பகுதி 100
நான் எனது அனுபவங்களை பதிவுகளாக போட ஆரம்பித்த போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பல முன்னாள் உறுப்பினர்கள், (இவர்களில் பலர் எமது இயக்கத் தலைவர் சரி இல்லை, மற்றும் சிலர் இயக்கமே சரியில்லை என்று கூறி சொந்த வாழ்க்கையை பார்க்க வெளிநாட்டுக்குப் போனவர்கள்) முகநூலில்நட்புத் தேடிவந்து ஆரம்ப பதிவுகளில் மிகவும் பாராட்டினார்கள். பின்பு செயலதிபர் பற்றிய, இயக்கத்தைப் பற்றிய எனக்குத் தெரிந்தஉண்மைகளை பதிவிடும் போது, உள் பெட்டியில் வந்து உண்மைகளை எழுத வேண்டாம் என்று கேட்டார்கள். காரணம் இந்த முன்னாள் இயக்க உறுப்பினர்கள் திருமணம் செய்து பிள்ளை குட்டிகளுடன் இப்போது வசதியாக வாழ்வதால், தாங்கள் இருந்த இயக்கம் எவ்வளவு மோசமானதா என்று தங்களை சமூகத்தில் மதிக்க மாட்டார்கள் என்று காரணம் கூறினார்கள். இவர்களெல்லாம் தாங்கள் இருந்த மிகப்பெரிய விடுதலை இயக்கம் ஏன் இப்படி போனது என்று கவலைப்படவில்லை. ஆனால் தங்கள் சுய மரியாதை வெளி உலகில் காப்பாற்றப்பட வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறார்கள். ஆனால் சில முன்னாள் உறுப்பினர்கள் எனது பதிவுகள் மூலம் பல உண்மைகள் தெரிகிறது என்று பாராட்டி தொடர்ந்து எழுத சொல்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பை பற்றியும், அதன் தலைவர் பற்றிய பல மோசமான உண்மைகளை பலர் எழுதும்போது, வரிசையாக வந்து கருத்து சொல்லும் பல வேறு இயக்க உறுப்பினர்கள், தங்கள் தங்கள் இயக்க தலைவர்களின் இயக்கங்களில் நடந்த தவறுகளை மறைத்து தங்கள் தலைவரும் இயக்கங்களும் மிகவும் புனிதமானவர்கள் என்று நினைத்து கதை சொல்கிறார்கள். தவறு எல்லா இயக்க உண்மைகளும் வெளிவரும்வரை இயக்கபேரைச்சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றும் தலைவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.எனது பதிவுகள் முடியப்போகும் தருணத்தில் கூட பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
சென்னையில் என்னோடு இருந்த தோழர்களையும், வேலூரில் மருத்துவ சிகிச்சையில் இருந்து ஓரளவு குணம் அடைந்த பத்தன் போன்ற தோழர்களையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பும்படி கொழும்பிலிருந்து கூறியதாக, லண்டன் கிளையின் மூலம் தகவல் வந்தது. நான் எல்லோரையும் அனுப்ப முயற்சி செய்யும் போது, சபாநாதன் குமார் மட்டும் நான் இலங்கைக்கு போக மாட்டேன். அங்கு போனால் தன்னை இயக்கம் கொலை செய்து விடுவார்கள் என்று கூறிவிட்டார். அதேநேரம் தமிழ்நாடு கியூ பிரான்ச் அதிகாரிகள் எல்லோரின் படங்கள், மற்றும் விபரங்கள் தரச்சொல்லி இயக்கங்களுக்கு அறிவுறுத்தல் செய்தார்கள். நான் சென்னையிலும் வேலூரில் இருந்தவர்களின் புகைப்படங்களுடன் விபரம் கொடுக்க, சபாநாதன் குமார் மட்டும் படம் தர மாட்டேன் என்று கூறிவிட்டார். அதோடு அவர் கூடுதல் நேரம் மொக்கு மூர்த்தி அவர்களுடன் தான் கூடுதலாக தங்கியிருக்க தொடங்கினர்
வேலூர் மருத்துவ சிகிச்சையில் இருந்த பத்தன் உட்பட எல்லோரையும் இலங்கைக்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டேன். திடீரென அலுவலகத்துக்கு இலங்கையிலிருந்து கழகத் தோழர்கள் வந்து போனார்கள். ஆனால் அவர்கள் அங்கு தங்க இல்லை. சும்மா இந்தியா வந்ததாக கூறினார்கள்.. அவர்கள் மிகவும் அன்போடு ஆட்சி அண்ணை எப்படி இருக்கிரார். ஆட்சி அண்ணா அலுவலகத்தில் இருப்பார் சந்திக்கலாம் என நினைத்தோம் என்று கூறினார்கள். அவர்களில் நடவடிக்கையும் எனக்கு சந்தேகம் வந்தது. நான் ஆட்சி ராஜன் மற்றும் நண்பர்களை சந்தித்து விபரம் கூறினேன்.
