பகுதி 25
ஜெ. ஜெயலலிதா |
சின்னசாமி MP |
1984 ஆண்டு ஆரம்பம் முதல் பல தோழர்களின் வரவு டெல்லியில் இருந்தது. பெரிய செந்தில் கொஞ்சம் பணத்துடன் ஆயுதம் வாங்குவதற்காக என்று கூறி உமாமகேஸ்வரன் அனுப்பியிருந்தார். நல்ல தோழர். ஆனால் தான் ஒரு போராளி என்று என் கர்வம் கொண்டவர். டெல்லியில் இருந்த எமக்கு உதவி செய்யும் இந்திய நண்பர்களிடம் அவர் பேசுவது எல்லாம் வெற்று பெருமை கதைகள் தான்.அங்கிருந்த இந்திய நண்பர்கள் பெரிய படிப்பு படித்தவர்கள் என்பதை மறந்து கதை சொல்வார்.
பெரிய செந்திலுக்கு இந்தி தெரியாது. டெல்லி அதன் சுற்றுவட்டார மாநிலங்களில் நாட்டுத் துப்பாக்கி கள்ளத்துப்பாக்கி தான் வாங்க முடியும். ஒரு விடுதலை இயக்கத்திற்கு நாட்டுத்துப்பாக்கி போதுமா? உமாமகேஸ்வரன் தனக்கு விசுவாசமான அதுவும் தன்னைபெரிய ஐயா என்று அழைப்பவர்களை நம்பியோ அல்லது விரும்பியோ அவர்களுக்கு தகுதியற்ற கழக வேலைகளை கொடுத்து அதை கண்காணிக்காமல் விட்டதும் பெரிய தவறு. நாங்கள் டெல்லியில் கூடஎமது செலவைக் கட்டுப்படுத்தி நாக்கு ருசியை கட்டுப்படுத்தி செலவழித்து வந்தோம். ஆனால் செந்தில் போன்றவர்கள் கணக்கு வழக்கு பார்க்காமல் செலவழிப்பார்கள். அதெல்லாம் ஆயுதம் வாங்க ஓடித்திரிந்த கணக்கில் வந்துவிடும். இதேநேரம் வாமதேவன் இரு தோழர்களுடன் டெல்லி வந்து ஓட்டலில் தங்கியிருந்தார். காரணம் அந்த நேரம் டெல்லி வந்திருந்த ஈபிஆர்எல்எஃப் தலைவர் பத்மநாபா, மற்றும் டக்ளஸ் தேவானந்தா இருவரையும் போடுவதற்கு. மட்டக்கிளப்பு சிறை உடைப்புக்கு ஈபிஆர்எல்எஃப் உரிமை கோரியதால் அதற்காக தண்டனை எனக் கூறினார்கள். இவர்கள் டெல்லி வந்ததை அறிந்த இந்திய உளவுத்துறை IB கடுமையாக என்னைஎச்சரித்ததால், நான் உமாமகேஸ்வரன் இடம்தொலைபேசி மூலம் கூறியதை அடுத்து வாமதேவன் , மற்றும்தோழர்களை உடன் சென்னைக்கு வரச் சொன்னார்.
டெல்லி நண்பர்கள் |
1984 ஆண்டு ஜெயலலிதா ராஜ்யசபா எம்பியாக தெரிவாகியிருந்தார். எம்ஜிஆர் சுகயீனம் காரணமாகஅமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நேரம். அதிமுக கட்சியில் ஜெயலலிதாவுக்கு மிகுந்த நெருக்கடி. அப்போது எனக்கு உதவி செய்த கோபி செட்டிபாளையம் mpசின்னசாமி அவர்கள் ஜெயலலிதாவின்தீவிர ஆதரவாளர். ஜெயலலிதாவின் சென்னையில் இருந்த தீவிர ஆதரவாளர் மந்திரியாக இருந்த திருநாவுக்கரசு அவர்கள், சென்னையில் நடக்கும் செய்திகளை தொலைபேசி மூலம் சின்னசாமி MP அவர்களுக்குத்தான் செய்தி வரும் அவர் ஜெயலலிதாவிடம் போய் கூறுவர். ஜெயலலிதா ஆதரவாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தகவல் வந்தவுடன், சின்னச்சாமி எம்பி அவர்கள் எல் கனேசன் திமுகஎம்பியின் தொலைபேசி ஊடாக என் மூலம் தகவல்களைப் பெற்று ஜெயலலிதாவிடம் கொடுப்பர். சில வேளைகளில் ஜெயலலிதாவின்தீவிர ஆதரவாளர் சேலம் கண்ணன் எம்பியின் வீட்டுக்குப் போய் சின்னச்சாமி எம்பி தரும் செய்திகளை கொடுத்திருக்கிறேன். அப்போது டெல்லியில் இருந்த நானும் எனது இந்திய நண்பர்களும் சேர்ந்து செய்த இந்த உதவிகள் எமக்கு விளையாட்டாக இருந்தது. பிற்காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த அரசியல் மாற்றங்களுக்கு நாங்களும் சிறு துரும்பாக பயன் பட்டு இருக்கிறோம்
தொடரும்......
No comments:
Post a Comment