழவும் தச்சும் கம்மாலையும் அவர்களுக்கு ஆயுதங்கள் எனினும் புத்தகங்களையே சார்ந்த அறிவையே மிகப் பெரிய ஆயுதமாகக் கொள்பவர்கள்.
அவர்களிடம் போருக்கான ஆயுதம் கொடுத்தால் விளைவுகள் வேறாக இருக்கும். அதுவும் ஈழத் தமிழ் இளைஞர்கள் வீறு கொண்டவர்கள். சீக்கியர்கள் எப்பொழுதும் கிர்பானுடன் இருப்பவர்கள் எனினும் வன்முறை அவர்கள் வாழ்வல்ல. ஆனால் ஈழத் தமிழர்கள் அத்தகையவர்களல்ல. ஆயுதங்களைக் கொடுத்தால் தமக்குள் மோதுவார்கள். வேலி எல்லைகளுக்காக நீதிமன்ற வழக்குக்குப் போகும் மனப்பாங்குச் சமூகம் நாங்கள். சிறிய சிக்கல்களைப் பெரிய மோதல்களாக்குவோம். ஆயுதம் கொடுத்தால் இவர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு தாங்களே அழிந்துவிடுவர்கள்.
ஏற்கனவே பஞ்சாப்பில் இந்தியாவுக்குக் கசப்பான அநுபவங்கள். ஈழத்தைத் தாண்டித் தமிழ்நாட்டிலும் ஈழத்து இளைஞர் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம். தமிழ்நாடும் பஞ்சாப்பாக மாறிவிடக் கூடும். எனவே ஆயுதங்களைக் கொடுக்காதீர்கள்.
இவ்வாறு சொன்னார் மறவன்புலவு க. சச்சிதானந்தன்.
மீராசாங்கர் திகைப்புடன் கேட்டார், இவர்களுக்கு முன்னாலேயே இப்படிக் கூறுகிறீர்களே?
மறவன்புலவு க. சச்சிதானந்தன் |
என்னதான் தீர்வுக்கு வழி எனக் கேட்டார் மீரா சங்கர்.
இந்தியாவுக்குத் தெரியாத வழிகள் இல்லை. புலமையும் ஆற்றுலும் நிறைந்தவர்கள் நீங்கள். அமெரிக்காவின் கென்னடி கியூபாவின் காஸ்ரோவை வழிக்குக் கொண்டுவர என்ன செய்தார் என்பதை அறியாதவரல்ல நீங்கள். இலங்கையைச் சுற்றிய வளையத்தில் உங்களைக் கேட்காமல் யார் போக முடியும்? பொருளாதாதரத் தடைகளே இலங்கையை வழிக்குக் கொண்டுவரும். கத்தியின்றி இரத்தமின்றிக் கென்னடி காரியத்தை முடித்தாரல்லவா? இந்தியவுக்குத் தெரியாத வழிகளா? என்றார் மறவன்புலவு க. சச்சிதானந்தன்.
பின்னாட்களில் சித்தார்த்தன் இலண்டனில் இருந்து இந்தியா வருவதற்குப் பலமுறை விசா ஒழுங்கு செய்து கொடுத்தவர் .மீரா சங்கரே. சித்தாத்தர் இலங்கை பாஸ்போர்ட்டில் பல வருடங்களாகலண்டன் மாணவர் விசாவில் இருப்பவர்.அவருக்கு லேசில் இந்திய விசா கொடுக்க மாட்டார்கள் அவர் எனக்கு அறிவிக்க நான் போய்மீரா சங்கரிடம் சித்தார்த்துடன் விபரம் கூறி விசாவுக்கு உதவி செய்யும் படி கேட்பேன் அவரும் உடனடியாக ஏற்பாடு செய்து கொடுப்பார்.அண்மையில் அமெரிக்காவில் இந்திய தூதுவராக இருந்தவர் மீரா சங்கர்.
சென்னையிலிருந்து இந்திய பயிற்சிகள் எடுக்க எமது இயக்கமும் மற்றிய இயக்கங்களும் தமது இயக்கத் தோழர்களை அனுப்புவது நடந்து கொண்டிருந்தது. இது சம்பந்தமான செய்திகளும் எனக்கு கிடைத்துக் கொண்டிருந்தன. இதேநேரம் நாங்களும் லெபனானில் நடைபெற்ற PFLP பயிற்சிக்கு எமது தோழர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். 1985 ஆம் ஆண்டு வரை டெல்லி ஊடாக கிட்டத்தட்ட அறுபது தோழர்களை அனுப்பியுள்ளேன். முதல் முறை கஷ்டப் பட்டது போல் பிறகு கஷ்டப் பட வில்லை. 10 பேர், ஐந்து பேர் எனபிரித்து தான் அனுப்பியுள்ளோம். லண்டனிலிருந்து நியூடெல்லி டமாஸ்கஸ் ( சிரியா) லண்டன்/டமாஸ்கஸ், டெல்லி சிரியன் ஏர் லைன்ஸ்ரிட்டர்ன் டிக்கெட் வரும்..எத்தனை டிக்கெட் வருதோ அதற்கான தோழர்களை சென்னையிலிருந்து அனுப்புவார்கள். அவர்கள் டெல்லி வந்த பின்பு அவர்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து இலங்கை கள்ள பாஸ்போர்ட் செய்து அவர்களை அனுப்புவோம். டெல்லியில் இருந்த ஒரு இலங்கை நண்பர் அவர் எமக்கு தேவையான பாஸ்போர்ட் சேவை தேவைகளை ஒரு ஒரு ரூபாய் கூட வாங்காமல் இலவசமாகவே செய்து கொடுத்தார். பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டார்.அவர் கூறுவார் எங்களது ஈழப்போராட்டத்தில் இதன் மூலம் தனது சிறு உதவியும் சேரட்டும் என்று. இவரின் உதவியும் மற்றும் பலரின் உதவியும் எமது வெளிநாட்டு பயிற்சி எடுப்பதற்கு உதவி புரிந்தன என்றால் மிகையாகாது.
நாங்கள் கள்ள பாஸ்போர்ட்டில் தோழர்களே அனுப்புவதாலும்,அவர்கள் அதே பாஸ்போர்ட்டில் திரும்ப வரும்போதும் டெல்லி ஏர்போர்ட்டில் பிரச்சினையில் இருக்கக்கூடாது என்பதற்காக, நான் முதல் நாளே போய் ஜி பார்த்தசாரதி அய்யாவிடம் போய் உண்மையான விபரத்தைக் கூறி,அவர்கள் பயிற்சிக்கு போகும்போதும் பயிற்சி முடிந்து வரும் போதும் ஏர்போர்ட்டில் பிரச்சினை வராமல் இருக்க உதவி கேப்பேன். அவரும் சிரித்துக் கொண்டே உங்களால் ரொம்ப பிரச்சனை என திட்டி டெல்லி ஏர்போர்ட் முதன்மை இமிகிரேஷன் அதிகாரியுடன் பேசி என்னை போய் அவரை சந்திக்க சொல்வார்.எதுவும் பாஸ்போர்ட் பிரச்சனை வந்தால் முதன்மை இமிக்ரேஷன் அதிகாரி உடனடியாக உதவி செய்வார். அதை இன்று நினைக்க மிகவும் மலைப்பாகவும் அதிசயமாகவும் இருக்கிறது. இப்படியெல்லாம் எங்களுக்கு உதவிகள் கிடைத்ததா என்று.
தொடரும்.......
No comments:
Post a Comment