ஆட்சி ராஜன் நண்பர்கள் இந்த நிலைமைகளை யோசித்துவிட்டு, என்ன நடக்கும் என்று தெரியவில்லை. நீங்களும் அலுவலகத்தில் கவனமாக இருங்கள் என்று கூறினார்கள். ஆட்சி ராஜன் சபா நாதன் குமாரிடம் எனக்குப் பாதுகாப்பாக அலுவலகத்திலேயே தங்கி இருக்கும் படியும், சபாநாதன் மூலம் குறிப்பிட்ட இடத்தில் அவரை சந்தித்து அலுவலகங்களில் நடக்கும் செய்திகளை தான் அறிந்து கொள்வதாக கூறினார். ஆட்சி ராஜனின் ஆலோசனைப்படி சபாநாதன் எனக்கு பாதுகாப்பாகவே வந்து என்னோடு தங்கியிருந்தார்.
இரண்டு நாள் கழித்து திடீரென மாணிக்கம் தாசன் அலுவலகம் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருடன் கூட இரண்டு நாள் முன்பு வந்த தோழர்களும் வந்தார்கள். மாணிக்கம் தாசன் தான் சும்மா வந்ததாக கூறினர். அதோடு இந்தியாவில் அலுவலகம் தொடர்ந்து செயல்பட முடியுமா? இயக்க வளர்ச்சி பற்றி எல்லாம் பேசினர். தோழர்களுக்கு முன்பாக செயலதிபர் உமா மகேஸ்வரணின் மரணம், கந்தசாமியின் ம்பற்றியும் மிகவும் கவலையுடன் பேசினார்.மாலைதீவு தோழர்களின் தண்டனை குறைப்பு பற்றி ஐக்கிய நாடுகள் புகழ் வைகுந்தவாசன் கூறிய செய்திகளின் கேட்டார்.
தாசன் என்னை மட்டும் அழைத்து இருவரும் தனியாக அறையில் பேசத் தொடங்கினோம். மாணிக்கம் தாசன் முன்பு கூறியவாறு, இயக்கம் இன்று ஆயுதம் மற்றும் பண பலத்தில் வளரத் தொடங்கியுள்ளது. இப்போது இருக்கும் வவுனியா பழைய தோழர்கள் பழைய செயலதிபர் உமாமகேஸ்வரன் மேல் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்களிடம் போய் கொழும்பில் நடந்த நிகழ்ச்சிகளையும், செயலதிபர் நடந்துகொண்ட நடந்துகொண்ட முறைகளையும் கூறி, நாங்கள் தான் அவருக்கு மரணதண்டனை கொடுத்தோம் என்று கூறக் கூடிய சூழ்நிலை இல்லை. இயக்கத்தை கலைத்து விட்டு போவதாய் இருந்தால் கூட, அது பல தோழர்களின் உயிருக்கு ஆபத்தாக முடிய கூடிய சூழ்நிலை உள்ளது. விடுதலைப்புலிகள், இ என் டி எல் எப் எங்கள் மேல் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். அதனால் இயக்கத்தை தொடர்ந்து நடத்த வேண்டி உள்ளது. கொலைக்கு பொறுப்பு எடுத்த 7 பேரை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.
நீங்கள்தான் தேவையில்லாமல் செயலதிபர் விட்ட தவறுகள் என்று எல்லோரிடமும் பேசி திரிகிறீர்கள், அதோடு ஆட்சி ராஜன் நண்பர்களோடு கூட, நமது இயக்க உறுப்பினர்கள் பார்க்கக் கூடிய விதத்தில் நட்பு பாராட்டுவதில் திரிகிறீர்கள் என்று கூறினார்.
நான் கேட்டேன் ஆட்சி ராஜன் நண்பர்கள் யார்? அவர்களும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் யாருக்காக செயலதிபர் மரண தண்டனையை செய்தார்கள்
.
செய்த அவர்கள் ஏன் பகிரங்கமாக தாங்கள் தான் செய்ததாக தங்கள் பெயரை கொடுக்க வேண்டும்.
இதனால் அவர்களுக்கு என்ன லாபம்.
ஏன் அவர்கள் இந்தியா வந்து எனது பாதுகாப்பில் இருக்கட்டும் என்று என்னிடமும் , சித்தார்த்தன் இடமும் தொலைபேசி மூலம் ஏன் நீங்கள் கூறினீர்கள்.
அவர்களை நீங்களும் சித்தார்த்தன் சென்னை அனுப்பாவிட்டால் நான் பேசாமல் எனது இயக்க வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பேன்.
நீங்களும், சித்தார்த்தன் அவர்களும்அவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, இயக்கத் தோழர்களை அழைத்து, நடந்த உண்மையை கூறி கூறுவதுதான் நல்லது என்றேன். அதோடு சாம்முருகேசு ஆட்சி ராஜன் நண்பர்கள் பேசி கொடுத்த ஆடியோ கேசட்டை பகிரங்கமாக போட்டு போட்டுக்காட்டி அதன்மூலம் ஓரளவு இயக்கத் தோழர்களின் மனநிலையை மாற்றி இருக்கலாம் என்று கூற மாணிக்கம் தாசன்தாசன் அது நடக்கக்கூடிய காரியம் அல்ல என்றார்.
அப்ப இதுக்கு முடிவு என்ன என்று கேட்ட போது, ஆட்சி ராயன் உட்பட மரண தண்டனைக்கு உரிமை கோரிய 7 பேரும் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்தால், உயிருடன் இருக்கலாம், இல்லாவிட்டால் கழகம் தண்டனை கொடுக்கும் என எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் என்னிடம் கூற, நான் இதை ஆட்சி ராஜனிடம் நேரடியாகச்கூற சொன்னேன். முதலில் மறுத்த மாணிக்கம் தாசன் பின்பு ஆட்சி ராஜனை மட்டும் தனியாக சந்திக்க ஏற்றுக்கொண்டார். அடுத்தநாள் குறிப்பிட்ட குறிப்பிட்ட நேரத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல்(இன்டர்நேஷனல் என்று பெயர் வரும்) அறையில் மாணிக்கம் தாசன், நான் , ஆச்சி ராஜன் மூவரும் சந்தித்து மிக நீண்ட நேரம் பேசினோம்.
7 பேரும் வெளிநாட்டுக்குப் போக தான் பணம் ஏற்பாடு செய்து தருவதாகவும், நடந்த சம்பவங்களை மறந்து, நீங்கள் இருந்த எமது இயக்கம் இனிமேல் சரி நல்ல முறையில் வளர்ச்சி பெற, நடந்த பழைய சம்பவங்களைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது என்றார். ஆட்சி ராஜன் ஏற்றுக்கொள்ளவில்லை. செயலதிபர் உமா மகேஸ்வரனின் மரணம் எங்கள் சுயநலத்துக்காக நடக்கவில்லை. இப்பதான் தெரிகிறது உங்கள் சுயநலத்துக்காக நீங்கள் எங்களை பயன்படுத்திக்கொண்டதுஎன்று காரசாரமான விவாதம் நடந்தது.
ஆட்சி ராஜன் தொடர்ந்து கூறும்போது எங்களுக்கு பெரியவரை (உமா மகேஸ்வரன்) பிடிக்கவில்லையென்றால் நாங்கள் பேசாமல் இயக்கத்தை விட்டுபோயிருப்போம். ஆனால் பெரியவர் உங்களையும் லண்டன் கிருஷ்ணனையும் சுடச் சொன்னவர். அது தவறு என்று அன்று எனக்குத் தெரிந்தது. ஆனால் உங்களைப் பற்றி எல்லாம் பெரியவருக்கு அன்றே தெரிந்திருந்தது. என்று ஆட்சி ராஜன் கூற, மாணிக்கம் தாசன் கோபத்தைமறைத்துக் கொண்டு, ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, தனது முடிவை சொல்லிவிட்டேன், முடிவு உங்கள் கையில் என்று கூற, ஆட்சி ராஜன் ஏன் சித்தார்த்தன், சாம் முருகேசு கொண்டுவந்த ஆடியோ கேசட் தோழர்களிடம் போட்டுக் காட்டப்படவில்லை என்று கேட்க, மாணிக்கம் தாசன் இயக்கம் வளரும் இந்த நேரத்தில் அதையெல்லாம் போட்டுக்காட்டி இயக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்று கூறினார் பின்பு தாசன்என்னையும் அழைத்துக் கொண்டு வடபழனி அலுவலகம் வந்தார்.
தாசன் என்னிடம் கடுமையாக ஆட்சி ராஜன் , நண்பர்களுடன்தொடர்பு வைக்க வேண்டாம். இதனால் தனக்கும் , சித்தர்தனக்கும் இதுவும் பிரச்சனையும் போல் தெரிந்தால், எனக்கு மேலேயும் கடும் நடவடிக்கை எடுப்பேன். பிறகு கவலைப்பட்டு பிரயோசனம் இல்லை. இவ்வளவு காலம் பழகிய நட்புக்காக இதை சொல்கிறேன் என்றார்.
மாணிக்கம் தாசன் தான் கொழும்பு போகிறேன். இயக்க அலுவலகத்தை சிறப்பாக நடக்கும் படி கூறி விடை பெற்றார்.
அடுத்தடுத்த நாட்களில் மாணிக்கம் தாசன், கூட இருந்த தோழர்களை ரகசியமாக உளவு பார்த்த சபாநாதன் குமார் ஓர் அதிர்ச்சி தகவல் சொன்னார். மாணிக்கம் தாசன் ,தோழர்கள் இலங்கை போகவில்லை என்றும் , ஆட்சி ராஜனும் நண்பர்களும் இருக்கும் இடங்களை தேடுவதாகவும்கூறினார். எங்களையும் ரகசியமாக கண்காணிக்க கூடும் என சபா கூறினார்.
நான் எச்சரிக்கையோடு போய் ஆட்சி ராஜனையும், நண்பர்களையும் சந்தித்து தாசனின் நடவடிக்கை பற்றி கூறினேன். அவர்களும் தாசன் இப்படியான செயல்களைச் செய்யக்கூடியவர் என்று தெரியும். இனி அதைப்பற்றி கவலைப்பட்டு பிரயோசனமில்லை. ஆனால் தாங்கள் நம்பியிருந்த சித்தார்த்தன் நம்பிக்கையூட்டும் விதமாக ஆடியோ கசட் எல்லாம் வாங்கிப் போய் கடைசியில் அவரும் ஏமாற்றிவிட்டார். இல்லை மாணிக்கம் தாசன் அவரையும் பயமுறுத்தி பணிய வைத்து விட்டாரா தெரியவில்லை என்று கூறி கவலைப் பட்டோம்.
ஆட்சி ராஜனும் நண்பர்களும் எனது நிலை பற்றிக் கேக்க, நான் கடைசிவரை அவர்களுக்கு ஆதரவாக நிப்பேன் என்றும், எல்லா தோழர்களுக்கும் சித்தார்த்தான், மாணிக்கம் தாசன் உண்மையை மறைத்தாலும் நான் எப்படியும் உண்மையை தெரியப்படுத்துகிறேன் என்று கூறினேன். கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு பின் சரியோ தவறோ விரும்பியோ விரும்பாமலோ நடந்த உண்மைகளை எழுத்து மூலம் பகிரங்கப்படுத்தி நான் கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டேன்.
சென்னையில் எனது பொறுப்பில் இருந்தவர்கள் விபரம் |
தொடரும்.
No comments:
Post a Comment